• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பெண்ணாகடம் பா. பிரதாப் - பரிகாரம்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
பரிகாரம்

அன்றைய சூரிய உதயம் மிகவும் ரம்யமாகவே இருந்தது.ஆனால் மாதவனுக்கு மட்டும் ஒவ்வொரு சூரிய உதயமும் சூரிய அஸ்தமனமாகவே தோன்றியது.சர்க்கரை நோயால் பாதித்த மாதவனுக்கு இருபது வருடங்களுக்கு முன்பு காலில் சக்கரம் கட்டிக் கொள்ளாத குறையாக காடுகளிலுள்ள மரங்களைத் தேடி தேடி வெட்டி வியாபாரம் செய்து கொள்ளை லாபம் அடைந்து சுகபோகாமாக வாழ்ந்து வந்தார்.பின்பு யார் கொடுத்த சாபமோ!இன்று சர்க்கரை நோயால் பாதித்து தினமும் மூன்று கிலோமீட்டர் நடக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
இப்பொதுக் கூட தன் மகள் வழி பேத்தியான கிருத்திகாவுடன் நடைப்பயிற்சி சென்றுக் கொண்டிருக்கிறார்.
நடைப்பயிற்சிக்குக் கூட தாத்தாவும் பேத்தியும் ஒன்றாகத்தான் போவார்கள்.இதோ இன்றும்....நடக்கும்போது பேசக் கூடாது என்பது அவர்கள் குடும்ப டாக்டரின் கண்டிப்பான உத்தரவு.இந்த மாதிரி உத்தரவுகளை மீறித்தானே பல நாடுகள் சுதந்திரம் அடைந்தது.!
“தாத்தா,இன்னிக்கு எத்தன கிலோமீட்டர் நடக்கணும்,?
வழக்கம் போல மூணு கிலோமீட்டர் தான் செல்லக்குட்டி.!
“ரெண்டு கிலோமீட்டர் போதும் தாத்தா என மழலைக் குரலில் கூறினாள்.”
“ஏன்.?”
“நடந்த இடத்துலேயே திரும்ப திரும்ப நடக்கறது ரொம்ப போர் தாத்தா....”
சரிம்மா..இன்னும் கொஞ்ச தூரம்தான்.கண்மாய் கரையில இருக்கிற கருப்பு கோயில்ல நாம் கொஞ்ச நேரம் உக்கார்ந்திருக்கலாம்.ஆலமரத்து விழுதுல நீ ஊஞ்சலாடாம் என கூறினார்.கிருத்திகாவும் தன் மழலை சிரிப்பை உதிர்த்தாள்.
கிருத்திகாவிற்கு இப்போது பத்து வயதாகிறது.கிருத்திகா தன் மூன்று வயது வரை அமெரிக்காவில் தன் தாய் தந்தையோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தாள்.கிருத்திகாவின் பெற்றோரான மாலதி-அஸ்வினுக்கு ஏற்பட்ட மனக்கசப்பு சண்டையாக மாறி கோர்ட் வரை சென்றுவிட்டது.கணவனைப் பிரிந்த மாலதி தன் மகளுடன் தந்தை வீடே கதியென !சதிரகிரி மலைக்கு அருகில் உள்ள ‘வத்திராயிருப்பு’ என்ற ஊரில் தஞ்சமடைந்து விட்டாள்.
இவ்வாறாக தன் பேத்தி கிருத்திகவைப் பற்றி அசைப்போட்டவாறே மாதவன் கருப்பு கோயிலை அடைந்தார்.கிருத்திகாவும் ஆலமர விழுதுகளை பிடித்து ஊஞ்சலாட ஆரம்பித்தால்.
“தாயி....பாத்து விளையாடு! என வாஞ்சையாக மாதவன் கூறினார்.
“சரி,தாத்தா என்றாள் கிருத்திகா.
ஆலமரத்தடியில் அமர்ந்திருந்த மாதவன்,ஆலமரத்தை அண்ணாந்து பார்த்தார்.பின்பு தன் கண்களை இமைகளுக்குள் புதைத்துக் கொண்டு தன் கடந்த காலத்திற்குள் மூழ்கினார்.!
1989 வருடம்
அன்று வானில் பங்குனி பௌர்ணமி!அன்று தான் தன் தந்தையின் தொழிலான மரம் வெட்டி விற்கும் வியாபாரத்தை ஆரம்பித்தார் மாதவன்! மாதவன் தொழிற்கல்வி படித்து முடித்த மனிதர்.படித்த படிப்பிற்கு சரியான வேலைக் கிடைக்காததால்,தன் தந்தை ராஜரத்தினத்தின் தொழிலைக் கையில் எடுத்தார்.அவர் கையிலெடுத்தது தந்தையின் தொழிலை மட்டுமல்ல,!மரங்களின் மரண சாசனங்களை எழுதும் ‘கோடரியையும் தான்.
