• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
அத்தியாயம் 29

சரியாக அவன் இரவு உணவு சாப்பிடும் நேரத்தில், அந்த ஸ்டார் ஹோட்டல் ஒன்றின் முன் காரை நிறுத்தி, தினேஷிடம் விபரம் சொல்லி விட்டு கீழிறங்கினான். காரை பார்க் பண்ணச் சொல்லி விட்டு,மறுபுறம் வந்து தூங்கிக் கொண்டிருந்த மகனைத் தோளில் தூக்கிக் கொண்டான்.வாஸந்தி நிம்மதியாகப் பின் தொடர, வசதியான இடம் பார்த்து அமர்ந்தான். அங்கிருந்து வந்த கலவையான உணவின் மணம்,கௌசிக்கை தட்டி எழுப்பியது.

கண் மலர்ந்ததும் தன் தந்தையைப் பார்த்து புன்னகைத்து, “அப்பா… பசிக்குது” என்றான். இருவருக்குமே சிரிப்புதான்! வசு தான் கொண்டு வந்த காய்ச்சிய நீரை பருகச் செய்தாள். அரவிந்த் அவனை டாய்லெட் அழைத்துச் சென்று வந்தான்.

வாஸந்தி “அம்மா கிட்ட வா கண்ணா” என கையை விரிக்க, “மாத்தேன்” உரிமையாக தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டான்.தூக்கமும் சரியாக கலையவில்லை.கௌசிக்கின் இந்தச் செயல் அரவிந்தை பெருமை கொள்ளச் செய்தது. வாஸந்தியின் முகம் பார்த்து,முதன் முறையாக வாய் திறந்து, “குட்டிக்கு என்ன ஆர்டர் பண்ணட்டும்?” என்றான்.

அவன் பார்வையில் முகம் சிவந்த வசு, “ரைஸ் விதை விதையா இருக்கும். அதனால இட்லி, தோசை எதாவது ஆர்டர் செய்ங்க”

முதலில் குழந்தைக்கு தோசை கொண்டு வரச் சொல்லி விட்டு, மெனு கார்டை அவள் புறம் நகர்த்தி, “எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி நீயே ஆர்டர் பண்ணிடு.” எனும் போதே ஷங்கரும், நிவியும் தினேஷோடு உள்ளே நுழைந்தார்கள்.அவர்களிடம் கேட்டு விட்டு, அரவிந்துக்குப் பிடித்ததை அவளே ஆர்டர் செய்தாள்.

தோசை வந்ததும் கௌசிக்கை பேபி சேரில் அமரவைத்து விட்டு, நாப்கின் அணிவித்தான். ஊட்டத் துவங்கியதும் அதீத பசியில் கௌசிக் வேகமாக உணவை விழுங்கினான்.ஹாட் வாட்டரில் வாய் துடைத்து கன்னத்தில் முத்தமிட்டான்.எல்லோரும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற உணர்வே இல்லாதவனாய் அருமை மகனை மார்போடு அணைத்துக் கொண்டான்.

’கௌசிக் மேல எத்தனை பிரியத்தை வைத்திருக்கிறான்’ எத்தகைய அன்பை, உரிமையை இது நாள் வரை கௌசிக் இழந்திருக்கிறான்… எண்ற உன்மை அனைவரையும் நெகிழ வைத்தது. ஆர்டர் செய்த உணவு வர, தன் அருகேயே கௌசிக்கை அமர வைத்து அவன் கையில் தன் செல்போனை கொடுத்தான்… கௌசிக்கும் சமத்தாக அதை வைத்து விளையாட ஆரம்பித்தான். வாஸந்தி பெசிக்கொண்டே அரவிந்த்தின் தேவை அறிந்து பரிமாறினாள். அவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடித்தான்.

