• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
கபியின் அறையிலிருந்து வெளியே வந்த தாரா, நேரே மிர்லாவின் அறைக்குள் நுழைய அங்கே கண்ட காட்சியால் அப்படியே வாசலில் சிலையாக நின்றுவிட்டாள்.

உள்ளே கட்டிலில் ருக்கு உறங்கிக் கொண்டிருக்க, இந்தர் ட்ரெஸ்ஸிங் டேபிலின் அருகே நின்றிருந்தவன், திடீரென அவனுக்கு முதுகு காட்டி நின்றிருந்த மிர்லாவை தோளைப்பிடித்து தன்புறம் திருப்பி அவள் உடையை கை வழியே கழற்றுவது போல் இழுக்க, மிர்லா பலம் கொண்டு அவனை தள்ளிவிட்டாள். மீண்டும் இந்தர் அவளை நெருங்கி அதையே செய்ய முயற்சிக்க, தோழியின் மானம் காக்க தாரா "இந்தர்" என்று கத்திட, அவனோ எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் மிர்லாவை முறைத்தபடி அறையைவிட்டு வெளியேறினான்.

மிர்லா சத்தமிடவில்லை, தன்னைக் காத்துக்கொள்ள, இந்தரை எதுவும் செய்ய முயற்சிக்கவில்லை, ஏன்!!! அவனை திட்டக்கூடவில்லை... தாரா மிருவின் அருகே செல்ல, அவளின் கண்கள் மட்டும் கலங்கியிருக்க, தோழியை ஆறுதல்படுத்தும் விதமாக அணைத்துக் கொண்டாள். ஒரு வார்த்தை கூட இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

மாலை கபியின் நண்பர்கள் வந்துவிட, ருக்குவின் பெயர் பொதித்த பெரிய கட்டிகை ஒன்று அனைவரும் சேர்ந்தே வெட்டினர். தாராவின் கண்கள் அடிக்கடி இந்தரை நோட்டமிட்டுக் கொண்டிருந்தது. இந்தரின் கண்களோ மிர்லாவை நோட்டமிட்டுக் கொண்டிருந்தது.

இனி ஒருமுறை இந்தர் மிர்லாவிடம் வரம்பு மீறினால் கபியிடம் சொல்லிவிட வேண்டியது தான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அன்றைய நாளை ருக்குவுடன் சேர்ந்து இனிமையாக்கினாள் தாரா.

ஆனால் சம்மந்தப்பட்ட இருவரும் அறைக்குள் ஒன்றுமே நடக்காதது போல் சுற்றித் திரிந்தனர். மிர்லா இந்தருக்கு சிறிய கட்டிகைத்துண்டாக எடுத்துக் கொடுக்க, அருகில் இருந்த கபி,

"ஏய் மிரு, இந்தருக்கு இன்னொரு ஸ்லைஸ் எடுத்து வை... ரெம்ப கொஞ்சமா இருக்கு பார்." என்றிட,

இந்தர் அவசரமாக மறுத்தான், "கேக் விரும்பி சாப்பிடமாட்டேன் கபிலன். எனக்கு இது போதும்..." என்றவன் அதிலேயும் பாதியை மிச்சம் வைத்து மிர்லாவிடம் நீட்ட, அவளோ அவனை முறைத்துக் கொண்டே மீதியை உண்டாள். இதனை யாரும் கவனிக்காமல் போனது தான் சோதனையே...

ருக்குவிடம் வந்த கபிலன் தாரா ருக்மணியை ஆன்டி என்ற அழைப்பில் இருந்து அம்மா என்ற அழைப்பிற்கு மாற்றியிருப்பதை கவனித்தவன் அதனை தனிமையில் அவளிடம் கேட்கவும் செய்தான்.

"என்னை அவங்க பிள்ளை ஆகமுடியாதுனு சொல்லிட்டு, நீ அவங்க பிள்ளையாக ட்ரை பண்ற போல?" என்று மெல்லிய சிரிப்போடு அவன் கேட்ட போதும் அதன் தோரணையிலயே பொறாமை வெளிப்படையாகத் தெரிந்தது.

தாராவும் பதிலுக்கு சிரித்துக் கொண்டே "சரி... அவங்களை எப்படி கூப்பிட-னு நீங்க தான் சொல்லுங்களேன்?" என்றவுடன், அவன் மனமோ 'அத்தை'னு கூப்பிடேன் என்று உள்ளுக்குள் உறக்கக் கத்திட, வெளியே கேட்காவிட்டாலும் அவனுக்கு கேட்கத் தான் செய்தது. அதில் பதறியவன், "உன் விருப்பம்" என்று கூறி அவளைவிட்டு நகர்ந்து சென்றுவிட்டான்.

