• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மனசு - 6

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
768
148
93
Jaffna

பகுதி 6



இந்திரா கொடுத்த தேநீரை பருகிவிட்டு வயலுக்கு சென்ற ராமசாமி, காலை எட்டு முப்பது மணியளவில் வீடு திரும்பியவர், முன்பிருந்த திண்ணையில் சாய்ந்து, "இந்தி, எங்க இருக்க?" என இடதுபுற நெஞ்சை கையினால் அழுத்தி்ப் பிடித்தவாறு குரல் குடுத்தார்.

விபரம் புரியாமல் உள்ளிருந்த இந்திரா, "இங்க தாங்க நிக்கிறேன். என்ன, இன்னைக்கு போன கையோட திரும்பிட்டிங்க?" என்றவாறு வந்தவர் கண்களில், நெஞ்சினை அழுத்திப் பிடித்திருந்த கணவன் முகமானது வியர்த்துக் கொட்டியிருப்பதைக் கண்டதும்,

"என்னாச்சுங்க? எதுக்கு இப்பிடி வேர்க்குது?" என்றார் பதட்டமாக.

"தெரியல இந்தி, இடது புறம் ரொம்ப அழுத்தி பிடிக்கிறது போல வலியா இருக்கு." என்றதும்,

"இருங்க வரேன்." என்றவாறு உள்ளே ஓடினார்.

அடுப்பினில் கேத்திலுடன் நீர் சுட்டபடி இருக்க, அதை ஒரு டம்ளரில் ஊத்திக் கொண்டு வந்து, "இதை குடிங்க, நான் இஞ்சி பிளேன் டீ கொண்டு வரேன்." என உள்ளே மீண்டும் ஓடியவர், மறு நிமிடம் கையில் இஞ்சி பிளேன் டீயுடன் நின்றார்.

"சுடுதண்ணி குடிச்சீங்களா? இதையும் மெல்லமா குடியுங்க." என பக்கத்தில் இருந்து குடிக்க வைத்தவாறு, அவரது இடது பக்க நெஞ்சினைத் தடவி கெடுத்தார்.

அவர் அதை குடித்து முடித்ததும், "என்னங்க செய்யுது? இன்னும் வலிக்குதா? ஆஸ்பத்திரிக்கு போவோமா?" என்றார் இன்னமும் பதட்டம் விலகாது.

மனைவியின் கையினை ஆதரவாக பற்றி, உதட்டினில் குறுநகை மின்ன, "இப்போ எதுவும் இல்ல இந்தி. வாய்வு பிடிப்பு போல. நானும் பயந்து, உன்னையும் நல்லா பயமுறுத்திட்டேன். கொஞ்சம் படுத்திருந்துட்டு வயலுக்கு போகவாம்மா?" என்றார்.

"என்னங்க இது கேள்வி? இன்னைக்கு நீங்க நல்லா தூங்குங்க. நாளைக்கு வேலைக்கு போயிக்கலாம். உடம்பு வருத்தத்தோட சம்பாதிச்சு தான்னு சொல்லுற அளவுக்கு, நான் என்ன கொடுமைக்காரியா? உள்ள போய் பாயை போடுறன், வந்து படுத்துக்கங்க." என கணவன் மேல் செல்லமாக கோபப்பட்டவர், உள்ளே சென்று பாயை விரிக்கும் நேரம், வெளியில் கணவனுடன் வேறு ஒரு ஆண் பெரிதாக பேசுவது கேட்டது.

அந்த குரலில் யாரென உணர்ந்த இந்திரா, "ஐயோ! இவருக்கு உடம்பு முடியாத நேரம் வந்து, இந்த கனகரெட்ணம் சத்தம் போடுறானே..." என வெளியே ஓடினார். அவனை தானே சமாளிப்பதற்கு.

ஆம், கனகரெட்ணம் இந்த ஊரில் செல்வந்ததன். முன்னர் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவன், சீட்டு பிடித்து அதில் வரும் கட்டு பணத்தினை வட்டிக்கு விட்டு காசு பார்ப்பவன். ஊரில் உள்ள பாதி நிலத்திற்கு சொந்தக்காரனும் கூட.

