• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசத் தூறல்கள் 12

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 12

"ம்மா கதவ திறங்க. எவ்வளவு நேரமா காலிங் பெல் அடிக்கிறது?" இரண்டு மாதங்களுக்குப் பிறகு வீட்டிற்கு வந்த ஹேமா, அவள் வீட்டு கதவை போட்டு உடைத்துக் கொண்டு இருந்தாள்.

"இப்ப திறக்குறிங்களா! இல்ல உடைக்கட்டுமா?" எவ்வளவு தட்டியும் உள்ளிருந்து பதில் வராததால், ஹேமா கதவை உடைக்கவே ஆரம்பித்திருக்க, சரியாய் கொட்டாவியுடன் வந்து கதவை திறந்தான் கார்த்திக்.

"யார் நீங்க? என்ன வேணும்?" கொட்டாவியை கைக்குள் மறைத்தபடியே அவன் தூக்கக்கலக்கத்தில் கேட்க,

"முதல்ல நீ யாரு மேன்?"

"ஹலோ! என்ன வாய் ஓவரா பேசுது?"

"யோவ்! இது என் வீடு. வாயும் பேசும்! கையும் பேசும்! முதல்ல நீ யாருனு சொல்லு".

முன்பின் தெரியாதவன் தன் வீட்டில் அதுவும் கேஷுவலாய் தூங்கி எழுந்து வர, வார்த்தைகளால் காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்தாள் ஹேமா.

"ஹேய்! நீ ஹேமாவா?" சந்தேகத்துடன் ஒற்றை விரலை அவள் முன் நீட்டி கண்களை விரித்து கார்த்திக் கேட்க,

"நீ என்ன லேட்டஸ்ட் திருடனா? பேர் எல்லாம் தெரிஞ்சு வச்சுட்டு திருட வந்திருக்க?" என்றவள், அவனை கொஞ்சமும் மதிக்காமல் "அம்மா.. அம்மா.." என்று சத்தம் போட

"ரேகா ஆன்ட்டியும் மாமாவும் கோவிலுக்கு போனாங்க. வர்ற நேரம் தான். உன் அண்ணா அந்த சிவா வீட்டுக்கு போயிருக்காங்க" கார்த்திக் அவளை அளவீடும் பார்வையுடன் சொல்ல,

"அந்த சிவாவா? உனக்கு காது ஒழுங்கா கேட்கும்ல? நான் நீ யாருன்னு கேட்டேன். முதல்ல அதுக்கு பதில் சொல்லு. அதுக்கு அப்புறம் என் வீட்டில இருக்கவங்களை பற்றி எனக்கே சொல்லலாம்"

"ஹேமா இன்னுமா என்னை தெரியல? நான் கார்த்திக்"

"கார்த்திக்னா? என்ன மௌன ராகம் கார்த்திக்கா?"

"ஓ சாரி! நம்ம சின்ன வயசுல மீட் பண்ணது இல்ல. நீ அப்ப குட்டியூண்டு இருந்த.. அதனால ஞாபகம் இருக்காது.. ராஜசேகரோட பையன். அமெரிக்கால இருந்து வந்திருக்கேன்"

"ஓஹ் ராஜசேகர் மாமா பையனா?" என்று அவள் சொல்லவும் வாசலில் அர்ஜுன் சுஜியுடன் ரேகாவும் வந்தனர்.

அர்ஜுன் "ஹே வாலு எப்படி இருக்க?"

ரேகா "ஹேமா எப்படா வந்த?"

"நீ பேசாத அண்ணா! நான் வரேன்னு சொல்லியும் யாருமே வீட்ல இல்லல்ல? கொஞ்சம் கூட என் மேல அக்கறையே இல்லை"

"ஹேமா இன்னைக்கு கடைசி வெள்ளியில்ல அதனாலதான் காலைல எழுந்ததும் கோவிலுக்கு போய்ட்டு வந்தோம். சுஜியோட அண்ணனுக்கு ரெண்டு நாளா ஹெவி ஃபீவர். சுஜிதான் அங்க இருந்து அவ அண்ணனை பார்த்துகிறா. நேத்துதான் கொஞ்சம் குறைஞ்சு இருந்துச்சு.

காலையில் திடீர்னு அதிகமா இருக்குன்னு சுஜி போன் பண்ணினா.. அதான் நீ வர நேரம் அண்ணனும் இருக்க முடியாமல் போச்சு"

இதைவிட விளக்கமாய் சொல்ல தேவையில்லை என்பதுபோல ஹேமா உடனே தன் அறைக்கு ஓட, அர்ஜுனுக்கும் சுஜிக்கும் அவளது இந்த ஓட்டத்திற்கான காரணம் புரிந்தது.

