• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Tharsan Thanu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
72
இதழ்:- 6



என்ன தான் பூவினி நிலவனை உயிராய் நேசித்தாலும் தன்னுடைய காதலை ஒருபோதும் அவனிடம் வெளிப்படுத்த விரும்பியதில்லை.ஏனெனில் அவளுக்கு தெரியும் நிலவன் அதை விரும்ப மாட்டான் என்று.அவனுக்கு அவளை பிடித்திருந்தாலும்

கூட படிக்கும் வயதில் காதல் என்பதை அவன் ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டான் என்று அவனைப் பற்றி நன்கு தெரிந்த பூவினிக்கு புரிந்திருந்தது.அதனால் தன் மனதை மறைத்து படிப்பின் மீது கவனத்தை செலுத்தினாள்.



ஆனால் என்னதான் காதலை வெளிப்படுத்தக் கூடாது என்று உறுதியாய் முடிவெடுத்தாலும் அவனைக் காணும் தருணங்களில் அவள் மனம் அலைபாய்வதை அவளால் தடுக்க முடியவில்லை.

அவனை நேரில் கண்டாலே இவள் விழிகள் காந்தத்தை கண்ட இரும்புத்துண்டாய் அவன் மேலேயே போய் ஒட்டிக்

கொள்வதையும் தடுக்க முடியவில்லை.



அன்றும் அப்படித்தான் நிலவன் வீட்டில் எல்லோரும் கூடியிருந்தனர். நிவேதன் சுவேதன் தமிழ் மற்றும் செந்தூரன் நால்வரும் கரம்போர்ட் இல் மூழ்கி இருக்க. இவளும் தாரிணியும் தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்திருந்தனர். பூவினியின் உடல் தான் அங்கிருந்ததே தவிர அவள் மனமும் சிந்தனையும் ஒருவனை சுற்றியே வலம் வர அவள் கருவண்டு விழிகள் இரண்டும் திரையைப் பார்க்காமல் வீட்டை சுற்றியே அலைந்து கொண்டு இருந்தது.



இந்த தடிமாடு எங்கே போய்விட்டது???



வந்தது முதலே அவள் பார்வை நிலவனைத் தான் தேடிக்கொண்டு இருக்கிறது.ஆனால் அவனைத்தான் காணவே இல்லை.



எங்கே சென்றிருப்பான்??? பொதுவாக யாரும் இந்த நாளில் வெளியே செல்வது இல்லை.குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் ஒன்றுகூடி மகிழ தானே இந்த நாள்.

இவன் எங்கே போய்விட்டான்.அத்தையிடம் கேட்கலாமா??என்றால் ..அவர் என்ன நினைத்துக்கொள்வாரோ என்று சங்கடமாக இருந்தது.



இதே முன்பு என்றால் அவள் சற்றும் தயங்காமல் சாந்தாவிடம் சென்று அத்தான் எங்கே அத்தை??? என்று கேட்டிருப்பாள்.



ஆனால் இப்போது அவர் என்ன நினைப்பாரோ என்ற தயக்கம் வந்தது.அவர் எதுவும் நினைக்கப் போவதில்லை தான்.ஆனால் பூவினியின் நெஞ்சுக்குள் தான் காதல் வந்துவிட்டதே.அதனால் தயக்கமும் சேர்ந்தே வந்துவிட்டது.





எதுவும் பண்ண முடியாது யாரிடமும் கேட்க முடியாது விழிகளால் துழாவி அவள் சலித்த போது வாசலில் நிலவனின் பைக் சத்தம் கேட்டது.அது கேட்டவுடன் பூவினியின் முகம் பூரண சந்திரனாய் ஜொலிக்க விழிகள் இரண்டும் வாசல் நோக்கி பாய்ந்தது.



பைக்கில் வேகமாய் வந்ததால் முன்னுச்சி முடிகள் பறக்க வெயிலில் சென்று வந்ததால் சற்று வேர்த்து நெற்றியோரத்தில் வியர்வை முத்துக்கள் மினுமினுக்க ஒருகையால் போட்டிருந்த டிசெர்ட் கொலர் ஐ இழுத்து விட்டவாறு வந்தவனை இமைக்காது நோக்கிக்கொண்டிருந்தாள் பூவினி. அவள் நெஞ்சம் அவனின் கம்பீரத்தில் தடுமாறியது.



