• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
அத்தியாயம் 18

எல்லோருமாகச் சேர்ந்து அவர்கள் வீட்டு சந்தோஷத்துக்கு ‘கௌசிக்’ என்று நாமகரணம் சூட்டினர். சங்கருக்கும் நிவேதாவுக்கும் கௌசிக் தான் உலகம். தங்கள் ஏக்கத்தை தீர்க்க வந்த அருமருந்தாகவே கௌசிக்கை கொண்டாடினர்.

அவனின் ஒவ்வொரு அசைவும் வளர்ச்சியும் மூவரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. முகம் பார்த்துச் சிரிப்பதையும் குப்புற விழுவதையும் ஏன் மண்டிபோட்டு நகர்ந்ததைக்கூட கொண்டாடி மகிழ்ந்தனர்.குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியையும் கேமராவில் பதிந்தாள்.ஒவ்வெரு செயலுக்கும் அன்னம்மா கோயிலுக்குச் சென்று தேங்காய் உடைப்பதே வேலையாகிப்போனது.

கௌசிக் சோபாவைப் பிடித்து எழுந்து நிற்க முயற்சி செய்ய ஆரம்பித்தான். சங்கரைப் பார்த்ததுமே கை நீட்டி தூக்கச் சொல்லி சிணுங்குவான். தூக்கியதும் தாவி அவன் கழுத்தைக் கட்டிக்கொள்வான். அவன் வீட்டிலிருக்கும் நேரங்களில் சங்கரைவிட்டு யாரிடமும் போகமாட்டான்.மாலை வேளைகளில் நிவியோடு சேர்ந்து குழந்தையைக் காரில் ஏற்றிக்கொண்டு ஊர் சுற்றுவார்கள். மொத்தத்தில உறங்கும்போதும் பாலருந்தும் போதும் மட்டுமே அவன் வாஸந்தியின் கைகளில் இருப்பான்.

தன் அருகில் உறங்கும் செல்ல மகனை வருடும் வாஸந்தி, கௌசல்யாவிடமும் அரவிந்திடமும் குழந்தையை மறைத்து வளர்ப்பதை குற்றமென எண்ணிக் குமுறுவாள். அவனைத் தொடர்பு கொள்ளவும் தயக்கமாக இருந்தது. நூற்றில் ஒரு சதவீதமாக அவனுக்கு வேறு வாழ்க்கை அமைந்திருந்தால் ... நினைக்கவே நடுங்கியது. அதற்காகவே அவனைப்பற்றி தெரிந்து கொள்ள ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.

ஒரு வயது முடிவதற்குள் தளர் நடை போட்டுப் பழகிய கௌசிக், சின்னசின்ன வார்த்தைகளாகப் பேச ஆரம்பித்திருந்தான். “அம்மா, மாமா, அத்தை, ஆயா, வா, உக்கா,... என்று குட்டி குட்டியாய் மழலையில் மிழற்ற துவங்கினான். இதில் நிவிக்குத்தான் கொள்ளை பெருமை.

அதிலும் முதன்முதலில் இரு கைகளையும் விரித்து நிவியைத்தான் ‘அம்மா’ என்று அழைத்தான். உணர்வுகள் கொப்பளிக்க திகைப்பும் வியப்புமாக கால்கள் தொய்ய மடியிட்டு அமர்ந்து, தன்னைத் தாயாக்கிய கௌசிக்கை முத்தத்தால் குளிப்பாட்டினாள் நிவி! கண்கள் இரண்டும் நீர்வீழ்ச்சியாயப் பொழிய, குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டாள். வாஸந்தி ஏதாவது தவறாக நினைத்து விடுவாளோ என்று அச்சதோடு அவனை ஏறிட, கலங்கிய கண்களோடு வாஸந்தியும், “போதும் போதும் ...உன் பையனை நீயே கொஞ்சு. ரொம்ப செல்லம் குடுக்கற நிவி அப்புறம் பாரு உம் பையன் உன் சொன்ன பேச்சு கேட்கமாட்டான்.” என்று பேசியதும். நிவி ஓடிவந்து அவளை அணைத்துக் கொண்டாள். ..

