• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசத் தூறல்கள் 17

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 17

"மாப்ள நீங்க சுஜிய காலேஜ்ல விட்டுட்டு ஹாஸ்பிடல் போங்க. நான் ஹேமாவை பாத்துக்குறேன்" சிவா நிதானமாய் சொல்ல, யார் பக்கம் செல்வது என தெரியாமல் நின்றான் அர்ஜுன்.

அவள் அசையாமல் நிற்பதிலே அவள் மனம் புரிய குழப்பத்தில் அர்ஜுனும், என்ன சண்டை வர போகிறதோ என ரேகாவும் நிற்க, "சரி வா ஹேமா நான் ட்ராப் பண்றேன்" கார்த்திக் சொல்லவும் வேகமாய் அவன் பின்னே சென்றவளை வெட்டவா குத்தவா என சிவா பார்த்தான்.

காரில் ஹேமா ஏறியதும் கார்த்திக் ஹார்ன் அடிக்க, சிவாவும் வந்து ஏறிக் கொண்டான்.

அப்போதுதான் கார்த்திக் பிளான் புரிந்த ஹேமாவும் கோபத்தில் கூட பேசாமல் வெளிப் பக்கம் திரும்பிக் கொண்டாள்.

"ஏன் ஹேமா! நான் உன்கூட தனியா பார்த்த முதல்நாளேன்னு பாடிட்டே பைக்ல கூட்டிட்டு போலாம்னு நினச்சா, இப்படி இந்த பய கூடவெல்லாம் வர்றியே! இவன் என்ன பத்தி என்ன நினைப்பான்?"

"ஹான்! இந்திய ஜனாதிபதிய நிராகரிச்சுட்டு அமெரிக்கா ஜனாதிபதி கூட போறதா நினைப்பேன். ஏன்டா அவ வரமாட்டான்னு தான் அவ்ளோ சொன்னேனே? ஏன் உனக்கே கூட தெரியும்.. பின்ன என்ன?" கார்த்திக் பேச்சில் இருந்த உண்மையில் அமைதியாய் வந்தான் சிவா.

"நீ கிளம்பு! நான் வந்துக்குவேன்" ஸ்கூல் முன் இறங்கி ஹேமா சொல்லிவிட்டு செல்ல,

"டேய் வண்டிய எடுத்த..." என சிவா மிரட்ட,

"போகலன்னா அவ அடிப்பா! போனா இவன் கொன்னுடுவான்! எப்படியும் டெத்து கான்ஃபோர்ம். போற உசுரு எங்க வேணா போகட்டும் என 3 மணி நேரம் கழித்து வந்தவளுக்காக அங்கேயே காத்து நின்றனர்.

"இதுல தோத்துட்டா வேலை கிடைக்காதுல்ல டா" என்றவனை கார்த்திக் பார்த்த பார்வை இருக்கே... சிவா வாய் தன்னால் மூடிக் கொண்டது.

"அப்ப இதுக்காக தான் அவளை நான்தான் கூட்டிட்டு போவேன்னு நின்னியா? அர்ஜுன் சொன்ன மாதிரி அவ அந்த ரூம்ல இருந்து வெளில வரணும். அதுக்கு தான் இந்த ஏற்பாடு. சோ நீ கொஞ்சம் உன்னோட வாய" மூடு என்பதை சைகையில் சிவா சொல்ல,

"நீ என்ன வேணா சொல்லிக்கோ! எனக்கு டாக்டர் சொன்ன வார்த்தை தான் கண்ணு முன்ன நிக்குது. அவ உடம்பாலயும் குணமாகனும் மனசாலயும் குணமாகனும்" என்றவன் பேச்சும் சரி என்றுபட, கார்த்திக் எதுவும் சொல்லவில்லை.

அவள் தொலைவில் இருந்து வந்த போதே இருவரும் பார்த்துவிட, சிவா ஒரு எதிர்பார்ப்போடு தான் நின்றான்.

அந்த முட்டாள்கள் அவளை விட்டுச்சென்ற அதே இடத்தில் தான் நிற்பார்கள் என அறிந்தவளும் சரியாய் அங்கே தான் சென்றாள்.