தாராவிற்கோ 'அவரா வந்தார், அவரா தான் பேச்சுக் கொடுத்தார், அவராவே கோச்சுட்டு போறார்' என்று வாய்விட்டு புலம்பாத குறை தான்.

அன்றைய நாள் வெளிப்படையாக எந்த ப்ரச்சனையும் இல்லாமல் கடந்திருந்தாலும், அனைவர் மனதிலும் பூகம்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

மிர்லாவிற்கு இந்தரின் நினைவுகள், 'இத்தனை நாள் இல்லாமல் இன்று ஏன் அப்படி நடந்து கொண்டான்!!!' என்று அதனை மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தாள்.

ருக்மணிக்கோ இன்றும் தன் மகன் தன்னோடு பேச விரும்பவில்லையே என்ற வருத்தம். இனி கபியிடம் நான் பேச வேண்டும் என்று கூறி அவனது அலைபேசி எண்ணை வாங்க வேண்டும்... என்று தன் மகனின் நினைவில் உறங்கினார்.

கபி இனி அம்மாவிடம் எப்படி உண்மையை சொல்வது என்று யோசித்தாலும், தாராணி பற்றி தனக்குள் ஏற்படும் உணர்வுகள் காதலா! அல்லது ஈர்ப்பா? என்ற யோசனையும் இடையிடையே வந்து சென்றது.

அவனுக்கு நன்றாகத் தெரியும், மிர்லாவை அவன் விரும்பவில்லை என்று. இரண்டு வருடங்களாக தன் குடும்பத்தை ஒதுக்கி வைத்து தனியே வாழ்பவளுக்கு, ஒரு துணையாக இருக்க நினைத்தான். அந்த துணை மற்றவர் கண்களை உருத்தாமல் இருக்கவே அவளை மணந்துகொள்ளும் முடிவிற்கு வந்திருந்தான்.

மிர்லா தன்னை நண்பனாக மட்டுமே பார்க்கிறாள் என்று தெரிந்த போது அவன் மனம் அதனை பெருமிதமாக உணர்ந்ததே ஒழிய வருத்தப்படவில்லை. அன்று அவள் ருக்மணியம்மாளிடம் கூறிய அன்றே அவளுக்கு பிடித்த வாழ்வை அமைத்துக் கொடுக்கும் பொறுப்பை தன்னுடையதாக்கிக் கொண்டான். இப்போது கபியின் குழப்பம் எல்லாம் தாரணி தன் மனதிற்குள் நுழைந்துவிட்டாளா? இல்லை அவள் கூறிய ஆறுதல் வார்த்தைகளால் அவள் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்பது தான். பொறுத்திருந்து பார்ப்போம் என்று நினைத்துக் கொண்டு உறங்கிப்போனான்.

நெனச்சு நெனச்சு
தவிச்சு தவிச்சு
உருகி உருகி
கெடந்த மனசு
பறந்து போகுதே

மனச புடிச்சு கசக்கி புழிஞ்சு
பயந்து கிடந்த பழைய நினைவு
விலகி ஓடுதே

பூங்காற்று விசிறியாக மாற
பூபாளம் என்னை தேடி வந்து
சிந்து பாடும்

பூமேகம் குடைகளாக மாற
விண்மீன்கள் பன்னீராக மாறி
தூறல் போடும்

விடிய விடிய
கவிதை சொல்லி
மனச கிள்ளி மலர
வைக்கும் உறவு வந்ததே

நெருங்கி நெருங்கி
மயங்கி மயங்கி
இதயம் கிரங்கும் எனது
புதிய உலகம் வந்ததே


இது சாட்ஷாட் இந்தர் தான். மொட்டை மாடியில் நிலவை ரசித்தபடி, ஹெட்ஃபோனின் வழியாக செவியை நிறைத்த பாடல் வரிகளில் லயித்து ரசித்து, தன்னவளின் முகத்தை நிலவில் கண்டு சிரித்தபடி படுத்திருந்தான். அன்றைய இரவு அவனுக்கு உறங்கா இரவாகவே இருந்தது.