“ஆமாம் நிவி... கௌசிக்கை பத்து மாதம் வயிற்றில் சுமந்தது மட்டும்தான் நான்... அவனை மார்பிலும் தோளிலும் போட்டு, மனசு பூரா பிரியத்தை ரொப்பிக்கிட்டு நீயும் அண்ணனும்தான் வளர்க்கறீங்க... அவன் அம்மான்னு உன்னைக் கூப்பிடலேன்னா தான் வருத்தமாயிருக்கும்” என்று அவளைப் பார்த்து முறுவலித்தாள். சங்கரின் மனம் பொங்கித் ததும்பியது.

நிவி ’அம்மா’ ஆனதும் வாஸந்தி ‘மம்மி’ யானாள். அன்னம்மாவின் கைங்கர்யத்தால்... சங்கர், கௌசிக்குக்கு எப்பொழுதும் “மாமா”தான்...! அன்னம்மாவுக்கு ‘ஆயா’ ரோல். .. நடக்கத் துவங்கியதிலிருந்து அன்னம்மாவை ட்ரில் வாங்கினான். .. எந்நேரமும் ஓட்டம்தான். தினமும் சங்கர் ஹாஸ்பிடல் செல்லுமுன் அவனோடு பைக்கில் ஒரு ரவுண்டு போக வேண்டும்...! இது எழுதப்படாத விதி. மாலையில் அவர்களோடு காரில் உலா. இப்படியே ஒரு வயதை எட்டிய போது...

“வாஸு நம்ம குட்டிக்கு பர்த் டே வரப்போகுது டிரஸ் எடுக்கணும்.. உனக்கும் வளைகாப்பு செய்ததுபோல் குட்டியா ஒரு பங்ஷன்.வைக்கலாம்னு உன் அண்ணன் ஆசைப்படறாரு. .. ஹாஸ்பிடல் ஸ்டாஃப் மட்டும் போதும். நீ என்ன சொல்ற...? ”

“சாரி நிவி. வேண்டாம். . ஆடம்பரமா எதுவும் பண்ண வேண்டாம். அன்னிக்கு நாம மூணு பேரும் லீவ் போட்டுட்டு காலையில பக்கத்தில இருக்கிற கோயிலுக்கு போய், தம்பி பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணினா போதும். இங்க குழந்தைகள் காப்பகத்தில ஒரு நாள் உணவு ஸ்பான்சர் பண்ணிடலாம். ஈவினிங் ஸ்ரீபுரம் போயிட்டு, நைட் டின்னர் முடிச்சுட்டு வரலாம். அவர் இல்லாம ஃபங்ஷன் வெக்கறது தப்பா தெரியுது. ப்ளீஸ். அண்ணாகிட்ட நீயே சொல்லேன்.” நிவிக்கு சற்றே ஏமாற்றமா இருந்தாலும் வாஸந்தியின் கூற்றில் இருக்கிற நியாயத்தை உணர்ந்து அரைமனதாக ஒப்புக்கொண்டாள்.

ஆனால்பிடிவாதமாக சின்ன ஆலிலை கிருஷ்ணன் டாலரோடு கூடிய செயினை மகன் கழுத்தில போட்டபோது, வாஸந்திக்கு அந்த அன்பை மறுக்க முடியவில்லை. சொன்னபடியே அன்று முழுவதும் இருந்துவிட்டு மாலையில் ஸ்ரீபுரம் வந்தனர்.

அன்றுகாலை அரவிந்தின் போட்டோவுக்கு முத்தம் கொடுக்கச் செய்தாள். தினமும் காலையில் ’குட்மார்னிங் அப்பா’, இரவில் குட் நைட் அப்பா’என்று சொல்லப் பழக்கியிருந்தான். யாருக்கும் தெரியாமல்தான்! மகனுக்கு அப்பா என்று புகைப்படத்தை பார்த்து அறிமுகம் செய்து வைக்கும் வேதனை அவளுக்கு...