அவன் வரவழைத்த ஐஸ்கிரீமை வாயில் வைத்தவள் அதோடு சேர்ந்து தானும் கரைந்தாள்.’இவனோடு சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டு எத்தனை வருடங்களாயிற்று’ கடந்து போன இனிமையான தருணங்களை நினைத்துப் பார்த்ததும் விழிகளில் தாமாகவே கண்ணீர்ப் பூக்கள் பூத்தது. அதை யாரும் அறியாதபடி சுண்டினாள். ஆனால் இது அவளின் செல்ல மகனின் கண்களுக்கு மட்டும் தப்பவில்லை. அவள் கன்னங்களைத் துடைத்து, “மம்மி! உங்க அய்க்கீம் காரமா?” என்று வினவி, கழுத்தைக் கட்டிக்கொண்டபோது, இதுவரை அவளிடம் குடிகொண்டிருந்த தனிமையுணர்வு அவளை விட்டு பறந்தோடியது.

சின்ன முறுவலோடு, “இல்லை கண்ணா! அம்மா கண்ல தூசி விழுந்திடுச்சு. இப்ப சரியா போச்சு. ஐஸ்க்ரீம் சாப்டா ஹாட் வாட்டர் குடிக்கணுமில்ல. அம்மா தருவாங்க. போ செல்லம். போய் குடி.”கௌசிக் நிவியிடம் தாவினான்.

நேராக வீட்டுக்கு அழைத்து வரும்படி தினேஷிடம் சொல்லிவிட்டு காரைக் கிளப்பினான்.வயிறு நிரம்பியதும், கண்கள் செருக,தாயின் மடியில் படுத்து ,தந்தையின் மடியில் காலை வைத்து இருவருக்கும் பாலமிட்டான்.அந்த இன்பத்தை உணர்ந்து அனுபவித்த அரவிந்த், இடது கையால் கால்களை மெல்ல வருடினான்.

வாஸந்தியோ இது எதையும் கவனிக்கும் நிலையிலேயே இல்லை. கௌசல்யாவைப் பற்றி நினைத்ததும் புதிதாக முளைத்த பயம் அவளை மருட்டியது. தன்னைப் பார்த்ததும் எப்படி நடந்து கொள்வார்களோ என்றுகலங்கிப் போனாள்.பதட்டம் சூழ கண்களை மூடிக் கொண்டாள்.தன்னவனின் அருகில் பயணிக்கும் இதத்தில், உறக்கம் தழுவ, அவன் தோள் சாய்ந்தாள்.

ஆழ்ந்து உறங்கியதும், அவள் நெற்றியில் புரண்ட முடியை ஒதுக்கி, தன் தாபத்தை அடக்க முடியாமல் அதில் மென்மையான ஆனால் நீண்ட முத்தத்தை பதித்த அரவிந்த்,

”என்னடி உனக்கு அத்தனை பிடிவாதம்….! என்னை அத்தனை பிடிக்காம போச்சா….? உன்னை பார்த்த நிமிஷமே, உன் மேல் கொலை செய்யற அளவு இருந்த கோபமெல்லாம் காணாமப் போச்சு… இப்ப நீ புரிஞ்சுகிட்ட… சரிதான்… ஆனால் இத்தனை வருஷமா என் மனசுக்குள்ளயே போட்டு புதைச்சு வைச்ச வலி எவ்வளவு கொடுமையானதுன்னு யாராலயும் புரிஞ்சிக்க முடியாது.. அதை நீயும் உணரணும்… காதலிச்சவங்களோட வேதனையும் துயரமும் என்னன்னு உனக்கு தெரியணும். அதுக்காக மட்டும் தான் நான் உன்னை வெறுக்கற மாதிரி நடிக்கிறேன். ஒரு வாரம் நீ இதை சகிச்சுத்தான் ஆகணும்.” மனதோடு பேசிக்கொண்டே அவள் அருகாமையை ரசித்தான். தன் வீட்டை நெருங்கும் சமயம் வீட்டுக்கு போன் செய்தான். போனை எடுத்த கமலாவிடம்,

“அக்கா! அம்மா என்ன பண்றாங்க? தோங்கிட்டாங்களா?”

“………….”

