• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
866
அத்தியாயம் – 8


தனிமையும், ஒதுக்கமும் அவள் மனதில் பல எண்ணங்களை கிளறிவிட நினைவுகளின் சுழலில் சிக்கி அப்படியே அமர்ந்த நிலையிலே உறங்கியவள் மாதேஷ் அவள் கைகளை தொட்டதும் ஏதோ மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு வர வெடுக்கென கைகளை உதறிய படி வேகமாக எழுந்தாள் .

அருகில் அவனை பார்த்ததும் முகத்தில் லேசான பதட்டத்தோடு அவள் முழிக்க

அதற்குள் “தூக்கம் வந்தா உள்ள வந்து படுக்க வேண்டியது தான .....இங்க எதுக்கு தூங்கிட்டு இருக்க” ... என முகத்தை சாதாரணமாக வைத்துகொண்டு சொன்னான் அவன்.

அவளோ “இல்லைங்க அது வந்து எல்லாம் துடைச்சு முடிச்சு அப்படியே” என அவள் பேசுவதற்கு தடுமாற

“ம்ம்ம் சரி சரி காபி போடு” என்றவன் “ஸ்ட்ராங்கா” என அழுத்தி சொல்லிவிட்டு செல்ல

“நீங்க சாயந்திரம் எப்பவும் கிரீன் டீ தான குடிப்பிங்க.....இப்போ என்ன காபி போட சொல்றிங்க” என்றவள் பின்னர் தான் உளறியதை புரிந்து நாக்கை கடித்தபடி முழிக்கவும்

அவன் நின்று திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தான்.

“இல்லைங்க அது வந்து.... நீங்க வந்து..... எப்பவும் நீங்க வந்து...” என அவள் இழுக்க

அவள் அருகில் வந்தவன் “நான் சாயந்திரம் கிரீன் டீ தான் குடிப்பேன்னு உனக்கு யார் சொன்னா?” என சந்தேக தொனியில் கேட்டான்.

“இல்லைங்க நீங்க அதான் குடிப்பிங்க” என அவள் தடுமாற

சில வினாடிகள் அவளையே உற்று நோக்கியவன் “சோ என்னை பத்தின எல்லா விபரமும் உனக்கு தெரியும்...” என ஒவ்வொரு வார்த்தையிலும் அழுத்தம் கொடுத்து கேட்க

அவனது பேச்சின் மாற்றம் அவளுக்கும் புரிந்துவிட அமைதியாக தலை குனிந்தவள் மெதுவாக மேலும் கீழும் தலை ஆட்ட

வேகமாக அவள் அருகில் வந்து அவள் தோள்களை இறுக்க பற்றியவன் கோபத்துடன் அவள் முகத்தை ஒரு கையில் நிமிர்த்தி “ஏண்டி என்னை பார்த்தா உனக்கு கேனையன் போல தெரியுதா?” என ஆக்ரோஷமாக கேட்டான்.

அவளோ பதறி “என்னங்க நீங்க இப்படி எல்லாம் பேசறீங்க ? அப்படி எல்லாம் ஏதும் இல்லைங்க..நான் அந்த அர்த்தத்தில சொல்லலை “ என வேகமாக அவள் மறுக்க ..

“ஓ இதில நீங்க வேற அர்த்தம் வச்சிருகீங்கலோ” என நக்கலாக கேட்டவன் கோபத்தில் அவன் முகத்தின் நரம்புகள் துடிக்க “ஏண்டி நான் பலமுறை வேண்டாம் வேண்டாம்னு உன்கிட்ட சொல்லியும் பிடிவாதமா இந்த கல்யாணத்தை நடத்தின... கல்யாணத்திற்கு முன்னாடியே என்னை வேவு பார்த்திருக்க.....இப்போ நான் என்ன ,சாப்பிடனும், குடிக்கணும், உடுத்தணும் எல்லாம் நீயே முடிவு பண்ற....என்னை என்னடி நினைச்சுகிட்டு இருக்க......நீ நினைச்சபடி எல்லாம் ஆட்டுவிக்கிற பொம்மைன்னு நினைச்சியா” என அவன் கர்ஜிக்க .

