• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நீயே எந்தன் மகளாய்- 5. சீறிவரும் காளைகள்

தீபா செண்பகம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
520

அத்தியாயம் -5

நீயே எந்தன் மகளாய்- 5. சீறிவரும் காளைகள்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மாட்டுப் பொங்கலன்று அலங்காநல்லூர் வாடி வாசல்.

வாடிவாசலின் காளைகள் அவிழ்க்கப் பட்டு வரும் வாசலைச் சுற்றி விசாலமாக மூன்று பக்கமும் தடுப்புகள் கட்டப்பட்டு, ஒரு புறம்மட்டும் நீண்ட பாதையாக மாடுகள் ஓடுவதற்கு வசதியாய் பாதை அமைக்கப் பட்டு இருந்தது. ஓடு பாதையின் இரண்டு புறமும் தடுப்புக் கட்டைகள் கட்டப்பட்டு, பார்வையாளர்கள் அதன் பின்னே நிற்க, சீறி வந்த காளைகள் சிங்க நடையோடு, நாலு பேரை விலாவில் குத்தியோ, பின்னங்காலால் உதைத்தோ, துள்ளிக் குதித்து வீரர்களைத் தன் மேனியிலிருந்து உதிர்த்தோ தன் ஆக்ரோசத்தைக் காட்டி, மாடு வளர்க்கும் மாட்டுக்காரர் அதன் வடக்கயிற்றைப் போட்டவுடன் சமத்தாக அவர் பின்னால் சென்று கொண்டிருந்தது.

ஐல்லிக்கட்டு காளைகளைத் துன்புறுத்தமாட்டோம் என்ற உறுதி மொழியோடு ,விழா கமிட்டியினர் அதனை மீண்டும் மீண்டும் வீரர்களுக்கு ஞாபகப் படுத்திக் கொண்டு , மேலிடத்துப் பார்வையாளர்கள் முன் ஜல்லிக்கட்டுப் போட்டியினை நடத்தினர். ஏனெனில் ப்ளுகிராஸ் அமைப்பு உள்ளிட்ட பலர், இதனைப் பிரச்சனையாக்க முயன்று கொண்டிருக்க, அதற்கு இடம் தரக் கூடாது என வெகு கவனமாகவே போட்டியை ஏற்பாடு செய்திருந்தனர்.

விழா கமிட்டியினர் தாரை தப்பட்டை முழங்க , கிராம தெய்வங்களை வணங்கி, காளைக்கு ஆரத்தி எடுத்து , சாமி கும்பிட்டுக் கொடியசைத்துத் துவக்கி வைக்க, முதலில் சகல அலங்காரங்களோடு பூஜிக்கப்பட்ட முனியாண்டி கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இப்படியாக விடப்படும் கோவில் காளைகளை யாரும் பிடிப்பது இல்லை. அது அந்த ஊருக்குத் தரப்படும் மரியாதையாகப் பார்க்கப்பட்டது.

பச்சை வண்ணத்தில் ஜெர்சி அணிந்த வீரர்கள், தங்கள் அடையாள எண்ணைச் சுமந்த பனியன், டவுசரோடு, காளைகளைக் கண்ணெடுக்காமல் பார்த்து, அது ஏமாந்த நேரம் அதன் திமில் பிடித்து அடக்கத் தயாராக இருந்தனர்.

விழா கமிட்டியினர், ஒவ்வொரு காளையையும் பேர், ஊர் அதன் உரிமையாளர் பெயரையும் சொல்லி, குறிப்பிட்ட இடத்துக்குள் மாட்டின் திமிலை மூன்று தவ்வுக்குப் பிடித்திருந்தால் அது பிடி மாடு. மாடு பிடி வீரனுக்குப் பரிசு. ஆனால் மாட்டைப் பிடிக்க இயலாவிட்டால் , மாடு பிடிபடவில்லை என அறிவித்து மாட்டின் உரிமையாளருக்குப் பரிசு வழங்கப் பட்டது.