இதோ.... ! ஸ்ரீபுரத்தில் வெண்பட்டினால் தைத்த ரெடிமேட் பஞ்சகச்சம், ஜிப்பாவோடு துறுதுறு வென அங்குமிங்கும் ஓடிய குட்டிக் கண்ணனையே பலரது கண்களும் ஆசையோடும் ஆர்வத்தோடும் தழுவின. அன்னம்மாவுக்கு அவன் பின்னால் சுற்றுவதே பெரும்பாடாக இருந்தது. சுவாமி தரிசனம் முடிந்து வெளியே வந்து அமர்ந்தனர். நிவி தான் கொண்டுவந்த இட்லியை அவன் பின்னாலேசுற்றித் திரிந்து ஊட்டிக்கொண்டிருந்தாள்.

அவன் கையில் வைத்திருந்த பலூன் காற்றில் பறக்கக சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த பெண் அதைக் கையில் பிடித்தாள். அவளருகில் ஓடி பலூனுக்காக தன் பிஞ்சுக் கரங்களை நீட்டியவனைத் தூக்கிய அந்தப் பெண், “ஹாய்...! குட்டிப் பையா ... பலூன் உன்னுதா...? குட்டிச் செல்லம் பேர் என்ன...?” என்றதும்...

“கௌசிக்”என்று மழலையில் பதில்கூற, வியந்து போனவளாய் அவன் குணடுக்கன்னங்களிளில் முத்தமிட்டாள். .. நிவியிடம் திரும்பி “பையன் ரொம்ப ஸ்மார்ட் கவனமா பாத்துக்கோங்க. இன்னிக்கு கூட்டம் அதிகமா இருக்கு. கௌசிக் இஸ் வெரி ஸ்வீட். ” என்று அவன் கன்னங்களை வருடி விடை கொடுத்தாள்.

“தேங்க்ஸ்” என்று சொல்லி நிவி, வாஸந்தியின் அருகே சென்று கௌசிக்குக்கு மீண்டும் ஊட்டத் தொடங்கினாள்.அவர்களுடனே சென்ற அந்தப் பெண்ணின் பார்வை வாஸந்தியின் முகத்தில் நிலைத்தது.

-15-

வேகமாக எழுந்து அவளருகே வந்து, கோபமும் ஆவேசமுமாக வாஸந்தியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். உரத்த குரலில் “எருமை..! இத்தனை வருஷமா எங்கடி போய்த் தொலைஞ்ச...? உன்னைத் தேடி தேடி ...” அதற்குமேல் பேச்சு வராமல் அவள் தோள்களைப்பிடித்து உலுக்கினாள். அவள் உடலே ஆவேசத்தில் நடுங்கியது. சங்கரும் நிவியும் ஸ்தம்பித்துப் போனார்கள். தன் தாய் அடிவாங்கியதைப் பார்த்து உதட்டைப் பிதுக்கிய கௌசிக்கை நிவியிடமிருந்து வாங்கி சங்கர் அணைத்துக்கொண்டான். நிவியும் கோபத்தோடு அந்தப் பெண்ணின் அருகே வர, வாஸந்தி விக்கித்துப் போய் நின்றது சில நொடிகளே...! அதன் பிறகு பாய்ந்து சென்று, அடித்தவளை இறுக அணைத்துக்கொண்டாள்.

“காயூ... !” என்று கூவியவளின் குரல் அழுகையில் வெடித்தது..

“போடி... நீயெல்லாம் ஒரு ஃபிரண்டா..? உன்னைக் கொன்னு போட்டாக்கூட என் கோபம் தீராதுடீ. .. என் கூடப் பேசாதே ...” அழுகையும் ஆத்திரமுமாக வெடித்தாள் காயூ.

வாஸந்தி ’காயூ’ என்றதுமே நிவிக்கும் சங்கருக்கும் அவள் யார் என்பது புரிந்து போனது. அதனால அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு கௌசிக்கோடு தள்ளிச் சென்று விட்டனர்.

