• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பூமாதேவி. R - ஒவ்வொரு பூக்களும்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
“ ஒவ்வொரு பூக்களும்…..”

“அம்மா‌….! நான் போறேன் நேரமாச்சு”

“ இருடி.குழம்பு கொதிச்சுருச்சு.ஒரு வாய் சாப்பிட்டுப் போ.”

“ நீயும் அரை மணி நேரமா இதான் சொல்ற.குழம்பு கொதிச்சதும் உன் குப்பியிலேயே நிறைச்சுக்கோ.”

“ கொழுப்பு.எல்லாம் அப்பனும் கூடப் பிறந்தவங்களும் குடுக்குற செல்லம்.சாயங்காலம் வந்ததும் உன் குப்பி சோறு கேட்குமில்லை அப்ப அதை காயப் போடுறேன்.” கெங்கம்மாவின் புலம்பலை காதில் வாங்கிக் கொள்ளாமல் பள்ளியை நோக்கி விரைகிறாள் வசந்தி.

கிரவுண்டில் விளையாடிக் கொண்டிருக்கும் பையன்களுடன் சேர்ந்து கிட்டிப்புல் விளையாடுகிறாள்.

“ஏ….வசந்தி! வாடி பாண்டி விளையாடலாம்.”

வகுப்புத் தோழிகளின் அழைப்பை காதில் வாங்கிக் கொள்ளவில்லை வசந்தி.

“ அவளை ஏண்டி கூப்பிடுறீங்க?! அவளுக்கு பெரிய டெண்டுல்கர்னு நினைப்பு.எப்பவும் கிட்டிப்புல் பம்பரம் கிரிக்கெட்டுன்னு பசங்களோட தான் விளையாடுவாள்” என முணுமுணுக்கின்றனர் சிலர்.

பி..டி வாத்தியார் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் லாங்க் ஜம்ப் ஹை ஜம்ப் ன்னு தான் ப்ராக்டீஸ் பண்ணுவாள்.

வசந்தியின் நடை உடை பாவனை எதுவுமே அவளை பெண் பிள்ளையாகக் காட்டவே காட்டாது.

போன தீபாவளிக்கு பேண்ட் சட்டை தான் வேணும்னு அடம் பிடித்தாள்.

“ சரி விடு.அண்ணன்களைப் பார்த்தே வளர்றா.அதனால என்ன சின்னப் பிள்ளை தானே வாங்கிக் குடுப்போம்.” அப்பா சொன்னாலும் அம்மாவுக்கு பிடிக்கவில்லை.

பெரியவள் மீனா பிறந்த போது வீட்டில் வசதியில்லை.நல்ல துணிமணியா போட்டு அழகு பார்க்க முடியவில்லை.இவள் பிறந்த பிறகு ஓரளவு வசதி பெருகி இருக்கு.பட்டுப் பாவாடை சட்டை போட்டு அழகு பார்க்கலாம்னா…இவள் இப்படி வளர்கிறாளே?!நல்ல நாள் பொழுதுக்கு பூ வைக்கவும் விடறதில்லை.

“ போ…மா.குலை குலையா தலையில மாட்டிக்கிட்டு.அந்த ஸ்மெல்லே பிடிக்கலை.” என்று வீசி விடுவாள்.

இவளைக் கடுப்பேத்த மூத்தவளுக்கு நிறைய நகை போட்டு‌விடுவாள்.அப்பக் கூட எனக்கும் வேண்டும்னு கேட்டதில்லை.

சீப்பெடுத்து தலைவாரிக்கிட்டு நெத்தியில விபூதி பூசிக் கிட்டு பம்பரம் விளையாட போய் விடுவாள்.

விளையாட்டில் ஜெயிக்கும் பொழுது….அத்தனை பசங்களுக்கு நடுவுல என் பொண்ணு ஜெயிக்கிறான்னு பெருமையா இருக்கும் செல்லையாவுக்கு.

“ பார்த்தியா….எத்தனை பெண்ணுக்கு இந்த தைரியம் வரும்?!” என்று பெருமிதப்” படுவார்.