இருவரும் அவளிடம் பதிலை கேட்க, அவர்களை வெறுப்பேத்தவே அமைதியாய் வந்தாள்.

"மிஸ்டர் அமெரிக்கா ஜனாதிபதி அந்த டீச்சரம்மாகிட்ட பதில கேட்டு சொல்லுங்களேன். என்கிட்ட தான் பேசமாட்டாங்க. உங்ககூட கார்ல வர்றவங்க உங்களுக்கு பதில் சொல்ல மாட்டாங்களா?" உன்னையும் அவள் மதிக்கவில்லை என சிவா கார்த்திக்கை கிண்டல் செய்ய, இவர்கள் பேச்சை கவனித்தாலும் கண்டு கொள்ளவில்லை அவள்.

"என்ன ஹேமா! என்ன சொன்னாங்க ஸ்கூல்ல?" ரேகா கேட்க,

"நாளைக்கு ஜாயின் பண்ணனும்" என்றவள் சென்றுவிட, சிவா அப்படியே நின்றுவிட,

"இதுக்கேவா? இன்னும் நீ எத்தனை தொப்பி வாங்க வேண்டியது இருக்கு?" என்று கார்த்திக் தான் அவனை சியர்அப் செய்தான்.

அடுத்த நாளிலிருந்து அவள் பள்ளிக்கு செல்ல, இவன் ஒரு வாரம் அவளுடன் செல்லவில்லை.அவளும் கேட்டுக் கொள்ளவில்லை முதலில்.

முதல் இருநாளுக்கு பின்னும் கார்த்திக் சிவா இருவரும் காணாமல் போக, அவள் தேடினாலும் யாரிடமும் கேட்கவில்லை.

அடுத்த நாள் சிவா கார்த்திக் இருவரும் ரெடியாய் இருக்க, புரியாவிட்டாலும் எப்போதும் போல அவள் காரில் சென்று அமர, சிரிப்புடன் சிவா டிரைவர் சீட்டிலும் கார்த்திக் அவன் அருகிலும் அமர, அப்போதுதான் அவளுக்கு புரிந்தது சிவா இவளுக்காக கார் ஓட்டி பழக சென்றுள்ளான் என்று.

தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்து தினமும் அவளை கொண்டுவிட்டு கூட்டிவரும் வேலையுடன் மதியம் அவளுக்கு பிடித்தது போலவே ஆவிபறக்க சாப்பாடும் செய்தும் அதற்கும் ஒருமுறை அலைந்தான்.

ஆக மொத்தம் முழு நேர சேவகனாய் ஹேமாவினுடனே இருந்தான் ஹேமாவின் பிளாக் மேன்.

தினமும் சிவா அழைத்து செல்ல, அவ்வப்போது அவர்களுடன் கார்த்திக்கும் ஒட்டிக் கொள்வான்.

"வெத்து வேலை செய்யிறதுக்கு தொணை வேற. உங்க தயவு இல்லாம நான் இருக்க முடியாதுன்னு சொல்லி காட்டுறீங்களா? ஒழுங்கு மரியாதையா உன் ஊர பார்த்து ஓடு. வீண் வேலைக்கு சுத்திட்டு திரியாத! நீயாவது நான் சொல்றத கேளு" கோபத்தில் ஆரம்பித்து கெஞ்சலாய் கார்த்திக்கிடம் முடிக்க,

"ஒப்கோர்ஸ் நான் போய் தான் ஆகணும் ஹேமா. பட் உன்னை இந்த நிலையிலும், தோ இந்த நல்லவன அவன் நிலையிலும் விட்டுட்டு போய் அங்க என்னால சத்தியமா கம்பெனிய ரன் பண்ண முடியாது. என்னால உதவ முடியாட்டி கூட, உங்களுக்கு நீங்களே சமாதானம் ஆகுற வர இங்கே இருக்க தோணுது. எதனாலன்னா... நானும் ஒரு விதத்துல அன்னைக்கு நடந்த விபத்துக்கு காரணம் தானே?" என்றைக்கும் இல்லாமல் அன்றைக்கு சிவா சீரியஸ்ஸாய் பேச, புரியாமல் பார்த்தனர் ஹேமாவும் சிவாவும்.