ராமசாமி போன்று, வறிய நிலையில் இருப்பவர்களுக்கு மாத்திரம் தான் வட்டிக்கு பணம் கொடுப்பான். அவர்களால் தான் பணத்தினை தரமுடியாது என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். ஒரு தொகை பணத்தினை கொடுத்துவிட்டு, பல வட்டி பெயர்களைக் கூறி அவர்கள் நிலத்தினை தன் பேருக்கு மாற்றிக்கொள்வான்.

ராமசாமியிடம் சிறு தோட்ட நிலமும், இருக்கும் குடிசை வீட்டு நிலமும் தான் இப்போது சொத்தென்று இருப்பது.

இங்கு குடி வந்த புதிதில் கனகரெட்ணத்தின் உண்மை முகம் தெரியாமல், காடாய் கிடந்த நிலத்தினை வீடாய் மாற்றுவதற்காக சிறு தொகை பணம் வாங்கியிருந்தார்.

இரண்டு வருட காலம் அதை கட்டாததனால், வட்டிக்கு வட்டி குட்டி போட்டு, அவரையே முழுங்குமளவுக்கு கடன் தொகை அதிகரித்தது. வாரம் ஒரு தடவை வந்து, கத்தி விட்டு செல்வது வழமையானது.

ரமசாமிக்கு அந்தளவு பெரிய தொகையினை தன்னால் திரும்ப கொடுக்க முடியுமா என சந்தேகம் தான். இருந்தும் சிறுது சிறுதாக கட்டிவிடுகிறேன் என்றதற்கு, "நீ கொஞ்சம் கொஞ்சமாக தரும் பணத்திற்கு மேலாக வட்டி வருமே..." என அந்த பேச்சுக்கு முற்று போட்டவன்,

"வரும் கிழமை, மொத்த பணமும் என் கைக்கு வரவேண்டும். இல்லை, உனக்கு சொந்தமான நிலத்தினை என் பேருக்கு மாற்றவேண்டும்." என கட்டன் ரைட்டாக பேசிவிட்டு சென்றவன், சொன்னது போல தன்னுடன் இன்னும் சிலரைக் கூட்டி வந்திருந்தான்.

கணவனை அவர்களுடன் பேசவிடாது, தான் பேசலாம் என வெளியே போக, அவனோ சர்வ சாதாரணமாக ராமசாமியினை, "எப்பிடி இருக்க ராமசாமி?" என்று தோளினைத் தட்டியவன், திண்ணை மேட்டின் மேல் அனுமதி இல்லாமலே அமர்ந்தான்.

"வீட்டில எல்லாரும் சுகமா இருக்காங்களா?" என்று காலுக்கு மேல் கால் போட்டு தோரணையோடு கேட்டவன் கேள்வி வித்தியாசமாக இருந்தது.

வழக்கமாக ஜீன்ஸ் டிசர்ட்டுடன் வருபவன், இன்று வெள்ளை வேட்டி சட்டையில் வந்திருந்தான். முகத்தினில் வெட்கம் வேறு, அதை விட கொடுமை ராமசாமி வீட்டு நலன் விசாரிப்பது.

"பரவாயில்லை கனகரெட்ணம்." என்றவரிடம்,

"அப்புறம் மாமா, ஒரு வேண்டுகோள். இனி பெயர் எல்லாம் சொல்லி கூப்பிட வேண்டாம். மாப்பிள்ளைன்னே கூப்பிடுங்க." என்றவனைப் புரியாத பார்வை பார்த்தனர் தம்பதியினர்.

"டேய் எருமைங்களா எதுக்குடா உங்களை கூட்டிட்டு வந்தேன்? விஷயத்தை சொல்லுங்கடா! நானே சொன்னா எனக்கு வெட்கமா இருக்கும்ல..." என நகம் கடித்தவனைப் பார்க்க, படு கண்றாவியாக இருந்தது.

இருந்தும் எதற்கு வெட்கப்படுகிறான் என்பதன் காரணம் தெரிந்தாக வேண்டும் என அமைதியாக இருந்தனர்.

