• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நீயே எந்தன் மகளாய் -18.பிடிபட்ட மாடு பிடி வீரன்.

தீபா செண்பகம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
520

நீயே எந்தன் மகளாய் -18.பிடிபட்ட மாடு பிடி வீரன்.


தனியார் மருத்துவமனை படுக்கையில் மருந்து வீரியத்தில் மயங்கிக் கிடந்த, அன்புச் செல்வன், மிகவும் சிரமப்பட்டுக் கண்விழித்துப் பார்த்தான். நினைவுகளைத் திரும்ப ஓட்டிப் பார்த்தவன், 'சாதாரணக் கத்திக் குத்து தான இதுக்கு எதுக்கு இவ்வளவு சிரமமா இருக்கு' என யோசித்தவன் கண்ணைத் திறந்து பார்க்க, எதிரே விஜயும், எப்போதும் அவனோடு இருக்கும் மற்றொரு காவலனும் இருந்தார்கள். சுற்றி கண்களை ஓட்டியவன், "தர்மா, இதென்னடா பெரிய ஆஸ்பத்திரியா இருக்கு, சாதாரணக் கத்திக் குத்து தான, ஜீஎச் ல சேர்த்து இருக்க வேண்டியது தான?" எனவுமே.

"நீ பேசாம இரு, எல்லாம் எங்களுக்குத் தெரியும். இரத்தத்தைப் பார்த்தலே மயங்கி விழுகிற. ஆம்புலன்ஸை பார்த்தா பிபி எகிறுது. அப்படி எதுக்கு இந்த வேலை. எத்தனை நாளைக்கு நானும் டிபார்ட்மென்ட்டுக்கு மறைச்சுக் கொண்டு போறது." எனச் சக காவலன் கோபப்படவும்.

"சாரிடா, அது என்னையும் மீறி நடக்கிறது." என வருந்தியவன், அதே அறையில் விஜய் இருப்பதையும் பார்த்து விட்டு, "ஆத்தி, இவன் முன்னாடியா விழுந்தேன். நெட்ல போட்டுருவாய்ங்களே. இனி வேற வேலை தான் தேடனும்." எனப் புலம்பினான்.

விஜயை காப்பாற்றி மேலதிகாரியிடம் சொல்லி விட்டு வண்டியில் ஏறிய போது தான், அன்புவின் கையில் இரத்தம் வந்ததைக் கவனித்து அவனது சட்டையை விஜய் கழட்டினான். அப்போது போது தான், இடது தோளில் குத்தியிருந்த காளை மாட்டை அடக்குவது போலான டாட்டு விஜயின் கண்ணில் பட்டது. அவன் கேள்வி கேட்கும் முன், சில தினங்களுக்கு முன் வந்தது போலவே அன்பு, இரத்தத்தைப் பார்த்தவன் தடுமாறி அப்படியே மயங்கிச் சரிந்திருந்தான். அதனால் பக்கத்திலிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்து முழுப் பரிசோதனை செய்யச் சொன்னார்கள்.

“செல்வா, இதுவரைக்கும் நீ யாரு, என்னனு உன்னை முழு விவரமும் கேட்டதே இல்லை. அன்னைக்கு நீ இருந்த நிலைமையிலும் யாருக்கு உதவின்னாலும் முன்னை வந்து நின்ன, அந்தக் குணத்துக்காகவே உன் கூடப் பிரெண்டு ஆனேன். இவ்வளவு பெரிய மாடுபிடி வீரனா இருந்திருக்க, எத்தனை பேர் உன்னைக் கொண்டாடுறாங்க, தேடுறாங்க, கூப்புடுறாங்க அவுங்களுக்காகவாவது உன் குடும்பத்தோட ஒன்னு சேருடா.“ எனவும், அன்பு அதிர்ந்தவனாக நண்பனைப் பார்க்க,

"உங்க வீடியோ, ஏற்கனவே நெட்ல வந்தாச்சு ப்ரோ. இந்த முசரக்கட்டையைப் பார்த்து இரண்டு நாளா, சந்தேகமா இருந்துச்சு. இப்ப கன்பார்ம்டு." என்ற விஜய், அன்பு தெளிந்து அமர்ந்திருப்பதைப் பார்த்து, அவன் முன் கைப்பேசியைக் காட்டினான்.

