• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Tharsan Thanu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
72
பகுதி _ 8


பூம்பொழில்

பெயருக்கு ஏற்றாற்போல் பார்க்கும் இடமெல்லாம் பசுமை கொட்டிக் கிடக்கும் அழகிய கிராமம். அது தான் அவர்கள் பூர்வீகம்.....



தர்மராஜ் ஒரு சந்தர்ப்பத்தில் அங்கிருந்து வெளியேறி சென்னையில் குடியேறினாலும் ஒவ்வொரு வருடமும் அவர் தாயின் திதியின் போது மட்டும் குடும்பத்துடன் ஒரு வாரம் அங்கு வந்து தங்கி தாயின் சமாதியில் ஐயரைக் கூப்பிட்டு படையல் படைத்து செய்ய வேண்டிய சாங்கியங்களைச் செய்துவிட்டுப் போவது வழக்கம்.



வருடத்தில் ஒரு முறை வந்து தங்குவதற்காகவே அவர்கள் பூர்வீக வீட்டை சுத்தம் செய்து பராமரிக்க ஒரு வயதான பெண்மணியையும் ஏற்பாடு செய்திருந்தார்.



ஒவ்வொரு வருடமும் தங்கள் கிராமத்திற்கு செல்வது என்றால் சுபிக்கு அவ்வளவு பிடிக்கும். மலர்க்கொடி, வள்ளி, தேன்மொழி என்று அவளுக்கு அங்கு சில தோழிகளும் இருந்தனர். கிராமத்தில் தங்கியிருக்கும் அந்த ஒரு வாரமும் தோழிகளுடன் சேர்ந்து அந்த கிராமத்தையே ஒரு கலக்கு கலக்கி விடுவாள்.



பார்க்கும் பெரியவர்கள் எல்லாம் யாரு?? நம்ம தர்மா பொண்ணா?? என்று ஆசையுடன் கன்னம் தடவி கதைகேட்க அந்த கிராமத்தில் அவள் தன்னை ஒரு தேவதையாய்.. உணர்வாள். நகரத்து சாயம் படிந்த அவள் ஆடை அணிமணிகளை அவள் கிராமத்து தோழிகள் வாய்பிளந்து பார்க்கும் போது மிகவும் பெருமையாய் இருக்கும்.



பூம்பொழிலின் கலப்படமற்ற சுத்தமான காற்றும் வயல்வெளியும் அங்கு ஓடும் சிறு ஆறும் ஆடு மாடுகளும் என்று அவளுக்கு பூம்பொழிலை மிகவும் பிடிக்கும். அதுவும் அவர்கள் குல தெய்வம் கோவிலை அண்டியுள்ள பரந்த வயல்வெளி அவளின் மிகப்பிரியமான இடம்.





அவர்கள் குல தெய்வம் வைரவர். முன்னால் பரந்து விரிந்த வயல் வெளியும் அதன் அருகே ஒரு மொட்டைக் கிணறும் இருக்க அதன் கரையினிலே சிறு பாறை மேட்டில் அவர்கள் குல தெய்வம் குடி கொண்டிருந்தார்.



அந்த மொட்டைக் கிணறு சிலபல உயிர்களைப் பலிவாங்கியிருக்க அந்தப் பக்கமே விளையாடப் போக கூடாது என்று சிறுவர்களுக்கு எச்சரிக்கப்பட்டிருந்தது.



ஆனால் அந்த பசிய வயல்வெளியும் அதுவும் குறிப்பாக இவர்கள் செல்லும் அந்த தருணத்தில் கதிர் தள்ளி தலை சாய்த்து நிற்கும் நெற்கதிர்களும் சுபாங்கிக்கு மிகவும் பிடிக்கும். அந்த வயல்வெளியில் ஓடி விளையாடுவது அவளுக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு. அதனால் அங்கு விளையாட வர மறுக்கும் தோழிகளையும் வற்புறுத்தி அழைத்துக்கொண்டு போவாள்.