அவனுடன் வந்த இரு தடியர்களில் ஒருவன், "என்ன ராமசாமி, அவரு தான் விளக்கமா சொல்லுறார்ல மாப்பிள்ளைனு... இதுக்கு மேல உனக்கு விளக்கம் வேணுமா என்ன? உன் மூத்த பொண்ண அவருக்கு கட்டி வைக்க கேக்குறாருப்பா." என்றான்.

இந்திராவும் ராமசாமியும் அதிர்ந்தது ஒரு நொடிதான். உடனே தன்னை சரி செய்துகொண்டு,

"என்ன தம்பி, தமாஸ் பண்ணிட்டு விளையாடுற நேரமா இது? இன்னும் ஒரு மாசம் பொறுத்துக்கங்க தம்பி, எப்பிடியாவது உங்க கடனை அடைச்சிடுறன்." என்றார்.

"அது எல்லாம் வேண்டாம் மாமா. உங்க பொண்ணை மட்டும் எனக்கு கொடுத்துடுங்க. உங்க பொண்ணையும் குடுத்து சீரும் குடுக்க வேண்டிய தேவையும் இருக்காது. எனக்கு தரவேண்டிய பணமும் தர தேவையில்லை. நீங்க மாமான்னு ஆனதுக்கப்புறம், எப்பிடி மாமா உங்ககிட்ட கடனை திருப்ப கேக்க முடியும்? மருமகன் என்கிறதே மகனுக்கு அடுத்த படி தானே? உங்க கடனை அடைக்கிற பொறுப்பில இருக்கிற நானே, எப்பிடி மாமா உங்ககிட்ட கடனை கேட்பேன்?" என்று வசனம் பேசியவனையே அதிர்ந்து பார்த்து நின்றனர் இருவரும்.

இருக்காதா பின்னே?

இந்த மாதிரி கஷ்டத்தில் இருக்கும் பெற்றோர் அதிர்ச்சியுறாமல் என்ன செய்ய முடியும்? பெண் கேட்டு வருவதற்கும் ஒரு நியாயம் வேண்டாமா?

தன் தங்கை வயதை ஒத்திருக்கும் ஒருவன், மனசாட்சியே இல்லாமல், சின்னை பெண்ணை தனக்கு தாரை வார்த்து தா என்று கேட்டால் அவரால் என்ன செய்ய முடியும்?

ஆம், கனகரெட்ணம் வயதே நாற்பதிற்கு அதிகமிருக்கும். அதுவும் அவன் திருமணம் முடித்து, வீட்டில் குத்துக் கல்லாட்டம் ஒரு மனைவியை வைத்துக்கொண்டு, இரண்டாம் தாரமாக பெண் கேட்டு வந்திருக்கிறான். இதை நினைக்கும் போது உள்ளே கோபத்தனல் திகுதிகு என்று எரிந்தது.

கோபப்பட்டால் நிதானம் தவறிவிடும். பின், நிலமை கெட்டு கடனை இப்போதே வை என்று விட்டானேயானால், எங்கு உடனே பணத்திற்கு போவது என நினைத்தவராய், கோபத்தினை மறைத்தார்.

"என்ன தம்பி பேசுறீங்க? அவ சின்ன பொண்ணு, படிச்சிட்டு இருக்கா. இப்போதைக்கு அவளை கட்டி வைக்கிறதா எண்ணம் எனக்கில்ல. அதோட வெளி மனுஷங்களுக்கு, என் பொண்ண கட்டி அனுப்ப எனக்கு இஷ்டம் இல்லை. படிப்பு முடிய என் தங்கை பையனுக்கு கட்டி வைக்கிறதா இருக்கேன். உங்களுக்கு தான் கல்யாணமாகிடுத்தே தம்பி, பிறகு என்ன இன்னொரு கல்யாணம்?" என்று நாசுக்காக மறுத்தார் ராமசாமி.

