• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பணிகையும் பூவையும் 2

Sowndarya Umayaal

உமையாள்
Staff member
Joined
Jul 30, 2021
Messages
205
பூவை - 02

ஒரு வாரம் கடந்தது.



அது மாவட்ட பதிவு அலுவலகம்.

காலை ஒன்பது நாற்பது மணி.

கபிலன் சிவராமன் - இன்மொழி ராஜராஜன் என்ற அவர்களின் பெயரை அலுவலக ஊழியர் ஒருவர் அழைக்க, இருவரும் பதிவாளர் முன் நின்றிருந்தனர்.



டார்க் சாக்லெட் வண்ண பட்டுப் புடவையணிந்து, ஒற்றை மாங்கா மாலையும் குடை ஜிமிக்கியும் அணிந்திருந்தாள் மொழி. கபிலன், ஆகாய வண்ண சட்டையும் அடர் நீல நிற காற்சட்டையில் எப்போதும் போல் ஃபார்மலில் இருந்தான்.



இருவீட்டு பெற்றோரும், அருணின் குடும்பமும் மேலும் மொழி - கபிலனின் நட்புகள் இருவர் என அமைதியாய் முடிந்தது அவர்களின் பதிவுத் திருமணம்.



பெற்றோர்களின் ஆசியுடனே அவர்களின் இத்திருமணம் நடைபெற்றது.



முதலில் கபிலன் அவனின் வீட்டில் மொழி கூறியதை சொன்னப் போதே அவர்கள் யாரும் ஏற்கவில்லை. பின் ஒருவாறு பேசி சம்மதிக்க வைத்தவன் அதற்கு அடுத்ததாக ராஜராஜனிடம் பேசினான்.



மனிதர் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்காதது ஒன்று தான் குறை!



"உங்க மேல நான் ரொம்ப மரியாத வைச்சிருக்கேன் மாப்பிள்ளை. அதை நீங்களே கெடுத்துக்காதீங்க! என் பெண்ண படிக்க வைக்க எனக்குத் தெரியும். அவ படிச்சு முடிச்சிட்டு தான் உங்க மனைவியா உங்க வீட்டுக்கு வருவா." என்றார் முடிவாக.



மரகதம், "கபிலா, இது என்ன நல்லாவா இருக்கு, நீயே சொல்லு! வயசுப் பெண்ண பதிவு கல்யாணம் மட்டும் பண்ணிட்டு அம்மா வீட்டுலையே விட்டுட்டு போறேன்னு சொல்லுற.. எழிலுக்கு இன்னும் ரெண்டு மாசத்தில கல்யாணம். யாராவது என்னாவது கேட்டா நாங்க என்ன பதில் சொல்லுறது. அவ படிக்க வேண்டாம்னு தான் நாங்களும் நினைச்சோம், மொழி எப்ப இப்படி ஒரு முடிவு எடுத்தாலோ பெத்தவங்களா எங்க கடமைய முழுசா செஞ்சிட்டே உன் பொண்டாட்டியா உன் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம். அவள் இனி படிப்பா போதுமா" என்றார் கபிலனை நோக்கி. இதையெல்லாம் மொழி ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை.



"அப்பா நான் கடைசியா சொல்லுறேன். இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு காலேஜ்'கு. நீங்க என்ன தடுத்தாலும் நான் மாமாவ ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு அவர் பணத்தில தான் படிப்பேன். இதுக்கு மேல என்னை கட்டாயப் படுத்தாதிங்க. நீங்க உங்கப் பெண்ணு கல்யாண வேலைய பாருங்க." என்றாள் ஸ்திரமாக.



"நீயும் என் பெண்ணு தான்'மா" என்றவர் ஓய்ந்து போய் சாய்வு நாற்காலியில் அமர்ந்துவிட்டார்.



அதன் பிறகே அவசர அவசரமாக நடந்தது அவர்களின் பதிவு திருமணம்.



திருமணம் முடிந்து அவளின் வீட்டில் இருந்தபடியே தான் கல்லூரிக்குச் சென்று வந்தாள் மொழி. கபிலனின் வீட்டிலும் அவள் செல்லப் பிள்ளை என்பதால் அவள் போக்கிலேயே விட்டுவிட்டனர்.



