• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பாண்டியன் மாதேவி - இதை விடுத்து எது.?

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
"இதை விடுத்து எது?"





இளம் காலைக் காற்றில் கமழ்ந்து வந்தது பாடல். பூஜை அறையில் இருந்து ஊதுவத்தி மணமும், சாம்பிராணிப் புகையும், மல்லி, முல்லை, துளசி, மரிக்கொழுந்து, இருவாட்சி எல்லாம் சேர்ந்து கட்டப்பட்டு விக்ரஹங்களில் மேல் சாத்தப்பட்டிருந்த கதம்ப மாலையும், வெள்ளிக்கிண்ணத்திலிருந்த, அப்போதே இழைக்கப்பட்ட சந்தனக்குழம்பும், தேனை தொண்டையில் வழியவிட்டு பாடியது போன்ற குரலில்.....



இரக்கம் வராமல் போனதென்ன காரணம்?

என்ன காரணம், என் சுவாமி!

கருணைக் கடல் என்று உன்னை

காதில் கேட்டு நம்பி வந்தேன்.....



கோபாலகிருஷ்ண பாரதியின் க்ருதி.......பேஹாக் ராகம்..... வீணை, ஷெனாய் வயலின், பிடில், ஏன்........ சுருதிப்பெட்டி கூட இல்லாமல் மனதின் " பாவம் " மட்டுமே பிரதானமாக எழுந்த பாடல் அந்த வீட்டை நிறைத்தது.



"குழந்தை என்னமாய் பாடுகிறாள்! என் கண்ணே பட்டுடும் போல இருக்கே"



" இருக்காதா பின்னே? யார் அவளுக்கு சரளிவரிசை, ஜண்டை வரிசை சொல்லித் தந்தது?"



"போதும் உங்க பெருமை! வர்ஷினிக்கு இந்த மாசத்தோட இருபத்தஞ்சு முடியறது. போரூர் மணி ஜாதகம் அனுப்பி வச்சது என்னாச்சு?"



" வேலூர் ஜானகிரமண பாகவதர் பேரன் ஜாதகம் பிரமாதமா பொருந்தறதாம்! பத்துக்கு பத்தே இருக்காம்!"



"ஜானகிரமண பாகவதர் பேரனா? தெய்வ கடாட்சம் இருக்கிற வீடாச்சே! தியாகையர் ஆராதிச்ச விக்ரஹங்கள வச்சு பூஜை பண்ற இடமாச்சே! ரொம்ப ஆசாரமா இருப்பாளோ? நம்ம பொண்ணுக்கு செட் ஆகுமா?"



" எல்லாம் ஆகும்!"



" அப்ப மேற்கொண்டு ஆக வேண்டியதை பார்க்கலாமே!"



..... தாய் தந்தையரின் இந்த சம்பாஷணையை ஏதும் அறியாதவளாய் வர்ஷினி என்கிற அமிர்தவர்ஷினி காலையில் சாதகம் முடித்து தன் அறைக்கு வந்து கிட்டாரை கையில் எடுத்தாள்.



"கை வீணை ஏந்திய கலைவாணியே" எனும் இளையராஜாவின் பாட்டை, "மஸ்ட் ப்பீ த ஸேம் பேஹாக்" என்று முணுமுணுத்தவாறு கிட்டாரில் ஸ்வரம் தேடிப் பாடினாள்.



காலை டிபன் நேரம் வந்ததும் ஃபேப் இண்டியாவில் வாங்கிய ஸ்டோன் வாஷ் ஜீன்சும், போன்ச்சோ டாப்ஸும் அணிந்து டைனிங் டேபிளுக்கு வந்தாள். அம்மா வேலூர் வரம் பற்றி ஆரம்பித்ததும் பத்ரகாளியாகவே மாறிவிட்டாள் வர்ஷினி.



" அம்மா நான் ஹையர் ஸ்டடீஸுக்கு ஆஸ்திரேலியா போகலாமா அமெரிக்கா போகலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன். நீ என்னமோ வேலூர் கீலூர்னு..."



"வர்ஷி அது எப்பேர்ப்பட்ட குடும்பம் தெரியுமா? பையன் படிச்சிருந்தாலும் ஏக்கர் ஏக்கரா பொன் விளையுற பூமியை காப்பாத்தி பார்த்துட்டிருக்கான். அவனும் அற்புதமான சிங்கர்தான்".