அப்போதுதான் காயத்ரியின் அருகே வந்த சுனில் வாஸந்தியைக் கவனிக்காமல், காயூ செல்லம்..! நீ இங்க இருக்கியா..? உன்னைத் தேடித் தேடி காலே ஓஞ்சு போச்சு. ஷம்மு வேற அழ ஆரம்பிச்சுட்டா. இரண்டு நாளா என்னைக் காய வச்சு உன்னோட நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேத்திட்ட.. டீல் ஓவர்.. அதனால இன்னிக்கு நைட்...” அவனை முடிக்கவிடாமல் அவன் முதுகில் அடி போட்டு சற்றே நகரவும் அப்போதுதான் பின்னால் நின்றிருந்த வாஸந்தியை ப் பார்த்தான்.

அதிர்ச்சியில் உறைந்து போய் விழிகள் விரிய “வாஸந்தி...! நீதானாம்மா..? நிஜமாகவே நீதானா… எங்ககிட்ட சொல்லாம கூட கிளம்பிப் போற அளவுக்கு நாங்க உனக்கு என்ன துரோகம் செஞ்சோம்.. நீ எங்க இங்க . காயூ. நீ வாஸுவை... ”

“இப்பதான் பார்த்தேன் மாமா ஏண்டி வாஸு... இங்க என்னடி பண்ற..? கோயிலுக்கு வந்தியா...? எங்கே இருக்க? அம்மா எங்க..? யார்கூட வந்துருக்க..? அத்தனை கேள்விகளையும் தவிர்த்தவளது கவனம் முழுக்க முழுக்க பட்டுப்பாவாடை அணிந்து காதுகளில் குட்டி ஜிமிக்கிகள் ஊஞ்சலாட, சுனிலின் கைபற்றி நின்ற குட்டி தேவதை ஷர்மிதாவின் மீதே இருந்தது...

“இவ உன்...”வாஸந்தியின் குரலில் இருந்த பாசத்தில் காயூவின் மனம் கனிய, சற்றே கோபம் குறைந்தவளாய், ”

“இவ எங்க பொண்ணு ஷர்மிதா. ஆறு வயசாகுது” என்றதும் அவளை அள்ளி அணைத்துக்கொண்டு அவளின் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டாள்.

“என் செல்லக்குட்டி... சுனில் அண்ணா.. இவ அச்சு அசல் நீங்களேதான். பெண் குழந்தைகள் தான் வீட்டுககு அழகு... என்ன ஷம்முக்குட்டி. நான் உன் அத்தைடா. ” செல்லம் கொஞ்சினாள்.

அவளை முறைத்துப் பார்த்துவிட்டு சுனிலிடம் திரும்பி, “மாமா..! கிளம்புங்க. போகலாம். நமக்கு இங்கென்ன வேலை..? புதுசா எம் பொண்ணுக்கு அத்தை எங்க வந்து மொளைச்சா...? ஒண்ணும் வேண்டாம். ஷம்முவை அவகிட்டயிருந்து வாங்குங்க. யாரும் எம் பொண்ணை கொஞ்ச வேண்டாம்.பாசம் பொத்துக்குதா..போடி..இத்தனை வருஷமா எங்க நினைப்பே இல்லாம இருந்தவ தானே.இப்ப மட்டும் என்ன வந்துது ”தூய நட்பு உரிமையாய் சாடியது.

வாஸந்தி ஷர்மிதாவை இன்னும் இறுக்கிக்கொண்டாள். தூரத்தில் இருந்தாலும் தன் தாயின் மீது கவனம் வைத்திருந்த கௌசிக், அவள் ஷர்மிதாவைக் கொஞ்சியது பொறுக்காமல் சங்கரிடமிருந்து திமிறி இறங்கினான். குடுகுடுவென வாஸந்தியின் அருகே சென்று,

“மம்மி தம்பி தூக்கு... அக்கா நானா” என்று அவள் புடவையைப் பிடித்து இழுத்தான்... இத்தகைய திருப்பத்தை எதிர்பாராத இருவரும் திகைத்துப் போனார்கள்.