எழிலின் திருமண தினமும் வந்தது. வெகு சிறப்பாக இல்லாமல் ஒரு அளவிற்குச் சிறப்பு என்று சொல்லும் படி செய்திருந்தனர் திருமணத்தை.



எல்லாம் நல்ல முறையில் சென்று கொண்டிருந்தது. கபிலனுக்கு வெளிநாட்டில் பிராஜெக்ட் கொடுக்கப்படவே அவன் இரு வருட காலம் லண்டன் செல்லும் படியானது.



அதற்குள் மொழியின் மனதை மாற்றி ஊரறிய திருமணம் செய்துவிடலாம் என்று எண்ணிய அவளின் பெற்றோரின் எண்ணத்தில் ஒரு லோட் மண்ணை அள்ளித் தான் போட்டாள் அவள்.



ஆறு மாதங்கள் சென்றிருந்தன.

யாதொரு மாற்றமும் இல்லாமல் சென்றது அவர்களின் வாழ்க்கையில்.



மொழியும் கபிலனும் புலனத்தில் மென்மேலும் அவர்களின் காதலை வளர்த்தனர்.



எழிலும் அருணும் அவர்களின் திருமண வாழ்க்கையை நிறைவாகவே வாழ்ந்துவந்தனர்.



அருணின் அம்மா அம்பிகா, எழிலுக்கு ஒரு நல்ல அத்தையாக இருந்தாலும் அவ்வப்போது தனக்கு மகன் வழி பேரப்பிள்ளையின் எண்ணத்தை எழிலிடம் சாடை மாடையாக காதில் போட்டு வைப்பார்.



இதுவே தொடர்கதையானது எழிலின் வாழ்வில்.



கபிலனின் தந்தை சிவராமன் ஒரு வங்கி ஊழியர். கபிலன் ஒருவன் மட்டுமே அவருக்கு பிள்ளை. அவரின் பணிக்காலமும் முடித்திருக்க உழைத்த உடம்பு வீட்டில் வேலையில்லாமல் இருக்க விரும்பாது சிறிய அளவில் மளிகை கடையை ஆரம்பித்தார் மனைவியின் உதவியுடன்.



கடும் எதிர்ப்பு கிளம்பியது கபிலனிடமிருந்து. அவனாலும் அங்கிருந்து வர முடியா சூழல். இருந்தும் சிவராமன் கடையைத் தொடங்கிவிட்டார்.



ராஜராஜனின் தொழில் ஒரு அளவிற்குப் பரவாயில்லை என்று நிலையில் தான் சென்றது. கடன்களில் அளவு சிறிதளவு குறைந்திருந்தது அவ்வளவே.



ஒரு வருடம் சென்றிருந்தது..



அம்பிகாவின் நச்சரிப்பு அதிகமே ஆகியிருந்தது. ஒன்றரை வருடமாக பிள்ளையில்லையா என்ற ஊராரின் பேச்சுக்கள் வேறு எழிலைப் பாடாய் படுத்தி எடுத்தது.



இதற்கிடையில் தந்தையால் கடனை சமாளிக்க முடியவில்லை என்ற தாயின் பேச்சுக்கள் வேறு அவளை ஏதோ செய்தது. பின் அவர் வாங்கிய கடனே அவள் திருமணத்திற்காகத் தானே. தொழிலை ஏதோ முட்டி மோதி மீட்டு விட்டார் இந்த ஒரு வருடத்தில்.



மொழி அவள் எதிர் பார்த்தது போலவே ஒரு பெரும் நிறுவனத்தில் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகியிருந்தாள். மாதம் எண்பதாயிரம் சம்பளம்!

அது முழுக்க அவளின் திறமைக்காகவே.



அருண் மேலும் இரு மருந்தகங்கள் ஆரம்பித்திருந்தான். அவன் தந்தையும் அவனும் மட்டும் போதவில்லை அந்த ஐந்து மருந்தகங்களைப் பார்த்துக்கொள்ள. வேலையாட்கள் இருந்தாலும் முதலாளி பார்ப்பது போல் வராதல்லவா.



