• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசம் - 13

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
918
481
93
Tirupur
அத்தியாயம் – 13

மறுநாள் காலை “இதுவரை இல்லாத உணர்விது இதயத்தில் உண்டான உறவிது ” என்ற பாடல் ரேடியோவில் ஒலிக்க மலருக்கோ நேற்று நடந்த நிகழ்வுகள் நினைவிற்கு வர அவளையும் அறியாமல் உடல் சிலிர்த்தது .

ஆம் மாதேஷின் முதல் அணைப்பு அதுவும் காதலோடு அவளை அணைத்தது , அவளது விழிகளில் அவனது முதல் முத்தம் பதித்தது, எல்லாம் படம் போல் அவள் கண் முன் ஓட அதில் அவள் மயங்கி இருக்க அப்போது அடுப்பில் இருந்த குக்கரின் விசில் சத்தம் அவளின் நினைவுகளை கலைத்து நிகழ்வுக்கு கொண்டு வந்தது.

“அடச்சே நிஜத்தில தான் இப்படி நடந்ததுன்னா கனவுல கூட அந்த மனுஷன் கூட ரொமான்சே பண்ண முடியலை...இந்த குக்கர் பலி எடுத்திடுச்சு” என சலித்தபடியே அடுப்பில் இருந்து குக்கரை இறக்கினாள் மலர்.

உண்மையில் நேற்று நடந்ததும் இதே போல் தான்...நண்பர்களின் பேச்சு அவன் மனதில் உணர்வுகளை தூண்டிவிட அதே நினைத்து கொண்டே வந்தவன் இங்கு மலரை புடவையில் பார்த்ததும் மறைத்து வைத்திருந்த மனதின் ஆசைகள் அலைகடலென பொங்கி வர வெட்கத்தில் தலை குனித்து நின்றவளின் அருகில் சென்றவன் மெல்ல அவள் இடையில் கைபோட்டு தன்னோடு இழுத்து அணைத்தான்.

இதை எதிர்பார்க்காத மலர் சற்று தடுமாறி போனாள்.....”என்னங்க பண்றீங்க” என கேட்கும்போதே அவள் குரலில் ஒரு நடுக்கம் தெரிய அது பயத்தினாலா இல்லை அதிர்ச்சியினாலா என அவளாலும் அறியமுடியவில்லை.

“ம்ம்ம் என் பொண்டாட்டிய அணைச்சுக்கிட்டு இருக்கேன்.....உனக்கு எப்படி தெரியுது” என சரசமாக சொல்லிகொண்டே மேலும் அவளை தன்னோடு இறுக்க, அந்த அணைப்பில் தன்னை முழுவதும் தொலைத்தவள் பதில் சொல்லாமல் அவன் நெஞ்சை தஞ்சம் அடைந்ததாள். சிறிது நேரம் அப்படியே இருந்தவர்கள் பின்னர் மெல்ல தன்னிடம் இருந்து அவளை பிரிக்க அவளோ அவனை விட்டு விலக மறுத்தாள். அப்போது தான் வெதுவெதுப்பான நீர் தன் மார்பில் படுவதை உணர்ந்தவன் வேகமாக அவளை தன்னிடம் இருக்குது விலக்கி அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன் அதில் இருந்து கொட்டும் அருவி போல கண்ணீரை பார்த்ததும் பதறி “என்னடி ஆச்சு...உனக்கு பிடிக்கலையா...சொல்ல வேண்டியது தான ....அடகடவுளே நான் தான் முட்டாள் தனமா ஏதோ நினைப்புல” என அவன் பேசிகொண்டிருக்க இடையில் அவன் வாயை பொத்தியவள் வேண்டாம் பேச வேண்டாம் என தலயை அங்கும் இங்கும் அசைத்தாள்.

அவன் அசையாமல் நிற்க அவன் முகத்தையே இமைக்காமல் பார்த்தவள் தன் கண்களுக்குள் அவனை முழுவதுமாக நிரப்பி கொண்டாள். இந்த நொடி, இந்த வாழக்கை, இது தானே அவள் விரும்பியது. என் பொண்டாட்டி நீ.....உன்னைத்தான் தான் அணைச்சுக்கிட்டு இருக்கேன்.... இந்த உரிமை இதற்கு தானே ஆசைபட்டாள் அவள். உரிமையோடு அவன் சொன்ன அந்த வார்த்தை அவளுக்கு மீண்டும் ஒரு பிறப்பை கொடுத்திருகிறது என்பதை மாதேஷ் அறிய வாய்ப்பு இல்லை.

