• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
அத்தியாயம் 22

“சொல்றேன். இனிமேலும் சொல்லலைன்னா அவரை அண்ணன்னு கூப்பிடறதுக்கு அர்த்தமே இல்லாம போயிடும்.

அரவிந்த் அண்ணனோட அப்பா,சென்னையில பிரபலமா இருக்க, சூர்யா மோட்டார்ஸ்ல இருந்து மிகப்பெரிய ஆர்டர் ஒண்னு பிடிச்சிருக்கார். ஒவ்வொரு முறையும் கோடிக்கணக்கான லாபம் வர்ற காண்ட்ராக்ட் அது. இதுநாள் வரைக்கும் அந்த ஆர்டரை செஞ்சு குடுத்த கம்பெனியோட ஸ்பேர் பார்ட்ஸ் தரம் குறைஞ்சுபோச்சு. .. வார்ன் பண்ணியும் ஏதோ கோல்மால் நடந்திருக்கு. அதுதான் அந்த முழு ஆர்டரும் இவங்களுக்கு வந்திருக்கு. அதனால நம்ம மேல ஆத்திரம் வந்து அவனுங்க இவந்களை பழிவாங்கத் திட்டம் போட்டுட்டாங்க.
அதுக்கு அங்கிளோட பிசினஸ் பார்ட்னரும் உடந்தை. ஒரு நம்ப முடியாத அளவு கமிஷனை விலையா வெச்சிருக்காங்க. பணத்துக்கு ஈசியா அவரும் வளைஞ்சு குடுத்திருக்கார்.

நாம அனுப்பற சரக்கெல்லாம் வழியில மாத்திட்டாங்க. சூர்யா மோட்டார்ஸ்க்கு மறுபடியும் அதே தரமில்லாத மெஷினரீஸ் போய் சேர்ந்திருக்கு. சூர்யா சேர்மன் கூப்பிட்டு அங்கிளை விளக்கம் கேட்டிருக்கார். அவருக்கு எதுவும் தெரியலை.ஷாக் ஆயிட்டார். அதிர்ச்சியில கொஞ்சம் பிரஷர் கூடியிருக்கு...

அவங்க அதிரடியா ஐம்பது கோடிக்கான ஆர்டரை கேன்சல் பண்ணிட்டாங்க. அந்த நேரத்தில அது பெரிய லாஸ். ஏன்னா ஏற்கனவே மெஷின்ஸ் சப்ளைக்கு ரெடியா இருந்தது.பொருள், பணம் நஷ்டமானது மட்டுமில்லாம இன்டஸ்ட்ரியில இருந்த நல்ல பேரும் டேமேஜ் ஆயிருச்சு.அதைத் தான் அங்கிளால தாங்க முடியலை. அதன் பாதிப்பா,மத்த பிசினஸ்லயும் சரி வெளிப்படையா தெரிய ஆரம்பிச்சுது.

அரவிந்த் அண்ணாவோட அப்பா முப்பது வருஷமா சம்பாதிச்சு வெச்ச நல்ல பேர் கெட்டுப்போச்சுன்னு ரொம்ப மனசு விட்டுட்டார். அதோட அந்த பார்ட்னர் பிசினஸ்ல இருந்து விலகப்போறதா சொல்லி செட்டில்மென்ட் வேணுமின்னு டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுட்டார். குட்டு வெளிப்பட்டா மாட்டிக்கணுமேன்னு பயம். அவங்க பசங்கதான் இதுக்கு மாஸ்டர் மைண்ட்.விஷயம் வெளிய வர்றதுக்குள்ள வெளிய வரணுங்கற அவசரம்.

இதையெல்லாம் வெளியே சொல்லாம மனசுல போட்டு உழன்றதலேதான் அவருக்கு இரண்டு முறை ஹார்ட் அட்டாக் வந்திருக்கு. பிசினஸ் விஷயம் அரவிந்துக்கு தெரியக்கூடாதுன்னு சொல்லிட்டார். அண்ணாவுக்கு கடைசி செமஸ்டர். படிப்பு கெட வேண்டாமேன்னு நினைச்சுருக்கார்.

