• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
அத்தியாயம் 25

மூன்றாவது மாடியில் டாக்டர்கள், நர்சுகளின் ஓய்வறை உண்டு. அன்று பணிக்கு வராதவர்கள் விருப்பத்தோடு அவனோடு விளையாடுவர். அன்று மதியம் அவசரமாக அங்குள்ள ஊழியர்கள் அனைவரையும் சந்தித்த டாக்டர் பிரகாஷ், “நாளைக்கு நம் மருத்துவமனை நிறுவனரின் மகன் இங்கு வருவதாக கூறியுள்ளார். அவர் முதன் முதலா இங்கு வரப் போகிறார். ஹாஸ்பிடல் கிளீனா இருக்கணும். அதுவுமில்லாமல் சுத்தமான யூனிஃபார்மில், நீட்டாக காலையில் எட்டு மணிக்கே இங்கே வந்து சேரணும்” என்று கட்டளையிட்டிருந்தார்.

அதே சமயம் ஷங்கருக்கு சுனிலிடமிருந்து அழைப்பு... “ஹலோ சுனில்... எல்லோரும் எப்படி இருக்கீங்க...?” பேச்சு தொடர்ந்தது.

நிவிக்கு அன்று அதிகாலையிலேயே ஒரு சிசேரியன் ஃபிக்ஸ் பண்ணியிருந்ததால் அவள் ஆறு மணிக்கே கிளம்பிப் போய் விட்டிருந்தாள். வழக்கம் போல ஹாட் பேக்கில் டிபனை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.. கௌசிக்கை ஷங்கர் தூக்கிக் கொள்ள, வாஸந்தி அவனிடம் நிவியை கௌசிக் பாடாய்ப் படுத்தியதை சொல்லி சிரித்தபடியே அவனோடு இணைந்து நடந்து வந்தாள். அப்போது அந்த பென்ஸ் கார் உள்ளே நுழைந்தது.

ஷங்கர், அவன் கன்னத்தில் கிள்ளி, “அம்மா கிட்ட குறும்பு செஞ்சியா படவா...” என்றதும் வேக வேகமாக ‘ஆமாம்’ என தலையசைத்த குட்டி வாண்டைப் பார்த்து இருவருக்குமே முகம் கொள்ளாத சிரிப்பு...! அதோடு ஷங்கர்,

“குட் பாய்...” கௌசிக்கின் தலையில் முட்டினான். வாஸந்தி விரலை நீட்டி, “அண்ணா..! ஜாக்கிரதை! நிவி கிட்ட போட்டுக் குடுக்கறேன் இருங்க..”

ஷங்கரை கௌசிக் முன்னால் யாரும் எதுவும் சொல்லமுடியாது. தன் தாய் விரல் நீட்டி மிரட்டியதைப் பார்த்ததும், சின்னக் கண்ணனுக்கு கோபம்..! பதிலுக்கு அவனும் வாஸந்தியை விரல் நீட்டி எச்சரித்துவிட்டு, சலுகையாக மாமன் தோளில் சாய்ந்து கொண்டான். மாமனுக்குப்பிறகு தான் அவனுக்கு மற்றவர்கள்...!

வாஸந்தி, “அண்ணா கௌசிக்கை குடுங்க. நான் போய் இவனைவிட்டுட்டு அப்படியே நிவிக்கும் டிபன் குடுத்துவிட்டு வந்திடறேன்...” அவனைத் தன் கைகளில் அள்ளிய வாஸந்தி, “மாமாக்கு ‘பை’ சொல்லு. “ என்றதும், அவன் புறம் சாய்ந்து அவனின் கழுத்தை கட்டிக்கொண்டு சங்கரின் கன்னத்தில் முத்தமிட்டான்...

20

அவளைப் பிரிந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகியிருந்தும் கூட அவன் கனவிலும்கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு காட்சி.! காதல்கொண்ட மனது, வாஸந்தி தவறு செய்ய மாட்டாள் என பலவீனமாக நம்பினாலும், அறிவு…தான் கண்ட காட்சிக்குப் புதிய யூகத்தை வித்திட்டது. .. இதற்கு மேல் யோசிக்கக்கூட திராணியின்றி தளர்ந்துபோன அரவிந்த் , தினேஷிடம் கிளம்பச் சொல்லலாம் என வாய்திறந்தபோது, டாக்டர் பிரகாஷ் ஆவலோடு அவனை வரவேற்க ஓடி வந்தார்.