ஜல்லிக்கட்டு, இன்றைய நாட்களில் ஊடக வளர்ச்சி வந்த பிறகு, மிகவும் பிரபலம் அடைந்து இருந்தது. உள்ளூர் தொலைக்காட்சிகள் நிறைய நேரடி ஒளிபரப்புச் செய்தன. அதனால் விளம்பரதாரர்கள், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கும், நாளடைவில் ஜல்லிக்கட்டில் வெற்றிபெறுபவருக்குமே தங்கள் பொருட்களைப் பரிசாகக் கொடுக்கும் விளம்பர உத்தியைக் கையாண்டார்கள். அதனால் ஒவ்வொரு மாட்டுக்கும், வீரனுக்கும் ஏகப்பட்ட பரிசுகள் காத்திருந்தன.

வாடிக்குப் பின்னால் மாடுகள் வரிசை வரிசையாக நின்றன. இந்த மாடுகள் பரிசோதிக்கப்பட்டு டோக்கன் போட பட்டை வரிசையில் நின்றன. இரண்டு சுற்றுகள் முடித்து மூன்றாவது சுற்றுக்கு மாடுகள் வரிசையில் நிற்க நான்காவது சுற்றுக்கு நின்ற மாடுகள் வரிசையில் முடுவார் பட்டி சூரன் என்ற புலிக்குலம் காளைக்கு அதன் பயிற்றுநர், ரகசியமாக ஓர் துணியை முகரக் கொடுத்து உசுப்பேற்றிக் கொண்டிருந்தான். யாரைப் பழி தீர்க்க இந்த ஏற்பாடோ தெரியவில்லை.

மூன்றாவது சுற்றுக்கு இறங்க வீரர்கள் மஞ்சள் வண்ண ஜெர்சியில் தயாராக இருந்தனர். அவர்களோடு சேர்த்து அடுத்தச் சுற்றுக்கு , முதல் இரண்டு சுற்றுகளில் அதிக எண்ணிக்கையில் மாடுகளைப் பிடித்த வீரர்களை அனுப்ப விழா கமிட்டியினர் கணக்கெடுத்துக் கொண்டிருந்தனர்.

"அண்ணேன், என் அத்தை மகள், நிண்டு பார்த்திட்டு இருக்கா, இரண்டு காளைக்கு முகத்தை மறைச்சு, திசை மாத்தி விடுணேன், அதைப் புடிச்சு நானும் மாடுபிடி வீரனாயிடுறேன்." என மஞ்சள் ஜெர்சி ஜெகன் மற்றொரு மஞ்ச ஜெர்சி அணிந்தவனிடம் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்க, விழா கமிட்டி, அடுத்து வருவது, " இராஜக்காள் பட்டி, வேல் க்ரூப்ஸ் வீரர்கள்." என முக்கியமான வீரர்கள் பெயரில் முதலாவதாக, "ஐஞ்சு வருசத்தில முந்நூறு காளை வரைக்கும் அடக்கியிருக்க, நம்ம பக்கத்து ஊரு இராஜக்காள் பட்டி சிங்க தமிழன் அன்பு தலைமையில பசங்க இறங்குறாங்கப்பா.", "வாங்கடா, வாங்கடா சிங்கக் குட்டிகளா, இன்னைக்கு, சிங்கத் தமிழன்களா, சீறும் காளைகளாண்டு பார்த்திருவோம்..." என வர்ணனையாளர் முழங்கிக் கொண்டிருந்தார்.

அன்பு, ஆறடியில் ஆகிருதியான உடல்வாகு கொண்ட முதுகலைப் பட்டதாரி. பள்ளி கல்லூரிகளில் படிக்கும் போதே, ஓட்டம், தவ்வுதல், தாவுதல் என அனைத்து தடகள விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கெடுத்துப் பரிசை தட்டிக் கொண்டு வரும் தடகள வீரன். வேகமாகக் கரை புரண்டு ஓடும் முல்லையாற்றில் எதிர் நீச்சல் போட்டு மேனியை உறுதியாக வளர்த்தவன். தினவெடுத்த தன் இடது தோளில் சீறிவரும் காளையும், அதை அடக்கிடும் வீரனுமாக ஜல்லிக்கட்டு சித்திரத்தை டாட்டூவாக வரைந்திருந்தான். இது ஜல்லிக்கட்டு மேல் அவன் கொண்ட ஆர்வத்தை பறை சாற்றியது.

