• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நீயே எந்தன் மகளாய்-9. கயல்விழி மாயம்

தீபா செண்பகம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
520

நீயே எந்தன் மகளாய்-9. கயல்விழி மாயம்


அடுத்த நாள் காலையில், கயல்விழியைக் காணவில்லை என குடும்பமே தேடியது. கனிமொழியும், கயல்விழியும் தான் ஓர் சின்ன அறையில் படுத்திருப்பார்கள். ஒரு மாத காலமும், அதிகாலை நான்கு மணிக்கு எல்லாம் எழுந்து, பெரிய, பெரிய வண்ணக் கோலங்களை வரைந்து விட்டு, குளித்து அருகிலிருக்கும் கோவிலுக்கும் சென்று விட்டு வந்து கல்லூரிக்கு கிளம்புவாள். அதனால் உமா, பெரியமகளை எதுவும் சொல்ல மாட்டார். ஆனால் சின்னமகளுக்கு திருப்பள்ளி எழுச்சி பாடாவிட்டால் இருவருக்குமே பொழுது புலராது.

நேற்றோடு காணும் பொங்கலும் முடியவும், இன்று விடுமுறையை கழிக்கட்டும் என தானும் தாமதமாகவே ஆறு மணிக்கு எழுந்த உமா, இன்று வாசலும் கூட்டாமல் இருக்கவும், " இந்த முப்பது நாள் கூட்டிப் பெருக்கி, கோலம் போடுற குமரிங்க, அப்புறம் வாசலை என்னன்னே கண்டுக்க மாட்டாளுங்க." என திட்டிக் கொண்டே வேலையை முடித்தவர், மற்ற வேலைகளை செய்து கொண்ட மகள்களுக்கு சத்தம் கொடுத்தார்.

"நாளைக்கிலிருந்து, ஸ்கூலு, காலேஜ்னு போகத் தானப் போகுதுங்க. இன்னைக்கு ஒரு நாள் தூங்கட்டும் விடு" என கணவரும் சிபாரிசுக்கு வரவும், "நாளைக்கி வாக்கப்பட்டு போற வீட்டிலையும், இப்படி போய் தூங்கினா நல்லாத் தான் இருக்கும்." என வக்கணைப் பேசியபடியே மகள்களுக்கு மீண்டும் சத்தம் கொடுக்கவும்,

"ஐயய்யய்ய, ஒரு லீவு நாளாவது தூங்க விடுறியா?" என நொடிந்துக் கொண்டே எழுந்த கனிமொழி, காலை கடன்களை முடித்து வந்து, காபி கேட்க, "இந்தா, அவளுக்கும் குடு. நேத்தே மூஞ்சியைத் தூக்கி வச்சிட்டு இருந்தா." என உமா பெரிய மகளுக்கும் சேர்த்து இரண்டு டம்ளர் சின்னமகளிடம் தந்தார்.

"அக்கா, ரூம்ல இல்லையே, முதவே எந்திரிச்சிட்டாளே" என்றவள், "இரு சித்தப்பா வீட்டில பார்த்துட்டு வர்றேன்." என காபி குடித்தபடியே அங்குச் செல்ல, அவர்களும் காலை முதல் கயல்விழி வரவில்லை என தகவல் தந்தனர். அதன் பிறகு பதற்றம் தொற்றிக் கொள்ள, மற்ற இடங்களில் தேட ஆரம்பித்தார்கள்.

"அக்கா, வீட்டுக்கு போயிருக்குமோ" என குமரவேல், எதேச்சையாக செல்வது போல், சிவகாமி வீட்டுக்கு செல்ல, அங்கும் இல்லை. போதாத குறைக்கு, சிவகாமி தம்பிகளையும், உமாவையும் குறைச் சொல்ல, டென்சனான குமார், "கயலைக் காணோம்க்கா!!!" என உண்மையைப் போட்டு உடைத்தார். அலறி துடித்து, பிறந்த வீட்டுக்கு வந்து சிவகாமி அம்மா, மகள் என இருவரிடமும் விசாரிக்க, எல்லாருடைய பார்வையும் உமாவை குற்றம் சுமத்தியது.