மகன், கணவனின் திணறல்கள், ஊராரின் பேச்சு என மொத்தமும் எழிலின் மேலேயே வார்த்தைகளாக வந்து விழுந்தன அம்பிகாவினால். பின், ஆட்களைப் போட்டு அருண் சமாளித்து விட்டான்.



ஆனால் எழிலின் நிலைமை அவன் அறியவில்லை. அவளும் அவனிடம் சொல்லவில்லை. எழில் பிள்ளைக்காக ஏங்கிய நாட்கள் அவை.



மொழியின் படிப்பு முடிந்தது.

எழிலும் தாய்மை அடைந்திருந்தாள் இரு வருடங்கள் சென்று.



கபிலன் தாயகம் திரும்ப இன்னும் மூன்று மாதங்கள் இருக்க அதன் பின் மொழியின் திருமணம் என்று உறுதியானது.



பேரப் பிள்ளையின் வரவால் சற்று அம்பிகாவின் பேச்சு குறைந்திருந்தது.



மொழியின் திருமணமும் இனிதே நடைபெற்றது முடிந்தது. அவள் வேலைக்குச் செல்லும் நாளும் வந்தது.



நிமிர்வுடன், தன்னம்பிக்கையுடன் அவள் நடந்து வர, மொழியின் முகத்தில் இருந்த அந்த கம்பீரம் எழிலை ரசிக்கவே செய்தது.



வேலைக்கு செல்வதினால் எவ்வளவு கம்பீரம் வருமா? அது அடிமைத்தனமாகாதா என்றவளுக்குக் கேள்வி எழுந்தது. எது அடிமைத்தனம்? என அவளுக்கு இன்னும் புரியவே இல்லை போல.



நாட்கள் செல்ல அருணை போலவை ஆண் மகவை ஈன்றெடுத்தாள் இன்னெழில்.



அங்கு மொழியின் கனவு இல்லத்திற்கும் பூமி பூஜை போடப்பட்டது. கூடவே சிவராமனின் மளிகைக் கடையின் விரிவாக்கப் பணியும் இணைந்தே நடந்தது.



மாதங்கள் கடந்திருந்தன. வீட்டின் பாதி வேலை முடிந்திருந்த நிலையில் கடை திறப்பு விழாவிற்கு எழிலை அழைக்கவந்திருந்தாள் மொழி.



அவள் முகத்தில் ஒரு தனி அழகும் திமிர் கலந்த கம்பீரமும் நன்றாகவே பார்க்க முடிந்தது எழிலுக்கு. மொழி சென்றவுடனே அம்பிகா அவரின் பேச்சை ஆரம்பித்தார்.



"மொழி பிள்ளைய பார்த்திங்களா? எப்படி இருக்கானு. கை நிறைய சம்பாதிக்கிறா. இப்போ வீட்டையும் கட்டி முடிக்க போறா. மாமனார் மாமியாருக்கு சம்பாதிச்சுக் கொடுக்கிற மருமக எனக்கு அமையலையே.. ஒத்த புள்ளை பெத்துக்கவே இவளுக்கு ரெண்டு வருசம் ஆச்சு.. இதில் இவ எங்க சம்பாதிக்க போறா" என்றவரின் பேச்சால் முதல் முறையாக தான் ஏன் வேலைக்கு செல்ல முடியவில்லை என்ற கேள்வி உதித்தது அவளுக்கு.



வேலை, அவளைப் பொருத்தவரை ஒரு அடிமைத்தனம். வீட்டில் இருப்பவர்களைப் பார்த்துக்கொள்ள முடியாது. மேலும் சீக்கிரம் சோர்ந்து போய்விடுவோம் என்ற எண்ணம் அவளுக்கு.



இப்போது அதே வேலைக்குச் செல்லும் மொழியின் முகத்தில் ஒரு அதீத தன்னம்பிக்கையும் தைரியத்தையும் பார்த்தவளால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை.



கபிலனைப் போன்றே தான் அருணும். மனைவியிடத்தில் மிகுந்த அன்பும் பாசமும் உள்ளவன். அவள் சொல்லுக்கு ஏற்ப நடப்பவன். அவள் தவறினால் திருத்துபவன். அவள் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவன். சிறந்த காதலன், அருமையான கணவன். மொத்தத்தில் அவளை அவளாகவே இருக்க விட்டவன். யாருக்காகவும் அவளை மாற்ற அவன் வற்புறுத்தவில்லை. இதைவிட வேறு என்ன வேண்டும் ஒரு கணவனிடத்தில்‌?



