• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
மிர்லாவும் இந்தரும் ஒன்றாகத் தான் அலுவலகம் வந்து செல்கின்றனர். கபி இப்போதெல்லாம் இரவு பணிக்குச் செல்வதில்லை. இனி ருக்கு தனியாக இருப்பாரே என்பது தான் அவனது பெரிய வருத்தமாக இருந்தது.

மாதங்கள் கடந்திருத்த நிலையிலும் கபியும், தாராவும் தங்கள் காதலை ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொள்ளவில்லை. எப்போதாவது ஒருமுறை வெட்டிப்பேச்சுக்காக வேண்டுமானாலும் குறுந்தகவல் அனுப்பிக்கொள்வார்களேத் தவிர அழைப்பு விடுத்து பேசிக்கொள்ளவதில்லை.

அன்று காலையே அலுவலக வாசலில் வந்து நின்றிருந்தான் கபி.
அவனைக் கண்டதும், ஒருநொடி அதிர்ந்த தாரா 'ஒருவேளை மிருவைப் பார்க்க வந்திருப்பானோ!!!' என்று நினைத்தபடி அவனருகே வந்து தன் வண்டியை நிறுத்தினாள்.

அவள் நிற்பதை உணர்ந்து கொண்டவன் நிமிர்ந்து பார்க்காமலேயே, "அம்மாகிட்ட இன்னைக்கு சொல்லிடலாம்னு இருக்கேன்..." என்று முகவாட்டத்தோடு கூறினான்.

"ம்ம்ம்..."

"ம்ம்ம்-னா என்ன அர்த்தம்?" என்று கத்தலில் ஆரம்பித்து "ரொம்பவே பயமா இருக்கு... நீயும் வாயேன்?" என்று இரைஞ்சலில் முடித்தான்.

"நான் வரமுடியாதுனு சொல்லலேயே..." என்று பதில் வரவும், சற்று நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டதோடு தாரா அருகில் இருந்தால் ஏனோ தைரியமாக இருப்பது போல் உணர்ந்தான்.

இருவருமாக வீட்டிற்குச் செல்ல ருக்கு ஏதோ பேச வந்திருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டார். ஆனால் அதன் காரணத்தை தான் தவறாக ஊகித்திருந்தார்.

கபியிடம் சின்னச்சின்ன மாறுதல்களைக் கண்டதால் கபி தாராவை விரும்புகிறானோ என்று சந்தேகித்தவர், இன்று இருவரையும் ஒன்றாகப் பார்க்கவும் அதே தான் என்று ஊர்ஜிதம் செய்து கொண்டார்.

"ம்மா கொஞ்சம் பேசலாமா?"

"நீயும், நானும் பேசுறதுக்கு எதுக்கு டா இந்த பொண்ணை கூட்டிட்டு வந்தே!!" என்று முகத்தை விரைப்பாக வைத்துக் கொண்டு கேட்க, கபி சற்றுத் தயங்கினான். தாரா அவனது கைகளை ஆதரவாத பற்றிக்கொள்ள ருக்கு தனக்குள் சிரித்துக் கொண்டார்.

"ம்மா நான் உங்க பையன் தானே!!! என்னை உங்க பையனாத் தானே பாக்குறிங்க?" என்று தயங்கியபடி வினவிட,

அவரோ இப்போதும் தவறாகத் தான் ஊகித்தார். தன் பையன் காதலை தான் ஏற்றுக்கொள்ளாததால் தன்னிடம் கூறத் தயங்குகிறான் என்று நினைத்தார்.

"ஏன்டாப்பா இப்போ இந்த சந்தேகம்? நீ காதலிக்கிறது தெரிஞ்சா உன்னையும் ஒதுக்கி வெச்சிடுவேன்னு நெனைக்கிறேயா? உன்னையும் ஒதுக்கி வெச்சி என்னால ரெண்டு வேதனைய அனுபவிக்க முடியாது..." என்றார் வாடியமுகமாக.

ருக்குவின் வாடிய முகம் கண்ட நொடி கபி உடைந்து போனான். அதற்கு மேல் கூறிட முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க, தாரா கூற ஆரம்பித்தாள்.

"ஆன்டி உங்க பையன் லவ் மேரேஜ் பண்ணிக்கலே..." இப்போது ருக்குவிடம் பேச வார்த்தைகள் இல்லை.

