• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
869
அத்தியாயம் – 9

அலுவலகத்திற்கு வந்தவன் அங்கு நண்பர்கள் அனைவரும் வாழ்த்து சொல்ல சிரித்தபடியே அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு தனது இருக்கையில் வந்தமர்ந்தான். அப்போது அவனது அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வர அதை படித்தவன் அதற்கு பதில் அனுப்பிவிட்டு தனது வேலையை தொடர்ந்தான்.

சிறிதுநேர இடைவெளிக்கு பின் மீண்டும் மீண்டும் குறுஞ்செய்தி வரவும் “இவனோட தொல்லையா போச்சு “ என முனகியபடி எழுந்து கேண்டீன் நோக்கி நடந்தான்.

“புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா ...அந்த மணமகள் தான் வந்த நேரமடா” என ஒரு குரல் கேட்கவும் அந்த பக்கம் பார்த்தவன் அங்கு கோபி கேண்டீன் மேசையில் தாளமிட்டபடி பாடிகொண்டிருக்க அவனை சுற்றி இருந்த இரு நண்பர்களும் அதற்கு ஒத்து ஊதிகொண்டிருந்தனர்.

“கடவுளே இவனோட அலப்பறை தாங்க முடியலையே” என முணுமுணுத்தபடி அவர்களை நோக்கி சென்றான்.

அவன் அருகில் வந்ததும் “என்ன மச்சான் உன்னோட கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா.....வந்த உடனே பைல் எல்லாம் கையெழுத்து போட உட்கார்ந்திட்ட.... ......இங்க உனக்காக காலையில இருந்து நாங்க காத்துகிட்டு இருக்கோம்” நீ முதல்ல எங்களை கவனி மாமு” என கேலி பேசவும்

“டேய் ஒருவாரத்து வேலை எல்லாம் அப்படியே பெண்டிங் இருக்குடா ......ஆமா நீ வேலை பார்க்காம இங்க என்ன பண்ணிகிட்டு இருக்க?”.....என அவனையும் சேர்த்து விரட்டினான்.

“டேய் அடங்கு அடங்கு.....நீ சின்சியர் சிகாமனின்னு ஒத்துக்கிறோம்......அதுக்காக எங்களுக்கு நீ பாடம் எடுக்க வேண்டாம்......அப்புறம் மச்சான் கல்யாணம், பஸ்ட் நைட் எல்லாம் முடிச்சு ரொம்ப பிரெஷா இருப்ப போல” என கிண்டல் பண்ண

அதற்குள் அருகில் இருந்த மற்றொரு நண்பன் “ அவன் முகத்தை பார்த்தாலே தெரியலையா அப்படியே பளீருன்னு பல்பு எரியுது பாரு” என சொல்ல

“அட ஹஹஹஹா ஆமாம் மச்சான் அந்த வெளிச்சத்துல நம்ம கண் எல்லாம் கூசுதா” என கோபி கண்களை தேய்க்க

“பின்ன எனக்கு வர மனைவி இப்படிதான் இருக்கணும்னு ஸ்கெட்ச் போட்டு சொன்னவனாச்சே......அவன் ரசனையை கேட்டு எனக்கு மயக்கம் வந்திடுச்சு.....ஆனாலும் மச்சான் நீ நினைச்ச மாதிரி உனக்கு மனைவி அமஞ்சுதுல எங்களுக்கு சந்தோசம் தாண்டா...........என்ன எங்கனால தான் வர முடியலை..... ...அந்த நேரம்னு பார்த்து ஆடிட்டிங் வந்திடுச்சு மச்சான்.....,அதான் கோபிய மட்டும் அனுப்பி வச்சோம்.........சாரி மச்சான்” என அவர்கள் தாங்கள் ஏன் திருமணத்திற்கு வரவிலை என்ற காரணத்தை சொன்னார்கள்.

அதுவரை அவர்களுடன் சிரித்து பேசிகொண்டிருந்தவன் அவர்கள் அந்த வார்த்தையை சொன்னதும் அவன் முகம் மாறிப்போனது.

ஆனால் மற்றவர்களோ அதை கவனிக்காமல் பேசிகொண்டிருக்க இரு கண்கள் அவற்றை கவனித்துவிட்டது.