அவள் மண்டியிட்டு, கௌசிக்கை அணைத்து, ‘அப்படிச் சொல்லக்கூடாது செல்லம். இவ உன் ஷம்மு அக்கா. நம்ம ... ஃபிரண்ட்.. சமர்த்தா விளையாடணும். ஒ.கே. வா.’ சுனிலிடம் திரும்பி, “அண்ணா... என் மகன் கௌசிக் ”

இன்னிக்கு இவனோட முதல் பிறந்த நாள்.. அதனால தான் கோயிலுக்கு வந்தோம். அண்ணா ..! இவன் என் அர்வியோட மகன்.. அவங்க வாரிசு.. என்னை நம்பறீங்கதானே..? கண்களில் உயிரைத் தேக்கி இருவரையும் பார்க்க, காயூவின் அத்தனை கோபமும் கற்பூரமாய்க் கரைந்தது. கௌசிக்கைத் தூக்கிக்கொண்டாள்.

அவனைத் தோளோடு அணைத்து,” ச்சீ.. என்னடி பேசற. உன்னை நம்பாம எங்க போறோம். அரவிந்த் அண்ணா, நீ தாயாகப் போறேன்னு தெரிஞ்சுமா உன்னைப் போகவிட்டார்.”

சுனில் அவளை கேள்வியாய் நோக்க, “காயூ இப்போது எதுவும் பேச வேண்டாம்” என்று கண்களாலேயே ஜாடை செய்தாள். முழு விவரமும் தெரிந்துகொள்ளாமல் அரவிந்தைப்பற்றி பேச்செடுக்க காயத்ரி விரும்பவில்லை.

அவசரமாக அதை மறுத்த வாஸு, “இல்லைப்பா அவரைத் தப்பா பேசாதே .. அவங்களுக்கு நான் தான் சொல்லாம லெட்டர் எழுதி வெச்சிட்டு வீட்டைவிட்டு வந்தேன். எனக்கு குழந்தை பிறந்த விவரமும் அவருக்குத் தெரியாது. நான் இருக்கற இடத்தையும் அவங்களுக்குத் தெரியப்படுத்தல. . அவங்க மேல எந்தத்தவறும் இல்ல.” குற்றவுணர்ச்சியில் அவள் குரல் தேய்ந்து ஒலித்தது.

காயத்ரி ஏதோ பேச ஆரம்பிக்கவும்,” நாம முதல்ல வீட்டுக்கு போகலாம். இரு..” திரும்பி சங்கர், நிவியை கண்கள் தேட, அவர்கள் அருகே வந்ததும்,

“சுனில் அண்ணா.. இவர் சங்கர் அண்ணன். இவ அவர் வொய்ஃப் நிவேதிதா.. நான் வீட்டைவிட்டு வந்தததிலேயிருந்து இவங்க நிழல்லதான் பாதுகாப்பா இருக்கேன்.” இவங்க அன்னம்மா.. இன்னொரு தாயா என்னைப் பார்த்துக்கறாங்க.

சங்கர் அண்ணா... காயூ, சுனில் அண்ணா பத்தி உங்ககிட்ட ஏற்கெனவே சொல்லியிருக்கேன். இவ அவங்களோட குட்டி இளவரசி ஷர்மிதா.. எத்தனை அழகு பாருங்க...”சங்கர் அவள் கன்னத்தை தட்டியதும்., கௌசிக் சங்கரிடம் தாவி அவன் தோளில் உரிமையோடு சாய்ந்துகொண்டான். ஷர்மிதாவிடம், “என் மாமா...” என்றதும் சங்கருக்கு முகம் கொள்ளாத சந்தோஷம். முறையாக இருவரும் அறிமுகம் செய்து கைகுகுலுக்கிக் கொண்டனர். சங்கர் “இவன் மாமா செல்லம். என்னைவிட்டுட்டு இருக்கவே மாட்டான்.” பெருமையோடு கூறினான். சுனில் சங்கரின் கைகளைப்பற்றி நெகிழ்ச்சியோடு “தேங்க்ஸ் ப்ரோ.. வாஸந்தியை மட்டுமில்ல என் ஃபிரண்டோட குடும்பத்தையே தழைக்க வெச்சிருக்கீங்க. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்..”