அவர் பேசியதில் ஒரு வார்த்தைகூட காதில் விழாதபோதும் இயந்திரத்தனமாய் கைகள் நீண்டு அவர் அளித்த பூங்கொத்தைப் பெற்றுக்கொண்டது. வரவழைத்த புன்னகையோடு இதழ்களை விரித்தவனால் இயல்பாக இருக்க முடியவில்லை.

கூட வந்த தினேஷுக்கோ அரவிந்தைப் பார்த்து பயமாக இருந்தது. கார் உள்ளே நுழையும்போதுகூட இயல்பாகப் பேசியவனின் இந்தத் திடீர் மாற்றத்திற்கு காரணம் புரியாமல் திகைத்தான். குழப்பத்தோடு அரவிந்தைப் பின்தொடர்ந்தான்.

ஹாலில் அவனை வரவேற்றது, மாலை அணிவித்தது எதுவும் மனதில் பதியாமல் விழிகள் மட்டும் ஒரு அவசரத்தோடு வாஸந்தியைத் தேடியது. ‘வாஸந்தி’ அவனுடைய வசு... யாரோ ஒரு ஆணுடன்.. கையில் குழந்தையோடு .... சந்தோஷமாக சிரித்துப் பேசிக்கொண்டு... நினைத்தபோதே அவன் மனம் மெல்ல நடுங்கியது.

‘இருக்காது. என் வசு ...’ தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டான் அரவிந்த். தலைவலி விண்ணென்று தெறித்தது. அதற்குள் பிராகாஷ் மருத்துவமனை லாபியில் கூடியிருந்தவர்களை முறையாக அறிமுகப்படுத்தத் துவங்கினார். வரவழைத்துக்கொண்ட இயந்திரத்தனமான முறுவலோடு கைகுலுக்கிக்கொண்டு வந்த அரவந்த், சங்கரின் கைபற்றியதும், கண்களில் தெரிந்த பாவத்தில், சங்கருக்கு உள்ளூர சிலீரென்றது.. அதற்குள் டாக்டர் ஷாகுலின் அறிமுகம்..! அப்பா ...! ஏன் இப்படி ஒரு பார்வை...? காரணமேயில்லாமல் சங்கருக்கு மனதைப் பிசைந்தது...

இது எதையுமே அறியாத வாஸந்தி, ஜூலி ..! கௌசிக் பத்திரம். கீழே விடாதே. இன்னிக்கு ஃபவுண்டர் வர்றார். கூட்டம் அதிகமா இருக்கு. நிவி இன்னும் கொஞ்ச நேரத்தில டிபன் சாப்பிட வருவா. அவ வந்து இவனுக்கு ஜூஸ் கொடுத்திருவா. பதினொரு மணிக்கு தூங்கிருவான். சார் வந்திட்டார் போல இருக்கு. நான் கீழே போறேன்.

வேகமா உள்ளே நுழைந்தவளை, சார் “இவங்க மிஸஸ். வாஸந்தி. சைல்டு கேர்ல இருக்காங்க. வெரி டேலண்டட் அண்ட் கைண்ட். ” என்றதும் வாஸந்தி வசீகரிக்கும் புன்னகையோடு கரம் குவித்து தலை உயர்த்தியதும் அவள் கண்களுக்கு விஸ்வரூபம் எடுத்து நின்றவன் அரவிந்த். அரவிந்த் மட்டுமே..” அவனைக்கண்டதும் ரத்தம் தலைக்கேற, கண்கள் மங்கலானது..

தான் காண்பது கனவா , நிஜமா என்று புரியாத நிலையில் உணர்வுகள் மெல்ல மங்கிப்போக அவனை ஏறிட்டாள். அரவிந்தின் பார்வையும் ஒரு நொடியும் அகலாது அவளைத் தான் குத்திக் கிழித்துக் கொண்டிருந்தது.

‘என் அரவிந்த்’ என்ற பெருமிதம் அவளைச் சூழ, உணர்வலைகளால் தாக்கப்பட்டு, அவள் காலடியில் கிடந்த பூமி மெல்ல நழுவியது. அதற்குமேல் தன் உணர்வுகளோடு போராட முடியாமல் மயங்கிச் சரிந்தாள். பதறிப் போய் அவளருகே விரைந்து வந்த ஷங்கரை பார்வையாலேயே விலக்கி நிறுத்திய அரவிந்த், அவளைத் தன் மேல் தாங்கிக் கொண்டான்... அவனது விழிகள் ‘அருகே வராதே’ என்று ஷங்கரை எச்சரித்தது.

இதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லாததால், ஷங்கர் வாட்டர் பாட்டிலுடன் வந்து அரவிந்தின் கையில் கொடுத்துவிட்டு, “காலையில் கிளம்புபோது நல்லாதான் இருந்தா. இங்க வரும் போது கூட சிரிச்சு பேசிகிட்டுத் தானே வந்தோம். என்னாச்சுன்னு தெரியலையே... வாஸந்தி...! இங்க பாரும்மா என்ன பண்ணுது? நிவியை வரச் சொல்றேன். நம்ம வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு... சாரி சார். நான் இவளை எங்க வீட்டில் விட்டுட்டு வந்திடறேன்.”

ஷங்கர் - வாஸந்தியின் அண்ணன் - தங்கை உறவு அரவிந்தைத் தவிர மற்ற எல்லோருக்கும் தெரியுமாதலால், ஆமோதிப்பாய் தலையசைத்தனர். இத்தனை உரிமையை நிலைநாட்டி தனக்குரியவளைப் பற்றி ஒரு மூன்றாம் மனிதன் பேசுவதைக் கேட்ட அரவிந்திற்கு வலித்தது... மெல்ல கண்களை மூடித் திறந்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். ‘இனி என் வசு எனக்கில்லை’ என்ற எண்ணம் அவனைத் தாக்கியது... வசு-அரவிந்தை விட்டு வெகுதூரம் விலகிச் சென்று விட்டாள் என்றதும், தன் உயிர் தன்னை விட்டு உடனே பறந்து போய்விடக் கூடாதா என்ற விரக்தியில், அவளை ஷங்கர் வசம் ஒப்படைத்துவிட்டு,மெல்ல அவ்விடத்தைவிட்டு அகன்றான்.

மயக்கம் முழுவதுமாகத் தெளிந்து கண்விழித்த வாஸந்தியின் அதிர்ச்சி குறையவே இல்லை. ‘எத்தனை எத்தனை மாதங்களுக்குப் பிறகு என் அர்வியின் ஸ்பரிசம்’ கண்கள் நீரைப்பொழிந்தன. ‘ஏன் நான் கண் விழித்ததும், விலகிப் போய்விட்டார்.’ மனம் சுணங்கியது... ‘இன்னும் என் மேல் கோபம் குறையவில்லையே. எப்படிக் குறையும்? நான் மன்னிக்கும் படியாகவா செய்துவிட்டு விலகி வந்தேன்.

ஓடிப்போய் கௌசிக்கை தூக்கி வந்து அவன் கையில் கொடுத்து ‘நம் மகன்’ என்று சொல்லி மகிழ கையும் காலும் பரபரத்தது. ஆனாலும் ஏதோ ஒன்று தடுக்க அமைதியானாள்.

அரவிந்த் மெலிந்திருந்தான். ஆனாலும் உழைப்பின் வெற்றி, கம்பீரமான நடையில் வெளிப்பட்டது... முகத்தில் விளையாட்டுத்தனம் முழுவதுமாக வெளியேறி, அனுபவத்தின் முதிர்ச்சி தெரிந்தது. காலம் புகட்டிய பாடம் அவனின் பார்வையை கடினமாக்கி, முகத்தை இறுகச் செய்திருந்தது. காதோரம் தோன்றியிருந்த ஒன்றிரண்டு நரைமுடி கூட கம்பீரத்தை கூட்டிக் காட்டியது...

ஷங்கரின் பேச்சைக் கேட்டு, வீடு வந்து சேர்ந்தவளின் படபடப்பு சற்றும் குறையவில்லை. ‘அப்பா...! என் அர்வியிடம் எத்தனை மாற்றம்...! முகத்தின் கடினம், பார்வையின் தீட்சண்யம் எல்லாம் புதிது... சிரிக்க மறந்த தோற்றம்.. அவனின் லேசர் பார்வை வாஸந்தியைக் கிழித்து கூறுபோட்டது. அதிலிருந்தே அரவிந்த் அவளை மன்னிக்கவேயில்லை என்பது புரிந்தது.

மீட்டிங் ஹாலில், நடு நாயகமாக அமர்ந்திருந்த அரவிந்தின் பார்வை தன் எதிரிலிருந்த லாப்டாப்பை வெறித்தது.. நிர்வாகத்தினர் பேசிய எதுவும் அவன் செவிகளைச் சென்றடையவும் இல்லை.

தினேஷ், “பாஸ்... மீட்டிங் தொடங்கியாச்சு... ஆர் யூ ஆல் ரைட்...”