ரேகா அவள் கோபமாக செல்வதாக நினைத்து அவளை சமாதானப்படுத்த அவளுக்குப் பிடித்த உணவுகளை சமைக்க ஆரம்பித்தார்.

கார்த்திக் மட்டும் ஹேமாவை விட்டு ஒரு நொடியும் விலகாத பார்வையுடன் அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

அவள் சென்ற பின்புதான் சுயம் வந்தவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சிரிப்புடன் தன் அறைக்கு சென்றான்.

ஹேமா சென்னையில் இருந்தபோது சிவா அவளை அழைத்து பேசவில்லை என்றாலும் ஹேமா அழைக்கும்போது சாதாரணமாகவே அவளிடம் பேசிக்கொண்டு இருந்தான்.

முதல் ஒரு மாதம் வரை எப்படி சென்றது என ஹேமா சிவா இருவருக்குமே தெரியவில்லை. எல்லாம் நல்லபடியாகவே சென்றது.

ஒருநாள் ஹேமா அழைக்க எடுத்த சிவாவும் எப்போதையும் விடவும் அதிக அமைதியாக இருக்க, அதை அறியாத ஹேமா எப்போதும் போல வாய் பேசிக் கொண்டே இருந்தாள்.

"என்ன பிளாக்கி, இன்னைக்கு அநியாயத்துக்கு அமைதியா இருக்கீங்க? மௌன விரதமா என்ன?"

"நான் சொன்ன நாள் வந்துடுச்சு ஹேமா" அமைதியானவன் குரலும் அவன் சொன்ன செய்தியும் அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும். ஆனால் துளியும் எதிர்பார்க்காத போது அவள் எப்படி இந்த அமைதியின் காரணத்தைப் புரிந்து கொள்வாள்?.

"என்ன பிளாக்கி சொல்றீங்க கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க"

"ரேகா அத்த உன்கிட்ட ஒன்னும் சொல்லலையா?"

"இல்லையே? ஏன் ஏதாவது குட் நியூஸ்ஸா?"

"ஆமா குட் நியூஸ் தான்"

"ஐயையோ! பிளாக்கி உனக்கு குட் நியூஸ்னா கண்டிப்பா எனக்கு பேட் நியூஸா தான் இருக்கும். வேணாம் வேணாம்! நீ சொல்ல வேணாம். நான் என் அம்மாகிட்டயே கேட்டுக்குறேன்".

"ஹேமா இது விளையாட்டு இல்ல. உனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க"

"அப்படியா! மாப்பிள்ளை உன்ன மாதிரியே அழகா இருக்காரா?" அப்போதும் அவள் விளையாட்டாய் பேச, அதற்குமேல் கோபத்தை காட்ட முடியாமல் அடக்கவும் முடியாமல் போனை கட் செய்தான்.

அவ்வளவுதான்! இதோ ஒரு மாதம் முடிந்துவிட்டது. அதன்பின் இன்னும் அவன் போனை ஆன் செய்ததாய் இல்லை.

அதன்பின் ரேகாவோ இல்லை அர்ஜுன்னோ போன் செய்யும் போது கூட கார்த்திக் வந்தது பற்றியோ அவன் வந்ததற்கான காரணத்தை பற்றியோ இவளிடம் சொல்லவே இல்லை. இவளும் சிவா பற்றிய யோசனையில் அவன் சொன்னதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இதோ கார்த்திக் சொன்னானே 'ராஜசேகர் பையன் கார்த்திக்' என்று அப்போதுதான் ஹேமாவின் மனதினுள் சிவா சொன்ன 'உனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க' என்ற வார்த்தை ஓடியது.

சுஜி தன்னறைக்குள் ஓடியவள் குளித்து முடித்து அரை மணி நேரத்தில் கிளம்பி வர, கார்த்திக்கும் சரியாய் கிளம்பி வெளியே வந்தான்.

ஹேமா அமைதியாய் டைனிங் டேபிளில் அமர, ரேகாவும் உணவை எடுத்து வந்தார்.

"வா கார்த்திக் நீயும் உட்காரு சாப்பிடு". ரேகா சொல்ல ஹேமாவிற்கு எதிரில் போய் அமர்ந்தான். அப்போதும் ஹேமா கண்டுகொள்ளாமல் இருக்க, ரேகா தான் ஹேமா வாய் பேசாமல் இருக்க கடவுளை வேண்டிக் கொண்டிருந்தார்.