"ஒரு மாடுபிடி வீரனின் கதை..." என ஆரம்பித்த அந்தக் காணொளியைக் கண்ணீர் மல்கப் பார்க்க ஆரம்பித்தான் அன்புச் செல்வன்,

"அன்பு, விதி முடிஞ்சு போச்சு அம்மா நம்மளை விட்டு போயிட்டாடா. அதுக்கு உன்னை எதுக்குத் தண்டிச்சிக்கிறவன். நீ, என் கண்ணுக்குள்ளேயே நிண்டுகிட்டு இருக்கடா. உன்னைப் பார்க்கனும் போல இருக்கு. கனாவுல உங்க அம்மா வந்து, இப்படித் தான் என் மகனைத் தனியா தவிக்க விடுவிங்களாண்டு கேக்குறா, என்கிட்ட வந்திருடா ராசா." எனத் துண்டை வைத்து வாயை மூடி அவன் அப்பா சின்னசாமி அழவும், அதைப் பார்த்த அன்புவும் உடைந்து அழுதான்.

வரிசையாக அவன் நண்பர்கள், சொந்தங்கள், ஊர் மக்கள். "வா அன்பு, ஜல்லிக்கட்டில் வந்து கலக்கு" என அழைப்பு விடுத்தனர். அதைப் பார்த்துக் கண்ணீர் விட்டவன், " அம்மா" எனக் கத்தவும் ஒரு பக்கம், தர்மாவும், மறுபக்கம் விஜயும் பற்றிக் கொண்டனர். செவிலியர் வந்து ஊசி போட்டு அவனை அமைதிப் படுத்தினர்.

சிறிது நேர ஓய்வுக்குப் பின் இருவரும் அன்புச்செல்வனைக் கேள்வி கேட்டபடி நிற்க, அவனும் உண்மையை ஒத்துக் கொண்டு அமைதியாக இருந்தான்.

"ப்ரோ, நீங்க உங்க குடும்பத்தோட சேர்ந்திங்னாளே எல்லாப் பிரச்சனையும் சரியா போயிடும். உங்க மனசிலையே வச்சிக்கிறதால தான் மன அழுத்தம் அதிகமாகி, உங்களுக்கு இந்தப் பிரச்சனை எல்லாம் வருது. எவ்வளவு பெரிய மாடுபிடி வீரன். ரியல் ஹீரோ. இப்படி மனசொடிஞ்சு உட்காரலாமா?" என விஜயும்.

"மனசொடிஞ்சு போயும் சும்மாவா இருந்தான். உன்னை மாதிரி நிறையப் பேரைக் காப்பாற்றி இருக்கான் அது தான் என் செல்வா, இல்லை, இல்லை அன்புச்செல்வன்." என்றான் தர்மா.

"போதும் நிறுத்துங்கடா , எல்லாரும் நினைக்கிற மாதிரி, அக்கா திட்டுச்சுண்டோ, அப்பா, அண்ணன் கலங்கி இருக்காங்கண்டோ நான் ஊரை விட்டு வரலை, எங்க அம்மா இல்லாத வீட்டுல, ஊர்ல என்னால மூச்சு கூட விட முடியாமத்தான் வந்தேன்.” எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கதவு தட்டும் சத்தம் கேட்டது.

விஜய் சென்று, வெளியே எட்டிப் பார்த்தவன், ஒரு குடும்பமே பரிதவிப்போடு நிற்க, முன்னே நாகரீகமாக நின்ற இளைஞன் “அன்புச்செல்வன்...“ என இழுக்கவும், “ஐயம் விஜய், நான் தான் உங்களுக்குக் கால் பண்ணியிருந்த்தேன், வாங்க ப்ரோ . மாடுபிடி வீரன் உள்ள தான் இருக்காரு” என ஓர் மகிழ்வோடு அவர்களை உள்ளே அழைக்கவும், அறிவு தன் அப்பாவை அழைத்துக் கொண்டு வேகமாக உள்ளே நுழைந்தான்.

