• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நீயே எந்தன் மகளாய்-8. கயலின் முகவாட்டம்

தீபா செண்பகம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
520

நீயே எந்தன் மகளாய்-8. கயலின் முகவாட்டம்

பாலமேடு தாண்டி மலைப் பாதையில், ஒரு டாட்டா ஏஸ் வாகனம் மெதுவாகச் சென்று கொண்டிருந்தது. அன்பு தனது பைக்கில் அந்தப் பாதையில் வந்து சேரவும், அவனது கூட்டாளிகள், நேற்று ஜல்லிக்கட்டில் பங்கெடுத்த வேல் க்ரூப் பசங்களும் சேர்ந்து கொள்ள, அந்த வண்டியை முற்றுகையிட்டனர்.

டாட்டா ஏஸ் வண்டிக்குள் நேற்று சுற்றி, சுற்றி விளையாட்டு காட்டிய சூரன் இருந்தது, அதனைப் பார்த்துக் கொள்ளும், பண்ணைக்காரன் அதனோடே பின்னால் அமர்ந்திருந்தான். வண்டியின் முன் சீட்டில் , ஓட்டுனருக்கு அருகில் கோதண்டம் அமர்ந்திருந்தான்.

"என்ன பங்காளி,காளையைப் பயங்கரமா ட்ரெயின் பண்றியாட்டுக்கு. நீ செஞ்ச வேலை தெரிஞ்சா, உனக்கும், உன் காளைக்கும் சேர்த்து ஆப்பு வச்சிருவாய்ங்கே தெரியுமில்லை. இப்ப எவனைக் குத்த கூட்டிப் போற?" எனக் கேட்கவும், கோதண்டத்துக்கு முகம் அஸ்டகோணலானது.

"டேய், ரொம்ப ஓவரா பேசாத வழியை விடு. எனக்கு முக்கியமான அலுவல் இருக்கு. உன்னை மாதிரி வெட்டி பயன்னு நினைச்சியா?" என்றான்.

"ஆஹா, உங்க முக்கியமான அலுவல் என்னாண்டு தான் எங்களுக்கும் தெரியுமே." என இளக்காரமாகப் பதில் தந்தவன்.

"சவால்ல ஜெயிக்க முடியாதவன், வாக்குச் சுத்தம் இல்லாத பயல் எல்லாம், சவாலே விடக் கூடாது. நான் போட்ட சவால்ல ஜெயிச்சிட்டேன். இப்ப நீ சொன்ன மாதிரி நடந்துக்க. காளையை எங்க வீட்டில் வந்து கட்டிப் போட்டுட்டு. கண் காணாமல் ஓடிடு." எனச் சொல்லவும்.

"ஒத்தைக்கு, ஒத்தை, என் சூரனோட மோதியிருந்தா, நீ ஆம்பளை. வாடில தான் அம்புட்டு பேர் மாட்டு மேல பாயிறீங்களேடா. அது தான் அது மிரண்டுடிச்சு." என்றான் கோதண்டன்.

"சரி விடு, நீ எப்பவுமே அழுகுனி பயல் தான். அது தெரிஞ்ச விசயம் தான். காளையை நீயே வச்சுக்க. ஆனால் கயல் இருக்கப் பக்கம் கூடப் பார்வையைத் திருப்பக் கூடாது. கொன்டே புடுவேன்." என மிரட்டி விட்டு வந்து சேர்ந்தான். ஆனால் அதுவே வினையாக வந்து சேர்ந்தது, கோதண்டம் வேலையை காட்டினான்.

மாலையில், ஒரு மாதகாலம் மார்கழி மாதம் முழுவதும் சேர்த்து வைத்திருந்த பூஎருவாட்டிகளை பொங்கல் வைத்தது போக மீதியை எடுத்து வைத்திருந்தனர். சாண எருவாட்டிகள் சீக்கிரம் எரியும் தன்மை வாய்ந்தது. முதன் முதலில் அடுப்பெரிக்கும் பெண்களுக்கு எளிதானதும் கூட, எனவே அதனை உபயோகப் படுத்திச் சிறுவீட்டுப் பொங்கல் எனும் காணும் பொங்கலை, அதை உபயோகித்து வைத்துவிட்டு, மீதியை ஆற்றில் விடுகின்றனர்.