விடுமுறை நாட்களில் தந்தையோடு விவசாய வேலைகளிலும் ஈடுபடுபவன், கடந்த ஐந்து வருடத்தில் பரிசாக வந்த கரவை மாடுகளை வைத்துப் பராமரிக்க ஆரம்பித்தவனிடம் இப்போது பத்து மாடுகள் வரை உள்ளது. இந்த வருடம் முதல் பரிசான பைக்கை வெல்வதும், பக்கத்து ஊரில் வசிக்கும் சொந்தக்காரனிடம் போட்ட சவால் படி, அவன் காளையை அடக்கி, அதையே தட்டிச் செல்வதும் தான் அவனது குறிக்கோளாக இருந்தது. வருடத்தில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், குடும்பத்துக்குத் தெரிந்தோ, தெரியாமலோ மாடு பிடிக்கும் விளையாட்டை ஆடி வந்துவிடும் இந்தக் காளையைக் காண இன்று அவன் மாமன் மகளும் வருகை தந்து உள்ளாள்.

வாடிக்குப் பக்கவாட்டிலிருந்த ஒரு வீட்டின் இரண்டாம் மெச்சிலிருந்து, படர்ந்த முகம், அகன்ற மையிட்ட விழிகள், கூர் நாசி , செப்பு உதடுகள் என பால் வண்ணத்து பாவையான கயல்விழி நெஞ்சு தடதடக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஐந்தரையடி உயரத்தில் பட்டுப் பாவாடை தாவணியில் நீண்ட தன் பின்னலை ஜடையிட்டு, மல்லிகை சூடி, "முருகா, முருகா, முருகா..." என முருகப் பெருமானை அழைத்துக் கொண்டு, தன் அத்தை மகன் அளவான காயங்களோடு வெற்றி பெற்று வரவேண்டும் என வேண்டிக் கொண்டிருந்தாள்.

அவளோடே நின்றிருந்த கனிமொழியும், அவளது தோழிகளும் கேலி செய்த போதும் அதைப் பொருட்படுத்தாமல் தன் முறை மாப்பிள்ளை மீதே கண்ணைப் பதித்திருக்க, "பத்திரமா வந்திரு மாமா. முருகா, என் மாமனை காப்பாத்து." என்ற அவளது மனமொழிகள் முருகனை அடையும் முன், நூறடி தொலைவில் நின்ற அன்புவின் மனதில் அதிர்வைத் தந்தது.

வாடியைப் பார்த்து நின்றிருந்தவன், சட்டெனத் திரும்பி மாமன் மகள் இருந்த திக்கை நோக்கி, நொடியில் அவளை அடையாளம் கண்டு கொண்டவன், கயலை நோக்கி, ஓர் விரிந்த புன்னகையையும், கட்டை விரல் உயர்த்தித் தம்ஸ்-அப் காட்டியவன், அவளும் பார்த்து விட்டுக் கையசைக்கவும், இவன் கண்ணடிக்க, அருகிருந்த அலர்களின் கூட்டம் "ஹோ" வெனக் கத்தியது.

"மாம்ஸ், முதல்ல காளையை அடக்கு, அப்புறமா கன்னியை அடக்கலாம்." என சுற்றி நின்ற கயலின் தோழிகளும்,தங்கையும் கத்தினர். அன்பு ஓர் தலையசைப்போடு திரும்ப, அடுத்தச் சுற்றி ஆரம்பமாவதற்கான அறிவிப்பும் வந்தது. "முருகா, முருகா..." எனக் கயல்விழியும் ஜபிக்க ஆரம்பித்தாள்.

