• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசத் தூறல்கள் 19 final

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 19


வெண்பட்டில் ஜொலித்துக் கொண்டிருந்த தன் மனம் கவர்ந்தவளின் முகத்தில் இருந்த மலர்ச்சியை ரசித்தபடியே, தன் கரங்களால் அவள் கழுத்தில் அந்த தாலியை மூன்று முடிச்சிட்டு தன்னவள் ஆக்கிக் கொண்டான் சிவா.

சரியாய் அர்ஜுன் சுஜி திருமணம் முடிந்து இரண்டரை வருடம் கழித்து நடந்து முடிந்திருக்கிறது சிவா ஹேமாவின் திருமணம்.

"ஊர்ல சிவான்னு ஒரு நல்லவன் இருந்தான்..இப்ப அவனை எங்கேன்னு போயி தேடுவேன்" சிவா சீரியசாய் தூரத்தில் இருந்த யாரிடமோ இங்கிருந்தே பேசிக் கொண்டிருந்த தன் மனைவியை சைட்டடிக்க, கார்த்திக் தான் மூக்கை சீந்தி அழுதான்.

"டேய்! உனக்கு அவ்ளோ தான் மரியாதையே.. என் முன்னாடியே என் பிளாக்கிய கலாய்க்கிறியா? அவ்ளோ தைரியமாயிடுச்சா உனக்கு?" சீறிக் கொண்டு சண்டைக்கு வந்தது நம் ஹேமாவே தான்.

"ஹப்பா! அன்னைக்கு கூட அவசரப்பட்டு அமெரிக்கா ஓடிட்டேனா.. இப்ப உன் வாயால இந்த மாதிரி வார்த்தையெல்லாம் கேட்ட அப்புறமா தான் நான் ஜென்மசாபல்யமே அடைஞ்சா மாதிரி இருக்கு" கார்த்திக் சொல்ல,

"பிளாக்கி, ரொம்ப உளறுறான். வா நாம அந்த பக்கம் போகலாம். இவன் உதயாவ நம்ம கண்ணுல காட்டாம இவன்கிட்ட பேசா கூடாது" என கார்த்திக்கிடம் சொல்லிவிட்டு சிவாவை இழுத்துக் கொண்டு சென்றாள்.

சொன்னது போலவே இந்திய அதுவும் தமிழ் பெண்ணை கார்த்திக்கிற்கு தேடி கண்டுபிடித்து விட்டார் கார்த்திக்கின் அன்னை.

அடுத்த மாதம் அவன் திருமணம். அதற்குமுன் அவன் மணக்க போகும் உதயாவை புதையல் காத்த பூதம் போல அனைவரிடமும் மறைத்து வைத்திருக்கிறான். ஏன் என்றால், அப்போது தான் சிவா ஹேமாவை அதுவரை இவன் கலாய்க்க முடியுமாம்.

"ஹேய் சுட்டி பொண்ணே.. வாங்க வாங்க.. அத்தைகிட்ட வாங்க..." ஹேமா தனது அண்ணன் மகள் மதுவை கைநீட்டி அவள் உயரத்திற்கு குனிந்து அழைக்க, அப்போதுதான் நடை பழகிய அந்த தேவதையும் தத்தி தத்தி நடந்து ஹேமா அருகில் நின்ற சிவாவின் கால்களை கட்டிக்கொண்டு "மா..மா" என செல்லம் கொஞ்சியது.

"பார்த்தியா! பார்த்தியா! உன்ன மாதிரியே தான்..அப்படியே உன்ன மாதிரியே திமிரு.. உன்ன கெஞ்சுன மாதிரியே கெஞ்சிக் கெஞ்சி அவ பின்னாடியே போனா தான் என்கிட்ட வர்றா. எல்லாம் உன் ட்ரைனிங் தானே?"

முன்பிருந்த அதே ஹேமா தன் முன் மிரட்டிக் கொண்டிருக்க, தன்னுடைய அக்மார்க் புன்னகையுடன் அதைக் கேட்டுக் கொண்டிருந்தான் சிவா.

மதுவை கையில் தூக்கியவன் "ஏன்டா செல்லம் அத்தைகிட்ட போக மாட்டிங்களா?" எனக் கேட்க, அத்தையின் கோபம் புரிந்தோ, மாமாவின் சொல் புரிந்தோ தன் இரு பிஞ்சு கைகளை விரித்து ஹேமாவிடம் தாவியது குழந்தை.