இன்பனுக்கு (எழிலின் மகன்) ஆறாவது மாதம் அது. அவன் தினமும் அம்பிகாவிடமே இருப்பான். இருக்க வைப்பார் அம்பிகா.



எழிலுக்கு பிள்ளைப் பேற்றுக்கு பின்பான மன அழுத்தம் சற்று அதிகமாகவே இருந்தது. மருத்துவ கண்காணிப்பில் தான் அவள் இருந்தாள்.



அவ்வழுத்தத்துடன் சேர்த்து அம்பிகாவின் வசவுகளையும் வாங்க வேண்டும். பிள்ளையையும் பார்த்துக்கொண்டு, அருணையும் கவனித்து, வீட்டு வேலையும் செய்து கொண்டு அவளால் அந்த சூழலைத் தாங்க முடியவில்லை.



ஒரு வெறுமை. கூண்டுக் கிளியைப் போலவே தன்னை நினைத்துக் கொண்டாள். வெளியே செல்லவும் மாமியாரிடம் அனுமதி வேண்டி நிற்கும் நிலை. என்ன வாழ்க்கையிது என்று நினைக்காத நாளில்லை.



இன்பனின் உணவுகள் செரிலாக், மருந்துகள், எழிலின் மருந்துகள், இன்னும் பிற பொருட்கள் என மாதம் குறைந்தது எட்டாயிரம் தொட்டது.



அருணுக்கு அது ஒரு கணக்கே இல்லை. இருவரின் மாத செலவுகளை அவன் ஒரே நாள் வியாபாரத்தில் எடுத்து விடுவான். மேலும் மனைவி மகனுக்குக் கணக்கு பார்த்துச் செய்யும் ரகமில்லை அவன்.



ஆனால் அவனைப் போலவே எல்லாரும் இருப்பார் என்று நாம் நினைக்கக் கூடாது. அதிலும் அம்பிகாவை நினைக்கவே கூடாது.



இந்த மாதத்திற்கான அவர்களின் பொருட்களின் விலைப் பட்டியல் எதேச்சையாக அவர் கண்ணில் பட்டுவிட்டது. அது போதாத அன்றைய சண்டைக்குப் பிள்ளையார் சுழி போட.



சண்டையிட்டார் அவள் ஒன்றுக்கும் உதவாமல் தெண்டத்திற்கு வீட்டில் இருப்பதாக, சாப்பிட்டுச் சாப்பிட்டு உடம்பை வளர்ப்பதாக, எழிலால் தான் அந்த வீட்டின் செலவு அதிகரிப்பதாக.



காது கொடுத்து கேட்டால் அவளும், பதில் பேசாமல்.



அவர் பேசி முடித்தவுடன் அவளின் பதில் யாதோ,



"நீங்க சொல்லுற மாதிரியே நான் இருந்தாலும்.. என் புருஷன் சம்பாத்தியத்தில தான் நா இதையெல்லாம் பண்றேன். உங்க காசில இல்ல!" இன்பனைத் தூக்கிக் கொண்டு அவர்களின் அறைக்கு வந்துவிட்டாள்.



அதன் பின்? எல்லாருக்கும் வரும் அழுகை போலத் தான் இவளுக்கு வந்தது. கதறி அழுதாள் அவள் நிலை நினைத்து. பணம் எவ்வளவு முக்கியம் என்று அவர் பேசிய பேச்சுக்கள் குத்தி கீறின அவளை.



இப்போதும் யோசித்தால், நம் கையில் பணமிருந்தால் நாமே நமக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாமே என்று.



அருண் மாதா மாதம் அவளின் தேவைக்குப் பணம் தருவான் தான். ஏன் அவள் கேட்டால் இல்லை என்று கூடச் சொல்ல மாட்டான் தான். ஆனால் என்ன இருந்தாலும் அது அவனின் பணம் தானே!