நிலவனை ரசிப்பதிலேயே தன் கவனத்தை செலுத்தியிருந்தவள் தன் அருகில் அமர்ந்து தன் செய்கைகளையே ஒருவித ஆச்சரியத்துடன் நோக்கிகொண்டிருந்த தாரணியை கவனிக்க தவறிவிட்டாள்.



உள்ளே நுழைந்த நிலவனின் பார்வையும் ஒரு நொடி வீட்டை அலசி பூவினியிடம் வந்து நிலைத்தது.அவளைப் பார்த்து முறுவலித்தவன். என்ன இரண்டு பேரும் தனியாக உட்கார்ந்திருக்கிறீர்கள்.?? என்றவன் அவள் பதில் சொல்லும் முன் இரு போய் முகம் கழுவி உடை மாற்றி விட்டு வருகிறேன் எனச் சொல்லி விட்டு வேகமாக மாடியேறி மறைந்தான்.அவன் மறைந்ததும் தான் பார்வையை திருப்பியவள் அப்போது தான் தன்னையே ஒரு குறும்புச் சிரிப்புடன் பார்த்தபடி இருந்த தாரணியை கண்டாள். ஒருகணம் திடுக்கிட்டாலும் சமாளித்துக்கொண்டு தொலைக்காட்சியில் பார்வையை பதித்தாள் பூவினி.



அவள் மனம் மட்டும் புலம்பியது.இவள் எமகாதகி ஆச்சே எதையாவது கண்டுபிடித்திருப்பாளா??? நான் வேறு ஏதோ காணாததை கண்டது போல அவனையே ஆவென்று பார்த்துக்கொண்டிருந்து விட்டேனே. இந்த குரங்கு பக்கத்தில் இருப்பதை எப்படி மறந்தேன் ?? ச்சே... இவள் பார்த்திருப்பாளா??? அவள் மனதின் கேள்விக்கு தாரணி பாட்டிலேயே பதில் கொடுத்தாள்.





அவள்

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் __ சுடச்சுட

ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன் _ இருவிழி ...........



என்று பாடவும் பூவினிக்கு திக் என்றது.இருந்தாலும் சமாளித்துக்கொண்டு



ஏய் ... சும்மா கத்தாத கழுதை தேடி வந்துடப் போகுது.



ஹ ஹ..நாம பாடுற பாட்டுக்கு கழுதை வராது கண்ணம்மா ஒரு உண்மை வேணும்னா வரும்.என்ன நான் சொல்றது.??



ஏய் ..என்ன உளர்ற??



நான் ஒண்ணும் உளறலப்பா.



அப்போ வாயை மூடிட்டு இரு.



அது என்னவோ தெரியல வினிக்கா எனக்கு பாட்டுப்பாடனும் போல ஆசை ஆசையா இருக்கு.என்று குறும்பாக கண்ணைச் சிமிட்டினாள்.



பூவினி முறைக்கவும் எதையும் கண்டுகொள்ளாமல் அடுத்த பாட்டை எடுத்து விட்டாள் தாரணி.



கண்டுபிடித்தேன் கண்டுபிடித்தேன்

காதல் நோயைக் கண்டுபிடித்தேன்............



கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்.

காதல் முகம் கண்டு கொண்டேன்..............



ஒரு பூ எழுதும் கவிதை ........



தாரிணியின் வாயில் சினிமாப் பாடல்கள் அனைத்தும் படாத பாடுபட்டன.





பூவினிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.தாரணி தன்னை கண்டு விட்டாள் என்று அவளுக்கு புரிந்து விட்டது.இதற்கு மேல் அவளை அதட்டி அடக்க முடியாது என்று புரிந்து சட்டென தணிந்து போனாள் பூவினி.



தாரணியின் கையை இறுக பற்றி அழுத்தி தரு என்றாள் கெஞ்சுதலாக.



பூவினியின் முகத்தைப் பார்த்த தாரணிக்கு அடக்க முடியாமல் சிரிப்பு பீறிட்டது.கல கலவென சிரித்தவள்.பெரியவர்கள் திரும்பி பார்க்கவும் சிரமப்பட்டு சிரிப்பை அடக்கினாள்.
 

Tharsan Thanu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
72
அதற்குள் கல்யாணி என்ன சிரிப்பு தாரணி எனவும்

அது ஒண்ணுமில்லை சின்னத்தை வினிக்கா ஒரு ஜோக் சொன்னாள் அது தான் என்றாள்.