"நீ சென்னையில இருந்து முன்னாடியே கிளம்புறேன்னு சொன்னப்போ நான் தான் உன்னை தடுத்தது. அன்னைக்கு மட்டும் நான் உனக்கு போன் பண்ணாம இருந்திருந்தா??" கார்த்திக் உண்மையில் கலங்கி போய் தான் கூறினான்.

அன்றைய நாள் நினைவில் மூவரும் அமைதியாகிவிட, ஹேமாவோ மொத்தமாய் அந்த நாளிற்கே சென்று விட்டாள். எத்தனை கனவுகளோடு அன்று கிளம்பினாள்.

"டேய் இப்ப ஏன் லூசு மாதிரி உளறிட்டு வர்ற? அவ இப்ப தான் உன்னை திட்றாளா? அப்படி பார்த்தா என்னால தான் எல்லாம்" சிவா அவன் தரப்பை கூற,

"கொஞ்சம் எல்லாரும் வாய மூடிட்டு வர்றிங்களா? இப்படி இம்சை பண்ணி என்னை டார்ச்சர் பண்ணவா என் கூடவே இருக்குறீங்க?" இருவரையும் சமாதானம் படுத்தும் அளவுக்கு நெருங்கி போகவும் மனமில்லை.

அவர்களாக பேச்சை நிறுத்த போவதும் இல்லை என்று தெரிந்த பின் எப்போதும் போல கத்தியே அவர்களை வாயடைக்க செய்தாள்.

"எப்பப்பாரு தொணதொணன்னு பேசிகிட்டு.. அறிவு இருக்குறவங்களுக்கு சொன்னா புரியும். யார் என்ன செஞ்சாலும் என் மனச நான் மாத்திக்க போறது இல்ல. எனக்கு யாரும் வேண்டாம். என் வீட்ட விட்டு என்னை துரத்தினாலும் நான் யார்கிட்டயும் வந்து நிக்க மாட்டேன். இன்னும் என் பின்னாடி சுத்தி அசிங்கப்படாதீங்க" ஹேமா மீண்டும் ஒருமுறை உறுதியாய் சொல்ல,

"இந்த வெண்ணைக்கு தான் அவ வீட்லயே இருக்கட்டும்னு சொன்னேன். எவனாவது என் பேச்சை கேட்டீங்களா?" சிவா இப்போது கோபமாய் கத்த,

"டேய் அவ கத்துறதுல நியாயம் இருக்கு. இப்ப நீ ஏன் டா கத்துற?" புரியாமல் கேட்டான் கார்த்திக்.

"ஸ்கூலுக்கு போனா அவ மாறி கிழிப்பான்னு சொன்னிங்களே! அவ மாறின லட்சணம் தெரியுதா? வீட்ல இருந்தா கூட கூடவே இருந்து பாத்துருப்பேன்.. இப்ப அவள தனியா விட்டு வேண்டாததை எல்லாம் யோசிக்க வச்சுட்டு இருக்கீங்க" புரியும்படியே சிவா சொல்ல,

'எவனும் திருந்த போவதில்லை' என்ற நினைப்பில் காரில் இருந்து இறங்கி பள்ளி உள்ளே சென்றாள் அவள்.

"எனக்கு பயமா இருக்கு சிவா. நானும் இப்ப சரியாகிடும் இப்ப சரியாகிடும்னு தான் பார்த்துட்டு இருக்கேன். நாலு மாசம் போச்சி இன்னும் அவ உன்னை ஏத்துக்க மாட்டேங்குறா.. நாம கொஞ்சம் போர்ஸ் பண்ணி பாக்கலாமான்னு தோணுது" கார்த்திக் போகும் அவளையே பார்த்து கொண்டு சொல்ல,

"கார்த்திக் அவ என்னை வேண்டாம்னு சொன்னா நான் கேட்டுப்பேன். அவ சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். ஆனா அதுக்கு காரணம் என்னனு பார்த்தியா? அவ எப்படி இருந்தாலும் இந்த ஜென்மத்துல என்னை தவிர யாரையும் நினச்சு கூட பார்க்க மாட்டா"