கனிமொழியிடம், கயல்விழியை பற்றி தோண்டித் துருவினார்கள். "நேத்து, மாமா வீட்டிலிருந்து வந்து பொண்ணு கேட்டது அவளுக்கு பிடிக்கவே இல்லை. அம்மா நைட் திட்டவும், அழுதுகிட்டே படுத்துருச்சு. அவ்வளவு தான் எனக்குத் தெரியும்." என முடித்து விட, கந்த வேல், குமரவேல், சின்னச்சாமி, அறிவு என ஆளுக்கு ஒரு பக்கம் வண்டியை எடுத்துக் கொண்டு தேடினர்.
"அடி பாவி, என் தலையில இப்படி கல்லைத் தூக்கி போட்டுட்டாளே!" என உமா அழுது அரற்ற, கலைச்செல்வி தான், அத்தை, அம்மா என இருவரையுமே அமைதி படுத்தினாள்.

குமரவேல், கனி மொழியை அழைத்துக் கொண்டு, கயல்விழியின் சிநேகிதிகள் வீடுகளில் நேக்காக விசாரித்தனர். அறிவு, முல்லை வாய்க்கால் தடத்தோடு சென்று பார்த்தவன், அன்புவுக்கு போன் அடித்து விசயத்தைச் சொல்லவும், சிங்கம்புணரியில் ஒரு ஊரில் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக தயாராக இருந்தவன், அப்படியே வெளியே வந்தான்.

"டேய், நேத்து சாய்ந்திரம், பூ எருவாட்டியை வாய்க்கால்ல விட்டுட்டு போனாளே, நான் சமாதானப் படுத்தி தான அனுப்பி வச்சேன்." என கேட்கவும், அவர்கள் தாய்மாமா வீட்டிலிருந்து பெண் கேட்டு வந்ததை அறிவு சொன்னான்.

"அவைய்ங்கே, பொண்ணு கேட்டு வந்தா, உடனே கல்யாணம் ஆகிடுமா. லூசு சிறுக்கியால இருக்கா. சரி, இரு. நான் வாரேன். " என டென்சன் ஆனவன், தனது மஞ்சள் ஜெர்சியை கழட்டி விட்டு, தன் வழக்கமான உடைக்கு மாறினான். தனது கூட்டாளிகளிடம், " நான் கிளம்புறேன்டா, நீங்க இருந்து விளையாடிட்டு வாங்க..." எனவும்.

"டேய், ஜெகனும் இன்னும் வந்த பாடு இல்லை. நீயும் கிளம்புறேங்கிற." என சலித்தவர்களை முறைத்து விட்டு, தன் இருசக்கர வாகனத்தை கிளப்ப, மீண்டும் போன் வந்தது. ஜெகன் தான் அழைத்தான்.

"மாப்பிள்ளை, நீ கிளம்பி உடனே சிங்கம்புணரி பெருமாள் கோயில்கிட்ட வா." என பூடகமாக அழைக்கவும், "டேய் மனுசன் அவசரம் புரியாமல் பேசாத. கயலைக் காணமாம்." என அன்பு பதட்டப்படவும்.

"அதைச் சொல்லத் தான் கூப்பிட்டேன். உன்னைத் தேடி தான் வந்திருக்கு. சீக்கிரம் வா.." எனவும், அடுத்த ஐந்தாவது நிமிடம் கயல்விழி முன் நின்றான் அன்பு.

பார்த்தவுடன், "உனக்கெல்லாம், அறிவு இருக்கா இல்லையாடி , உன்னை ஊரே தேடுது. நீ இங்க வந்து நிற்கிற?" என அவளை அறையப் போகவும், "நீயே என்னை அடிச்சு கொன்னு போடு. நான் நிம்மதியா போய் சேர்ந்திடுவேன்." என அழுதாள் கயல்விழி. ஓங்கிய கையை அப்படியே நிறுத்தியவன், அவள் அழுவது பொறுக்க மாட்டாமல், "ஏய், குரவைகுட்டி அழுவாதடி!" என அவள் கன்னத்தைத் தட்டவும், மேலும் அழுதபடியே அவனிடம் அடைக்கலமானவள், அவனைக் உரிமையாக கட்டிக் கொண்டாள்.

நேற்று முன்தினம், வீட்டில் ரகசியமாக அவன் முற்றுகையிட்டதற்கே, அத்தை என கத்தியவள் , இன்று வீட்டை விட்டும், ஊரை விட்டும் இவ்வளவு தூரம், தெரியாத ஊருக்கு அவனைத் தேடி வந்து பொது இடத்தில் தன்னை கட்டிக் கொண்டு விசும்பி அழுவதைப் பார்த்து, அவனுக்கும் உருகித் தான் போனது. அவளை அப்படியே தன்னோடு தழுவிக் கொண்டவன், அவளது முதுகைத் தடவி ஆறுதல் தந்தான்.

