• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
அத்தியாயம் 27


“சாரி ... சாரிங்க...! என்னை மன்னிச்சுடுங்க... நான் செஞ்சதெல்லாம் தப்புதான்.. ஆனா உங்க முன்னால நிக்ககூட தகுதியில்லாம ......”

“பேசாதே இனி நீ ஒரு வார்த்தைகூட நீ பேசக்கூடாது.. அந்தத் தகுதி உனக்கில்ல.. அன்னிக்கும் எந்தக் காரணமும் சொல்லாம வீட்டைவிட்டு ஓடினேன்னு நினைச்சேன்.. ஆனா இப்ப புரியுது. என் குழந்தையைப் பத்தி எனக்கு தெரியக்கூடாதுன்னு திட்டம் போட்டு தான் ஓடியிருக்க. அப்படித்தானே...?” ஆத்திரத்தில் அவனையும்அறியாமல் குரல் உயர்ந்தது.

ஐயோ .., சத்தியமா இல்லங்க. நான் இங்க வந்து ஒரு மாதம் கழிச்சு தான் நிவி பார்த்து கன்ஃபர்ம் பண்ணினா. அதுவரை நான் இதுபத்தி எதுவும் யோசிக்கவோ எதிர்பார்க்கவோ கூட இல்லை. உங்களத் தொடர்பு கொள்ற தகுதி என்கில்லன்னு தான் நான்? அழுகையில் கரைந்தாள்.

தன் தாய் அழுவதை பொறுக்க முடியாமல், அரவிந்தின் அருகில் வந்து, தன் பிஞ்சு விரல்களை நீட்டி, மிரட்டினான். குழந்தையின் முன் தன் கோபத்தை காண்பித்ததை எண்ணி துணுக்குற்ற அரவிந்த்., எழுந்து வந்து அவனைத் தூக்கினான்.

“சரிடா பெரிய மனுஷா.. உன் மம்மியை நான் இனி ஒண்ணும் திட்டமாட்டேன். ச்சும்மாடா கண்ணா...”

அவன் சட்டை காலரை இழுத்து, “அப்பா கௌசிக்கு பசிக்குது. பூவா வேணும்.. சிணுங்கினான். அழுகையோடு புன்னகைத்த வாஸந்தி மணியைப் பார்த்துவிட்டு,

“மணி எட்டாச்சு... ஏழு மணிக்கே சாப்பிடுவான்.. சமையலறைக்கு ஓடினாள். மகனின் மழலைப் பேச்சில் மனம் கனிந்து...,

”மம்மி ... தம்பிக்கு உடனே பூவா கொண்டு வருவாங்க.. குட்டி என்ன சாப்பிடுவான் ” அவனும் குழந்தையாக மாறி கொஞ்சினான். . ஹாலில் ஒரு டி.வி.கூட இல்லாமல் அறையே வெறுமையாக இருந்தது. கௌசிக்கின் குட்டி குட்டி விளையாட்டுச் சாமான்கள்மட்டும் ஆங்காங்கே இறைந்து கிடந்தது. ... டீப்பாய் மேலே பிக்சர் டிக்ஷ்னரி ஒன்று ... அவ்வளவுதான் தன் வீட்டோடு இதை ஒப்பிட்டுப் பார்த்த அரவிந்திற்கு, மகனை இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் வைத்து வளர்க்கும் வாஸந்தி மேல் மறுபடி புதிதாய் ஒரு திடீர் கோபம் முளைத்தது.

வாஸந்தி பருப்புடன் ரசம் சாதத்தை குழைய பிசைந்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வந்தாள். அதைப்பார்த்து முகம் சுளித்து, “குழந்தைக்கு நைட் போய் சாதம் கொடுக்கிறியா...?”

“டிபன் சாப்பிட்டா பசி தாங்கமாட்டான். நைட் தூங்காமல் முழிச்சுக்குவான். சாதம் சாப்பிட்டாதான் நல்லா தூங்குவான். சங்கர் அண்ணா வந்தா அவர்கூட சாப்பிடும்போது கொஞ்சம் டிபன் ஊட்டி விடுவார். அது போதும்.” தயக்கத்துடன் கூடிய விளக்கத்தில் இருந்த தாய்மையில் அரவிந்தின் கோபம் சற்றே மட்டுப்பட்டது.