ராஜரத்தினம் தன் வீட்டில் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரைக் கூப்பிட்டுக் கேட்டார் மாதவன்.
“அப்பா...,கணக்கு வழக்கு சரியா இருக்கா.?”
“ம்...,சரியா இருக்குப்பா”என்றார் ராஜரத்தினம்.
“அப்பா நாளைக்கு சாப் டூர் காட்டுல மரம் வெட்டுற வேலை இருக்கு! நான் போயி வேலையை கச்சிதமா முடிச்சிட்டு வந்துடுறேன்.”
“நீ போக வேண்டாம்!நான் போயி வேலையை முடிச்சிட்டு வந்துடுறேன்.
“ஏம்ப்பா.?”
அது ஒண்ணுமில்லை மாதவா! சாப் டூர் காட்டுல புதுசா யாரோ வன இலாகா அதிகாரி வந்துருக்கானாம்.நான்,நம்ம வேலையை முடிச்சிட்டு;அந்த அதிகாரியையும் சரிக்கட்டிட்டு வந்துடுறேன் என்றார்.
மாதவன் பெரிதாக கோயில் மாடு கணக்காக தலையை ஆட்டினார்.
“மாமா..,மணி பத்து ஆகுது! வாங்க சாப்பிடலாம்”என்றாள் ராஜரத்தினத்தின் மருமகளும் மற்றும் மாதவனின் மனைவியுமாகிய விசாலாட்சி.
விசாலாட்சி ஸ்ரீ வில்லிப்புத்தூரில் காகித ஆலை வைத்திருக்கும் காளிதாஸின் மகள் ஆவாள். ராஜரத்தினமும் காளிதாசும் பால்ய நண்பர்கள் என்பதால் மாதவன்-விசாலாட்சி திருமணமும் இனிதே நடைபெற்றது.
மாதவனும் தன் மனைவியின் ஆலோசனையின்படியே தன் தந்தையின் தொழிலை செய்ய ஆரம்பித்தார். திருமணமான ஐந்து ஆண்டுகளில் மாதேஷ் மதுரம் மாலதி என்ற இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்.
தன் மாமியார் மங்களத்தின் மறைவிற்குப் பிறகு வீட்டிலுள்ள அனைவரையும் கண்ணும் கருத்துமாக பார்த்து வருபவள் விசாலாட்சி தான்.
“குழந்தைகள் தூங்கிடிச்சாம்மா.?”
“ம்..,தூங்கிட்டாங்க மாமா...வாங்க நேரத்துலேயே சாப்பிட்டு தூங்குங்க என்றாள்.
மூவரும் இரவு உணவை விழுங்கிவிட்டு கனவு உலகத்திற்கு பயணப்பட்டனர்.
சாப்டூர் !
சாப்டூர் ஜாமீன் என்பது இன்றுவரை மிக பிரபலம்.சுமார் 64,000 ஏக்கர் கொண்டது.சாப்டூர் ஜமீன் குறிப்பாக சதுரகிரி மலைக்காடு இதில் மிக பிரபலம்.
சாப்டூர் வனத்திற்கு தன் வேலையாட்களுடன் சென்று சேர்ந்த்தார் ராஜரத்தினம்.
புது வன இலாகா அதிகாரியை,தன் பண பலத்தோடு சரிக்கட்டினார்.மரங்கள் வேக வேகமாக வெட்டப்பட்டு லாரிக்குள் ஏற்றப்பட்டன.
திடீரென பேய்க்காற்று வீசியது! காற்றின் வேகத்தால் ‘மரங்களெல்லாம் ருத்ர தாண்டவம் ஆடின.கண் இமைக்கும் நேரத்திற்குள் ஒரு வேப்பமரத்தின் கிளை ராஜரத்தினத்தின் தலையில் விழுந்தது.சம்பவ இடத்தில் அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.
இச்செய்தியைக் கேட்ட மாதவன் மற்றும் விசாலாட்சியின் இதயத்தில் “இடி விழுந்த மாதிரி” இருந்தது.
காலமும் அப்படியே உருளத் தொடங்கியது.
ஐப்பசி மாதம்! மாலை நேரம்!