"உங்க பையனை அந்த பொண்ணு ஏமாத்திட்டா... அவர் இப்போ இல்லே..."

"இல்லேனா?" என்று நம்ப முடியாமல் ருக்கு வினவிட, கபியின் கண்கள் பெருக்கெடுக்கத் தொடங்கியது.

அதற்கு மேல் கபி அனைத்தையும் கூறிட, "கடைசி வரை இந்த அம்மா நெனப்பு அவனுக்கு வரலேயா கபி? ஊரே தூற்றுனாலும், பெத்தவ பிள்ளைய போற்ற தானே செய்வா!!! என் பையனை நான் எப்படி டா நம்பாம போவேன்!!! என்னைக்கு வந்தாலும், எப்படி வந்தாலும் அவன் என் புள்ள தானே டா!!! நான் எப்படி டா அவனை வறுத்துவேன். என்கிட்ட வந்திருந்தா காயப்பட்ட மனசுக்கு மருந்திட்டிருப்பேனே!!!" என்று அன்னையின் மனம் பாரம் தாங்காமல் கண்ணீராய் வெடித்திட,

"ம்மா... என்னை மன்னிச்சிடுங்க ம்மா... அவன் லவ் ஃபெய்லியர்னு சொன்ன போதே நான் அவனை இங்கே வர சொல்லிருக்கனும்... எல்லாம் என்னோட தப்பு தான்...." என்று கபி ருக்குவின் காலில் தலை வைத்து அழுதிட,

"அந்த பொண்ணு ஏமாத்திட்டானு நெனச்சு அவன் சாகலே டா... நான் அவனை அவ்ளோ கோழையா வளக்கலே... போலிஸ் அசிங்கப்படுத்தினது தாங்காமத் தான் சூசைட் பண்ணிருப்பான்.
'கற்பென்று வரும்போது ஆண்ணையும், பெண்ணையும் சமநிலையில் நிறுத்து'னு மனசுல பதிய வெச்சு வளர்க்கப்பட்டவன்... போலிஸோட நடவடிக்கையில தான், தன் தன்மானம் போனதா நெனச்சிருப்பான்..." என்று அவன் இறப்பிற்கு காரணம் தேடிய தாயுள்ளம், "இருந்தாலும் என்னை தேடி ஒருமுறையாவது வந்திருக்கலாமே" என்று புலம்பிடவும் செய்தது.

ருக்குவிற்கு சமாதானம் சொல்ல வேண்டிய கபியே அழுது கரைந்திட, தாரா தான் இருவருக்கும் ஆறுதல் கூறி கவனித்துக் கொண்டாள். மதிய உணவை மறுத்த இருவரையும் உருட்டி மிரட்டி உண்ண வைத்தாள்.

மாலை தாரா தன் இல்லம் சென்றபின் கபியே ருக்குவை கவனித்துக் கொண்டான். ருக்மணியம்மாள் ஒரே நாளில் மூப்பு அடைந்தது போல் தோன்றியது கபிக்கு. இரவு உணவை ருக்குவின் அறைக்கு எடுத்துச் சென்றவனிடம்,

"கபி... நீ தாராவை விரும்புறேயா?" என்று நேரடியாக வினவிட,

"இப்போ எதுக்கு ம்மா இது?"

"உனக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து பார்க்க ஆசையா இருந்தது. இன்னைக்கு அதே சொல்லத் தான் தாராவை கூட்டிட்டு வந்திருக்கேனு நெனச்சேன். நான் உனக்கு இடைஞ்சலா இருந்தா என்னை ஓல்டேஜ்ல சேர்த்துவிட்டுட்டு நீ உன் வாழ்க்கையைப் பார்..." என்றிட,

"உங்களை மாமியாரா ஏத்துக்குற பொண்ணை தான் கல்யாணம் செய்துப்பேன். அது தாரா-வா இருந்தாலும் சரி."

"அதுலேயும் தாரா ஸ்பெஷல் தானே?" என்று கண்முன்னே இருக்கும் மகனுக்காக சிரித்தபடி வினவினார்.

"ம்மா... உங்களுக்கு தாரா-வ பிடிச்சிருக்கா?"