அவளது எண்ணங்களின் அலை அருகில் இருப்பவனையும் தாக்க மீண்டும் அவளை இழுத்து தன்னோடு அணைத்தவன் “எதுக்குடி அழுகிற.....என் மனைவி எதுக்கு கண் கலங்க கூடாது” என்றவன் அவள் முகத்தை நிமிர்த்தி கண்ணீர் வந்த கொண்டிருந்த கண்களில் தனது முதல் முத்தத்தை பதித்தான். அவள் இமைகளை திறக்காமல் அப்படியே இருக்க

“மலரு உனக்கு பிடிச்சிருக்கா” என அவள் காதில் கிசுகிசுக்க
அவனது மீசை காதின் ஓரத்தில் ஏற்படுத்திய குறுகுறுப்பில் அவளது உடல் சிலிர்க்க ம்ம்ம் என்றாள் அவள்.

“ஆனா கண்ணை திறக்க மாட்டேன்கிற.....நிஜமாவே பிடிச்சிருக்கா” என்றபடி கண்களை மூடி ஒரு மோன நிலையில் நிற்கும் மனைவியின் முகத்தை எதிர்பார்ப்புடன் அவன் பார்க்க

விழிகளை மெல்ல திறந்தவள் காதலோடு தன் கணவன் தன்னையே பார்த்துகொண்டிருப்பதை பார்த்தவள் அடுத்த நொடி அவன் தோளில் தன் இருக்கைகளை மாலையாக்கியவள் , உயரம் பத்தாமல் கால்களை எட்கி அவன் முகம் முழுவதும் முத்தம் மழை பொழிய, இதை எதிர்பார்க்காத மாதேஷ் சற்று அதிர்ந்து பின்னர் சுதாரித்து அவளை தனது உயரத்திற்கு இணையாக தூக்கி பிடிக்க மனதில் அடக்கி வைத்திருந்த பலவருட காதலை முத்தமழையாக அவன் முகத்தை நனைத்து கொண்டிருந்தாள் அவன் மனையாள்.

மடை திறந்த வெல்லாம் போல் தன் மனதில் ஆசைகளை,தேடல்களுக்கு ஒரு விடை கிடைத்தது போலவும் அதை முழுவதுமாக அடைந்துவிட எண்ணி அவள் தன் நிலை மறந்து அவனுள் கரைந்து தனது காதலை வெளிபடுத்தி கொண்டிருந்தாள்.

இனிமையான காதல் ஸ்வரம் மீட்டும் நேரத்தில் அபஸ்வரமாக வீட்டின் அழைப்பு மணி சத்தம் கேட்க அதுவரை அவனது அணைப்பில் தன் நிலை மறந்து தனது செய்கையால் அவனை குளிர்வித்து கொண்டிருந்தவள். இடையில் ஒலித்த அந்த சத்தம் அவளை நிதானத்திற்கு கொண்டுவர அப்போது தான் அவள் செய்த வேலை அவளுக்கு உரைக்க வேகமாக அவனிடம் இருந்து அவள் விலகினாள்.

அவனோ விடாமல் அவளை தன் கைவலைவிலே பிடித்து வைக்க, வெட்கத்தில் முகம் சிவந்தவள் பின்னர் “விடுங்க...யாரோ கூப்பிட்றாங்க” என சொல்லவும்

“அதெல்லாம் அப்புறம் பார்த்துகலாம்.....நீ எனக்கு கொடுத்தத நான் உனக்கு திருப்பி கொடுக்க வேண்டாமா .....எனக்கு இந்த கடன் எல்லாம் இருக்க கூடாது” .... என காறாராக காதலோடு சொல்லிகொண்டே அவள் இதழ் நோக்கி குனிந்தான்.