வத்திராயிருப்பில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.”மழைத்துளிகள் மண்ணை முத்தமிட்டுக் கொண்டிருந்ததால் மண்வாசனை பிறந்தது.! வீட்டிற்கு வெளியே காய போட்டிருந்த துணிகளை எடுக்க விசாலாட்சி சென்றுக் கொண்டிருந்தாள்.
“மாம் ...வெயிட் ,நானும் வரேன் உனக்கு ஹெல்ப் பண்றேன் என்றாள் மாலதி.”
“சரி,நீ குடையை எடுத்துட்டு வா! நான் துணியெல்லாம் முழுசா நனையருதுக்குள்ள எடுத்துட்டு இருக்கேன்.”
“ஓ.கே.,மாம்! நான் சீக்கிரம் வரேன்.”
மாலதி வீட்டிற்குள் சென்று குடையை எடுத்தாள்.அடுத்த நொடியே பலத்த இடி சத்தம் கேட்டது.!இந்த சத்தத்தோடு.....ஆ...என்ற அலறல் சத்தமும் வீட்டிற்கு வெளியே கேட்டது.
மாலதி பதறி அடித்துக்கொண்டு வெளியே வந்து பார்த்தாள்.வீட்டிற்கு வெளியே இருந்த மரக்கிளையில் இடி இறங்கியதில்; மரக்கிளை எரிந்துகொண்டே விசாலாட்சியின் மேல் விழுந்ததால் அவள் உடல் கருகி கரிக்கட்டையாகி கிடந்தாள். ஒரு கைப்பிடி சாம்பலுக்கு மேல் ஒன்றும் மிஞ்சவில்லை.!
தன் அம்மாவின் நிலையக் கண்ட அதிர்ச்சியில் மாலதி மயங்கிவிட்டாள்.
செய்தியறிந்த மாதவனுக்கு உலகமே இருண்டது போல இருந்தது.!
சில மாதங்களுக்கு பிறகு,மாதவன்...தன் மகன் மாதேஷிடம் தன் மரப்பட்டறையை ஒப்படைத்தார்.மாதேஷ் தன் தந்தையைப்போல மரம் வெட்டி விற்கும் வேலையை செய்து வந்தான்.
தேசிய நெடுஞ்சாலை!
மாதேஷ் தேசிய நெடுஞ்சாலையில் தன் மாருதிக் காரில் பயணித்துக் கொண்டிருந்தான்.அவன் காருக்கு முன்,பனை மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதில் மாதேஷின் கார் மோதி அப்பளமாக நொறுங்கியது.சம்பவ இடத்திலேயே மாதேஷின் உயிர் பிரிந்தது.
மாதவனுக்கு அடிமேல் அடி விழுந்த மாதிரி இருந்தது.தன் வீட்டில் சாவுகள் விழவே!அதிர்ச்சியடைந்த மாதவன் எவ்வளவோ மாந்திரீகம் மற்றும் பரிகாரம் செய்தும் அவருக்கு மன நிம்மதி ஏற்படவில்லை.
ஒருவேளை தன் பூர்வீகம் சரியில்லையோ.?என யோசித்த மாதவன்,தனக்கென ஒரே உறவாக இருந்த....தன் மகள் மாலதிக்கு திருமணம் செய்து வைத்து அமேரிக்கா அனுப்பி வைத்தார்.
தன் மகளும் சில வருடங்கள் நன்றாக வாழ்ந்து; பின் தன் கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக; கிருத்திகாவுடன் வத்திராயிருப்பிலேயே தங்கிவிட்டாள்.இவ்வாறு தன் மகளின் வாழ்வை எண்ணி மாதவன் பலமுறை கண்ணீர் சிந்தியதுண்டு!
இப்படியாக மாதவன் கண்களை மூடி தன் கடந்த காலத்தைப்பற்றி யோசித்துக்கொண்டிருக்கையில், ஆலமரத்தின் பழமொன்று அவர் நெற்றியில் விழவே!அவர் சட்டென நிகழ்காலத்திற்கு திரும்பினார்.! பின்பு, கிருத்திகா வேப்ப மாற விதைகளை சேகரித்துக் கொண்டிருந்தாள்.
சற்றும் எதிர்பாராத வகையில் அங்கு ஒரு கார் வந்து நின்றது! காரிலிருந்து இறங்கிய நபர் வெள்ளை வேட்டி மற்றும் வெள்ளை ஜிப்பா அணிந்துகொண்டிருந்தார். அவர் பார்ப்பதற்கு அறுபது வயது உடையவராக தோன்றினார்.கருப்பு கோயிலை கூர்மையாக பார்த்தார்.பின்பு,கிருத்திகா என்கிற மாதவனின் பேத்தியை அழைத்தார்.கிருத்திகா மிரண்டவாறே தன் தாத்தாவின் வேட்டியை இறுகப் பற்றிக் கொண்டாள்.