அந்த குல தெய்வம் கோவிலில் தான் அவள் பிரபாவதியை சில தடவைகள் கண்டிருக்கிறாள். இவளைக்கண்டு கனிவுடன் புன்னகைக்கும் அவரை அவளுக்கு அப்போது யாரென்றே தெரியாது.அந்த ஊரின் பெரிய வீட்டுப் பெண்மணி என்ற அளவிலேயே அவளுக்கு அவரை தெரிந்திருந்தது.



அந்த ஊர் முழுதும் வட்டமடிக்கும் அவளுக்கு அந்த கிராமத்தின் பெரிய வீட்டை தெரியும். பசிய மரக்கூடல்களின் நடுவே கம்பீரமாய் நிற்கும் அந்த பங்களாவை அவள் பல முறை தூரத்தில் நின்று ரசித்திருக்கிறாள். எனவே அந்த வீட்டில் குடியிருக்கும் பெண்மணி என்ற பிரமிப்புடனே அவள் பிரபாவதியை நோக்குவாள்.



ஒரு தடவை தந்தையிடம் “ அந்த பெரிய வீடு யாருதுப்பா?? பெரிய தோட்டத்துக்கு நடுவில சந்தன நிறத்துல.... ரொம்ப அழகுப்பா... குட்டி அரண்மனை போல.... இந்த ஊருல எல்லாரையும் உங்களுக்கு தெரியும்.. எல்லாரும் உங்க கூட பாசமா பேசுறாங்க.... அந்த பெரிய வீட்டுக்காரங்களும் உங்களுக்கு பழக்கமாப்பா?? அப்படின்னா ப்ளீஸ் அந்த வீட்ட உள்ள போய் பார்க்கலாமா?? அவங்க கிட்ட கேட்டு பர்மிஷன் வாங்கி தாறீங்களாப்பா???



தந்தையின் முக மாறுதலை சற்றும் கவனிக்காமல் கண்களில் ஆர்வப் பளபளப்புடன் பேசிய சுபாங்கி பேச்சை முடித்த மறு நொடி தந்தையிடமிருந்து முதுகில் நாலு அறைகளை வாங்கினாள்.



இதுக்கு மேல அந்த வீடு இருக்குற திசைப்பக்கம் கூட நீ திரும்பக்கூடாது.அப்படி அந்தப் பக்கம் போனேன்னு கேள்விப்பட்டேன் உன் காலை ஓடைச்சுடுவேன்.. ராஸ்கல்.... அந்த வீட்ட இவ போய்ப் பார்க்க போறாளாம்....ஹ்ம்ம்....என்று உறுமியவர் மனைவியிடம் திரும்பி



என்னடி புள்ள வளர்த்து வைச்சிருக்கே...... என்று பாய்ந்தார். சிவகாமி சுபாங்கியை தன்னுடன் சேர்த்து அணைத்தபடி அமைதியாய் இருக்கவும்... அவளுக்கு புரியுற மாதிரி சொல்லி வை. இனி இவ அந்த வீட்டுப் பக்கம் விளையாடுறேன்னு போனா நீ தொலைஞ்ச..... என்று ஒரு விரல் உயர்த்தி கர்ஜித்து விட்டுச் சென்றார்.


அந்த சம்பவம் சுபாங்கியின் மனதில் பசுமரத்தாணியாய் பதிந்துவிட்டது.அதுவரை அவள் தந்தை அவள் மீது அவ்வளவு தூரம் ஒரு நாளும் கோபம் கொண்டதில்லை. முதல் தடவை கைநீட்டி அடிக்கும் அளவிற்கு கோபம் கொண்டிருக்கிறார்.


அன்று இரவு படுக்கையிலும் விசித்துக்கொண்டிருந்த சுபாங்கி தன்னை தட்டிக் கொடுத்து சமாதானப்படுத்திய தாயின் கரத்தை இறுகப் பற்றியபடி அப்பா ஏன்மா அவ்ளோ கோபப்பட்டார் என வினவினாள்....



