• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
அத்தியாயம் 30

“அம்மா! நான் இன்னிக்கு உங்க கூட படுத்துக்கட்டுமா? நீங்க தனியா இருக்கீங்க.கீழ பாயை விரிச்சு …..”

வேணாண்டா. கமலா இப்ப இங்க வந்து என் கூட படுத்துக்குவா, கண்ணுப் பையன் எழுந்து அழுதா உன்னை எழுப்பறேன். தம்பி வெயிட் ப்ண்ணுவான். நீயும் போய் படு.”

வேறு வழியின்றி கால்கள் பின்ன அவன் அறை முன் வந்து நின்றாள். கதவு விரியத் திறந்திருந்தது. மெல்லத் தட்டிவிட்டு உள்ளே சென்றாள். கட்டிலில் தலையணையை அடுக்கி… கால்களை நீட்டி…கண்களை மூடி… அதன் மீது சாய்ந்திருந்த அரவிந்தைப் பார்த்ததுமே வசுவிற்கு உள்ளூர குளிரெடுத்தது. சன்னமான மெட்டியொலி அவன் தவத்தைக் கலைக்க, விழியால் சுட்டெரித்தவனைக் கண்டு, கதவின் மேல் சாய்ந்து நின்று விட்டாள்.

அரவிந்தோ சிறிதும் இளகாமல், “இங்க பார். கௌசிக்கோட அம்மாவா மட்டும் தான் உனக்கு இங்க அனுமதி. உன்னால அம்மாவுக்கு எதாவுது சின்ன வருத்தம் வந்தாக் கூட ….ம்ம் ஜாக்கிரதை. என்னை பழைய அரவிந்த்ன்னு நினைச்சுக்காதே. என்ன நான் சொல்றது புரியுதா? இனி கணவன் –மனைவி உறவெல்லாம் அம்மா முன்னால வெறும் நடிப்புதான்.”அங்கிருந்த மற்றொரு அறையை சுட்டிக்காட்டி “இனி அதுதான் உன் அறை. உன் எல்லை அது வரை மட்டும் தான்.கௌசிக் என்னோடு இருந்தால் மட்டும் உனக்கு இங்கே அனுமதி. உன் லக்கேஜ் எல்லாம் ரூமுக்கு எடுத்திட்டு போயிடு.

என் கிட்ட எப்ப உனக்கு நம்பிக்கையில்லாம போச்சோ…. அன்னிக்கே உன்னை உருகி உருகி காதலிச்சு உன்னையே சுத்தி வந்த அரவிந்த் செத்துட்டான். இப்ப இருக்கற அரவிந்தோட மனசுக்குள்ளயோ…எல்லைக்குள்ளயோ இனி என்னைக்குமே நீ நுழைய முடியாது. அந்த தகுதியை நீ இழந்திட்ட. நான் யார்ன்னு போகப் போக நீ புரிஞ்சுக்குவ. போ..”

ஈட்டியாய் பாய்ந்து வந்த வார்த்தைகள் அவள் இதயத்தை கிழித்துக் கூறு போட்டது. கதி கலங்கிப்போனவளாய், கால்கள் தள்ளாட சூட்கேசை எடுக்கக் குனிந்தாள்.

” நில்லுடி….!” அவன் கோபம் அவளை நடுங்க வைத்தது. பழைய கதையை குத்திக் கிளறினான். “என்னப் பிடிக்கலைன்னா அம்மா கல்யாணத்தைப் பத்தி பேசினப்பவே மறுத்திருக்க வேண்டியது தானே. பிடிக்காம என் கையால ஏண்டி தாலியை வாங்கிகிட்ட? ஒரு வாரத்தில வீட்டை விட்டு ஓடப் போறேன்னு எங்கிட்ட மட்டுமாவது சொல்லியிருக்கலாமில்ல? எங்கம்மாவை நம்ப வச்சு கழுத்தறுத்திட்டியே? ஏண்டி….ஏன் இப்படி செஞ்ச? சொல்லு…” அவனது வார்த்தைகள் அவளை சுட்டுப் பொசுக்கின. அவளால் பேசவே முடியவில்லை. அவன் முன்னால் அழுதால் அதற்க்கும் ஒரு குத்தல் பேச்சு காத்திருக்கும் என்பதால், இதோ…இதோ…என்று கீழே விழத்தயாராக இருந்த கண்ணீர்த் துளிகளை தனது வைராக்கியத்தால், இமைகளின் ஊடே தடுத்து நிறுத்தியிருந்தாள். அவன் அதைப் பார்த்து விடக் கூடாது என்பதற்காக மறுபுறம் திரும்பியவளைத் தவறாகப் புரிந்து கொண்டான்.