"இவ்வளவு தெரிஞ்ச நீ ஏன் டா முதல்லயே அவளுக்கு ஓகே சொல்லல. அப்படி சொல்லியிருந்தா.. " கார்த்திக் அதற்குமேல் பேசாமல் இருக்க,

"விதி கார்த்திக்! எனக்கும் அவளை அவ்ளோ புடிக்கும். அவளோட அந்த குறும்பு பேச்சை எப்பவுமே கேட்டுட்டே இருக்கணும்னு தான் நினச்சேன். என்கிட்ட அவ வந்தா எங்க அவளோட வாழ்க்கைல நான் தடையா இருப்பேனோனு நினச்சேன் டா. அவ எல்லா விதத்துலயும் மேல இருக்கனும் நினச்சேன். இப்ப அவளோட அம்மாகிட்ட பேச இருக்கிற தைரியம் முன்னாடியே இருந்திருந்தா அவள நான் இப்படி தொலைச்சிருக்க மாட்டேன் டா" முகத்தில் அவ்வளவு வலியையும் தாங்கி சிவா பேச, அவன் தோள்களை தட்டிக் கொடுத்தான் கார்த்திக்.

"இப்பவும் அவள நான் விட்டுட மாட்டேன் டா. எனக்கு அவ தான். அவளுக்கு நான் தான். கார்த்திக்! ஹேமா சொல்ற மாதிரி நீயும் எவ்வளவு நாள்தான் இங்கேயே இருப்ப? நீ போய் உன் வாழ்க்கைய பாருடா. கண்டிப்பா சீக்கிரமே அவ சரியாகிடுவா. அன்பை தவிர எதுவுமே பெருசு இல்லன்னு அவளால தான் நான் உணர்ந்தேன். அவளுக்கு அதை உணர்த்த வேண்டியது எல்லாம் இல்ல டா..அவளுக்கே அது தெரியும். சீக்கிரமே என் கைக்குள்ள அவ வருவா" அவ்வளவு முழு நம்பிக்கையுடன் சிவா பேச, அவனின் அன்பின் அளவில் பேச வார்த்தைகள் இல்லாமல் நின்றான் கார்த்திக்.

"ஹ்ம்ம் அப்படி அவ இந்த கைக்குள்ள வர்றத பார்த்துட்டு ஹாப்பியா நான் கிளம்புறேன். அதுவரை அவளை மாதிரியே அட்வைஸ் பண்ணாம, அடுத்து என்னை பண்ணி அவளை மாத்தலாம்னு யோசி. இப்ப வா போய் நீ அவளுக்கு கேட்டரிங் வேலை வேற பாக்கணும் இல்ல" உணர்ச்சிவசத்தில் பேசியவன் கிண்டலுடன் முடிக்க, சிவாவும் சிரிப்புடன் கிளம்பினான்.

"நான் பெத்ததுங்களே என் பேச்சை கேட்க மாட்டுது. நீ மட்டும் கேட்கவா போற? ஏதோ செல்லா காசா தான் நானும் இவரும் இந்த வீட்டுல இருக்கோம். எங்களை யாரும் மதிக்கறதும் இல்ல.. மனுஷங்களா நினைக்கறதும் இல்ல.. உங்க இஷ்டப்படியே இருந்துக்க நாங்க எதுக்கு இங்க?" ரேகா புலம்பி தள்ள, தலை குனிந்தபடி அங்கே நின்றாள் சுஜி.

ஹேமாவை அழைத்து செல்ல வந்த சிவா கூட ஒரு நிமிடம் என்னவோ ஏதோவென பயந்து விட்டான். அவன் காதில் அனைத்தும் விழுந்திருக்க,

"என்னத்த என்ன பிரச்சனை? சுஜி என்ன பண்ணின?" பிரச்சனை பெரிதாகாமல் தடுப்பதாக நினைத்து அவன் கேட்க,

"என்னடா உன் தங்கச்சிய நான் கேள்வி கேட்க கூடாதா? ஆமா ஆமா! தப்பு தான் இல்ல? மன்னிச்சுடுங்க.." இன்னும் என்னென்னவோ சொல்ல, நிஜமாகவே பயந்து பதறினான் சிவா.

