• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நீயே எந்தன் மகளாய்-17.மாடுபிடி வீரனின் கதை

தீபா செண்பகம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
520

நீயே எந்தன் மகளாய்-17.மாடுபிடி வீரனின் கதை

சென்னையில் ஆற்றுவாரும், தேற்றுவாருமின்றி அழுது கரைந்த அன்புச் செல்வன், இப்படியே இருந்தால் சரிவராது என டூட்டி டயத்தை மாற்றிக் கொண்டு இரவு பணிக்குச் சென்றான்.

காவல் துறையில் துணை கண்காணிப்பாளர் பதவிக்குத் தேர்வானவன், விதிவசத்தால் நிறுத்தி வைக்கப்பட உத்தரவாலும், சிந்தை மழுங்கி நின்ற சுயத்தாலும், சித்தன் போக்கு, சிவன் போக்கு எனத் திரிந்தவன், சென்னையில் ஒரு மேன்ஷனில் தங்கியிருந்த பொழுது, அந்த அறையைப் பகிர்ந்த தர்மாவின் உந்துதவுதலால் மத்திய ரிசர்வ் போலீஸ் பணியில், சாதாரணப் பட்டாலியனாக வேலையில் சேர்த்துக் கொண்டான்.

ஏற்கனவே ஒருமுறை கயல்விழி, பரிசம் போட்ட அன்று போலீசா எனப் பயந்த போது மனதில், ‘என்ன இவள் இப்படி முழிக்கிறா?’ என நினைத்தவன், வேலைக்கான ஆர்டர் வந்தபிறகு அவளை, சம்மதிக்க வைக்க வேண்டும் என நினைத்திருந்தவன், இம்முறை வேறு சிந்தனையே இன்றி ரிசர்வ் போலீஸ் பட்டாலியனில் சேர்ந்தான்.

மதியம், மயங்கி, கிரங்கிச் சென்றவனை இரவு டூட்டிக்கு துடிப்போடு, தான் டூட்டி முடிந்து கிளம்பும் முன், பார்த்த சககாவலன் தர்மாவுக்கு ஆச்சரியம் "இது தான் செல்வா. எவ்வளவு மனப் போராட்டம் இருந்தாலும், திரும்ப வந்து எந்திரிச்சு நிற்கிற பாரு. இதே மாதிரி குடும்பத்தோடவும் சேர்ந்திரு." என முதுகில் தட்டி இலவச ஆலோசனை வழங்கிச் சென்றான். அன்புவிடமிருந்து லேசான முறுவலைத் தவிர வேறொன்றும் இல்லை. இனிமேல் உணர்ச்சி வயப்படக் கூடாது என முடிவெடுத்தவன் மெரினாவில் நடப்பதை மூன்றாம் மனிதனாக நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

இரவு நேரங்களில் செல் போன் டார்ச் விளக்கை ஒளிர விட்டுக் கொண்டு, ஏதோ பாடல்களைப் பாடிக் கொண்டு, யாரெல்லாம் ஜல்லிக்கட்டை எதிர்கிறார்களோ அவர்களுக்கு ஒரு ஸ்லோகன், கோஷம், மீம்ஸ், கார்டடூன், தட்டி, தெருக்கூத்து, கானா பாட்டு, ட்ரம்ஸ் எனக் கச்சேரி களைக் கட்டியது. அதுவும் பல ரசிக்கும்படியும் இருந்தது.

அரசாங்க தரப்பில் முதல்வர் டெல்லி பயணித்து ஜல்லிக்கட்டு சட்டத்தைக் கொண்டு வர அரும் பாடு பட்டுக் கொண்டிருந்தார். இங்கிருப்பவர்கள் சால்ஜாப்பு சொல்லி, ஒவ்வொரு ஊரிலும் இதை முன்னெடுத்த இரண்டாம் நிலை பிரபலங்கள், ஆர்வலர்கள், நாட்டு மாடுகள், உணவுப் பொருட்கள் அதன் அங்கீகாரத்துக்கா குரல் கொடுப்பவர்கள் என அவர்கள் தலைமையில் தமிழகமெங்கும் போராட்டங்கள் களைக் கட்டின. அடுத்த, அடுத்த நாட்களில் தற்காலிக சட்ட சீர்திருத்தம் கொண்டு வர முயற்சிகள் நடந்தது.