கையில் கட்டோடு மகனை மருத்துவ உடையில் பார்க்கவும், “அன்பு, என்னடா ஆச்சு?” என வயதையும் பொருட்படுத்தாது ஓடி வந்து மகனைக் கட்டிக் கொண்டார் சின்னச்சாமி. “அப்பா...” எனக் கட்டிலில் அமர்ந்தவாறு, அவர் வயிற்றைக் கட்டிக் கொண்ட மகன், மூன்றரை வருடத் துக்கத்தையும் கத்திக் கதறி அழுது தீர்த்தான். மறுபுறம் அறிவு அவனை அணைத்துக் கொண்டு கதற, கண்ணீரைத் தவிர அவர்களைக் கரை ஏற்றும் உபாயம் வேறொன்றும் இல்லை என்பது போல் இருந்தது.

பத்து நிமிடம் கழித்தே, அவன் நிமிர்ந்து பார்க்க, “அன்பு அக்காள மன்னிச்சுடுறா, அம்மா போனதில், என்னை விட உன் சோகம் பெரிசுன்னு புரியாமல் போச்சு. உன்னை குத்தம் சொல்லியே ஊரை விட்டு விரட்டி விட்டுட்டேண்டா.” எனக் கண்ணீர் விட,

“இல்லக்கா, உன்னால இல்லக்கா, எனக்கு அம்மா இல்லாத வீட்டில் மூச்சு முட்டுச்சு, அது தான் ஓடிவந்துட்டேன்.” எனச் சமாதானம் சொல்ல, மூன்றரை வருடத்துக்கு முன்பான துக்கத்தைப் பேசிப் பேசி அழுது கரைந்தனர்.

மாமன்களும் மருமகனைத் தேற்ற, அவர்களிடம் பேசுவதில் அன்புவுக்கு ஒரு தயக்கமும், குற்ற உணர்வும் இருந்தது. "என்னை மன்னிச்சிடுங்க, சொல்லாமல் வந்தது தப்பு தான்." என மாமன்களைப் பார்த்து அன்பு கைகூப்ப, "விடு மாப்பிள்ளை, கயலு தான் ரொம்ப கஷ்டப் பட்டுருச்சு." என்றவர்கள்,

சகஜமாகப் பேசி சூழலைச் சரியாக்க, “கயல் வரலையா மாமா.“ எனத் தயங்கி, தயங்கிக் கேட்டான்.

“அது ஒரு கிருத்திருவம் புடிச்ச கழுதை, கீழ ஆஸ்பத்திரி வரைக்கும் வந்தவ, மேல ரூம்புக்கு வரமாட்டாளாம். கனி கூட நிற்குது.“ எனவும், அன்புவுக்கு மனம் துடித்தது.

“தர்மா, ட்ரிப்பை கழட்டி விடச் சொல்லுடா, நான் கீழப் போகணும்.” என்றான்.

கலைச்செல்வி தான், “நீ இருடா, மகாராணி கோபத்தில் இருக்கா, நான் சமாதானம் பண்ணி அவளை அனுப்பி விடுறேன்.” என்றவள் தனுஷையும் அறிமுகப் படுத்த, விஜய், தனுஷ், தர்மா மூவரும் தாங்கள் கண்டுபிடித்த விவரத்தை அவனிடம் பகிர்ந்தார்கள். அவன் ஒப்புக்குப் புன்னகைத்து, நன்றி தெரிவித்தான்.