அவனின் சுய சம்பாத்திய பணம். என்ன தான் கணவனானாலும் தனக்கான பணமாக அவளால் அந்த நொடியில் எண்ண முடியவில்லை.



அழுத அழுகையின் விளைவாகத் தூங்கியும் விட்டாள் அவள்.



மாலை போல் எழுந்தவள் அடிவயிற்றில் சுருக்'கென்ற வலியை உணர மாதாந்திர பிரச்சினை நினைவிற்கு வந்தது.



குளியல் அறையில் தன்னை சுத்தப்படுத்தியவள் விடாய்க்கால அணையாடையை (சானிடரி நாப்கின்) தேட அது காலியாக இருந்தது.



அருண், மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தவன் உண்டு விட்டு‌த் திரும்பவும் மருந்தகம் செல்ல தயாராக மேலே வந்தவன் எழில் தேடுவதைப் பார்த்துவிட்டு என்னவென்று வினாவினான்.



எழிலும் அவனிடம் கூறி கடையில் உடனே வாங்கி வரப் பணிக்க அவனோ,



"ஏன் எலி போன வாரம் தான் வாங்கி தந்த மாதிரி இருக்கு.. அதுக்குள்ள தீர்ந்திருச்சா என்ன? எத்தன தான் வாங்கனுமோ" என்றான் அருண்.



அவன் விளையாட்டாகவே தான் கேட்டான். ஏனெனில் அம்மாதிரியான கேள்விகளுக்கு எழிலின் பதிலே வேறாக இருக்கும். அதே நினைப்பில் அவன் கேட்டுவிட்டான். ஆனால் அவளின் நிலை முன் போன்று அல்லவே!



நிமிடத்தில் உடல் கூசிப்போனது எழிலுக்கு. என்ன கேள்வி இது? தன்னை நினைத்தே ஒரு ஒவ்வாத தன்மையை அவளால் உணர முடிந்தது. 'ச்சீ' என்ற உணர்வு.



காலையில் அம்பிகா பேசிய பேச்சுக்களுடன் இப்போது அருணின் பேச்சும் அவளை உசுப்பி விட்டிருந்தது.



காதுகளை இரு கைகளாலும் பிடித்த படி 'ச்சீசீ' என்ற கதறலுடன் தரையில் அமர்ந்துவிட்டாள் இன்னெழில்.



அருணே பதறி அவள் பக்கம் வந்த தோள் தாங்கி கேட்க.. அழுதவாறே கூறினாள் அவளின் நிலையை.



என்ன நிலையிது. பணமிருந்தால் போதுமா? என்னை இவர்கள் இவ்வாறு பேசமாட்டார்களா என்ற எண்ணம் தோன்றியது.



எனக்கே எனக்காக நான் சம்பாதித்தால், அதை என் தேவைக்கு நான் பயன்படுத்திக்கொள்ளலாம் தானே. இவர்களிடம் இவ்வாறு கேட்டு அசிங்கப்பட வேண்டாமே என்று எண்ணம் வலுப்பெற்றது அவளிடம்.



அருண் தான் எப்போதும் பேசும் பேச்சு தானே என நினைத்திருக்க, எழிலைத் தாய் படுத்திய பாடும் அதற்குத் தூபம் போடும் படியான தன் பேச்சையும் நினைத்து தன்னைத் தானே நொந்து கொண்டான்.



சிலபல சமாதான பேச்சிற்குப் பின் இவரும் ஒரு முடிவை எடுத்திருந்தனர்.



அருண் கீழே சென்று அம்பிகாவிடம் கேட்க, அது வேறு ஒரு சண்டையாகக் கிளம்பியது.



'இனி எழிலை இப்படிப் பேசினால் நாங்கள் தனியே சென்றுவிடுவோம்' என்ற அருணின் பேச்சு சற்று வேலை செய்தது அம்பிகாவிடம்.



நிலைமை சற்று சீரானது.

ஆனால் பேசிய பேச்சுக்கள் இல்லாமல் போகுமா என்ன?



அழைத்தாள் இன்மொழிக்கு.

அவள் அழைக்கும் முன்பே எழிலின் வீட்டில் இருந்தாள் மொழி.