"நான் ஃபியூஷன் மியூசிக்ல ரீசர்ச் பண்ண போறேன்! என்ன மட்டும் இந்தியாவில் கட்டி போடனும்னு நினைக்காதே!" பேசிக்கொண்டே பாதாம்பழநிற ஃபோக்ஸ்வேகனை கிளப்பிக்கொண்டு போயேவிட்டாள் வர்ஷினி. அம்மாவும் அப்பாவும் வாயடைத்துப் போய் அவள் போன திசையையே பார்த்துக் கொண்டு நின்றனர்.



மாதங்கள் வளர்ந்தன. டிசம்பர் வந்தது. வர்ஷினி தன் தோழியின் திருமணத்திற்காக காரை எடுத்துக்கொண்டு ஒரு வாரம் அவள் கிராமத்திற்கு சென்று இருந்தாள். கல்யாணம் முடிந்து மணமக்கள் மறுவீடு கிளம்பியதும் வர்ஷினி மற்ற தோழிகளோடு கிராமத்தில் இருந்து கிளம்பி ஒவ்வொருத்தியாக அவரவர் வீட்டில் ட்ராப் செய்து விட்டு சென்னை நோக்கி செல்லும் புறவழிச் சாலையில் வந்து கொண்டிருந்தாள். ஏற்கனவே இருந்த பி பி ஸ்ரீநிவாஸ் ஹிட்ஸ் குறுந்தகட்டை எடுத்துவிட்டு தன்னுடைய ஃபேவரிட் பழைய அமெரிக்கன் பாப் ஸ்டார் ஜான் டென்வர் குறுந்தகட்டை போட்டாள்.



"ராக்கி மவ்ன்டன் ஹை...மவ்ன்டன் ஹை

...மவ்ன்டன் ஹை ...மவ்ன்டன் ஹை"



அகொஸ்டிக் கிட்டார் இசை ட்ரிம் ட்ரிம் என காரை நிறைத்தது. "இட்ஸ குட் லைஃப்" என்று தனக்குத்தானே சந்தோஷப்பட்டு கொண்டிருக்கும்போது அம்மாவின் முகம் போனில் தெரிந்தது. மணியும் அடித்தது. இந்த அம்மாதான் ஏன் மணிக்கொருதரம் போன் பண்றா என சலிப்புடன் ஆக்சிலரேட்டரை குறைத்தவாறு ஸ்பீக்கரில் போன் போட்டு பேசினாள்.



" சொல்லு மா!"



"வர்ஷி நீ எங்க இருக்க இப்ப?"



பக்கவாட்டில் விரைந்த கடைப்பலகைகளின் பெயரை வாசித்தவாறே "புதுப்பாக்கம்ன்னு போட்டு இருக்குமா" என்றாள்.



" தப்பித்தவறி கூட மெட்ராஸ் பக்கம் வந்திடாத! இங்கே பேய் மழை பேயறது"



"இங்க கூட மழை வர்றமாறி சூழல் அருமையா இருக்கும்மா!"



"பைத்தியம்! பைத்தியம்! நான் சொல்றத கேளு!"



அம்மா குரலில் பதட்டம் ஏறியது.



"இங்க நம்ம வீட்டை சுத்தியிருக்கிற காலனியில் எல்லாம் மழைத்தண்ணி வெள்ளமா போயிட்டு இருக்கு. படகில ஜனங்களை கூட்டிண் போயிட்டு இருக்கு போலீஸ்!"அம்மா கிறீச்சிட ஆரம்பித்தாள்.



சட்டென போனைப் பிடுங்கி பேசினார் அப்பா.

"வர்ஷினி! முதல்ல கார்ல பாட்டை நிறுத்திவிட்டு நியூஸ்ஸ கேளு! மெட்ராஸ்ஸே மூழ்கிட்டு இருக்கு! நீ தனியா காரில் வந்து எங்கான மாட்டிப்பேன்னு பல தடவை உனக்கு போன் பண்ணா தொடர்பு எல்லைக்கு அப்பால்ன்னே வருது. நீ உடனே நீ கடைசியா டிராப் பண்ண ஃப்ரண்டு வீட்டுக்கு திரும்பி போயிடு".



