• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
"நீங்க மிரு அப்பாகிட்ட வேலை பார்த்தவர் தானே!!! உங்க கூட தானே மிருவுக்கு கல்யாண ஏற்பாடு செய்திருந்தாங்க?" என்று கபி வினவிட, அந்த புதியவன் ஆம் என தலையசைத்தான்.

"நீங்க இங்கே எதுக்கு வந்திங்க....??" என்று கோபமும் சந்தேகமுமாக அடுத்த கேள்வியை முன் வைத்தான் கபி.

"நான் உப்பிலியோட அண்ணன்... சுந்தரிய பாத்து பேசிட்டுப் போக வந்தேன்..."

"உப்பிலியா!!!?" என்று இருவரும் ஒரு சேர அதிர்ச்சியாக வினவிட,

அந்த புதியவனோ திருதிருவென முழித்தபடி "இப்போ சுந்தரி பின்னாடி போனானே... அவன் தான்... ஓஓஓ உங்களுக்கு உபேந்திரன்-ன்ற பேர் தான் தெரியுமா?" என்று கள்ளம் கபடமற்ற சிரிப்பை சிந்தியபடி பதில் கேள்வி கேட்டான் புதியவன்.

"ஹய்யோ இது என்னது? ஏற்கனவே அவங்களுக்கு கல்யாணம் ஆன விஷயமே இப்போ தான் தெரிஞ்சது. அதுலேயே இன்னும் குழப்பம் தீரலே... இதுல நீங்க வேற மிருவே சுந்தரினு சொல்றிங்க!!! இந்தரை உப்பிலினு சொல்றிங்க!!! சுத்தமா புரியலே..." என்று புலம்பினாள் தாரா...

"அவன் என் தம்பி.... பேரு உப்பிலிநாதன். அவன் ஒம்பதாவது படிக்கும் போது பொம்பள புள்ளிங்கலாம் அவன் பேரை வச்சி கிண்டல் பண்ணுதுங்கனு சொல்லி, பேரை மாத்தினா தான் பள்ளிக்கூடம் போவேனு சொல்லிட்டான். அப்பறம் தான் பெர்த் சர்டிவிக்கேட்ல உபேந்திரன்னு பேரை மாத்தி, வேற பள்ளிகூடம் மாத்தின பின்னாடி தான் ஒழுங்கா படிச்சான்... ஆனா வீட்லேலாம் உப்பிலி தான்..." என்று சிறுபிள்ளைக்கு விளக்கம் சொல்லுவது போல் அப்பாவியாய் கூறினான்.

அவனின் முகபாவனையும், பேசும் விதமும் கபடமற்றவன் என்று வெளிப்படையாக உரைத்திட, இருவரும் ஒரு நொடி இறக்கமாகப் பார்த்தனர். "அப்போ மிரு லெவென்த் படிக்கும் போது, ஸ்கூல் போகமாட்டேனு அழுதாளா!!! அதனாலத் தான் சுந்தரி என்ற பேரை மாத்தி மிர்லானு வெச்சாங்களா!!!" என்று தாரா விளையாட்டாக அவனை வம்புவளர்த்தபடி கேட்டிட,

"அட அவுக கதையே வேற... மிர்லாவுக்கு மொதோ இருந்தே அதான் பேரு... எங்க ஐயா தான் செல்லமா சுந்தரினு கூப்பிடுவாக... அது தெரியாம நான் தான் அது தான் பேரு போலுக்கனு அப்படி கூப்பிட்டு பழகிட்டேன்... அப்பறமா தான் தெரிஞ்சது அது பேரு மிர்லானு... அப்பறம் பழகினதை மாத்த முடியலே... சுந்தரியும் மாத்த வேண்டாம்னு சொல்லிடுச்சு...." என்று இப்போதும் அதே அப்பாவித்தனமாக உரைத்தான்.