“என்னை விடுடாத மாமா, நான் உன்னைத் தவிர யாரையும் கட்டிக்க மாட்டேன்.” என அவன் மார்பிலிருந்து எம்பி , கன்னத்தில் ஒரு முத்தமிட்டவள் , “நான் உன்னைத் தான் விரும்புறேன், ஐ லவ் யு!“ என அழுதபடியே சொல்லவும், குலுங்கி சிரித்தவன், “உலகத்துலையே , இப்படி யாரும் லவ்வை சொல்லியிருக்க மாட்டாய்ங்கடி.” என்றவன் மனம் சிறகடித்துப் பறந்தது. ஆம் சிறுவயது முதல் ஆசையாக பார்த்த மாமன் மகள், தாய்மாமன் பெண் கேட்கிறார் என பயந்து அத்தை மகனிடம் அடைக்கலமாகி தன காதலை சொன்னால், யாருக்குத் தான் மகிழ்ச்சி பொங்காது. அவளை இறுக்கி உச்சி முகர்ந்தவன், வாய் வார்த்தையாக இல்லாமல் தன செயலால் நான் இருக்கிறேன் என உணர்த்தினான்.

அவள் அழுகை நிற்கவும், தனது பைக்கிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து குடிக்கக் கொடுத்து விட்டு, " இரு வந்துடுறேன்." என சற்று தொலைவில் சென்று, தாய்மாமனுக்கும், அண்ணனுக்கும் கயல்விழி தன்னை தேடி வந்திருப்பதைச் சொல்லி விட்டு வந்தான். விசயம் தெரியவும், அவள் அம்மா உமாவுக்கு கோபம் பலியாக வந்தது. ஆனால் மற்றவர்கள் ஆசுவாசம் அடைந்தனர்.

அன்பு, கயல்விழியிடம் வந்தவன், " ஏண்டி என்னைத் தேடி லூசுத்தனமா, இங்க வரைக்கும் வந்திருக்கியே. என்னை இங்க கண்டு பிடிக்க முடியலைனா, என்னடி பண்ணியிருப்ப. ஊரில் இருந்து ஜெகன் கூட தான் வந்தியா?" என கேட்டான்.

"இல்லை, இந்த ஊரு பஸ் ஸாடாண்ட்ல தான் அந்த அண்ணனைப் பார்த்தேன்." என பயந்து, பயந்து விவரம் சொன்னவள், அவன் மேலும் மேலும் கேள்வி கேட்கவும், "உனக்கு என்னை பிடிக்கலைனா, இப்படியே விட்டுட்டுப் போ. நான் எங்கிட்டாவது போய்க்கிறேன்." என முறுக்கவும்.

"அடியேய், ஒரு அப்பு விட்டேன்டா மூஞ்சி அங்குட்டு திரும்பிக்கும். ஒன்னு கிடக்க ஒன்னு ஆகியிருந்தா, நான் என்னடி பண்ணுவேன். நீ காணமுண்டு இப்பதான் எனக்குத் தெரியும், அஞ்சு நிமிசத்துலையே ஜெகன் போன் அடிச்சிட்டான். அதுக்குள்ளையே எனக்கு அம்புட்டு பதறிடுச்சு. உனக்கு பெத்தவைகளுக்கு பதறாது.” என எடுத்து சொல்லவும், தன் முகத்தை உம்மென வைத்துக் கொண்டவள்,

“அதெல்லாம் நான் யோசிக்கவே இல்லை, நேத்து ராத்திரிலேருந்து, எப்படா விடியும், உன்னை பார்க்கலாமுன்னு ஓடி வரேன், என் பீலிங்க்ஸ் உனக்கு புரியுதா, சும்மா குத்தம் சொல்ற.“ என அவள் வருந்தியபடி சொல்லவும்,

“அடியே, ரொம்பத்தான் பீலிங்ஸை கண்டவ. அன்னைக்கு நாங்களும் பீலிங்க்ஸோடத்தானே கட்டிக்கிட்டோம், அப்ப மட்டும் கத்தின?" என அவளை இடையோடு வளைத்து தன்னை நோக்கி இழுக்கவும்,