தன் இரட்டைக்கு ஏதேனும் நடந்தால் இன்னொருவருக்கு அதன் தாக்கம் இருக்குமாம். அதனாலேயே எழிலுக்கு ஏதோ வென்று வந்துவிட்டாள் அவள் வீட்டிற்கு.



மொழியைப் பார்த்தவுடன் தான் எழிலுக்கு ஒரு தெம்பு வந்தது.



மெத்தையில் அமர்ந்திருந்தவள் மொழியின் இடையணைத்து அழுதுவிட்டாள். காலையில் இருந்து அழுத்தும் அழுத்தம் விளைவாக.



அவள் நிலையுணர்ந்து பொறுமையாகவே விசாரித்தாள் மொழி.



சொன்னால் வீட்டினரின் பேச்சுக்களை.



"என்னால முடியலைடி! சாப்பாடு சாப்பிடும் போது தண்டச் சோறு தண்டச் சோறுனு சொல்லிச் சொல்லி காட்டுறாங்க.. அந்த சாப்பாட்டையே சமைச்சது நான் தானே.. இவ்வளவு பெரிய வீட்ட கூட்டி, துடைச்சு, பாத்திரம் எல்லாம் விளக்கி, எங்க துணியெல்லாம் துவைச்சு.. எவ்வளவுதான் நானும் செய்ய முடியும் சொல்லு.



நா ஒரு நாளும் செய்ய மாட்டேன்னு சொல்லல.. ஆனா என்னை இப்படிலாம் திட்ட வேண்டாமே. ஒரு துணி தனியா போய் என்னால வாங்க முடில தெரியுமா?



அத்த கிட்ட பர்மிஷன் கேட்டு, மாமா கிட்டப் பணம் வாங்கிட்டு போய் எதுவா இருந்தாலும் வாங்க வேண்டியதா இருக்கு. இது நார்மல் தான் எல்லார் வீட்டிலையும் நடக்கும் தான் ஆனா எனக்கு வாங்கிற தூணி எல்லாம் அத்தைக்கு பிடிச்சிருந்தா தான் நா போடனுமாம். இந்த கொடும எங்கடி நடக்கும்?



அரு கூட ஒன்னும் சொல்ல மாட்டான். எவ்வளவுக்கு வாங்குறேன், என்ன வாங்குறேன்னு பார்க்கவோ கேட்கவோ மாட்டாரு. நான் தான் வழியப் போய் காட்டுவேன். ஆனா என் மாமியார் மட்டும் நேர் எதிர்.



இன்னிக்கு அவர் கிட்டப் பேட் கேட்டேன். 'போன வாரம் தானே வாங்கி தந்தேன் இப்போ ஏன் கேட்கிறனு' கேட்டார். எனக்கு உடம்பே கூசிடுச்சு தெரியுமா.

அவர் அதை விளையாட்டா எப்பவும் போலத்தான் கேட்டார் எனக்குத் தான் ஏதோ உள்ள குத்துது" என்றாள் கண்ணீரை துடைத்தபடி.



"சரி இதுக்கெல்லாம் என்ன பண்ணலாம்?" என்றாள் மொழி அவளே அதற்குப் பதில் சொல்லட்டும் என்று.



"நா... நா... வேலைக்குப் போறதா இருக்கேன்" என்றாள் எழில் தயங்கித் தயங்கி. ஒரு காலத்தில் வேலை என்றால் ஏளனமாகப் பேசியவளே இன்று வேலைக்குப் போகிறேன் என்கிறாள்.



மொழியின் முகத்தில் ஒரு புன்னகை.



"ஏன் இந்த முடிவு? அத்தான் கிட்ட கேட்டா உனக்குனு தனியா பணம் தருவான் தானே?" என்றவளின் கேள்விக்கு,



"தருவார் தான்.. ஆனா அது என் பணமாகாதே! நாங்க ரெண்டு பேரும் வேற வேற இல்லை தான். இருந்தாலும் எனக்கு மனசு வரல இவ்வளவு நடந்தது அப்புறம்" என்றாள் எழில்.



"அப்போ வேலைக்குப் போகப் போற. ரைட்" என்றாள் அவளைக் கூர்ந்து பார்த்து.



