• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
அத்தியாயம் 23

“அம்மாவுக்கு ஒண்ணும் இல்லைடா செல்லம்.. ஜுரம் மாத்திரை சாப்பிட்டா சரியாயிடும்.. என் குட்டி தங்கத்துக்கு பப்பு பூவா ரெடியா இருக்கு... யார் ஊட்டணும் அம்மாவா.. மம்மியா.. என்றதும் கொஞ்சம் தயங்கி நிவியின் புறம் கை காட்டினான்.

நிவி அவனை அள்ளி அணைத்து முத்த மழை பொழிந்துவிட்டாள். ...! அன்று மாலை சுனில் கண்டிப்பாக ஊருக்கு கிளம்பியே ஆக வேண்டும். மறுநாள் ஒரு போர்ட் மீட்டிங்.. அரவிந்த் தான் ஏற்பாடு செய்திருந்தான்.

சங்கரோடு நட்பு இறுகியதும், சங்கர். நீங்க வாஸுவை பத்திரமா பார்த்துக்குங்க.. நாங்க அடிக்கடி வர டிரை பண்றோம். முதல்ல போய் இவங்க ரெண்டு பேரும் சேருவதற்கு வழியைப் பார்க்கிறேன். அரவிந்த் வாஸு மேலே ரொம்ப கோபமா இருக்கான். நான் போய்ச் சொன்னா வேதாளம் முருங்கைமரத்தில ஏறிடும். அதனால அவனா தற்செயலா இங்க வந்து பார்க்கற மாதிரி அரேஞ்ச் செய்யணும்... பேசும்போதே வாஸந்தி வெளியே வந்து,

“அண்ணா ... அவரை மறுபடியும் பார்த்தால்.... ”

“கண்டிப்பா பார்த்து உன்னைப்பத்தி சொல்றதுதான் என் முதல்வேலை...”

“அது வேண்டாம்னுதான் இப்ப சொல்ல வந்தேன்.” இரண்டுபேரும் அவர் கிட்ட என்னைப் பத்தி பேசமாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணிக் குடுங்க.”

சுனிலும் காயூவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். .. பின் காயூ.. “முட்டாளாடி... நீ... எப்பவுமே ராங் டிசிஷன்தான் எடுக்கற. எப்படியோ போய்த் தொலை... உன்னை அந்த ஆண்டவனே வந்தாலும் திருத்த முடியாது.. சரி.. நாங்க கண்டிப்பா அண்ணாகிட்ட உன் விஷயம் பேசவே மாட்டோம். அவரைப் பார்த்தால் தானே இந்தப் பிரச்னை. இனி எங்க வேலையை மட்டும் பார்த்துக்கறோம். அவரைப் பார்த்து பேச நேரம் எங்கே இருக்கு?”

சங்கர் அண்ணா இனி இவ உங்க பொறுப்பு. நாங்க அடிக்கடி வர்றோம்.. நிவி.. உன் ஃப்ரண்ஷிப் கிடைச்சது என் அதிர்ஷ்டம்.. ஏன் வாஸூவுக்கும் கூடத் தான்.. குட்டிச் செல்லத்தை நல்ல பார்த்துக்கங்க.” பிரியவே மனமில்லாமல் விடை பெற்றனர்.. வாஸந்தி கார் மறையும் வரை கண்கள் பொங்க நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். நிவி அவளை அணைத்துக் கொண்டாள்.

கார் வேகமெடுத்தது.. காயூவின் மடியில் ஷம்மு தூங்க, அவளை பின் சீட்டில் குட்டித் தலையணை போட்டுபடுக்க வைத்து போர்த்திவிட்டாள்.. ஏதோ யோசனையில் கண்ணைத் துடைத்துக் கொண்டே வந்தவளைப் பார்த்து,

“காயூ...”

“ம்....”

“என்னாச்சுடா..?”

“ம்.... ஒண்ணுமில்ல...”

“சொன்னா தான தெரியும்... செல்லும்மா....”