“சரி சரி போதும் விடுங்கடா ..... நம்ம எதுக்கு இவனை இங்க வர சொன்னோமுன்னு முதல்ல சொல்லுங்க” என பேச்சை மாற்றிவிட

“அட ஆமாம்பா ...இங்க பாரு மாதேஷ் நாங்க உன் கல்யாண சாப்பாடு சாப்பிடலை.....அதனால இன்னிக்கு மதியும் எங்களுக்கு ட்ரீட் தரனும்.....எந்த ஹோட்டல் போலாம்” என்றனர்.

அதை கேட்டதும் “ டேய் அதான் கல்யாணம் உறுதி ஆன உடனே ட்ரீட் கொடுத்தேன்லடா...மறுபடியுமா ...” என அவன் அதிர

“அது அப்போ ...எங்களுக்கு இப்போ வேணும்.....உங்கிட்ட எல்லாம் இந்த மாதிரி நேரத்தில வாங்கினாதான் உண்டு...இல்லைனா பத்துபைசா செலவு பண்ண மாட்டியே நீ...சரியான கஞ்சூஸ் ஆச்சே “ என அவர்கள் கிண்டல் பண்ணவும்

“டேய் இதெல்லாம் நியாயமே இல்லைடா” என சொல்லவும்

“சரி விடு செலவு அதிகம்னு தோனுச்சுனா உங்க வீட்ல கூப்பிட்டு விருந்து கொடு” என அவர்கள் முடிப்பதற்குள்

“நம்ம மதியம் ஹோட்டல் போலாம்டா” என அவன் வேகமாக சொன்னான்.

“ஆஹா மச்சான் ரொம்ப தெளிவாகிட்டடா..... குடும்பஸ்தனுக்கான எல்லாம் தகுதியும் உனக்கு வந்திடுச்சு” என அவர்கள் கேலி செய்ய

ஹிஹிஹி என வழிந்தவன் ஒரு வழியாக அவர்களை பேசி அனுப்பிவிட்டு ஆயாசமாக அப்படியே அருகில் இருக்கும் பெஞ்சில் அமர்ந்தான் மாதேஷ்.

“ அப்பவே உனக்கு வர மனைவிய பத்தி ஒரு ஸ்கெட்ச் போட்டு வச்சவனாச்சே நீ “என நண்பர்களின் வார்த்தை காதில் மீண்டும் மீண்டும் ஒலிக்க அவனது கனவுகள் எல்லாம் காற்றோடு கலந்து போனதை எப்படி அவர்களிடம் சொல்லுவான் அவன்.

கண்களை மூடி அமர்ந்திருக்க “ அப்போது இந்த டீய சாப்பிடு மச்சான்” என ஒரு குரல் அருகில் கேட்டது.

விழித்து பார்த்தவன் எதிரில் கோபி அமர்ந்திருந்தான். அவன் ஏதும் பேசாமல் அப்படியே அமர்ந்திருக்க

“டேய் மாதேஷ் என்னாச்சுடா....எல்லாம் பிரச்சனையும் முடிஞ்சு நீ சரியாகிருப்பேன்னு நினைச்சேன்....ஆனா உன் முகத்தை பார்த்தா அப்படி தெரியலையே” .....என்றான்.

மாதேஷோ நீண்ட பெருமூச்சு விட்டவன் பதில் ஏதும்சொல்லாமல் தன் முன்னே இருக்கும் டீயை எடுத்து குடிக்க ஆரம்பித்தான்.

கோபியும் அவனாக பேசும் வரை பேசகூடாது என அமைதியாக அவன் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான்.

கோபியை பார்த்தவன் “நான் நினைச்சும் பார்க்கலை கோபி......இப்படி எல்லாம் நடக்கும்ன்னு” என விரக்தியாக சொல்ல

“ஏண்டா.......என்னாச்சு மச்சான்......மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சா” என பதட்டத்துடன் கேட்டான் அவன்.

ஏனனெனில் திருமணத்திற்கு முன்பு மாதேஷும் கோபியும் ஒரே அறையில் தான் தங்கி இருந்தனர்.ஒரே வங்கியில் தான் பணிபுரிந்தனர். ஆனால் அவன் வேறு டிப்பார்ட்மென்ட்....மலர், மாதேஷ் விஷயங்கள் அனைத்தும் அவன் அறிவான். முதலில் அதை சாதாரணமாக எடுத்து கொண்டவன் ஒரு கட்டத்தில் மலருக்காக மாதேஷிடம் பரிந்து பேசும் அளவிற்கு வந்து விட்டான் கோபி.