பத்து வயசாகும் போது தான் முதல் முறையா வசந்திக்கு ஒரு எண்ணம் வருது.ஆம்பளைன்னா எப்படி இருப்பாங்க?! பொம்பளை எப்படி இருப்பாங்க?!

அண்ணன்கள் எல்லாம் ஏன் அம்மா கூட அக்கா கூட படுக்கிறதில்லை?! எனக்கு கட்டில் இருக்கிறதால தனியா படுக்குறேன்.

ரீசஸ் பீரியடில் ஏன் கமலா ஆனந்தி எல்லாம் ரூமுக்குள்ள போயிடறாங்க.குமார் கண்ணன் தோட்டத்துப் பக்கம் போறாங்க.நான் அங்க போகக் கூடாதுன்னு தடுக்கிறாங்க?! இப்படி யோசிக்கிறாள்.

பக்கத்து வீட்டு உமா அக்காவுக்கு ரெட்டைப் பிள்ளை பிறந்ததைப் பார்க்க அம்மா கூட ஆஸ்பத்திரிக்குப் போகிறாள்.

அப்ப தான் குளிக்க வைத்து உடை மாற்றிக் கொண்டிருந்தார்கள் பிள்ளைகளுக்கு.அங்கே ஆண் பிள்ளை பெண் பிள்ளைன்னு ரெண்டு பேரையும் பார்த்த வசந்தி முதல் முறையாக யோசிக்கிறாள் நான் ஆணா?! பெண்ணா?!

இதை யாரிடம் கேட்பது?! பெண்ணின் பெயரைத்தான் எனக்கு வைத்திருக்கிறார்கள்.அப்ப நான் பெண் தானோ?! ஆனால் எனக்கு ஆனந்தியைப் போல வெட்கமே வருவதில்லையே?!

கமலா ….குமார் அருகில் வந்தால் விலகிச் செல்வது போல‌ எனக்குத் தோணலையே?!

நான் குமார் ஆனந்த் கூட விளையாடத் தான் ஆசைப்படுகிறேன்.

இப்படி யோசித்தாலும் விளையாட்டுப் புத்தியில் அதை அப்படியே விட்டு விட்டாள்.

ஆனால் இயல்பிலேயே புத்திசாலிப் பிள்ளை விரைவிலேயே தன்னை உணர ஆரம்பித்தது.

ஆண் பிள்ளை போல மீசை வளர்ந்ததும் குரல் மாறியதும் உணர்ந்து அப்பாவிடம் சொல்லியது.

“ அப்பா….! உன்கிட்ட பேசணும்.”

“ சொல்லு கண்ணு.என்ன வேணும்?!”

“ ஏன்…பா எனக்கு மீசை வளருதே நீங்க பார்க்கலையா?!

“ அம்மா தான் சொன்னாளே….மஞ்சள் தேய்ச்சு குளி.இல்லைன்னா மீசை முளைக்கும்னு”

“ இல்லப்பா…என் குரல் கூட அண்ணனோட குரல் மாதிரி இருக்கே?!”

“ அப்படியா?! எனக்கு அப்படித் தோணலையே?!சரி.என்னடா வேணும்?!” என்று அருகே வந்தவரை அணைத்துக் கொண்டு வசந்தி மெல்லச் சொல்கிறாள்.

“ அப்பா….! எனக்குப் பயமா இருக்குப்பா.”

எப்பவும் போல அணைத்துக் கொண்டாலும் செல்லையாவும் அதிர்கிறார்.

ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளாமல் வேறு ஏதேதோ பேசி மழுப்பி வீட்டிற்குக் கூட்டிச் செல்கிறார்.

இரவெல்லாம் தூக்கம் வராமல் தவிக்க” ஏன் இப்படி திண்டாடுறீக காப்பி போட்டு தரவா?! இல்லை சூடா பால் தர்றேன்.குடிச்சால் தூக்கம் வரும்.” என்று எழுந்திருக்கப் போன கெங்கம்மாவைத் தடுக்கவும் நினைவின்றிக் கிடக்கிறார் செல்லையா.