முகம் மலர மதுவை அள்ளிக் கொண்டாள். "நமக்கு புடிச்சது நம்மகிட்ட தான் வந்து சேரும் டி என் ராட்சசி பொண்டாட்டி" என தலைமுட்டி ஹேமாவிடம் அவன் சொல்ல,

"மாமா! உங்களை அங்க கூப்பிடுறாங்க.. சடங்கு நடந்துட்டு இருக்கு.. நீங்க இங்க ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கீங்களா? ஏய் வாலு நீயும் அத்தை மாமா கூடதான் இருக்கியா?" என மதுவை தூக்கி கொண்ட அர்ஜுன் இருவரையும் மேடைக்கு இழுத்து சென்றான்.

கார்த்திக் தான் ஜோடியாய் நின்று அனைத்து சம்பிரதாயங்களையும் செய்யும் அவர்களை பார்த்தபடியே அந்த நாளை நினைத்து பார்த்தான்.

அன்று சிவா பேசி வீட்டில் விட்டு சென்ற பின் தெளிவாய் அமைதியாய் அமர்ந்து யோசித்தாள் ஹேமா.

'ஆமாம்! அவனின் காதல் எனக்கும் தெரியும் தானே? பின் அவன் மட்டும் எப்படி அவன் காதலில் இருந்து பின் வாங்குவான்? இதை எப்படி மறந்தேன் நான்?' என ஒரு நிமிடம் யோசித்தாள். மறுநிமிடமே,

'அதற்காக உன் நிலை தெரிந்தும் அவன் வாழ்வை கெடுப்பாயா? அவனை வேறொரு நல்ல திருமண பந்தத்திற்கு சம்மதிக்க வை. அவன் நிலையில் உறுதியாய் இருப்பது போல நீயும் உறுதியாய் அவனை மாற்று' என நினைத்து அவள் அறையில் நடந்து கொண்டிருக்க, அங்கிருந்த கண்ணாடியில் அவள் முகம் தெரிந்தது.

பளிங்காய் இருந்த முகத்தில் இப்போது முழுதும் தழும்புகள். அது மாறுமா என்றால் கேள்விதான் என்று அன்றே மருத்துவர் சொல்லிவிட, ஏனோ முன்பு இருந்த கோபம் இப்போது இல்லை. இது சிவா பேச்சில் ஏற்பட்ட மாற்றம் என தெரிந்தாலும் இருமனதாய் நின்றாள்.

"ஹேமு என்ன பண்ற?" என்றவாறு உள்ளே நுழைந்தாள் சுஜி. அவளையே விழியகற்றாமல் பார்த்து நின்றாள் ஹேமா.

"ஹேமா" என்று அவள் தோள்களை தொட,

"ஹான் சொல்லு" என்று கூறியவள் முகம் யோசனையாய் இருந்ததை அறிந்து கொண்டாள் சுஜி.

"என்ன ஹேமா ஸ்கூல் போலயா? கிளம்பி போன மாதிரி இருந்துச்சு..எப்ப வந்த?"

"சுஜி! நான்.. நான்.. தப்பு பன்றேனா சுஜி? எனக்கும் ஆசை எல்லாம் இருந்துச்சு.. ஆனா நான் எப்படி? சிவா பாவம் தான? நீ சொல்லேன். யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இருக்க சொல்லேன். அவன் கல்யாணமே பண்ண மாட்டானாம். என்னை பிளாக்மெயில் பன்றான். நீ சொல்லு. உன் அண்ணன் நல்லதுக்கு தான நான் சொல்றேன். நான் சரியா தான பேசுறேன்?"

திடீரென இப்படி புலம்புவாள் என எதிர்பார்க்கவில்லை சுஜி. ஆனால் ஏதோ நடந்திருக்கிறது என மட்டும் புரிந்தது. ஏனென்றால் ஹேமா இவ்வளவு வார்த்தைகளை தொடர்ந்து பேசி பல நாட்கள், ஏன் பல மாதங்கள் அல்லவா ஆகிறது.