மாதேஷ் சேலத்திற்கு மாற்றலாகி வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. இந்த மூன்று வருடங்களில் திருமணத்திற்கு முன்பு வரை காலை எட்டு மணியில் இருந்து இரவு பத்து மணி வரை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மலரிடம் இருந்து அவனுக்கு குருஞ்செய்தி வந்து கொண்டே இருக்கும். இரவு நேரம் கட்டாயம் அலைபேசி அழைப்பு இருக்கும். முதலில் அதை வைத்து கிண்டல் செய்தபடி இருப்பான் கோபி.

அதன் பின்னர் மாதேஷ் மலரை பற்றி அவனிடம் சொல்ல அதன் பின்பு சூழ்நிலையின் தன்மையை புரிந்து மாதேஷ் சார்பாக மலரிடமும் இரண்டு முறை பேசி இருக்கிறான் . ஆனால் மலரோ அவன் மேல் தான் வைத்திருக்கும் நேசத்தை எடுத்து சொல்லவும் பிரமித்து போய்விட்டான் அவன். ஒரு பெண் இந்த அளவிற்கு ஒருவர் மேல் நேசம் வைக்க முடியுமா என அதிர்ந்து போய் நின்றான். ஆனாலும் காதல் என்பது தானாக வர வேண்டும்.....ஒருத்தர் சொல்லி வரகூடாது என அறிந்திருந்ததால் அவன் மாதேஷிடம் அதை பற்றி பேசவில்லை. அவனின் விருப்பத்திற்கே விட்டுவிட்டான்.

மேலும் மாதேஷின் சில நடவடிக்கைகள் அவனுக்கு புரியாத புதிராகவே இருந்தது. இதுவரை மலரை பற்றி அவன் கடுமையான வார்த்தைகள் பேசியது இல்லை.அவளது அலைபேசி அழைப்பு எப்போது வந்தாலும் எடுத்து பேசுவான். அதை தவிர்க்க மாட்டான். ஏன் பேசற...கட் பண்ணு என கோபி சொன்னால் கேட்கவும் மாட்டான். ஆனால் அதில் பெரிய ரகசியமோ காதல் மொழியோ இருக்காது...... “உன்னோட பழக்கவழக்கம் வேற .என்னோட ஆசை கனவு வேற நம்ம இரண்டுபேருக்கும் ஒத்துபோகாது என்னை மறந்திடு...இனி எனக்கு போன் பண்ணாத” .... என இந்த வார்த்தையை தான் சொல்லி கொண்டு இருப்பான்.. ஆனாலும் அடுத்த நாள் மலரிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தால் முகம் கோணாமல் எடுத்து பேசுவான்.

பின்னர் சிறிது நாட்கள் “ ஒரு குடும்பத்தில் இருந்து இரண்டு பெண் எடுப்பது நமது ஊரில் வழக்கம் இல்லை. அதனால் உன் முடிவை நீ மாற்றிகொள்...என்னை மறந்துவிடு “ என இப்படியும் சில காலம் சொல்லி பார்த்தான். ஆனால் இவையாவும் மலரின் நேசத்தை துளியும் குறைக்கவில்லை. “எனக்கு நீங்கள் வேண்டும்” என உறுதியாக சொல்லிவிட்டாள்.இவை எல்லாம் கோபிக்கும் தெரியும்.

ஒருமுறை மாதேஷ் புலம்பி கொண்டிருக்கும்போது கடுப்பான கோபி “இங்க பாரு மச்சான் நீயும் உன்னோட முடிவுல உறுதியா இருக்க...அந்த பொண்ணும் உன்னை தான் கல்யாணம் பண்ணுவேன்னு பிடிவாதமா இருக்கு......இதில யாரோ ஒருத்தர் விட்டு கொடுத்து போகணும்.....சீக்கிரம் அது யாருன்னு முடிவு பண்ணுங்க....... இப்படி புலம்பிறதால எந்த பிரயோஜனமும் இல்லை...சீக்கிரம் முடிவு எடு....இது இப்படியே போனா நீங்க கல்யாணம் பண்றீங்களோ இல்லையோ எனக்கு பைத்தியம் பிடிக்கிறது உறுதி ” என எரிச்சலுடன் சொன்னான்..

உடனே மாதேஷ் முகம் சுண்டி விட “என்னடா கோபி நீயும் இப்படி சொல்ற”......என அவன் வருத்தமாக கேட்கவும்

“இல்லை மச்சான்...இது கல்யாண விஷயம்...... உன்னோட வாழ்க்கை பிரச்சனை....... நல்லா யோசி......அதில ஆரம்பமே குழப்பமா இருக்க கூடாது........இதில முடிவு உன்னோடத மட்டும் தான் இருக்கனும்........இந்த முறை ஊருக்கு போயிட்டு வரும்போது உன்னோட முடிவ தெளிவா வீட்ல சொல்லிட்டு வந்திடு” என பொறுமையாக எடுத்து சொன்னான்..