இளைஞர்கள் போராட்டம் என்பது மாறி குடும்பங்களாக மெரினாவில் பிக்னிக் வந்தவர்கள் போல் கூடி, செல்பி எடுத்து உறவினர்களுக்கு அனுப்ப, அவரவர் ஊரில் நடக்கும் போராட்டங்களில் இரண்டு மணி நேரமாவது கோஷம் எழுப்பி, போட்டோ பிடித்துச் சமூக வலைதளங்ஙளில் பதிவேற்றினர்.

நாமும் ஒரு போராட்டத்தில் போஸ் கொடுத்தோ, சமூக வலைத்தளத்தில் போஸ்டோ போடாவிட்டால் தமிழன் என ஒத்துக் கொள்ள மாட்டார்களோ என மக்கள் வலிந்து கலந்து கொண்ட சூழல் நிலவியது.

சுதந்திரப் போராட்டத்தில் கூட இந்த மக்கள் இவ்வளவு தீவிரமாகக் கலந்து கொண்டதில்லை. ஆனால் ஜல்லிக்கட்டுக்குக் குரல் கொடுத்தனர். தைபுரட்சி தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமின்றி, பாரம்பரிய நாட்டு உணவு தானியங்கள், இயற்கை குளிர்பானங்கள், தின்பண்டங்கள் எனப் பலவற்றின் பால் மக்களைத் திசை திருப்பியது. வெளிநாட்டு, குளிர்பானங்கள், பதப்படுத்த பட்டுப் பொட்டலங்களில் அடைக்கப் பட்ட பொருட்களுக்கு எதிரான மனநிலையும், உள்நாட்டு உணவுப் பொருட்கள் மீது ஆர்வமும், உடல் நலனுக்கு, ஆரோக்கியத்துக்கு, அவை தான் உகந்தவை என்ற விழிப்புணர்வும் வந்தது.

பாலமேடு, இராஜக்காள் பட்டி, மாடுகள், சிவகாமியம்மா, அசுரன் காளை, பண்ணையாள், சின்னச்சாமியின் உருக்கமான பேட்டி எனக் கனிமொழியை உதவிக்கு வைத்துக் கொண்டு, தனுஷ் சக நண்பர்களோடு கேமராவும் கையுமாகக் காணொளிப் பதிவு செய்து கொண்டு இருந்தான். வேல்ஸ் க்ரூப் வீரர்கள், ஜல்லிக்கட்டு வர்ணனையாளர்கள் என ஒரு கூட்டமே, அன்பு, அன்பு எனக் கொண்டாடிப் பேசியது. அத்தனையும் படக்கருவிகளில் சுருட்டிக் கொண்டு வந்து ஊடகத்துறை சிநேகிதி ஒருவரையும் வைத்துக் கொண்டு எடிட் செய்து கொண்டிருந்தான் தனுஷ் ராம்.

கனி மொழி அருகில் அமர்ந்து அவ்வப்போது அவன் கேட்கும் விவரங்களையும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

"ஏய் ஃப்ரூட்டி, இந்த வேலையெல்லாம் செஞ்சுக் கொடுத்தா எனக்கு என்ன தருவ?" என வம்பிழுத்தான் தனுஷ்.

"என்னாது ப்ரூட்டியா, அது யாரு அது. என்னைப் பார்த்தா கேட்கிறீங்க?" என அவள் முழிக்கவும், உடன் பணி புரிந்த அந்தப் பெண், " உன்னைத் தான் கனி- ப்ரூட்டியாம். இங்கிலீஸ் ட்ரேஸ்லேசன் சொல்றாரு ஐயா!" எனக் கேலி செய்யவும்.

"என்னாது இங்கிலீஸ் ட்ரேன்ஸ்லேசனாம். போராட்டத்தில் தமிழன், தமிழர்ன்னு முழங்கிட்டு, இப்ப என்ன ட்ரேன்ஸ்லேசன் வேண்டியிருக்கு. சும்மா கனிமொழின்னே கூப்புடுங்க." என அவள் முறுக்கவும்.