ஹேமாவிடம் பேச பயந்த சுஜி அவளின் குழப்பம் கண்டு, தன்னை நிதானப்படுத்திக் கொண்டு ஹேமாவிடம் பேச ஆரம்பித்தாள்.

"ஹேமா நான் ஒன்னு சொல்லவா?" சுஜி கேட்க, அவளும் கேள்வியாய் பார்த்தாள்.

"ஒருவேள என்னோட அண்ணனுக்கு இந்த மாதிரி அச்சிடேன்ட் ஆகி, இப்ப நீ பெருசா நினைக்குற இதே பிரச்சனை அண்ணாக்கும் வந்திருந்தா நீ அண்ணன விட்டுட்டு வேற ஒருத்தர கல்யாணம் பண்ணகியிருப்பியா?" சிவா கேட்க நினைத்தும் ஹேமா தாங்க மாட்டாள் என கேட்காமல் விட்ட ஒன்றை அவன் தங்கை கேட்டு விட்டாள்.

அடுத்த நொடி புரிந்து விட்டது ஹேமாவிற்கு புரியாமல் மறைந்திருந்த அனைத்தும்.

"எப்படி முடியும்? எப்படி பதில் சொல்வது?" ஹேமாவிற்கு அதற்குமேல் எதையும் நினைக்க முடியவில்லை. தொடர்ந்து சுஜியே பேசினாள்.

"ஹேமா, உனக்கு இன்னொன்னு தெரியுமா? என் அண்ணா உன்ன விரும்புறத முன்னாடியே, அதுவும் நீ ட்ரைனிங்க்கு சென்னை போறதுக்கு முன்னாடியே என்கிட்ட சொல்லிட்டாங்க. உன்னோட அண்ணாக்கு கூட அப்பவே தெரியும். நாங்க எல்லாம் என்னென்னவோ நினச்சு இருந்தோம்"

"சுஜி நீ நிஜமாவா சொல்ற? பிளாக்மேன்க்கு என்னை அவ்வளவு புடிக்குமா?" கண்ணீர் கன்னங்களை தாண்டி ஓட கேட்டாள், பல நாட்களுக்கு பிறகு அவள் பிளாக்மேனை.

"நீ உனக்கே பதில் தெரிஞ்ச கேள்விக்கு என்கிட்ட விடை கேக்குற ஹேமா. அண்ணாக்கு முதல் முதலா புடிச்ச பொண்ணு தன் மனசுல இடம் கொடுத்த பொண்ணுனா அது அவனோட ஹேமா தான்" ஹேமா கண்ணீரை துடைத்துக் கொண்டே சிரிப்புடன் சுஜி சொல்ல, அது ஹேமாவிற்கும் ஒட்டிக் கொண்டதோ!

"உன்னோட ஆளு இன்னும் நிறைய வேலை பண்ணி வச்சுருக்கு. ஆனால் அதெல்லாம் நான் சொல்லக் கூடாது. நீ ரசிச்சு அனுபவிக்கனும். உன்னோட பிளாக்மேன் உன்கிட்ட சொல்றவர நாங்க யாரும் சொல்ல மாட்டோம். நீ உன் மனசுல இருக்குற அந்த காதலை அப்படியே ஓடி போயி உன் ஆளுகிட்ட கொட்டிட்டு வா பாக்கலாம்"

சுஜி சொல்லும் அனைத்தும் புரிகிறது. தன்னை போலவே அவனும் யாரையும் நினைத்து கூட பார்க்க மாட்டான் தான். ஆனாலும் உள்ளுக்குள் சிறு உறுத்தல். நான் அவனுக்கு சரியானவள் தானா என்று.

"வேண்டாம் ஹேமா ரொம்ப யோசிச்சு குழப்பிக்காத! நீ இப்ப தான் தெளிவா இருக்குற! நீ சரினு சொன்னா சந்தோசமா அண்ணா உனக்கு தாலி கட்டும். நீ வேணான்னு சொன்னா, இதோ இப்ப மாதிரியே எப்பவும் உன் காலை சுத்தி, உன்னை பாதுகாத்துட்டே இருக்கும்" முடித்துவிட்டு இனி முடிவு அவளுடையது என எழுந்து சென்றுவிட்டாள் சுஜி.