அவள் தன்னை பற்றிய விபரங்களை சொல்லும்போது ஏனோ அவனால் அதை ஏற்றுகொள்ள முடியவில்லை. ,ஏதோ தோற்று போன உணர்வு வர, அடக்கி வைத்திருந்த கோபம் எல்லாம் எரிமலையாய் பொங்கி எழுந்தது. அதன் வேகம் அவன் கை அழுத்தத்தில் வெளிப்பட......... அந்த வலியில் அவள் துடித்து போய் நிற்க ......அதற்கு மேலும் அவனது வார்த்தை அம்புகள் அவள் மனதை துளைக்கவும் பதில் சொல்ல முடியாமல் மலங்க மலங்க விழித்தபடி அவனையே பார்த்து கொண்டிருந்தாள் மலர்....

அவளது விழிகளின் இறைஞ்சல் அவனது வேகத்தை குறைக்க பேசிகொண்டிருந்தவன் பேச்சை நிறுத்தி கண்களை மூடி சிறிது நேரம் தன்னை ஆசுவாசபடுத்தி கொண்டான். பின்னர் கண்களை திறந்து அவளை முறைத்து பார்த்தவன் “ போ போய் காபி போட்டு எடுத்திட்டு வா” என அதிகாரமாக சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

தனது அறைக்குள் சென்றவன் அங்கிருந்த கண்ணாடி முன் நிற்க அதில் தெரிந்த உருவம் “நீ ரொம்ப தப்பு பண்ற மாதேஷ்......பாவம் அந்த பொண்ணு...அதை ஏன் இப்படி வார்த்தையால வதைக்கிற”......என கேள்வி கேட்க

அவனோ “அப்போ நீயும் நான் தான் தப்பு பண்றேன்னு சொல்றியா...அவ பண்ணதும் எதுவும் தப்பில்லையா... ” என தனது மனமே தன்னை குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாமல் அதனுடன் சண்டைக்கு நின்றான் . .

“எதை தப்புன்னு சொல்ற......அவதான் கல்யாணத்திற்கு முன்னாடியே உன்கிட்ட எல்லா விபரங்களையும் சொன்னா இல்லையா.......ஒரு பொண்ணா அவ அதுக்கு மேல என்ன பண்ண முடியும் மாதேஷ்.....நீ இப்போ பண்றது எல்லாம் அடாவடித்தனம்...இது நியாமே இல்லை” என மேலும் அவன் மனம் அவனுக்கு எதிராக பேசவும்

“ஆமாம் எல்லாரும் அவ பக்கமே பேசுங்க......அவ பயங்கற கில்லாடி...... நினைச்சத சாதிக்கிறவ...என்னை இத்தனை கேள்வி கேட்கிறியே ...நான் அவகிட்ட எத்தனை முறை இந்த கல்யாணம் வேண்டாம்னு கெஞ்சி இருப்பேன்.....அதை பத்தி நீ யோசிச்சியா....என்னோட கனவு. ஆசை எல்லாமே” என சொல்லும்போதே அவன் முகம் இயலாமையில் துடிக்க,உடல் குலுங்க அப்போது “இந்தாங்க காபி” என்றபடி அவன் முன் நின்றாள் மலர் .

அவளது பேச்சில் மனதின் ஓட்டங்கள் தடைபட காபிய குடித்துவிட்டு “கொஞ்சம் வேலை இருக்கு வந்திடறேன்” என்றபடி வேகமாக வீட்டில் இருந்து வெளியேறினான் மாதேஷ் .

இங்கு மலரின் வீட்டில் “எனக்கு என்னமோ புள்ளைய இப்படி தனியா அனுப்பினது சரியா படலை குணவதி. புது ஊரு,புது மனுஷங்க, பாவம் குழந்தை அவ...என்ன தெரியும் அவளுக்கு...என்னதான் மாப்பிள்ளை வேண்டாம்னு சொன்னாலும் நம்ம விட்டிருக்க கூடாது” என மகளை வழியணுப்பிவிட்டு வீட்டிற்கு வந்த தர்மலிங்கம் தனது மனைவியிடம் இப்படி புலம்பி கொண்டிருந்தார்.

