• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பஞ்ச பூத கோவில்களும் அதன் சிறப்புகளும்.

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
பஞ்ச பூத கோவில்களும் அதன் சிறப்புகளும்.

ஐம்பெரும் பூதங்களின் தன்மையின் அடிப்படையில் ஆலயங்களை அமைத்துள்ளனர் நம் முன்னோர்கள். பொதுவாகவே சிவலிங்கம் அகண்டமானது என்கிறது ஆன்மிகம்.


அதாவது பிருதிவி (மண்), அப்பு (நீர்), தேயு (நெருப்பு) , வாயு, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களிலும் பரந்து விளங்குவதே சிவலிங்கம் ஆகும், இவ்வுண்மையை மக்களுக்கு உணர்த்தும் பொருட்டு ஐம்பெரும் பூதங்களின் அடிப்படையில் ஐந்து தலங்களை அமைத்தனர் பெரியோர்கள். அவை

1. காஞ்சிபுரம்,

2. திருவாரூர் (மண்)

3. திருவானைக்கால் (நீர்)

4. திருவண்ணாமலை (நெருப்பு)

5. காளகஸ்தி (காற்று -வாயு)

6. சிதம்பரம் (வானம்) ஆகும்.

இவை அனைத்தும் தமிழ்நாட்டின் வடபகுதியில் அமைந்த ஆலயங்கள் ஆகும், இவை போன்ற தென்பாண்டி நாட்டிலும் பஞ்ச பூதக் கோவில்கள் அமைந்துள்ளன, அவை

1. சங்கரன்கோவில் - மண்

2. தாருகாபுரம் - நீர்

3. கரிவலம் வந்தநல்லூர் - நெருப்பு

4. தேவதானம் - வானம்

5. தென்மலை - காற்று

இவை அனைத்துமே சிவன் கோவில்கள் வீற்று இருக்கும் இடமாகும்.



1- சங்கரன்கோவில் (மண் - பிருதிவி)

இறைவன் : சங்கரலிங்கர்

இறைவி : கோமதி அம்பாள்

உயிர்கள் தோன்றுவதும் மறைவதும் மண்ணில்தான், மனிதன் நல்லவனாவதும் தீயவனாவதும் இம்மண்ணில் தான். இத்தகு மண்ணின் சிறப்பை உயர்த்த மண் தத்துவத்தில் கோவில்கள் அமைந்துள்ளன, இத்தத்துவத்திற் கிணங்க அமைந்தது தான் சங்கரன்கோவில் என்ற சங்கர நாராயணர் கோவில் ஆகும், சங்கரரும், நாராயணரும் வேறு வேறு அல்லர், இருவரும் ஒருவரே என்பதை தேவிக்கு உணர்த்த மேற்கொண்ட வடிவமே சங்கரநாராயணர் வடிவம் ஆகும்,

இங்கு சிவன் பாதியாகவும், திருமால் பாதி உடம்பாகவும் காட்சி அளிக்கின்றனர், பாண்டி நாட்டின் அரசனான உக்கிரன் என்ற அரசனால் பாண்டிய நாட்டின் தென்பகுதியில் அசிரீரி வாக்கு கேட்டு அம் மன்னன் புன்னவனக்காடாக இருந்த இந்த இடத்தில் சிவாலயம் அமைத்து, அதற்கு ராஜகோபரமும், இறைவன் இறைவிக்கு தனித்தனி தேர்களையும் உருவாக்கினான்.



இக்கோவிலில் ஒருநாள் தங்கினால் மோட்சம் அடைவர் என்றும் முற்பிறப்பு பாவம் நீங்கும் என்றும் மூன்று நாட்கள் தங்கினால் மறுபிறவி பாவங்களும் நீங்கும் என்றும், அத்துடன் இறைவியின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன் - விஷ்ணுவுடன் கூடி இருக்கும் திருக்கோலத்தினை காட்டியருள வேண்டிக் கொண்டதன் பேரில் கோமதியம்மாள் பொதிகைமலை அருகில் ஒரிடத்தில் புண்னைமர வடிவில் தவமிருக்க வேண்டியதிற் கிணங்க ஆடித்தவசு கோலம் பூண்டு கடுந்தவம் புரிந்ததால் இறைவிக்கு சங்கர நாராயணனாக காட்சி அளித்தார்.