அர்ஜுன் ஹாஸ்பிடல் சென்றிருக்க, கார்த்திக்கும் அவனுடன் சுத்தி பார்க்க போயிருந்தான்.

"அய்யயோ அப்பிடியெல்லாம் இல்ல அத்த! என்னனு சொன்னா நானும் கேட்பேன்ல?" சிவா சொல்ல,

"ஆமா! பொம்பளங்க விஷயம் எல்லாத்தையும் இவன்கிட்ட சொல்லணும். இவன் அவ்வளவு பெரிய ஆளு தான்" என அதற்கும் புலம்ப, நொந்தே விட்டான் சிவா.

அத்தையின் பதிலில் சுஜி அதுவரை பாவம்போல நின்றவள் சிரித்து விட்டாள்.

பின்னே! ரேகா எவ்வளவு திட்டினாலும் யாரிடமும் விட்டுக் கொடுக்க மாட்டார். அதே போல எல்லாரிடமும் சொல்லிக் கொண்டிருக்கவும் மாட்டார். எனக்கும் எதிரில் இருப்பவருக்கும் உள்ள பிரச்சனையில் நீ ஏன் மூக்கை நுழைக்கிறாய் என்பதை தான் அவர் எப்போதும் யாரிடமும் சொல்லுவது!.

இப்போதும் அதேபோல சிவாவிடம் சொல்ல, அவன் புரியாமல் சுஜியை பார்த்தான். அவள் கண்களால் எவ்வளவு சைகை செய்தாலும் அவனுக்கு புரிந்தால் தானே!

"நீ இன்னும் போகலையா டா? போ உன் வேலையை பார்த்திட்டு" என்று அவர் சொல்ல, ஹேமா அறையை நோக்கி குழப்பத்துடன் சென்றான்.

அதன்பின் அவர் சுஜியை திட்டிக் கொண்டே இருக்க, சுஜி முதலில் இருந்த அதே குனிந்த தலையில் நின்றாள்.

ஒன்றும் புரியாமல் அமைதியாகவே சிவா அதே யோசனையில் காரை ஓட்ட, வழக்கத்துக்கு மாறாக அவன் அமைதியாய் வருவது ஹேமாவிற்கும் புரியாமல் இருக்க, எதுவும் கேட்காமலே பள்ளியில் இறங்கி கொண்டாள்.

அர்ஜுனிடம் கேட்கலாமா என நினைத்த சிவா பின் அதை மாற்றி கார்த்திக்கிற்கு அழைத்தான்.

"சொல்லு சிவா! ஹேமாக்கு டிரைவர் வேலை முடிஞ்சுதா?"

"அடங்கு டா டேய்! ஆமா அர்ஜுன் கூட தானே இருக்க?"

"ஆமா! ஏன்?"

"இல்ல அர்ஜுன் எப்படி இருக்கான்?"

"அவனுக்கு என்ன டா? அவன் நல்லா தான் இருக்கான். அவன் பாக்குற பேசண்ட் தான் நல்லாயிருப்பாங்களானு டவுட்டு" கார்த்திக் நிலைமை புரியாமல் வாயடிக்க,

'உன்னையெல்லாம் மனுஷனா நினச்சு கூப்பிட்டேன் பாரு' என நினைத்தவன் சொல்வதா வேண்டாமா என யோசிக்க, ஒருவழியாய் கார்த்திக் பேசியே அவன் மனதை மாற்றி சொல்ல வைத்தான்.

"இவ்வளவு தானா? டேய் இப்பலாம் மாமியார் மருமக சண்டை சாதாரணம் டா" கார்த்திக் வேடிக்கையாய் சொல்ல,

"உன் அறிவுரைய கேட்கவா நான் கூப்பிட்டேன்" ஏன சிவா சொல்லிக்கொண்டு இருக்கும் போதே இரண்டாவது அழைப்பில் சுஜி வந்தாள்.

உடனே கார்த்திக் அழைப்பை சொல்லாமல் சிவா கட் செய்து சுஜி அழைப்பை ஏற்றான்.

"சொல்லு சுஜி. எதாவது பிரச்சனையா?"

"அய்யோ அண்ணா! அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீ இப்படி பதறுவன்னு தான் நான் கூப்பிட்டேன். அத்த சும்மா தான் பேசிட்டு இருந்தாங்க..நீ எதையும் மனசுல வச்சுக்காத?"