ஆனால் ஹேமா அசையவில்லை. காலையில் சிவா பேசி கொண்டுவந்து விட்டு, பின் சுஜி பேசி அதன் பின் ஹேமாவும் தனியாய் அமர்ந்து யோசித்து என மணி நண்பகல் ஒன்றை தொட்டிருக்க, இன்னும் சில நிமிடங்களில் சிவா சாப்பாட்டுடன் வருவான் தான். ஆனால் அதுவரை இங்கேயே இருக்க முடியவில்லை.

எங்கு எந்த புள்ளியில் யோசித்தாலும் அவன் காதலை சொல்லாமல் உணர்ந்தவள், இப்போது சொல்லிலும் உணர்ந்த பின் அவளால் அங்கு இருக்க முடியவில்லை.

வேகமாய் வெளியே ஓடிவர கார்த்திக் தான் ஹாலில் அமர்ந்திருந்தான்.

"டேய்! வெளில போனும் காரை எடு". ஹேமா வந்து கார்த்திக்கிடம் சொல்ல, அவளின் அவசரம் அவனை அசைக்கவில்லை, அவளின் வார்த்தைகள் தான் அசைத்தது.

"ஹேய் நீ என்ன சொன்ன?" கார்த்திக் மலர்ந்து கேட்க,

"எரும! இப்ப காரை எடுக்குறீயா இல்ல நானே கிளம்பவா?" என்றவள் முன்னே செல்ல, துள்ளி குதித்து கொண்டு காரை ஸ்டார்ட் செய்தான் கார்த்திக்.

"எங்க போறோம் ஹேமா?"

"போறோம் இல்ல.. போறேன்.. ஒரு லூச பார்க்க போறேன்" என்றவள் முகத்தில் சந்தோசத்துடன் பதட்டமும் இருந்ததோ!.

"ஓஹ்ஹ்! சரிங்க மேடம்" என்றவன் அவள் சொல்லாமலே சிவா வீட்டின் முன் காரை நிறுத்தி விட்டு, காரிலேயே இருந்து கொண்டான்.

அவள் செல்லும் முன் கார்த்திக் கட்டை விரலை மட்டும் உயர்த்தி காட்ட, ஒரு சிரிப்புடன் உள்ளே சென்றாள்.

"ஹேமா நீ எப்படி வந்த? நான் தான் இப்ப வருவேன்ல?" சாப்பாட்டை எடுத்து வைத்து கொண்டிருந்தவன் வாசலில் உள்ளே நுழைந்தவளை பார்த்து கேட்க அவள் எதுவும் பேசாமல் அமர்ந்தாள்.

காலையில் பேசியது அவளை யோசிக்க வைக்கும் என்று அவனுக்கு தெரியும். ஆனாலும் இவ்வளவு தூரம் தேடி வந்த காரணம் தான் புரியவில்லை.

ஹேமாவை அறிந்தவன் ஆயிச்சே! பயமும் இப்போது அவனை சூழ்ந்து கொண்டது அவள் அமைதியில்.

"என்னாச்சு ஹேமா?" சிவா கேட்க,

"நீ என்கூட சண்ட போடுவியா?" என்றாள் சம்மந்தம் இல்லாமல்.

"ஏன் சண்ட போடணும்?"

"நான் தப்பு பண்ணா என்கிட்ட சண்ட போடுவியா?"

"என்ன ஹேமா சொல்ற? எனக்கு புரியலை?"

"நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நான் தப்பு பண்ணா என்கூட சண்ட போடுவியா?" நிறுத்தி அழகாய் சொல்லிவிட்டாள் அவள் முடிவை.

புரியாமல் விழித்தவனுக்கு அவள் மெல்லிய சிரிப்பு தான் மொத்தமாய் உணர்த்தியது.

"பதில் சொல்லு!"

"ஆமா கண்டிப்பா சண்ட போடுவேன். இப்படி என் கைகுள்ள வச்சு எங்கேயும் போக விடாம சண்ட போட்டு அப்புறம் பழம் விட்டுப்பேன்" என்று அவளை தன் தோளில் சாய்த்து கூறினான்.

அவள் கண்ணீர் அவன் சட்டையை நனைக்க, "இப்படி அழுதா கூட சண்ட போடுவேன்" என்று அவள் முகம் பார்த்து கண்ணீரை துடைக்க,

"அப்ப நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்" என்றாள் அவன் முகம் பார்த்து, கண்ணில் கண்ணீரும் உதட்டில் சிரிப்புமாய்.