பூவினிக்கு திக் என்றது எங்கே சின்னத்தை அது என்ன ஜோக் என்று கேட்டு விடுவார்களோ என்று நல்ல வேளை அவர்கள் எதுவும் கேக்கவில்லை. அவர்களும் இப்பருவத்தை தாண்டி வந்தவர்கள் அல்லவா?? வயதுப்பெண்கள் ஏதோ பேசி சிரிக்கிறார்கள் என்று விட்டுவிட்டார்கள்.



பூவினி மீண்டும் ஏய் தரு ...... என கெஞ்சலாக இழுக்கவும்



தாரணி சரி சரி விடு நான் ஒண்டும் கண்டுக்க மாட்டேன்.போட்டுக்கொடுக்கவும் மாட்டேன்.ஆனா ஒன்னு நான் இப்போ உனக்கு உதவுறது போல நீயும் எனக்கு உதவனும் சரியா?? என்றாள் மிதப்பாக.



ஹே .என்னடி சொல்ற எதுக்கு உனக்கு உதவனும்???



என்னோட லவ்சுக்கு தான்.



அடிப்பாவி நீ காதலிக்கிறியா என்ன?? என்ன வயசுடி உனக்கு?? என்றாள் பூவினி அதட்டலாக





உன்ன விட மூணு வயசு கம்மி என்று அசால்ட்டாக சொன்னவள் கூடவே பயப்படாத வினிக்கா இதுவரைக்கும் என்னோட ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி ஒருத்தனும் சிக்கல.அப்படி ஒருத்தன நான் சந்திச்சா தான் காதலிப்பன்.அப்போ மட்டுமே நல்லா கேட்டுக்கோ அப்போ மட்டுமே நேனுக்கு நிண்ட உதவி தேவையாக்கும்.



அவள் சொன்னதைக் கேட்டு அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட பூவினி



ஹே ..எல்லா மொழியையும் சேர்த்து கொலை செய்யாம போய் வேலையை பாருடி... என்றாள்



வினிக்கா இனி எதுக்கும் என்கிட்ட கொஞ்சம் மரியாதையாவே நடந்துக்கோ.ஏன்னா நான் எப்போ எந்த மனநிலைல இருப்பேன்னு எனக்கே தெரியாது.என்றாள் தாரணி மிரட்டலாக.





அவள் தலையில் லேசாக தட்டி எல்லாம் என் நேரம் என்று முணுமுணுத்தாள் பூவினி.



அதன் பின் பூவினிக்கும் தாரணிக்குமான நெருக்கம் மேலும் அதிகரித்தது.இருவருக்கிடையிலும் ஒரு தோழமை உருவாகியது.அவ்வப்போது தாரணி நிலவனை வைத்து பூவினியை கலாய்ப்பதும் நடக்கும்.







மெல்லிய நீரோட்டமாய் நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தன.பூவினியின் நிலவன் மீதான காதலும் வளர்ந்து கொண்டே சென்றது.அவள் கல்லூரி இறுதியாண்டு பரீட்சையும் நெருங்கியது.



ஆனால் அவளால் முழுமனதாக படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.புத்தகத்தை திறந்தாலே நிலவனின் முகம் தான் கண்முன்பு வந்து போனது.அவளது மனது முழுதும் படிப்பில் செல்லாது நிலவனையே சுற்றியது. அதனால் நிலவனை சந்திக்கும் தருணங்களை தவிர்த்தாள்.இல்லாவிடில் தினமும் தாத்தா பாட்டியை ஒரு தடவையாவது சந்தித்து உரையாடிவிட்டு வருபவள் இப்போது அங்கு போனால் நிலவனை சந்திக்க நேருமோ என்ற தயக்கத்தில் அங்கு செல்வதையே தவிர்த்தாள்.



நிலவனை சந்திக்கும் நாட்களில் அவள் மனம் மிகவும் அலைபாய்ந்தது.அவனின் வலிய கையை பற்றிக்கொண்டு கதை பேசவேண்டும். அவன் தோள் சாய வேண்டும்.அவனின் கண்ணோடு கண்கலந்து காதல் மொழி பேச வேண்டும். இப்படி இன்னும் என்னென்னவோ ஆசைகள் எல்லாம் அவள் நெஞ்சில் முட்டி மோதி எழுந்தன....