"எனக்கு எதுக்கு டா பிடிக்கனும்... உனக்கு பிடிக்குமா சொல்லு, நாளைக்கு சாயந்தரமே அவங்க அப்பாகிட்டே பொண்ணு கேட்கலாம்..." என்றிட

"ஏன் இவ்ளோ அவசரம் ருக்கு... நாளமறுநாள் காலைல கூட போலாம் ஒன்னும் அவசரம் இல்லே" என்று ஏதோ ஒருமாதம் தள்ளிப் போட்டதை போல் சிரியாமல் கூறினான்.

"அடிபடவா..." என்று அவரும் அவனது முகபாவனைக கண்டு சிரித்தபடி கூறினார்.

கபியின் விருப்பப்படி தாராவின் வீட்டிற்கு ருக்கு, இந்தர், மிர்லாவோடு கபியும் இணைந்து பெண்கேட்டுச் செல்ல, அதிர்ந்தாள் தாரா.

தாராவின் தந்தைக்கு கபியை பிடித்துவிட, அவரும் சம்மதித்தார். இரண்டு மாதத்தில் திருமணத் தேதி குறித்திட, இரண்டு மாதங்களும் தாராவுடன் அளவாகத் தான் பேசி வந்தான் கபி... சொல்லப் போனால் பேசுவதை குறைத்துக் கொண்டான் என்று கூட சொல்லலாம்.

திருமணத்திற்கு முதல் நாள் மண்டபத்தில் யாருக்கும் தெரியாமல் கபியின் அறை வாயிலில் நின்று அவனது எண்ணிற்கு அழைத்தாள் தாரா. இரவு நேரத்தில் வந்த அழைப்பில் அதிர்ந்தவன், "ஹலோ தாரு... எனி ப்ராப்ளம்?" என்றான்.

"உங்க ரூம் வாசல்ல தான் நிக்கிறேன்..." என்ற அவளின் பதிலில் மேலும் அதிர்ந்து எழுந்து வந்து கதவைத் திறந்திட, வாடிய முகமாக நின்றிருந்தாள் தாரா...

"ஹேய் என்ன இந்நேரம் இங்கே வந்திருக்க... என்னாச்சு?" என்று பதறியபடி அவளின் கைப் பிடித்து உள்ளே இழுத்தான்.

"நீங்க ஏன் இப்படி இருக்கிங்க?" என்று எடுத்ததும் வெடித்தாள்.

"எப்படி இருக்கேன்!!!" என்று உண்மையாகவே புரிந்திடாமல் வினவினான்.

"இப்போலாம் என்னை பாக்க மாட்டேங்கிறிங்க... என்கிட்ட ஒழுங்கா பேசுறது இல்லே... மெசேஜ் கூட குட்மார்னிங், குட்நைட் தவிர வேற எதுவும் அனுப்புறது இல்லே..."

"இவ்ளோ தானா?" என்று சாதாரணமாக வினவிட,

"இவ்ளோ தானாவா!!! உங்களுக்கு என்னைப் பிடிக்கலேயா?" என்றிட,

"அவசியம் சொல்லனுமா?"

"ம்ம்ம்..." என்று மட்டும் சிணுங்கிய படி கூறியவளை நொடியில் இழுத்து அணைத்து தன் கைகளுக்குள் சிறையிட்டான்.

கண்களை விரித்து மிரண்டபடி அவனைப் பார்த்தவளைக் கண்டு சிரித்து, நாளைக்கு கல்யாணத்துக்குப் பின்னாடி தான் உன்னை எவ்ளோ பிடிக்கும்னு காண்பிக்க நெனச்சிருந்தேன்.... ஆனா மேடம்க்கு இன்னைக்கே அவசரம் தாங்கல போல!!!" என்றபடி அவள் இதழை நோக்கினான்.

அவனின் பார்வை மாற்றத்தைக் கண்டவள், "கபி நான் போகனும்" என்றிட,

"கேட்டதை தெரிஞ்சுகிட்டு போ..."

"நீ... நீங்க.... இப்படி சொல்லுவிங்கனு நெனைக்கலே... நான் போறேன்..."

"அது என் ரூம் கதவை தட்டுறதுக்கு முன்னாடியே யோசிச்சிருக்கனும்..." என்று கூறியபடி அவளை கதவில் சாய வைத்து தன் முழு உடலையும் அவள் மேல் சாய்த்து நின்றான்.

ஏற்கனவே பயத்தில் மூச்சுத் திணறியவளுக்கு, இப்போது பாரம் ஏறிக்கொள்ள இப்போதே மூச்சடைத்தது.