"சுஜி.. அண்ணி.. " இருந்த இடத்தில் இருந்தே ஹேமா கத்த, கார்த்திக் பார்வையாளனாய் அங்கு நடந்தவற்றை பார்த்துக் கொண்டிருந்தான்.

"அவ ரூம்ல இருப்பா. ஏண்டி இப்படி கத்துற?"

"நான் அண்ணி கூட வெளில போகணும்"

"எங்க போகணும்?"

"என்னம்மா கேள்வியா கேட்டுட்டு இருக்கீங்க?. எனக்கு கொஞ்சம் வெளில வேலை இருக்கு. அண்ணிகூட போய்ட்டு வரேன்"

"உன் அண்ணி காலேஜ் போறா! மறந்துட்டியா?"

"ஓஹ்! சரி நானே போய்க்கிறேன்"

"ஏய் எங்கன்னு சொல்ல மாட்ற? தனியா போறேன்னு சொல்ற? சரி அப்ப கார்த்திக்க கூட்டிட்டு போ. அவனும் சுத்தி பாக்கணும்னு சொன்னான்"

"ம்மா என் வாயில நல்லா வந்துரும். கடுப்ப கிளப்பாதீங்க"

கார்த்திக்கின் முன் ஹேமா ரேகாவை டென்சனில் கத்த, அதைக் கேட்டுக்கொண்டே படிகளில் இறங்கிக் கொண்டிருந்தனர் அர்ஜூனும் சுஜியும்.

ஹேமாவிற்கு கார்த்திக் வந்ததை தன்னிடம் சொல்லாதது முதல் இந்த செய்தி சிவா வரை சென்று அதனால் அவன் இவ்வளவு நாள் பேசாதவரை என என்னென்னவோ நினைத்தவள் அந்த கோபத்தில் கத்தி கொண்டிருந்தாள்.

"ஹேமா, என்ன நீ அம்மாகிட்ட போய் எரிஞ்சு விழுந்துட்டு இருக்க?" அர்ஜுன் கேட்க,

எல்லாம் தெரிந்தும் தன்னிடம் எதுவும் சொல்லாத அண்ணன் மேலும் கோபம் வந்தது. ஆனால் கார்த்திக் அவளையே பார்த்துக் கொண்டிருக்க அதை அவளும் பார்த்து விட்டதால் அமைதியாய் சாப்பிட்டாள்.

"பாருடா! எங்கேயோ போணுமாம். சுஜியை கூப்பிடுறா. சுஜிக்கு காலேஜ் இருக்கு கார்த்திக் கூட போன்னு சொன்னேன். அதுக்கு இந்த கத்து கத்தறா" என ரேகா அவளைக் குற்றம் சொல்ல,

சுஜி எங்கே செல்ல போகிறாள் என அர்ஜுனுக்கு தெரியாதா என்ன! இதில் கார்த்திக் உடன் அன்னை போக சொல்வதற்கு என்ன பதில் சொல்ல என்று சிறிது யோசித்தவன், ஹேமாவை பற்றி தெரிந்தவன் என்பதால் "ஹேமா, கார்த்திக் கூட போ!" என்று மட்டும் சொல்ல, அண்ணனை தீயாய் முறைத்தவள் எதுவும் சொல்லாமல் சாப்பாட்டை தொடர்ந்தாள்.

அர்ஜுன் சாப்பிட்டுவிட்டு சுஜியை காலேஜில் விடுவதற்காக கிளம்ப, ஹேமாவும் கைகழுவிவிட்டு கார்த்திக் வருவதற்காக அவனைப் பார்த்தாள்.

"போலாமா ஹேமா?" நிதானமாய் கார்த்திக் கேட்க, எதுவும் சொல்லாமல் அவள் முன்னே செல்ல அவனும் அவளை பின்தொடர்ந்தான்.

"அஜூ என்ன பிளான்ல இருக்கீங்கன்னு சத்தியமா எனக்கு புரியல" சுஜி கார் ஓட்டிக்கொண்டு இருந்த அர்ஜூன்னிடம் கேட்க,

"நீ ஹேமாவை பத்தி தான் சொல்றன்னு எனக்கு நல்லாவே தெரியுது" என்றான்

"தெரிஞ்சு என்ன பண்ண? இப்ப எதுக்கு அவளை கார்த்திக் கூடப் போக சொன்னீங்க? கண்டிப்பா ஹேமா அண்ணனை பார்க்க தான் போகும். உங்களுக்கு தெரியாதா?"