ஆனால் அந்த முறை ஊருக்கு சென்ற மாதேஷ் “கல்யாணம் உறுதி ஆகிடுச்சு.....இன்னும் இரண்டு நாளில் நிச்சியதார்த்தம்” என சொல்ல கோபியே அதிர்ந்துவிட்டான். அதன் பின்னர் அலுவலகம் வந்த மாதேஷ் அதை பற்றி பெரிதாக விபரங்கள் ஏதும் சொல்லவில்லை. கோபியும் அதை பற்றி விளக்கம் கேட்கவில்லை.

இப்போது நண்பர்கள் கிண்டல் செய்த போது அவன் முகம் மாறியதை பார்த்தவன் சீக்கிரம் அவர்களை பேசி அனுப்பிவிட்டு மாதேஷ் முன் அமர்ந்தான்.

ஏனோ “மாதேஷும் மனம் குழம்பி இருந்ததால் நடந்ததை எல்லாம் அவனிடம் கொட்டி தீர்த்தான்,அவன் பேசி முடிக்கும்வரை பொறுமையாக கேட்ட கோபி அவன் சொல்லி முடித்ததும் அவன் முகத்தை சில வினாடிகள் உற்று பார்த்தவன் “நீயா உன் மனசுக்கு ஒரு முகமூடி போட்டுக்கிட்டு இருக்க மாதேஷ்.....அதை நீ விலக்கினாத்தான் உண்டு......ஆனா ஒரு உண்மைய சொல்றேன்.......மலர பத்தி நீ சொல்ற வார்த்தைகள் வேற...உன் மனசில இருக்க எண்ணம் வேற. அது உனக்கே தெரியும்....ஆனா உன்னோட கர்வம் அகங்காரம் அதை ஒத்துகொள்ள மாட்டேங்குது. சீக்கிரம் அந்த முகமூடியை கிழிச்சுட்டு வெளியே வா...இல்லை மலரோட உண்மையான அன்பு அதை கிழிக்கும். நீயா வந்தா உனக்கு மரியாதை.....மலரால அது நடந்த அதோட விளைவுகள் ரொம்பவும் விபரீதமா இருக்கும்...தெரிஞ்சுக்கோ” என ஏதோ மந்திரவாதி சொல்வது போல சற்று மிரட்டாலாகவும் அதே நேரத்தில் உண்மையையும் எடுத்து சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் கோபி.

நண்பன் சென்றபிறகும் சிலைபோல் சில மணி துளிகள் அங்கே அமர்ந்திருந்தான் மாதேஷ்..ஏதோ அவன் மனதில் அழுத்தி கொண்டிருந்த ஒரு பாரம் விடுபடுவது போல் இருந்தது. அது எதனால் எப்படி இதெல்லாம் அவனுக்கு புரியவில்லை.ஆனால் அந்த உணர்வு அவனுக்கு சுகத்தை கொடுக்க அந்த மன நிலையிலே நண்பர்களுக்கு ட்ரீட் கொடுத்தவன் வேலை முடிந்ததும் நேராக வீட்டிற்கு வந்தான்.

காலையில் தான் நடந்து கொண்டது கொஞ்சம் அதிகம் தான் என அவனுக்கும் புரிந்தது. மேலும் கோபி சொன்னதும் அவனது மனநிலையை மாற்ற அதே நினைவோடு வீட்டிற்கு வந்தவன் அதிர்ந்து நின்றான்.

“ஹெலோ சொல்லுங்க மாப்பிள்ளை...... உங்க போனுகாக்தான் காத்துகிட்டு இருந்தோம்.......வீட்டிற்கு வந்திட்டீங்களா? ...மலர் இருக்குதா?.....கொஞ்சம் பேச சொல்றீங்களா?” என அலைபேசியின் அடுத்த முனையில் இருந்த தர்மலிங்கத்திடம் இருந்து சரமாரியாக வார்த்தைகள் வர

மாதேஷா என்ன பேசுவது என தெரியாமல் விகிதித்து நின்றான்.

காலையில் தர்மலிங்கம் மாதேஷை அலைபேசியில் அழைத்து இருந்தார். பரஸ்பர நலம் விசாரித்தவர் மலரிடம் பேச விரும்ப அப்போது தான் அவளிடம் அலைபேசி இல்லை என்பதே மாதேஷ்க்கு தெரியும்.