"காளையை அடக்க வந்த காளைகளே, ரெடியா இருந்துக்குங்கப்பா, இதோ முதல்ல வர்றது அய்யங் கோட்டை சந்திரன் காளை, இந்தா சீறி வர்றானப்பா காங்கேயம் மயிலைக்காளை, ஆகா , ஆகா இந்தக் காளையோட திமிலைப் பாரு, அழகைப் பாரு, கம்பீரத்தைப் பாரு, முடிஞ்சா பிடிச்சுப்பாரு!" என வர்ணனை செய்ய, வேகமாக ஓடிவந்த அந்தக் காளையின் வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓடி, திமிலை வலது கையால் தழுவி கொண்டு, இடது கையால் கொம்பைப் பிடித்தான் அன்பு.

"இந்தச் சிங்கத் தமிழன் பிடிச்சிட்டானப்பா, அப்படித் தான் பிடி, புடி விடாத." என 100 எண் அணிந்திருந்த அன்புவை உற்சாகப் படுத்த, முதல் மாட்டை வெகு சுலபமாகவே பிடித்தான் அன்பு.

"மாடு பிடி மாடப்பா, மாடுபிடி வீரன் பரிசை வாங்கிக்க, அமைச்சர் சார்பா ஒரு கோல்ட் காயினு, ராஜ் மஹால் பட்டுப் புடவை, கிப்ட் பேக்." என வரிசையாக அடுக்க, அன்பு அதற்கான டோக்கன்களை வாங்கி ஒருவனிடம் கொடுத்து வைத்தான்.

அடுத்து வருவது, வலசை கிராம மாடு, வவ்வால் தோட்டம், கொக்குளத்துத் தேனி மலைமாடு, பி ஆர் மாடப்பா. வக்கீல் குணசேகரனின் காங்கேயம் காளை. என ஊர், பெயரோடு காளைகள் இறங்கிக் கொண்டிருக்க, வேகமாக ஓடியதை சில வற்றைப் பிடித்தனர்.

“அடுத்து வர்றது, நம்ம அமைச்சர் வீட்டுக் காளை கொம்பனப்பா, முடிஞ்சா பிடிச்சுப்பாரு, இல்லைனா வேடிக்கைப் பாரு.“ என உள்ளே வந்த காளை யாரையும் அருகில் வரவிடாமல் கொம்பால் குத்த வர அமைச்சருக்கும், காளைக்கும் மரியாதை செய்து அதைப் பிடிக்காமல் விட்டனர்.

அடுத்து ஒரு சுமாரான காளைமாடு வரவும், அன்பு தன் கூட்டாளிகளுக்காக அதன் முன் சென்று கவனத்தைத் திசை திருப்ப, உதவி கேட்ட மஞ்சள் ஜெர்சி ஜெகன் லாவகமாக ஏறு தழுவி மாடு பிடி வீரனான்.

அடுத்து ஊசி முகமாகக் கூர் கொம்புகளோடு வந்த உம்பளாஞ்சேரி வகைக் காளை தவ்வி குதித்து ஓடிவர, அதன் போக்கைக் கவனத்தில் கொண்ட அன்பு, அடுத்து அது தாவும் இடத்தைக் கணக்கிட்டு, அங்கிருந்து அதன் மேல் பாய்ந்து திமிலைப் பிடிக்க, கால்கள் வலுவான அந்தத் தஞ்சை மாடு சீற்றத்தோடு பின்னங்காலை உதைத்துக் குதித்து அவனை உதிர்க்க முயன்றது. ஆனால் மூன்று தவ்வுக்கு அன்பு விடாமல் பிடிக்கவும், மாடு பிடிமாடானது.

அடுத்து, ஜக்கம்பட்டி, ராமுவின் காளை என்ற அறிவிப்போடு வந்த தேனி மலைமாடு உள்ளே வர, அகன்ற முகமும் கூர் கொம்புகளுமாக வெள்ளை நிறத்தில் வந்த அந்தக் காளையைக் கண்டு இராசக்காப்பட்டி கூட்டமே பம்மியது. "மாட்டைத் தொட்டுப்பாரு. ஆ சூப்பரு." என மாட்டைப் புகழ்ந்த வர்ணனையாளர், வீரர்களை உசுப்பேத்தி விட, அன்பு அதைப் பிடிக்க இறங்கினான். " மாப்பிள்ளை வேணாம்டா." என உடனிருந்தவர்கள் கத்த, கயல்விழிக்கு நெஞ்சம் அடித்துக் கொண்டது.