“ அப்ப, மாமா, என்னை பொண்ணு கேட்டு வரலை, உனக்கு மட்டும் தான் நான் சொந்தமுன்னு தைரியமா இருந்தேன்.” என்றவளை ,

“என்னடி உன் லாஜிக்கு, எனக்கு சொந்தமுண்டு , என்னை தொட விடலையாம், இப்ப அடுத்தவனுக்கு பொண்ணு கேட்கவும் தொட விடுவாளாம். தெளிவா குழப்புற!" என்றவன்

“ என்னை பார்த்தாலே, ஊமையாட்டம் பம்மிகிட்டு இருந்தவ, இம்புட்டு தைரியமா, வார்த்தைக்கு வார்த்தை பதில் பேசுறவ. ஊரை விட்டு ஓடி வந்து கட்டிக்கிற, இதுல எந்த கயல் ஒரிஜினல்ன்னு தெரியலையே!!!" என புலம்பினான்.

“போ மாமா, சும்மா லந்தை கொடுக்காத, நானே பயந்து போயி தான் உன்னை தேடி வந்தேன்.“ என குழைந்தபடி அவன்அருகிலேயே நின்று, அவன் சட்டை பட்டனை திருக்கவும்,

"அடுத்து என்ன செய்யறதா உத்தேசம். ஊருக்கு போய், சொந்தம் பந்தம் மூஞ்சில முழிக்கிறதா, இல்லை இப்படியே தாலியைக் கட்டி குடும்பம் நடத்துவுமோ." என அவன் கேலியாக கேட்டு அவள் நெற்றியில் முட்டவும், மலங்க, மலங்க முழித்தவள், "நான் பாலமேடு போகமாட்டேன். இராசக்காப்பட்டிக்கு அத்தைக்கிட்ட கூட்டிட்டுப் போ." என கண்ணில் கலவரத்தோடு சொன்னாள் .

"ஆமாம் இரண்டு ஊருக்கும், நடுவுல ஏழு மலை, ஏழு கடல் இருக்கு. உன் அப்பனும், ஆத்தாளும் தாண்டி வரமாட்டாய்ங்கே. உங்கம்மா, நடந்தே வந்து விளக்கமாத்தாலையே வெளுக்கப் போகுது பாரு." என்றான்.

"உன் பொண்டாட்டியைத் தான் வெளுக்கிறாய்ங்க, ரோசமில்லாம பார்த்துக்கிட்டு நில்லு." என அவனை தள்ளி விட்டவள் முகத்தை திருப்பிக் கொண்டு நிற்கவும்,

"அடி ஆத்தி, இங்கப் பாரப்பா குரவைக் குட்டிக்கு பேச்சு எல்லாம் வருது. அப்ப பேசத் தெரியாதவ மாதிரி, பயந்துகிட்டு இருக்கிறது எல்லாம் நடிப்பாடி!" என வியந்தவன், தனது வண்டியில் ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்துச் சென்றான்.

சாப்பாட்டை பார்க்கவும் தான் கயலுக்கு பசியே தெரிந்தது. அவள் வேகவேகமாக சாப்பிடுவதைப் பார்க்கவும், "நைட்டும் சாப்பிடலையா???" என வினவினான். இல்லை என தலையாட்டியவளுக்கு, விக்கியது. "மெதுவா, மெதுவா." என தலையைத் தட்டி தண்ணீர் கொடுத்து சாப்பிட வைத்தவனுக்கு மாமன் மகள் மேல் முன் எப்போதும் இருப்பதை விட, அதிகமான காதலும், தன்னவள் என்ற உரிமையும் வந்தது.

தனது பைக்கிலேயே அவளை வைத்து, அழைத்து வந்தான். வழி நெடுக அவளது தேவைகளை உணர்ந்து, அவன் பத்திரமாகப் பார்த்துக் கொண்டதில் அத்தை மகன் மேல் இருந்த பயம் அகன்று, காதல் பெருக்கெடுத்தது.

"மாமா, என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்?" என அவனோடு ஒண்டிக் கொண்டு அவள் கேட்கவும், ஹாஹாவென சிரித்தவன், " முதல்ல பிடிக்குமாண்டு கேட்கனுமடி, அப்புறம் தான், எவ்வளவுண்டு கேக்கனும்!" என அவன் இடக்காக பதில் சொல்லவும், பின்னால் வாகாக அமர்ந்திருந்தவள், அவன் தோள்களில் நறுக்கென தன் பல்லை பதிய வைத்தாள்.