அவனை சந்தித்தால் தானே தேவை இல்லாத எண்ணங்கள் வண்டாய் மனதை குடையும். அதனால் பரீட்சை முடியும் வரை அவனை சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.அதனால் அவனை சந்திக்க கூடிய தருணங்களை முயன்று தவிர்த்தாள்.முன்பு எல்லாம் பாடத்தில் ஏதாவது சிறு சந்தேகம் என்றாலே அத்தான் என்று அவனை தேடி ஓடுபவள் இப்போது மற்ற தோழிகளிடம் கலந்து பேசி தீர்த்துக்கொண்டாள். நிலவனும் தந்தையுடன் தொழிற்சாலை நிர்வாகத்தில் பங்கெடுத்துக் கொள்ள தொடங்கியதால் அவனும் வீட்டில் நிற்கும் நேரம் குறைந்தது.அதனால் அவனை தவிர்ப்பது பூவினிக்கு இன்னும் இலகுவானது.





இப்படியே ஒரு சில மாதம் ஓடியது.தாத்தா அவளைக் காணவில்லை என்று ஒருநாள் தேடி வந்ததன் பின் நிலவன் தொழிற்சாலைக்கு பயிற்சி பெற செல்லும் நேரம் பார்த்து தாத்தா பாட்டியை சென்று பார்த்து செல்லம் கொஞ்சி விட்டு அத்தையுடனும் சற்று அரட்டை அடித்து விட்டு வருவாள்.



அன்றும் அப்படித்தான் தொடர்ந்து படித்ததில் தலைவலிப்பது போல இருக்க தாயிடம் சற்று பேசலாம் என்று சமையல் அறைப்பக்கம் சென்றாள் அங்கு வழக்கம் போல ஒருசில நாட்கள் தங்க வந்த கண்மணிப்பாட்டி உட்கார்ந்து கொண்டு மேகலாவை ஏதோ திட்டிக்கொண்டு இருந்தார்.அங்கு சென்றால் நிச்சயம் இருக்கும் தலைவலி பெரிதாகிவிடும் என்று புரிந்து நேரத்தை பார்த்தவள் இன்னும் நிலவன் வந்திருக்க மாட்டான் அதனால் அங்கு சென்று அந்த தாத்தா பாட்டியுடன் சற்று பேசிவிட்டு வருவோம் என்று முடிவெடுத்தவள் சமையல் அறைக்கு சென்று கண்மணியின் முதுகுப்புறம் நின்றவாறே தாயிடம் விழிகளால் அனுமதி பெற்று கிளம்பிவிட்டாள்.



கண்மணியின் குணத்தையும் தாய்வழி தாத்தா பாட்டியின் குணத்தையும் அசை போட்டவாறே நடந்தாள் பூவினி.அவர்களுக்குள் எவ்வளவு வித்தியாசம் கண்மணி பேசினால் கேட்பவர்களுக்கு நிச்சயம் தலைவலி வந்துவிடும்.அடுத்தவரைப் பற்றி குறை கூறிக்கொண்டே இருக்கவேண்டும் கண்மணிக்கு.அதுவும் மேகலாவின் குடும்பத்தை பற்றி புரணி பேசுவதென்றால் கண்மணிக்கு அல்வா சாப்பிடுவதைப் போல.



அதுவே அவளது தாய்வழி தாத்தா பாட்டியுடன் பேசினால் எவ்வளவு நேரம் என்றாலும் பேசிக்கொண்டே இருக்கலாம்.பாட்டி வள்ளியம்மைக்கு மூட்டுவாதம் அதனால் அவரால் சற்று நேரம் தொடர்ந்து நிற்கவோ நடக்கவோ முடியாது. அதனால் பெரும்பாலும் மூத்த மகன் வீட்டிலேயே முடங்கி இருப்பார். அப்படி வீட்டிலேயே இருந்தாலும் அவர் முகத்தில் உள்ள கனிவும் முறுவலும் ஒருபொழுதும் மறையாது. யார் சென்றாலும் இன்முகத்துடன் வரவேற்று கனிவாகவே உரையாடுவார்.ஒருபோதும் தன்னுடைய உடல் வேதனையை வெளிக்காட்டி அடுத்தவரை கஷ்டப்படுத்தக் கூடாது என்று நினைப்பவர்.அடுத்தவரின் மனம் நோக ஒரு போதும் பேசமாட்டார்.