கடைசி பிள்ளைன்னு செல்லமா வளர்த்தோம்.ஏதும் தப்பு பண்ணிட்டோமோ?! ஏன் பிள்ளை இப்படி பேசுது?! நாளைக்கு டவுனுக்குப் போய் டாக்டரைப் பார்த்து பேசணும். கெங்கம்மாவையும் கூட்டிட்டுப் போகணும்.

அப்பா கூடவே வந்த வசந்தி அம்மா கையை ஆதரவாக பிடித்துக் கொண்டாள்.

எதுக்கு இங்க வந்தோம்னு புரியாமல் இருந்த கெங்கம்மாவின் காதில் லேசாக விசயத்தைப் போட்டு வைக்கிறார் செல்லையா.

“ ச்சீ…ச்சீ.நீங்க வேற..எதையாவது யோசிச்சுகிட்டு.வாங்க வீட்டுக்குப் போவோம்.”

“ இல்லை கெங்கம்மா.பிள்ளையே சொல்லுது..மா.டாக்டர்கிட்ட கேட்டுடுவோம்”

கெங்கம்மாவுக்கு ஈரக்குலை நடுங்குது.” அம்மா…! மாரியாத்தா! இதென்ன…மா சோதனை?!பச்சை மண்ணு என் பிள்ளை.காப்பாத்தும்மா”.

“ உட்காருங்க செல்லையா.என்ன வசந்தி?! எப்பவும் துரு துருன்னு இருப்ப.இப்ப என்ன பேச்சையே காணோம்?!”

“ டாக்டர்..! உங்ககிட்ட தனியா பேசணும்”

செல்லையாவின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்த டாக்டர் தனி அறைக்கு அழைத்துச் செல்கிறார்.

செல்லையா சொன்னதைக் கேட்டு டாக்டரே அதிர்கிறார்.இருந்தாலும் வெளியே காட்டாமல்,” வசந்தியை அனுப்பி விட்டு நீங்கள் வெளியே‌ இருங்கள்” என்கிறார்.

வசந்தியை உள்ளே அனுப்ப கெங்கம்மாவும் உடன் போக எழுகிறாள்.அவளை கை அமர்த்திய செல்லையா…” நீ போ..மா.டாக்டர் பேசுவார்” என்று‌வசந்தியை அனுப்ப,தயக்கமின்றி கூச்சமின்றி வசந்தி உள்ளே போகிறாள்.

இரண்டு மூன்று முறை பரிசோதித்துப் பார்த்த டாக்டர் சில ஹார்மோன் டெஸ்ட் எடுத்துப் பார்த்து விட்டு,_ உண்மை தான் செல்லையா.வசந்தி பெண் உடலமைப்பில் வளர்ந்தாலும் அவள் பெண்ணாக மட்டும் இல்லை.ஆணைப் போன்ற குரலும் மீசைகள் முடி வளர்ச்சியும் இருக்கு.இனி வளர வளர ஆணாக இருக்கவே விரும்புவாள்.இது அவளுடைய தவறு இல்லை.இது ஹார்மோன் குளறுபடி.

“ ஐயோ….என் குடும்பத்துக்கு இப்படி ஒரு சோதனையா?! மத்தவங்களுக்கு தெரிஞ்சா என்னாகும்?! சாதி சனம் உறவு பேசுமே?! ஏசுமே?!”

கண்ணீர் விட்டு கதறுகிறார்.வசந்தியோ செய்வதறியாது திகைக்கிறாள்.ஆனால் அழவில்லை.

கெங்கம்மா வசந்தியைக் கட்டிக் கொண்டு கண்ணீர் விடுகிறாள்.ஓரிரு நாளில் உறவுகளுக்கும் ஊருக்கும் தெரிந்து விடுகிறது.

ஊரே…. யார் யாருக்கு ஆறுதல் சொல்வது எனத் திகைத்து இருக்கிறது.

உடன் பிறந்த பிள்ளைகளோ பெண்ணோ வசந்தியைப் பார்த்துப் பார்த்து அழுது துடிக்கின்றனர்.