“அவளுடைய போன் என்னாச்சு?” என கேட்க அதற்கு அவர் “ எதா இருந்தாலும் அவர்கிட்ட சொல்லிடுங்கப்பா......எனக்குனு தனியா எதுக்கு போன் அப்டின்னு சொல்லி இங்கே வச்சுட்டு போய்டுச்சு மாப்பிள்ளை” என்றார் .

“சரிங்க மாமா வேலை முடிஞ்சு வீட்டிற்கு போனதும் உங்களுக்கு கூப்பிட்றேன்” என்றவன் இப்போது அவர் மலரை கேட்கவும் என்ன சொல்வது என தெரியாமல் தடுமாறினான்.

பின்னர் சுதாரித்து “ஹலோ ஹலோ மாமா இங்க சிக்னல் கிடைக்களை ...உங்களை அப்புறம் கூப்பிட்றேன்” என சொல்லிவிட்டு வேகமாக அடுத்த நம்பரை பதட்டத்துடன் அலைபேசியில் அழுத்தினான்.

“சொல்லுடா மாதேஷ்... நல்லா இருக்கியா.......ஏண்டா இரண்டு நாலா போன் பண்ணலை.......என்னதான் புதுசா கல்யாணம் ஆகிருந்தாலும் இதெல்லாம் ரொம்ப ஓவர்டா தம்பி...... அதுக்குள்ள எங்களை மறந்திட்ட “என எப்போதும் போல் படபடவென பேசியவன் பிறகே “என்ன இந்த நேரத்தில கூப்பிட்ற” என கேட்டான் மோகன்.

அவன் பேச பேச இங்கு மாதேஷ் கோபத்தில் பற்களை நரநரவென கடித்தவன் அவன் நிறுத்தியதும் “முதல்ல இப்படி வழ வழனு பேசறத கொஞ்சம் நிறுத்தறியா...நேரம் காலம் தெரியாம கடுப்பு ஏத்திகிட்டு இருக்காத” என எரிந்து விழவும்

எதிர்புறத்தில் இருந்த மோகன் பதறி “டேய் என்னாச்சு மாதேஷ்...என்னடா இவ்ளோ கோபமா பேசறா...என்னடா என்ன நடந்திச்சு...ஹே மலர் எங்க.....அது நல்லா இருக்குள்ள...உனக்கு ஏதும் பிரச்சனை இல்லையல” என வேகமாக கேட்டான்.

உடனே அவன் “ஆமா,, எங்க பிரச்சனை இல்லாம இருக்கிறது....அதான் எல்லாரும் சேர்ந்து மொத்தமா என் தலையில கட்டி விட்டீங்களே” என கடுப்புடன் சொல்லவும்

மோகனோ “என்னடா உளற “ என புரியாமல் கேட்க

மாதேஷா பதில் சொல்லாமல் “நீ எங்க வீட்லயா இருக்கியா இல்லை கடையில இருக்கியா?” என்றான்.

அவன் குரலில் தெரிந்த மாற்றம் மோகனுக்கு பீதிய ஏற்படுத்த “கடையில இருக்கேண்டா...ஏண்டா என்ன வேணும்டா...சொல்லு” என அவன் பதட்டத்துடன் கேட்க

“இல்லை அது வந்து...... வந்து” என இழுத்தவன் “வீட்ல இருந்து ஏதாவது போன் வந்திச்சா” என்றான்..

மோகனோ புரியாமல் “என்ன போன் வந்துச்சானு கேட்கிற” என்றவன் “முதல்ல என்ன விஷியம்னு தெளிவா சொல்லு” என ஒரு அதட்டல் போட

“அது வந்ததுண்ணா...... அது வந்து...... மலரா காணோம்” என அவன் முடிப்பதற்குள்

“என்னதூஊஊஉ” என அதிர்ந்த மோகன் “டேய் என்னடா உளற......மலர காணோமா...” என அதிர

“ஆமாண்ணா ஆபீஸ் போயிட்டு வீட்டுக்கு வந்து பார்க்கிறேன்...வீடு பூட்டி இருக்கு......பக்கத்து வீட்ல கேட்டா தெரியலைன்னு சொல்றாங்க...... அவ கையில போன் ஏதும் இல்லை” என சொல்லும்போதே அவன் குரல் தடுமாற

“லூசாடா நீ ...தனியா இருக்க பொண்ணுகிட்ட ஒரு போன் வாங்கி கொடுக்க மாட்ட” என திட்டியவன் “எல்லா இடத்திலும் தேடி பார்த்தியா” என கேட்டான்.