அழைப்புமணி ஓசை விடாமல் ஒலிக்கவும் வேகமாக அவனை விலக்கியவள் “அச்சோ ஏதாவது அவசரமாக இருக்க போகுது...சீக்கிரம் போய் கதவை திறங்க” என சொல்லிவிட்டு வேகமாக அறைக்குள் ஓட

அவனோ “ச்சே இந்த நேரத்தில் யாரு சிவ பூஜைல கரடி மாதிரி ” என எரிச்சலுடன் முணுமுணுத்தபடி கதவை திறக்க அங்கு அண்ணாச்சி நின்று கொண்டிருந்தார். ,

“என்ன தம்பி தூங்கிடிங்களா........நாளைக்கு பாப்பா காலேஜ்ல எதோ பரீட்சை இருக்கு...நேரமே போகணும்னு வீட்ல சொல்லுச்சாம்...அதான் எத்தனை மணிக்குன்னு கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்” என்றார்,

“அப்படியா அண்ணாச்சி ...மாடல் எக்ஸாம் நாளைக்குதானா” என்றவன் “எப்பவும் வர நேரத்திற்கு ஒரு மணிநேரம் முன்னாடியே வந்திடுங்க அண்ணாச்சி “என சொல்லி அவரை அனுப்பிவிட்டு வீட்டிற்குள் வந்தான்.

அதற்குள் மலரோ புடவையை மாற்றி எப்போதும் இருக்கும் சாதரன உடையில் இருந்தாள். அவன் உள்ளே வரவும் அவன் முகத்தை நேராக பார்க்க முடியாமல் நாணத்தில் அவள் தலை குனிய, அவனோ அருகில் வந்தவன் “தூங்கிடாத நான் முகம் கழுவிட்டு வந்திடறேன்” என சொல்லிவிட்டு செல்ல வெட்கம் பிடுங்கி திங்க பதில் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்தாள்.

அவன் குளியல் அறைக்குள் சென்ற உடன் வேகமாக கடவுள் படத்திற்கு முன் சென்று நின்றவள் “கடவுளே இது ஒன்னும் கனவு இல்லியே......இவளவ்வு சீக்கிரம் இவர் மனசு மாறிடுச்சா.....என்னால நம்பவே முடியல..... எதுவும் சொதப்பாம எல்லாம் நல்லபடியா நடந்தா அவருக்கு மொட்டை போட்டு காவடி எடுக்க சொல்றேன்” என அந்த மனநிலையிலும் விவிரமாக வேண்டுதலை அவன் தலையில் சுமத்தினாள் மாதேஷின் காதல் மனைவி. .

பல கனவுகளோடு அவள் காத்திருக்க குளியல் அறையில் இருந்து வெளிவந்தவன் “என்ன மலரு ரொம்ப நேரம் காக்க வச்சுட்டனா” என முகத்திற்கு பவுடர் போட்டபடி கேட்கவும் அவளோ தரையை பார்த்தபடி பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க

“என்ன பதிலே காணோம்......அப்போ உனக்கு விருப்பம் இல்லியா” என அவன் முடிக்கும் முன்

“இல்லை இல்லை அது வந்து” என அவள் வேகமாக மறுக்க

“அதான பார்த்தேன்.....சரி சரி நான் ரெடி...வா வா அப்படியே கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்திடு “ என சொல்ல

“தண்ணியா” என கேட்டபடி அவள் நிமிர்ந்து பார்த்தவள்

அங்கு தன் முன் அவளது புத்தகங்களை பரப்பியபடி அவன் அமர்ந்திருந்தான்.

ஒருநிமிடம் ஒன்றும் புரியாமல் விழித்தவள் பின் ஆசைகள் அனைத்தும் வடிந்து போக “என்னங்க இது” என அவளையும் அறியாமல் வேகமாக கேட்டாள்.

“ஏண்டி நாளைக்கு மாடல் எக்ஸாம் இருக்குள்ள அதுக்கு படிக்க வேண்டாமா....நீ தான இப்போ சரின்னு சொன்ன .......சீக்கிரம் வா” என முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் அவன் சாதரனமாக சொல்ல மனதிற்குள் உடைந்து போனாள் அவள்.. மரக்கட்டை போல் அவன் முன் சென்று அமர்ந்தவள் அவன் சொல்வதற்கு எல்லாம் தலை ஆட்டி கொண்டிருந்தாள்.