"ஆமா.." என்றாள் எழில் திடமாக.



"சரி அப்போ இன்பா?" என்றவளின் கேள்விக்கு,



"அத்தை பார்த்துக்குவாங்க. இப்போ மட்டும் நானா அவன பார்க்கிறேன்?"



மொழி மெல்லச் சிரித்துவிட்டு,

"ஓகே.. யார் உனக்கு இப்போ வேலை தரப்போரா? என்ன சம்பளம் எதிர் பார்க்கிற?" என்ற மொழியின் கேள்வி எழிலை திருதிருக்க வைத்தது.



இதைப் பற்றியெல்லாம் அவள் யோசிக்கவே இல்லையே!



"உன் முடிவு சரி தான் எழில் ஆனா முடிவு எடுத்த காலம் தான் தப்பு!" என்றவளைப் புரியாமல் பார்த்த எழிலுக்கு,



"உனக்கு மட்டும் தான் இப்படி ஒரு பிரச்சினை இருக்குனு நினைக்காத. எல்லா பெண்களுக்கும் இருக்கு. தான் வேலைக்குப் போய் சம்பாதிக்கனும்னு எவ்வளவு பேர் இன்னும் கனவு மட்டுமே காணறாங்கனு தெரியுமா? ஒரு பத்து ரூபா'னாலும் தன் சொந்த காசில சம்பாதிச்சு ஒரு பொருள வாங்கனும் இல்லை யாருக்காவது வாங்கி கொடுக்கணும்னு நினைக்கிறவங்க இங்க பலர்."



"ஆனா அதுக்கான காலத்தில யாரும் அதக்கான முயற்சியக் கூட செஞ்சிருக்க மாட்டாங்க. பணம் தேவை வரும் போதுதான் வேலைக்கு போகனும்னே தோனும். ஏன் படிச்ச படிப்புக்காக ஒரு, ஒரு வருசமோ ரெண்டு வருசமோ வேலை செஞ்சா நமக்கும் ஒரு உதவியா இருக்கும் பெத்தவங்களுக்கு உதவியா இருக்கும்னு நெனச்சிருந்தா கண்டிப்பா வேலைக்கு போயிருப்பாங்க. படிச்ச படிப்பும் வீண் போகமா இருக்கும்



வேலைக்கு எப்போ வேணாலும் போகலாம், நான் தப்பு சொல்ல வரல. படிச்சு முடிச்ச உடனே வேலைக்கு போயிருந்தா ஒரு எக்ஸ்பீரியன்ஸ் கூடவே ஒரு தன்னம்பிக்கையும் வரும்.



இப்போ உன்ன மாதிரி சடனா மேரேஜ்க்கு அப்புறம் வேலைக்கு போகுறேன்னு சொன்ன யார் வேலை தருவா? அதுவும் படிச்ச படிப்புக்கான வேலையா அது இருக்குமா?



நீ படிப்ப வேறும் பெயருக்குப் பின்னாடி போடுர ஒரு பட்டமா தான் பார்த்த. அதுவே அதை நீ உன் வாழ்க்கைய மாத்துற சக்தியா ஒரு ஆயுதமா பார்த்திருந்தா நீ படிச்ச படிப்பு உன்ன எப்பவும் கைவிடாது.



உன் உடம்பு முதல்ல சரியாகட்டும் அதுக்கு பின்ன நீ வேலையைப் பத்தி யோசி. இல்ல என்னால முடியலனா, அத்தான் கிட்ட கேட்டுட்டு வீட்டில் இருந்தே செய்ய மாதிரி வேலையைப் பாரு.



ஆன்லைன்'லை நிறைய ஜாப் ஆஃபர்ஸ் இருக்கு. அதுல ஏதாவது டிரை பண்ணு இப்போ. வீட்டில இருந்தா இன்பாவையும் நீ பார்த்துப்பா அதே சமயம் சம்பாதிக்கவும் முடியும்.



ஒரு வயசு வரும் போது அத்தை கிட்ட இன்பாவ கொடுத்திட்டு அத்தான் கூட நீயும் கடைக்கு போ. அவர்கிட்ட உனக்கு சேலரி போடச் சொல்லு. என்ன சரியா" என்ற மொழியின் பேச்சினால் ஒரு தெளிவு வந்திருந்தது அவளுக்கு.