"ஏய் என்னென்னவோ சொல்லிட்டு இருந்தாங்க.. நீ பேசிட்டு இருந்தாங்கனு சொல்ற?"

"விடமாட்டியே! கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆக போகுதே..சும்மா இருக்கியேனு கேட்டாங்க. இத எப்படி உன்கிட்ட சொல்லுவாங்க? நீ என் வாய கிளறி வாங்கிட்ட. சரி இனி இதை இப்படியே விட்டுடு" என்றவள் வைத்துவிட, அது எப்படி அப்படி விட முடியும் என தான் நினைத்தான் சிவா.

நிஜமாய் அவனுக்கு இது நினைவில் இல்லவே இல்லை. ஹேமாவிற்காகவா? அப்படியென்றாலும் இது நடந்து ஆறு மாதம் தானே ஆகிறது என்ற குழப்பத்தில் ஒருவாறு படிப்பு என்ற ஒன்று ஞாபகம் வந்தாலும் ரேகாவின் கோபம் அதிகம் ஆகும்முன் அர்ஜுனிடம் பேச முடிவெடுத்தான் சிவா ஒரு அண்ணனாய்.

அங்கே ஹாஸ்பிடலை தனி ஒருவனாய் ஒருவழியாக்கிக் கொண்டிருந்தான் கார்த்திக்.

"நிஜமாவே நீ அமெரிக்கால இருந்து தான் வந்தியா? ஹேமா நார்மல் ஆகுறாளோ இல்லையோ அதுக்குள்ள நான் லூசாயிடுவேன் இன்னும் ஒரு நாள் ஹாஸ்பிடல் உன்னை கூட்டிட்டு வந்தேன்னா.." அர்ஜுன் சொல்ல,

"உனக்கு ஹெல்ப் பண்ண தான்டா இந்த ஐடியா குடுத்தேன். ஏன் நல்லா இல்லையா?" கார்த்திக் கேட்டான்.

"வேணாம் டா வெறியாக்காத! இதை வச்சு ஆபரேஷன் பண்ணேன்னு வை.. நீ ஜெயிலுக்கு வந்து தான் என்னை பாக்கணும்" என அந்த அரிவாளைக் காட்டினான் அர்ஜுன்.

"இத கொண்டு அந்த ஆளுகிட்ட கொடுத்துட்டு அவரு ஹாஸ்பிடல விட்டு வெளில போன பிறகு தான் நீ உள்ள வரணும். புரியுதா?" என கார்த்திக்கை துரத்த,

"நல்லதுக்கே காலம் இல்லை" என்று உளறிக் கொண்டே அந்த அரிவாளோடு சென்றான் அவன்.

அந்த அரிவாள் ஒரு பெரியவர் கொண்டு வந்தது. இரு ஊருக்கு நடுவே நடந்த பிரச்சனையில் ஒருவன் கையை இழந்திருக்க, அதை காட்டத் தான் அர்ஜுனிடம் வந்தனர். அப்போது அவர்கள் கொண்டு வந்தது தான் அந்த அரிவாள்.

மாலை அவனை கூட்டிக்கொண்டு அர்ஜுன் வர, அவசரமாய் பேச வேண்டும் என சிவா ஒரு இடத்தை சொல்ல, கார்த்திக் அர்ஜுன் இருவரும் அங்கே வந்தனர்.

சிவாவும் பள்ளி முடிந்து ஹேமாவை அழைத்துக் கொண்டு அங்கே வந்தவன், ஹேமாவை கார்த்திக்குடன் வைத்துவிட்டு அர்ஜுனை தனியாக அழைத்து சென்றான்.

ஹேமா காரில் இருந்து இறங்கவே மாட்டேன் என பிடிவாதமாய் காரில் இருக்க, கார்த்திக்தான் அங்கிருந்த கோவிலில் அவளின் தனிமைக்காக அவளை அழைத்து சென்றான்.

அங்கே யாரும் இருக்க மாட்டார்கள் அதனால் ஹேமா பெரிதாக வம்பு செய்ய மாட்டாள் என்று தான் சிவா அங்கே வரவழைத்தது.