இன்றாவது அவள் மனதின் தேடலுக்கு விடை கிடைக்குமா என எதிர்பார்த்திருக்க அது பொய்த்து போக துவண்டு போனாள் அந்த மான்விழியாள். ...... அவன் தன்னை விரும்புகிறானா...அவன் மனதில் தன் இடம் எங்கே ?........ வெறுப்பு வார்த்தைகளில் மட்டும் தானா...இல்லை மனதில் இருந்தே வருகிறாதா? என அவளுக்குள் விடை தெரியாத பல வினாக்கள் குவிந்து கிடந்தது. ஆரம்பித்தில் இருந்தே வேண்டாம் வேண்டாம் என சொல்வானே தவிர அவளது ஒவ்வொரு செயலிலும் அவன் இணைந்திருப்பான். அவள் தவறு செய்யும்போது கண்டிப்பதும், நல்லது செய்யும்போது தட்டி கொடுப்பதும், என அவளது அனைத்திலும் இவன் கலந்திருந்தான். அதனால் அவனது வெறுப்பை அவள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

கல்லூரி முதல் வருடம் அவள் படித்து கொண்டிருக்கும்போது தான் அவனிடம் தனது மனதில் இருக்கும் காதலை சொன்னாள் மலர். அந்த கணத்தில் இருந்து திருமணம் உறுதி செய்யப்படும் வரை அவன் வாயில் இருந்து அதிகம் உதிர்த்த சொல்” நீ எனக்கு வேண்டாம்” என்பது மட்டுமே.....இன்று திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் அவனது மனநிலையை அவளால் அறிந்து கொள்ளவே முடியவில்லை. சில நேரங்களில் சூரியனாய் வார்த்தைகளில் சுட்டெரிக்கிறான்...சில நேரங்களில் அன்பால் அரவணைத்து பால் நிலவாய் குளிர்வீகிறான்.... அவனின் மனம் என்னவென்று புரியாமல் வெள்ளத்தில் சிக்கிய கொடி போல் அல்லாடி நின்றாள் இந்த பேதை.. இன்று தான் காதல் மொழி பேசி அவன் நெருங்கி வரவும் மனதில் இருந்த நெருடல் விலக அவனுக்குள் தன்னை தேட அவள் முயற்சிக்க நினைக்கையில் அவனோ மீண்டும் பழைய பல்லவியை ஆரம்பிக்க நொறுங்கி போனாள் மலர்விழி..

காலை உணவை முடித்துவிட்டு அவன் எப்போதும் போல் அலுவலகம் செல்ல மலரும் அவனிடம் எதுவும் பேசவில்லை. அவன் சென்ற பிறகு உள்ளே வந்தவள் நேற்று இரவு கட்டிய புடவை அங்கு கிடைக்க அதை பார்த்ததும் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் எல்லாம் ஆத்திரமும் அழுகையாய் வெடித்து சிதற வாய் விட்டு கதறி அழுதாள் அவள்.

மனிதனுக்கு கடவுள் கொடுத்த ஒரு சிறப்பான வரம் இந்த அழுகை.சந்தோஷமோ, துக்கமோ வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்வுகள் அழுகையை கொண்டு வெளிபடுத்தி விடலாம். அழுகை என்ற ஒன்று மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் பாதி மனிதர்கள் பைத்தியமாக சுற்றி கொண்டு இருப்பார்கள். . உணர்வுகளை வெளிபடுத்த அழுகையை விட சிறப்பானது வேறு ஒன்றும் இல்லை.

சொல்ல முடியாத மனதில் அழுத்தி கொண்டிருந்த உணர்வுகள் அழுகையால் அவள் வெளிபடுத்த கண்களில் இருந்து சாரை சாரையாக வந்த கண்ணீர் அவளது காதல் நினைவுகளையும் சேர்த்து கொண்டுவந்தது.

பத்தாவது படிக்கும் வரை மலரின் மனதில் மாதேஷ் என்பவன் தனது அண்ணன் பாஸ்கர் போல் நல்லவன். அவன் மீது தனி மரியாதை இருந்தது. அவன் எது செய்தாலும் அவளுக்கு அது ஆச்சிரியமாக இருந்தது. பதினொன்றாம் வகுப்பு கம்புயூட்டர் பிரிவு அவள் எடுத்ததற்கு காரணமும் மாதேஷ் தான்..