“நோ மோர் தேங்க்ஸ். வாஸுவை என் சிஸ்டரா தான் நினைக்கறேன். இந்த குட்டி சொர்க்கம் எங்க வாழ்க்கைக்கே ஒரு அர்த்தத்தை கொடுத்திருக்கான். நாம கொஞ்சம் விஷயம் பேசணும். .. அவ ஹஸ்பண்ட் யாருன்னு சொல்லமாட்டேங்குறா.. உங்க ஹெல்ப் இருந்தா அவரோட சேர்த்து வைக்கலாம். தினம் தினம் அவரை நினைச்சு தனிமையில அழறா. எங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சிருக்கா. அவ வேதனைப்படறதை பார்த்தா தாங்க முடியலை”

“டோண்ட் வொர்ரி ப்ரோ... இந்த ஸ்டோரில ரொம்ப நாள் கழிச்சு மறுபடி எண்டர் ஆனதே அதுக்குதானே.. பக்காவா பிளான் போட்டு ஜமாய்ச்சுடலாம்..!” என்றான். அவனுக்கென்ன தெரியும்? வாஸந்தி அவனை அதை நிறைவேற்ற முடியாத இக்கட்டான சூழ்நிலையில் கொண்டுவந்து நிறுத்துவாள் என்று...!”

சங்கர் அவர்களை பெரிய உணவகம் ஒன்றிற்கு அழைத்துச் சென்று, டின்னரை முடித்துக்கொண்டு வீட்டுக்கு கூட்டிச் சென்றான். வழியில் ஒரு கடையில் நிறுத்தச் சொல்லி கௌசிக் பிறந்த நாளுக்காக சுனில் பரிசுகளை வாங்கிக் குவித்தான்.

காயத்ரியும் சுனிலும் ஹஸ்பிடல் வளாகத்தினுள் நுழைந்ததுமே, வியப்போடு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

“காயூ..! நீ என்ன சொல்ல வரேன்னு புரியுது. ஆனா இங்க வெச்சு எதுவும் பேச வேண்டாம். வாஸுவுக்கு எதுவும் தெரியக்கூடாது. அரவிந்த் பத்திகூட எதுவும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதே.சங்கரிடம் கூட இப்போ எதுவும் சொல்ல வேண்டாம்” கிசுகிசுத்தான்.

சங்கர் இருவரையும் வரவேற்று உபசரித்தான். வெளியிலே டின்னர் முடிந்ததால், பால் மட்டும் அருந்திவிட்டு, சற்று நேரம் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தனர். ஷர்மிதா, கௌசிக் இருவருக்குமே தூக்கம் கண்களை சுழற்றுவதைப் பார்த்து, வாஸந்தி சங்கரிடம்

“அண்ணா. இன்னிக்கு நாங்க அங்க என் வீட்ல போய் படுத்துக்கறோம்.காயுகிட்ட கொஞ்சம் பேசணும்” என்றதும் சுனில் முந்திக்கொண்டு,

“வாஸு, லேடீஸ் அங்க போயிடுங்க.. நானும் சங்கரும் இங்கேயே படுக்கறோம்... கார் ஓட்டி வந்தது டயர்டா இருக்கு. நல்லா தூங்கணும். காயூ. பாப்பாவை வேணா நான் தூங்க வைக்கிறேன்.

ஷம்முவிடம் ஒட்டிக்கொண்டு, கௌசிக்கும் அகேயே இருந்து கொண்டான். சுனில் காயூவிடம் அர்த்தமுள்ள பார்வை ஒன்றை செலுத்தி அனுப்பி வைத்தான்.

காயூ வாஸந்தியிடம், அவள் கடந்த காலம் பற்றி மனம் விட்டுப் பேசட்டும். என்ற எண்ணம் அவனுக்கு..