"என்ன மாமா சொல்லுறிங்க? உங்க பொண்ணு சின்ன பொண்ணா? அவளுக்கு தான் பதினெட்டு முடிஞ்சு பத்தொன்பது ஆகிருக்கணுமே? படிக்கிறதா இருந்தா என் சம்சாரமாகிட்டு படிக்கட்டும். நான் என்ன வேண்டாம்னா சொல்ல போறேன்? என் செலவிலயே அவ ஆசைப்படுற படிப்பை படிக்கட்டும். என் சம்சாரம் படிச்சவனு சொல்லுறதில எனக்கும் பெருமை தானே?!

அப்புறம் என் பொஞ்சாதியப்பத்தி கவலையே வேண்டாம் மாமா. அவ ஒரு மலடி, கல்யாணம் செய்து பதினெட்டு வருஷம் முடிஞ்சு போச்சு, ஒரு புள்ளை பெத்து தர முடியுதா அவளால? என் பெயர் சொல்ல எனக்கொரு வாரிசு வேண்டாமா? அதனால தான்... உங்க பொண்ணு ரொம்ப அழகு வேற... அவளை மாதிரி எனக்கு அழகா ஒரு புள்ளை பெத்து தருவாள்ல? அழகா பிள்ளை பிறந்திச்சுனா எனக்கும் பெருமை தானே!?" என வெக்கப்பட்டவனைப் பார்த்து கொதிநிலைக்கே போய் விட்டார் இந்திரா.

'என்னது! என் பொண்ணு இவனுக்கு மனைவியா? சரியான நேரம் குழந்தை இருந்திருந்தா, என் பொண்ணு வயசில் இவனுக்கும் பிள்ளை இருந்திருக்கும்.' அப்பா ஸ்தானத்தில என் பெண்ணை நினைத்து பார்க்க வேண்டியவன், தன்னோடு சேர்த்து படுக்கையினைப் பகிரும் எண்ணத்துடன் பார்ப்பதை பொறுக்காதவராய், "தம்பி!" என்றார் பெரிதாக கத்தி.

"கொஞ்சமாச்சும் மனசாட்சிபடி நடந்துக்கங்க. உங்களுக்கு ஒரு மகள் இருந்தா, இவளோட வயசுதான் வரும். அப்பிடியான வயசில இருக்கிற என் பொண்ண உங்களுக்கு சம்மந்தம் பேசுறீங்களே, உங்களுக்கே இது அபத்தமா தெரியல." என்றார் பெரிதாக.

அவரது குரலில் அக்கம் பக்கத்து வீட்டவர்கள் குமிந்து, நடப்பதை அறிந்து ஆளாளுக்கு நியாயம் பேச, அத்தனை நியாயங்களும் கனகரெட்ணத்திற்கு எதிராக இருப்பதைத் தன் காதுபடக் கேட்டவன், "கொஞ்சம் நிறுத்துறிங்களா உங்க நியாயத்தை... நான் என்ன தப்பா கேட்டுட்டேன்.? ஊர் உலகத்தில நடக்காததையா நான் கேட்டேன்?

எனக்கோ என் பெயர் சொல்ல வாரிசில்லை. அதனால மறு கல்யாணம் எல்லாரும் பண்ணிக்கிறது போல நானும் கேட்டுட்டேன். ஏன் பிள்ளையில்லாதவங்க, பெயர் சொல்ல ஒரு வாரிசு வேணும் எங்கிறதுக்காக அடுத்த கல்யாணம் பண்ணிக்கிறது இல்லையா? ஏதோ, இது நான் மட்டும்தான் செய்யிறது போல கூடி நின்னு என்ன தப்பு சொல்லுறீங்க." என திமிராக கேட்டவனை, எரிப்பது போல் முறைத்தவர்,

"தம்பி, நீங்க ரெண்டாந்தாரமா கட்டிக்க நினைக்கிறது தப்பில்ல. அதுக்கு ஒரு வயசு வரம்பில்லாமலா பொண்ணு வந்து கேப்பீங்க? என் பொண்ணை உங்களுக்கு கட்டி தரமுடியாது தம்பி. ஊர் வயித்தில அடிச்சு, உங்க வயித்த நிரப்பின பாவம் தான் உங்களுக்கு குழந்தையில்லாமல் போனதுக்கு காரணமே. பிள்ளை இல்லாம போனதுக்கு உங்க சம்சாரத்துக்கு தான் குறை இருக்கும்னு இல்ல. உங்க சம்சாரத்து மேல முழு பழியை தூக்கி போடாம, ஆஸ்பத்திரியில நீங்களும் போய் சோதிச்சு பாருங்க. சில வேளை உங்களிலயும் குறை இருக்கலாம்." என்று பேசினார் இந்திரா.