"அப்பா நான் கடைசியா ஜெய்ஸ்ரீய ட்ராப் பண்ணி ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆகுது. நான் அங்க திரும்பிப் போக முடியாது"



" வர்ஷினி திஸ் இஸ் என் எமர்ஜென்சி! கொஞ்சம் புரிஞ்சுக்கோ! நான் சொல்றபடி செய்"என அப்பா பேசிக்கொண்டிருக்கும்போதே தொடர்பு அறுந்தது.



ஒரு மழைக்கு இவ்வளவு பெரிய ட்ராமாவா? நியூஸைத்தான் கேட்டுப் பார்ப்போம் என ரேடியோவுக்கு மாற்றினாள் வர்ஷினி.



" இது சந்திரா எஃப் எம். சென்னையில் தொடரும் கனமழையால் நகரமே ஸ்தம்பித்து விட்டது. தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில்....."



செய்தி அறுபட்டு ஒரு பெரிய இடி இடித்தது. கைபேசி மீண்டும் அடித்தது. அம்மாதான். இப்போ அப்பா பேசினார். "வர்ஷினி! லைன் கட்டாகிவிட்டது. நீ உடனே வேலூருக்கு நான் சொல்ற அட்ரஸுக்கு போ! லேட் பண்ணாத!"



" அப்பா நம்ம வீடு இருக்கிற இடத்தில ஒண்ணும் பிரச்சனை இல்லையே?!"



"ஐயோ வர்ஷினி! குறுக்க குறுக்க பேசாத! இங்கே கரண்ட் இல்ல! கொஞ்ச நேரத்துல போன் பேச முடியாமல் போகலாம். நான் உனக்கு டெக்ஸ்ட் பண்ற அட்ரஸுக்கு போய் தங்கிக்கோ! சீக்கிரம் காரை வேலூர் பக்கம் திருப்பு. நீ அவங்க வீட்டுக்கு வர்றேங்கறதை அவங்களுக்கு சொல்லிடுறேன்!"



அப்பா கைபேசியை வைத்து விட்டார். அடுத்த இரண்டே நிமிடத்தில் அந்த வேலூர் அட்ரஸ் குறுஞ்செய்தியாக வந்துவிட்டது. இது நடப்பதற்குள் வானம் இருண்டு மழை வந்துவிட்டது. சடசடவென கல் விழுவது போல மழைத்துளிகள் பட்பட்டென்று கார் கண்ணாடியில் விழுந்து, வைப்பர் போட்டும் சாலை இருப்பதே தெரியவில்லை.



அரண்டு போனாள் வர்ஷினி. மெல்ல காரை நகர்த்தி அடுத்த வளைவில் யூடர்ன் எடுத்து, வந்த வாக்கிலேயே வேலூர் வழியில் செல்வதற்குள் மூச்சே நின்று விடும் போல் இருந்தது. ஒருபுறம் சென்னையில் என்ன நிலைமையோ? வீட்டிற்குள் தண்ணி வந்து விட்டதோ! தான் வேறு அப்பா அம்மா அருகில் இல்லையே என்றெல்லாம் எண்ணி கவலைப்பட்டாள் வர்ஷினி.



மழையில், தெரியாத பாதையில் எப்படியோ வேலூர் எல்லைக்குள் வந்ததும் அந்த அட்ரஸை அருகில் உள்ள கடையில் நிறுத்தி கேட்டுக் கொண்டு போனாள்.



"நேரா ஒரு கிலோமீட்டர் போய் வலதுபக்கம் திரும்பினால் ஒரு நுழைவாசல் வரும். அங்கதான் ஐயா வீடு" என பரமபவ்யமாக சொன்னான் கடைக்காரன். அதை வியந்தவாறே தெருவில் நுழைந்தாள் வர்ஷினி. அங்கும் அடை மழைதான்.



அகலமான திண்ணைகள் கொண்ட அக்ரஹாரத்து வீடுகள். அவள் கேட்டு சென்ற வீடுதான் தெருவிலேயே பெரியதாக இருந்தது. ஓரமாக காரை நிறுத்திவிட்டு படியேறினாள். நடுநடுவே வாசல் வைத்து, சாணம் பூசி மெழுகப்பட்ட ஐந்து அகலமான திண்ணைகள். ஒவ்வொரு திண்ணையிலும் நான்கு, நான்கு தேக்கு மரத் தூண்கள். மேல்பகுதியில் வேலைப்பாடுகள் செதுக்கப்பட்டும், கீழே தாமரைப்பூ பீடம் வைத்து அமைத்த அடிப்பகுதியுமாக, கலா ரசனையோடு கூரையைத் தாங்கி பிடித்திருந்தன. அகன்ற கதவுகளில் ஒற்றைக் கதவு திறந்து இருந்தது. காலிங்பெல் எல்லாம் இல்லை. ஒருக்களித்து இருந்த அந்த ஒற்றைக் கதவின் உள்ளே குளுமையும், இருளுமாய் ஒரு புதிய வாசனை.