மறுபடியும் சிவ உருவத்தில் காட்சி அளிக்க வேண்டியதன் பெயரில் சங்கரலிங்கமாவும் காட்சி அளித்தார், இக்கோவிலில் ஆடித்தபசு திருவிழாவாகும் இவ்விழா ஆடித்திங்கள் பெளர்ணமியன்று நடைபெறும், இத்துடன் இங்கு சிறப்பாக நடைபெறும் விழா வசந்த உற்சவ திருவிழாவாகும்.



2- தாருகாபுரம் - (நீர் - அப்பு)

இறைவன் : மத்தியஸ்தநாதர், பிணக்கறுத்த பெருமான்

இறைவி : அகிலாண்ட ஈஸ்வரி

நீர் தத்துவத்தை உணர்த்தும் இத்திருக் கோவில் வாசுதேவ நல்லூர் என்னும் ஊருக்கு தென்கிழக்கே சுமார் 6 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, இங்குள்ள சிவலிங்கத்தின் அடியில் நீர் ஊற்று இருந்ததாகவும், அதனைக் கொண்டே இறைவனை திருமஞ்சன நீராட்டல் செய்தனர் என்றும் கூறப்படுகிறது, ஆனால் மீண்டும் மீண்டும் அந்நீரை திரும்ப திரும்ப பயன்படுத்துவது தகாது என அவ்வூற்றினை கல்கொண்டு மூடி விட்டனர், ஆயினும் இன்றும் இங்குள்ள கருவறை சுவர்கள் நீர்ப்பிடிப்புடனே தோன்றுகின்றன, இங்குள்ள தீர்த்தத்தில் கெளதமர், சனகாதியர், வசிஷ்டர், வால்மீகி அகத்தியர் போன்ற முனியவர்கள் தவம் புரிந்துள்ளனர் மூர்த்திகளில் மிகச் சிறப்புடையது அப்புலிங்கம் ஆகும்,

தென்னிந்தியாவை ஆட்சி செய்த சேர,சோழ பாண்டியர் நில வேட்கையால் ஒரு காலத்தில் மாறுபட்டனர் ஒருவருக்கொருவர் போரிட்டனர், அதைக் கண்ட இறைவன் இவர்களுக்குள் உடன்பாடு ஏற்படுத்த எண்ணி அகத்தியர் வடிவில் வந்து சேர நாடு, சோழநாடு, பாண்டியநாடு, எல்லைப்பகுதியினை வரையறுத்துக் கொடுத்து மத்தியஸ்தம் கொடுத்து பிணக்கினை தீர்த்தருளினார் இவ்வாலயம் தாருகாபுரத்திலிருந்து மேற்கே சுமார் அரை கி,மீ, தூரத்தில் உள்ளது, இறைவர் பிணக்கறத்த பெருமாள் என்னும் காரணப் பெயரால் அழைக்கபடுகிறார். இறைவி அகிலாண்ட ஈஸ்வரி தல விருட்சம் மா மரம் ஆகும், இங்கு பழமை வாய்ந்த நில வருவாய் தவிர வேறு வருவாய் இல்லாத காரணத்தால் இக் கோயில் இன்னும் அபிவிருத்தி அடையவில்லை, இருகால பூசை மட்டுமே செய்யப்பட்டு வருகிறது,

3-கரிவலம் வந்த நல்லூர் - (நெருப்பு)

இறைவன் : பால்வண்ண நாதர்

இறைவி : ஒப்பணையம்மாள்

இக்கோவில் திருவண்ணாமலைக்கு நிகரானது, தென்பாண்டி நாட்டில் நிட்சேபநதி கிருபாநதி எனத் தெய்வத் திருநாமம் பெற்ற ஆறுகள் பாய்வதும் அரி, பரமன், தேவர், அகத்தியா, நாரதர், வஷிஸ்டர் முதலியோர்களால் வழிபடப்பட்டத
ும், சிவபெருமான் நித்திய தாண்டவம் புரிய அம்பலமாகக் கொண்டதும் ஆன தலம் கரிவலம் வந்த நல்லூர் ஆகும்.

தென்பாண்டிய நாட்டில் இந்நகரில் ஆண்டு வந்த வரதுங்க பாண்டியன் என்பவன் தனக்கு புத்திர பாக்கியம் இல்லாமை கண்டு மனம் மிக வருந்தினான், அப்பொழுது இறைவன் அவன் கனவில் தோன்றி மனக் கவலையை நீக்கும் படியும் தாமே அந்தியக் காலத்தில் அவனுக்கு செய்யவேண்டிய தகனக் கிரியைகளைச் செய்து முக்தி தருவதாகவும் கூறிமார்.