தாத்தா குமாரசாமி இன்னொரு ரகம் தன்னுடைய தொழிலை அடுத்த தலைமுறை பொறுப்பேற்று ஒரு தொழிற்சாலையை இரண்டு மூன்றாக பெருக்கி சிறப்பாக நடத்துவதால் முழுப் பொறுப்பையும் அவர்களிடமே ஒப்படைத்து விட்டு தான் விலகிக் கொண்டதுடன். தன்னுடைய வாழ்வை சமூக சேவையிலும் ஆலய வழிபாட்டிலும் செலுத்திக் கொண்டு இருப்பவர்.ஆலயங்களுக்கு சென்று தெய்வங்களுடைய கதையை பக்தர்களுக்கு எடுத்து கூறி பிரசங்கம் செய்வதும். பெரிய புராணம் கந்தபுராணம் ஆகியவற்றை புராணபடனம் செய்வதும் அவருக்கு மிகப் பிடித்தமான பொழுது போக்கு.வீட்டில் சும்மா அமர்ந்திருக்கும் பொழுதிலும் கையில் ஒரு புத்தகத்துடனேயே இருப்பார்.இராமாயணம் மகாபாரதம் எல்லாம் அவருக்கு தண்ணீர் பட்டபாடு. அவருடன் பேசினால் நிறைய அறிவு சார்ந்த விடயங்களை அறியலாம்.



குமாரசாமியும் வள்ளியம்மையும் யாருக்கிடையிலும் பாகுபாடு பாராட்ட மாட்டார்கள்.அந்த குடும்பத்தில் எல்லோருமே அப்படித்தான்.வீதியால் போகும் ஐஸ் வண்டியில் ஐஸ் வாங்கினால் குமாரசாமி தன்வீட்டுப் பிள்ளைகளுக்கு மட்டும் வாங்க மாட்டார்.அந்த வீதியில் விளையாடிக்கொண்டு இருக்கும் அத்தனை குழந்தைகளையுமே அழைத்து அனைவருக்குமே வாங்கிக் கொடுப்பார்.



அதுவே கண்மணி என்றால் ஒரு கிலோ பால்கோவா வாங்கி வந்தால் கூட தாரணியும் பூவினியும் பேசிக்கொண்டு இருந்தாலும் பூவினியை மட்டும் தனியே அழைத்து கொடுத்துவிட்டு போவார்.பூவினிக்கு தான் சங்கடமாகப் போகும்.அந்த குடும்பத்து பிள்ளைகளுக்கு எதுவானாலும் பகிர்ந்து உண்டு தான் பழக்கம்.பூவினி அந்த பால்க்கோவாவை தொட்டுக்கூட பார்க்க மாட்டாள்.



என்ன இருந்தாலும் கண்மணிக்கும் பூவினியின் தாய்வழி தாத்தா பாட்டிக்கும் ஒரு ஒற்றுமை இருந்தது.அது என்னவென்றால் பூவினியின் மீது அவர்களுக்கு இருந்த பாசம் தான்.கண்மணிக்கு பூவினியின் மேல் மிகவும் அன்பு. அவர் அருகில் இருக்கும் ஒரே ஒரு பேத்தி பூவினி தானே.



பூவினியிடம் அவருக்கு பிடிக்காத விடயம் அவள் தாய்வழி உறவுகளுடன் அதிக ஒட்டுதலுடன் இருப்பது தான்.அவளை அவ் உறவுகளிடம் இருந்த சற்று விலக்கி வைக்க கண்மணியும் எவ்வளவோ முயன்று பார்த்தார் ஆனால் முடியத்தான் இல்லை.அவளின் தாய்வழி உறவுகள் மீதான பாசம் அவள் வளர வளர அதிகமாகிக் கொண்டு தான் போனது. கண்மணி அவர்களை பற்றி குறை கூறுவதால் அவள் கண்மணியிடமிருந்து ஒதுங்கத் தொடங்கவும் எங்கே தன் ஒரே ஒரு பேத்தி தன்னை விட்டு முழுதுமாக விலகி விடுவாளோ என்ற பயத்தில் கண்மணி அந்த முயற்சியை குறைத்துக் கொண்டார்.
 
Top