ஒருமுறை மோகன் வீட்டிற்கு வந்த போது “மாதேஷிற்கு கம்ப்யூட்டர் எஞ்சினியர் படிப்பு படிக்க மிகவும் ஆசை...வீட்டின் சூழ்நிலை அவனை படிக்க வைக்க முடியலை” என சொல்லி கொண்டிருக்க உடனே “மாதேஷ் அண்ணா அந்த படிப்பை படிக்கிறாங்கன்னா அப்போ அது பெரிய படிப்பாகதான் இருக்கும்” என இவளாக முடிவு எடுத்து வீட்டில் அடம்பிடித்து அந்த பிரிவு எடுத்தாள், அந்த அளவு அவள் மனதில் மாதேஷ் நிறைந்திருந்தான். அவளையும் அறியாமல் அவன் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பு தான் இது என்பதை அந்த சிறுபெண் அப்போது உணரவில்லை.

அவப்போது கடைக்கு ஏதாவது பொருள் வாங்க வருவான் மாதேஷ்....அப்போது கடையில் மலர் இருந்தால் அவள் தான் அவனுக்கு தேவையானதை எடுத்து கொடுப்பாள். “உங்களுக்கு வேற ஏதாவது வேணுமாண்ணா” என கேட்டு எடுத்து தருவாள். அவனை பார்த்தாலே முகமெல்லாம் புன்னகையால் மலர்ந்து விடும்.ஆனால் மாதேஷ் அவளை நிமிர்ந்தும் பார்த்தது இல்லை..

பதினொன்றாம் வகுப்பு ...அவளது வாழ்க்கையை புரட்டி போட்ட காலம்.....டீன் ஏஜின் குறும்பும்,இளமையும், புதிய நண்பர்களும் அவளுக்கு வேறு ஒரு உலகத்தை காட்டியது. தங்கள் ஊரிலே உள்ள பள்ளி...அதுவும் தந்தைக்கு தெரிந்த ஆசிரியர்கள் என்பதால் பத்தவது வரை மலருக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை. வீடு ,அம்மா ,அப்பா,அண்ணா ,டிவி இவைகள் மட்டுமே உலகம்.

பதினொன்றாம் வகுப்பு புதிய ஊர் ,புதிய பள்ளி என அனைத்தும் புதிதாக இருக்க அந்த வயதிற்கே உள்ள ஆசைகள் மெல்ல எட்டி பார்த்தது. ஆசைப்பட்டு கம்ப்யூட்டர் பாடத்தை எடுத்துவிட்டு படிக்க முடியாமல் திணறி போனாள் அவள். அந்த நேரத்தில் தான் மாதேஷின் பக்கத்து விட்டு பெண் தீபா அவளுக்கு அறிமுகம் ஆனாள். அதுவரை தாத்தா வீட்டில் இருந்து படித்து கொண்டிருந்த தீபா பதினொன்றாம் வகுப்பிற்கு பெற்றோரிடம் வந்து சேர்ந்தாள். ஒரே ஊர் என்பதால் இருவரும் சேர்ந்தே பள்ளிக்கு சென்றனர்.

தீபா கொஞ்சம் நன்றாக படிக்க கூடிய பெண்.....அவளிடம் சந்தேகங்களை கேட்டு கொள்வாள் மலர். “உனக்கு மட்டும் எப்படி எல்லாமே தெரிது” என அவளிடம் கேட்க “எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்ல மாதேஷ்ணு ஒரு பையன் இருக்கான்.....அவன் தான் சொல்லி கொடுத்தான்” என அவள் சொல்ல மீண்டும் மாதேஷ் புராணம் பாட அவளுக்கு ஒரு ஆள் கிடைத்தது. சில அறிவியல் பயிற்சிகளை மாதேஷ் செய்து கொடுக்க அதை வைத்து பள்ளியில் புகழை தேடிகொண்டாள் தீபா. மீண்டும் மலரின் மனதில் மாதேஷ் நுழைந்தான்.