"கனி, எனக்கு என்னமோ உன் மாமா உன்னை, ப்ருட்டினு இல்லை, ப்யூட்டினு கூப்பிடுறானோன்னு சந்தேகம்?" எனத் தனுஷின் நண்பி, ஒரு கலகத்தை இழுத்து விடவும் தனுஷ் சிரித்துக் கொள்ள, கனி மொழி சூடானாள்.

"என்னாது ப்யூட்டியா. நாங்க அழகு தான். அது எங்களுக்குத் தெரியும். அது எப்படி நீங்க சொல்லப் போச்சு. சரி படிச்சவரு, பண்போட இருப்பீங்கன்னு உதவி கேட்க வந்தது என் தப்பு தான், மாமன் மகனாச்சே, முறைக்காரவுகளேன்னு பார்க்கிறேன், இல்லையினா நடக்கிறதே வேற" என அவள் மிரட்டவும், மற்ற இருவருமே ஏதே பெரிய நகைச்சுவையைக் கேட்டது போல் சிரிக்க , குழம்பிப் போன கனிமொழி, "இப்ப என்னாத்துக்குச் சிரிக்கிறீங்க?" என்றாள்.

"இல்லை, கேள்வி பதில் இரண்டும் நீயே சொல்லிட்டியே." எனப் புதிர் போடவும் அவள் முழிக்க.

"மாமன் மகனாச்சேன்னு சொன்னியே, நம்ம ஊர்ல அத்தை மகள், மாமன் மகன் கேலி பேசுவாங்கல்ல, நீ எனக்கு முறைப் பொண்ணு தானே. ஏன் உங்க அக்காவை, உங்க அன்பு மாமா எப்படிக் கூப்பிடுவார்" என அவன் கேட்கவும்.

"அவர் எங்க அக்காளுக்குப் பரிசம் போட்டவர் கூப்பிடுவாரு." என மட்டும் அவள் பதில் சொல்லவும்.

"ஓஹோ, ஒரு ப்ரூட்டின்னு கூப்பிடுறதுக்கேவா பரிசம் போடனும். சரி போட்டா போச்சு." எனத் தனுஷ் சுலபமாகச் சொல்லவும். கூட இருந்தவள் சிரித்து விட்டு, "நீங்க பேசிட்டு இருங்க. அங்க ஏதோ விசயம் ஓடுது. கேட்ச் பண்ணிட்டு வரேன்." என எழுந்து சென்றாள்.

அந்தப் பெண் நகரவுமே, "இந்த லந்தை கொடுக்கிற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க மாமா. உங்க லெவலுக்கெல்லாம் நாங்க செட்டாக மாட்டோம்." எனத் தீவிரமான முகப் பாவனையோடு கனிச் சொல்லவும்.

"நாங்கன்னா, நாலைஞ்சு பேரையா கேட்டேன், உன் ஒருத்தியைத் தான், ஏன் நீயும் எனக்கு அத்தை மகள் தானே?” என்றவன் “நீயும் வேற யாரையாவது லவ் பண்றியா?" எனக் கூர்ந்து அவள் முகம் பார்த்துக் கேட்கவும்,

"ம்க்கூம், அந்தக் கருமத்தை எங்க அக்கா ஒருத்தி செஞ்சுட்டு படுற பாடு பத்தாதாக்கும். நானெல்லாம் சூதானமா கல்யாணம் பண்ணிக்கிட்டு என் புருஷனைத் தான் லவ் பண்ணுவேன்." என்றாள் கனிமொழி

"அப்ப நோ ப்ராப்ளம், பெரியவங்க சம்மதத்தோட, நான் உன்னை மேரஜ் பண்ணிக்கிறேன். என்னை லவ் பண்ணிட்டு போ." என அவன் சொல்லவும்,

"முதல்ல எங்க அக்கா, அன்பு மாமாவோட சேரட்டும். அப்புறம் பார்ப்போம். ஆனால் நீங்க என்னை விட எட்டு வருஷம் மூத்தவர்." என அவள் அறிவிக்கவும்.

"ஸோ வாட். உங்க சித்தப்பா, சித்தி அப்படித் தான பண்ணிக்கிட்டாங்க. இப்ப இரண்டு பசங்க இருக்காங்களே?" என அவன் நகைப்போடு சொல்லவும், "ஐயோ, பேசாமல் போங்க. அன்பு மாமாவைக் கண்டு பிடிக்கிற வழியைப் பாருங்க." என்றாள்.