அவரோ “யாரு உங்க புள்ளைக்கா ஒண்ணும் தெரியாது......இவன்தான் எனக்கு புருஷனா வேணும்னு முடிவு எடுக்க தெரிஞ்சவளுக்கு முன்னபின்ன தெரியாத ஊர் எல்லாம் ஒரு பெரிய விஷியமே இல்லை” என குரலில் சற்று கோபத்துடன் சொல்ல

“அவ சின்ன பொண்ணுடி......ஏதோ மனசில ஆசைப்பட்டு கேட்டா.....அதிலென்ன தப்பிருக்கு” என மகளுக்கு ஆதரவாக பேசவும்

“அதே தான் நானும் சொல்றேன்...அவ மட்டும் ஆசைபட்டா போதுமா......இது இரண்டு மனசு சம்பந்தப்பட்டது ....இரண்டுபேர் வாழ்க்கை சமபந்தபட்டது.............அந்த தம்பி நம்மகிட்ட வந்து எவ்வளவு பொறுமையா எடுத்து சொன்னாரு....ம்ம்ம் எங்க .”என சலித்து கொண்டவர் பின்னர் “ம்ம்ம்ம் நானும் தான் ஐஞ்சு வருஷமா அவகிட்ட போராடுனேன்...வேண்டாமடி......அவங்களுக்கு விருப்பம் இல்லாம இருக்கும்போது நம்ம வலிய போறது நல்லா இல்லைனு ...எங்க அவ கேட்டா.....நான் புடிச்ச முயலுக்கு மூணு காலுனுதான் நின்னுகிட்டு இருந்தா” என சொல்லும்போதே ஆத்திரமும் அழுகையும் வர

அவரோ “குணவதி என்ன இது அதான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சு தான “என்றபடி அவர் அருகில் சென்று அமர்ந்தவர் “நீ கவலைபடாத...நம்ம பொண்ணு நல்லா இருப்பா” என மனைவிக்கு ஆறுதல் சொன்னார்.

“இல்லைங்க என்னதான் அவ நம்ம சொல்பேச்சை கேட்கலைனாலும் அவ மனசுக்கு பிடிச்சவனை கல்யாணம் பண்ணிகிட்டது எனக்கும் சந்தோசம் தான்......ஆனா கல்யாணத்திற்கு பிறகு அவ சந்தோஷமா இருக்கனும் தான” என மகள் தன் வீட்டில் கண்கலங்கி நின்றதை மனதில் வைத்து சொன்னவர் மேலும் “ மாப்பிள்ளை எப்படி ....” என சொல்லி நிறுத்தியவர் தன் கணவரின் முகத்தை நிமிர்ந்து பார்க்க அந்த கண்களில் தெரிந்த அந்த பயம் அந்த தாயின் உள்ளத்தை பிரதிபலித்தது.

உடனே தர்மலிங்கம் “நீ கவலைபடாத குணவதி......அவரும் தங்கமான பையன் தான்...நம்ம கண்ணு முன்னாடி வளர்ந்த பையன் .... நம்ம மலர நல்லா பார்த்துக்குவான்....அவரும் ஒத்துகிட்ட பின்னாடிதான இந்த கல்யாணத்தை நடத்தினோம்.... நீ எதுக்கும் பயப்படாத “. என மனைவியை சமாதான படுத்தினார்..

“என்னமோ பெத்த மனசு பதறதுங்க.... ஒருத்தரோட மனசில என்ன இருக்குதுன்னு அவங்களா சொன்னாலே தவிர அதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. என் மகளே இப்படி இருப்பான்னு எனக்கே இப்பதான் தெரியும்...அப்போ அந்த பையனும் எப்படியோ....ஐயோ கடவுளே எங்களை ஏன் இப்படி தவிக்க விடற....என் பொண்ணு நல்லா இருக்கணும்....அவளுக்கு எந்த குறையும் வரகூடாது”.....எனமனதின் பயம் வார்த்தையாக வெளிவர

அதுவரை பொறுமையாக பேசிகொண்டிருந்தவர் அவரது பேச்சில் கோபம் வர “ ஏய் நான் சொல்றேன்ல...இப்போ எதுக்கு இப்படி ஒப்பாறி வச்சுகிட்டு இருக்க...என் பொண்ணு என் வீட்டு குலவிளக்குடி.....என் வீட்டு மகாராணி ....எங்க போனாலும் அவ ராணி மாதிரித்தான் இருப்பா....நீ புலம்பாம போய் ஆகவேண்டிய வேலைய பாரு” என ஒரு அதட்டல் போட்டு அனுப்பியவர் .....”டேய் தம்பி இன்னைக்கு கடை திறந்தாச்சா” என்றபடி தானும் அங்கிருந்து நகர்ந்தார். கடையை நோக்கி கால்கள் நடக்க மனமோ சொல்ல முடியாத பாரத்தில் நிறைந்திருந்தது.

