• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
அத்தியாயம் 16

வாஸந்தி காபியை வாயில் வைத்ததுமே, கசந்து போய் குமட்டியது. வாமிட் வருவது போல் இருக்க, பாத்ரூமுக்குள் ஓடினாள். அன்னம்மா அவளை கைத்தாங்கலாக பிடித்து வந்து படுக்க வைத்து விட்டு, நிவியிடம் சொல்ல விரைந்தாள்.

அன்னம்மாவைப் பார்த்த நிவி,

“என்ன அன்னம்மா.? தக்காளிக் குழம்பா? மணக்குது என்ன இருந்தாலும் உன் கைப்பக்குவம் மாதிரி வராது. தேங்காய் சட்னி அரைக்கலான்னு தான் துருவிகிட்டிருக்கேன். சங்கருக்கும் டிபன் கொண்டு போகணும். இனி தோசை மட்டும் ஊத்தினா போதும். என்னமோ எனக்கு சமைக்க இன்ட்ரஸ்டே வரமாட்டேங்குது. ஏதோ உன் புண்ணியத்தில அடிக்கடி நல்ல சாப்பாடு கிடைக்குது. வாஸந்தி ரெடியா?”

“தள்ளு... நீ போய் புடவையை மாத்து. நான் தோசை ஊத்தறேன். தேங்காயும் துருவி ஃப்ரிஜ்ல வெச்சிடறேன்.”

“ரொம்ப தேங்க்ஸ் அன்னம்மா...”

“அய்ய... எதுக்கு.? வாஸந்தி பொண்ணுக்கு உடம்பு சுடுது. நேத்து மழையில தொப்பையா நெனஞ்சிட்டு வந்திச்சு போல இருக்கு. இப்ப எந்திரிக்கவே முடியலை.. காபி குடிச்சு வாந்தி பண்ணிடுச்சு. ஒரே நாள்ல ஓய்ஞ்சு போய் கிடக்கு. சத்தே இல்லை.” பேசிக் கொண்டே தோசையை கேரியரில் போட்டு ரெடி செய்து விட்டு, தட்டில் டிபன் வைத்து நிவியிடம் நீட்டினாள்

“நல்லா வெட்டு வெடுக்குன்னு சாப்பிட்டா தானே வேலை செய்ய தெம்பிருக்கும். நீயும் தான்... இந்தா சாப்பிடு. நாள் முழுக்க நோயாளிங்களை பார்க்கறீங்க. உங்களைப் பார்த்தா தான் நோயாளி மாதிரி இருக்கு. போகும் போது வாஸந்தியை ஒரு எட்டு பார்த்துட்டு போ. தலை தூக்காம கிடக்கு...”

“மறுபடி தேங்க்ஸ் அன்னம்மா. நீ போய் அவருக்கு டிபன் கொடுத்திடு. நான் வாஸந்தியை பார்த்திட்டு வந்திடறேன்.உனக்கு தோசை ஊத்திக்கல? வீட்டை பூட்டி சாவியை எடுத்துக்க.” " நான் இட்லி ஊத்தி வெச்சிட்டு தான் வந்தேன். அங்கே போய் சாப்பிட்டுக்கறேன். நீ போ."

மெடிக்கல் கிட்டுடன் உள்ளே நுழைந்த நிவிக்கு, அயர்ந்து போய் கட்டிலில் கிடந்த வாஸந்தியைப் பார்த்ததும் புருவம் முடிச்சிட்டது. அவள் அருகில் அமர்ந்து நாடியைப் பிடித்ததும், வாஸந்தி கண் விழித்து,

“வா நிவி. ஃபீவரிஷ்ஷா இருக்கு. நேத்து மழையில நினைஞ்சது ஒத்துக்கல. இன்னிக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடும். சங்கர் அண்ணா கிட்ட லீவ் சொல்லிடு..”

“வாஸு.. உனக்கு பீரியட்ஸ் வந்து எத்தனை நாளாகுது இந்த மாதம் முடிஞ்சுதா” என்றதும் அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது. அவளுக்கிருந்த மனக்குழப்பத்தில் இது பற்றி யோசிக்கவே மறந்து போயிருந்தாள்.

“ஆமா நிவி. இந்த மாதம் ஸ்கிப் ஆகியிருக்கு.”

“சரி... மதியம் மெதுவா ஹாஸ்பிடல் வா. ஒரு டெஸ்ட் பார்த்திடலாம். எனக்கு கொஞ்சம் சந்தேகமா இருக்கு” என்றதுமே வாஸந்தியின் உணர்வுகளை சொல்லில் வடிக்க இயலாது போனது. மகிழ்ச்சி, துயரம், ஏக்கம் ஆதங்கம் என்று மாறி மாறி இறுதியில் அனைத்தும் சேர்ந்து கண்களின் வழியே வெளியேறியது.