ஒரு கணம் திணறிய சிவகாமி பின்..அது....அது.. எங்க சுபி நல்ல பொண்ணு தானே!!! அவ இப்படி அடுத்தவங்க வீட்டுக்குள்ள போய் பார்க்கணும் என்று ஆசைப்பட்டா.... அது தப்புடா..... என் பொண்ணு இப்படி தப்பு பண்ணுறதா என்று அது தான்டா அப்பாவுக்கு ரொம்ப கோபம் .. என்று சமாளித்தார்.. அப்போது சிறு பெண்ணான சுபிக்கும் அந்த சமாதானம் போதுமானதாய் இருக்க.



மறுநாள் காலையே தந்தை முன் சென்று அப்பா.... சுபி இனி தப்பு பண்ண மாட்டா....இனி இப்படி அடுத்தவங்க வீட்ட உள்ள போய் பார்க்கணும்னுலாம் ஆசைப்பட மாட்டா ..... என்று தந்தைக்கு சமாதானம் சொன்னாள்.


அந்த சமாதானத்தில் அவர் கோபம் எல்லாம் பறந்து போய் விட அவளை மடியில் இருத்தி என் பொண்ணு தங்கம் டா....சாரி டா அப்பா நேத்து என் தங்கத்தை அடிச்சுட்டேன் என்று மன்னிப்பு கேட்டவர் ... இனி அந்தப்பக்கம் எல்லாம் விளையாட போகாதே என்ன.... என வினவவும் போக மாட்டேன்பா என்று உறுதியளித்தாள் குட்டிப் பெண் சுபி.

தந்தையிடம் சொன்னது போலவே அதன் பிறகு நடந்தும் கொண்டாள்.





ஆண்டுகளின் அதிவேக ஓட்டத்தில் சுபாங்கி பெரிய பெண்ணாகிவிட அதற்கு அடுத்த வருடம் ஊருக்கு கிளம்பும் போது சுபாங்கியை கூட அழைத்துச் செல்ல தர்மராஜ் சற்றுத் தயங்கினார்.


ஆனால் குழந்தை போல் குதித்துக்கொண்டு கிளம்பிய மகளின் ஆர்வத்தைப் பார்த்து மனம் கனிந்துவிட அந்த ஆர்வத்தைக் குலைக்க மனமின்றி அழைத்துப் போனார்.
 

Tharsan Thanu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
72
வழக்கம் போல அவளைக்கண்டதும் அவள் தோழிகள் வந்துவிட ரொம்ப தூரம் போய்டாதே சுபிம்மா. அருகிலேயே விளையாடு என்று எச்சரித்த தந்தையிடம் “சரிப்பா” என்று சமத்தாய் தலையசைத்து விட்டு சுபி தோழிகளை அழைத்துக் கொண்டு விளையாடச் சென்ற இடம் அந்த மொட்டைக் கிணறு உள்ள வயல்வெளி.



ஒரு வேளை அந்த இடத்தில் தான் அவள் எதிர்காலம் தீர்மானிக்கப்பட வேண்டும் என அவர்கள் குல தெய்வம் ஆசைப்பட்டது போலும்.



வழக்கம் போல தோழிகளுடன் வயல்வெளியில் ஓடிப்பிடித்து விளையாடிய போது தேன்மொழி மட்டும் அவள் பிடிக்கு சிக்காமல் தப்பித்து ஓட ஏய்... தேனு.... உன்னைப் பிடிச்சுக் காட்டுறேன் பாரு....... என்ற சவாலுடன் அவளைப் பிடிக்க புள்ளி மானாய் பாய்ந்தோடியவள்.


ஹேய்ய்..... அந்தப்பக்கம் கிணறுடி.. பார்த்து...என்று தோழிகள் எச்சரிக்கும் போதே கட்டு எதுவும் இன்றி மொட்டையாய் இருந்த கிணறினைக் கவனிக்காது ஒரு காலை வைத்துவிட ஓடிய வேகத்தில் தலை குப்புற கிணத்தினுள் விழுந்தாள். நல்ல வேளை நீர் நிறைந்திருந்ததால் தலை சிதறவில்லை. ஆனால் ஒரு முறை அடி ஆழம் வரை சென்று தொட்டு மூச்சுத்திணறி மேலே வந்தாள்.