அன்பு பக்கம் வர முயல இரண்டு பக்கமும் சிலுப்பி அவனுக்குக் கீறல்களை வீரப் பரிசாகக் கொடுத்து நேரே ஓடியது.

"மாடு பிடிபடவில்லை. இருந்தாலும் அவர் தைரியத்தைப் பாராட்டிப் பொங்கல் வாழ்த்துச் சொல்றோமப்பா." என இன்னும் பத்து காளைகளை இறங்கவும், அந்தச் சுற்று முடிவுக்கு வந்தது.

தான் பங்கெடுத்த முதல் சுற்றிலேயே அன்பு பத்து காளைகளை அடக்கியிருந்தான். ஆங்காங்கே இருந்த கீறல்களிலிருந்து, இரத்தம் கசிய மண்ணை எடுத்து அதில் அப்பிக் கொண்டே, காயங்களைப் பொருட்படுத்தாமல் களத்தில் இறங்கினான். மூன்றாம் சுற்று முடிவுக்கு வந்தது.

ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்திருந்த தாய்மாமன் வேல் சகோதரர்கள் இருவருக்கும் பெருமை பிடிபடவில்லை. சில வருடங்களுக்கு முன்பு வரை குமரவேல் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கெடுத்தவன் தான். ஒரு காலத்திற்குப் பிறகு, பலமான அடிப்பட்டதில் கலைச்செல்வி அழுது, ஆர்ப்பாட்டம் செய்து, பிடிவாதம் பிடித்து தன் கணவன் ஜல்லிக்கட்டு போவதை நிறுத்த வைத்தாள். இதற்காக வீட்டில் பிரச்சனை வேண்டாமென குமாரும் போதுமென நிறுத்திக் கொண்டான். ஆனால் மாமனோடே ஜல்லிக்கட்டு வேடிக்கை பார்க்க சென்று வந்த அன்பு, அதனைப் பிடித்துக் கொண்டான். ஆரம்பக் காலத்தில் மாடு பிடிக்கும் லாவகத்தை அன்புவுக்குக் கற்றுத் தந்ததே குமரவேல் தான். அதனால் ஓர் குருவுக்குச் சிஸ்யன் மேல் உள்ள பெருமை அன்பு மேல் குமாருக்கு இருந்தது.

நான்காம் சுற்றுக்கு இவர்கள் கூட்டாளிகள் நால்வர் முன்னேற, அடுத்த க்ரூப்போடு சேர்ந்து களமிறங்குவதில் சில அசௌகரியங்கள் இருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் அன்பு ஆடிக் கொண்டிருந்தான்.

பார்வையாளர் வரிசையில் இருந்த குமாரிடம், அன்புவின் அண்ணன் அறிவு கூட்டத்தைக் கடந்து வேகமாக விரைந்து வந்தான். அவன் பதட்டத்தைப் பார்த்து மாமன்கள் வினவ, " முடுவார்பட்டிக்காரன் அன்பு சட்டையைக் கொடுத்து மாட்டுக்கு வெறியேத்தி வச்சிருக்கானாம். வாடிக்கு பின்னாடிலிருந்து ஒருத்தன் தகவல் கொடுத்தான்." என பதறிக் கொண்டு சொல்லவும்,
" எந்த சுற்றுக்கு வருது?" என குமார் கேட்கவும், "வரிசையில போயிடுச்சுண்டு சொல்றாய்ங்கே..." எனும் போதே, கந்தவேல், “இவனுங்க பகைமை முடியவே முடியாதா , இதில தான் விளையாடுறதுன்னு இல்லை.“ என கோபமும் சங்கடமும் பட்டார், ஏனெனில் அறிவு சொன்ன காளைக்கு சொந்தக்காரன் , கந்தவேல் மச்சினன் மகன், கயல்விழியின் மாமன் மகன்.