"அடடா நீ வர்ஷினி தானே? இப்ப தான் உங்க அப்பா போன் வந்தது. வாம்மா உள்ள வாம்மா!"



35 வயது மதிக்கத்தக்க ஒரு அம்மணி சுவாதீனமாய் அவள் கையை பிடித்து உள்ளே கூட்டிச் சென்றாள். அவர் கையும் குளுமையாகத்தான் இருந்தது.



" உட்காரும்மா! ரங்கா! கார் சாவிய வாங்கிட்டு போய் சாமான்செட் எல்லாம் எடுத்துட்டு வா" என உள்ளே பார்த்து உத்தரவு போட்டவாறு அவளை ஒரு சோபாவில் அமரச் செய்தார். வர்ஷினிக்கு புது இடத்தில் கூச்சமாக இருந்தது.



" மெட்ராஸ்ல ரொம்ப மழை வந்துடுத்தாம்! உங்க அப்பா போன் பண்ணினார். உங்க வீடு போல இங்கே தாராளமாய் இரும்மா! பாவம்! களைச்சு போய் வந்திருக்கே! மணி ஆறாயிடுத்து. வத்சலா! டிபனும் காப்பியும் கொண்டுவா" என்று பணித்தார் அம்மணி. கள்ளிச்சொட்டாக இருந்த டிகாக்ஷன் காப்பியை குடித்துக் கொண்டிருக்கும் போதே மாடி இறங்கி ஒரு இளைஞன் வந்தான்(ர்).



நல்ல நெகுநெகுவென்ற உயரம், வெள்ளை பனியனும், வெள்ளை வேட்டியின் ஒருமுனையை கையால் பிடித்தவாறே இறங்கிவந்த பாதங்களில் அவள் கண்கள் தானாகவே நின்றன. சிவந்த சீரான பாதவிரல்கள். நறுக்கின நகம். புசுபுசுவென கால்கேசம். அப்படியே கண்களை உயர்த்தி பனியன் மேல் புரண்ட ஆலிலை கிருஷ்ணர் பதக்கம் பதித்து மிளிர்ந்த மெல்லிய தங்கச் சங்கிலி. நீண்ட கழுத்து, முகம். தாமரை மொட்டை நீளவாக்கில் கிடத்தியது போன்ற கண்கள். அதில் தழைந்த குறுஞ்சிரிப்பு........



"கண்ணாலே நான் கண்ட கணமே உயிர் காதல் கொண்டதென் மனமே"



பழைய பாட்டு சில்லென மனதில் ஓட சட்டென தன் நிலைக்கு வந்தாள் வர்ஷினி.



" இவர்தான் அநிருத்தன். என் சின்ன மச்சினர். எம் டெக் முடிச்சுட்டு நம்ம பண்ணைய பார்த்துட்டு இருக்கார்"



"வாங்க நமஸ்காரம்" என்று கைகூப்பி விட்டு வர்ஷினி பார்க்கப்பார்க்க அருகில் இருந்த அறைக்குள் போய் விட்டார் அவர்(ன்).



அந்த இரவும், அதற்கடுத்த மறுநாளும் எப்படி போனதென்றே தெரியவில்லை வர்ஷினிக்கு. குடும்பமே ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் நேரத்தில் மட்டும் அநிருத்தனை பார்த்தாள். இதுகாறும் அறிந்திராத ஒரு உணர்வை உணர்ந்தாள் வர்ஷினி.