சாணம் மண்ணுக்கு நல்ல எரு. அதனை நீரில் கரைத்து விடும் போது அதன் வழி சென்று பாயும் வயல்களும் பயன்பெறும். எனவே மீதி எருவாட்டிகளை, சடங்காகச் சொல்லி முச்சந்தியில் வைத்துக் கும்மிக் கொட்டி, வாய்க்காலில் சூடமேற்றி விடுகின்றனர்.

வயசு பெண்கள், அழகாக உடை உடுத்தி, பூஎருவாட்டி வைத்துக் கும்மியடித்து, சூடமேற்றி ஆற்றில் விடுவதைப் பார்க்கவெனப் பெற்றவர்களும், உற்றவர்களும் கூடித் தான் இருந்தனர். தேன் நிறைந்த மலர்களைத் தேடி வண்டினங்கள் வருவது போல், கன்னியரை வேடிக்கை பார்க்கக் காளையரும் வரத்தான் செய்தனர்.

அன்புவும் தனது கூட்டாளிகளுடன், பத்திரகாளியம்மன் கோவில் பக்கம் திரிய, கயல்விழி, கனிமொழியை இன்று உமா காரியமாகக் கலைசசெல்வியோடும் சிவகாமியோடும், கோவிலுக்கு அனுப்பி வைத்திருந்தார். கோவிலிலும் முன்னாள் முச்சந்ததியில், வைத்துப் பெண்கள் கும்மிக் கொட்ட, அவர்களது முறைப் பையன்கள் அவர்களை நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர். சின்னவள் கனிமொழி , அன்புவிடம் வம்பிழுத்துக் கொண்டிருந்தாள்.

"இம்புட்டு வாய் பேசுறவ, நீயும் பொங்கல் வச்சு, நல்ல புருஷன் கிடைக்கனுமுண்டு வேண்டிக்க வேண்டியது தானே." என்றான் அன்பு.

"அது என்னத்துக்கு நான் வேண்டிக்கிடனும், என்னைக் கட்டிக்க வர்றவன், தான் பொங்கல் வச்சு, நோம்பிருந்து வரணும். இந்தா எங்க அக்காளும் தான் வருஷம் வருஷம் பொங்கல் வைக்கிது, அதுக்காக அதுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைச்சிடுச்சா என்ன, எங்கிட்டு சுத்துனாலும் மாட்டை அடக்குறவன் தான் கண்ணுல படுறானுங்க." என அவள் சகட்டு மேனிக்கு பேசவும்,

"அடியேய், மாட்டை அடக்குறவண்டா அம்புட்டுக் கேவலமா போச்சா, கொண்டே புடுவேன்." என எகிறினான் அன்பு.

"மாம்ஸ், இந்தச் சலம்பலை எல்லாம் எங்க அக்காகிட்ட வச்சுக்க, அது தான் பயப்படும், நான் இல்லை." எனச் சரிக்கு சரி பேசிக் கொண்டு நின்றாள். கயல் விழி பெண்களோடு சேர்ந்து கும்மி கொட்டி கொண்டு இருந்தாலும், வேல் விழி மட்டும் வம்பளந்துக் கொண்டிருக்கும் தன் அத்தை மகன் மீதே தான் இருந்தது.

அவரவர் முறைப் பெண்கள் கன்னி பூஜை முடித்து, தானும், வீடும், நாடும் நன்றாக இருக்க வேண்டி, ஆற்றில் பூ எருவாட்டிகளில் சூடமேற்றி தெப்பம் போல் மிதக்க விட்டனர்.