“என்னடி! என் முகத்தைப் பார்க்கக் கூட அத்தனை வெறுப்பா இருக்கா? ஆனா பாரு… அன்னைக்கு இருந்த அர்வி, வெறும் ஜீரோ …பிசினஸ் கூட எல். கே. ஜி. யில இருந்து ஸ்டார்ட் பண்ற நெலமையில இருந்தேன் .அப்ப என் கிட்ட இருந்ததெல்லாம் அப்பாவோட இழப்பு, தோல்வி, பிரச்சனை,விரக்தி,சவால் இது தான். உன் சப்போர்ட் அதிகமா தேவைப்பட்ட போது என் மேல நம்பிக்கையில்லாம தான ஓடிப் போயிட்ட. ஆனா என் நண்பன் என்னை கை விடல.என் கூடவே இருந்து பசி…தூக்கம்..ஓய்வுன்னு எதையுமே பொருட்படுத்தாம நான் மீண்டு வர்ற வரை எனக்கு பக்க பலமா இருந்தான்.எங்க நட்பு தோத்துப் போகலை.

உனக்காக, உன் பிரச்சனையை தீர்த்து, அந்த யோகேஷ் கிட்ட இருந்து காப்பாத்த தானடி ஐ.சி.யு வில அப்பா கிரிட்டிக்கலான பொசிஷன்ல இருந்தும் கூட, அவங்க கிட்ட சொல்லாமயே உன்னை மேரேஜ் பண்ணிகிட்டேன்.நானாடி உன்னை ஏமாத்தறவன்? அத்தனை நம்பிக்கை என்னிடம்... ம்ம்ம்….என் காதலி கிட்ட தாண்டி நான் தோத்துப் போய்ட்டேன். என் காதல் அப்படியே உயிர்ப்போட என் மனசுக்குள்ள இருக்கு. இன்னிக்கு வரைக்கும் பசுமையா என் நெஞ்சுக்குள்ள பொத்தி வெச்சிருக்கேன். என் வசு நீ இல்லடி…அவ வெகுளி..என்னை முழுசா நம்புவா…இனி எனக்கு நீ யாரோதான்…”அரவிந்த் பேசப் பேச வசுவின் உண்ர்வுகள் மரித்துப் போயின.அவன் குமுறலில் ஒன்று கூட பொய்யில்லை. ஆனாலும் இந்த மூன்று நாட்களாக அவள் மனம் படாத பாடு பட்டிருக்க, அலைச்சலில் உடலும் தளர்ந்து போயிருந்தது. அவனின் சுடு சொற்களை கேட்க திராணியின்றி, அழுகையோடு,

“ப்ளீஸ்! விட்டிருங்க. நான் செஞ்சது மன்னிக்க முடியாத தப்புதான். ஒத்துக்கறேன். நீங்களே உங்க கையால என்னை கொன்னுடுங்க.புண்ணியமாப் போகட்டும். இனிமேல் எதுவும் பேசாதீங்க.என்னை நினைச்சு நானே தினம் தினம் செத்துகிட்டிருக்கேன். ஷங்கர் அண்ணா கிளம்பும் வரைக்குமாவது இப்படி பேசாதீங்க. ரெண்டு பேரும் தாங்க மாட்டாங்க.ப்ளீஸ்…”அவளின் கெஞ்சலில் அரவிந்தின் மனம் கனத்தது.

“ச்ச்சே…..” தன்னையே நொந்துகொண்டு கண்களை மூடிக்கொண்டான். ‘அவன் விழிகளைப்போலவே அவளுக்கான மனக்கதவையும் மூடிக்கொண்டானோ’ என்ற பரிதவிப்போடு தன் அறைக்குள் நுழைந்தாள்.படுக்கையை நிராகரித்து விட்டு, தரையில் சரிந்தாள்.