இந்த பெண்மனம் உணர்ச்சிகளை வார்த்தைகளிலோ ,அழுகையாலோ கொட்டி தீர்த்துவிடும்.ஆனால் ஆண்மனம் அனைத்தையும் மனதிற்குள்ளே மூடி மறைக்கும். அதுவும் ஒரு குடும்பத்தின் தலைவன் என்ற பொறுப்பில் இருப்பவர் தவறியும் தன் ஆற்றாமையை வெளியே காட்டிவிடமுடியாது.அது அந்த குடும்பத்தையே நிலைகுலைய செய்துவிடும். இப்போது தர்மலிங்கத்தின் நிலையும் அதுதான். குணவதி சொல்லிவிட்டார்...இவரால் சொல்ல முடிவில்லை.பாசத்திற்கும் நிதர்சனத்திற்கும் இடையே அல்லாடும் நிலை தன் எதிரிக்கும் வரகூடாது என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு நடந்தார்.

மாலையில் வீட்டில் இருந்து கிளம்பிய மாதேஷ் இரவு உணவிற்கே வீட்டிற்கு வந்தான். ஊரில் இருந்து கொண்டு வந்த பொருட்களை எல்லாம் பெட்டியில் இருந்து எடுத்து வைத்து கொண்டிருந்தவள் அவனை பார்த்ததும் வேகமாக எழுந்து “உட்காருங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்றபடி சமையல் அறைக்குள் சென்றாள். உணவு பாத்திரங்களை அவன் முன் வைத்தவள் அருகில் அமர்ந்து பரிமாறினாள்.

இரண்டு வாய் உணவு உள்ளே சென்ற பிறகு அவளை பார்த்தவன்” நீ சாப்பிடலையா” என கேட்க

அவளோ பதில் ஏதும் பேசாமல் தரையை பார்த்தவாறே அமர்ந்து இருந்தாள்.

“உன்னை தான் கேட்கிறேன்...நீயம் சாப்பிடு” என அவன் சொல்ல

அவள் அதற்கும் பதில் பேசவில்லை. அவன் சாப்பிடுவதற்கு மேலும் சாதம் வைக்க

“ஓ உனக்கு கோபம் ..... இனி என்கிட்ட நீ பேசமாட்ட.... இப்ப நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும்.....அப்பத்தான் நீ சாப்பிடுவ அப்படித்தான......” என ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி கேட்கவும்

பதில் ஏதும் சொல்லாமல் நிமர்ந்து அவன் முகத்தை பார்த்தவள் அதில் எந்த விதமான உணர்ச்சியும் இல்லாமல் நிர்மலமாக இருக்க அதை பார்த்ததும் பேசிகொண்டிருந்தவன் பேச்சை நிறுத்திவிட்டு “எனக்கும் சாப்பாடு வேண்டாம்” என வேகமாக எழுந்தான்.

உடனே அவள் வேகமாக தனக்கும் சாப்பாடு எடுத்து போட்டு கொள்ள பின்பே அவன் சாப்பிட அமர்ந்தான்.அப்போதும் அவள் பேசவில்லை.

உணவு வாய்க்குள் செல்ல “மயிலே மயிலேனா இறகு போடாது...இப்படி பிடுங்கினா தான் உண்டு என நினைத்தவன் ..... சரியான அழுத்தக்காரி.....இவ்ளோ தூரம் இறங்கி வந்து பேசறேன் ...வாய் திறக்கிறாலான்னு பாரு.....திமிரு..உடம்பு முழுக்க திமிரு” என மனதிற்குள் பொருமிகொண்டி இருந்தான்..