பிறகு சென்னையில் மழை நின்று நிலைமை சீரானதும் பிரியாவிடை பெற்று அந்த ஊரை விட்டு அவள் சென்றதும், வீட்டில் அம்மா அப்பா அந்த பையன் பரவால்லையா மேற்கொண்டு பேசட்டுமா என்று கேட்டதும் நல்லதொரு நாளிலே அவனையே வர்ஷினி கைப்பிடித்ததும் கனவு போல் நடந்து முடிந்தன. இப்போது வர்ஷினி அந்த வீட்டின் கடைக்குட்டி மருமகள். பெரிய ஓர்ப்படிதான் அம்மணி என்று அழைக்கப்பட்ட பூமாக்கா. இரண்டாவது ஓர்ப்படி இவள் வயதை ஒத்த மஞ்சுளாக்கா. அனிருத் - அமிர்தவர்ஷினி ஜோடி அபாரமாய்த் தான் இருந்தது. சங்கீத ஞானத்தில் அவளுக்கு

சளைக்கவில்லை அவன். ஒரு பாட்டின் பல்லவியை அவள் பாடினால் அதே ராகத்தில் வேறு ஒரு பாட்டின் சரணத்தை பாடி அவன் குறும்பாக கண்சிமிட்டுவான். தனது சங்கீதத்திற்கு துணைக்குத்துணை, நல் ஆசானுக்கு ஆசான் என வர்ஷினி குதூகலித்தாள்.



வர்ஷினி அம்மாவுக்குத்தான் ஜானகிரமண பாகவதர் பேரனுக்கு பெண்ணை கொடுத்ததில் ஏக பெருமை. நாரதகான சபாவில் நோட்டீஸ் அடித்து ஒட்டாத குறையாக தம்பட்டம் அடித்துக் கொண்டாள். அப்பாவுக்கும், அத்தை மாமாவிற்கும் பக்திப் பரவசம். பாகவதரின் முழு உருவ படத்திற்கு நெடுஞ்சாண்கிடையாக அத்தையும் மாமாவும் விழுந்து நமஸ்கரித்தார்கள். ஆசை அறுபதும் மோகம் முப்பதுமாய் மொத்தம் மூன்று மாதங்கள் கழிந்ததே தெரியவில்லை வர்ஷினிக்கு. ஏகாதசியும் கிருத்திகையும் பிரதோஷமும் சங்கடஹர சதுர்த்தியும் எப்போது வருகிறது என்றே தெரியாத வர்ஷினுக்கு அவையெல்லாம் இந்த அகத்தில் விசேஷ நாட்களாகவே கொண்டாடப்படுவது புதிதாக இருந்தது. அந்நாட்களுக்குரிய நைவேத்தியங்களும் பூஜை புனஸ்காரங்களும் வித்தியாசமாகத்தான் இருந்தது. ஆனால் அந்தந்த நாட்களில் மாலை தொடங்கி இரவு வரை அந்த பெரிய பூஜை கூடத்தில் நடக்கும் பஜனை கீர்த்தனங்கள் மிகவும் பிடித்தமானது ஆயிற்று அவளுக்கு. பூஜைக்கு யார் யாரோ வந்தார்கள். சிரேஷ்டமான சங்கீதம் நிகழ்ந்தது. கற்றது கைமண் அளவு என்ற ஞானமும் வந்துவிட்டது வர்ஷினிக்கு. சாதாரணமான தோற்றமுடையவர்கள் அங்கு அமர்ந்து பாட ஆரம்பித்தால் மகோன்னதமாக பாடுவது வியப்பூட்டியது. அந்த வீட்டின் தூணிலும் துரும்பிலும் இசை ஊறி ஊறி கடலாய் பொங்கிப் பிரவாகித்தது. ஒரு நாள் இரவு தன் சுந்தர புருஷனின் தந்தநிற நெற்றியின் மயிர்க் கற்றைகளை அளைந்தவாறு வர்ஷினி கேட்டாள்.



"நான் ஃப்யூஷன் மியூசிக்ல ரிசர்ச் பண்ண ஆஸ்திரேலியாவோ அமெரிக்காவோ போலாம்னு இருக்கேன். வாட் டூ யு சே?" என்றாள்.



"பேஷா போயிட்டு வாயேன். அந்த ரிசர்ச் பண்ணிட்டு நீ அப்புறம் என்ன செய்வாய்?"



க்ஷண நேரத்தில் தாமரையாய் மலர்ந்த அவள் முகம் இப்போது மாறியது. அனிருத்தின் கேள்விக்கு அவளிடம் பதிலில்லை.



".... இல்லை ரிசர்ச் முடிச்சா என் லைஃப்ல ஒரு அச்சீவ்மென்ட் மாதிரி இருக்கும்...."