வாய்க்காலில் தண்ணீர் நிறையச் சென்றது. அதன் கரையிலிருந்து தேங்காய் உடைத்து எருவாட்டிகளிலேயே சூடம் காட்டி, நீரில் விட்டனர். கயல்விழியும் அதே போல், பூ எருவாட்டி விட, காற்றுப் பலமாக இருந்ததால் அது சிறு தொலைவிலேயே அது காற்றில் வேகமாக ஆட ஆரம்பித்தது. அவள் "முருகா, முருகா..." என வேண்டியும் பயனின்றி அணைந்து போனது. அவள் முகம் கூம்பிப் போனது.

"பனியும், காற்றும் ரொம்ப இருக்குதுல்ல, அதனால தான் பூஎருவாட்டி அணைஞ்சிடுச்சு. இந்தக் காஞ்ச எருவில் விடு." எனச் சிவகாமி மருமகளைத் தேற்றி மற்றொரு எருவாட்டியை அவள் ஏற்றவுமே, மருமகளை அழைத்து வந்து விட்டார்.

கலைச்செல்வி தான், "உங்க அத்தையை மாதிரியே, எதுக்கெடுத்தாலும் சகுனம் பார்க்காத." எனத் திட்டிக் கொண்டிருக்கும் போதே, அங்கே வந்த அன்பு, அவள் முக வாட்டத்தைப் பார்த்து, வெள்ளியில் காமதேனு, கற்பக விருட்ச மரத்தடியில் இருப்பதைப் போன்ற சிலையை, அக்காவிடம் கொடுத்து, கயல்விழியிடம் கொடுக்கச் சொன்னான்.

"இது என்னாது?" என விவரம் கேட்ட அக்காவிடம், "இது கற்பக விருட்சம், காமதேனு, கேட்டதெல்லாம் தருமாம், பூருவாட்டியை விடப் பவரானது, ராசியானதும் கூட, அவள் நினைச்சதெல்லாம் கிடைக்கும் ,இதை வச்சுக்கச் சொல்லு." என்றவன், அவளை பார்வையாலேயே தேற்றிக் கொண்டிருந்தான்.

"அம்மா, இங்க பார்த்தியா உன் மகனை." என கலை சிவகாமியிடம் காண்பித்துப் பேசிக் கொண்டிருக்கும் போதே, கயலிடம் ஓர் தலையசைப் போடு அவன் கிளம்ப, கனிமொழி " எங்குளுக்கெல்லாம் எதுவும் கிடையாதா." என வம்பிழுத்தாள் .

"உனக்காக, பொங்க வைக்கிறவனே, இதுவும் வாங்கியாருவான், காத்துக்கிட்டே இரு." என்றவன், "அம்மா, நாளைக்குச் சாயந்திரம் தான் வருவேன். என்னைத் தேடாத." எனப் போகிற போக்கில் சொல்லி பறந்தான்.

"உன் மகனை பார்த்தியா, இப்படி அவசரமா போறான்னா , எந்த ஊர்ல டூட்டியோ, நீ எதுவும் கேட்காத. இனிமே உன்கிட்ட சொல்லி பிரயோஜனம் இல்லை." என்ற கலை

"கயலு, அடுத்த வருஷம் எல்லாம் அவனை விடக் கூடாது. நான் சொல்றபடி கேளு, அவனை ஒரு அமுக்கா,அமுக்கிடலாம்." எனத் தம்பி மனைவியாகப் போகிறவளுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே வர, கயல்விழியும் சற்று முன் இருந்த வருத்தம் மறந்து முறுவலோடு கேட்டுக் கொண்டு வந்தாள்.

"எனக்கென்னமோ உங்க பிளான் எல்லாம் ஒர்க்கவுட் ஆகுற மாதிரி தெரியலை." என்ற கனிமொழியை , "கன்னி வாக்கோ, கழுத்தை வாக்கோன்னு சொல்லுவாங்க, அச்சாணியமா சொல்லாத." எனச் சிவகாமியும் , “அடியே வாயை வச்சுக்கிட்டு சும்மா இருடி” என கலைச்செல்வியும் சின்னவளைக் கண்டித்தபடி வீடு வந்து சேர்ந்தனர். கயல்விழி, காமதேனுவை கையில் பத்திர படுத்தியபடியே வீடு வந்து சேர்ந்தாள்.