உணவு வேலை முடிந்ததும் எல்லாம் சுத்தம் செய்துவிட்டு தங்களது அறைக்கு வந்தவள் அங்கு நல்ல உறக்கத்தில் இருக்கும் மாதேஷை பார்த்ததும் அதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரம் எல்லாம் கண்ணீராக வெளிவர தொடங்கியது. அவளது அழுகை அவளுக்கே புதிது தான். ஏனெனில் திருமணத்திற்கு முன்பு மலர் அழுதது கிடையாது. கோபம் வந்தால் அவர்களாக வந்து மன்னிப்பு கேட்கும்வரை பேசமாட்டாள். மற்றபடி அழுது ஆர்ப்பாட்டம் எதுவும் செய்யமாட்டாள். ஆனால் இப்போது அவனது பேச்சுகள் இரும்பாக இருந்த மனதை, வாட்டும் தணலாய் வார்த்தைகள் மாறி, அந்த இரும்பையும் உருக்கி விட அதில் உருகுலைந்து கண்ணீராய் வேதனைகள் வெளிவந்தன.

அவன் அருகில் வந்து அவன் முகத்தின் அருகே கீழே அமர்ந்தவள் “ “தூங்கிறத பாரு......எப்படி நீங்க என்னை அப்படி சொல்லலாம்.......நான் உங்களை பொம்மை மாதிரி ஆட்டுவிக்கறேன்னு .....நீங்க தானே இந்த ஐஞ்சு வருஷமா என்னை பொம்மை போல ஆட்டுவிக்கிறீங்க.....நீங்க நடந்தா நடந்து... ,நீங்க சிரிச்சா சிரிச்சு..... ,நீங்க அழுதா அழுது..... இப்படி எனக்குள்ள எல்லாமும் நீங்க தான இருக்கீங்க....ஏன் அதை புரிஞ்சுக்க மாட்டேன்கறீங்க” என அவனுடன் மனதிற்குள் அவனிடம் சண்டை போட்டவள் அவனை பார்த்தது,ரசித்தது,மனதிற்குள் கல்வெட்டாய் அவன் உருவம் பதிந்தது என எல்லாம் நியாபகம் வர அவளை அறியாமல் அவள் முகத்தில் ஒரு புன்முறுவல் தோன்றியது.

சிறுவயதில் பாஸ்கர் ,மீனா, மலர் மூவரும் ஒன்றாகதான் இருப்பார்கள். பாஸ்கர் நன்றாக படிப்பதால் மீனாவிற்கும் மலரும் அவன் தான் பாடம் சொல்லி கொடுப்பான். அப்போது மோகனும் அங்கு வந்து அவர்களோடு சேர்ந்து கொள்வான்.மலருக்கு படிப்பு சுமாராகத்தான் வரும்....மீனாவும் அப்படிதான்...ஆனால் நல்ல மதிப்பெண் எடுத்துவிடுவாள் மீனா.

“நீ மட்டும் எப்படிக்கா நல்ல மார்க் வாங்கற...எனக்கு புரியவே மாட்டேன்குது...எல்லாரும் என்னை திட்றாங்க” என மலர் ஒரு நாள் அவளிடம் புலம்ப

“அடிபோடி மாதேஷ் இல்லைனா நான் எங்க இவ்ளோ மார்க் வாங்கிறது.....ஏதோ அவன் புண்ணியத்துல நான் குப்பை கொட்டிகிட்டு இருக்கேன்” என பதில் சொல்லிவிட்டு சென்றாள் மீனா. பத்தாம் வகுப்பில் மாநிலத்தில் மாதேஷ் முதல் மாணவனாக வர அந்த பள்ளியும் ஊரும் அவனை கொண்டாடியது. அப்போது அவள் ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள். அதற்கு ஏற்றாய் போல் மோகனும் வீட்டிற்கு வரும்போது எல்லாம் என் தம்பி நன்றாக படிப்பான், அந்த போடடியில ஜெயிச்சான்.இங்க நடந்த போட்டியில ஜெயிச்சான்...இது அவன் வரைந்தது... என காட்டி மீனாவிடமும் பாஸ்கரிடமும் பெருமை பேசிகொண்டிருப்பான். இதை எல்லாம் கேட்க கேட்க மாதேஷை பற்றி ஒரு நல்ல அபிப்பிராயம் அவள் மனதில் பதிந்தது.

தனக்கு இல்லாத ஒரு திறமை இன்னொருவருக்கு இருக்கும்போது அந்த நபர் அவருக்கு ஒரு ஹீரோ போல தான் தெரிவார். அதுபோல் தான் அவளுக்கு மாதேஷ் தெரிந்தான்.ஒருமுறை விளையாடிக் கொண்டிருக்கும்போது மீனா அவளிடம் “உனக்கு பாஸ்கர் அண்ணாவ பிடிக்குமா,மோகன் அண்ணாவ பிடிக்குமா,இல்லை என்னை பிடிக்குமா “என கேட்க அவளோ யோசிக்காமல் “எனக்கு மாதேஷ் அண்ணாவை தான் பிடிக்கும்” என சொன்னாள். ஆம் அந்த பருவத்தில் மாதேஷை அண்ணா என்றுதான் அழைப்பாள் மலர்.