சுபாங்கிக்கு சும்மாவே நீர் என்றால் பயம் அதுவும் அந்த கிணற்றில் மூழ்கி சில பேர் இறந்ததாக கேள்விப்பட்டதும் நினைவு வர அச்சத்தில் அவள் உடல் விறைத்தது. கிணறின் ஆழமான நீர் வேறு “சளக்.... சளக்......” என்ற சப்தத்துடன் அவளை உள்ளே இழுக்க முயன்று கொண்டிருக்க கிணற்று சுவரில் வளர்ந்திருந்த சிறு செடியைப் பற்றியபடி மூழ்கிவிடாமல் போராடிக்கொண்டிருந்தாள். அந்த செடியும் சற்று அழுத்தி இழுத்தால் கையுடன் வந்துவிடுவேன் என்பது போல் மிரட்டிக் கொண்டிருந்தது.



அலறி அலறி அவளுக்கு தொண்டை வறண்ட போது மேலே ஒரு உருவம் தெரிந்தது. அவள் நம்பிக்கையும் ஆர்வமுமாக பார்க்கும் பொழுதே அவளை சற்று நகரச் சொல்லி சைகை செய்தவன் மறு கணம் கிணற்றினுள் குதித்தான். அவன் குதித்ததால் தெறித்த நீர்த் திவலைகளினூடே தான் அவள் முதன் முதலில் தனஞ்சயனைப் பார்த்தாள். அந்தக்கணம் ஏதோ அவளை காக்க வந்த காவலனாய் அவன் தோன்ற பாய்ந்து அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.



ப்ளீஸ் ..ப்ளீஸ்... என்னைக் காப்பாத்துங்க.... என...எனக்கு ரொம்ப பயமாய் இருக்கு என்ற அலறலுடன்...



அவன் ஒன்றும் ரொம்ப பெரியவன் இல்லை. அவளை விட ஓர் ஐந்தாறு வயது பெரியவனாய் இருந்திருப்பான்.ஆனால் ஒரு கையால் அவளை அணைத்துப் பிடித்து மறுகையால் சமாளித்து நீந்தியவாறே



ஏய்.. இப்படி என்னை நீந்த விடாமல் இறுக்கிப் பிடிச்சின்னா ரெண்டு பேருமே சேர்ந்து பரலோகம் போக வேண்டியது தான்.என்றவன் அவள் ஆ.....என்று மிரண்டு விழிக்கவும் சிரித்தவன்



ஹே பயப்படாதே...நான் உன் கூடத்தானே இருக்கிறேன். நான் உன்னைக் காப்பாற்றுகிறேன். முதலில் நான் சொல்வதைக் கேள். என் முதுகில் ஏறி கழுத்தைப் பிடித்துக்கொள் என்றவன்....அவள் அவன் சொன்னது போல் முதுகில் தவழ்ந்து கழுத்தை இறுக்கி பிடிக்கவும்...



அம்மா தாயே.....நீ என் கழுத்தை நெறித்தே கொன்று விடுவாய் போல சற்று இலகுவாக பிடிம்மா....என்று இலகுவாக பேசியபடியே ஒரு வழியாக அவளைக் காப்பாற்றி மேலே அழைத்து வந்தான்.



பயத்தினாலும் நீரில் நனைந்ததாலும் சுபியின் உடல் கிடுகிடுவென்று ஆடிக்கொண்டிருந்தது. அதை கண்டவன் தன் புல்லட்டில் வைத்திருந்த ஒரு துண்டைக் கொண்டு வந்து கொடுத்து இந்தா துவட்டிக்கொள் என்றவன் அவள் இரு கரத்தையும் இறுக பொத்தியபடி இருக்கவும் தேன்மொழியிடம் கொடுத்து துவட்டி விடச் சொன்னான்.அதன் பின்பே மற்றவர்களிடம் திரும்பி