"ஓகே டன்." என்றவன் கடைசி எடிட்டிங் முடித்து அந்தக் காணொளியை அவளுக்குப் போட்டுக் காண்பித்தான். ஏழு நிமிடம் அந்தக் காணொளியைப் பார்த்தவள், கண் கலங்க அவனுக்கு நன்றி சொன்னாள். "உங்க வீட்டில் போட்டுக் காட்டுவோம். சரின்னா, எல்லா இடத்திலையும் இதை ஷேர் பண்ண வேண்டியது என் பொறுப்பு." என்றான்.

“ஒரு மாடுபிடி வீரனின் கதை இந்த மண்ணின் மைந்தர்களின் கதை. இந்த மண்ணிற்கும், மாந்தர்க்கும், மாட்டுக்கும் உள்ள சம்பந்தத்தை உணர்த்தும் உண்மைக் கதை.

ஜல்லிக்கட்டு, இதனை ஏன் தமிழர் பாரம்பரியம் எனக் கொண்டாட வேண்டும். இந்த விளையாட்டால் மாட்டுக்கும், மனிதருக்குமே பல காயங்கள், அடிகள், ஏன் உயிரிழப்பே கூட ஏற்படும். அப்படி இருந்தும் இதனை ஏன் வளர்க்கிறார்கள். இதன் மேல் என்ன ஒரு தீராத பாசம். இதோ சொல்ல வருகிறது, மதுரை பாலமேடு அருகில் உள்ள இராஜக்காள் பட்டி என்ற ஊரைச் சேர்ந்த ஒரு மாடுபிடி வீரனின் கதை.

"அன்புச் செல்வன்" இந்தப் பெயரைக் கேட்டால் நான்கு வருடத்துக்கு முன்பு வரை ஒவ்வொரு வாடிவாசலும் அதிரும். முதுநிலை பட்டதாரியான இவர்...” என ஆரம்பித்து அவன் பரிசு, பட்டங்களைக் காட்டியவர்கள், நடுநடுவே அறிவு, சின்னச்சாமியையும் பேச வைத்து, குமரவேல் வேல்ஸ் க்ரூப் பசங்களும் தங்கள் அனுபவத்தை நச்செனப் பகிர்ந்தார்கள்.

சிவகாமி அம்மா படத்தைக் காட்டி, அசுரன் மாடையும் காட்டி அனிமேட்டட் கதையாகச் சொன்னவர்கள், “இத்தனையும் இழப்புகளையும் மீறி இந்த மண்ணின் மைந்தர்களின் கோரிக்கை." எனச் சின்னச்சாமி முதல் ஒவ்வொருவரும் அன்புவை உருக்கமாக அழைக்க.

“இவர்களைப் போன்றவர்களுக்கா ஜல்லிக்கட்டை மீட்டெடுத்து, நாட்டு மாடுகளைக் காத்து நிற்போம். தடைகளை உடைத்து வரும் ஜல்லிக்கட்டில் உங்கள் ஆதரவோடு இந்த மாடுபிடி வீரனையும் சந்திப்போம்." என ஓடி முடிந்தது.

பாலமேட்டில் கந்தவேல் வீட்டில் டிவியில் ஓட விட்டு இந்தக் காணொளியை தனுஷ் மற்றும் அவனுடைய குழு காட்ட, மொத்தக் குடும்பமும் கண்ணீர் மல்க உட்கார்ந்து இருந்தது.

சின்னச்சாமி எழுந்து வந்து, தனுஷின் கையைப் பிடித்துக் கொண்டவர், "உங்க முயற்சியால என் மகன் மட்டும், திரும்ப வந்துசேரட்டும், உங்களுக்கு எங்க பண்ணையில் கறந்த பால்லையே அபிஷேகம் பண்றேன் தம்பி. என்னால என்ன கொடுக்க முடியுமோ நான் தாரேன்." எனக் கண்ணீர் விட்டவர், கயல்விழியைப் பார்த்து "என் மருமகளுக்காகவாவது, அவன் சீக்கிரம் வரட்டும்." என்றார்.