அன்புவின் கவனம், தங்களிடம் இல்லாததை உணர்ந்த தனுஷ், “ப்ரோ, அது தான் கண்டு பிடிச்சிட்டீங்கள்ல, விடுங்கடா, அறுக்காதீங்கன்னு அன்பு அண்ணன் பார்க்கிறார், வாங்க நாம போயிட்டு, அனுப்ப வேண்டியவங்களை அனுப்புவோம்.” என எல்லாரையும் கேன்டீனுக்கு அழைத்துச் சென்றான்.

அன்பு அனைவரும் அறையை விட்டுச் சென்ற பிறகு, நொடிகளையும், நிமிடங்களையும் கணக்கிட்டுக் கொண்டே, கதவின் மேல் வைத்த விழியை அகற்றாமல், அவனின் கயல்விழி வரும் வழியை, விழி வைத்துப் பார்த்திருந்தான்.

கால் மணி நேரம் ஆகியிருக்கும், "அட, இவைய்ங்கே, போயிட்டு அவளை அனுப்பி விட இவ்வளவு நேரமா. அப்படி எத்தனாவது மாடியில் இருக்கோம். அப்படியேன்னாலும் லிப்ட் வச்சிருப்பானுங்களே. இந்த ட்ரிப்ஸ் வேற பாதிப் பாட்டில் இன்னும் மீதி இருக்கு. இல்லைனா நானாவது போயிருப்பேன். இந்தத் தர்மா சொன்னா, கேட்கிறானா பாரு." என விதவிதமாக மனதிலும், வாய்விட்டும் புலம்பியபடி இருந்தவன். இதற்கும் மேலும் பொறுக்க முடியாது, எனப் பெட்டை விட்டு இறங்கி, மற்றொரு கையால் பாட்டிலைக் கழட்டப் போன நேரம்,

கதவைத் திறந்து, கயல்விழியை உள்ளே தள்ளி விட்டு, " யோவ் மாம்ஸ், எங்கக்காவை இம்புட்டுத் தூரம் இழுத்துட்டு வந்ததே பெரும் பாடு. அவளைப் புடிச்சு வச்சுக்க. அப்புறம், ஆள் அட்ரஸ் இல்லாமல் அப்ஸ்காண்டா ஆகிற? உன்னை வந்து கவனிச்சுக்கிறேன்." என்ற கனி மொழி, "அடியே, கயலு விழி, அந்தாளை என் பேரைச் சொல்லி நாலு சாத்து, சாத்துற. அதில்லாமல் கொஞ்சிட்டு நிண்ட, கொன்றுவேன்." எனத் தலையை நீட்டிப் பேசிக் கொண்டே இருந்தவளை,

"அவுங்க பேசிக்குவாங்க. நீ வா" எனத் தனுஷ் கனியின் ஜடையைப் பிடித்து இழுக்க, கதவை அடைத்து விட்டு அவனோடு மல்லுக்கட்டிக் கொண்டே சென்றாள்.

கயல்விழி அறைக்குள் வந்தாலும் அவனை ஏறெடுத்துப் பார்க்காமல் எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கும் எரிமலைக் குழம்பு போல், தலையைக் குனிந்து கொண்டு நிற்க,

"கயலு. விழி. என் கயல்விழி... கவி... கண்ணழகி!!!" என அவன் ஆரம்பித்திலிருந்து, சத்தம் தேய்ந்து கொண்டே வந்து உணர்ச்சி வயப்பட்டுத் தொண்டையில் சிக்கிக் கொள்ள, அதில் கண்ணீரின் தொனி கேட்டது. அப்போதும் அவள் நிமிர்ந்தே பார்க்காமல் கண்ணீர் சொரிந்தபடி குனிந்து அதே இடத்தில் சிலையாய் நிற்க, தொண்டையைச் செருமிக் கொண்டவன், அவளைத் தன்னிடம் வரவழைக்கும் உத்தியாக,

" இந்தக் கோர முகத்துக்குக்காரனைப் பார்க்க பிடிக்கலையா கயலு?" எனக் கேட்கவும், சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு அவன் முகத்தின் தழும்புகள் அதிர்ச்சியைத் தர, அவனைப் பார்க்க விடாமல் அவள் கண்ணீரே சதி செய்தது.