கோபத்தில் உதட்டினை கோணலாக்கி கேலி நகை சிந்தியவன், தலையினை மேலும் கீழுமாக அசைத்தவாறு, "சோத்துக்கு வெளியில தட்டு ஏந்தினாலும் திமிர்ல உங்கிட்டதான் மத்தவங்க தட்டு ஏந்தணும் போல? என்ன ஒரு திமிரு..." என பற்களை நறநற என கடித்தவாறு வார்த்தையைத் துப்பியவன்,

"ஆமா, இவங்க லட்சம் லட்சமா பணத்தை பேங்க்ல சேத்து வச்சிருக்காங்க, இவளோட பெண்ணை டாக்டருக்கும் என்ஜினியருக்கும் கட்டி குடுக்க போறாங்களாம்? ஓ! மறந்திட்டேன் பாத்தியா? உன் புருஷன், தங்கை மகனை உன் பொண்ணுக்கு கட்டி வைக்க போறதா சொன்னான்ல? அந்த தைரியத்தில தானே இந்த பேச்சு பேசுற?உன் நாத்தனார் புருஷனும் எங்கிட்ட கடன் வாங்கினவன் தான்டி.

அவனுக்கு வைக்கிற விதத்தில வேட்டு வைச்சேன்னா, எப்பிடி உன் பொண்ணு கழுத்தில அவன் தாலி கட்டுறான்னு பாக்கிறேன். ஒரு மாதத்தில என்னோட கடனை அடைச்சிடுறேன் என்றானே உன் புருஷன். ஒரு மாசமில்ல, ஆறு மாசம் உங்களுக்கு டைம் நான் தரேன். அதுக்குள்ள என் கடனை அடைச்சிட்டீங்கனா, உன் பொண்ணை எவனுக்கு வேணும்னாலும் உன் இஷ்டப்படி கட்டுக்கொடு.

ஆறு மாசத்தில ஒரு நாள் கூடினாலும் யாரோட அனுமதியும் எனக்கு தேவையில்ல. இந்த வேடிக்கை பாக்கிற ஊரு முன்னாடி தூக்கிட்டு போய் அவ கழுத்தில தாலியை கட்டி என்கூடவே வச்சுப்பேன். ஆனா ஒன்னு மட்டும் நிச்சயமா தெரியும். ஆறு மாசமில்லை, ஆறு வருஷமே ஆனாலும் என்கிட்ட பட்ட கடனை உன்னால திரும்ப தரமுடியாது. உன் பொண்ணுக்கு நான்தான்டி மாப்பிள்ளை!

என்ன சொன்ன? என்னை ஆஸ்பத்திரிக்கு போய் சோதிச்சு பாக்க சொன்னல்ல... ஆறு மாசம் போகட்டுமே, சரியா எண்ணி ஒரே வருஷத்தில உன் பேரனை உன் கையில தந்து, நான் ஆம்பிள எங்கிறத நிருபிக்கிறேன்." என்று வெட்கமே இல்லாது மீசையை முறுக்கியவன்,

"வருங்கால மாமியாராச்சே, மரியாதையா பேசலாம்னு பார்த்தா சும்மா என்னை கடுப்பேத்தி, இந்த மாதிரி எல்லாம் பேச வச்சிட்ட. ஏன் மாமியரே, என்னை நல்லவன் மாதிரி பொய்க்காக கூட பேச விடமாட்டிங்களா?" என்றான்.

"தம்பி, தப்பா எடுக்காதிங்க. அவ ஏதோ ஆதங்கத்தில பேசிட்டா. ஆறு மாதத்துக்குள்ள உங்க கடனை நான் அடைச்சிடுறேன். இப்போ நீங்க கிளம்புங்க. அக்கம் பக்கத்தில வித்தியாசமா எங்கள பாக்கிறாங்க தம்பி, தயவு செய்து கிளம்புங்க." என இரு கைகளையும் எடுத்து கும்பிட்டார் ராமசாமி.