ஏன் இங்கு வந்தீர்கள்?? உங்களுக்கு விளையாட வேறு இடமே இல்லையா?? இந்த கிணறு ஆபத்து என்று தெரியாதா என்று கடிந்து கொண்டான். அவள் தோழி தேன்மொழி நாங்கள் சொன்னோம்னா..... இந்த சுபாங்கி தான் வற்புறுத்தி அழைத்து வந்தாள் என சுபியைப் போட்டுக்கொடுக்கவும்...அவளை முறைத்தவன் அறிவில்லை உனக்கு ..இந்த கிணறு எவ்வளவு ஆபத்தானதுன்னு தெரியாதா?? நான் மட்டும் வரலன்னா இந்நேரம் .....என்று திட்டிக்கொண்டு போனவன் ஏதோ எண்ணினாற் போல் சற்று நிறுத்தி.....


ஊருக்கு புதுசா?? யார் வீட்டுக்கு வந்திருக்க?? என்று விசாரித்தான். கிணற்றில் விழுந்த அதிர்ச்சியிலும் அவனின் அக்கறை மற்றும் உரிமை கலந்த அந்த அதட்டல் என்று எல்லாவற்றிலுமாய் திகைத்துப் போய் இருந்த சுபி பேச்சு வராமல் தடுமாற


என்ன அண்ணே இப்டி கேக்குறீங்க.... உங்க மாமரு பொண்ண உங்களுக்கு தெரியாதாக்கும் என்றாள் குறும்புக்கார வள்ளி.....


மாமன் பொண்ணா என்று ஒரு கணம் திகைத்தவன் விழிகள் ஒருகணம் இடுங்கி பின் எதையோ அறிந்து கொண்ட பாவனையில் விரிய அவன் இதழ்களில் ஒரு குறும்புப் புன்னகை உதித்தது.



இவ்ளோ அழகா இருக்கும் போதே நினைச்சிருக்கணும்.. நம்ம மாமன் பொண்ணா தான் இருக்கணும் என்று....என்று சிரித்தவன் அவளிடம் நான் யாரென்று தெரியுமா உனக்கு என்று வினவினான்....ஓர் குறுகுறுப்புடன்...



அவள் தலை மறுப்பாய் அசையவும் அதை எதிர்பார்த்தவன் போல் அவன் உதடுகளில் ஓர் அலட்சியம் கலந்த கோபப் புன்னகை உதித்தது. அதே புன்னகையுடன்.....

இனி மறக்காதே!!!!!!!!!!! என்றவன் உன் அப்பா அதான் என் மாமாவிடம் போய் சொல்லு உன் அத்தான் தான் உன் உயிரைக் காப்பற்றினான் என்று.......என்று உரைத்தவன் அதற்கு மேல் அங்கு ஒரு கணமும் நில்லாமல் விரைந்துவிட்டான்.



அவன் எதை எண்ணி “இனி மறக்காதே” என்று சொன்னானோ தெரியாது ஆனால் சுபாங்கி அதன் பின்பு அவனை கணமும் மறக்கவில்லை.... அவன் நினைவை இதுநாள் வரை நெஞ்சில் சுமந்தபடியே தான் இருக்கிறாள்.சுபியின் கை நெஞ்சில் புரண்ட அந்த சங்கிலியில் கோர்த்திருந்த அந்தப் பொருளை நிரடியது. அன்று அவளைக் காப்பாற்றிய போது ஏதோ ஒரு தருணத்தில் அவள் கையோடு வந்துவிட்ட அவன் மோதிரம்..... அவள் எண்ணம் மீண்டும் அன்றைய நாளுக்குப் போனது.



அன்று அவன் கொடுத்த துண்டினால் தன்னைப் போர்த்தபடியே சொட்ட நனைந்த உடையுடன் வீட்டுக்கு சென்ற சுபாங்கியைக் கண்டு பதட்டத்துடன் என்னாச்சு?? என்று வினவிய தந்தையிடம்


நா அந்த மொட்டைக் கிணத்துக்குள்ள விழுந்துட்டேன் பா.என்று அழுகையுடன் கூறிய சுபாங்கி தொடர்ந்து நல்ல வேளை அத்தான் அந்த வழியால வந்ததால அவர் தான் கிணத்துல குதிச்சு என்ன காப்பாத்தினார் பா என்றுரைத்தாள். அழுகையும் நன்றியுணர்ச்சியுமாக .....