மெஷின்ல எப்படி தரம் குறைஞ்சுதுன்னு செக் பண்ணியதில், அது நம்ம சரக்கே இல்லைன்னுஅதிகாரிங்க சொல்லிட்டாங்க. மறுபடி விசாரித்ததில் முழு உண்மையும் தெரிஞ்சு போச்சு. அந்த பார்ட்னரை கூப்பிட்டு கண்டிக்கும்போது. அவர் எதற்கோ எப்பவோ ஒரு முறை வெத்துப்பாத்திரத்தில் அங்கிள் கிட்ட கையெழுத்து வாங்கியதை வெச்சு மிரட்டி, ஆக்‌ஷன் எடுக்க முடியாதபடி பயமுறுத்தியிருக்கார்.

சின்ன சின்ன கஸ்டமர்ஸ் கூட விலகிப்போக ஆரம்பிச்சுட்டாங்க. பணம் போச்சுங்கறதைவிட முப்பது வருஷமா பொக்கிஷமா சேர்த்து வெச்ச நல்ல பேர் போயிட்டு இருக்குங்கறதைத்தான் அவரால் தாங்க முடியல.

ஒரு டிடெக்டிவ் ஏஜென்சியை வெச்சு முழு விபரமும் கலைக்ட் பண்ணி ஃபைல் செஞ்சுட்டார். நிலைமை ரொம்ப விபரீதமா போயிருக்கு. அங்க வேலை செஞ்ச, ஊழியர்கள் கூட நம்பிக்கையை இழந்துட்டாங்க.,அந்த நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவாரா இல்லை மூடுவாரான்னு பயப்பட ஆரம்பிச்சாங்க. தன் பேர்ல இருக்கற களங்கத்தை துடைக்கணுமேங்கற கவலையில்தான் மூணாவது அட்டாக் வந்துருக்கு. அன்னிக்குதான் உங்க ரிஜிஸ்டர் மேரேஜ்...

அப்புறம் அரவிந்த அண்ணா, சுனிலோட அவசரமா ஊருக்குப் புறப்பட்டுப்போனார். அங்கே போனதும் இரண்டு பேரோட நிலையும் பார்த்து அவருக்கு எப்படி இருந்திருக்கும்...? நீயே யோசிச்சு பாரு. அப்பாகிட்டயே பழியா கிடந்தார். அவரை ஐ.சி.யூ. ல பார்த்து பேச அனுமதிச்சதும், அவர்கிட்ட பேசினது இரண்டே நிமிஷம்தான். அவர் உயிர் பிரிந்திருக்கு அவங்கம்மா மடியில் விழுந்து கதறிட்டார். சுனில்கூட அவரைத் தேற்ற முடியாம தவிச்சு போயிட்டார். பாவம் அரவிந்த் அண்ணா ஃப்ரஷ்ஷா படிச்சு முடிச்சு வீட்டுக்கு போய் சேருவதற்குள்ள தலைக்கு மேல் சுமை. அவர் வயசுக்கும் அனுபவத்திற்கும் மீறிய பொறுப்பு. அவர் எத்தனை தவிச்சிருப்பார்.

அப்பக்கூட அவர் உன்னை கூப்பிட்டுப் பேசினார்... ஞாபகம் இருக்கா..? வாஸந்தியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“இப்ப நல்லா அழு... அவரைத்தான் நிம்மதியா இருக்கவே விட்டதில்லையே . இப்பவும் அவருக்கு ஒரு வாரிசு இருக்குங்கறதை மறைச்சு ... நீயெல்லாம் ஒரு பொண்ணாடி...” பல்லைக் கடித்தாள்.

அவள் புறங்கையால் கண்ணீரை வழித்துவிட்டு “என்னைத் தனியா அப்பறமாதிட்டலாம்.. இப்ப அவருக்கு என்ன கஷ்டம்னு சொல்லு. ”

நீதாண்டி அவரோட கஷ்ட காலமே.!உன்கிட்ட எதுவும் பேசக்கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனா அந்தக் குட்டிப்பையன் என் மனசை மாத்திட்டான். காயூ சொல்லத் துவங்கனாள்.