அதுபோல மாதேஷ் பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கவும் அவர்களது தொழிலில் ஒரு பெரிய சரிவு ஏற்பட்டது. அந்த நிலையில் மாதேஷின் தந்தைக்கும் உடல்நிலை சரியில்லாமல் போக அந்த குடும்பமே நிலைகுலைந்து போனது. அப்போது தான் மோகன் கல்லூரி இறுதி ஆண்டு படித்து கொண்டிருந்தான்.

வீட்டில் உணவு வேலையின் போது தர்மலிங்கம் இதை பற்றி குணவதியிடம் சொல்லி கொண்டிருந்தார். பாவம் குணவதி அந்த சின்ன பையனுக்கு படிக்கணும்னு ரொம்ப ஆசை..... குடும்ப சூழ்நிலை அதுக்கு ஒத்துவரலை. நான் கூட நேத்து கடைக்கு வந்தப்ப கேட்டேன். ஏம்பா வீட்ல இருந்தே படிக்கலாம்னு சொல்றாங்க...நீ அப்படி படிக்கலாமல்னு....ஆனா அந்த பையன் அதுக்கும் பணம் கட்டனும் சார்..... முதல்ல என் அப்பா குணமாகனும் ,அக்கா கல்யாணம் முடியனும் அதுக்கப்றம் தான் என்னை பத்தி யோசிக்கணும் அப்டின்னு சொல்லுச்சு.......இந்த சின்ன வயசிலே எவ்ளோ பொறுப்பா பேசறான் பையன்” என சிலாகித்து சொல்லிகொண்டிருந்தார்..இதை எல்லாம் அவர்களுடன் சாப்பிட்டுகொண்டே கோட்டுக் கொண்டிருந்தாள் மலர்.

அதற்கு பின் நாட்கள் செல்ல மலர் பெரியவளாக மாதேஷும் படிப்பதற்கு வெளியூர் சென்றுவிட இருவரும் பார்ப்பதே அரிதாக இருந்தது. அந்த நினைவுகளும் மறந்து போயின.

“ஏண்டி அந்த கம்ப்யுட்டர் படிப்பே படிக்கனுமா ....வேற படிப்பு எல்லாம் எடுத்து படிச்சா வேலை தர மாட்டாங்களா” என குணவதி கேட்கவும்

“இங்க பாரும்மா ....நான் கம்ப்யூட்டர் தான் எடுத்து படிப்பேன்.....அது படிச்சாதான் பெரிய பெரிய கம்பெனிக்கு வேலைக்கு போகமுடியும்....... டிவில பார்க்கிற தான......நீ அப்பாகிட்ட சொல்லி என்னை அதில சேர்த்தி விட சொல்லு” என பதில் சொன்னாள் ..

அப்போது அங்கு வந்த பாஸ்கர் “ஆனா நீ எடுத்திருக்க மார்க்குக்கு அந்த பாடம் கொடுக்க மாட்டாங்க மலரு” என்றான்.

உடனே அவனிடம் “இங்க பாருண்ணா நீங்களும் அப்பாவும் என்ன செய்வீங்கன்னு தெரியாது நான் கம்ப்யுட்டர் தான் எடுத்து படிப்பேன்.....என்னை அதில சேர்த்துவிடுங்க” என அவள் முடிவில் உறுதியாக இருக்க வேறுவழியில்லாமல் தர்மலிங்கம் சிபாரிசு மற்றும் பணம் கொடுத்து பதினொன்றாம் வகுப்பில் அவளை கம்ப்யூட்டர் பாடத்தில் சேர்த்துவிட்டார்.

அந்த பள்ளிக்கு திருச்செங்கோடு செல்ல வேண்டி இருந்ததால் பள்ளி பேருந்தில் செல்ல அங்குதான் தீபா அவளுக்கு தோழியானாள். அவள் மூலம் மீண்டும் மாதேஷ் அவள் மனதிற்குள் நுழைந்தான். அதை இப்போதும் நினைக்கும்போதும் அவள் மனதில் ஒரு உற்சாக ஊற்று பொங்கி வர அவனை முதன் முதலாக பார்த்த நினைவுகள் அவள் மனக்கண் முன் தோன்ற அந்த உருவம் அவள் மனதில் வந்துபோனது.