"பண்ணிக்கலாமே! ஆனா இப்ப இல்ல"

"ஏன்?"

"சொல்றேன்! ஒரு ஆறு மாசம் அப்புறமா"

"எனக்கு சுஜி சொல்லிட்டா" அவள் முறைத்துக் கொண்டே சொல்ல, தங்கையை பற்றி தெரிந்தவன் அவள் சொல்லியிருக்க மாட்டாள் ஏன தெரிந்து,

"அப்படியா? என்ன சொன்னா?"

"என்ன பண்றனு சொல்லல ஆனா ஏதோ பண்றனு சொன்னா!"

"ம்ம் சரி தான். இப்படியே சிரிச்சிட்டே சந்தோசமா இரு. நான் அத்தைகிட்ட பேசி நாள் குறிக்குறேன். சரியா?"

"எப்படி இப்படி சாதாரணமா பேசுற? அப்ப தெரிஞ்சு தான் என்னை காலையில குழப்பி விட்டியா?" அவன் சந்தோஷமாக இருந்தாலும் சாதாரணமாக இருப்பது போல தான் அவளுக்கு தெரிந்தது.

"கண்டிப்பா ஒருநாள் நீ என்கிட்ட வருவனு தெரியும். அப்போ உன்ன கப்புனு புடிச்சிக்கனும்னு தெரியும். நீ தான் கொஞ்சம் லேட் பண்ணிட்ட" அவன் அதே சிரிப்புடன் சொல்ல, நீண்ட நேரமாய் வராதவர்களை தேடி உள்ளே வந்துவிட்டான் கார்த்திக்.

"அடப்பாவிங்களா!" அவ்வளவு சந்தோசம் கார்த்திக் முகத்தில் கொட்டிக் கிடக்க, ஹேமாவை சிவா அழகாய் தோளில் சாய்த்திருந்த அந்த தருணத்தை தன் மொபைலில் படம் பிடித்தவன் சிரிப்புடனே கூறினான்.

கார்த்திக் சத்தத்தில் இருவரும் எழுந்து கொள்ள ஹேமா அவனை முறைத்து நின்றாள்.

"இதுக்கு தான் அவ்வளவு அவசரமா காரை எடுக்க சொன்னியா?" கார்த்திக் கேட்க, சிவா ஒரு சிரிப்புடன் அவனை பார்க்கவும்

"அவன்கிட்ட என்ன பேச்சு! எனக்கு பசிக்குது வா சாப்பிடலாம்" என ஹேமா அமர, கார்த்திக்கும் வந்து அமர்ந்து கொண்டான் அதுவே முக்கியம் என்று.

அதன்பின் ஹேமாவே அவள் ஸ்டைலில் ரேகா அர்ஜுனிடம் திருமணத்திற்கு சம்மதம் சொல்ல, சுஜி ஏற்கனவே அர்ஜுனிற்கு காலையில் நடந்ததை சொல்லியிருந்ததால் ஹேமா தலையை பாசமாய் வருடியவன் சந்தோசத்தில் அணைத்து கொண்டான்.

ரேகா ராஜ் குமார் மனமும் இப்போது தான் நிறைந்திருந்தது.

"எல்லாம் எனக்கு பேரப்புள்ள வர போற நேரம் டா. இனிமேல் எல்லாம் நல்லதாவே நடக்கும்" என ரேகா சொல்லவும், அனைவரும் அதை ஆமோதித்தனர்.

அடுத்த இரு நாட்களில் கார்த்திக்கும் அமெரிக்கா கிளம்பி விட்டான் திருமணத்திற்கு வருவதாக கூறி.

அதன்பின் பலமுறை ஹேமா சிவாவிடமும் வீட்டில் அனைவரிடமும் கேட்டு விட்டாள் சிவா எதற்காக திருமணத்தை நேரம் கடத்துகிறான் என. ஆனால் பதில் தான் யாரும் சொல்லவில்லை.

சிவா, அர்ஜுன், சுஜி, ரேகா, கார்த்திக் என அனைவருக்கும் காரணம் தெரியும் ஆனால் யாரையும் சொல்ல அனுமதிக்கவில்லை சிவா.