அவன் தலையை அசைத்து, "வாடி" என இடது கையை நீட்ட, அதுவரை இருந்த கோபம், தயக்கம் எல்லாம் மறந்து ஓடிப் போய் அவனைக் கட்டிக் கொண்டாள். "ஏன் மாமா, என்னை விட்டுட்டு வந்த?" என அவன் மார்பிலேயே அழுது கரைந்தவளை, ஒரு கையால் அணைத்திருந்தவன், தன் மார்பில் அழுத்திக் கொண்டு தாடையை அவள் தலைமீது வைத்துக் கொண்டு கண்ணீர் பெருக்கியபடி நின்றான்.

இருவரின் நெஞ்சும் துடிப்பதை மற்றவரால் உணர முடிந்தது. அவள் பார்வை ட்ரிப்ஸ் பாட்டில் மேல் செல்லவும், அவனை விட்டு விலகி கட்டிலில் உட்காரவைத்தவள், கண்ணீர் உகுத்தபடியே நின்றாள்.

"அடியே, குரவைகுட்டி, எதாவது சொல்லு, வையறதுனாலும் வஞ்சிரு. உன் தங்கச்சி சொன்னாலே அது மாதிரி நாலு அடிக்கனுமா அடி, இல்லை கடிக்கனுமா கடி." எனத் தோளைத் தூக்கிக் காட்டியவன், "இப்படி அழுதுகிட்டே நிற்காதடி . என்னால பார்க்க முடியலை." என்றான்.

அவனை நிமிர்ந்து முறைத்தவள், " இப்படியே தான் மூன்றரை வருஷமா அழுதுகிட்டு இருந்தேன். பெரிசா உருகிற!" என்றவள், "மத்தவங்க எல்லாம் எதாவது சொன்னாலும், நான் எதாவது சொன்னேனா. உன்கூடத் தான நிண்டேன். எனக்கிட்டையும் சொல்லாமல் ஓடிட்டியே." என அவள் வருந்தவும்.

"என்னால முடியலைடி. அம்மாவை இரத்த வெள்ளத்தில் பார்த்ததே நினைப்பா இருந்துச்சு. கடைசில என்னைப் பார்த்துகிட்டே உசிரை விட்டுச்சு. அது உசிரை விட்டுச்சுண்டு கூடத் தெரியாமல் பார்த்திட்டு இருந்தேன்டி!" என அழவும் அருகே அமர்ந்து அவனைக் கட்டிக் கொண்டவள், அவன் மனதில் இருப்பதெல்லாம் வெளியே வரட்டும் எனப் பேச்சுக் கொடுத்தாள். செவிலியர் வந்து ட்ரிப்ஸ் பாட்டிலைக் கழட்டும் வரை இவர்கள் பரிமாற்றம் தொடர்ந்தது.

அவர்கள் குடும்பமே வந்து சேர, இப்போது தனுஷ், விஜய், தர்மா, தன் குடும்பத்தினர் என அனைவரிடமுமே, தன்னைக் கண்டுபிடித்த கதையைக் கேட்டுக் கொண்டான். "இப்பவாவது காது கொடுத்துக் கேக்குறீங்களே , உன் கருணைக்கு நன்றி ப்ரோ..." என விஜய் பணிவாகச் சொல்லவும், "டேய், உத படப் போற." என வழக்கம் போல் மிரட்டினான் அன்பு.

தனுஷை பார்த்து, " கோதண்டம் தம்பியா இருந்தும், இவ்வளவு உதவியிருக்கியே தம்பி ரொம்பத் தாங்க்ஸ்." என்றான் அன்பு.

"எங்க அண்ணனும் போட்டி பொறாமை எல்லாம் விட்டிருச்சு அண்ணேன். பெரியம்மாவுக்கு இப்படி ஆனது, அதுக்குமே பெரிய ஷாக். நீங்க கிளம்பவும், என்னால தான் இப்படி ஆச்சுன்னு ஒரே புலம்பல்." என்றான் தனுஷ்.