“ம்ம்ம் அவளுக்கு இங்க யாரையும் தெரியாதுண்ணா......பக்கத்து வீடு மட்டும்தான்...அதும் பேசினது இல்லை.....புது இடம் எங்க போயிருக்கான்னு தெரியலை..... நானும் ஆபிஸ்ல இருந்து வந்து ஒரு மணிநேரம் ஆச்சு......ஒருவேளை காலையில நான் திட்னதுனால கோபப்பட்டு ஊருக்கு கிளம்பி வந்திட்டாலோன்னு தான் உங்களுக்கு போன் பண்ணேன்” என அவன் சொல்லவும்

“என்ன மாதேஷ்...என்னடா உளற...காலையிலல அவகூட சண்டை போட்டியா...டேய் என்ன மனுஷண்டா நீ.......அந்த பொண்ணு உன்னையே கதின்னு நம்பி வந்திருக்கு...அதுகூட போய் சண்டை போட்டு.....ச்சே என்னடா இப்படி பண்ற” என கோபத்தில் ஆரம்பித்து சலிப்புடன் முடித்தான் மோகன்.

“இல்லைண்ணா எப்பவும் பேசற மாதிரிதான் பேசினேன்” என சொல்ல சொல்ல அவனது குரல் உள்ளே செல்ல

“டேய் பயப்படாத எங்காவது பக்கத்தில கடைக்கு போயிருக்குமுடா......படிச்ச பொண்ணுதான வந்திடும்..நீ கவலைபடாத” என தமயனுக்கு ஆறுதல் சொன்னாலும் அவன் குரலில் தெரிந்த நடுக்கம் அவனும் பயந்திருக்கிறான் என்பதை உணர்த்தியது.

சில நொடிகள் அமைதி நிலவ “டேய் அண்ணா எனக்கு பயமா இருக்குடா” என சொல்லும்போதே அவனது குரல் பிசிற

“டேய் மாதேஷ் நீ நினைக்கிற மாதிரி ஏதும் இருக்காது...இதோ இப்போ புறப்பட்டு நான் வரேன்......நீ அதுக்குள்ள பக்கத்தில இருக்க மளிகை கடை., துணிக்கடை எல்லாம் தேடிபாரு”...என சொல்லவும்

“நீ வரவேண்டாம் ......நானே தேடிபார்க்கிறேன்...கோபத்துல ஊருக்கு வந்திருப்பலோனுதான் கூப்பிட்டு கேட்டேன்” என்றான்.

“டேய் அவங்க அம்மா வீட்ல” என மோகன் கேட்க

“அங்க கேட்டேன்......அவ போகலை...ஆனா இங்க நடக்கிறது அவங்களுக்கு தெரியாது” என சுருக்கமாக சொன்னவன் “சரிண்ணா நான் தேடி பார்த்திட்டு உன்னை கூப்பிட்றேன்” என்றபடி அலைபேசியை வைத்தான்.

மோகனுக்கோ மனதிற்குள் ஒரு பயம் ஏற்பட்டது. மாதேஷை விட மோகனுக்கு மலர பற்றி நன்கு தெரியும்.அவளுடைய பிடிவாதம்,அழுத்தம் இவை எல்லாம் எந்த அளவும் உச்சத்திற்கு செல்லும் என்பதை மாதேஷின் திருமணத்தின் போது அறிந்தவன் அவன். மேலும் மாதேஷோ கோபக்காரனாக இருந்தாலும் மென்மையான உள்ளம் படைத்தவன். பிரச்சனைகள் வந்தால் முதலில் தடுமாறி பின்பே சுதாரிப்பான். அதனால் தான் மோகன் கவலைபட்டான்.

இங்கு மாதேஷோ “கடவுளே எங்க போனான்னு தெரியலையே” என புலம்பிகொண்டே மீண்டும் அந்த தெருவில கடைகள் எல்லாம் சுற்றி வந்தவன் எங்கும் தென்படாமல் போக கலைத்து போய் வீட்டின் முன் வந்து நின்றவன் அங்கு வீடு திறந்திருக்க உள்ளே விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதை பார்த்ததும் நான்கு நான்கு படிகளாக தாவி புயலென வீட்டிற்குள் நுழைய அங்கு முன் அறையில் சோபாவில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டு இருந்தாள் மலர்.
 
Top