கலைச்செல்வி, சிவகாமியோடு, சேர்ந்து கயல்விழி, கனிமொழி வீடு வந்து சேர்ந்த பொழுது, கந்தவேல் வீட்டில் உமாவின் அண்ணன் பெருமாள் சாமியும், மதினியும் தாம்பூலத் தட்டோடு, தன் இரண்டாவது மகனுக்குக் கயல்விழியைப் பெண் கேட்டு வந்திருந்தார். அதைப் பார்த்த நான்கு பெண்களுமே அதிர்ச்சியடையத் தான் செய்தார்கள்.

கயல்விழி, அதிர்ச்சியாக எதிர்த்துப் பேசப் போனவளை, கலைச் செல்வி கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

சின்னச்சாமியும் கூடத்தில் தான் அமர்ந்திருந்தார், சிவகாமி தம்பியிடம் பேசப் போனவளை, சின்னச்சாமி பெரிய மனிதத் தன்மையோடு தடுத்தார்.

உமா, அண்ணனை உட்காரவைத்து விட்டு, அவசரமாக உள்ளே சென்றவர், மகளை வந்து சபையில் நிற்கச் சொல்ல, அவள் முடியாது என மறுத்தாள்.

உமாவின் அண்ணன், கந்தவேலிடம், "மாப்பிள்ளை, என் மகன் சென்னையில் கைநிறைய சம்பாதிக்கிறான். அடுத்தடுத்து ஃபாரின் போற சான்ஸ் எல்லாமே வருமாம். பயலுக சம்பாதிக்க ஆரம்பிச்சா தனியா விட முடியாதில்லை. மூத்தவனுக்கு அவுங்க அம்மா வழியில பொண்ணு கட்டியாச்சு. அதுனால சின்னவனுக்கு என் தங்கச்சி மகளைத் தான் கட்டணுமுன்னு கண்டிசனா சொல்லிட்டேன். அதுக்குதா நம்ம கயலைக் கேட்டு வந்திருக்கேன்.

சின்னவனும் நம்ம ஊரு சாப்பாடு இல்லாமல் சிரம பட்டுக்கிட்டு தான் இருக்கான். அது தான் நம்ம கயலு இந்த வருஷம் படிப்பு முடிச்சிடுச்சுன்னா, வைகாசிலையே கல்யாணத்தை வச்சுக்கலாம்." என அவர் திருமணத் தேதி வரை பேசவும், குமரவேல் முகம் இறுக உட்கார்ந்து இருந்தவன், அண்ணன் முகத்தைப் பார்க்க, அவர் கண்களால் அமைதிப் படுத்தினார்.

"நீங்களே வந்து கேட்கிறது ரொம்பச் சந்தோஷம் மச்சான். நீங்க உங்க மகனையும், ஒரு வார்த்தை கேளுங்க. நான் என் மகளையும் கேட்கிறேன். எடுத்தோம், கவுத்தோமுன்னு முடிவு எடுக்க முடியாதில்லை." எனக் கந்தவேல் பேச்சை ஆறப் போட முனைய, உமா விடாப்பிடியாக நின்றார்.

"மருமகன் பொங்கலுக்கு வந்திருக்கும்ல அண்ணேன். கூப்பிட்டு கேட்டுருங்க. கையோட பரிசம் போட்டுட்டீங்கன்னா, வைகாசியில் கல்யாணத்தை வச்சுக்கலாம்." எனப் பேச்சை முடிக்கப் பார்த்தார்.

கனகம்மாள் நடுவில் புகுந்தவர், "ஐயா, நீங்க உங்க மகன்கிட்ட கலந்துக்கிட்டு வாங்க. நாங்களும் எங்க பேத்திக்கிட்ட பேசிட்டு சொல்றோம்." என அப்போதைக்குப் பிரச்சனையை முடித்து அவர்களை அனுப்பி வைத்தார்.