இந்த மனநிலையிலேயே அனைவருக்கும் ஒருவாரம் கடந்திருக்க, இன்பா ஆஸ்திரேலியா செல்வதற்கு முன் தன் டீம்மெட்ஸ் எல்லோருக்கும் ட்ரீட் தருவதாகக் கூறி ரெஸார்ட் அழைத்திருந்தான். இன்பாவிற்கு மிர்லாவை அப்படியே விட்டுச் செல்ல மனமில்லை. சில கேள்விகள் மட்டுமாவது கேட்டு காயப்படுத்த நினைத்திருந்தான்.

மிர்லாவிற்கு அந்த பார்ட்டியில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை என்றபோதும் வேறுவழியில்லாமல் மாலை அலுவலகம் முடித்து இல்லம் சென்று தயாராகி வந்தாள். தாரா கேட்டுக்கொண்டதால் சேலை அணிந்து வந்திருந்தாள். பேபி பிங்க் நிற காட்டன் சேலையில் அளவான ஒப்பனையில் தளரவிட்டிருந்த கற்றைக் கூந்தலை காதோர முடியை மட்டும் ஒன்று சேர்த்து கிளிப் செய்திருந்தாள்.

ரவிவர்மனின் நவீன ஓவியம் உயிர் பெற்றது போல், அழகு பதுமையாய் வலம் வந்தவளை விட்டு தன் கண்களை அகற்ற முடியாமல் தவித்தான் இந்தர். நாசி அவள் வாசத்தை மட்டுமே நுகர விரும்பியது, கண்கள் அவள் அழகை மட்டுமே ரசிக்கக் காத்திருந்தது, செவிகள் இரண்டும் அவள் எவ்வளவு தூரம் தள்ளியிருந்தாலும் அவளின் குரலை மட்டுமே செவிப்பறைக்கு அனுமதித்தது. ஐம்புலன்களும் அவளை மட்டும் உணரத்துடிக்க, மன்னவனும் அத்தோடு இணைந்து துடித்தான்.

தாராவும், மிர்லாவும் அந்த உயரமான கட்டிடத்தின் டெரஸ்-ல் நின்று கோவையின் அழகை ரசித்தபடி பேசிக்கொண்டிருந்த போது அங்கே வந்த இன்பா, தாராவிடம்

"தாரா.... உன்ன இந்தர் தேடிட்டு இருக்கார்." என்றிட தாரா நம்பாத பார்வை பார்த்தாள்.

அன்று வீட்டில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு இந்தர் தாராவிடம் பேசினாலும் கேட்டதற்கு மட்டுமே பதில் கூறிவிட்டு அமைதியாகிவிடுவாள். அவளின் ஒதுக்கம் உணர்ந்து இந்தரும் வேலை விஷயம் தவிர வேறு எதுவும் தேவையில்லாமல் பேசிக் கொள்ளவதில்லை. இப்போது இங்கே அழைத்துப் பேச அப்படி என்ன விஷயம் இருக்கப் போகிறது என்று தான் அவள் சந்தேகமாகப் பார்த்தாள்.

அவ்விடம் விட்டு நகராமல் நின்றிருந்த தாராவை அனுப்பி வைத்தாள் மிர்லா. "தாரா நீ போ நான் கொஞ்சம் இன்பாகிட்ட பேசனும்..." என்றிட, தாராவும் அங்கிருந்து சென்றாள்.

"சொல்லுங்க இன்பா?"

"ரெம்ப ஸ்மார்ட்-னு நெனப்போ!" என்று தான் அவளிடம் பேச வந்திருப்பதை கண்டு கொண்டாளே என்ற கடுப்பில் வினவினான்.

பதிலுக்கு மென்னகை பூத்தவளை அழ வைக்கும் நோக்கில், "பாத்தேல என் திறமை என்னனு!!! ஏதோ எல்லா உறவையும் கடமையாகவும், பொறுப்புகளில் ஒன்றாகவும் பார்க்கக் கூடியவன், காசை வெச்சு காதலை எடை போடக் கூடியவன் அப்படி இப்படினு சொல்லி ரிஜெக்ட் பண்ணினேல... இப்போ என்ன சொல்றே? என்னால என் வொய்ஃபை மட்டும் இல்லே, என் மொத்த குடும்பத்தையும் யாரோட உதவியும் இல்லாம இனிமே பார்த்துக்க முடியும்... அதுமட்டும் இல்லாம இனிமே நீ, நான்-னு போட்டி போட்டுகிட்டு எனக்கு பொண்ணு தருவானுங்க... இவ்வளவு ஏன் என்னை மிஸ் பண்ணிட்டோம்னு நீயே ஃபீல் பண்ணுவ..." என்று அவன் தன் போக்கில் அடுக்கிக் கொண்டே போக, கணீரென உரைத்தாள்.