அந்த நினைவுகளுடன் அவள் அப்படியே உறங்கிபோக பாதி இரவில் கண்விழித்த மாதேஷ் அவள் உட்கார்ந்தபடியே உறங்கி கொண்டிருப்பதை பார்த்தவன் “இவளை திருத்தவே முடியாது” என முனகிகொன்டே தலையணையை எடுத்து போட்டு அவளை அதில் படுக்க வைத்தான்.

மறுநாள் காலை எப்போதும் போல விடிய கண் விழித்தவன் அருகில் மலரை பார்க்க அவள் நன்றாக உறங்கி கொண்டிருந்தாள். பின்னர் அவன் எழுந்து அவனது வேலைகளை முடித்துவிட்டு செய்திதாளுடன் அமர அப்போதுதான் வேகமாக எழுந்து வந்தவள் அவன் முன்பு தலை குனிந்தபடி நின்றாள்.

எதிரில் அமைதியாக நின்றவளை சில வினாடிகள் பார்த்து கொண்டிருந்தவன் அவள் வாய் திறக்க போவதில்லை என தெரிய “பால் வாங்கி சமையல் அறையில வச்சிருக்கேன்..டீ போடு” என சொல்லவும் அவள் தலை ஆட்டியபடி உள்ளே சென்றாள்.

சிறிது நேரத்தில் டீ கொண்டுவந்தவள் அவன் முன் அமைதியாக நிற்க மாதேஷ் கடுப்பாகி போனான். “இப்போ எதுக்குடி காலையிலே இப்படி முகத்தை தூக்கி வச்சிருக்க..... இப்போ என்ன நான் பேசினது எல்லாம் தப்பு ...உங்கிட்ட மன்னிப்பு கேட்கணும் அவ்ளோதான...சரிடி மன்னிச்சுக்கோ...முதல்ல அந்த முகத்தை சிரிச்ச மாதிரி வை..... என்கூட இருக்கிறவங்க எப்போதும் கலகலன்னு பேசி சிரிச்சுகிட்டு இருந்தா தான் எனக்கு பிடிக்கும் ...... அதனால தயவு செய்து உன்னோட மௌனவிரதத்தை முடிச்சுக்கோ” என சொல்லவும் அதுவரை இறுகி இருந்த அவள் முகம் சற்று விரிய இதழில் லேசான புன்னகையும் உடன் வந்து அமர்ந்தது.

இதுதான் இவர்களின் குணம். இருவரும் இரு திசைகள் போல......மாதேஷிற்கு கோபமும் அதிகம்... வார்த்தைகளால் வதைத்துவிடுவான்......அதே நேரத்தில் அது சீக்கிரம் தணிந்தும் விடும். ஆனால் மலருக்கோ கோபம் வந்துவிட்டால் வார்த்தைகள் இருக்காது.மௌனம் என்ற பெரும் திரையை தன்னுள் போட்டு கொள்வாள். தானாக சென்று பேசமாட்டாள். அவர்கள் மன்னிப்பு கேட்டபின்பே தான் பேசுவாள். .

திருமணம் முடிந்து அலுவலகம் செல்லும் முதல் நாள் . தயாராகி காலை உணவிற்கு வந்த அமர்ந்தவன் முன் உப்புமாவை எடுத்து வைத்தாள் மலர்.

அதை பார்த்ததும் அதிர்ச்சியுடன் “என்னடி இது...உப்புமாவை போட்ற”......என கேட்க

“இல்லைங்க மாவு அரைக்க இன்னும் கிரைண்டர் ஏதும் செட் பண்ணலை...அதான்” என அவள் இழுக்கவும்

அவளை முறைத்தவன் “எனக்கு உப்புமா பிடிக்காதுனு ஏன் உனக்கு தெரியாதா கோபமாக கேட்டவன் ....எப்படி தெரியாம இருக்கும்...நீ தான் என்னை பத்தி எனக்கே தெரியாத விஷயத்தை தெரிஞ்சு வச்சிருக்க ஆள் ஆச்சே......... உன்னை நானறிவேன் ...என்னையன்றி யார் அறிவார் ”அப்படின்னு ஒரு லுக்கு விடுவ.......தெரிஞ்சும் இத ஏன் செஞ்ச” என நக்கலாக கேட்க