"இனிமே யாரும், சிவகாமி மறைஞ்சதுக்கு என்னால தான், என்னால தான்னு மனசு விட வேண்டாம். விதி முடிஞ்சது, அவள் நினைச்ச மாதிரியே சுமங்கலியா போயிட்டா. இனிமே அதைப் பத்தி பேச வேண்டாம்" என்ற சின்னச்சாமி,

தனுஷிடம், "என் மகனை கண்டுபிடிச்சு குடுத்தா, பாலாபிஷேகம் பண்றேன்னு சொன்னேன். நம்மூருக்கு வாங்கச் செய்வோம். அதுக்கும் முன்ன வேற என்ன வேணுமுண்டு சொல்லுங்க தம்பி, நான் செய்யிறேன்." எனவும்.

"நீங்க முதல்ல அன்பு அண்ணனுக்கும், கயல்விழிக்கும் கல்யாணம் செஞ்சு வச்சு, என் ரூட்டை கிளியர் பண்ணுங்க. மீதியை நானே பார்த்துக்குவேன்." என்றான்.

"அன்புவுக்குக் கல்யாணம் செஞ்சா , உன் ரூட்டு எப்படிக் கிளியர் ஆகும்." எனக் குழம்பிய அறிவை, அவன் அக்கா கலை, "உனக்குப் பேர்ல மட்டும் தான்டா அறிவு இருக்கு." எனத் திட்டியவள், "தனுஷ் தம்பி கனியை கட்டிக்கிறோம்னு சொல்றார்." என விளக்கவும்.

அன்பு, கனிமொழியிடம், "தம்பி பொங்கல் வச்சு, பூ எருவாட்டில சூடம் ஏத்தி ஆத்துல விட்டானா?" என விசாரிக்கவும், " போ மாமா" என அவள் கோனை வழிக்க, அந்தக் கதையும் ஓடியது.

"ப்ரோ, இவ்வளவு பெரிய மாடுபிடி வீரன், க்ரூப் 1 ல செலக்ட் ஆகி, டி எஸ்பி போஸ்டிங் கிடைச்சிருக்கு, அதிலையாவது சேர்ந்திருக்கலாம்ல ஏன், ரிஸர்வ் போலீஸ்ல சேர்ந்திங்க?" என விஜய் கேட்கவும், அன்பு கயலைப் பதட்டமாகப் பார்த்துவிட்டு,

"அந்தப் போஸ்டிங்கை நிறுத்தி வச்சிட்டாங்க. கேஸ் நடக்குது." என மட்டும் சொன்னவன், அன்றைய தனது மனநிலையையும் நடந்ததையும் சுருக்கமாகச் சொன்னான்.

குமரவேல், "சரி, நடந்தது எல்லாம் நடந்து போச்சு. லீவைப் போட்டுட்டு, ஊருக்கு வா. கயலுக்கு நாலு வருஷம் முன்னை பரிசம் போட்டது கல்யாணத்தை முடிச்சிடுவோம்." என்றான்.

ஊருக்கு எனக் கேட்டவுடன் உடல் விரைத்த அன்பு, "இல்லை மாமா, நான் ஊருக்கு வரமாட்டேன்." எனப் பதில் தரவும் எல்லாருமாக அவனை வற்புறுத்த, அன்பு பதட்டமானான். தர்மாவும், விஜயுமாகச் சூழலைச் சமாளித்தவர்கள் வீட்டுப் பெரியவர்களைத் தனியே அழைத்துச் சென்று அவன் மனநிலையையும், உடல்நிலையையும் பற்றி விளக்கினர்.

"அப்ப, அடுத்து என்ன செய்யறது" எனக் கோபமாக யோசித்த பெரியவர்களிடம், சிறியவர்கள் யோசனை சொல்ல அதுவே சரியென ஆக வேண்டிய வேலையைப் பார்த்தனர்.
 
Top