“அண்ணேன் , அவைங்க என்னனாலும் செய்யட்டும், அன்பு காளையை பிடிச்சிடுவான், தைரியமா இரு.“ என தம்பி குமரவேல் , அண்ணனுக்கு தைரியம் சொன்னான்.

நான்காம் சுற்றில் முதல் மாடாக முளையூர் சங்கரப்பாண்டியோட மருது காளை, என அறிவிப்பு வந்தது. நன்றாக பருத்தி, காணப்பயறு, பேரிட்சை என கொடுத்து வளர்க்கப்பட்ட காங்கேயம் காளையை அவிழ்த்து விட்டு, பண்ணைக்காரன் கயிற்றோடு எல்லையில் சென்று நின்றான்.
"காளை இறங்கும் போதே, சைசா இறங்குதப்போ. சூதானமா இருந்துக்கோ. அடேங்கப்பா என்ன லுக். தொட்டுப் பாரு. ஆகா, ஆகா காளையின்னா, இது காளை. மாட்டுக்காரன் பரிசை வாங்கிக்கப்பா." என்றனர்.
மருதுகாளை உள்ளே நுழையும் போதே இருபுறமும் சீறிக் கொண்டு, கொம்பால் வீரர்களை கதிகலங்க வைத்து, வழி ஏற்படுத்திக் கொண்டே ஒரு சுத்து, சுற்றி மிரட்டி விட்டு ஓடியது.

மருது காளை ஆட்டங்காட்டிய கேப்பில் பெரிய விசிலடித்து, அன்புவின் கவனத்தை கவர்ந்து, குமரவேல் எச்சரிக்கை செய்து விட்டான். அன்பு முடிவார்பட்டிகாரனிடம் நேரடியாக மோதியிருந்ததால் தயாராகவே இருந்தான்.

அடுத்து முடுவார்பட்டி சூரன், பாய்வதற்குத் தயாராக இருந்தது. வாடியில் மேலிருந்து கொண்டி அருவாள் மூலமாக அதன் கயிற்றை அறுத்து விட, அந்த மாட்டின் மேல் இரண்டு தங்கக் காசு முதல் பணமுடிப்பு, பட்டுச் சேலை, கிப்ட் பேக் என ஏகப்பட்ட பரிசுகள் அறிவிக்கப்பட, "ஆத்தே, பரிசே அள்ளுதப்பா. பிடிக்கிற வீரனுக்கு ஜாக் பாட்டு தான்." என வர்ணனையாளர் அறிவிக்க, அன்பு சவால் விட்ட பங்காளி வீட்டுப் பயலை மனதில் நினைத்துக் கொண்டு, தயாராக நின்றான். ‘அடேய், நீ சும்மா சவால் விட்டிருந்தாலும் விட்டுருவேண்டா, கயல் மேலையா கண்ணு வைக்கிற, காளையை அடக்கி, உன் கூட்டத்தையும் அடக்குகிறேன் பார்.’ என மனதில் சூளுரைத்தாலும், பார்வைக்கு அமைதியாகவே இருந்து, தன மனதை ஒருமுகப் படுத்தித் தயாராக நின்றான்.

கருப்பு நிறத்தில் உயர்ந்த திமிலோடு நின்ற சூரனை, நன்றாகப் பழக்கப் படுத்தியிருந்தனர். உள்ளே நுழையும் போதே செறியடித்து, மண்ணைத் தோண்டி, இட வலமாக ஒரு லுக் விட்டது. இரண்டு புறமும் வந்த வீரர்கள் சிதறி ஓடினர். அன்பு சமயம் பார்த்து நிற்க, ஓர் முந்திரிக் கோட்டை வீரன், சூரனை அடக்கப் போக, கொம்பால் குத்தி உருட்டித் தள்ளியது.