" அப்போ செய்யேன்!"



இப்போது வர்ஷினிக்கே அது ஒரு அச்சீவ்மென்ட் தானா? என்ற கேள்வி தோன்றியது. மறுநாள் காலையும் அதற்கடுத்து வந்த நாட்களிலும் அவளிடம் பழைய உற்சாகம் இல்லை. மனது கலங்கிய குட்டையாக அமைதியற்று இருந்தது. எப்போதும் போல் அந்த பெரிய வீட்டின் பராமரிப்பிலும், வரும் விருந்தினருக்கு உபசாரமும், பகவத் பாராயணமுமாய் இருந்தாலும் மனம் குரங்கென குதித்தது. நிலைதடுமாறி தாவியது. இது எனக்கு ஏற்ற இடம்தானா? எனக்கு இவ்வளவு தானா? என மனசு கழிவிரக்கம் கொண்டது. அன்று பார்த்து பூமாவையும், வர்ஷினியையும் தவிர ஒருவர் கூட வீட்டில் இல்லை. பூமா வர்ஷினியை இரவு எப்போதும் போல உறங்குவதற்கு முன் பூஜை கூடத்தில் வேண்டிய பூஜையினை செய்யச் சொல்லிவிட்டு தலைவலி என தூங்கப் போய் விட்டாள்.





வேலைக்காரர்களும் வேலைகளை முடித்துக்கொண்டு பெரிய வீட்டுக்கு வெளியே அவர்களுக்கென கொடுக்கப்பட்ட ஓட்டு வீடுகளுக்குப் போய் விட்டனர். வர்ஷினி பூஜை பாடல்களைப் பாடிக் கொண்டே வந்தாள். அவளுக்கே வெட்கமாயிருந்தது - மனம் ஒன்றாமல் தான் பேருக்கு பாடி பூஜை செய்கிறோமே என்று. அப்போதுதான் அது நிகழ்ந்தது.



வரிசையாக சின்னதும் பெரியதுமாய் பூஜை பீடத்தில் வைக்கப்பட்டிருந்த சாளக்கிராமங்களின் அருகே மதுராவிலிருந்து பெரியவர் ஜானகிரமண பாகவதர் கொண்டு வந்தது என சொல்வார்கள் - அந்த தங்க, தவழும் கிருஷ்ணன் விக்ரகம் தலையை லேசாகத் தூக்கி அவளைப் பார்த்தது. அதிர்ந்தே விட்டாள் வர்ஷினி. அந்த இரவு குளிரிலும் குப்பென வியர்த்தது அவளுக்கு. ஏதாவது கற்பனையாக இருக்கும் என அவள் நினைக்கும் போதே கடைசியாக இருந்த சாளக்கிராமம் தானாகத் திறந்து மேல் பாதி கீழே தானாக வைக்கப்பட்டு திறந்த வாக்கில் தெரியும் நரசிம்ம உருவம் அவள் கண்களில் படும் வகையில் நிமிர்த்தி வைக்கப்பட்டது. நட்ட நடுவில் நின்றகோலமாய் இருந்த நவநீதகிருஷ்ணன் விக்ரஹம் உயிர்பெற்று அதன் கையில் இருந்த புல்லாங்குழலில் இருந்து



" கிருஷ்ணா நீ பேகனே...... பாரோ ......"



.....யமன்கல்யாணி ராகத்தில் அமைந்த பாடலின் கடைசி சரணத்தை வாசித்தது.



வர்ஷினி துவண்டாள். " கிருஷ்ணா!" எனக் கூறிக் கொண்டே மயக்கமானாள். எவ்வளவு நேரம் அப்படியே கிடந்தாளோ தெரியவில்லை தானாக கண்விழித்ததும், அடர்ந்த பழுப்பு நிறத்தில் இருந்த பூஜை பீடத்தில் இருந்த தவழும் கிருஷ்ணன் விக்ரஹமும், சாளக்கிராமமும், நவநீதகிருஷ்ணன் விக்ரஹமும் அவள் தலைமாட்டை சுற்றி மனுஷர்கள் நிற்பது போல் இருந்தன. சர்வாங்கமும் சிலிர்க்க வர்ஷினி மறுபடி பதைத்துப் போனாள். வாரி சுருட்டிக் கொண்டு தன்னிச்சையாக விக்ரஹங்களை அதனதன் இடத்தில் வைத்துவிட்டு விழுந்து நமஸ்கரித்தாள். எப்போதும் போல் மற்ற விளக்குகளை அணைத்து விட்டு இரவு விளக்கைப மட்டும் எரியவிட்டு பூஜை உள்ளை தாழிட்டு தன் அறைக்குச் சென்றாள். உறக்கம் வருமா என்ன? நடந்ததெல்லாம் கனவா நனவா என்று யோசித்து யோசித்தே உறங்கிப் போனாள்.