கிண்ணத்தை டேபிள் மேல் வைத்து விட்டு, மகனைத் தூக்க வந்தாள். கூந்தலை தூக்கிக் கொண்டையிட்டிருந்தாள். நீல நில வாயில சேலை. பதட்டத்தில் முகம் முழுக்க பூத்திருந்த வியர்வை முத்துக்கள், மருண்ட விழிகளில் தவிப்பையும் மீறிய ஏதோ ஒன்று அவனை பலமாக அசைத்துப் பார்த்தது. அதை விட அவள் கன்னங்கள் படிந்திருந்த கண்ணீர்க் கறை, ஐ.டி. கார்டுக்காக மன்றாடிய ஈர விழிகளை நினைவூட்டியது... இப்போது கூட போலித்தனம் இல்லாத பளிங்கு முகம் அவனை கவர்ந்திழுக்க, மறுபடியும் ஒரு முறை அவளிடம் அவமானப்பட விரும்பாமல், முகத்தை கடினமாக்கிக் கொண்டு,

“இல்ல. ஸ்பூன் போட்டு கிண்ணத்தை என்கிட்ட கொடு. நானே ஊட்டறேன்.” பதில் பேசாமல் அவனிடம் கொடுத்து விட்டு சமையலறைக்குச் சென்றாள். ஸ்பூனால் சாதத்தை அள்ளி மகனுக்கு ஊட்ட ஊட்ட ஒரு சின்ன மறுப்புகூட சொல்லாமல், வாய் திறந்து உணவை வாங்கி வேகமாக விழுங்கிக் கொண்டிருந்தான்...! அதீத பசியோ... இல்லை முதன் முதலாக அப்பா கையால் சாப்பிடும் உற்சாகமோ... ஏதோ ஒன்று... குட்டிப் பையன் சமர்த்தாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான். மடியில் அமர்ந்திருந்த மகனின் முதுகை மெல்ல வருடிக் கொண்டிருந்தவனின் மனம், ‘இது தான் சொக்கம். இதற்காகத் தான் இத்தனை நாளாய் ஏங்கினேன்’ என்று மனதார ஒப்புக் கொண்டான்...

விளையாட்டுக் காண்பித்துக் கொண்டே, ஊட்டிக் கொண்டிருந்த அரவிந்தைப் பார்த்து, அப்போது தான் உள்ளே - நுழைந்த ஷங்கரும் நிவியும் ஆச்சரியம் ப்ளஸ் அதிர்ச்சியில் பேச்சற்றுப் போனார்கள்.

காலடி அரவம் கேட்டு நிமிர்ந்த அரவிந்த், ஷங்கரைப் பார்த்து முதன்முறையாக புன்னகைத்து, “வாங்க ஷங்கர்” என்றான். வெளியே சென்ற ஷங்கர், நிவி, அன்னம்மா ஒருவரும் திரும்பி வராததால், வாஸந்தியின் குழப்பத்துக்கு விடை காண இயலவில்லை. ‘கௌசிக் எப்படி இவரிடம் வந்து சேர்ந்தான்? இவர் தான் அவனுடைய அப்பா என்பது நிவி, ஷங்கர் அண்ணாவிற்கு கூட தொயாதே... பின் எப்படி...” என்று மனம் பலவிதமான சிந்தனையில் உழல, கை பாட்டுக்கு அவனுக்குப் பிடித்த டிபனை செய்வதில் ஈடுபட்டிருந்தது.

“மாமா..!அப்பா வந்தாச்சு... அப்பா வீட்டுக்கு வந்தாச்சு” தன் மகவின் உற்சாகக் கூச்சல், கிச்சனில் இருந்த வாஸந்தியின் காதில் ஒலிக்க, அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு ஹாலுக்கு விரைந்தாள்...

குற்றம் செய்த சிறு குழந்தையாய், “அண்ணா...! இவர்... இ..வ..ர் தான் கௌசிக்கின் அப்பா அரவிந்த்.” முகம் சிவக்க மொழிந்து விட்டு நிவியின் கரங்களை ஆதரவு தேடி இறுகப் பற்றிக் கொண்டாள்.

அடுத்த அதிர்ச்சியை உள் வாங்கிய இருவரும் “இவரா ...? ஆனா இவரைப் பார்த்ததும் கௌசிக் எப்படி ‘அப்பா’ ”ன்னு கூப்பிட்டான்.. அவனுக்கு எப்படித் தெரியும்...?”

இவர் போட்டோ என்கிட்ட இருக்கு. அதில பார்த்து சொல்லிக் கொடுத்திருக்கேன்.”