சங்கரன்கோவில்



அதன் படி மன்னன் பால சந்நியாசியை ஞானாசிரியராகக் கொண்டு இல்லற ஞானியாய் விளங்கி, ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து நிஷ்டை புரியலானான், இறுதியில் அரசன் சோதியிற் கலந்தான் அப்போது அரசனுக்கு பிதுர்காரியம் செய்ய ஒருவரும் இல்லாத நிலை அறிந்து செய்வதறியாது திகைத்து நின்றனர், அப்போது பாலவண்ண நாதர் வயோதிக பரம்மச்சாரி வேடத்தில் வந்து ஈமக்கிரிகளைச் செய்து மூன்று நாள் காரியமும் முடித்து கோவிலுள்ள கர்ப்ப கிரகத்திற்கு சென்று சிவலிங்கத்துடன் கலந்தார்.

இக்கோவில் சூரியன் பூசை புரிந்த இடம், அக்கினி பகவான் பாவம் நீங்கப் பெற்ற இடம், அகத்தியர் பூசித்த தலம் போன்ற பல பெருமைகளை உடையது. இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது, இலங்கேசுவரர் ஆலயமும் உள்ளது, தல மரம் களாமரம், இங்கு காவடி திருவிழா மற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்கள் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.



4- தேவதானம் (வானம்)

இறைவன் : நச்சாடைத் தவிர்த்தவர்

இறைவி : தவம் பெற்ற நாயகி

இத்தலம் சிதம்பரத்திற்கு நிகரானது, இறைவன் நச்சாடை தவிர்த்தவர், இறைவி தவம் பெற்ற நாயகி, இங்குள்ள சுவாமியை வேண்டி அம்பாள் தவம் புரிந்த இடம், திருக்கண்ணீஸ்வரரை வணங்கினால் முக்தி கிட்டும், பாண்டி சோழ மன்னர்களின் போர் நிகழ்வில் பாண்டியன் இறைவனை வேண்ட சோழன் தனது இரு கண்களையும் இழக்கவே, பின் சோழன் வேண்ட கண்பார்வை வழங்கி அருளினார். சோழன் பாண்டியனை வெல்லக் கருதிய போது அவனுடைய நச்சாடையை தவிர்த்து பாண்டியனை காத்தருளினார், ஐம்பூதக் கோவில்களில் இங்கு மட்டுமே கொடி மரத்ததின் கீழ் பெரிய ஆமை வடிவம் உள்ளது, சிவலிங்கம் மிக சிறியதாக அமைந்துள்ளது, இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது, இக்கோவிலுக்கு சமீபத்தில் தான் அஸ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது,

5- தென்மலை - வாயு

இறைவன் : திரிபுர நாதர்

இறைவி : சிவபரிபூரணி

இத்தலம் வாயுத்தலமாகும் காளகஸ்திக்கு நிகரனாது, இது கரிவலம் வந்த நல்லூருக்கு வடக்கே 5 கி.மீ. தூரத்தில் உள்ளது, இக்கோயில் மட்டும் கிழக்குக்கு மாறாக மேற்கு நோக்கி அமைந்துள்ளது, இங்கு அம்மன் சந்நிதி வாயில் தான் பிரதான வாயிலாக உள்ளது, முதலில் திரிபுரநாதரை வணங்கி பின் அம்பாள் சிவபரிபூரணியை வணங்க செல்ல வேண்டும், இங்குள்ள லிங்கமும் மாறுபட்டு காணப்படுகிறது, இங்குள்ள அகத்தியர் பீடத்தை வணங்கினால் தடைபெற்ற திருமணம் நடைபெறும் குழந்தை பேறு கிட்டும். இப்படியாக பல பெருமைகளை கொண்டது இந்தத் திருத்தலம்.

ஐம்பூதக் கோவில்களின் சிறப்பு

ஐம்பூதக் கோவில்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு பெற்று விளங்குகிறது, மகாசிவராத்திரி அன்று இந்த ஐந்து கோவில்களுக்கும் சென்று வந்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.


பகிர்வு
 
Top