"மாப்பிள்ளை வந்துருவாப்ல மாமா, கவலைப் படாதீங்க." என அக்காள் கணவரைத் தேற்றினார் கந்தவேலும், குமரவேலும். அறிவு மௌனமாகக் கண்ணீர் உதிர்க்க.



கலைச் செல்வி, "கயல் சொன்னது உண்மை தான். நாமளாவது அம்மாவைப் பத்தி பேசிப் பேசி மனசை ஆத்திக்கிறோம். என் தம்பி என்ன கஷ்டப் படுறானோ. நான் கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம். அம்மா இல்லாத இடத்தைக் கூடப் பிறந்த அக்கா தான தாயா இருந்து நிரப்பனும். நான் அதைச் செய்யலையே. அதுக்கு மாறா, அவனையே இல்லை, குத்தம் சொல்லி விரட்டி விட்டுட்டேன். நான் தான் பாவி தப்புப் பண்ணிட்டேன்." எனத் தலையில் அடித்துக் கொண்டு அழவும் கயல்விழி வாயைப் பொத்திக் கொண்டு துக்கத்தைத் தனக்குள் அடக்க,

கனகம்மாள் அப்பத்தா, சிவகாமியின் அம்மா, பேத்தியும் மருமகளுமான கலைச்செல்வியை, "நீ மனசார உன் தம்பி வரனும்முன்னு நினைச்சிட்டில இனி வந்துருவான்டி. உங்க அம்மா கொண்டாந்து சேர்த்திருவா. அழுவாத. தெய்வமா நிக்கிற உன் ஆத்தாளைக் கும்பிடு. அவள் சேர்த்து வைப்பா!" என வயதான காலத்தில் மகளைப் பறிகொடுத்த அந்த முதியவரும் கண்ணீர் உதிர்த்தார்.

தனுஷ், இந்தக் காணொளியை, தனது நண்பர்களுக்குப் பகிர்ந்தான். சமூக வலைத்தளங்களில் இதனைப் பகிர்ந்தவர்கள், கீழே தனுஷ், குமரவேல் மொபைல் எண் இரண்டையும் பகிர்ந்திருக்க. அதைப் பார்த்தவர்கள் எல்லாம், "மாடு பிடி வீரன் சீக்கிரம் பிடிபடட்டும்." என விதவிதமான வார்த்தைகளால் வாழ்த்து தெரிவித்தனர்.

ஆனால் அன்புவின் குடும்பம் அறியாத ஒரு விசயம், இவர்கள் பகிர்ந்த படங்கள் எல்லாம் அவன் கல்லூரி படிக்கும் போதும், பரிசம் போட்ட போதும் எடுத்த படங்கள். ஆனால் அதற்குப் பின்பு, சிவகாமியைக் குத்திய அசுரன் காளை, அவன் முகத்தையும் பதம் பார்த்திருந்தது. அதனால் இரண்டு இடங்களில் தையல் இடப்பட்ட தழும்புகளும், மேலும் இரண்டு இடத்தில் சரியான நேரத்தில் தையல் போடாததால் பள்ளங்களுமாக முகம் கரடு முரடாக இருந்தது. அந்தக் காணொளியையும், அன்புவையும் கூர்ந்து பார்த்தால் ஒழிய அடையாளம் தெரியாது. ஒவ்வொரு நாளும் அன்புவின் குடும்பம் , அவன் வருவான் அல்லது அவனைப் பற்றிய செய்தி வரும் என்ற எதிர்பார்ப்போடு இருந்தது.

மெரினாவில் ஏழாம் நாள் ஞாயிற்றுக் கிழமை கட்டுக்கடங்காத கூட்டம். ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கான தடையை அகற்றி தமிழக அரசு சார்பில் ஒரு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அரசாங்கம் அன்றோடு போராட்டத்தைக் கைவிடப் பொது மக்களுக்கு அறிவுறித்தியது. காவல் துறை அதிகாரிகளும் தமிழகமெங்கும் பொறுமையாக விசயூஅதை எடுத்துச் சொல்லி போராட்டத்தைக் கைவிடச் சொன்னார்கள். ஆனால் யாரும் செவிமடுப்பதாக இல்லை.