படிப்பைச் சுமையாகப் பார்த்தவள் இப்போது தான் இன்னும் மொழியைப் போல் மேல் படிப்பு முடிந்திருந்தால் தன் துறையிலேயே வேலை எளிதாகக் கிடைத்திருக்கும் என்று எண்ணுகிறாள்.



வேலை, ஒரு பெண்ணுக்கு மிகவும் முக்கியம் இன்றைய சமுதாய சூழ்நிலையில். தனக்கென ஒரு அடையாளத்தையும் சம்பாத்தியத்தையும் ஒரு பெண் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.



வேலை எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும். ஆனால் உங்கள் தகுதிக்கு, படிப்பிற்கு அது பொருந்துமா என்பது நீங்கள் அதை தேர்தேடுக்கும் கால நிலையைப் பொறுத்தே கூறமுடியும்.



படித்தவருக்கு மட்டுமா வேலை?

இல்லவே இல்லை.

படித்தவருக்கு ஒரு வேலை தான் ஆனால் படிக்காதவனுக்கு ஓராயிரம் வேலை!



"கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்



கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்"



என்று நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் அவர்கள் கூறியுள்ளார்.



வீட்டில் உள்ளவர்கள் அவர்களுக்குத் தெரிந்த கைத் தொழிலை வைத்தே இன்று பல ஆயிரங்களில் சம்பாதிக்கின்றனர்.



பெரும்பாலும் பெண்கள் வேலைக்குப் போகாததற்குக் காரணம் முன் எழில் கூறிய காரணமான பிள்ளைகளைக் கணவனைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.. வீட்டைச் பார்க்க வேண்டும் என்பன தானே.



உங்களுக்குத் தெரிந்த கைத் தொழிலை வீட்டிலிருந்தே தொடங்கி உங்கள் கனவையும் பொறுப்பையும் ஒன்றாகவே பார்க்கலாம் தானே.



பெண்கள் எப்போதுமே பிறர் துணையின்றி முன்னேற்றம் அடைய வேண்டும். சுயாதீனமாக (இன்டிபெண்டன்ஸ்) இருக்க வேண்டும். அவர்களுக்கு என்று தனி சம்பாத்தியமும் வேலையும் நிச்சயம் அவசியமே.



திருமணம் ஆனவர்கள் வீட்டிலேயே சிறு தொழில் அல்லது ஆன்லைனில் வேலை செய்யலாம்.



உத்தியோகம் புருஷ லட்சணம் என்பர். அதேப் போல தான் உத்தியோகமும் பெண்களுக்கு அவசியம்.



இங்கு, மொழி ஒரு தனித்துவம் வாய்ந்த பெண். தன் கனவை நினைவாக்கும் வரை விடாது தொடர்ந்தவள். தந்தையிடம் கூட தன் சுய மரியாதையை விட்டுக்கொடுக்காமல் தன்னவனை கரம் பற்றிய பின் வாழ்க்கையில் வெற்றி கண்டுவிட்டாள்.



அதற்காக எழில் அவள் கனவை விட்டுவிட்டால் என்று கூறவில்லை. அவளின் கனவு பிள்ளையுடனும் கணவருடனான ஒரு இன்ப வாழ்க்கை. அதை அடைந்த பின், காலத்தின் கட்டாயம் மற்றும் அவளின் சுய மரியாதைக்காக அவள் வேலையில் இப்போது சேர காத்திருக்கிறாள் அவ்வளவே.



மொழி, "முகத்த இனி சிரிச்ச மாதிரி வை. ஒரு தெளிவு உனக்குள்ள வந்திருக்கும். இனி அத பிடிச்சு மேல் வா. சரி நேரமாச்சு நான் சைட்டுக்கு போயிட்டு அப்படியே வீட்டுக்கு போறேன். வரேன் எழில்" என்றவள் விடைபெற்றாள்



இங்கு மொழியின் வாழ்க்கையும் எழிலின் வாழ்க்கையும் நமக்கு ஒரு சான்று.



முயன்றால் முடியாதது எதுவுமில்லை!





முற்றும்..
 
Top