அவளின் முதல் பேச்சில் சுபிம்மா என்று பதட்டத்துடன் அவளை நெருங்கிய தர்மராஜ் அவளின் பேச்சின் பிற்பாதியில் உறைந்து போய் அப்படியே நின்றுவிட்டார். கண நேர மௌனத்தின் பின் அத்தானா??? என்றார் இறுகிவிட்ட குரலில் ....


சுபி கள்ளம் இன்றிய வெள்ளை மனத்துடன் ஆமாப்பா.... உங்களை கூட மாமான்னு தான் சொன்னார். உன் அத்தான் தான் உன் உயிரைக் காப்பாத்தினான்னு உன் அப்பாகிட்ட போய் சொல்லு என்று சொன்னார்ப்பா.. நம்ம தேனு கூட அவர் எனக்கு அத்தான் முறையாகணும்னு சொன்னாப்பா... என்று பேசிக்கொண்டே போனாள். ஹீரோ போல் கிணற்றுள் குதித்து அவளைக் காத்த அந்த நெடியவன் அவளுக்கு உறவினன் என்று அறிந்த உற்சாகம் அவளுக்கு.


ஆனால் தர்மராஜ் எதுவும் பேசவில்லை. முகம் இறுக சில கணங்கள் மௌனம் காத்தவர் பின் சுபி உள்ளே போ... என்றார்.அழுத்தமான குரலில் அவள் தயங்கி கூட வந்த தோழிகளைப் பார்க்க அவர்கள்
நா..நாங்கள் நாளை வருகிறோம் சுபி....என்றவாறு விட்டால் போதும் என்று விரைந்துவிட்டனர்.

சுபாங்கி மெல்ல உள்ளே செல்லவும் அவள் தோளில் கிடந்த துண்டைக் காட்டி யாரது?? என்றார் தர்மராஜ். பயங்கர அமைதியான குரலில்...

இது அந்த அத்தானோடது தான்பா.... துவட்டிக்க தந்தார்... என சுபி பதில் சொல்லவும் .. கைநீட்டி அவள் பேச்சை நிறுத்தியவர் ஒருவிரலால் அந்த துண்டை எடுத்துவிட்டு
ம்ம் ...உள்ளே போ என்றவர்... சிவகாமி அவளை தலைக்கு குளிக்க வை. என்றார். சிவகாமி வெளிறிய முகத்துடன் அவளை அழைத்துச் சென்றார். தாயின் அச்சத்தில் வெளிறிய முகத்தைப் பார்த்து ...

 

Tharsan Thanu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
72
என்னம்மா ரொம்ப பயந்துட்டீங்களா?? அது தான் நான் தப்பிவிட்டேனே.........அத்தான் என்னைக் காப்பாற்றி விட்டாரே .... இனி அந்தப் பக்கமே விளையாடப் போக மாட்டேன்மா.. டோன்ட் வொர்ரி. என்று தாயின் அச்சத்திற்கு தானே காரணம் கண்டுபிடித்து தாயை சமாதானப்படுத்தினாள்.


ஆனால் குளித்துவிட்டு அவள் வெளியே வந்த போது தோட்டத்தில் அவள் போர்த்து வந்த தனஞ்சயனின் துண்டு தீயில் எரிவது தெரிந்தது . அந்த தீயின் ஜுவாலையை விழிகளில் பிரதிபலித்தபடி அதற்கு எதிரே அவள் தந்தை நின்று கொண்டிருந்தார்.


அப்போது தான் ஏதோ விபரீதம் என்று அவளுக்கு உறைத்தது. அதன் பின் அன்று யாரும் எதுவும் பேசவில்லை... ஓர் அசாத்திய மௌனமே நிலவியது.