"சுஜி! கார்த்திக்கு நாம எதுவும் சொல்லி புரிய வைக்க முடியாது. அவன் ஒன்னும் ஹேமாவ லவ் பண்ணலையே! ஹேமா அவன்கிட்ட பேசட்டும். முதலிலேயே அவங்க ரெண்டு பேரும் பேசி தீர்த்துட்டா தான் சரியா வரும்"

"அது சரி அஜு! ஆனா இப்போ அண்ணனை பார்க்கல்ல ரெண்டு பேரும் போறாங்க? அங்க வச்சு இதை பேசினா அண்ணா எப்படி ரியாக்ட் பண்ணும்னு தெரியலையே?"

"உனக்கு ஹேமா பத்தி அவ்வளவுதான் தெரியும் சுஜி. ஹேமா ஒருத்தி போதும் எத்தனை பேர வேணாலும் சமாளிப்பா"

"ஏற்கனவே அண்ணாக்கு காய்ச்சல் அஜூ டென்ஷன் ஆகப்போகுது" காலையில் சிவாவிற்கு காய்ச்சல் அதிகமாக இருக்க அர்ஜுன் வந்து இஞ்செக்சன் போட்ட பிறகுதான் குறைந்தது.

சுஜிக்கு அவனோடு இருக்க ஆசை தான் ஆனால் இன்று பிரக்டிகல் கிளாஸ் இருப்பதால் சென்றே ஆக வேண்டிய கட்டாயம். நூறுமுறை பத்திரம் சொல்லிவிட்டே சிவாவிடம் இருந்து விடைபெற்றாள் சுஜி.

"நீ டென்ஷன் ஆகாத சுஜிமா! எல்லாம் நான் பாத்துக்குறேன்" அர்ஜுன் சொல்ல மனதே இல்லாமல் ம்ம் என தலையாட்டினாள்.

கார்த்திக் திருச்சி வந்து ஒன்றரை மாதங்கள் ஆனதால் ஓரளவிற்கு ஹேமாவின் வீட்டைப் பற்றி தெரிந்து கொண்டான். அர்ஜுனுடன் நட்பாகவே பேச, இன்றுவரை தயங்கிக் கொண்டு தான் இருக்கிறான் அர்ஜுன் அவனிடம் நெருங்குவதற்கு.

பார்த்ததும் பிடித்துவிட்ட ஹேமாவை பற்றி தெரிந்து கொள்ள இதோ அவளுடனான சிறு பயணம்.

எதற்கும் யாருக்கும் பயமில்லாமல் மனதில் இருப்பதை அப்படியே பேசிவிடுபவளை பிடிக்காமல் போகுமா என்ன?

"ஹேமா நான் என் ரூட்ல போய்ட்டு இருக்கேன், வழியே சொல்ல மாட்ற? சரியான ரூட்ல தான் போறோமா?" கார்த்திக் காரை ஓட்டிக் கொண்டே போகும் வழி சரியா என கேட்க, ஹேமாவிற்கு வாழ்க்கைக்கான கேள்வியாகவே தோன்றியது அந்த கேள்வி.

கார்த்திக்கை பார்த்ததும் சிவா இவ்வளவு நாள் பேசாமல் போனதற்கு அர்த்தம் புரிந்து கொண்டவளுக்கு கோபம் அவ்வளவு வந்தது.

யார் மேல் கோபம்? தன்னிடம் இன்னும் சொல்லாமல் மறைக்கும் அம்மா, அண்ணா, அதற்கு மேல் சிவா. எவனோ ஒருவனுக்கு தன்னை தாரை வார்க்க தயாராய் இருக்கும் சிவாவை தான் தேடி செல்கிறாள். போய் என்ன தான் பேசுவாள்?

"சிவா மாமா! இவரு தான் கார்த்திக் நான் கல்யாணம் பண்ணிக்க போறவரு" ஹேமா சிவாவிடம் சொல்ல, காய்ச்சலில் வாடியிருந்த சிவாவின் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி.

இவ்வளவு நேரம் காரில் பேசாமல் வந்தவள் வாயில் இருந்து இப்படி ஒரு வார்த்தையை எதிர்பார்க்காத கார்த்திக்கோ கார் சாவியை நழுவ விட்டு நின்றான்.

நேசம் தொடரும்..
 
Last edited:
Top