வெள்ளை வேஷ்டி சட்டைக்கே உரிய கம்பீரத் தோரணையும், வெகுளிப் பேச்சும் முன்னுக்குப்பின் முரண்பாடாக இருந்தபோதும் இது நடிப்பு இல்லை என்று கபி தெளிவாக உணர்த்தியது.

தாராவோ வேறு விதமான யோசனையில் இருந்தாள். இந்தர் மிர்லாவைப் பார்த்து மிர்லா சுந்தரியா என்று வினவியதுவும் அதற்கு மிர்லா தன்னை முதன்முறையாக மிர்லா உப்பிலிநாதன் என அறிமுகப்படுத்திக் கொண்டதும், அவனது 'சுந்தரி நீயும்' என்ற ரிங் டோனிற்கு கோபம் கொண்டு திறன்பேசியை உடைத்ததும், அவன் சட்டையைப் பிடித்து உரிமையாக சண்டையிட்டதும், அதன் பின்னும் பல நாட்கள் அவனை பாடாய் படுத்தி தன் இருக்கைக்கு வந்தபின் தனியாகச் சிரித்துக் கொண்டதும் என அனைத்தும் அவள் நினைவடுக்குகளில் வந்து குவிந்தது.

"இந்த க்விஸ் காம்பட்டிஷன் மாதிரி கேள்வி பதில் வேண்டாம்... மொதோ இருந்து எல்லாத்தையும் மொத்தமா சொல்லிடுங்களேன்... ப்ளீஸ்" என்றாள் தாரா.

"ம்ம்ம்..." என்று தலையசைத்துவிட்டு, "எங்க அப்பாவுக்கு சொந்த ஊரு தேனி பக்கத்துல கண்டமனூர்... எங்க வீட்ல நானும் என் தம்பியும் மட்டும் தான். நான் யோகநாதன்... பேருல மட்டும் தான் யோகம்... வீட்ல இல்லே... என் அப்பா என்ன தொழில் பண்ணினாலும் நட்டமாத்தான் போச்சு... என் அம்மா என்ன வேலை கெடச்சாலும் செய்வாங்க... அதுல தான் வயித்த நெறப்பிக்குவோம்... சில நாள் வெறும் தண்ணி தான்..." என்று பொறுமையாகக் கூறியவனை இடைமறித்தான் கபி...

"பாஸ் அவ்ளோ மொதோ இருந்து இல்ல... உங்களுக்கும் மிருவுக்கும் கல்யாண ஏற்பாடு செய்தாங்கல்ல... அதுல இருந்து சொல்லுங்க.. போதும்..." என்றான்.

"ம்ம்ம்..." என்று மீண்டும் தலையசைத்துவிட்டு, "சுந்தரிக்கும் எனக்கும் கல்யாணம் பேசினாங்க, நான் வேற கல்யாணம் செய்துகிட்டு, என் தம்பிய சுந்தரிக்கு கட்டிவெச்சுட்டேன்..." என்று இரண்டே வரிகளில் கூறி முடித்திருந்தான் யோகன்.

ஆவலாகக் கேட்டுக் கொண்டிருந்த இருவருக்கும் யோகன் பல்பு கொடுத்திட, தாரா கபியை முறைத்துவிட்டு யோகனை ஏமாற்றமாகப் பார்த்தாள்.

அதற்கு யோகன் "என்னா? சரி தானே!!!" என்று நக்கலாக வினவிட, "நீங்க மொதோ இருந்தே சொல்லுங்க பாஸ்..." என்றான் கபி. யோகனோ சட்டை காலரை பிடித்து தலையை இரண்டு பக்கமும் திருப்பி கெத்துக் காட்டியபடி, "ம்ம்ம்" என்றான்.