“இதுவா என் அரவிந்த்.. அவர் பார்வையே காதலைக்கொட்டுமே! இன்று நெருப்பை அல்லவா அள்ளி வீசுகிறது.அதன் வீரியத்தில் பொசுங்கிப் போகிறேன்.அம்மா! இந்த மாதிரி தினம் தினம் தீக்குளிப்பதை விட உங்களோடு என்னை அழைத்துக் கொள்ளுங்கள்.”தன் தாயிடம் மன்றாடியபடியே அரை மயக்கத்துக்குப் போனாள்.

‘தான் பேசியது மிகவும் அதிகம்’ என்று வருந்திய அரவிந்த், வெகு நேரமாக நடமாடும் ஒலி கூட இல்லாமல் போகவே அவள் அறையை திறந்து பார்த்தான். வசு தரையில் கால்களைக்குறுக்கிக் கொண்டு ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்திருந்தாள்.ஃபேனைக் கூடப் போடாமல், கசங்கிப் போய், மூலையில் விட்டெறிந்த போர்வையைப் போல் சுருண்டு கிடந்தாள். கண்களில் கண்ணீர்க் கறை காய்ந்து போய், இதழ்கள் வறண்டு, தரையில் கிடந்த தோற்றம் அவன் மனதைப் பிசைந்தது. அவனை முதல் முறை பார்த்தது நினைவில் வந்ததும், அவனையறியாமல் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.

‘ஏண்டி ராட்சசி! இப்படியெல்லாம் செய்த….நீ உன் உயிர் டி….இப்பதான் அது திரும்பக் கிடைச்சிருக்கு. என்னை திட்டினாலோ….வெறுத்தாலோ….சண்டை போட்டாலோ….இங்கேயே என் கண் முன்னாலேயே இரு. அது போதும்.’

அவள் உறக்கம் கலையாமல் இரு கைகளிலும் ஏந்திச்சென்று படுக்கையில் கிடத்தினான்.ஏ.சி யை ஆன் செய்து,அவளுக்கு போர்த்தி விட்டான்.அவளருகே அமர்ந்து விழியகலாது அவளையே வெகு நேரம் பார்த்திருந்தான். குனிந்து முத்தமிட்டபோது, அதை கனவென்று நினைத்தாளோ என்னவோ…உறக்கத்திலேயே புன்னகைத்தாள். அவள் கரங்களை மெல்ல வருடிக் கொடுத்து, நைட் லேம்ப்பை எரிய விட்டு வெளியே வந்தவனின் உறக்கம் முற்றிலுமாக தொலைந்திருந்தது.

‘இனி மேல் இத்தனை கடுமையான வார்த்தைகளைப் பேசக் கூடாது’ என்று முடிவு செய்தான். மனம் ஷங்கர் கூறிய அனைத்தையும் அசை போட, பிரசவ சமயத்தில் துணையின்றி எத்தனை துடித்திருப்பாள்.என்ற நினைவே அவனைக் கொன்றது. ‘இத்தனை வீம்பும் பிடிவாதமும் இவளுக்கு எதற்கு? என் மகன் பிறந்ததுமே கையில் தூக்கும் பாக்கியம் இல்லாமல் போனதே’ வருந்தினான்.

சுனில்………! அவன் அவன் செய்த வேலைகளை நினைத்ததும் மனம் பொங்கியது. அவன் மட்டும் வேலோர் போகாமல் இருந்திருந்தால்….தன் வாழ்வே இருண்டு போயிருக்கும். சுனிலைப் போல நண்பன் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்……நினைவுகள் பயணித்துக் கொண்டேபோனது.

‘சுனில் ஆறு மாதத்துக்கு முன்பே வசுவைப் பார்த்திருக்கிறான். மூச்சு கூட விடவில்லை. தெரிந்திருந்தால் மட்டும் உடனே போயிருப்பேனா? அதனால் தான் மறைமுகமாக பேசிப் பேசியே என்னை வேலூர் கிளம்ப வைத்தான். ரெண்டு நாளா போன் ஸ்விட்ச் ஆஃப்!

என்னை எத்தனை ஆட்டம் காட்டி விட்டான்..கொஞ்சம் அவனையும் சீண்டித்தான் பார்ப்போமே! ஆர்வம் எழ, செல்லில் அவன் நம்பரை ஒற்றினான்.ரிங் போனது.பேச வேண்டியதை ஒத்திகை பார்த்து விட்டு, சுனிலின் ஹலோவுக்காக காத்திருந்தான்.!