- 18 -

அவங்கப்பாவோட காரியமெல்லாம் முடிஞ்சதும் இரண்டு பேரும் என்ன பண்றதுன்னு யோசிச்சாங்க... எங்க மாமா இங்க டி.ஐ.ஜியா இருக்கார். அவர்கிட்ட யோசனை கேட்டாங்க.அவர் ஸ்டெப் எடுத்து,எல்லா பக்கமும் விசாரிச்சு,

இங்க யார் தப்பு செஞ்சாங்கன்னு டிரேஸ்பண்ணிட்டாங்க. அரவிந்த் அண்ணாவோ அப்பா ஏற்கெனவே டிடெக்டிவ் ஏஜென்சி மூலமா அது யார்னு கண்டுபிடிச்சு ஃபைல் ரெடியா சேஃப்ல வெச்சிருக்காங்க. இவங்களுக்கு தப்பு செஞ்சது யார்னு தெரிஞ்சு ஷாக் ஆயிருச்சு. நம்ம ஃபக்டரியில ரொம்ப வருஷமா விசுவாசமா வேலை செஞ்சவங்கள வீட்டுக்கு கூப்பிட்டு விசாரிச்சாங்க. அவங்க எல்லோருமே இங்க பேக்டருக்குள் நடந்திருக்க சான்சே இல்லைன்னு உறுதியா சொல்லியிருக்காங்க.

அதோட மார்க்கெட்டிங் மேனேஜர் சமீபத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பெறுமானமுள்ள பீச் ஹவுசை ரெஜிஸ்டர் பண்ணியிருப்பதும் தெரிஞ்சுது. அவர்தான் பார்ட்னரோட கையாள் புரிஞ்சிருக்கு. சூரியா மோட்டார்ஸ் போய் ஆதாரத்தோட தவறு யார் மேல ன்னு விளக்கியிருக்காங்க. அவங்களை கையும் களவுமாக பிடிக்க சூரியா மோட்டார்ஸ் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இத்தனை வருடங்களாக சிவ சங்கர் - அதான் அரவிந்த் அப்பாவை நன்கு அறிந்தவர்கள் அவங்க. அதனாலே ஒப்பபுக்கொண்டனர்...

அதனால சூரியா மோட்டார்ஸ் மறுபடி ஒரு மிகப்பெரிய ஆர்டரை ‘அரவிந்த் ஸ்பேர்சுக்கே வழங்கியது. அதனால குதூகலமடைந்த பார்ட்னரும் மார்க்கெட்டிங் மேனேஜர் ராகவனும் தைரியமாக அதேபோல சரக்கை மாற்ற போட்டிக் கம்பெனியை தொடர்பு கொண்டனர்.

வழக்கம்போல முழு அதிகாரமும் ராகவனிடமே தரப்பட்டது. நரிக்கு கொண்டாட்டம்தான். அரவிந்த் அந்தக் காவல் அதிகாரியின் முழு ஒத்துழைப்போடு அத்தனை நிகழ்வுகளையும் வீடியோ எடுக்க ஆங்காங்கே டிரக்கில் ஸ்பை கேமராவைப் பொருத்தி வைத்து அதோடு சக்தி வாய்ந்த மைக்குகளும் வைக்கப்பட்டன.

நினைத்ததுபோலவே ராகவனும் பார்ட்னரோட பசங்களும் சேர்ந்து கன்சைன்மென்ட் மாற்ற எல்லா ஏற்பாடுகளையும் பக்காவாக செய்து முடித்தனர். டிரக் ஃபேக்டரியிலிருந்து கிளம்பியது.

சரியாக இரவு இரண்டு மணிக்கு ஈ.சி.ஆர். ரோட்டில் இருக்கும் பெரிய பங்களாவுக்குள் ட்ரக் நுழைந்தது. அங்கே போலி கன்சைன்மென்ட் இவர்களுடைய லேபிளோடு ரெடியாக இருந்தது. அந்த திருட்டுப்பசங்க மேற்பார்வையில் முழு லோடையும் பக்காவா மாத்தினாங்க. பார்ட்னர்ஸ் ராகவன்கிட்ட,

“குட் ஜாப் ராகவன். வெல் டன். இந்த முறையும் உங்க ஷேர், உங்க அக்கவுண்ட்டுக்கு வந்து சேர்ந்திடும். நாமதான் இதை பண்றோம்னு சிவசங்கர் அவன் பையன்கிட்ட சொல்லாமலேயே மேல போயிட்டான். அரவிந்த் இனி விபரம் தெரிஞ்சு மண்டை காயுவான். அவனோட கொஞ்சம் சண்டை போட்டுகொஞ்சம் ஷோ பண்ணினா சரியாயிடும். முடிஞ்சா நம்ம ஷேரை வாங்கிட்டு வெளியே வரவேண்டியது தான். பயல் கொஞ்சம் ஷார்ப். இனி கொஞ்சம் சீக்கிரமா முழிச்சுக்குவான்.” அனைவரும் சிரித்தனர். இவை எல்லாமே கேமராவில் பதிவானது.