எங்களுக்கு, அவசரச் சட்டம் இல்லை. நிரந்தரச் சட்டம் தான் தேவை எனப் பிடிவாதமாக இருந்தனர். இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் சிலர் அரசாங்கத்தோடு பேச்சு வார்த்தை நடத்தி, அதற்கு ஒப்புதல் தந்து கூட்டத்துக்கு அறிவித்த போதும், பெரும்பான்மையினர் கேட்க மறுத்தனர்.

ஒரு போராட்டம் எப்படி ஆரம்பிக்கிறது என்பதை விட, அதனை எவ்விதம் முடிக்க வேண்டும் என்பதில் தான் உறுதியான முடிவு இருக்க வேண்டும். ஒரே யூனியனாக ஒற்றைத் தலைமையில் கீழ் போராடும் போது, இரண்டு தரப்பினருக்கிடையே பேச்சு வார்த்தை நடந்து , இப்போது இது சாத்தியம், இது சாத்தியமில்லை எனச் சில அஜண்டாக்களோடு போராட்டத்தை, அப்போதைய வெற்றியைச் சொல்லி, எதிர் தரப்புக்கும் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற ஒரு கால அவகாசத்தைக் கொடுத்து வெற்றி பெற்ற போராட்டமாக அதனை முடிப்பர்.

ஆனால் இங்கு நடந்தது, போராட்டம் என்பதை விடப் புரட்சி. அது எந்தக் கட்டிலும் அடங்காது. அதன் உத்தேசம் நிறைவேறிய பிறகும் கூட, வேறு சில சக்திகள் அதைத் திசை திருப்பக் கூடும். அரசாங்கம், உள்துறை, காவல்துறை இணைந்து போராட்டத்தை முடித்து வைக்க ஒரு முடிவெடுத்து விட்டனர். உண்மையில் இத்தனை நாள், இவர்கள் போராட்டத்தை நடத்த அனுமதித்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.

அன்புச் செல்வனுக்கு மேல்மட்ட அளவில் நடக்கும் ஆலோசனை என்னவெனத் தெரியாத போதும், ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதை அவன் உள்மனம் சொன்னது. ஒரு வாரத்தில் பரிட்சியமாகியிருந்த விஜய் போன்ற இளைஞர்களிடம் கூட்டத்தைக் கலைக்கவும், முக்கியமாகப் பெண்களைப் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைக்கச் சொல்லி ரகசியமாகச் சொன்னான்.

"ஏன் ப்ரோ, எதாவது ஆக்சன் ப்ளானா?" என அவன் அன்புவை ஆராய. "டேய், என்னை மாதிரி சாதாரணப் போலீஸ்காரனுக்கு எல்லாம் எதையும் சொல்லமாட்டாங்க. இரண்டு பக்கத்துக்கும் நடுவில் எங்களைத் தான் பலிகடாவா ஆக்குவாங்க. என்னோட உள்மனசு சொல்லுது. நீங்க ப்ரோ ன்னு சொல்றது உண்மையா இருந்தா, கிளம்புங்க." எனவும், முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் தவிர மற்றவர்களை, போராட்டக்காரர்களே அனுப்பிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கும் இரண்டு நாட்களாகப் புதிது புதிதாக யார் யாரோ ஆட்கள் கூட்டத்தில் புகுந்திருப்பதாகத் தோன்றியது.

விஜய், அன்புவை யோசனையாகவே பார்த்துக் கொண்டிருந்தான். "என்ன மறுபடியும் என் மேல சந்தேகமா?" என, அன்பு கேட்கவும். "இல்லை ப்ரோ. இது வேற. நீங்க ஜல்லிக்கட்டில் கலந்துக்கிட்டு இருக்கீங்களா?" எனத் திடீரெனக் கேட்கவும், ஒரு நிமிடம் அதிர்ந்தவன் பின் சமாளித்து

"உன்கிட்ட என்ன சொல்லியிருக்கேன். போலீஸ்காரனை விசாரணை பண்ற வேலையெல்லாம் வேணாம் உன் வேலையை மட்டும் பாரு." என உறுமி விட்டுச் சென்றான்.