சமைக்காமல் சாப்பிடாமல் வீடே அலங்கோலமாகக் கிடக்க , அங்கே வந்த பி..டி.வாத்தியார் வசந்தியை அழைக்கிறார்.

“ இங்க வா வசந்தி.நீ ஆணா பெண்ணா என்பதெல்லாம் எனக்கு முக்கியமில்லை.அது உனக்கும் முக்கியமா இருக்க வேண்டாம்.இந்த உலகத்தில் மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் அவரவர்க்கான தேவை திறமை புத்திசாலித்தனம் இவைகளால் தான் முன்னேறுகிறோம்.அதுவும் இந்தக் காலத்தில் ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் எல்லோரும் எல்லா துறைகளிலும் சாதிக்கிறோம்.

உடல் வலிமையோ வேறுபாடோ எந்தத் துறையிலும் பார்க்கப்படுவதில்லை.

போலீசில் ஆணும் இருக்கிறார்கள் பெண்ணும் இருக்கிறார்கள்.டாக்டர் ஆணும் உண்டு.பெண்ணும் உண்டு.ஏன் மரம் ஏறுவது கனரக வாகனங்கள் ஓட்டுவது இராணுவம் என்று எல்லாவற்றிலும் இருவரின் பங்கும் இருக்கிறது.

ஏன் அப்படி?! ஏனென்றால் அவரவரின் தேவை புத்திசாலித்தனம் வாய்ப்பு முயற்சிக்குத் தான் பலனே தவிர…நீ ஆணா பெண்ணா என்பதற்கு இல்லை.அப்படி இருக்கும் இன்றைய நாளில் இப்படி ஒரு விசயத்திற்காக கலங்கலாமா?!

இந்த விசயம் தெரியும் முன் நீ எப்படி இருந்தாயோ‌அப்படியே இப்பவும் இரு.நல்லா படி.நல்லா விளையாடு.சுதந்திரமா சந்தோசமா இரு.

இன்னைக்கு ஒவ்வொரு பெற்றோருக்கும் தேவை ஆணோ பெண்ணோ இல்லை.பெற்றவர்களின் மீது பாசம் காட்டும் நல்ல பிள்ளை.உன்னால் உன் பெற்றோரின் மீது பாசம் காட்ட முடியாதா?!

உன் உடன் பிறந்தவர்களின் மீது உனக்கு பாசம் உண்டு தானே?!

அவர்களைப் பற்றியோ இந்த ஊர் உலகத்தைப் பற்றியோ கவலைப்படாதே.கொஞ்ச நாள் உன்னை வித்தியாசமாகப் பார்ப்பர்.அதன் பிறகு அவரவர் வேலை…அவரவர் உலகம் எனப் போய் விடுவர்.உனக்கு நீ தான் முக்கியம்.நீ நினைத்தால் உன்னை‌உயர்த்திக் கொண்டு உன்னால் பலருக்கும் உதவ முடியும்.

ம்….எந்திரி.என்னுடன் வா.மனித பரிணாம வளர்ச்சியின் இந்தக் குளறுபடி மட்டுமில்லை.இன்னும் இது போன்ற வகை வகையான வேறுபாடுகள் நோய்கள் குழப்பங்கள் வரத்தான் செய்யும்.ஆனால் மனிதன் ஒவ்வொரு கால கட்டத்திலும் எல்லாவற்றையும் முறியடித்துத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

உனக்கும் மட்டும் இல்லை வாழும் போராட்டம்.ஒவ்வொரு உயிருக்கும் இருக்கு.உடல் ஊனமுற்றவர்கள் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.கண்ணில்லாமல் படிக்கிறார்கள் ஓவியம் வரைகிறார்கள் காலில்லாமல் கட்டைக்காலால் நடக்கிறார்கள் பரதம் கூட ஆடுகிறார்கள்.ஏன் உன்னைப் போன்ற ஆணும் பெண்ணும் கூட எத்தனேயோ விசயங்களை சாதித்து முன்னேறுகிறார்கள்.