“ஐயோ அப்படி எல்லாம் இல்லைங்க.....வேற என்ன செய்யறதுன்னு தெரியலை அதான்” என அவள் சொல்லிகொண்டிருகும்போதே

“ஒரு மனுஷன் வேலைக்கு போகும்போது நல்ல சாப்பாடு கூட சாப்பிட முடியலை...என்ன வீடு இது ச்சே” என எரிச்சலுடன் கையை உதறியபடி எழுந்து வெளியே வந்தான்.

அப்போது “என்ன மாதேஷ் ......புது மாப்பிள்ளை......எப்படி இருக்கு சம்சார வாழ்க்கை” என்றபடி வீட்டின் முன் நின்றார் ஒருவர்.

“அட வாங்க வாங்க அண்ணாச்சி ..உள்ளே வாங்க....உட்காருங்க” என்றான் மாதேஷ்..

“பரவாயில்லை மாதேஷ் நீங்க வீட்ல இல்லாதப்ப இந்த கடிதம் வந்தது ......அதான் கொடுக்கலாம்னு வந்தேன்” என்றார்.

“ரொம்ப தேங்க்ஸ் அண்ணாச்சி” என அவன் சொல்ல

“பக்கத்து வீட்ல இருந்துகிட்டு இது கூட செயலைன்னா எப்படி தம்பி என்றவர் ..... அப்புறம் உங்க மனைவிக்கு வீடு பிடிச்சிருக்கா...என்ன சொல்றாங்க” என அவர் குசலம் விசாரிக்க

“ஹிஹிஹி அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை சார்...அவளுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்றான் அவன்..”

பின்னர் சில வார்த்தைகள் பேசிவிட்டு “சரி நீங்க ஆபிஸ் கிளம்புங்க என சொல்லிவிட்டு “சாப்பிட்டாச்சா” என கேட்டார்.

“ம்மா அது” என அவன் சொல்ல வருமுன்

அதற்குள் அவர் “ சமைக்க தெரியுமா உங்க மனைவிக்கு” எனசந்தேகமாக பார்த்தபடி இடைகேள்வி சொருக

“ம்ம்ம் அதெல்லாம் சூப்பரா சமைப்பா அண்ணாச்சி.... வயிறு புல்லா இருக்கு” என வேகமாக சொன்னான் அவன்.

“ம்ம்ம் விருந்து செம பலம் போல.....என்ஜாய் மாதேஷ்” என அவர் கேலி செய்யவும்

அவனோ ஹிஹிஹி என மீண்டும் வழிய

அப்போது “ஏங்க ஒரு வாய் கூட சாப்பிடாம போறீங்க.....ப்ரெட் வேணா போட்டு தரட்டுமா” என சமையல் அறையில் இருந்து குரல் வந்தது. .

அதை கேட்டதும் மாதேஷ் முகம் அஷ்டகோனலாக மாற

அண்ணாச்சியோ மேலும் கீழும் அவனை ஒரு மாதிரி பார்க்க

“ஹிஹிஹி அது வந்து உப்புமா அதான்” என அவன் வழியவும்

அதற்குள் சமையல் அறையில் இருந்து வெளி வந்தவள் “ ஏங்க ஏதாவது சாப்பிட்டு போங்க...வெறும் வயிற்றோடு போக வேணாம்...வேற ஏதாவது செஞ்சு தரட்டுமா ” என மீண்டும் கேட்டாள் ..

அவனோ திரும்பி அவளை முறைத்தவன் “நீ ஒரு ஆணியும் பிடுங்க வேணாம் “ எரிச்சலுடன் சொல்ல

அண்ணாச்சியே அவனை பார்த்து நக்கலாக ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு திரும்பி சென்றார்.,

காலை நேரத்தில் சாப்பிடாத கோபம் , மேலும் அண்ணாச்சியிடம் பல்பு வாங்கிய எரிச்சால் என இவை அனைத்தும் அருகில் நின்ற மனைவியிடம் பாய அவளை எரித்துவிடும் பார்வை பார்த்துவிட்டு விருட்டென கிளம்பி சென்றுவிட்டான்.
 
Top