குழந்தைகளும் சங்கரிடம் ஒட்டிக்கொண்டதால் நான்கு பேரும் வாஸந்தியின் வீடு வந்து சேர்ந்தனர். அன்னம்மா அவர்களுக்கு தனிமை கொடுத்து அன்று ஹாஸ்பிடலில் படுத்துக்கொள்வதாக கூறிச் சென்றாள்.

ஹாலில் அமர்ந்ததும் சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு திடீரென ஞாபகம் வர,காயூ .. அவசரமாக,

“வாஸு.. மறந்தே போயிட்டேன் பார். உன் அம்மா அதான் ஆண்ட்டி எங்க காணோம்... ” வாஸந்தியின் கண்ணீரே பதிலைத் தந்துவிட, காயூவின் கண்களும் கலங்கியது.

“சாரிப்பா.. என்னாச்சு..?.”

“ஹார்ட் அட்டாக். திடீர்னுதான்.”

ஆறுதலாக அவள் கைகளைப் பற்றி நிவியையும் சகஜமாக பேச்சில் நுழைத்தாள்.

“நிவி.. வாங்க போங்கன்னு உன்னைக் கூப்பிடப் போறதில்ல. வாஸுவை உனக்கு எத்தனை நாளாத் தெரியும். இங்க எப்ப வந்தா...?”

நிவி சுருக்கமாக அவள் இங்கு வந்தபின் நடந்ததைக் கூறி முடிக்க, வாஸந்தியிடம்,

“வாஸு... நீ கோயம்புத்தூர்லயிருந்து எப்ப கிளம்பின...? என்ன காரணம்...? இதுவரை எதுவுமே எனக்கு தெரியாது. அன்னிக்கு சுனிலோட காலேஜ் ஃபங்ஷன்லவெச்சு தான் அண்ணாவைப் பார்த்தோம். அதுவரை தொடர்பே,ல்லை. ஷர்மியை தூக்கி வெச்சசுகிட்டு கொஞ்சிக்கிட்டே இருந்தாங்க. கீழே இறக்கியே விடல. அவங்க முகத்தில அத்தனைசந்தோஷம்...

அதுக்குப் பிறகு கொஞ்ச நாள் கழிச்சு ரொம்ப உற்சாகமா பேசினாங்க. உன்னைக் கண்டுபிடிச்சு கூட்டிட்டுப்போய் அம்மாகிட்ட பேசி, மேரேஜ் பண்ணிகிட்டதா சொன்னார்.... ”

ஆர்வமும் தவிப்பும் போட்டி போட, “காயூ... அவரை இப்ப பாத்தீங்களா..? எப்படி இருக்கார்..? கௌசல்யா அம்மா நல்லா இருக்காங்களா..? அவருக்கு வே..ற கல்யாணம்....” அந்த நினைவே குரலை தடை செய்தது...

அவளைப்பார்க்க பாவமா இருந்தாலும் தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு,

“இல்லையே.. அதற்குப் பிறகு அரவிந்த் அண்ணா பேசவே இல்லை. இவர் பேச முயற்சி செய்த போதும் கூட,

“மனசு சரியில்லை.. நானாக பேசற வரைக்கும் போன் பண்ணாதேன்னு சுனில்கிட்ட சொல்லிட்டாங்க. உங்களுக்குள்ள எல்லாம் சரியாயிருக்கும்னு நினைச்சோம். ஆனா நீ இங்க எப்படி..” ஆதங்கத்தோடு கேட்டாள்.
தொடரும்...
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,934
அருமை அருமை அம்மா ♥️♥️♥️♥️♥️♥️
அபி அம்மா திடீர்னு சிரிக்க வச்சுடீங்க. சுனில் காயூ எண்ட்ரி பத்தி சொல்லிருக்கீங்களே இந்த ஸ்டோரில ரெம்ப நாள் கழிச்சு எண்ட்ரி ஆனதே அதுக்குதான்னு சூப்பர் சூப்பர் அம்மா ஒரு ஆச்சர்யமான சூழ்நிலையிலும் சிரிக்க வச்சது செம செம சூப்பர் 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
 
Top