அவர்கள் சென்றவுடன் சிவகாமி, தம்பியிடம் நேராகவே தனது ஆட்சேபனையைத் தெரிவித்தார். "கந்தா, உனக்கு உன் மகள் என்ன நினைக்கிறான்னு தெரியாதா. தெரிஞ்சுக்கிட்டே எப்படி உன் மச்சினனைப் பெண் கேட்டு வரச் சொல்லுவ???" என ஆட்சேபித்தார்.

"அக்கா, நான் வரச் சொல்லலை, அவுங்களா தான் வந்தாங்க." என அவர் பதில் தரவும்.

"இதை என்னை நம்பச் சொல்ற!" என்றவர், "அப்ப உன் பொண்டாட்டிக்கும் தெரியாது, அப்படித்தானே?" எனத் தம்பி மனைவியை நேராகவே கேட்டார் சிவகாமி.

"மதினி, ஒரு பொண்ணைக் கட்டுறதுக்குத் தாய் மாமன் வீட்டுக்குத் தான முதல் உரிமை இருக்கு. அந்த உரிமையில தான என் கொழுந்தனுக்கு உங்க மகளைக் கட்டினோம். அதே மாதிரி என் மகளை, எங்க அண்ணன் வீட்டில் கேக்குறாக. இதில என்ன தப்பு இருக்கு." என வாக்குவாதம் செய்யவும்.

"நான் தப்புனே சொல்லலை. உன் மகளுக்கு யாரைக் கட்டிக்க விருப்பம்னு கேளுன்னு தான் சொல்றேன்." எனச் சிவகாமி பதில் தரவும்.

"அவள் சின்னப் பொண்ணு, அவளுக்கு என்ன மதினி தெரியும். என் அண்ணன் மகன் பூர்வீக சொத்து இருந்தாலும், மாசத்துக்கே லட்ச கணக்குல ,கை நிறையச் சம்பாதிக்கிது. வெளிநாட்டுக்கு போற வாய்ப்பு இருக்கு. கயல் வாழ்க்கையில மேல, மேல வசதி வாய்ப்புல உசருமுன்னா, நான் ஏன் மாட்டேன்னு சொல்லுவேன். என் மகள் எடுத்துச் சொன்னா புரிஞ்சுக்குவா!" என உமா பதிலுக்குப் பதில் பேசவும், சிவகாமி மீண்டும் ஆரம்பித்தவரை, கை நீட்டித் தடுத்த சின்னச்சாமி.

"உங்கள் பொண்ணை யாருக்கு, கட்டிக்குடுக்கனுமுண்டு முடிவெடுக்கிற அதிகாரம் பெத்தவங்களுக்கு உண்டு. ஆனால் கயல்விழியையும் ஒரு வார்த்தை கேட்டுக்குங்க. நான் அவ்வளவு தான் சொல்லுவேன்." என்றவர், மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பி விட்டார்.

அக்கா சென்ற பிறகு, குமரவேல் அண்ணனிடம் பேச வந்தான். ஆனால் உமா, பிறந்த வீட்டோடு சேரவிடமாட்டேன் என்கிறார்கள் என அழுது ஆர்ப்பாட்டம் செய்து, அண்ணன் தம்பியைப் பேசவே விடவில்லை. கந்தவேல், தம்பிக்கு ஜாடைக் காட்டி பிறகு பேசலாம் என ஒத்திப் போட்டார்.

கயல்விழி தனது படுக்கையில் போய் விழுந்தவள் தான், எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. உமா தன்மையாகவும், அன்பாகவும், மக்களுக்கு நல்லது என எடுத்துச் சொன்ன விஷயங்கள் எதுவுமே அவள் காதில் சென்றடையவில்லை. கடைசியாக, பிறந்த வீட்டோடு சம்பந்தம் நடக்காமல் போனால் , தான் உயிரை மாய்த்துக் கொள்வேன் என மகளை, கணவருக்கும், மாமியாருக்கும் தெரியாமல் மிரட்டி விட்டுச் சென்றார் உமா.
 
Top