அரவிந்தை நோக்கி “இவர் சங்கர் அண்ணா. இவ நிவேதா. நான் இங்க வந்ததிலிருந்தே எனக்கு எல்லாமா இருந்து பார்த்து கிட்டதே இவங்கதான்.” நெகிழ்வோடு நிவியை அணைத்துக்கொண்டாள்...

இவர்களின் தொடர்ந்த உரையாடலால் போரடித்துப் போன கௌசிக் தன் தந்தையின் கைபிடித்து இழுத்து,

“அப்பா ! இங்க பாரு.. ரிமோட் கார்.. இது பில்டிங் செட், மாமா வாங்கிக் கொடுத்தாங்க. இவன் என் ஃப்ரண்ட் டெடிபியரை கையில் எடுத்துக் காண்பித்தான்.”

“அப்பா இது என்னோட குட்டி சேர். யெல்லோ கலர்.” தன் உடைமை அனைத்தும் இப்போதே தன் தந்தைக்கு காண்பிக்க வேண்டும் என்று ஆர்வம். ..!

அவனைத் தூக்கச் சொல்லி, தாடையைப்பற்றி தன் புறம் திருப்பி, “வெளியே போகலாம் . என் ஃபிரண்ட் டைனி இருக்கு..” பக்கத்து வீட்டில் வளர்க்கும் நாய்க்குட்டியைப் பார்க்க இழுத்துச் சென்றான். அரவிந்தும் அவனுக்கு இணையாக பேசிக்கொண்டே , சங்கரிடம் கண்களால் விடைபெற்று, கௌசிக்கோடு வெளியே சென்றான். அரவிந்த்... கௌசிக் இருவருமே வேறு ஒரு தனி உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தனர். சுற்றியிருந்த உலகமே மறந்து போனது. அரவிந்தின் முகம் தன் மகனைக்கண்ட பெருமையில் விகசிக்க, அவன் கைகளோ மகனை வருடுவதை நிறுத்தவேயில்லை. இதைக் கவனித்திருந்த மூன்று பேரின் விழிகளுமே பனித்திருந்தன.

ஷங்கர் ஒரு கண்டிப்பான பார்வையை வாஸந்தி மேல் செலுத்தி, அவள் செய்த தவறு எத்தகையது என்பதை புரிய வைக்க முயன்றான்.

வாஸந்தி, “சாரிண்ணா... இந்த ஆங்கிள்ல நான் யோசிக்கவே இல்லை. அவர் என் மேல ரொம்ப ரொம்ப கோபமா இருக்கார். என்னை பார்க்கக் கூட இல்லை.. என்ன பண்றதுன்னே தெரியலை. பயமா இருக்கு” நிஜமாகவே அவனின் உதாசீனத்தால் கலங்கித்தான் போயிருந்தாள்.

நிவி தான் அவளை சமாதானப்படுத்தினாள். “டோண்ட் வொர்ரி வாஸூ. அண்ணா ரொம்ப சாஃப்டா தான் தெரியறார். ஒரு மனுஷனுக்கு இந்த அளவு கூட கோபம் வரலைன்னா எப்படி? அவர் உன்னை மன்னிக்க கொஞ்ச நாள் ஆகும். அதுவரை நீ பொறுமையா இருந்துதான் ஆகணும். ஏன்னா நீ செஞ்சது சாதாரணமான தப்பில்லை. உன்னோட பிடிவாதத்தையும், அவசர புத்தியையும் இன்னிக்கே அடிச்சு விரட்டிடு.”

இத்தனை வருஷமா நீ செஞ்ச எல்லா தப்பையும் அவர் பொறுத்து தான் போயிருக்கார்.. அதுவே அதிகம். இனிமே அந்தப் பொறுமையை நீ கையில் எடுத்துக்க வாஸூ. அது மட்டும்தான் நீ இழந்த உன் வாழ்க்கையை மீட்டுக் கொடுக்கும். எதையும் தீர விசாரிக்காம எந்த அவசர முடிவும் எடுக்காதடா..நீ இதுவரை பட்டதெல்லாம் போதும். நம்ம குட்டியோட எதிர்காலத்தை மனசில வெச்சுகிட்டாவது நீ மாறணும் வாஸூ...” என்றதும் கண்கள் நிறைய பதில் பேச முடியாதவளாய் நிவியை அணைத்துக் கொண்டாள்.

டின்னர் முடித்து, ஹாலில் வந்து அமர்ந்ததும், அரவிந்தின் செல்போன் ஒலியெழுப்பியது... அதை உயிர்ப்பித்த அரவிந்த்,

“சொல்லு தினேஷ்...”