“நிவி... இந்.. த மாதிரி ஆகும்னு நான் நினைச்சு கூட பார்க்கலை.. நா..ன்... எ..ன..க்கு... சரிப்பா நான் கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுக்கறேன்.. மூணு மணிக்கு வரேன்..”

அதற்குள் அன்னம்மா வரவும், “அன்னம்மா... அவருக்கு டிபன் கொடுத்தாச்சா. வாஸந்தி அம்மாவாகப் போறான்னு நினைக்கறேன்.. அவ கூடவே இரு. மதியம் லைட்டா சாப்பிட கொடுத்து, அங்க கூட்டிட்டு வா.. செக்கப் பண்ணிடறேன். ஃபீவர் இருக்கறதால ரசம் மட்டும் கொடு. நான் சங்கர் கிட்ட லீவ் சொல்றேன்.”

வாயெல்லாம் பல்லாக, “சந்தோஷம் நிவிக் கண்ணு. நான் மத்தியானம் கூட்டியாறேன். நீ கிளம்பு... நான் பார்த்துக்கறேன்.”

-14-

பரிசோதனையில் கர்ப்பம் உறுதியானதும், “கங்கிராட்ஸ் வாஸு... முதல்ல உன் ஹஸ்பண்டுக்கு போன் பண்ணு. ரொம்ப சந்தோஷப்படுவார். இப்ப எங்க இருக்கார்.?” என்றதுதான் தாமதம் தன் மனதில் உள்ள துயரமெல்லாம் வெடித்துக் கிளம்ப அழுது தீர்த்தாள்.

பதறிப்போன நிவி, “வாசு... எதுக்கு அழற... எனக்கு எதுவும் புரியலை... என்னன்னு சொல்லுப்பா. சொன்னாதான தெரியும்...”

இத்தனை உரிமையும் நட்புமாகப் பழகும் நிவியிடம் இனி எதையும் மறைக்கத் தேவையில்லை என்ற எண்ணம் வேரூன்ற, அங்கிருந்த ஓய்வறைக்கு அழைத்துச் சென்று, தன் கடந்த காலம் முழுவதையும் மடை திறந்த வெள்ளம் போல் அவளிடம் கொட்டித் தீர்த்தாள்.” ஓய்ந்து போய் அவள் மடியில் சாய்ந்து கதறினாள்... அவளின் கதையைக் கேட்டு நிவியின் கண்களும் பனித் திருந்தன.

“வாஸு என் லைஃப் தான் எனக்கு சொந்த பந்தங்களோட வாழற மாதிரி அமையலைன்னு வருத்தப் பட்டேன்.. ஆனா உன் கதையைக் கேட்டதும் எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை.

ஆனா முழுத்தப்பும் உன் கணவறோடதுன்னு சொல்ல மாட்டேன்.. அவர் கிட்ட என்ன காரணம்னு தெரிஞ்சுக்காமயே ஊரை விட்டுப் போனது சரியேயில்லை. அவங்க பேரண்ட்ஸ் சம்மதம் கேட்காமலேயே உன்னை மேரேஜ் பண்ற அளவு உன் மேல பிரியம் வச்சிருக்கார்னு தானே அர்த்தம். அவர் மேல ஏன் உனக்கு சந்தேகம்.?

எப்பவாச்சும் நம்பிக்கை வராத மாதிரி உன் கிட்ட நடந்திருக்காரா? உன் ஃப்ரண்ட் காயூ உன்னோட எவ்வளவு க்ளோஸ்னு நீயே சொல்ற? அவங்களையும் நீ ஏன் மறுபடி கான்டாக்ட் பண்ணல? உன் கணவர் கூட உன்னைப் பார்க்க வந்திருக்கலாம். இல்லை உன்னை அவாய்ட் பண்ணியதற்கு முக்கியமான ரீசன் இருக்கலாம். அவர் உன்னை ஒதுக்கி வெச்சார்னு எப்படி சொல்ற?

போனில், ‘வெயிட் பண்ணுடா. என்னை நம்பு. இங்க பெரிய பிரச்னை. சால்வ் ஆனதும் நேரில் வந்து எல்லாம் சொல்றேன்.’ னு சொன்னதா சொல்ற. நீ தான் அவசரப் பட்டுட்டன்னு தோணுது.

அது போகட்டும். மறுபடி நீங்க சந்திச்ச பிறகாவது அவர் சொல்ல வந்த விளக்கத்தை கேட்டிருக்கணும். உன் மேல பிரியம் இல்லேன்னா, எதுக்காக மறுபடி மேரேஜ் பண்ணியிருக்கணும். அவர் பேச வந்ததை பொறுமையா கேட்டிருந்தாவே பிரச்சனை சால்வ் ஆகியிருக்கும்னு எனக்கு தோணுது. காதலுக்கு அடிப்படையே நம்பிக்கை தானே.. மனதை வருடுகிற குரலில் மென்மையாக தவறை சுட்டிக் காட்டியதும், கண்ணை கரித்தது. ஒரு கேள்விக்குக் கூட அவளிடமிருந்து சாதகமாக பதில் வரவில்லை. தலை குனிந்தாள்.