"நாட் அட் ஆல்" அவளின் திடீர் பேச்சில் அவன் புரியாமல் முழிக்க... "ஒருநாளும் உங்களை மிஸ் பண்ணிட்டனேனு ஃபீல் பண்ணமாட்டேன்..." என்றிட, அதில் கோபம் கொண்டவன், அவளை ஏளனமாக பார்த்து

"அதானே... உனக்கு தான் ஆபிஸ் வந்தா இந்தரும், வெளியே போனா உன் பாய் ஃப்ரெண்டும் இருக்கானுங்களே... பின்னே எப்படி ஃபீல் பண்ணுவே" என்ற நொடி அவன் கன்னத்தில் சுலீரென அறை விழுந்திருந்தது.

அவள் தான் அறைந்துவிட்டாள் என்று கோபமாக நிமிர்ந்து பார்த்திட அடுத்த கன்னத்திலும் விழுந்திருந்தது. சித்தம் கலங்கியவனாய் தலையை உலுக்கி நிமிர்ந்து பார்த்திட அங்கே இந்தர் நின்றிருந்தான்.

இன்பாவிற்கு கோபம் எழுந்தபோதும், தனக்கு மேனேஜர் என்பதால் ஒன்றும் செய்ய முடியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு நின்றான்.

மிர்லாவை தன் கையணைப்பில் நிறுத்தி, "உன்னை மாதிரி ஒரு பொறம்போக்கு என் சுண்டு பக்கத்துல கூட இருக்கக்கூடாதுனு தான் உனக்கு போஸ்ட் அப்கிரேட் கொடுத்தேன். இதை வெளியே சொன்னா உனக்கு நான் கொடுத்த க்ரேட் எல்லாம் பொய்-னு ஆகிடும். ஆட்டோமேட்டிக்கா உன் அப்ராட் சான்ஸ் கை நழுவி போயிடும்... ஆஸ்ட்ரேலியா போற வரைக்கும் எல்லாத்தையும் சுருட்டிட்டு இரு..." என்று மீண்டும் அறைந்து அவனை அனுப்பி வைத்தான் இந்தர்.

என்னதான் இந்தர் அவனை அறைந்த போதும் அவளால் இன்பா கூறிய வார்த்தைகளில் இருந்து வெளியே வர முடியவில்லை. கண்ணீரில் கரைந்தவளை அணைத்து ஆசுவாசப்படுத்த முயற்சித்தான்.

"ஹேய்... அவன்லாம் ஒரு ஆள்னு அவன் சொன்னதுக்கெல்லாம் இப்படி அழுதுட்டு இருக்கே!!! அழாதே டி" என்று முதல்முறையாக உரிமையாக அழைத்தான். இந்தர் அவள் முதுகை வருடிவிட அதில் அவளின் அழுகை காரணமில்லாமல் அதிகமாகிட, அதனை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் தன்னோடு சேர்த்து முழுவதுமாக அணைத்து நின்றிருந்தான்.

சற்று நேரத்தில் அவளை விலக்கி நிறுத்த முற்படுகையில் பெண்ணவளோ அவன் நெஞ்சில் தஞ்சமடைய நினைத்து மேலும் அவனோடு ஒன்றினாள்.

"மிர்லா ப்ளீஸ்... தள்ளி நில்லுங்க... எல்லாரும் பாக்குறாங்க..." என்று அவளை அணைத்திருந்த கையை தளர்த்தி, அவளையும் நகர்த்தி நிற்க வைத்தான். நிமிடங்கள் கூட கடந்திடாத உரிமை பேச்சு காணாமல் போனதோடு, மரியாதை கூடியிருக்க விறுட்டென அவன் முகம் பார்த்தாள். அவன் பார்வையோ சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தது.

அவனின் பார்வை சென்ற திசையில் அவளும் சுற்றிலும் ஒருமுறை பார்வையை சுழலவிட, இருவர் மூவராக இணைந்து தங்களுக்குள் பேசிக்கொள்வதும், அவர்களைப் பார்த்து சிரிப்பதுமாக இருந்தனர். இன்பாவின் சிரிப்பே இது அவனது வேலை என்று சொல்லாமல் சொல்லியது.



-தொடரும்​
 
Top