"மாப்ள! நான் கேட்குறேன்னு தப்பா நினைக்காதீங்க! எனக்கு என்ன பண்ணனு தெரில.. கேட்குறது சரியானும் தெரில" சிவா அங்கிருந்த திண்டில் புல்லினை ஒவ்வொன்றாய் பிடுங்கி கொண்டே அர்ஜுனிடம் தனியாய் பேசினான்.

"சொல்லுங்க மாம்ஸ், என்கிட்ட என்ன தயக்கம்?"

"இல்ல! சுஜிக்கு குழந்த.. அத்த நேத்து அதை பத்தி பேசிட்டு இருந்தாங்க..எனக்குமே ஹேமா பத்தின யோசனைல வேற எதுவும் ஓடல.." அவன் திக்கி கொண்டே சொல்ல, அர்ஜுன் அமைதியாகவே நின்றான்.

"ஒருவேள ஹேமாக்காக நீங்க எதுவும்.." எப்படி கேட்பது? தங்கையிடம் கேட்க முடியாது என நினைத்து ஒரு வேகத்தில் அர்ஜுனை அழைத்து விட்டான். ஆனால் இப்போது பேச்சு தான் தந்தியடித்தது.

"ச்சச்ச.. அதுமட்டும் ரீசன் இல்ல மாமா. சரியா சொல்லணும்னா வேற எந்த ரீசனும் இல்ல.. அம்மா சுஜிய எதாவது திட்டினாங்களா?"

"அய்யயோ அதெல்லாம் இல்ல.. எனக்கும் இப்ப தான் தெரியும் அதான் கேட்கலாமானு யோசிச்சேன். அதுமட்டும் இல்ல.. இப்ப அங்க ஒரு குழந்தை இருந்துச்சுன்னா அதுவே ஹேமாக்கு பெரிய ஆறுதலா இருக்கும்னு தோணுது"

"சாரி மாமா நீங்க நினைக்குறது புரியுது. ஒரு 3 மாசம் வெயிட் பண்ணா நல்ல நியூஸ்ஸா சொல்றோம்.. அதோட ஒரு ஒரு வருஷம் வெயிட் பண்ணிங்கன்னா உங்க மருமகள உங்க கையில தர்றோம்" என ஒரு வெட்க சிரிப்புடன் சொல்ல, அதற்கு மேல் எதுவும் சிவா கேட்பானா என்ன?

சிரிப்புடன் இருவரும் கிளம்புவதற்காக திரும்ப கார்த்திக் ஹேமா இருவரும் அவர்கள் பேசுவது கேட்கும் தூரத்திலேயே நின்றனர்.

"எவ்வளவு நேரமா டா இங்க நிக்குறீங்க? உன்னை என்ன சொன்னேன்? கோவிலுக்கு உள்ள தான அவளை கூட்டிட்டு போக சொன்னேன்?" சிவா கார்த்திக்கிடம் கேட்க,

"நீ புல்லுக்கு சொறிஞ்சி விடும்போதே வந்துட்டோம். மகாராணிக்கு உன்கூட கோவிலுக்கு போனா தான் புடிக்கும் போல! அவ தான் நீங்க அப்படி தனியா என்ன பேசி கிழிக்க போறீங்கனு ஆர்வத்துல நான் சொல்ல சொல்ல கேட்காம வந்தா" என சொல்ல,

"லூசு லூசு! நாம சொல்றத கேட்க கூடாதுன்னே முடிவுல இருக்கா. இப்ப அவகிட்ட மறச்சு நான் என்ன மெடலா வாங்க போறேன்" என்றவன் முன் செல்பவர்களை பின் தொடர்ந்தான்.

"இவங்க மெடல் வாங்க வைக்க நாம என்னவெல்லாம் பண்ண வேண்டியதிருக்கு" என பின் சென்றான் கார்த்திக்.

எப்போது தான் மனம் மாறுவாள் இவள்? மனம் மாறத்தான் செய்வாளா? எல்லாம் விதியா? கடவுள் சதியா? பார்க்கலாம் அடுத்த அத்தியாயத்தில்....

நேசம் தொடரும்..
 
Top