“ம்... நத்திங்...” கவனத்தை குவிக்க முயன்று தோற்றான். ஹாஸ்பிடல் செயல்பாடுகள், நிறைவேறியிருந்த முக்கியமான அறுவை சிகிச்சைகள், புதிதாக கட்டி முடித்த ஸ்கேன் சென்டர், ஆபரேஷன் தியேட்டரின் நவீன வசதிகள், கட்டி முடிக்கப்படவுள்ள ஜெனரல் வார்டு, தேவைப்படும் வசதிகள் என்று ரிப்போர்ட் நீண்டு கொண்டேயிருந்தது. அவனால் அதில் முழுமையாக ஈடுபடமுடியவில்லை.

அரவிந்த்தையே கவனித்துக் கொண்டிருந்த தினேஷ், அருகில் வந்து, “யெஸ் பாஸ்..!” என்றான். அரவிந்தின் இதழ்கள் புன்னகையில் மலர,

“என்னையே பார்த்துவிட்டு இருக்காதே தினேஷ். ஐயாம் ஆல்ரைட்... ஹெட் ஏக் கொஞ்சம் ஹெவியா இருக்கு.. தட்ஸ் ஆல்.. மீட்டிங் அட்ஜர்ன் பண்ணிக்கலாம்; எனக்கு ரெஸ்ட் எடுக்க எங்கே அரேஞ்ச் பண்ணியிருக்கு!

“இங்க கூட ஒரு ரூம் ரெடியா இருக்கு பாஸ்.. வெளியே குவார்ட்டர்ஸ் கூட தயாரா இருக்கு. உங்க லக்கேஜ் எங்க வைக்கலாம்?”

“இப்ப இங்கேயே ரெஸ்ட் எடுத்துக்கறேன். நைட் அங்க போயிடலாம்.. ஈவினிங் கொஞ்சம் ஹாஸ்பிடல் சுத்தி பார்த்திடலாம்.”

“யெஸ் பாஸ்...”

தினேஷ் பாஸ்கரிடம் சென்று பேசினான்.. அவர், “சரி... உங்க ரூம் எதுன்னு...”

தினேஷ் இடையிட்டு, மீட்டிங் தொடங்கறதுக்கு முன்பே ரூமை பார்த்துட்டேன்.. நாம போயிடுவோம்.. பாஸ்... கிளம்பலாமா..?” ரூமை திறந்து, “பாஸ் ஹீட்டர் போட்டிருக்கேன்.. ஃபேஸ் வாஷ் பண்ணுங்க... இதோ வந்திடறேன்...”

அரவிந்த் ஒரு அவசரக் குளியல் போட்டு வெளியே வந்ததும்,

“பாஸ்... இந்தாங்க.... லெமன் டீ சூடா இருக்கு... தலைவலிக்கு டேப்லப் இதோ... குடிச்சிட்டு நல்லா ரெஸ்ட் எடுங்க. லஞ்ச் இங்கே கொண்டு வரச் சொல்றேன்...” அவனின் செயல்களில் நெகிழ்ந்து போன அரவிந்த்,

“தேங்க்யூ தினேஷ். நீ சாப்பிட்டு முடிச்சுட்டு, எனக்கு இரண்டு மணிக்கு லஞ்ச் கொண்டு வந்தால் போதும்.” தினேஷ் கதவை லாக் செய்து விட்டு வெளியேறியதும், நெற்றியை இரு கைகளாலும் அழுத்திப் பிடித்துக் கொண்டு படுக்கையில் சாய்ந்தான். அவளைத் தாங்கிப் பிடித்தபோது, அவனுடைய வசுவின் முகம் மிக அருகில்...! செந்தாமரையின் மேல் பனித்துளிகள் படர்ந்திருப்பதைப் போல, சிவந்த வதனத்தில் வியர்வைத் துளிகள் பூத்திருந்தது. இத்தனை நாளாய் கட்டுண்டு இருந்த தேகம், அவளின் அருகாமையில் மயங்கிப் போய், தன் இதழ்களால் ஒற்றியெடுக்க விழைந்த மனதை மிரட்டி அடக்க அரும்பாடு பட்டிருந்தான்.

“ச்சே...! நான் இங்கே வந்திருக்கவே கூடாது... அந்த டாக்டர் கையிலிருந்த குழந்தையை எத்தனை இயல்பாய் வாங்கிக் கொண்டாள்..! முகத்தில் எத்தனை சந்தோஷம்... சிரிப்பு... யார் அவன். ‘நம் வீட்டுக்குபோய் ரெஸ்ட் எடு’ன்னு எவ்வளவு உரிமையா பேசினான்... இதுக்கு என்ன அர்த்தம்... என்னால அந்த மாதிரி யோசிக்கக் கூட முடியலையே...”