“வாஸூவை நல்லா திட்டி விட்டுதான் கிளம்பினேன் மாமா. ஆனா காலேஜ் படிக்கும்போது அவ எத்தனை வெகுளியா, கள்ளமில்லாம திரிஞ்சுகிட்டு இருப்பா... அவளோட அவசர புத்தியினால இத்தனை வருஷமா எத்தனை கஷ்டப்பட்டுட்டா.. பாவம்.. ஆண்ட்டியும் இல்லாம... தனியா... நம்ம ஷம்மு குட்டி பிறக்கறதுக்கு முன்னால நீங்க, அம்மா, அப்பா, அத்தை, மாமான்னு என்னை எப்படி தாங்கினீங்க....! இவ பாவம்... கூட யாருமே இல்லாம... ஷங்கர் அண்ணாவும், நிவியும் மட்டும் இல்லேன்னா... நினைச்சுப் பார்க்கக்கூட முடியலை மாமா...” தேம்பியவளை இடது கையால் தன் புறம் இழுத்தணைத்தான்.

“ஆமாண்டா... எனக்குக்கூட ஷங்கர் சொன்னதும் ரொம்ப கஷ்டமாயிருச்சு... அடிக்கடி தனியா போய் உட்கார்ந்து அழுவாளாம்.. அதை தெரிஞ்சுக்காத மாதிரி அடிக்கடி வெளியே கூட்டிட்டு போயிடுவாங்களாம்... ஆனா அரவிந்த் பத்தி மூச்சு கூட விடலை... ஷங்கர் கிட்டயும் நான் இது அவன் ஹாஸ்பிடனு சொல்லாம தான் வந்தேன்.

முதல்ல அரவிந்த் கிட்ட லைட்டா வாஸூ பத்தி பேச்செடுத்துப் பார்ப்போம்... அதுக்குப் பிறகு என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்.. இப்பல்லாம் வாஸந்தியைப் பத்தி அரவிந்த் நினைக்கற மாதிரியே தெரியலை..”

“ம்.. ஆமாம்.. நாம எப்படியாவது அவரை இங்க வரவழைச்சுட்டா போதும்.. அப்புறம் தானாகவே விஷயம் சால்வ் ஆயிடும். அப்பதான் சந்தோஷமே வரும்...”

சுனிலின் பார்வை மாற, “ஆமாம் செல்லம்... இரண்டு நாளா நீ என் பக்கத்திலேயே வரலை... எனக்கு ஒரே ஃபீலிங்... கொஞ்சம் கவனிக்கிறது....!

காயத்ரியின் முறைப்பை சட்டை செய்பவனா நம்ம சுனில்...! அவளின் முறைப்பே அவனின் ஆசையைத் தூண்டிவிட, காரை ஓரங்கட்டினான்...

“சுனில் .... ஏன்... காரை நிறுத்தற... என்னாச்சு..?”

“ஒண்ணுமேயில்லை... ஒரு சின்ன வேலை...” அவளின் முகம் பற்றி தன் புறம் திருப்ப,

காயூ பதறிப் போனாள்... “மாமா...! இது ரோடு...”

“எனக்கும் தெரியும்டா... பாரு... ஒரு ஈ, காக்கா... குருவி... இருக்கான்னு...” அவள் புறம் குனிந்தான்..

சுனில் விசிலடித்துக் கொண்டே காரைக் கிளப்பியவுடன், காயூ... முகமெல்லாம் அந்தி வானமாய் சிவந்திருக்க, அவன் தோளிலேயே தன் முகத்தை மறைத்துக் கொண்டாள்.

*************

-19-

மிகப்பெரிய தொழில் ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, கனடாவிலிருந்து வீடு வந்து சேர்ந்த அரவிந்தை, கௌசல்யா ஆலம் சுற்றி வரவேற்றார். தன் தாயைப் பார்த்து அதிர்ந்து போனான்..

இந்த முறை அதிக நாட்கள் வெளிநாட்டில் தங்க நேர்ந்தது.தாயின் தளர்வும் உடல் மெலிவும் அவன் உயிரைக் குடித்தது...