"அடியேய், என்ன எலும்பு வேணுமா. ஒரே நாள்ல ஓவரா போகாதடி." என கேலி செய்யவும். “ ஒரு கேள்விக்காவது ஒழுங்கா பதில் சொல்றியா, போதாதா குறைக்கு, எப்ப பார்த்தாலும் மிரட்டுறது. கட்டிக்க போறவள்ட்ட இப்படித் தான் பேசுவாங்களாக்கும்?” என அவள் குறை படவும்.

“இப்படி பேசும் போதே, சிங்கம்புணரி வரைக்கும் தேடி வந்திருக்க, கொஞ்சி பேசியிருந்தேண்டா புள்ளையை பெத்துருப்பா போலிருக்கே!” என அவன் குலுங்கி சிரித்தான்.

“என்னை என்னன்னு நினைச்ச, கொன்றுவேன்.” என அவனை போலவே சொல்லிக் காட்டவும் ஹாஹாவென சிரித்தவன், “சிங்கம்புணரி போறேன்னு, அம்மாவுக்கு கூட தெரியாது, நீ எப்படி கரெக்ட்டா வந்த?“ எனவும், எந்தெந்த ஊரில் எப்போது, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு வடம் மஞ்சுவிரட்டு ஆகியவை நடக்கிறது என ஒரு அட்டவணையை சொன்னவள், “கழுத்தை கெட்டா குட்டி சுவர், என் மாமன் காண முன்னா மாட்டுக்கிட்ட தான் இருக்கும்.” என தனது கண்டுபிடிப்பை சொல்லவும்,

“ஆத்தாடி, உன் கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது போலிருக்கே,கொஞ்சம் சூதானமாத் தான் இருக்கணும். உனக்கு தாலி கட்டுனா, எனக்கு மூக்கணாங்கயிறு போட்டுருவ போலிருக்கு.” என பேச்சும் சிரிப்புமாகவே கயல் விழியை அழைத்து வந்தான். வாழ்க்கையிலேயே அகம் மகிழ்ந்து செய்த அற்புதமான பயணம் என அதன் நினைவுகளை மனதில் பத்திர படுத்திக் கொண்டாள் .

நேராக பாலமேடுக்கு அவள் வீட்டுக்கே அழைத்துச் சென்று தனது இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தினான். அவன் பின்னாடியே பயந்துக் கொண்டே அமர்ந்திருந்தவள், "என்ன மாமா, இங்க கூட்டியாந்திருக்க?" என உள்ளே போன குரலில் கேட்கவும். "மாமனார் வீட்டில விருந்து சாப்பிட்டு போவோம்." என்றவன் அவள் பயந்து நடுங்கவும், அவள் கையை உறுதியாக பற்றிக் கொண்டவன், "பயப்படாமல் வா... நான் இருக்கேன்ல." என அவளுக்கு தைரியம் தந்தான். அவன் கையின் அழுத்தத்திலேயே, யாரையும் சமாளித்துக் கொள்ளலாம் எனும் நம்பிக்கை வந்தது. ஏனெனில் வீட்டின் வெளியே நின்ற வாகனங்களே, உள்ளிருப்பது யார், யாரெனக் கணக்குச் சொன்னது.

அன்புவை தேடிக் கொண்டு கயல்விழி வந்த விசயம், சிங்கபுணரி ஜல்லிக்கட்டுக்கு, தன் காளையை அழைத்து வந்திருந்த, அவளது தாய் மாமனின் மூத்த மகன் கோதண்டத்துக்கு தெரியவும், அவன் வீட்டுக்கு செய்தி சொல்லி விட்டான். ஆரம்பத்திலிருந்தே, அன்புச்செல்வன், கயல்விழியை கல்யாணம் செய்ய விடக்கூடாது என தீவிரமாக இருந்து, தம்பிக்கு பெண் கேட்கச் சொன்னவனும் அவன் தான், எனவே உமாவின் வீட்டிலிருந்தும் அவரது அண்ணன் வந்து உட்கார்ந்து இருந்தார்.