“பாப்பா...பயப்படாதே! இந்தக் கோயில் பூசாரி இல்லையா.?” என புன்னகையோடு கேட்டார்.
கிருத்திகா திருவிழாவில் காணாமல்போன குழந்தையைப்போல” பேந்த பேந்த விழித்தாள்.அவள் பயப்படுவதை உணர்ந்த அம்மனிதர் பின்பு,மாதவனிடம் பேச ஆரம்பித்தார்.
“ ஐயா! இந்தக்கோயில் பூசாரி இல்லையா?எனக் கேட்டார்.
சர்க்கரை நோயின் பாதிப்பு மற்றும் முதுமையின் காரணமாக பார்வைத்திறன் குறைந்த மாதவன்,தன் வலது கையை கூரையாக்கி அந்த நபரை கூர்ந்து கவனித்தார்.
“நீ.....நீ ஞான சுந்தரம் தானே?”என மாதவன் அந்த நபரிடம் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியோடு கேட்டார்.
“ஆமாம்”.
“டேய் ! நான்தாண்டா மாதவன்.”
“மாதவா! நீயாடா இப்படி ஆகிட்ட?” மாதவனும் ஞான சுந்தரமும் பள்ளி பருவத்தில் ஒன்றாக படித்தவர்கள்.தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்ற ஞானசுந்தரம்,தன் பனி நிமித்தம் காரணமாக முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தன் குடும்பத்துடன் சென்னைக்கு சென்றுவிட்டார்.முப்பது வருடம் கழித்து இப்போதுதான் தன் ஊருக்கு வந்துள்ளார்.
“ஆமாண்டா! ஞானம்,எல்லாம் என் தலைவிதி ! அதுசரி நீ....எங்கடா இந்தப் பக்கம்?”என்று மாதவன் ஆரம்பித்தார்.
“அது ஒண்ணுமில்லைடா ! ஒரு வேலை விஷயமா மதுரைக்கு வந்தேன் ! அப்படியே எங்க குலதெய்வமான கருப்பு சாமியை கும்பிட்டிட்டு போகலாம்னு வந்தேன்! நீ ஏண்டா இப்படி ஆகிட்ட?”
“அட என்னன்னு சொல்வேன் ஞானம்.... நான் ஒரு பாழாப்போன பொறப்பா போயிட்டேன்.”மாதவன் குரல் உடைந்து தொண்டை கமறியது.
“என்னடா சிக்கல்...எதனால இப்படி மனசு தளர்ந்து போய் பேசுற?”
“உசுரோட இருக்கேனே....அதுவே பெருசு.”
“உளராம விஷயத்தை சொல்.ஞான சுந்தரம்,மாதவன் தன் பால்ய நண்பன் என்பதால் உரிமையோடு பேசினார்.
“மாதவன் தன் குடும்பத்தில் நடந்த அனைத்து விஷயங்களையும் குறிப்பாக, மரங்களால் ஏற்பட்ட தொடர் மரணங்களையும் மன அழுத்தம் தாங்காமல் படபடவென பொரிந்து தள்ளிவிட்டார்.அதை எல்லாம் கேட்ட ஞான சுந்தரத்திற்கு பேரதிர்ச்சி! மௌனமாகி விட்டார்.”
“என்னடா ஞானம்...என்ன பதிலைக் காணோம்? என கண்ணீரோடு மாதவன் கேட்டார்.
“இல்ல...மரங்கள் மூலமாக மர்ம சாவு அப்படின்னு நீ சொன்ன தகவல்களை நினைச்சேன்.....அதான்.’
“இப்படி நம்ப முடியாத விஷயங்கள் எப்படி நடந்துச்சுன்னு தெரியல.எல்லாம் கண் இமைக்கும் நேரத்துல நடந்து போச்சு!”
“டேய் மாதவா ! உங்க குடும்பத்துல நீங்களெல்லாம் மரத்தை வெட்டி வியாபாரம் செஞ்சதாலதான் இப்படி ஆகியிருக்கும்! இது மரங்கள் விட்ட சாபமா இருக்கும் என்றார் ஞான சுந்தரம்.”
“என்னது ! மரங்கள் சாபமிடுமா? என மாதவன் அதிர்ச்சியோடு ஞான சுந்தரத்திடம் கேள்வி கேட்டார்.”