சில நாட்களில் அதே கேள்வியை கேட்டு சலித்தவள் "அட போங்க டா! நீங்களா சொல்ற வர நான் இனி கேட்க மாட்டேன்" என்றுவிட, எப்போதும் போல அவள் பள்ளி செல்வதும் சிவா அவளை கவனித்து கொள்வதும் தொடர்ந்தது.

ஆறுமாதம் என்பது இழுத்து ஒரு வருடம் மேலாய் ஆகி அதன்பின் ஒருநாள் அவனே ரேகா முன் வந்து நின்றான் திருமணத்தை அவசரப்படுத்தி.

இந்த இடைப்பட்ட நாட்களில் தான் சுஜிக்கு அந்த அழகு தேவதை மது பிறக்க, மாமன் சீராய் வீட்டை நிறைத்து வைத்தான் சிவா.

இதோ திருமணம் நல்லபடியாய் நடந்து முடிய, மாலை நேரம் சிவா ஹேமாவை தனியாய் அழைத்து கொண்டு காரில் சென்றான்.

"எங்க போறோம்?"

"நீ கேட்ட இடத்துக்கு தான்"

"நானா?"

"ம்ம் ஆமா! நான் சொல்ற வர பேசாம அமைதியா வா பாக்கலாம்" என்றவனை முறைத்தவள் அதன்பின் அமைதியாகவே வந்தாள்.

அரைமணி நேர பயண முடிவில் அசதியில் அவன் தோளிலேயே அவள் தூங்கியிருக்க, மெதுவாகவே எழுப்பினான்.

"எங்க இருக்கோம் பாஸ்?" கண்களை கசக்கி கொண்டே அவள் கேட்க, அவன் கைகாட்டிய திசையில் அவள் பார்த்தாள்.

திருச்சியின் மையப்பகுதியில் உள்ள பெரிய புதிய கட்டிடம். அதன்முன் கார்த்திக், ராஜ் குமார், ரேகா, அர்ஜுன், சுஜி, மது அனைவரும் நிற்க, அவர்களுடன் புதிதாய் இருவர் ஆணும் பெண்ணுமாய்.

வாசலிலேயே புதிய அந்த ஒரு பெண் சிவா ஹேமாவிற்கு ஆரத்தி எடுக்க, அவளை அறிமுகப்படுத்தினான் கார்த்திக்.

"உதயா! இதுதான் நீ கேட்ட ஹேமா.. மிஸ்ஸஸ் சிவா. அண்ட் இது உதயா மிஸ்ஸஸ் கார்த்திக்" என்று இருவருக்கும் அறிமுகம் செய்ய,

"மிஸ்ஸஸ் கார்த்திக்கு இன்னும் ஒன் மன்ந்த் டைம் இருக்கு" என்று சுஜி கிண்டல் செய்யவும் தான் அனைவரும் ஏற்கனவே பழகி இருப்பது தெரிந்தது ஹேமாவிற்கு.

"சரி உள்ள போலாம் வாங்க" ரேகா அழைத்து செல்ல, உள்ளே இருந்த போர்டில் பெரிதாய் எழுதி இருந்தது "நாதன் குழந்தைகள் இல்லம்".

அதில் அவள் அப்படியே அங்கேயே நிற்க, அவளுடன் வந்தவனும் நின்றான்.

"சிவா, இது.. இது என்ன இடம்?"

"ஏன் உனக்கு படிக்க தெரிலயா?"

"நீ தானே சொன்ன என்ன குழந்த மாதிரி பாத்துக்குவேன்னு இப்ப ஏன் இங்க வந்துருக்க?" அழும் குரலிலேயே கேட்டாள்.

அவள் இன்னும் குழந்தை தத்து எடுக்க வந்ததாக நினைத்து இருக்க அப்போது தான் அவனுக்கும் அது புரிந்தது.

"ஏய் அவசரக்குடுக்கை! இந்த பேர பார்த்துமா உனக்கு புரியல?" என நாதன் என்ற பெயரை சுட்டிக் காட்டி அவன் கேட்க, அப்போதும் அவள் முகத்தில் தெளிவில்லை.