வீட்டுக்குள் நாத்தனார் மகனோடு ஜோடி போட்டு வந்த, மகளைப் பார்க்கவுமே, உமா கோபம் கொண்டவராக, அவள் முடியை கொத்தாக பிடிக்க வர, சிவகாமி, "உமா, புள்ளையை கை ஓங்காத." என பின்னாடியே வர, அன்பு நடுவில் புகுந்து அவளை மறைத்து நின்றான்.

"வயசுக்கு வந்த புள்ளை, மேஜர். அவள் மேல கை வைக்கிற வேலை வச்சுக்காதீங்க!" என்றான் கடுமையாக.

"நான் பெத்த மகள், ஊர் சிரிக்க வச்சுட்டு போயிருக்கா. அவளை, அடிக்கலாம், அடிக்கக் கூடாதுன்னு, நீ கண்டிசன் போடுவியோ. பெத்தவளுக்கு இல்லாத உரிமையா?" என உமா ஆங்காரமாகப் பேசவும், அதே இடத்தில் கயலை மறைத்தபடி நின்ற அன்பு, தாய்மாமனும், கயல்விழி தந்தையுமான கந்தவேலிடம், "மாமா, கயல்விழி எனக்கு மாமா மகள், கட்டுற முறை தான. எப்ப என்னைத் தேடி வந்துட்டாளோ, அப்பவே அவள் எனக்கு உரிமையுள்ளவளா ஆகிட்டா. இரண்டு பேரும் பெரியவங்க சம்மதத்தோட கல்யாணம் கட்டிக்கனுமுன்னு நினைக்கிறோம். நீங்க என்ன சொல்றீங்க?" என்றான்.

சின்னச்சாமி, குமரவேல், அறிவு எல்லோருமே அங்கு தான் இருந்தார்கள். "இனி என்ன மாப்பிள்ளை சொல்றதுக்கு இருக்கு. பெத்த தாய், தகப்பனை விட்டுட்டு என் மகள் உன்னை தேடி வந்திருக்குன்னா, எங்களை நம்பலைனு தானே அர்த்தம்." என நொந்துப் பேசவும், "அப்பா, இல்லைபா..." என அழுதபடியே ஓடிப்போய் தந்தையின் கால்களில் விழுந்தாள். அவர் முகத்தை திருப்பிக் கொள்ளவும், கயல்விழி மேலும் கத்தி கதற, சித்தப்பா குமரவேல் மகளைத் தூக்கி அணைத்துக் கொண்டவன்,

"ஏண்டா, உன்னை காணோம்னு எவ்வளவு துடிச்சு போயிருப்போம். அப்பாட்ட சொல்ல பயமா இருந்தா, சித்தப்பாட்ட சொல்லியிருக்கலாம்ல. அப்படியாடா உன் விருப்பத்துக்கு விரோதமா நடந்திடுவோம்." என கேட்கவும் அவள் மேலும் விசும்ப, சிவகாமி வந்து மருமகளை அணைத்துக் கொண்டார்.

"அட, எல்லாரும் செத்த சும்மா இருங்க. எல்லாம் இந்த அன்பு பயலால வந்தது. அவன் இன்னைக்கு வெளியூர் போகாம வீடு தங்கியிருந்தா, என் மருமகள், இப்படி அலைய வேண்டியது வந்திருக்குமா?" என சிவகாமி மகனை குற்றம் சுமத்தி மருமகளைத் தாங்கினார்.

"சரி ஆனது, ஆகிப்போச்சு. இனி நடக்க வேண்டியதை பாருங்க." என உமாவின் அண்ணன் பொதுவாகச் சொல்லவும், சின்னச்சாமி தொண்டையைச் செருமிக் கொண்டு பேசினார்.

"நல்ல விசேசத்தை சீக்கிரமே வச்சிடனுமுன்னு சொல்லுவாக. இனி இப்படி, அப்படின்னு யாரும் என் மருமகளை ஒரு வார்த்தை பேசிடக் கூடாது. அதுனால தைபூசம், பௌர்ணமி அன்னைக்கு, நாங்க கயல்விழியை, அன்புவுக்கு பரிசம் போடுறோம். வைகாசில கல்யாணத்தை வச்சுக்குவோம்." என முடிவைச் சொல்லவும்,

" தைபூசத்து அன்னைக்கு, கயல் பிறந்த நாளும் வருதுல்ல. அன்னைக்கே பரிசம் போட்டுருவோம்." என சிவகாமியும் மருமகள் கன்னத்தை வழித்து கொஞ்ச, யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இருக்கவில்லை.

 
Top