ஒரே ஒரு தடவை ‘ஏண்டி என்னை பிடிக்காமப் போச்சு...? நான் என்ன தப்பு செஞ்சேன்...’ன்னு நாக்கைப் பிடுங்கற மாதிரி நிக்க வெச்சு கேள்வி கேட்டா தான் மனது ஆறும்...! யோசனை தொடர் ஓட்டமாய் பயணிக்க, பட்டுப் போன்ற மிருதுவான ஒரு மழலையின் குரலும், பிஞ்சுக் கரங்கள் கதவைத் தட்டும் ஓசையும் அவன் சிந்தனையைத் தடை செய்தது.. யோசனையோடு எழுந்து வந்து கதவைத் திறந்தான்.

தன் துறுதுறு கண்களால் சுற்றும் முற்றும் பார்த்தபடி, கதவருகே நின்ற குழந்தையைப் பார்த்தான். இளம் ரோஜா நிறத்தில், ஆரோக்கியமான இரண்டு வயது குட்டிப் பையன், தன் குண்டுக் கன்னங்களில் கை வைத்து அவனைப் பார்த்து சிரித்தான். எந்தவித தயக்கமுமின்றி ஓடிவந்து அரவிந்தின் கால்களைக் கட்டிக்கொண்ட அந்த மழலையின் அழகால் கவரப்பட்டு, அவனையறியாமலேயே இரு கரங்களையும் நீட்டி குழந்தையை அள்ளி அணைத்துக் கொண்டான். பிஞ்சுக் குழந்தையின் ஸ்பரிசம், ஏதோ ஒரு வகையில் கொதித்துக்கொண்டிருந்த அவன் மனதை குளிர வைத்தது.

அரவிந்தைக் கட்ணடதுமே, தன் கருந்திராட்சை விழிகளை விரித்த அந்தச் சிறுமலர், அவன் தூக்கியதுமே ஆனந்தத்தோடு அவன் கழுத்தை இறுக கட்டிக் கொண்டான்.. திகைப்போடு தேகமெங்கும் சிலிர்க்க தன்னிச்சையாக அதன் கன்னங்களில் முதத்தமிட்ட அரவிந்தின் மனம் நிம்மதியடைந்தது.

“குட்டிச் செல்லம் யாரு..? இங்க எங்க வந்தீங்க...?” அவனைப் பார்த்து அழகாக இதழ் விரித்து, “கௌச்சு அப்பா பார்க்க வந்தாச்சு...” என்று தன் பூவிதழ்களால் அவன் கன்னத்தில் முத்தம் வைத்தான். அவ்வளவு இயல்பான எளிமையான முத்தத்தை மழலைகளிடமிருந்து மட்டுமே பெற முடியும்!! அப்போது பயந்து போன முகத்தோடு, வியர்வை வழிந்தோட, அங்கு பாய்ந்தோடி வந்த நர்ஸ் ஜுலி, “சாரி... சார்... மேடம் டியூட்டியில் இருக்காங்க. நான் தான் பார்த்துக்குவேன். ஒரு பேஷண்ட் அட்டெண்ட் பண்றதுக்குள்ள இங்கே ஓடி வந்துட்டான்... வெரி சாரி...” கைகளை நீட்டினாள்.

“இட்ஸ் ஓகே.. இவன் யாரோட குழந்தை...?”

“வாஸந்தி மேடத்தோட குழந்தை சார். அவங்க வீட்ல எல்லோருமே டாக்டர்ஸ். அதான் பார்த்துக்க ஆளில்லை. ஆஃப் டியூட்டியில இருக்கற யாராவது பார்த்துக்குவோம். ஈவினிங் டாக்டர் சார் இல்லேன்னா மேடம் யாராவது வீட்டுக்கு தூக்கிட்டு போயிடுவாங்க.

கௌசிக் ரொம்ப சமர்த்து... தெரிஞ்சவங்க்கிட்ட மட்டும்தான் போவான்... சாரி சார்.. உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டோம்.. வாடா கண்ணா.. அம்மாட்ட போலாமா...?” ஜுலியின் குரலில் பதட்டம்...
தொடரும்...
 

Sujatha

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 20, 2022
Messages
43
வெரி நைஸ் update
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,972
அருமை அருமை அம்மா ♥️♥️♥️♥️♥️♥️♥️கௌஷிக் பையன் ரெம்ப ஸ்மார்ட்டா அப்பாவை கண்டுபுடுச்சுட்டான் சூப்பர். இதுவரை வாஸந்தி தவறா நினைத்துக்கிட்டு இருந்தாள் இப்போ அர்விந்த் டர்ன் போல 😲😲😲😲😲😲😲😲
 
Top