"ஏன் ஹேமா! பதட்டத்துல தாத்தா பேரையே மறந்துட்டியா?" அர்ஜுன் கேட்க, அப்போதும் புரியாமல் முழித்தவள்,

"பிட்டு பிட்டா சொல்லாம முழுசா சொல்லி தொலைங்க டா" என கத்தினாள்.

அவள் கத்தி முடிக்கவும் இருபது இருபத்தைந்து குழந்தைகள் மொத்தமாய் "அம்மா" என்று அழைத்து கொண்டே கையில் ரோஜாவுடன் ஓடி வந்தனர்.

தன்னை சுற்றி அனைத்து ரோஜாக்களும் ரோஜா மொட்டுகளுடன் நிற்க, அந்த இடமே அவ்வளவு அழகாய் மாறி போனது ஹேமாவிற்கு.

மனைவியின் முகத்தில் இருந்த சந்தோஷத்தை பார்த்து பார்த்து ரசித்து கொண்டிருந்தான் சிவா.

இதற்காக தானே இத்தனை மாதங்கள் காத்திருந்தது. சொந்தமாய் அமைத்தது. அர்ஜுன், கார்த்திக் என அனைவரும் உதவி செய்ய முன்வந்த போதும் ஹேமாவிற்காக அவனே தன் சொந்த சம்பாத்தியத்தில் உருவாக்கியது தான் இந்த குழந்தைகள் இல்லம்.

இந்த இல்லம் உருவாக இவன் மட்டுமே காரணம் என்றாலும் அனைத்திற்கும் உதவியாய் நின்றது அர்ஜுன் கார்த்திக் மற்றும் அவர்களின் நண்பர்கள் தான்.

உதயாவின் தந்தைக்கு இருந்த சமூக அக்கறையில் அவர் கையில் ஒப்படைத்துள்ளான் நிர்வாகத்தை.

இதோ வந்து ஒரு மணி நேரம் முடிந்துவிட்டது இன்னும் குழந்தைகளுடன் தான் இருக்கிறாள்.

"சந்தோசமா ஹேமா?" குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க, அதை பார்த்து ரசித்து கொண்டிருந்தவளிடம் கேட்டான் சிவா.

"ஏன் பிளாக்மேன்? எதுக்காக இவ்வளவும் பண்ணின?"

"நான் என்ன பண்ணினேன்?

"எனக்கு கார்த்திக்கும் உதயாவும் எல்லாம் சொல்லிட்டாங்க. நிஜமாவே எனக்காகவா?"

"இல்லையே! என் டீச்சரம்மாக்காக" அப்போதும் அவள் அவனையே பார்த்து கொண்டிருக்க,

"பின்னாடி ஸ்கூல் பிளான் போய்ட்டு இருக்கு ஹேமா. இன்னும் ஒரு வருஷத்துல அந்த வேலையும் முடிஞ்சிடும். அதுவரை கல்யாணத்த தள்ளி போட முடியாதே! இந்த இல்லம் கூட ஆறு மாசத்துல முடிக்க நினச்சேன். வயல் வேலை, எல்லாம் சேர்ந்து கொஞ்சம் இழுத்துடுச்சி. இனி நீ இவங்களோடவே இருக்கலாம். எப்படி?" அவ்வளவு சந்தோசமாய் அவன் சொல்ல, அவன் சொல்லாமல் விட்ட பணப்பிரச்சனையும் அவளுக்கு இப்போது தான் புரிந்தது.

"உனக்கு நான் அவ்வளவு புடிக்குமா?"

"ம்ம்ம்ம்.." என யோசித்தவன் "உன் காதலை விட கம்மி தான் டா" என்றான்.

சிவாவின் காதல் அவளுள் தூறலாய் விழ, இதோ அவளும் நனைந்து கொண்டே இருக்கிறாள்.

அந்த இல்லத் தோட்டத்தில் குழந்தைகள் விளையாட, அருகில் அமர்ந்திருந்த சிவாவின் மேல் சாய்ந்திருந்தாள் அவன் உயிரானவள்.

தன்னையே உலகமாய் நினைத்து வாழும் அவளுக்கு அவன் யாதுமாகி நின்றான்.

அவனின் மொத்தமும் கூட அவள் தான் என்றான அவர்களின் இந்த காதல் கடைசி வரை அன்பான அந்த இல்லத்தை மெருகேற்றி வளர்த்திடும் தானே!

சுபம்.
 
Top