“சரிப்பா. விடு. இனி நல்லபடியா குழந்தை பிறக்கிற வரை எதுவும் யோசிக்க வேண்டாம்.. அதுக்குப் பிறகு மேல என்ன பண்றதுன்னு முடிவு பண்ணலாம்.. சரி அவர் பேர் கூட நீ சொல்லலை. விபரம் சொல்லு. சங்கர் கிட்ட விசாரிக்கச் சொன்னா செய்திடுவார்.”

“வேண்டாம் நிவி இப்ப வேண்டாம். நீ சொன்ன பிறகு தான் நான் எத்தனை சீப்பா நடந்திருக்கேன்னு புரியுது.காயூ இருந்திருந்தா திட்டி எனக்கு புரிய வெச்சிருப்பா.கௌசல்யா அம்மா என் மேல கொட்டிய பிரியத்துக்கு நான் அருகதையே இல்லாதவ. என் பிடிவாதத்தால நான் நிறைய கஷ்டப்படுவேன்னு அம்மா எப்பவும் சொல்வாங்க. அது சரிதான்.அவங்களை பார்க்கற யோக்யதை கூட எனக்கு இல்லை. மன்னிக்க முடியாத தப்பை தான் நான் பண்ணிருக்கேன்.அவங்க முகத்தில இனி விழிக்கவே எனக்கு அருகதை இல்லை நிவி. என் வாழ்க்கையில என் குழந்தை மட்டும் தான் இனிமே துணை. அவருக்கு இனியாவது நல்ல லைஃப் அமையட்டும் இனி என் குழந்தை மட்டுமே என் உலகம்” துயரமும் வேதனையுமாக பேசி முடித்தாள்..

“வாஸு… உன்னை கட்டாயப் படுத்த மாட்டேன்.. ஆனா. உன் ஃப்ரண்டா ‘நீ செய்யறது சரியில்லை’ன்னு சொல்ற உரிமை எனக்கு இருக்கு. இப்பவும் தப்பா தான் யோசிக்கிற.இந்த சமயத்தில உன் உடம்போட மனசையும் அரோக்யமா வெச்சுக்கணும். ரொம்ப வீக்கா வேற இருக்க. டானிக் எழுதித் தரேன். ஃபீவர் இருக்கிறதால மைல்டான டோஸ் எடுத்தா போதும். நல்லா தூங்கு. ஈவினிங் நான் மறுபடி வந்து பார்க்கறேன். சங்கர் கிட்ட நான் சொல்லிக்கறேன் நீ கிளம்பு. அன்னம்மா.... (உள்ளே வந்ததும்) வீட்டுக்கு கூட்டிட்டு போ.. சாயங்காலம் ஹார்லிக்ஸ் கொடு.”

நிவியின் கேள்விகளால் மனது நிலை கொள்ளாமல் தவித்தது. தான் செய்த தவறு பூதாகாரமாகத் தெரிய, அவளால் அழுகையை அடக்கவே முடியவில்லை. அன்னம்மா, “எஞ்சாமி.! அழுகாதே.. வயத்துப் பிள்ளையோட அழுதா இழுத்துப் புடிச்சுக்கும். உம் புருசனை நினைச்சு அழுகறயா? ஒரு போனைப் போட்டா ஓடி வந்துரப் போறாரு. நான் இருக்கேன் கண்ணு. தாயில்லையேன்னு விசனப் படாதே. நானிருக்கேன். உன்னைத் தாயா பார்த்துக்குவேன்.” எதையுமே எதிர்பாராத தன்னலமில்லாத அந்த எளியவளின் அன்புக்கு முன் அவளின் மனபாரமெல்லாம் கரைந்து போக, உரிமையோடு அவள் மடியில் படுத்து விசும்பியபடியே உறக்கத்தைத் தழுவினாள். அரவிந்துக்குத் தெரியாமலேயே அவர்கள் வீட்டு வாரிசு வாஸந்தியின் வயிற்றில் சொகுசாக வளரத் துவங்கினான்.

---

தொடரும்...
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,934
அருமை அருமை அம்மா ♥️♥️♥️♥️♥️♥️

அட கடவுளே இந்த வாஸந்தி பிள்ள படிச்சும் முட்டாளா இருக்கே திரும்ப திரும்ப தப்பு செய்துகிட்டே போகுதே, பெண்ணே உன்மேல் பிழை ரெம்ப ரெம்ப கரெக்ட் அபிபாலா அம்மா 😄😄😄😄😄😄
 
Top