"அப்பா இறந்ததும் நான் படிப்பை நிறுத்திட்டு தேனில ஐயாகிட்ட வேலைக்குப் போனேன். ஒருவகைல ஐயா எனக்கு தூரத்து மாமா உறவும் கூட. ஐயா படிக்க வைக்கிறேனு சொன்னாங்க... எனக்கு படிப்பு மண்டைல ஏறல... அப்படியும் பன்னண்டாவது வரைக்கும் படிக்க வெச்சுட்டாங்க... அதுக்கப்பறம் படிக்கமாட்டேனு சொல்லிட்டேன். ஐயாவோட தோட்டம், ரைஸ் மில்லு, சுகர் மில்லு, சென்ட் ஃபேக்ட்ரினு எல்லா எடத்துக்கும் கூட்டிட்டு போயி எல்லா வேலையும் கத்துக் கொடுத்தாங்க

சொந்தக்காரப் பையன்றதுனால, என்னை வீட்ல ஒருத்தனாத் தான் பாத்தாங்க... அது கடைசில மாப்பிள்ளையா பாக்க வெச்சிடுச்சி... ஆனா நமக்கு தெரியுமே நம்ம தகுதி, தராதரம் என்னனு!!! படிக்காத பட்டிக்காட்டானுக்கு படிச்ச பொண்ணு!!!... இன்னு யோசிச்சா முதலாளி பொண்ணு!!!... ஏதோ பொருத்தம் இல்லேனு தோனிக்கிட்டே இருந்துச்சி... ஐயாவ எதுத்து பேசுற பழக்கம் வேற இல்லேயா!!! நேரா சுந்தரிக்கிட்ட போயி, உனக்கு பிடிக்கலேனு சொல்லிடுனு சொன்னேன். அது ஐயா என் நல்லதுக்கு தான் செய்வாங்க, இப்போ நான் பிடிக்கலேனு சொன்னா வருத்தப்படுவாங்க, என்னால முடியாதுனு சொல்லிடுச்சு...

அப்போ தான் உப்பிலி நியாபகம் வந்தான். அப்போ அவன் சிங்கபூர்ல இருந்தான். கல்யாணத்துக்காக லீவ் போட்டுட்டு வந்திருந்தான். அவகிட்ட கேட்டாலாம் வேலைக்கு ஆகாதுனு, மொதோ நாள் என் ஐத்தமவகிட்ட பேசினேன். அவளும் என்னை கட்டிக்க சம்மதம் சொல்லிட்டா... சரினு அன்னைக்கே அவ கழுத்துல தாலி கட்டிட்டு, அடுத்தநாள் ஒன்னும் தெரியாதது மாதிரி மணமேடைல வந்து உக்காந்துட்டேன்.

கடைசி நேரத்துல எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சினு சொல்லி ஐயாகிட்ட மன்னிப்பு கேட்டு, அப்படியே என் தம்பிய பத்தி சொன்னேன். சுந்தரி கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு எழுந்து போயிடுச்சு. மணமேடை வரை வந்து கல்யாணம் நடக்கலேனா அப்பறம் யாரும் கட்டிக்க வரமாட்டாங்கனு ஐயாவுக்கு ஒரே பயம். சுந்தரிய எமோஷ்னலா மெரட்டி கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சாரு... நான் அதே வேலைய உப்பிலிகிட்ட செய்தேன்..." என்று அதுவரை விறுவிறுப்பாகக் கூறிக் கொண்டிருந்தவன் முகம் வாடியது.

"அது தான் தப்பாகி போச்சு... கல்யாணம் எந்த ப்ரச்சனையும் இல்லாம முடிஞ்சிடுச்சு... ஆனா உப்பிலி அப்போ வாங்கின சம்பளத்துக்கு சுந்தரிய கூட கூட்டிட்டு போக முடியாதுனு சொல்லி அடுத்தநாளே அவன் மட்டும் கெளம்பி போயிட்டான். ஊருக்குள்ள சுந்தரிய அபசகுணமா பேச ஆரம்பிச்சிட்டாங்க... சிலர்லாம், அண்ணங்காரே வேண்டாம்னு சொல்லிட்டான், தம்பி என்னடானா விட்டுட்டு போயிட்டான்... அந்த பிள்ளைக்கு என்ன கொறையோ!!! காதுபடவே பேசினாங்க... அதான் ஊரும் வேண்டாம் அப்பனும் வேண்டாம்னு கோச்சிட்டு போயிடுச்சு... எங்க போச்சுனு யாருக்கும் தெரியாது. இப்போ தான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் ஐயா உங்ககிட்ட பேசின விஷயம் எனக்கு தெரிய வந்தது... எல்லா தப்புக்கும் மூல காரணமே நான் தாங்குறதுனால, சுந்தரிகிட்ட சமாதானம் பேசத் தான் வந்தேன்." என்று ஏற்ற இறக்கத்தோடு கூறியவன், திடீரென