கரெக்டாக கண்டெய்னர் கிளம்பி வெளியே வந்ததும் போலீஸ் எல்லோரையும் சுற்றி வளைக்க யாராலும் தப்பிக்க இயலாமல் போனது.

வீடியோ பதிவுகள், சிவசங்கர் தயாரித்து வைத்த ரிப்போர்ட், பேங்க் பேலன்ஸ், பயந்துபோய் ராகவன் மனைவி கொடுத்த வாக்குமூலம் அனைத்துமே அவர்களுக்கு எதிரான ஸ்ட்ராங்கான எவிடென்ஸ் ஆனது. அந்த பார்ட்னர்ஸ் மூவரும் ஜாமினில் வெளியே வந்து, அரவிந்தை மிரட்டி வழக்கை வாபஸ் வாங்க ஏதாவது வாய்ப்பு இருக்கா என்று அண்ணாவோ வீக்னஸ் என்ன என்று கண்காணித்துக்கொண்டே இருந்தார்கள்.உன்னைப் பத்தி அவங்களுக்கு தெரிய வாய்ப்பில்லாம போனது நல்லதா போச்சு.அவரின் செல்போனைகூட அவங்க விட்டு வைக்கவில்லை. அதனாலதான் அவர் உன்னிடம் பேச பயந்து தவிர்த்தார்.

நீ சென்னையில் அவரை சந்திக்க வந்தபோது அந்த மூன்று நாய்களிடம்தான் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். நீ யார் என்று தெரிந்தால் அவர்கள் மூலமாக உனக்கு எதாவது ஆபத்து வரும் என்றுதான் அன்னிக்கு அப்படி பேசினார். வெளியே வந்து அதற்கு விளக்கம்கூட சொல்லியிருக்கிறார். அதெல்லாம் உன் மர மண்டையில் ஏறவே இல்லை னு இப்ப தெரியுது..அதன்பிறகு தான்

அந்த போட்டி கம்பெனி மேல் கேஸ்போட்டு தன் தந்தை குற்றமற்றவர் என்று நிரூபிக்கும்வரை சாப்பாடு தூக்கம் என்று எதையும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இந்த விஷயம் பேப்பரில்கூட போட்டிருந்தார்கள். ஒரு மகனா தன் தந்தையோட களங்கத்தை துடைத்து, அவரோட கௌரவத்தையும் மரியாதையையும் மீட்டுக் கொண்டு வந்து தான் செய்ய வேண்டிய கடமையை சரியா நிறைவேற்றி விட்டார்.

இதற்குபிறகு சூர்யா மோட்டார்ஸ் நிறுவனரே நேரில் வந்து அரவிந்த அண்ணனைப் பாராட்டி, இனி எங்களோட எல்லா பிசினஸ் டீலும் உங்களோடதான்னு பகிரங்கமா அறிவிச்சுட்டார். அதன்பிறகு விலகிப்போன எல்லா கான்ட்ராக்ட்களும் ப்ராஜெக்ட்டும் திரும்ப வந்து குவியத் தொடங்கிருச்சு. பிசினசும் பல மடங்கு இம்ப்ரூவ் ஆயிருச்சு.

வாஸு, சுனில், சும்மா அவருக்கு ஒரு மாரல் சப்போர்ட்டா மட்டும்தான் கூட இருந்தார்...மத்த எல்லா விஷயத்தையும் ஒத்தை ஆளா நின்னு சமாளிச்சு, போராடி, ஜெயிச்சது அரவிந்த் அண்ணா தான்.. அவங்க அம்மாவுக்கு வேற ஹெல்த் சரியில்லை. அவங்களையும் கவனிக்கணும். அவர் சாப்பாடு, தூக்கம், ரெஸ்ட் எதையும் நினைச்சு கூடப் பார்க்கலை.. அத்தனை பிரஷர்… அத்தனை டென்ஷன்!