இந்தக் குழப்பம் வருத்தம் எல்லாம் இன்றோடு ஏன் இப்போதே முடியட்டும் என்று தைரியம் சொல்கிறார்.அங்கிருப்பவர்களிடமும்,”அவரவர் அவரவர் வேலையைப் பார்ப்போம்.வசந்தி வசந்தியாகவோ வசந்தனாகவோ தன்னைப் பார்த்துக் கொள்வாள்.யாரும் அவளைப் பார்த்து பச்சாதப்படுவதோ அசூயைப்படுவதோ தேவையில்லை.முடிந்தால் அவளுக்கு இப்படி நல்ல வார்த்தைகள் சொல்லி உதவுவோம்.இல்லை உபத்திரவம் தராமல் விலகி இருப்போம்.”

அவரின் பேச்சு வசந்திக்கு மட்டுமில்லாமல் சுற்றி‌நின்ற அனைவருக்கும் புரிந்தது.குழப்பம் குறைந்து தெளிவு கிடைத்தது.

அதன் பிறகான நாட்கள் வருடங்களில் சங்கடங்களைச் சந்திக்காமல் இல்லை வசந்தி.ஆனால் அந்தச் சங்கடங்களை எல்லாம் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு உயிருக்கும் இருக்கும் போராட்டம் போலவே நினைத்துக் கொண்ட வசந்தி படிப்பில் விளையாட்டில் முன்னேற்றம் அடைந்தாள்.நல்ல வேலையில் சேர்ந்தாள்.இன்று இராணுவத்தில் உயர்ந்த அதிகாரியாக பணியாற்றுகிறாள்.

தனக்குக் கீழே உள்ள வீரர்களுக்கு பயிற்சியளிக்க அதிகாலை எழுந்து தன்னைத் தயார்படுத்திக் கொள்ள யோகாசனங்கள் செய்ய ஆரம்பிக்கிறான் வசந்தன்.

அப்போது அலைபேசி அழைக்க எடுத்தவன்,” சொல்லு…மா.என்ன அதிகாலையிலேயே அழைப்பு?!” என்கிறான்.

“ அப்பா….! ஊரும் உலகும் பெருமிதப்படும்படியாக வசந்தி வசந்தனாக வாழ்ந்து பிள்ளை பெற்றுக் கொண்டால் மட்டும் போதாது…அந்தப் பிள்ளையை‌அப்பப்ப விசாரிக்கவாவது செய்யணும்”

“ ஹ….ஹ…..ஹா! என வாய்விட்டு சிரித்தவன் ,” சரி…மா.ஸாரி மா.உனக்கு என்னடா வேணும்?! அம்மா எங்கே உன்னைப் பேச விட்டு அவ எஸ்கேப் ஆயிட்டாளா?!”

“ அவங்க தான ?! உங்களை விட மோசம்.நீங்க கண்காணாமல் இருக்கீங்க.இவங்க கண்ணுக்கு முன்னாடி இருந்தாலும் எப்ப பாரு சமூக நலம் தான்.கலெக்டருக்கும் இராணுவ அதிகாரிக்கும் பிள்ளையா பிறந்து நான் படுற பாடு இருக்கே?!”

“ நீயும் பாடுபடணும்…மா.கஷ்டப்பட சொல்லலை.கஷ்டப்படறவங்களுக்கு உதவும்.நல்லா படி.சுதந்திரமா இரு.நீ…நீயாக இரு.”

இருபது வருடங்களுக்கு முன்னாடி பி..டி வாத்தியார் பேசியது நினைவில் வர….தன்னை நினைத்துச் சிரித்துக் கொள்கிறான் வசந்தன்.

***

நன்றி.
 

Jemba

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 8, 2021
Messages
5
பாஸிட்டிவ் அப்ரோச் . நல்ல முயற்சி!
 

Ruby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
96
வித்தியாசமான கதைகருவை எடுத்து நேர்மறையாக குடுத்து இருக்கீங்க .. குடும்பத்தின் அரவணைப்பு இருந்தாலே போதும், எதையும் சாதிக்கலாம்... P.T சாரின் பேச்சு👌👌👌 வெற்றி பெற வாழ்த்துகள் 💐💐💐
 
Top