வீட்டின் சூழ்நிலை கொஞ்சம் சரியானதும் தான் விரும்பிய எஞ்சினியர் படிப்பு படிக்க முடியாமல் கலை கல்லூரியில் சேர்ந்தான் மாதேஷ். விடுதியில் தங்கி படித்து கொண்டு இருந்ததால் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்து கடையை கவனித்து கொள்வான். கல்லூரி ,கடை என அவன் இருந்ததால் அவன் வீட்டில் இருப்பதே தெரியாது.

ஒருநாள் பள்ளிக்கு சீக்கிரமாக செல்ல அந்த காலை நேரத்தில் பேருந்தில் இளையராஜாவின் சிம்பொனி இசையில் திருவாசக பாடல் ஒலித்து கொண்டிருந்தது..

“இப்போ எதுக்குடி இந்த மாதிரி பாட்டு எல்லாம் போடறாங்க....பேசாம எப் எம் போட்டு விடலாம்” என எரிச்சலுடன் சொன்னாள் மலர்.

மலருக்கு டிவி ,சினிமா பிடிக்கும்..ஆனால் பாடல் கேட்பதில் அவளவ்வு விருப்பம் இல்லை.

அதற்கு தீபா “ இந்த பாடலை நீ ஒருமுறை கேட்டதுக்கே இப்படி அலற...பக்கத்து வீட்ல மாதேஷ் வந்திருந்தா இந்த பாடல் தான் ஓடிகிட்டே இருக்கும்” என்றாள் அவள்.

அதுவரை முகத்தை சிடுசிடுவென வைத்திருந்த மலர் மாதேஷ் பேர் சொன்னதும் ஆர்வமாக அவளிடம் “அப்படியா.....அப்படி என்னடி அந்த பாட்டுல இருக்கு” என கேட்க

“என்னை கேட்டா ...எனக்கு என்ன தெரியும்.....ஆனா கேட்க கேட்க நல்லா இருக்கும்” என சொல்லிவிட்டு அவள் வேடிக்கை பார்க்க மலரோ “மாதேஷ்கு பிடிச்ச பாடலா “ என அதை கர்ம சிரத்தையாக கேட்க ஆனால் அவளால் சில வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து கேட்க முடியவில்லை. சீட்டில் அமர்ந்தவாறே நெளிந்தவள் ஆள் பார்க்கிறதுக்கு மாடர்னா இருக்கான்...ஆனா அவனோட ரசனை இப்படி பழுத்த பழம் மாதிரி இருக்கே...சாமியார் மாதிரி இந்த பாட்டு எல்லாம் கேட்கிறான்” என பாடலை விட்டு அவளது எண்ணங்கள் அவனை சுற்றி ஓடிகொண்டிருந்தது......

அவள் முகத்தை பார்த்ததும் தீபா “ஏன் உனக்கு பிடிக்கலையா” என கேட்க

“இல்லை இல்லை” என வேகமாக மறுத்தவள் “பிடிச்சிருக்கூஊஊ” என இழுத்தவள் “இந்த பஸ்ல ஸ்பீக்கர் சரியில்லை ...நான் எங்க வீட்ல போய் கேட்டுக்கிறேன்” என்றவள் அதற்கு பின் அதை பற்றி பேச்சே எடுக்க வில்லை.

இப்படியாக ஒருவருடம் மாதேஷ் அதிகம் பார்க்காமலே அவனை பற்றிய அனைத்து விபரங்களும் அவளுக்கு அத்துபடியானது. அவன் அடிகடி அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு செல்வதில் இருந்து இரவு ராஜா சார் பாட்டு கேட்டுகொண்டே தூங்குவது வரை அவளுக்கு தெரிந்தது.

அந்த நேரத்தில் தான் மோகன் மீனாட்சி காதல் விஷயம் குடும்பத்தில் ஒரு புயலை ஏற்படுத்தியது. மலருக்கே இது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. நண்பர்கள் போல் பேசிக்கொண்டு இருந்தவர்கள் எப்பாடி காதல் என யோசித்தவள் அடுத்த நொடி மீனாவின் வீட்டில் இருந்தாள்.