சுனில் கூட “ரொம்ப ஃபாஸ்டா போறடா... கொஞ்சம் உன் உடம்பையும் பார்க்க வேண்டாமா...? மொதல்ல நல்லா தூங்குடா... ஒரு நாளாவது ரெஸ்ட் எடு. ஒண்ணும் ஆகாது”ன்னு செல்வாராம்...

“இல்லடா வசுவை மேரேஜ் பண்ணி, அவளை நான் ஒரு நாள் கூட சந்தோஷமா பார்த்துக்கலை...பாவம். சின்னக் குழந்தை மாதிரிடா அவ.. என்னைப் பார்க்காம, என் கூட பேசாம ஏங்கிப் போயிருப்பா. சரியா சாப்பிடாம, அன்னிக்கு அவளைப் பார்த்தபோது எனக்கு கலங்கிப் போயிருச்சு சுனில்... அவளை நான் திட்டினபோது நிராசையோட என்னை ஒரு பார்வை பார்த்தா பாரு! எனக்கு என் மேலேயே வெறுப்பா இருந்ததுடா. இதெல்லாம் நடிப்புதான்னு சொல்லி, அவளைக் கூட்டிட்டு யாருமே இல்லாத இடத்துக்கு ஓடிப்போயிடலாம்னு தோணிச்சு... ஐ லவ்ஹெர்டா.ஐ மிஸ் ஹெர் டூ....சீக்கிரமா அவளை இங்க கூட்டிட்டு வரணும் சுனில்..பாவம்டா அவ.

ஆனா அவ என் மேல வெச்சிருக்க நம்பிக்கையும் நேசமும் தான் என்னை இன்னிக்கு வரை உற்சாகமா இருக்க வெச்சிருக்கு. நான் அவளை நேர்ல பார்க்கணும்.. அம்மா அவளைப் பார்த்தா, பழையபடி உடலும் மனசும் தேறிடுவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நான் அங்க வர்றது அவளுக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும். உன் மேரேஜுக்கு மூணு நாள் தான் இருக்கு. ஃபிளைட்ல டிக்கெட் புக் பண்ணிட்டேன். நீ கிளம்பு...

எனக்கு கொஞ்சம் பர்சேஸ் இருக்கு. முடிச்சிட்டு நாளைக்கு வரேன். இனி பத்து நாளைக்கு லீவ். ஆபீஸ் பக்கமே போகப் போறதில்லை. உங்க மேரேஜ் முடிஞ்சதும், நாம நாலு பேரும் ஹனி மூன் போக பக்காவா பிளான் செஞ்சாச்சு... இது எல்லாமே வசு. காயூ இரண்டு பேருக்கும் சஸ்பென்ஸ் ஆக இருக்கட்டும்...” பேசும் போதே அண்ணன் அத்தனை உற்சாகமா இருந்தாராம்.

இப்ப சொல்லுடி... அவரைத் தானே நீ புரிஞ்சுக்காம ஓடிப்போன... இது தான் காதல்னா.. அந்தக் காதலையே நான் வெறுக்கறேன்.. ச்சே.. என்ன மனுஷிடி நீ”சீறினாள்.

வாஸந்தியிடமிருந்து விம்மல் வெடித்தது. வாய்விட்டு அழ ஆரம்பித்தாள். காயூவும் அவளை ஆறுதல்படுத்த முனையவில்லை. மறுபடியும் சந்தித்த போதும் கூட எதையும் புரிந்து கொள்ளாமல் வெட்டியாக வீம்பு பிடித்து கிளம்பிச் சென்றதை காயூவால் மன்னிக்கவே முடியவில்லை.!

வாஸந்தியோ, “என் அர்வி..! ஊருக்கு எத்தனை ஆசையோடு என்னைப் பார்க்க வந்திருப்பார். அதில் மண் அள்ளிப் போட்டுட்டேனே. என் பிடிவாதமும் அவசர புத்தியும் அறியாயமாக எங்க வாழ்க்கையே புரட்டிப் போட்டு விட்டதே. நான் என்ன செய்வேன்..? அ..ம்..மா.. சாரிம்மா... நீங்க எத்தனை முறை எனக்கு புத்தி சொன்னீங்க.. நீங்க அவர் மேல் வைத்த நம்பிக்கையை கூட நான் வைக்காது போனேனே... ஐயோ... என் அர்வி முகத்தைப் பார்க்கிற அருகதை கூட எனக்கு இல்லை காயூ...