மறுநாள் ஏகாதசி. காலை முதலே வீடு அமர்க்களப்பட்டது. அன்று சமையலறையில் வேலை இல்லை. வேண்டியவர்கள் பாலும் பழமும் சாப்பிட்டனர். மாலை எப்போதும் போல ராம நாம சங்கீர்த்தனம்.



"ராம ராமநுட மாபாரம்......

மம ரக்ஷண ச்சேயுட மீ பாரம்......"



கல்லும் கரையும் வகையில் யாரோ ஒருவர் திருவாரூரில் இருந்து வந்து பாடிக்கொண்டிருந்தார். ஆராதனை முடிந்ததும், நெகு நெகுவென புளியை தேய்த்து இளஞ்சிவப்பாக மினுங்கிய பெரிய செப்பு பஞ்சபாத்திரத்தில், கற்பூரமும், ஏலமும், துளசிதளமும் சேர்த்து, மணக்க மணக்க தீர்த்தம் கொடுத்து கொண்டே வந்தாள் வர்ஷினி. பாடல் முடிந்த பின்னும் பக்தி பரவசத்தில் கண்மூடி இருந்த அந்த திருவாரூர் பெரியவர் " சுவாமி! தீர்த்தம்!" என்ற வர்ஷினியின் குரல் கேட்டு கண்ணைத் திறந்தார்.



"தாயே! தயாபரி! சீதாப்பிராட்டி!" என அவர் வர்ஷினியின் கால்களில் விழ அனைவரும் திடுக்கிட்டுப் போயினர்.



"என்ன சுவாமி! இவள் எனது மூன்றாவது மருமகள். மிகச் சிறியவள்! இவளை வணங்குகிறீர்களே! "என்றார் பெரியவர்.



" இல்லை இல்லை! நான் நிதமும் வணங்கும் சீதாதேவியின் முகமாகவே இந்த குழந்தை எனக்குத் தெரிந்தாள்!" என்று அவர் கூறவும் எல்லோரும் மெய்சிலிர்த்தனர்.



வர்ஷினிக்கு மனதுக்குள் சிலீரென்றது. நானே எவ்வளவு பெரிய குழப்பத்தில் இருக்கிறேன்..... இவர் என்னைப் போய்..... என்று ஏதேதோ நினைத்தாள்.



சரியாக முப்பதாவது நாளில் மாத சிவராத்திரி வந்தது. அன்று காலையில் இருந்தே நிறைய பேர் வந்து பூஜை கூடத்தில் பூ பழம் என கொடுத்து விட்டு பீடத்தை சேவித்து விட்டு சென்றனர்.



மாலையில் விளக்கேற்றும் நேரம் வந்ததும் வர்ஷினி எப்போதும் போல நான்கு வாசல்களிலும் உள்ள எட்டு மாடங்களிலும் அகல்விளக்கு ஏற்றி, சாம்பிராணி புகை

காட்டி, தாழம்பூ ஊதுபத்தியை மாடங்களில் விளக்கின் அடியில் செருகி வைத்துவிட்டு வந்து பூஜை அறையில் இருந்த பெரிய குத்து விளக்குகளை ஏற்றினாள். சொல்லி வைத்தாற்போல் அவள் இதுவரை கேட்டிராத ஒரு குரல் - உற்றுக் கேட்டால் மட்டுமே கேட்கும் வகையில் பூஜை பீடத்தில் இருந்து வந்தது. குனிந்து கவனித்து கேட்டதும் வர்ஷினி உறைந்து போனாள்.



ராஜஸ்தானில் இருந்து பெரியவர் வாங்கி வந்ததாக கூறப்பட்ட வெள்ளை பளிங்கு பொம்மை - பார்வதிதேவி சிவலிங்கத்தை பூஜிப்பதாக இருந்ததில் - பார்வதிதேவி பொம்மை வாயசைத்து பாடிக் கொண்டிருப்பது நுட்பமான உதட்டசைவில் இருந்தும் தேன் போன்ற மெல்லிய குரலில் இருந்தும் கேட்டது.



"நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

இமைப் பொழுதும் என் நெஞ்சத்தில்

நீங்காதான் தாள் வாழ்க"



தன்னையுமறியாமல் வர்ஷினி இருகைகூப்பி கும்பிட்டாள். பார்வதிதேவி பொம்மை அவளை பக்கவாட்டில் பார்த்து சிரித்த போது பொம்மையின் கன்னம் குழிந்தது நெஞ்சை அள்ளியது. எவ்வளவு நேரம் அப்படியே குத்திட்டு அமர்ந்திருந்தாளோ தெரியாது. பூமாக்கா " வர்ஷி! காப்பி ஆர்றதே தங்கம்!" என அழைத்தவாறே உள்ளே வந்தவள் வர்ஷினி முகம் கண்டு ஏதோ புரிந்தாற்போல் கேட்டாள்.



" என்ன வர்ஷி! விக்ரஹம் எல்லாம் உயிரோடு வந்து உன்னோடு பாட்றது, ஆட்றதா?



சரேலென திரும்பிப் பார்த்தாள் வர்ஷினி.



"உங்களுக்கு எப்படி தெரியும்கா?"



"தெரியும்மா! இதுதான் இந்த வீட்டோட....இந்த பூஜை உள்ளோட வைப்ரேஷன். இதற்காகவே இங்கே நிறைய பேர் வர்றா. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அனுபவம். ஒரு தரம் அதோ அந்த பத்மாவதி தாயார் விக்ரஹம் இருக்கு பார்! எனக்கு ஒரு பூவை எடுத்து நீட்டினார். எனக்கு வேறு என்ன வேணும் சொல்லு!"



சட்டென்று விளங்கியது வர்ஷினிக்கு. உண்மைதான்! இதை விடுத்து வேறு என்ன வேண்டும் வாழ்க்கைக்கு! இந்த தெய்வீக உணர்வு, அருட்கடாட்சம், தன்னை மறந்த ஒரு நிலை, இசை பரவசம், எண்ணங்களே எழும்பாத மனநிலை, அது தரும் நிசப்தமான நிம்மதி.... இது போதும்! இது போதும் அல்லவா?





"ஆலம் அருந்தி அண்ட உயிரை

ஆதரித்த உமது கீர்த்தி......

பாலகிருஷ்ணன் பாடி நிதமும்

பணிந்திடும் நடராஜமூர்த்தி!



பழி யெத்தனை நான் செய்யினும் பாலித்திடும் சிவசிதம்பரம்

மொழி கற்றவர் வழியிற்றுணை முப்பொழுதும் மறவேனே!



இரக்கம் வராமல் போன

தென்ன காரணம் என் சுவாமி!......."





பரவசமும் ஆனந்தக் கண்ணீருமாய் தம்பூரா சுருதிப்பெட்டி இல்லாமலேயே அங்கு ஒரு கச்சேரி நடந்தது. வர்ஷினி அமைதி கொண்டாள். மெல்ல எழுந்து தன் வேலைகளைப் பார்க்கத் தொடங்கினாள‌.

*******
நன்றி
 

Lalitha Nagesvari

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 10, 2021
Messages
1
'Idhai vida sirandadhu edhu?' Arumaiyaana, azhagaana siru kathai. Thathroopamaana varnanai.

Pandianmaadevikku en vaazhthukal! Avalukkum Tamizh Enru Per (idhuvum Behag Ragam)
 

Kalidass

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 11, 2021
Messages
1
இயல்பாய் நதிபோல நகர்கிறது கதை.உண்மைக் காரணங்களை கதையில் கொண்டு வருதல் சற்று கடினமான வேலை அதனை எளிதாகச் செய்திருக்கிறார்.வர்ணனைகள் அனைத்தும் ஆஹா...அற்புதம்...திரும்பத் திரும்ப வாசிக்கத் தோன்றுகிறது.வர்ஷினி திருமணம் முடிந்ததும் வெளிநாடு செல்லாமல் இருப்பது இன்றைய பெண்களின் நிலையை படம்பிடித்துக் காட்டுகிறது. மிக அருமை கதைஞரே.சிறகுகள் விரியட்டும்.
 
Top