“அம்மா...! என்னம்மா... அடையாளமே தெரியாத அளவு மெலிஞ்சு போயிருக்கீங்க... மறுபடி உடம்பு சரியில்லாம போய் என்கிட்ட மறைச்சீங்களா? கமலாக்கா... இங்க வாங்க... அம்மா ஏன் இப்படி இருக்காங்க? கண்ணில கூட ஜீவனே இல்லை.

டாக்டர் அங்கிள் ரெகுலரா வந்து செக்கப் செய்யறதா தான சொன்னார். சரியா சாப்பிடறதில்லையா? பாருங்க... நடக்கக் கூட தெம்பில்ல.. நீங்க சரியாவே கவனிக்கலை.”

“அர்வி கண்ணா... கமலாவை ஏன் திட்டற.. அவ என்ன செய்வா.. எனக்கு ஒண்ணும் இல்லை.. என் அர்வியை பார்த்து ரொம்ப நாளாயிடுச்சில்ல. அதான் கவலை. நீ வந்தாச்சில்ல.. இனி பாரு.. அம்மா எப்படி சீக்கிரமா தேறிடறேன்னு...” என்றவரைப் பார்த்தவனின் கண்களில் வலி.. தனிமை அவரைக் கொன்று தின்கிறது., என்ன செய்வது...? இதற்கு மேலும் பேச்சை வளர்த்தால், அது எங்கே போய் முடியும் என்று அவனுக்குத் தெரியும்... ஆனால்,

“போங்கம்மா.. உங்களுக்கும் சேர்த்து அங்க நான் நல்லா வெளுத்துக்கட்டினேன். இரண்டு மூணு சுத்து பெருத்து போயிட்டேன் பாருங்க. இனி உங்களை தான் கவனிக்கணும். கமலாக்கா... பசிக்குது.. உங்க கை ருசிக்காக நாக்கு ஏங்குது... குளிச்சிட்டு வந்து ஒரு பிடிபிடிக்கிறேன்” என்று சிறு பிள்ளையாய் தாவி மாடியேறும் தன் முப்பது வயதுக் குழந்தையை கௌசல்யா வாஞ்சையுடன் பார்த்தார். இந்த மூன்று மாதங்களில் அவன் தோற்றத்தில் மிகப் பெரிய மாறுதல்.

அரவிந்தின் தோற்றத்தில இதுவரை தான் பார்த்த ‘சாக்லேட் பாய்’ லுக் மறைந்து போயிருந்தது. நடையில் கம்பீரமும், நிமிர்வும் - தோள்களில் திண்மையும் விழிகளில் காந்தமும் - எதையும் சாதிக்கப் பிறந்தவன் நான் என்ற பார்வையும் அவனை மெருகேற்றியிருந்தது.. ‘என் கண்ணே பட்டு விடும்... வந்ததும் நைட் மறுபடி சுற்றிப்போட வேண்டும்’ தாய் மனது பெருமிதப்பட்டது.”

கனடாவிலிருந்து வந்து இரண்டு நாட்கள் முழுவதுமாக தன் தாயுடன் மட்டுமே செலவிட்டான். சுனில் குடும்பத்தோடு, அவரையும் அழைத்துக் கொண்டு, கோயில், ஷாப்பிங், பீச் என்று சுற்றினான். ஷர்மிதாவோடு கொட்டமடித்தான்.அவளுக்கு வெளிநாட்டிலிருந்து உடைகளும்,டாய்ஸும்,சாக்லேட்களும் வாங்கி குவித்திருந்தான். அதைப் பார்த்ததும் கௌசிக்கின் ஞாபகம் வந்து இருவரின் மனமும் தவித்தது.கௌசல்யா தற்காலிகமாக சந்தோஷப்பட்டாலும், சுனிலை அவன் மனைவி மகளோடு பார்த்ததும், தன் மகன் மட்டும் தனிமரமாய் நின்று விட்டானே என ஏங்கினார்.