வேலூரில் ஷங்கர் சுனிலைப் பற்றி சொன்னதுமே நடந்த எதுவும் அவனுக்கு தெரிய வேண்டாம். என்று சங்கரிடம் சொல்லி வைத்திருந்தான்.இரவு சுனிலை அழைத்தான். கடந்த இரண்டு நாட்களாகவே தொடர்பு எல்லைக்கு அப்பாலேயே (!) சுற்றிக் கொண்டிருந்தவன் இன்று அரவிந்திடம் வசமாக மாட்டினான்! ஷங்கரிடமிருந்து நல்லதொரு தகவலை எதிர்பார்த்து போனே ஆன் செய்து காத்திருந்த சுனிலை, அரவிந்தின் அழைப்பு கலவரப்படுத்தியது. இரவு மணி பன்னிரண்டு!!

‘என்ன விஷயம்ன்னு தெரியலையே! இந்நேரத்துக்கு கூப்பிடறானே….வசுவை பார்த்து பேசிட்டானா தெரியலையே… காயூ வேற குறட்டை விட்டு தூங்கறா..சுனில்….! கலங்காதடா… ! அர்விய மொதல்ல பேச விட்டு போட்டு வாங்கி, சமாளிக்க வேண்டியதுதான்.’செல்போனை ஆன் செய்து,

ஹாஆஆஆஆவ் ! யாரு அரவிந்தா…..என்னடா இந்த நேரத்தில…? எதாவது முக்கியமான விஷயமா? இல்லேன்னா இந்நேரத்துக்கு போன் பண்ண மாட்டியே…சொல்லுடா…நல்லா தூங்கிட்டிருந்தேன். “அதிகப்படியான தகவலையும் சேர்த்தே ஒலிபரப்பினான்.!

அவன் நடிப்பு அரவிந்த்துக்கு புரியாதா என்ன! “சாரி டா. வேலூரிலிருந்து இப்பதான் வந்தேன். டைம் பார்க்கவே இல்லை. காயூ, ஷர்மி குட்டியெல்லாம் தூங்கியாச்சா? ஒரு முக்கியமான விஷயம் பத்தி பேசலான்னு தான் கூப்பிட்டேன்.சாரிடா…நீ தூங்கு. காலையில பேசிக்கலாம். நீ தூங்கு..” உடனடியாக தொடர்பைத் துண்டித்தான்.

சுனிலுக்கு மண்டை காய்ந்தது.ஊருக்குப் போய் வந்த விஷயத்தை உடனே தெரிந்து கொள்ளும் ஆர்வம் மிகவே, அரவிந்தை அழைத்தான். “அர்வி..தூக்கம் கலைஞ்சு போச்சுடா.முக்கியமன விஷயம்ன்னு வேற சொல்லிட்ட. அது என்னன்னு தெரியலைன்னா தலை வெடிச்சுரும். ஹாலுக்கு வ்ந்திட்டேன். இப்ப சொல்லு. என்ன விஷயம்?” பர பரத்தான்.

“வேலூரில மீட்டிங், இன்ஸ்பெக்‌ஷன் ரெண்டுமே ரொம்ப திருப்தி.ஊர் கூட ரொம்ப பிடிச்சுது. ஸ்ரீ புரம் போனேன். நீ மட்டும் கம்பெல் ப்ண்ணலேன்னா இதையெல்லாம் மிஸ் பண்ணியிருப்பேன்.தேங்க்ஸ்டா.ஹாஸ்பிடல் மெயிண்டனென்ஸ் பக்கா.”

’ எனக்கு தெரிய வேண்டிய விஷயத்தைப் பத்தி மட்டும் பேச மாட்டேங்கறீயேடா’ புலம்பிக்கொண்டே, “டாக்டர்ஸ் எல்லாம் மீட் செஞ்சியாடா/” ‘ஓ….நீ அப்படி வர்றியாடா..மவனே’ சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

“ ம்ம்ம்… எல்லோரையுமே பார்த்து பேசினேன்.வெரி நைஸ் ஆஃப் தெம். ரொம்ப சின்சியர்…அதிலயும் டாக்டர்.ஷங்கர் ன்னு ஒருத்தர்…”பேச்சை நிறுத்தியதும் பொறுமையின்றி, “எண்டா.. அவருக்கு என்ன? முழுசா சொல்லேன்..”