"இது மரியாதை மாமா! அத விட்டுட்டு இப்பிடி ஊரை கூட்டி அசிங்கபடுத்துறது போல சத்தம் போட்டா...? உங்க சம்சாரத்துக்கு சொல்லி வைங்க மாமா, வருங்கால மருமகனை இந்த மாதிரி எல்லாம் தரக்குறைவா பேசக்கூடாதுன்னு." என்று சிரித்தவாறு கூறியவன், "அப்ப நான் வரேன் மாமா. மாமியாரே, உங்களுக்கும் தான். அப்புறம் மாமியாருக்கு தரவேண்டிய மரியாதையை நான் தரலன்னு சொல்ல கூடாது. நான் போயிட்டு வரேன். என் சம்சாரத்தையும் பத்திரமா பாத்துக்கோங்க. அப்புறம் எங்க, என்னோட நாத்தனாரை காணல." என்று வீட்டினுள் எட்டிப்பார்த்தான்.

அங்கு நடப்பவை அனைத்தையும் மருண்ட விழிகளுடன், வாசல் கதவோடு ஒட்டி நின்று ஜனனி பார்ப்பது தெரிந்தது.

"குட்டி நாத்தனாரே! என்ன, அத்தானை ஒளிஞ்சு நிண்டு ரசிக்கிறியோ? அக்காவை நான் ரொம்ப கேட்டதா சொல்லு. நான் வரேன். வாங்கடா போகலாம், இங்க இனி ஆறு மாசத்துக்கு அப்புறம் தான் வேலை.இந்த ஆறு மாசமும் எப்பிடி போகப்போகுதோ?" என கூறியவாறு போனவனை கோபமாக பார்த்திருந்தார் இந்திரா.

"இந்த கிழட்டு நாய்க்கு என்ன தைரியம் பாருங்க." என்றார்.

"எதுக்கு இந்தி அவன்கிட்ட வாய குடுத்த? நான் ஏதாவது நாசுக்கா சொல்லி அனுப்பியிருப்பேனே..."

"இவனுக்கு என்ன சொன்னாலும் புத்தியில ஏறாதுங்க. முதல்ல பிச்சை எடுத்தாது, இவனோட கடனை அடைக்கணும்." என்றவர் பேச்சை ஆமோதிப்பதாய் தலையாட்டியவருக்கு மீண்டும் நெஞ்சு வலி வர, நெஞ்சினை ஒற்றைக் கையால் இறுக அழுத்தியபடி முற்றத்திலேயே அமர்ந்து விட்டார்.

"அப்பா! என்னப்பா செய்யிது?" என்று ஜனனி பயந்தவாறு கேட்க,

நெஞ்சு வலியை முகத்தில் காட்டியவாறு, ‘தண்ணி வேண்டும்.’ என்று ராமசாமி சைகை செய்யும் முன்னர், சுடுநீரை டம்ளரில் வார்த்து கொடுத்தார். வாங்கி ஒரு மிடறு குடித்தவர், இந்திராவின் கைகளை அழுத்தி பிடித்தவாறு, "என் பொண்ணை எப்பிடியாவது அவன்கிட்ட இருந்து காப்பாத்தும்மா. நான்... நான்..." என்று எதையோ சொல்ல வந்தவர் தான், சொல்லாமலே உலகத்தை விட்டு சென்று விட்டார்.

இவை அத்தனையையும் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்த ஊரார், திடீரென ராமசாமியிடம் பேச்சில்லாமல் போனதைக் கண்டு, ஓடி வந்து அவரை ஆராய்ந்தால், அவர் உலகத்தை விட்டே சென்றிருப்பது தெரிந்தது.

வாயில் கை வைத்தபடி, "ராமசாமி நம்மள விட்டுட்டு போயிட்டாரும்மா!" என சொன்னதும், இந்திரா அதே இடத்தில் மயக்கம் போட்டு விழுந்தார்.



தொடரும்....