மூன்றாம் நாள், உற்சாகமாக, நேர்த்தியாக உடையணிந்து ஆபீஸ் கிளம்பினான். தன் தந்தையின் மறைவுக்கு பின், அவரின் விசுவாசமான ஊழியர்களைப் பற்றி, தன் தாயிடம் கேட்டறிந்து கொண்டு, அவர்களின் அனுபவத்துக்கு ஏற்றபடி நல்ல பதவியில் அமர வைத்திருந்தான். அவர்களின் சிறந்த ஆலோசனைகளை மதித்து அதன்படி நடந்து தொழிலை மேம்படுத்தினான்.. அதனால் அவனது அனைத்து நிறுவனங்களும் அதிவேகமாக முன்னேற்றப் பாதையில் செல்லத் துவங்கியிருந்தன.

தொழிலாளர்களை ஊக்கப்படுத்த குறைந்த விலையில் தரமான உணவு, குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, மருத்துவக் காப்பீடு, நல்ல மதிப்பெண்களோடு படித்து முடிக்கும் பிள்ளைகளுக்கு அரவிந்தின் ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு, தொழிலாளர்களின் வேலைத் திறனுக்கேற்ற ஊக்கத் தொகை, குவார்ட்டர்ஸ் என்று சலுகைகளை அள்ளி அள்ளி வழங்கியிருந்தான்... அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர உயர, தங்களின் பிரியமான முதலாளிக்கு உண்மையாக உழைத்தனர். அதனால் இந்த வருடம் சிறந்த தொழிலதிபருக்கான விருது இவன் கைகளில் வந்து விழுந்தது.

அவனின் அத்தனை வெற்றிகளுக்கும் அடிப்படையாக வாஸந்தியே காரணமானாள்.. வாழ்க்கையில் தான் சந்தித்த தோல்வியும் அவமானமும் தான் அவனை ஓய்வின்றி இரவு பகலாக தூக்கமின்றி உழைத்து, வெற்றிகளைக் குவிக்க துணை செய்தது..

தன் தாயிடமும் சுனிலிடமும் ‘வாஸந்தி’ என்ற சொல்லே காதில் விழக் கூடாது என்று சீறி விழுந்தவன் தான்... ஆனால் அவள் மேல் தான் கொண்ட நேசத்தை வேண்டாம் என்று தூக்கியெறிய அவனால் முடியவில்லை. இன்று ஆபிசில் ஏனோ அவனால கவனம் குவித்து வேலை செய்யவே முடியவில்லை. வாஸந்தியின் நினைவு ஆட்டிப் படைக்க தலைவலிக்க ஆரம்பித்தது. யாரும் அறியாமல் தான் செல்லுமிடமெல்லாம் அவளைப் பற்றி விசாரித்துக் கொண்டுதான் இருந்தான். இன்றுவரை தோல்வியே... அதை நினைக்க நினைக்க தலைவலி, அதிகமாக, சீக்கிரமாக வீடு திரும்பினான்.

அரவிந்த் உள்ளே நுழைந்ததும் நம்பவே முடியாமல், பார்த்த கௌசல்யாவிடம்,

“என்னம்மா..! உங்க அர்வியே தான்... ஏதோ உலக அதிசயத்தை பார்த்த மாதிரி ஆச்சரியப் படறீங்க..?”

“ஆமாம் கண்ணா... இந்த நேரத்தில நீ வந்து சேர்ந்தது தான் அதைவிட அதிசயம்.. ஏதோ.. எம்.டி. சார் அம்மா மேலயும் கொஞ்சம் கருணை வெச்சுட்டார் போல...!”

“போங்கம்மா” பல மாதங்களுக்குப் பிறகு, தன் தாயின் மடியில் தலை வைத்துப் படுத்ததும், கொளசல்யாவுக்கும கண் கலங்கியது. அவன் நெற்றியை வருடி,

“என்ன கண்ணா... தலை வலிக்குதா... முகமே சோர்ந்து போயிருக்கு, கமலாவை சூடா காபி கொண்டு வரச் செல்றேன்... குடி... சரியாயிடும்.....” அருகிலிருந்த தைலத்தை நெற்றியில் தடவி, மெல்ல பிடித்து விட்டார்..

“சுகமா இருக்கும்மா... நல்லா தூக்கம் வருது..”

“இந்தா... சூடா இருக்கு... குடிச்சிட்டு படு.. தூக்கம் பத்தலை அர்வி.. போய் உன் ரூம்ல நல்லா தூங்கு.”