“அவருக்கு ஒண்ணுமில்ல.சைல்ட் கேர் யூனிட் சீஃப் அவர்.ரொம்ப நல்ல மனுஷன்.அவரோட ஃபேமலியில எல்லோருமே நம்ம ஹாஸ்பிடல்ல தான் டாக்டர்ஸ் ஆக இருக்காங்களாம். நான் போன அன்னிக்கு அவர் தங்கச்சி வீட்டுக்காரர் வர்றதா இருந்ததாம். ஆனா வரலை போலிருக்கு. ஃப்ரண்டுக்கு போன் பண்ணி பாத்துகிட்டே இருந்தார். நம்பர் நாட் ரீச்சபிள்..பாவம்… ரொம்ப அப்செட்டா இருந்தார். அவர் மருமகனுக்கு உடம்பு சரியில்லைன்னு அவர் மட்டும் தான் வந்திருந்தார். மாப்பிள்ளைக்கு சமைச்ச விருந்து எனக்கு வந்திருச்சு. அவர் தங்கச்சி சமையல் சாப்பிட்டதும் வசு ஞாபகம் வந்திடுச்சு. அதே கைப்பக்குவம். மனசே சரியில்லடா.

ஆனா அடுத்த நாள் அவர் தங்கச்சி பையனைக் கூட்டிட்டு வந்தார்.கௌசிக்..அந்தப் பொடியன் பேரு. ரொம்ப ஸ்மார்ட்.. அவனைப் பார்த்ததும் எனக்கு நம்ம ஷம்மு ஞாபகம் வந்திருச்சு. அவளை மாதிரியே ‘அங்கிள்’ன்னு என் கிட்ட நல்லா ஒட்டிகிட்டான். விட்டுட்டு கிளம்பவே மனசில்லைடா எனக்கு” சரளமாக ரீல் சுத்தினான்.

தலையில் அடித்துக் கொண்ட சுனில், ‘அது உன் பையன் தாண்டா..ஷங்கர் கிட்ட உண்மைய சொல்லாம மொத்த பிளானையுமே கவுத்திட்டியே பரட்டை!’ தன்னையே நொந்து கொண்டான்.

”சுனில்…. லைன்ல இருக்கியா…. சத்தத்தையே காணோம்”

“இருக்கேண்டா…தொண்டை காஞ்சு போச்சு. ஃப்ரிஜிலிருந்து ஐஸ் வாட்டர் எடுத்து குடிச்சுகிட்டு இருக்கேன். இன்னும் எதாவது இருக்கா” நைந்து போன குரலில் வினவியவனை நினைத்து சிரிப்பு பீறிட்டு கிளம்ப, அதை அடக்கிக் கொண்டு,

கண்களில் குறும்பு மிளிர, படுக்கையில் வாகாக காலை நீட்டி, மடியில் தலையணையை வைத்து வசதியாக அமர்ந்து கொண்டான். “குடிடா….நிதானமா குடி… நிஜமாவே மண்டை காயுதில்ல….! வெயில் கொளுத்துது.இனிமேதாண்டா விஷயமே இருக்கு.! மெயின் சப்ஜெக்ட்டே இப்ப தான் வரப் போகுது. வெட்டிப் பேச்சு பேசி உன் தூக்கத்தையே ஸ்பாயில் பண்ணிட்டேன். நேரா விஷயத்துக்கு வரேன்.” சுனிலுக்கு பகீரென்றது.

‘இனி என்ன புதுசா குண்டு போடப் போறானோ…தெரியலையே..’புலம்பிக் கொண்டே, “இன்னும் என்னடா”

“என்ன.. இன்னும் என்னடாவா…..? விஷயத்தையே ஓப்பன் பண்ணலைடா…. அதுக்குள்ள சலிப்பா பேசற….இது என் மேரேஜ் விஷயம் டா..!” நிதானமாக அணு குண்டை சுனிலின் தலையில் போட்டான்.

சுனில் சோபாவிலிருந்து துள்ளிக்குதித்து எழுந்தான். அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக அவனைத்தாக்க, ஸ்தம்பித்து நின்றவனை அரவிந்தின் குரல் உசுப்பியது.

“நான் வேலூர்ல இருந்து வந்த போது மணி பத்தரை. அம்மா தூங்காம எனக்காக காத்துகிட்டிருந்தாங்க. இந்த மூணு நாள் தனிமையில அவங்க தீர்மானமான ஒரு முடிவை எடுத்திருக்காங்கன்னு அம்மா பேசினப்புறம் தான் தெரிஞ்சுது………என்று மிகப் பெரிய படத்தை ஓட்டினான்…..!