அவளை கேள்வி கணைகளால் துளைக்க அவளோ “முதலில் நண்பர்களாகதான் பழகினோம்....என்னோட குணம் அவனுக்கு பிடித்து இருந்தது. அவன்தான் காதலை முதலில் என்னிடம் சொன்னான்.அப்புறம் எனக்கும் அவனை பிடித்துவிட்டது” என சாதரணமாக சொல்லவிட்டு சென்றுவிட மலரோ குழம்பி போனாள்.


மறுநாள் தனது குழப்பத்தை அவள் தீபாவிடம் சொல்ல அவளோ “இதில் என்ன தவறு இருக்கிறது. யாரோ தெரியாத ஒருத்தர கல்யாணம் பண்றதவிட நமக்கு தெரிஞ்ச ஒருத்தரை பண்றது நல்லது தான் “ என சொல்லவும் மலரோ புரிந்தும் புரியாமலும் தலை ஆட்டினாள்.

அவள் முகத்தை பார்த்து “என்னடி இந்த முழிமுழிக்கிற” என தீபா சிரிக்கவும்

“இல்லைடி மோகன் அண்ணா எங்க வீட்டுக்கு அடிகடி வருவார். நான் பாஸ்கர் அண்ணாவ பார்க்கதான் வரார்னு நினச்சேன்...ஆனா சைட்ல இப்படி ஒரு விஷயம் ஓடிட்டு இருக்கும்னு நான் நினைக்கலை...இது தப்பில்லையா” என அப்பாவியாக கேட்டாள் மலர்.

“நம்ம மனசுக்கு ஒருத்தர பிடிச்சுடுச்சுனா அதுல தப்பு சரின்னு ஏதும் பார்க்காது. கல்யாணம் வாழ்க்கையில ஒரு முக்கியமான நிகழ்வு.....அது நமக்கு நல்லா தெரிஞ்சு, பிடிச்சவங்களோட நடந்தா அந்த வாழக்கை நல்லா இருக்கும் தான ....... இது எல்லாம் புதுசா.......ஏன் மலரு இதை எத்தனை சினிமாவுல பார்த்திருக்கோம்” என சொல்லவும் மலரோ “ஆமா ஆமாம்” என தலையாட்டினாள்.

அதற்கு பிறகு மோகன் மீனா இருவர் வீட்டிலும் பேச்சுவார்த்தை நடந்தது . ஆறு மாதம் கழித்து தான் திருமணம் என உறுதி செய்யப்பட்டது.அந்த நேரத்தில் மாதேஷை அவள் அடிக்கடி பார்க்க முடிந்தது. ஆனால் மாதேஷ் இவள் முகத்தை கூட நிமிர்ந்தும் பார்த்தது இல்லை. வீட்டிற்கு வந்தால் பாஸ்கரோடு பேசிவிட்டு சென்றுவிடுவான். மீறி இவளை பார்க்க நேர்ந்தால் ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு சென்று விடுவான்.

அவனை பற்றிய தகவல்களை மட்டுமே சேமித்து கொண்டிருந்தவள் மனதில் அவனது உருவமும் பதிந்து போக மெல்ல மெல்ல மலரின் மனதில் மாதேஷ் சிம்மாசனமிட்டு அமர்ந்தான்.

ஒரு நாள் வகுப்பறையில் அவளது தோழிகள் தங்களுக்கு பிடித்த நடிகர்களை பற்றி சொல்லி கொண்டிருக்க மலரின் முறை வந்த போது அவள் மாதேஷின் பெயரை சொன்னாள்,. சொன்னபிறகுதான் அவளுக்கு உரைத்தது. அதற்குள் தோழிகள் “மாதேஷ்வரன் அது யாரு” என கேட்க அருகில் இருந்த தீபா அதிர்ச்சியில் வாயடைத்து நின்றாள்.

எப்போதும் அவனை பற்றிய நினைவுகளை அவள் சுமந்து கொண்டிருக்க தோழிகள் அனைவரும் நடிகர்களின் பெயர்களை சொல்ல இவளுக்கோ இவளின் ஹீரோ என்றதும் மனதில் இருந்த மாதேஷின் பெயர் அவளையும் அறியாமல் வெளிவந்து விட்டது. அந்த அளவு அவளை ஆக்கிரமித்திருந்தான் மாதேஷ்.
 
  • Like
Reactions: sumiram