...........

“நத்திங்... ஐ யாம் ஓ.கே. டா...”

...................

“டாக்டர், ஷங்கரோட குவார்ட்டர்ஸில் தான் இருக்கேன்.”

.......................

“ம்.... டின்னர் முடிஞ்சுது. நீ சாப்பிட்டிரு...”

...............

“நைட் கண்டிப்பா கெஸ்ட் ஹவுஸ் வந்திடுவேன். நீயும் அங்கேயே தங்கிடு. நான் வர கொஞ்சம் லேட் ஆகும். ஒரு சஸ்பென்ஸ் இருக்கு மேன் உனக்கு...” உற்சாகம் பொங்க சிரித்தான்.

............

“நோ.... நேர்ல தான். உனக்கு ஒரு சின்ன வேலை...” பேசிக்கொண்டே எழுந்து வெளியே சென்றான். உள்ளே வந்ததும்,

“ஷங்கர்... உங்க வீடு...?”

“இங்க தான் சார்... இரண்டு வீடு தள்ளி... வாங்க சார். அங்கேயே ஸ்டே பண்ணிக்கலாம்.ரூம்ல ஏ சி இருக்கு. நோ ப்ராப்ளம்...”

“ஓ.கே... வித் ப்ளஷர். ஆனா என் நைட் சூட்..?” “உங்களுக்கு அப்ஜெக்ஷன் இல்லேன்னா எங்கிட்ட புதுசு இருக்கு...”

“தென் கம்... லெட்ஸ் கோ... வாடா குட்டி” என்று குழந்தையைத் தூக்கிக் கொண்டான். பின் நிவியிடம், “இன்னிக்கு ஒரு நாள் நீங்க இங்க தங்குங்க. நிவேதா, சாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ்.”

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல. இது அடிக்கடி நடக்கறது தான்... நீங்க கிளம்புங்க. கௌசிக் இங்கேயே இருக்கட்டுமே... அவனுக்கு ரொம்ப தூக்கம். நான் தூங்க வெச்சிடறேன்.”

“பரவாயில்லை மிஸஸ் நிவேதா... தூங்க வைக்க நானே டிரை பண்றேன்.” அரவிந்திற்கு குழந்தையைப் பிரிய மனமில்லாததை உணர்ந்து கொண்ட வாஸந்தி, சமையலறைக்குச் சென்று, பிளாஸ்க்கை எடுத்து வந்தாள்.

“அண்ணா... உங்க மூணு பேருக்கும் இதில பால் இருக்கு. கொஞ்சம் கழிச்சு குட்டிக்கு இதை கொடுத்து, மடியில் படுக்க வெச்சு தட்டிக் கொடுத்தா தூங்கிடுவான்... அப்புறம் காலை வரை எழுந்துக்க மாட்டான்.” பிளாஸ்கை ஷங்கரிடம் கொடுத்தாலும், குறிப்பு முழுவதும் அரவிந்துக்கானது.. நேரடியாக அவளிடம் பேசாததால், அவளை திரும்பியும் பாராது கௌசிக்கை தோளில் சாய்த்துக் கொண்டு ஷங்கரோடு இணைந்து நடந்தான். அதை கண்கலங்க பார்த்துக் கொண்டிருந்த வாஸந்தியின் மனம் இன்று தான் தனிமையை உணர்ந்து தவித்தது.

***********

-22-

தோளில் கிடந்த கௌசிக்கின் விழிகள் தூக்கத்தில் செருகியிருக்க, மெத்தென்ற கரங்கள் அரவிந்தின் கழுத்தை சுற்றி வளைத்திருந்தது. அந்தச் செயலில் சொர்க்கமே கிட்டியது போல, எல்லையில்லாத நிம்மதி சூழ, ஷங்கரைப் பின் தொடர்ந்தான்.

வாஸந்தி சொன்னது போலவே, அரவிந்த் தானே பாலைப் புகட்டி, மகனை மடியில் போட்டு, மென்மையாக நெற்றியில் வருடிக் கொடுத்தான். அன்று முழுவதும் ஓய்வின்றி ஆட்டம் போட்ட களைப்பில் கௌசிக் விரைவாகவே உறக்கத்தைத் தழுவினான். அவனை படுக்க வைத்து, போர்த்திவிட்டு நெற்றியில் இதழ் பதித்து வெளியே வரும் வரை, ஷங்கர் பொறுமையாகக் காத்திருந்தான்.