“ நான் வரட்டும் னு இன்னும் தூங்காம டி. வி. பாக்கறாங்களா?”

“………………….”

“டேப் லட் எடுத்தச்சா? ம்ம். சரி.நீங்க ஆரத்தி கரைச்சு வைங்க. ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. ம்ஹூம். அஞ்சு நிமிஷத்தில வந்திடுவேன். வந்ததும் உங்களுக்கே தெரிஞ்சுடும்.” கமலாவுக்கு எதுவும் புரியவில்லை.

போர்டிகோவில் காரை நிறுத்தியதும் தன் தோளில் குழந்தையாய் உற்ங்கும் மனைவியைப் பார்த்து முகம் கனிந்தான். அவள் தோள் தொட்டு, “ம்ம்.. வீடு வந்தாச்சு இறங்கு’’ என்றதும் மலங்க மலங்க விழித்தாள்.ஒரு நிமிடம் எதுவுமே புரியவில்லை.வீட்டைப் பார்த்ததும் பதற்றமடைந்து அரவிந்தைப் பார்க்க அவனோ மறு புறம் வந்து ,தூங்கிக்கொண்டிருந்த கௌசிக்கை பூப்போல கையில் அள்ளிக் கொண்டான்.அவள் இறங்குவதற்காக கதவைப் பிடித்து நின்றதும் தயக்கமும் பதட்டமுமாக கீழிறங்கினாள்.கார் சத்தம் கேட்டு ஆரத்தியுடன் வெளியே ,வந்த கமலாவுக்கு வாசந்தியைப் பார்த்ததும் சந்தோஷத்தில் மூச்சடைத்துப் போனது.அரவிந்தின் கையில் இருந்த குழந்தையைப் பார்த்ததும்,கண்களில் நீரோடு வலது காலை எடுத்து வைத்து உள்ளே போகச் சொண்னார்.

அரவிந்துடன் வருவது யார் என்று அறியும் ஆவலில் வாசலையே பார்த்துக் கொண்டிருந்த கௌசல்யாவின் கண்களில் முதலில் பட்டது வாஸந்தி மட்டுமே! பேச்சற்றுப் போய் அவளையே பார்த்திருந்தவரின் மடியில் , இதழ்கள் துடிக்க ,கண்கள் கலங்க, புன்னகையோடு கௌசிக்கை படுக்க வைத்தான்.

“அம்மா! இவன் கௌசிக்….நீங்க கனவு கண்டுகிட்டு இருந்த உங்க பேரன்….! என் மகன் மா!”அதற்கு மேல் வார்த்தைகள் தடைபட, அப்படியே மண்டியிட்டு அமர்ந்து , அவர் கைகளில் முகம் புதைத்துக் கொண்டான்.

குடும்பத்தலைவனாக… வெற்றிகரமான தொழிலதிபனாக….இதுவரை தன்னிச்சையாக எல்லா முடிவுகளையும் தானே எடுத்த முழுமையான அந்த ஆண்மகன், உணர்ச்சிகளின் பிடியில் சிக்கி, தன் தாயின் முன்னே குழந்தையாகிப் போனான். இந்த மூன்று நாட்களாக அடக்கப் பட்ட அத்தனை உணர்வுகளும் தாயைப் பார்த்ததும்,ஆர்ட்டீசியன் உற்றாய் பீறிட்டுக் கிளம்ப, தளர்ந்து போனவனாக, அவர் மடி சாய்ந்து கதறி அழத் தொடங்கினான்.கௌசல்யாவால் அவனை என்ன முயன்றும், சமாதானப் படுத்த முடியவில்லை.

தன் பேரனை முழுவதுமாக காண முடியாமல், அவர் கண்களில் நீர் திரையிட்டது.ஒரு கையால் பேரனை அணைத்துக் கொண்டு, மறு கையால் மகனின் தலையைக் கோதினார்.இத்தனை நாளாக எங்கித் தவித்த வரம் தன் கைகளில் தவழ்கிறது என்பதை நம்பக் கூட முடியாமல் திகைத்தார்.