மறுநாள் காலை அவள் பாட்டியின் திதி. தர்மராஜ் அமைதியாகவே அனைவரையும் அழைத்துக்கொண்டு தாயின் சமாதிக்கு போனார்.அங்கு உணவு சமைத்து பொங்கலிடும் தருவாயில் அந்த புல்லட்டின் ஒலி கேட்டது.



அவள் எதிர்பார்த்தது போலவே தனஞ்சயன் தான்.பின்னால் அந்த பெரிய வீட்டுப் பெண்மணியை ஏற்றி வந்தவன் சற்று தூரத்திலேயே வண்டியை நிறுத்திவிட்டு அங்கேயே நின்றான். அந்த பெண்மணி மட்டும் அவர்களை நோக்கி வந்தார். அவர் கைகளிலும் படையல் பொருட்கள் அடங்கிய தட்டு இருந்தது.



இவர் ஏன் நம் பாட்டிக்கு படையல் செய்கிறார் என அவள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் தந்தை அவர் கையில் இருந்த தட்டை தட்டி வீழ்த்தினார்...



படையல் பொருட்கள் எல்லாம் மண்ணில் சிதறின. அண்ணா...... என்று அவர் விசும்பும் குரலில் அழைக்க ... சீ...வாயை மூடு....யார் யாருக்கு அண்ணா??? இந்த உறவு செத்து பலவருசமாச்சு.... என்று அவள் தந்தை கர்ஜித்தார்...



என் அம்மாவுக்கு படையல் போடக் கூட எனக்கு உரிமை இல்லையா? என பிரபாவதி கதறி அழ... குடும்ப கௌரவம்.. மான ரோஷம் எதுவும் இல்லாத ஒடுகாலிக்கெல்லாம் என்னடி அம்மா.... என் அம்மாவுக்கு நான் ஒரு பையன் தான். அவர் பெண் செத்து பலவருடங்கள் ஆகிவிட்டது என்று உருமியவர்...


இது என் நிலம் ...இங்கு ஒரு கணமும் நீ நிற்கக் கூடாது. அந்த தகுதி உனக்கில்லை .....உடனே இங்கிருந்து போ!!! என்று விரட்டினார்.. சற்று தள்ளி நின்று இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த தனஞ்சயன் ஓர் விரைவுடன் அவர்களை நெருங்கி


ஹ்ம்ம்.. சாதாரண மனிதப்பண்பு கூட இல்லாத உங்களைப் போய் எதற்காக இவர்கள் இவ்வளவு தூரம் மதிக்கிறார்கள் என்று சத்தியமாய் எனக்குப் புரியவில்லை... என்று ஏளனக் குரலில் உரைத்தவன்...


தாய் “தனா” என அதட்டவும் ஹ்ம்ம்..... எவ்வளவு பட்டாலும் உங்களுக்குப் புத்தியே வராதாம்மா?? என்று தாயையும் லேசாகக் கடிந்துவிட்டு .. வாங்கம்மா..... என்று அவரின் தோளை அணைத்து அழைத்துச் சென்றான்.


அனைத்தையும் விழி விரித்துப் பார்த்துக்கொண்டிருந்த சுபாங்கிக்கு அன்றுதான் தான் அவர்களுக்கிடையில் உள்ள உறவின் அடிப்படை புரிந்தது.


அதற்கு மேல் அங்கு ஒரு கணமும் தாமதிக்காமல் தர்மராஜ் அனைவரையும் அழைத்துக் கொண்டு உடனே சென்னைக்கு கிளம்பி விட்டார்.


அதன் பிறகு தந்தை தன்னை அந்த ஊருக்கே அழைத்து வரப்போவதில்லை என்பதை அறியாமல் ஜன்னல் வழியே தூரத்தில் தெரிந்த வயல்வெளியை பார்த்து ரசித்துக்கொண்டு வந்த சுபாங்கி சட்டென ஏதோ தோன்றியவள் போல தன் சிறு பர்சை எடுத்து திறந்தாள். உள்ளே இருந்து நீலக்கல் பதித்த தனாவின் மோதிரம் கண் சிமிட்டியது.