”வா அர்வி….டயர்டா இருக்கா?”

“இல்லம்மா. நீங்க ஏன் இன்னும் தூங்கலை”

“என் பையன் தனி மரமா….ஓய்வு ஒழிச்சல் இல்லாம … இயந்திரமா சுத்திகிட்டு இருக்கும் போது எனக்கு எப்படி தூக்கம் வரும்?”

“என்னம்மா என்னென்னமோ பேசறீங்க.டாக்டர் அங்கிள் வந்து செக்கப் பண்ணினாரா?”

“ம்ம்ம்ம்…அது பத்தி பேசதான் உட்கார்ந்திருக்கேன்.”

“என்னாச்சும்மா..பிரஷர்…ஷுகர்…எதாவது..?”

“என் வியாதிக்கு மருந்து உன் முடிவுல இருக்கு கண்ணா…இல்லேன்னா இனிமே எனக்கு ஒரே முடிவுதான்….”

“அம்மா…!”

நீ என்னை மதிக்கறது நிஜம் னா நான் சொல்லறதைக் கேளு. புகழேந்தி அண்ணன் (டாக்டர்) அவருக்குத் தெரிஞ்ச ஃபேமலி பத்தி சொன்னார். ஒரே பொண்ணு. படிச்ச குடும்பம்.அருமையான பொண்ணு. நம்ம விஷயம் பத்தி சொல்லியாச்சு. அவங்களுக்கு சம்மதம். பொண்ணையும் கேட்டாச்சு. எனக்கும் பிடிச்சிருக்கு. அம்மா கல்யாணம் பேசி முடிவு பண்ணிட்டேன். எனக்கு என் பையன் தலை குனிவை ஏற்படுத்த மாட்டான்னு நினைக்கிறேன். உனக்கு அம்மா வேணுன்னா நாளைக்கு காலையில ரெடியாகி ஒன்பது மணிக்கு வா. பொண்ணு பாக்க போறோம். இல்லைன்னா உன்னிஷ்ட்டம்.”ன்னு சொல்லிட்டு என்னை பேசவே விடாம படுக்க போய்ட்டாங்க. இப்ப என்னடா செய்யறது?” என்றதும் சுனிலுக்கு சர்வாங்கமும் ஒடுங்கியது.வெண்ணெய் திரண்டு வரும் போது தாழி உடைந்த கதையாக, கிளைமாக்ஸ் மாறுவதை எண்ணி கலங்கிப் போனான்.

“அம்மா சொன்னது இருக்கட்டும். நீ என்னடா முடிவு செஞ்ச?”

நான் முடிவு பண்ண என்ன இருக்கு சுனில். எனக்கு இருக்க ஒரே ஆதரவு இப்ப அம்மா மட்டும் தான். அவங்க தான் எனக்கு முக்கியம். அவங்களை இழக்க முடியாது. என்னை நம்பாம என்னைப் பிரிஞ்சு போன ஒருத்திக்காக இன்னும் எத்தனை நாள் காத்திருக்கிறது. அதனால அம்மா பேச்சை கேட்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.அவங்க எனக்கு வேணுண்டா.

இனி வசுங்கற பேச்சே வேண்டான்னு தீர்மானிச்சுட்டேன். இத்தனை வருஷமா அவளால நான் பட்ட கஷ்டமெல்லாம் போதும்.இனி அம்மா பேச்சு தான் வேதம் எனக்கு. நீ நாளைக்கு எட்டு மணிக்குள்ள காயூவைக் கூட்டிட்டு இங்க வந்திடு.டிபன் இங்கே தான். எனக்கும் ஷாக்தான். ஆனா அம்மா சொல்றதிலயும் நியாயம் இருக்கில்ல.
தொடரும்...
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,934
அருமை அருமை அம்மா ♥️♥️♥️♥️ஆஹா அர்வி சரியான கில்லாடியா இருக்கானே மனசுல ஒன்ன வச்சுக்கிட்டு வெளில ரெம்ப உதார் விடுறானே ம்ம்ம் செம performance, சுனில் பாவம் என்னால்லாம் பொலம்பிட்டு இருக்கானோ 😀😀😀😀😀😀😀
 

Sujatha

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 20, 2022
Messages
43
Nice update
 
Top