"ஆனா உப்பிலிய இங்கே எதிர்பாக்கல... அவனும் ஆரம்பத்துல கோபமாத் தான் இருந்தான். சுந்தரி வீட்டைவிட்டு போனதும் அவனுக்கு என் மேல இன்னமும் கோபம் அதிகமாகிடுச்சு... இனி ஊரு பக்கமே வரமாட்டேனு சொல்லிட்டான். அப்பறம் ஒருநாள் ஃபோன் பண்ணி பெங்களூர்ல இருக்கேனு சொன்னான்... இப்போ பாத்தா இங்கே இருக்கான்!!! என்று ஆச்சரியமாகக் கூறினான்.

"இந்தர் இங்கே வேலைக்கு வந்து நாலு அஞ்சு மாசம் ஆகுதே!!!" என்று தாரா கூறிட, டாக்ஸியும் சரியாக வந்து நின்றது.

"வாங்க வீட்ல போய் மீதிய பேசிக்கலாம்" என்று கபி கூறிட, தாரா அசையாமல் நின்றிருந்தாள்.

"என்ன? உன்னை தனியா அழைக்கனுமா? வா" என்று அதிகாரமாக அழைத்திட,

"ஏன்? என்னை பாத்தா எப்படி தெரியுது!!! உங்க பொண்டாட்டி மாதிரி உரிமையா கூப்பிடுறிங்க!!? எனக்கும் வீடு இருக்கு... பேரண்ட்ஸ் இருக்குறாங்க..." என்று அவளும் துடுக்காக எதிர்கேள்வி கேட்டு அவளே பதிலும் கூறிக் கொண்டாள்.

"ஓஓஓ... நீங்களும் காதலர்களா? உங்க ரெண்டு பேர் பேச்சும் கூட நல்லா தான் யா இருக்கு!!!..." என்று யோகன் காரில் ஏறிக் கொண்டு ஜன்னல் கண்ணாடியின் மேல் கை வைத்தபடி ஆர்வமாக வேடிக்கைப் பார்த்திட,

யோகனின் பேச்சில் தான், தான் என்ன கூறினோம் என்று உணர்ந்தாள் தாரா... கபி என்ன நினைப்பாரோ என்று அவசரமாக அவனைத் திரும்பிப் பார்த்திட அவனோ அவள் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து வெளிவருவதற்கு முன்னே மீண்டும் யோகன் கொடுத்த அதிர்ச்சியில் சிக்கித் தவித்தான்.

தன்னை இயல்பாகக் காட்டிக்கொள்ள தன் ஃபோனை உள்ளங்கையில் தட்டியபடி எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான் கபி. அவனின் பதற்றம் கூட அழகாகத் தெரிந்திட தன்னை மறந்து அவனை ரசித்தது பெண்மனம். தன்னைத் தான் அவள் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதே அவனை மேலும் படபடக்கச் செய்தது.

இன்னும் அவள் புறம் திரும்பவில்லை அவன். ஆனாலும் தன்னைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று நன்கு அறிந்திருந்தான் கபி. ஏன் இன்னும் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்!!! என்று யோசித்தவனுக்கு யோகன் பதில் அளித்திருந்தான்.

"ஆண்கள் வெட்கப்படும் தருணம் கூட அழகா தான் யா இருக்கு..." என்றிட, அதிர்ச்சியோடு கலவரமும் சேர்ந்து கொள்ள தாராவை திரும்பிப் பார்த்தான் கபி.



-தொடரும்​
 
Top