"நல்ல சுத்து மாடப்பா, ரோஷக்கார மாடா இருக்கு. நிண்டு விளையாடுது. தில்லுக்குத் துட்டு. வாயா, வாயா வீரனா, சூரனாண்டு பார்த்திருவோம்." என வர்ணிக்க, அன்பு அதற்கு ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தான். உருண்டும், புரண்டும் படுத்தும் பின்னாடியே நகர்ந்து நொடியில் எழுந்து என வீரனும், சூரனும் ஐந்து நிமிடம் கடந்து போராடா, கயல்விழி, சூரனைக் கொன்ற வீரமுருகனை மனதில் ஜபித்து மாமனுக்காய் வேண்டி நின்றாள்.

சூரன் முகரும் சக்தியால், அன்புவை தன் எதிரி என உணர்ந்து எஜமானர் கட்டளையை ஆக்ரோசமாய் நிறைவேற்ற பாய்ந்தது. இருவருக்குமான போட்டா போட்டியாக ஜல்லிக்கட்டு சுவாரஸ்யமானது. கூட்டம் கரகோஷ ஒலி எழுப்பி ஆதரவு தெரிவித்தனர். அன்புவின் குடும்பம் கலவரமாகவே பார்த்திருந்தனர்.

“இது தாண்டா சல்லிக் கட்டு, மாப்பிள்ளை விடாதே.” என அன்புவின் தாய் மாமன்கள் ஒரு புறம் உற்சாகப் படுத்த, சூரன் காளைக்கும் அதன் முதலாளி கட்டளைகளை இட்டான். ஐந்தறிவு மூர்க்கமான மாடு, ஆறறிவு மனிதனின் சாமர்த்தியத்துக் முன் போராடியது.

அன்பு அதன் கால்களுக்கு ஊடே சறுக்கி மாடின் மடிப்பகுதி வழியே, பக்கவாட்டுக்கு வந்தவன், அதன் திமிலை லாவகமாக பற்றிக் கொள்ள, காலால் உதைத்தும், அன்புவை கொம்பால் குத்த முயன்ற எதுவுமே முடியவில்லை. கடைசியில் சூரன் பிடி மாடானது. ஆனால் பந்தயத்தின் விதிமுறை முடிந்தும் அன்பு அதன் திமிலை விடவில்லை. விட்ட நிமிடம் தன்னைக் குத்தும் எனத் தெளிவாக இருந்தான்.

"மாட்டுக்காரன், கயிறை போடப்பா, அப்ப தான் காளை அடங்கும்." எனவும் வேறு வழியின்றி , அன்புவை முறைத்துக் கொண்டே, முடுவார்பட்டி, கோதண்டம், அன்புவின் இளக்காரமான சிரிப்பில் வெகுண்டு காளையை இழுத்துச் சென்றான்.

மதியம் வரை தொடர்ந்த பன்னிரெண்டு சுற்றுகளில், பத்துச் சுற்றுகளில் பங்கெடுத்து அன்பு இருபத்தி நான்கு காளைகளை அடக்கியிருந்தான்.

விழா கமிட்டியினர், கணக்கு எடுத்து பார்த்து, இராஜக்காள் பட்டி அன்பு அன்றைய போட்டியின் சிறந்த மாடுபிடி வீரனாக அறிவித்து, ஒரு பைக்கையும் சிறப்புப் பரிசாகத் தந்தது.

அன்புவை அவனது குழுவினரே தோளில் தூக்கிக் கொண்டு, கரகோஷம் எழுப்பிக் கொண்டாடினர். ஒரு டிராக்டர் வண்டி நிறைய, வயர் கட்டில், தங்க காசுகள், அண்டா, வெள்ளிக் காசு, பீரோ, கிப்ட் பேக், செல்போன், குத்துவிளக்கு, பட்டுப் புடவைகள், ஷோபா செட், கிரைண்டர், மிக்ஸி என ஏற்றி விட்டு, ஊர்காரர்களும் அதில் ஏறிக் கொள்ள, அறிவு டிராக்டரை ஓட்டி வர அன்பு பைக்கை ஓட்டி வந்தான்.
 
Top