நடந்ததை பார்த்ததும் குற்றவுணர்ச்சி மேலும் அதிகமாக, கதவோரம் ஒண்டி நின்றவளைப் பார்த்து,கௌசல்யா இரு கைகளையும் விரித்தார். “வா கண்ணம்மா” என்றதுதான் தாமதம்,வாஸந்தி பாய்ந்தோடி வந்து அவர் காலடியில் வீழ்ந்தாள்.

“நல்லா இருக்கியாடா” என்றவரைப் பார்த்து “அம்மா! உங்க எல்லொர் மனசையும் நோகடிச்ச என்னை மன்னிச்சிடுங்கம்மா. விஷயத்தை சரியா புரிஞ்சுக்காம மேல மேல தப்பு பண்ணிக் கிட்டே இருந்திருக்கேன்.சாரிம்மா.நீங்க என்ன தண்டனை குடுத்தாலும் ஏத்துக்க தயாரா இருக்கேன்.”தேம்பினாள்.

”அசடு.வா என் பக்கத்தில வந்து உட்காரு. இது வரை நடந்ததை எல்லாம் மறந்திடலாம். இந்த சந்தோஷம் என்னிக்கும் நிலைச்சிருந்தா அதுவே எனக்கு போதும்.வேற எதுவும் வேண்டாம்.”

இத்தனை வருஷமா அவனோட வேதனையெல்லாம் மனசுக்குள்ள வெச்சு மறுகி மறுகி அர்வி பட்ட துயரத்துக்கு அளவே இல்லைடா. எனக்குத் தெரிஞ்சா வருத்தப்படுவேன்னு மறைச்சு வெச்சு புழுங்குவான். ஒரு அம்மாவா பெத்த வயிறு துடிக்கும். இனியாவது அவ்னை சந்தோஷமா வெச்சுக்க. புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஒளிவு மறைவே இருக்கக் கூடாது. உன்னை பாத்ததும் மனசு குளிர்ந்து போச்சு.”கைகள் இருவரையும் வருடியது.இத்தனை சத்தத்தையும் மீறி அயர்ந்து உறங்கும் பேரனை மார்போடு அனைத்துக் கொண்டார்.

அரவிந்த் உள்ளே நுழைந்து மகனை கௌசல்யாவின் மடியில் கிடத்திய போதே ஷங்கரும் நிவியும் தினேஷோடு வந்து நின்றிருந்தனர். நடந்ததைப் பார்த்த போது மூவரின் விழிகளிலும் வெள்ளம்.இத்தனை அன்பைப் பொழியும் கௌசல்யாவை விட்டு வந்த வாஸுவின் மீது நிவிக்கு கொஞ்சம் கோபம் வந்தாலும், சற்றே பொறாமையாகக் கூட இருந்தது.

அப்போதுதான் அவர்களைப் பற்றிய நினைவு வந்தது, அரவிந்த் சுதாரித்துக் கொண்டு விரைந்து சென்று வரவேற்றான்.

“அம்மா! இவர் ஷங்கர். வசுவோட அண்ணன்.இவங்க நிவி .அவர் மனைவி.இன்னிக்கு வரை இவங்க கிட்ட தான் ரெண்டு பேரும் பாதுகாப்பா இருந்தாங்க. இனி நிவி உங்க பொண்ணு.” அரவிந்தின் குரல் கனிந்து மிருதுவானது. இருவரும் கௌசல்யாவை வணங்கினர்.

“ஷங்கர். உட்காருப்பா. வறண்டு போன என் வாழ் நாட்கள் பசுஞ்சோலையா மாறியிருக்கு. நீங்க செஞ்ச உதவியோட மதிப்பு உங்களுக்கு தெரியாதுப்பா. எங்க கண்மணிகளை பத்திரமா என் கிட்ட கொண்டு வந்து சேத்துட்டீங்க.”