நெற்றியிலிருந்து தன் விரல் பயணத்தைத் தொடங்கயவன் உச்சிவகிட்டில் முத்தமிட்டு, விரல் கொண்டு ஒற்றைக் கல் கோபுரப்பொட்டை தடவியபடி புருவமத்தியில் இதழ் பதித்தான். இதழ்கள் சற்று நகர்ந்து புருவத்தை அடையா பெண்ணவளின் இமைகள் தானாக மூடிக்கொண்டது, மலைச் சரிவு போல் இருக்கும் புருவத்தில் இருந்து கண்ணிற்கு சரிந்தது அவன் இதழ்கள்.

காது மடலில் தொங்கிக் கொண்டிருக்கும் ஜிமிக்கியை சுண்டிவிட்டவனின் இதழ்கள் அடுத்து இழைப்பாறியது பெண்ணவளின் காதில் தான், கொஞ்சம் கொஞ்சமாக கைகளோடு இணைந்து இதழ்களும் கழுத்தில் நடைபயணம் இட, முன்கழுத்தில் வந்து நிறுத்தினான் தன் இதழ் பயணத்தை.

அதன்பின் அவன் கை விரலோ கீழ் நோக்கிச் செல்ல பெண்ணவளின் பெண்மை விழித்துக் கொண்டது. கைகள் தானாகச் சென்று அவன் கைக்குத் தடைவிதித்திட, ஆடவனின் இதழ்கள் மேல் நோக்கி முன்னேறியது. இறுதியில் இதழின் அருகே வந்தவன், "take a deep breath bab" என்றுரைத்து அதற்கு சில நொடி அவகாசமும் கொடுத்தவன், இதழோடு இதழ் பதித்து தன் காதலின் ஆழத்தை அவளுக்கு புரிய வைக்க முயற்சித்தான்.

நிமிடங்கள் பல கடந்திட, பெண்ணவள் வழுக்கட்டாயமாக அவனை நகர்த்தி நிறுத்தினாள். அவனின் காதலின் கரை காணும் முயற்சி இறுதி வரை முயற்சியாகவே முடிந்திருந்தது. ஏனோ அவளை நெருங்க நெருங்க காதல் பெருக்கெடுத்து எல்லை காண முடியாத ஆகாயமாக விரிந்ததே ஒழிய கரை கொண்ட கடலாய் ஒடுங்கவில்லை.

மறுநாள் காலை மணமேடையில் இளஞ்சிவப்பு நிற பட்டு சேலையில் அலங்கரிக்கப்பட்ட பதுமைபோல் அமர்ந்திருந்தவளின் முகமும் சிவந்திருக்க, மணாளனுக்கோ பெருத்த சந்தேகம்.

அவளின் முகச் சிவப்பிற்கு காரணம் சேலையின் பிரதிபலிப்பா இல்லே முதல் நாள் முத்தமிட்ட போது சிவந்து நின்றவள் இன்னும் நிறம் மாறாமல் வந்து நிற்கிறாளா!!! என்று யோசித்தபடி அவளையே பார்த்திருக்க,

மிர்லா அவன் தலையில் தட்டி, "இன்னமும் மாறலேயா டா நீ?" என்றிட, கபியோ மேடையின் அருகே தன் மூன்று மாத மகள் மகிழினியை தூக்கி வைத்தபடி நின்றிருந்த இந்தரை அழைத்து, "உன் பொண்டாட்டிய அந்த பக்கம் தள்ளிட்டு போ" என்றான்.

"ஏன் டா... ஏன் இந்த கொலவெறி? நானே கூட்டிட்டு போயி நானே அடிவாங்கிக்கவா?" என்று அப்பாவியாய் வினவினான்.

"அடி வாங்கி பெத்த பிள்ளையாடா இது... நல்லா ஏமாத்துறிங்கடா ஊரை!!!" என்று நம்பாத பார்வை பார்த்தான் கபி.

"அதெல்லாம் அப்படித் தான்... இன்னைக்கு தானே கல்யாணம் நடக்குது... இனி ஒவ்வொன்னா நடக்கும் போது தெரியும்..." என்று பதிலளித்தான் இந்தர்.

ஐயர் திருமாங்கல்யம் எடுத்துக் கொடுக்க, அதனைப் பெற்றுக்கொண்டு தன்னவளின் கழுத்தில் அணிவிக்க இனிதே நிகழ்ந்தது கபிலன்-தாரணியின் திருமணம்.



சுபம்
 
Top