'மதுரைக்காரன், மாட்டைப் புடிச்சிருக்கியான்னு கேட்டா, இவ்வளவு கோபம் வருது. அப்ப நிச்சயம் முன் கதைச் சுருக்கம் உண்டு.' என நினைத்தவன் அர்த்தமாகச் சிரித்துக் கொண்டான்.

திங்கள் காலையில் பளபளவென விடியும் முன் கூட்டத்தில் சலசலப்பு. போராட்டக்காரர்களுக்குள் சில தீயசக்திகள், வன்முறையாளர்கள் புகுந்திருப்பதாகச் சொல்லிக் கூட்டத்தைக் கலைந்து போகக் காவல்துறை அறிவிப்புத் தந்தது. சிறிது நேரத்திலேயே போலீஸ் லத்தி சார்ஜும் ஆரம்பிக்க, போராட்டக்காரர்கள் கடலை நோக்கி ஓடினர்.

அங்கு ஓடியதில் ரவுடி போலிருந்த ஒருவன் இளைஞர்களைத் தாக்கிக் கொண்டிருக்க, அன்பு அங்கு வந்தவன், இளைஞர்களைக் காத்து, ரவுடியை துவம்சம் செய்தான். விஜயும் அவனைப் போன்றவர்களும் சேர்ந்து தற்காப்புக்காக அடி தடியில் ஈடுபட, விஜயை குத்த வந்த கத்தியை தன் கையில் தாங்கினான் அன்பு.

அதே நேரம் போலீஸ் படை வந்திறங்கிக் காயம்பட்ட சக காவலனைப் பார்த்து சகட்டுமேனிக்கு லத்தி சார்ஜ் செய்தது. விஜய் மற்றும் நண்பர்களைக் காத்த அன்பு கத்தி குத்து கையோடு, "சார் என் தம்பிங்க தான்..." எனவும் ஒரு வாகனத்தில் அன்புவை ஏற்றி அவர்களை மருத்துவமனைக்குத் துணைக்கு அனுப்பி வைத்தனர்.

ஏழு நாட்களாகக் களைக்கட்டிய மெரினா, அன்று கலவர பூமியாக வெடித்தது. ஏதேதோ சம்பவங்கள் நிறைவேறின. பல அப்பாவிகளும், சில போலீஸ்காரர்களும், கூடவே வன்முறையாளர்களும் தாக்கப் பட்டனர். எல்லா ஊர்களிலும், கூட்டம் கலைக்கப்பட்டுக் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

முதலமைச்சர், சில அந்நிய சக்திகளின் சதி என வர்ணித்தவர், தமிழர் அடையாளமான ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தமிழக மக்களின் எழுச்சி மிகு புரட்சியால் மீட்கப்பட்டது. நாளை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவித்தார்.

அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளிலும் அமைதி திரும்ப, அன்பு கிடைத்து விடுவான் என நம்பிக்கையாக இருந்த கயல்விழி, சின்னச்சாமி மற்றும் இரண்டு குடும்பத்தினரும் மனச்சோர்வு அடைந்தனர்.

ஜெகனை வரவழைத்து விசாரிக்க, " எனக்கும் நிஜமாவே தெரியாது அண்ணேன். அம்மா இறந்து ஆறு மாசத்துக்குப் பிறகு, சர்டிவிகேட் மட்டும் கேட்டான். நான் வீட்டுக்கு வந்து அப்பாட்ட கேட்டேன். ஆனால் அவருக்குத் தன்நினைவே இல்லை. அதையும் ஒரு போஸ்ட் பாக்ஸ் நம்பருக்குத் தான் அனுப்பச் சொன்னான். எப்பவாவது போன் பண்ணாலும், பப்ளிக் போன்லருந்து தான் பண்ணுவான்." என விவரம் சொல்லவும்.

கயல்விழி, "காணாப் போனவுகளைத் தான் மாமா கண்டுபிடிக்கலாம். மறைஞ்சு வாழுறவுகளை எப்படி வெளியக் கொண்டு வர்றது. நான் செத்தாலும் அது வராது." என அவள் அழவும், " வாயைக் கழுவு!!!" என ஆளாளுக்கு அவளைத் திட்டி தேற்றினர். குமரவேலுக்குத் தனுஷிடமிருந்து போன் வந்தது.
 
Top