“என்னடா இப்படி கேட்டுட்ட...நம் முன்னோர்கள் அபூர்வ மருத்துவ குணமுடைய மரம்,செடி –கொடிகளை ‘தல விருட்சம்’ என்ற பெயரில் ஆலயங்களில் நட்டு வளர்த்தாங்க! இதுல இருந்தே மரம்,செடி –கொடி எவ்வளவு சக்தி வாய்ந்ததுன்னு தெரிஞ்சுக்கோ! “பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே!” மரங்களில் நான் ‘அரசமரம்’ அப்படிங்குறார்!
“சரிடா! இப்ப என்ன சொல்ல வர்றே?” மாதவன் பொட்டில் அடித்த மாதிரி கேட்டுவிட்டார்.
“மரங்களால ஏற்பட்ட சாபம்! மரங்களால தான் தீரும்” பச்சை மரத்தை வெட்டுபவர்களுக்கு வந்து சேரும் பாவங்கள் அப்படின்னு ‘விருட்ச சாஸ்திரம் ‘ ஒரு பட்டியலே போடுது. அதாவது அரச மரத்தை வெட்டினால் அற்ப ஆயுள் ,ஆழ மரத்தை வெட்டினால் வம்சம் அழியும், எலுமிச்சை மரத்தை வெட்டினால் இடியால் மரணம்,புளிய மரத்தை வெட்டினால் மாரடைப்பால் மரணம்,புங்க மரத்தை வெட்டினால் தீராத நோய் வரும் இப்படி இந்த பட்டியல் நீளுது! என்றார் ஞான சுந்தரம்.
“இதுக்கு என்னடா பரிகாரம்?” மாதவன் கண்ணீர் வடியக் கேட்டார்.
“ மாதவா! நம் வாழ்க்கை தேவைக்காக மரங்களை வெட்டுவதற்கும், அதையே வியாபாரமாகச் செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு.”மரங்களால உங்க குடும்பத்துக்கு ஏற்பட்ட சாபம்,மரங்களாலதான் தீரும்.” நீ உன் மரம் வெட்டி விற்கும் வியாபாரத்தை நிறுத்திட்டு, மரக்கன்று வளர்த்து விற்கும் வியாபாரம் செய்!இதனால லாபம் குறைவாக வந்தாலும்.....மரங்களால ஏற்பட்ட சாபம் தீரும். நீ உன் வம்சம் நல்ல படியாக வாழும் என்றார் ஞானசுந்தரம்.
“ ஞானம்,”மரங்களை வெட்டி விற்கிறது பாவம் என்று நீ சொல்வது உண்மையோ,பொய்யோ எனக்கு தெரியல!” ஆனால்,நீ சொல்ற மாதிரி நான் செய்றேன்.என் மகளும் பேத்தியும் நல்ல படியாக அவ புருஷனோடுசேர்ந்து வாழ்ந்தாலே போதும் என்றார் மாதவன்.”
மாதவா,”நாம் உயிர் வாழறதுக்கு இயற்கையில் இருந்து ஒன்றைப் பெறலாம்.ஆனால்,நம்ம குழந்தைகள் உயிர் வாழ அங்கே இயற்கையை மிச்சம் வைக்கணும்.இயற்கை என்பது அடுத்த தலைமுறைக்கான சொத்து.அதை அனுபவிக்க மட்டுமே நமக்கு உரிமை உண்டு அழிக்க அல்ல.”
“நாம எந்த சிந்தனையும் இல்லாமல் இயற்கையின் மீது பேராசைக் கொண்டு நடத்தும் வெறியாட்டம்,அடுத்த தலைமுறையை சவக்குழியில நிரந்தரமா தள்ளிவிடும்.” என சொல்லிவிட்டு தன் நண்பனுக்கு ஆறுதல் கூறினார் ஞான சுந்தரம்.
“ஞானம்,நீ சொன்ன மாதிரியே சீக்கிரமே என் மரப்பட்டறையை மூடிட்டு; ஒரு நர்சரி கார்டன் ஆரம்பிக்கிறேன்”என்றார் மாதவன்.அதனை ஆமோதிப்பது போல காற்றில் கருப்பு கோயிலின் மணிகள் ஓசை எழுப்பியது!”
கிருத்திகா தான் பொறுக்கிய வேப்பங்கொட்டைகளைக் கொண்டு விதை பந்துகள் செய்துக் கொண்டிருந்தாள்.”

***

நன்றி.
 
Top