” அம்மா! பெத்தவங்க இருந்தும் அனாதைகள் மாதிரி உப்பு சப்பில்லாத வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருந்தோம். அப்ப தான் வாஸு எங்களுக்கு கிடைச்சா.எங்க சந்தோஷத்தை கொஞ்சம் கொஞ்சமா மீட்டுக் கொண்டு வந்தா.கௌசிக் வந்து என்னை அம்மான்னு கூப்பிட்டு என் உலகத்தையே வண்ண மயமாக்கிட்டான்.அதுக்குப் பிறகு ‘வருத்தம்’ங்கற வார்த்தையே எங்க வாழ்க்கையில நுழையல”.நிவியின் குரல் தழுதழுத்தது.

”நிவி கண்ணம்மா! அனாதைங்கற வார்த்தையே உன் வாயிலயிருந்து இனி மேல் வரக் கூடாது.உனக்கு அம்மா நான் இருக்கேன்.இது தான் உன் தாய் வீடு. சீக்கிரமா நீயும் ஒரு பேரனோ பேத்தியோ பெத்து என் கையில கொடு. நானே வளர்த்து ஆளாக்கி விடறேன்…கமலா! சூடா பால் கொண்டு வந்து எல்லோருக்கும் கொடு.அர்வி… உங்க ரூம் பக்கத்தில இருக்க ரூம்ல இவங்க லக்கேஜ் கொண்டு போய் வை.எல்லோரும் டயர்டா இருக்கீங்க. போய் படுங்க. காலைல பேசிக்கலாம்.”

தினேஷை அனுப்பி விட்டு வந்து ஷங்கரை ரூமுக்கு கூட்டிச் சென்றான். கீழே வந்து கௌசிக்கை தூக்க முயன்ற போது கௌசல்யா, “கண்ணப்பா! என் பேரன் இன்னிக்கு என் கிட்டயே படுக்கட்டும். என் பெட்டில் படுக்க வை. இதோ வந்திடறேன்.”

‘ சரிம்மா.ரொம்ப களைச்சு தெரியரீங்க. நீங்களும் படுங்க.”அவர் படுத்ததும் தன் அறைக்கு கிளம்பியவன், வசுவை திரும்பிக்கூட பார்க்கவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் தயங்கி நின்ற வாஸந்தி, சமையலறைக்குச் சென்று பாலைக் கலந்து எடுத்துச் சென்று மகனுக்கு புகட்டினாள். “அம்மா! நைட் பால் குடிக்கலேன்னா எழுந்து அழுவான். நீங்க தான் மெலிஞ்சு போய் ஆளே பாதியாயிட்டீங்க.”மறுபடி கண் கலங்கியவளை அதட்டி, “வசும்மா. இப்ப எதுக்கு அழற? வயசானா உடம்பு மெலிஞ்சாதான் ஆரோக்கியமா இருக்க முடியும். நான் நல்லா இருக்கேன். உன்னை தான் தேத்தணும். கன்னமெல்லாம் ஒட்டிப் போய் அடையாளமே தெரியாத அளவு இளைச்சுட்ட. குட்டித்தங்கம் ரொம்ப குறும்பு பண்ணுவானா?

அர்வி கூட சின்ன வயசில ரொம்ப சேட்டை பண்ணுவான். இங்க பாத்தியா? அவ்னை மாதிரியே கையில மச்சம்! நீங்க வந்திட்டீங்கல்ல. இனி பாரு, என் உடம்பு சீக்கிரம் தேறீடும்.இன்னிக்கு சந்தோஷத்தில எனக்கு தூக்கமே வராது. நான் கும்பிட்ட முருகன் என்னை கைவிடலை.உங்களை என் கண்ல காட்டிட்டான்.”அவரின் கைகள் பேரனை தடவிக்கொடுத்தது.
தொடரும்...
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,988
அருமை அருமை அம்மா ♥️♥️♥️♥️♥️♥️கௌசல்யா அம்மாவின் reaction அவங்க character யை எடுத்து காட்டுது ரெம்பவே உயர்ந்தவங்க சூப்பர்
 

Sujatha

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 20, 2022
Messages
43
Super. Very nice update
 
Top