அன்று அச்சத்தில் கரத்தை இறுகப் பொத்தியபடியே இருந்தவளுக்கு வீட்டுக்கு வந்த பின் தான் தன் கரத்தினுள் அவன் மோதிரம் புதைந்திருப்பது தெரிந்தது. தந்தையிடம் கூற வேண்டும் என்று எண்ணியவள் அவன் துண்டை தந்தை எரிப்பதைப் பார்த்து அதிர்ந்து எதுவும் கூறாமல் விட்டுவிட்டாள்.



மறுநாள் அவனைக் கண்டு அவனிடம் கொடுக்க வேண்டும் என்று எண்ணினாள்.மறுநாள் அவள் வீட்டை விட்டு வெளியே செல்லவே தர்மராஜ் மறுத்துவிட்டார். அவளைத் தேடி வந்த தோழிகளிடம் அவளுக்கு ஜுரம் என்று கூறி அனுப்பி விட்டார்.



தந்தையின் புதிரான நடவடிக்கையால் தந்தையிடம் எதையும் கூற சுபாங்கிக்கு துணிவு வரவில்லை.வேறு வழியின்றி அந்த மோதிரம் சுபாங்கியின் சிறு பர்சிலேயே குடி கொண்டது. காலப் போக்கில் மெதுவாக சுபியின் நெஞ்சில் மறைவாக குடிகொண்டுவிட்டது. அந்த மோதிரத்தைப் பார்க்கும் போதெலாம் “இனி மறக்காதே என் மாமன் மகளே !!!” என்று உரைத்த அந்த கம்பீர உருவத்தின் முகம் அவள் மனக் கண்ணில் தோன்றும்..அப்போது சொல்லிக் கொள்வாள். நான் மறக்கவில்லை.. நீங்களும் என்னை மறக்காவிட்டால் தேடி வாருங்கள் அத்தான் என்று...



அவனும் வந்தான் தான். ஆனால் அவள் எதிர் பார்த்தது போல் அவள் மேல் கொண்ட காதலினால் வரவில்லை.அவள் தந்தை மேல் கொண்ட கோபத்தில் வந்தான். அவள் தந்தையைப் பழிவாங்க அவளை ஓர் ஆயுதமாக நினைத்தானே தவிர அவளின் மனதையோ அதன் உணர்வுகளையோ அவன் சற்றும் மதிக்கவில்லை.ஆக மொத்தத்தில் அவளை ஓர் பலிக்கடாவாக தான் அவன் மணந்து கொண்டான். ம்ஹும்.... தன் பழி தீர்க்க பயன்படுத்திக்கொண்டான்.



அதை உணர்ந்த அக்கணமே அத்தனை வருடங்களாய் நெஞ்சில் பொத்தி வைத்து வளர்த்த அவன் மீதான அவள் காதல் காயம்பட்டுச் சுருண்டது. மாறாக அவள் தன் மானம் சிலிர்த்தெழுந்தது.


என் மனதில் நீயில்லை....என்று தெளிவாக உரைத்தவனிடம் என் மனதில் இத்தனை வருடங்களாய் நீ மட்டும் தான் இருக்கிறாய்...என்று உரைத்திட அவள் தயாரில்லை.

எதற்காகவும் அவள் சுயமரியாதையை இழக்க மாட்டாள்.. அது காதலுக்காக என்றாலும் கூட....


வேதனையுடன் விழிகளை இறுக மூடிக்கொண்டாள் சுபாங்கி.....அவள் மூடிய விழியோரம் சில நீர் முத்துக்கள் உருண்டு விழுந்தது......அவள் மனம் அவனிடம் தான் என்று அவளாக ஒரு போதும் அவனிடம் காட்டிக்கொள்ள மாட்டாள். அவள் முகம் பிடிவாதத்தில் இறுகியது...

அவள் பிடிவாதம் வெல்லுமா?? இல்லை காதலிடம் அனைத்தும் தோற்குமா???

 
Top