“ஷங்கர்... உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.” “இன்னிக்கு உங்களுக்கு ரெஸ்ட்டே இல்லை. ரொம்ப பிசியா இருந்தீங்க. நாளைக்கு நீங்க ஃப்ரீயா இருந்தா, இப்ப நல்லா தூங்கிட்டு, நாளைக்கு பேசலாமே...”

“இல்லை ஷங்கர். கன்டின்யூசா ஒரு வாரம் கூட வேலை செஞ்சு பழக்கம் இருக்கு. உங்களுக்கு ஒ.கே. வா இருந்தா இப்பவே பேசணும்... ப்ளீஸ்...”

“ஷ்யுர் .... சார்...”

“ப்ளீஸ் இந்த சார் வேண்டாமே. கால் மீ அரவிந்த்... சொல்லுங்க.. என் மனைவியைப் பத்தியும் குழந்தையைப் பத்தியும் உங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்க வேண்டிய கட்டாயம் எனக்கு. இது மாதிரி ஒரு நிலைமை வேற யாருக்கும், என் எதிரிக்குக் கூட வரவேண்டாம். என்ன நடந்ததுன்னுநிஜமாகவே எனக்கு புரியலை... இத்தனை வருஷமா, என் நிழல் கூட படவிடாம விலகி போற அளவு, என் மேல ஏன் வசுவுக்கு இத்தனை கோபம்னு சத்தியமா எனக்கு தெரியாது. நீங்க நம்பலைன்னா கூட இது தான் நிஜம்.. ஏன் எனக்கு இத்தனை பெரிய தண்டனை சொல்லுங்க ஷங்கர்.. வசு இங்க என்னிக்கு வந்து சேர்ந்தா..? அதுக்கப்புறம் என்ன நடந்தது.” அரவிந்தின் குரலில் இருந்த விரக்தியும் வேதனையும் ஷங்கரை உலுக்கியது.

அரவிந்தின் மேல் பரிதாபம் எழ, அவன் கைகளை ஆதரவாகப் பற்றிக் கொண்டு, “வருத்தப்படாதீங்க சார்... எல்லாம் விதி... நேரம் சரியில்லைன்னா இப்படித்தான் ஏதாவது கஷ்டம் வரும்... அதுக்காக வாஸந்தியை வெறுத்திடாதீங்க.. பாவம்.! அவ குழந்தை மாதிரி...” வாஸந்திக்கு ஆதரவாகப் பேசிவிட்டு வாஸந்தி இங்கு வந்து சேர்ந்த பிறகு நடந்ததையனைத்தும் ஒளிவு மறைவில்லாமல் அரவிந்திடம் பகிர்ந்து கொண்டான். ஷங்கர் செய்த உதவிகளையெல்லாம் தோண்டித் துருவி, கேட்டுத் தெரிந்து கொண்ட அரவிந்த்,

“ஷங்கர்...! நீங்க எத்தனை பெரிய உதவியை எனக்கு செஞ்சிருக்கீங்க தெரியுமா? என் லைஃபே எனக்கு திரும்பக் கிடைச்சிருக்கு. வறண்ட பாலைவனமா இருந்த என் உலகம் மணம் வீசும் நந்தவனமா மாறியிருக்கு. அதுக்கு நீங்களும் நிவேதாவும் தான் காரணம்... என்ன செய்து என் நன்றிக் கடனை தீர்க்க முடியும்” தழுதழுத்தான்.

“சார்... வாஸந்தியை என் தங்கையா தான் நினைக்கறேன். அவ வேற யாரோங்கற நினைப்பே இன்று வரை எங்க இரண்டு பேருக்குமே வந்ததில்லை... அவ கோவித்துக்கொண்டு வந்துட்டாளே தவிர, தினமும் உங்களைப் பத்தி நினைத்து தவித்துப் போயிட்டா. அவளைத் தேற்றவே முடியாது. ஆனா உங்களைப் பத்தி பேசினாலும் கூட இன்னிக்கு வரை உங்க போட்டோவை நிவி கிட்ட கூட காட்டியதில்லை.
தொடரும்...
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,972
அருமை அருமை அம்மா ♥️♥️♥️♥️♥️♥️செம moving அரவிந், வாஸுவை மன்னிப்பான்னு தான் தோணுது இந்த cute கௌசிக் குட்டிக்காண்டி 😍😍😍😍😍😍😍
 
Top