காபி குடித்ததும், கொஞ்சம் ஃப்ரஷ் ஆனான்.. அதைப் பார்த்ததும் கௌசல்யா,

“அர்வி... அம்மாபேச்சை கொஞ்சம் கேளு கண்ணா... ஷர்மிதா குட்டி வீட்டுக்கு வந்தா வீடே எப்படி கலகலன்னு இருக்கு..”

“ஆமாம்மா... ஷம்மு ரொம்ப ஸ்மார்ட்.. திருக்குறள் கூட சொல்றா... டிராயிங் என்ன அழகா போடறா தெரியுமா? காயூ அவளை கிளாசிக்கல் டான்ஸ் சேர்த்தப் போறாளாம்.. இரண்டு பேரும் வேலைக்குப் போறாங்க. பேசாம நாம குட்டியை இங்கேயே கூட்டிட்டு வந்து வெச்சுக்கலாம்மா...”

“அதுக்கென்ன கண்ணப்பா. நான் வேண்டான்னா சொல்லப் போறேன். தங்கமா நான் பார்த்துக்குவேன். ஆனா பெத்தவ கிட்டயிருந்து குழந்தையை பிரிக்கக் கூடாது. பாவம் குழந்தை ஏங்கிப் போயிடுவா.. அதுக்குதான் சொல்றேன். எனக்கும் பேரப் பிள்ளைகளை கொஞ்ச ஆசையிருக்காதா? உனக்கேத்த மாதிரி நல்ல பொண்ணா நானே...”

“அம்ம்மா...! கல்யாணங்கற விஷயம் என் லைஃப்ல முடிஞ்சு போன அத்தியாயம்.. அதை புரட்டிப் பார்க்கத்தான் முடியும்.. இந்த ஜென்மத்துக்கு நான் ஒரு கல்யாணம் பண்ணி, பட்டது போதாதா? இனி மறுபடியும் இந்தப் பேச்சையே எடுக்காதீங்க... ஏதாவது குழந்தையை தத்து எடுத்துக்கலாம்.. அதை ஆசை தீர கொஞ்சி, வளர்த்துங்க. என்னை விடுங்க.. உங்ககூட இன்னிக்கு சந்தோஷமா டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்னு ஆசையா வந்தேன். என் மூடே போச்சு.. தலைவலி அதிகமானது தான் மிச்சம். இந்தப் பேச்செடுத்தாலே என் நிம்மதி போயிடுது...

உங்களுக்காக என் உயிரைக் கூட கொடுப்பேன்.. ஆனா..அம்மா ப்ளீஸ்...” அடிபட்ட பார்வையோடு, தளர்ந்த நடையில் மாடியேறிச் செல்லும் தன் அன்பு மகனைக் கண்டு கௌசல்யாவின் கண்கள் வற்றாத ஜீவ நதியானது..

“முருகா...! என் ஒரே பையன் படற வேதனையை பார். ஒவ்வொரு வாரமும் உன்னை தேடி வந்து கும்பிடுவேனே... நான் ஏதாவது பாவம் செஞ்சிருக்கனா... நான் சாகறத்துக்குள்ள என் மகனை சந்தோஷமா இருக்கற மாதிரி செய்திடு... கொஞ்சமாவது எங்கமேல உன் கருணைப் பார்வையை திருப்பு..” அந்தத் தாயின் இறைஞ்சுதல் அவரின் இஷ்ட தெய்வமான முருகனின் செவிகளை எட்ட, அவனின் அருள் கொண்ட விழிகள் இவர் மேல் படிந்து புன்னகைத்தது..!
தொடரும்...
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,972
அருமை அருமை அம்மா ♥️♥️♥️♥️♥️♥️
அப்படின்னா சீக்கிரம் அந்த கடவுள் அர்விய , வாஸூவையும் , குட்டிப்பையனையும் சந்திக்க வைக்க போறார் சூப்பர் சூப்பர் 😍😍😍😍😍😍😍😍😍😍😍
 

Sujatha

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 20, 2022
Messages
43
Nice update
 
Top