என்னை அவர் இனி பார்க்கவே வேண்டாம். அவருடைய குழந்தையை அவர் கிட்டயிருந்து பிரிச்சேன்.. கௌசல்யா அம்மா என் மேல வைத்த பாசத்தை உதறித் தள்ளினேன். என் அர்வியை எத்தனை கேவலமாகப் பேசி, உதாசீனப் படுத்தியிருக்கேன் தெரியுமா காயூ...

காயூ...! காயூ...! என் அர்வி என்கிட்ட மன்னிப்பு கேட்டார் டி.. எந்த தவறுமே செய்யாம எனக்காக மன்னிப்பு கேட்டார். அவரை நான் சட்டைபண்ணவே இல்லை. நான் என்ன பண்ணுவேன்”. முகத்தில் அறைந்துகொண்டு அழுதவளை சமாதானப்படுத்துவது பெரும்பாடாக இருந்தது.

“ஏய்.. வாஸு... இங்க பாரு .. அழாதே .. சரி.. போனது போகட்டும் .. இனி என்ன செய்யலாம்னு யோசிப்போம்.. ப்ளீஸ்.. அழாதடி.. குழந்தைங்க வர்ற நேரம் ஆச்சு. .. கௌசிக் உன் முகத்தை பார்த்தா பயந்து அலறுவான்.எனக்கே பயமாத்தான் இருக்கு. போய் முகம் கழுவிட்டு வா..”அவளை சகஜமாக்க முயன்றாள்.

அவள் பாத் ரூமுக்குள் நுழைந்ததும், “சுனில்...எல்லா விஷயமும்பேசியாச்சு. இனி கொஞ்சம் சரியாயிடும்னு நினைக்கிறேன்.. ரெண்டுபேரும் சந்திக்கிறவரை விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம்.... உடனே வீட்டுக்கு வந்து சேருங்க..”போன் செய்தாள்.

“வந்தாச்சு காயூ.. இரண்டே நிமிஷம்... வீட்ல இருப்போம் ... குட்டீஸ் க்கு பசி.. சமாளிக்க முடியலை. சாதம் பிசைஞ்சு வை .. ”

சாதத்தை குழையப் பிசைந்து, பருப்பு, நெய் கலந்து எடுத்து வருவதற்குள் எல்லோரும் வந்துவிட்டார்கள். முகம் கழுவி வந்த காயூவின் முகம் வீங்கிப்போய் சிவந்து இருப்பது கண்டு, உதடு பிதுங்க ஓடி வந்து தன் தாயை அணைத்துக்கொண்டான். பிஞ்சு கரங்களால் அவள் விழிகளில் வழிந்த நீரை துடைத்துவிட்டு, அவள் கன்னத்தில் முத்தமிட்டு, கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

தன்னுடைய தோற்றம் அந்தப் பிஞ்சுக் குழந்தையை எத்தனை பாதிக்கும் என்பதை ஒரு குழந்தை மருத்துவராக அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. அவனைப் பார்த்து முறுவலித்தது.

“அம்மாவுக்கு ஒண்ணும் இல்லைடா செல்லம்.. ஜுரம் மாத்திரை சாப்பிட்டா சரியாயிடும்.. என் குட்டி தங்கத்துக்கு பப்பு பூவா ரெடியா இருக்கு... யார் ஊட்டணும் அம்மாவா.. மம்மியா.. என்றதும் கொஞ்சம் தயங்கி நிவியின் புறம் கை காட்டினான்.
தொடரும்...
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,934
IMG_20220120_124307.jpg
அருமை அருமை அம்மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
இனிமேலாவது வாஸூ தன் கணவனிடம் சேர்வாளா இல்லன்னா வேற ஏதாவது மூளையை குழப்பி வேற இடத்துக்கு போய்டுவாள்னு தெரியலையே 🤔🤔🤔🤔🤔🤔
 
Top