• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மனம் - எபிலாக்

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
862
மனமெங்கும் மாய ஊஞ்சல் – எபிலாக்




மாமா! இட்லி பொட்டலம், ரெண்டு அடுக்கு டிபன் பாக்ஸ்ல லெமன் சாதம், தயிர் சாதம், சிப்ஸ், ஊறுகாய் , ப்ளாஸ்க்ல காபி, வாட்டர் பாட்டில் எல்லாம் உங்க ட்ராவலிங் பாக்ல வெச்சிருக்கேன். ஒரு முறை எல்லாத்தையும் செக் செய்திடுங்க”, யுகி சொக்கநாதனிடம் தெரிவித்தாள்.



“ரொம்ப தாங்க்ஸ்மா, யுகி”, என்றவர் பையை சரி பார்த்துக் கொண்டார். ப்ரித்வியின் பெரியம்மாவின் நாத்தனாரின் ஓரகத்தியின் மகளுக்கு திருமணம் என்று சுந்தரி பத்து நாட்கள் முன்னதாகவே, மதுரைக்கு பக்கத்தில் ஏதோ ஒரு கிராமத்திற்கு போய்விட்டார்.



அந்த திருமணத்திற்கு தான் இப்பொழுது சொக்கநாதனும் கிளம்பிக் கொண்டு இருக்கிறார். அவர்களுக்கு என்ன? மகனை பார்த்துக்கொள்ள யுகி வந்துவிட்டாளே! முன்னே கலந்துகொள்ள முடியாத விசேஷங்களுக்கு எல்லாம் சேர்த்து வைத்து இப்போது அடிக்கடி வெளியூர் போய்க்கொண்டு இருக்கிறார்கள்.



“இது உங்க ஈ- டிக்கட். ஐடென்டிடி கார்ட் எடுத்துக்கிட்டீங்களா?”



“இருக்குமா.”



“அப்பா! வாங்க, நான் உங்கள ஸ்டேஷன்ல விட்டுட்டு வரேன்”, ப்ரித்வி சாவியை சுழற்றிக்கொண்டே வந்தான்.



“இருப்பா, சாமி கும்பிட்டு வரேன்”, பூஜை அறை நோக்கி நகர்ந்தார் சொக்கநாதன்.



‘ச்சே, ஸ்டேஷன் போக கால் டாக்ஸி ஏற்பாடு செஞ்சா மாமாவே போய்டமாட்டாரா? முழிச்சிட்டு இருக்கற நேரத்துல இவர் வீட்டுல இருக்கறதே இந்த ரெண்டு மணி நேரம் தான். இன்னிக்கு அதுவும் போச்சா?’ யுகிமனதிற்குள் அலுத்துக் கொண்டாள். ‘அச்சச்சோ, வயசான அப்பாவை கொண்டுவிடறதை குறை சொல்றோமே’ என்று தோன்ற, தன் தலையில் தட்டிக்கொண்டாள்.



இவளையே கவனித்துக்கொண்டு இருந்த ப்ரித்வி அருகில் வந்து ஒரு விரலால் முகத்தை நிமிர்த்தி, தணிந்த குரலில் சொன்னான். “டோன்’ட் லுக் கில்டி, அண்ட் டோன்’ட் ஸல்க் ஈதர். ஒரு குட்டி ரகசியம் சொல்லட்டா?” அவசரமாக பார்வையை பூஜை அறை நோக்கி செலுத்தினான்.



தந்தை இன்னும் வெளியே வரவில்லை. “இன்னிக்கு நான் லீவ் போட்டுயிருக்கேன்.” யுகி வாயை அவசரமாக கையால் பொத்தினான். “ரகசியம்னு சொல்றேனில்ல, சந்தோஷமா கத்தி காரியத்தை கெடுத்திடாதே. இன்னிக்கு என்ன என்ன செய்யலாம்னு நான் போய்ட்டு வரதுக்குள்ள ஒரு பிளான் போட்டு வை.” (ஆடு தானா போய் தலையைக் கொடுத்தா..)



யுகி நூறு வாட்ஸ் பிரகாசத்துடன் முஷ்டிகளை மேல் நோக்கி மாற்றி மாற்றி காற்றில் அழுத்தி தன் மகிழ்ச்சியை வெளிபடுத்தி முடிக்கவும், சொக்கநாதன் வெளியே வரவும் சரியாக இருந்தது.



“டேய் ப்ரித்வி, யுகியை ரொம்ப நேரம் தனியே இருக்கற மாதிரி விடாதே, நேரத்துக்கு வீட்டுக்கு வந்திடு, நான் போயிட்டு வரேன்மா.”



“சரிங்க மாமா”



ஒரு அர்த்தமுள்ள பார்வையை இவளிடம் செலுத்திவிட்டு, ப்ரித்வி காரினுள் ஏறினான். வண்டி கண்ணில் இருந்து மறைந்தவுடன், கதவை சாத்திவிட்டு உள்ளே வந்த யுகி, அவசரமாக ஒரு கப் காபியை கலந்து எடுத்துக்கொண்டு, ஒரு பேப்பர் பேனாவுடன் பிளான் போட சோபாவில் கால்மடக்கி அமர்ந்தாள்.



ரெண்டு மணி நேரம் கழித்து திரும்பி வந்த ப்ரித்வி, மாற்று சாவி கொண்டு வீட்டை திறந்து உள்ளே வந்தான். பெட்ரூமில் யுகி சுவரை பார்த்து திரும்பிக்கொண்டு படுத்து இருந்தாள். சத்திமின்றி கட்டிலில் ஏறி அவள் முதுகில் கிச்சுகிச்சு மூட்டினான். ஒரு ரியாக்ஷனும் இல்லாது போகவே, அவளை தன் பக்கம் திருப்பினான். அவள் போட்ட அலறலில் செந்தில் பயந்துவிட்டான்.



“ஐயோ, என்ன ஆச்சு யுகி?”



“”இடுப்பில அடி பட்டிடுச்சு. ”



“ஓஹோ, இன்னிக்கு எந்த சுவத்தை தாண்டி குதிச்சே?”



“என் கஷ்டம் தெரியாம கிண்டல் செய்யறீங்க. நீங்க வரதுக்குள்ள வேலை எல்லாம் முடிக்கணும்னு அவசர அவசரமா துணி காய வைக்க மாடிக்கு போயிட்டு திரும்பி இறங்கும்போது, சறுக்கி விழுந்துட்டேன். இடுப்புல செம அடி.”



“நான் வேணா எண்ணெய் தடவி விடட்டுமா?” ப்ரித்வி ஆவலுடன் கேட்டான்.



யுகி கை எடுத்து கும்பிட்டாள், “ஐயோ சாமி, நான் ரிஸ்க் எடுக்க தயாரில்லை, ஏற்கனவே வலி உயிர் போகுது. போன் புக்ல டாக்டர் நபிஸா நம்பர் இருக்கு. கிளீனிக்கு போகலேன்னா வீட்டுக்கு வருவாங்க, போய் அவர வர சொல்லுங்க, போங்க.”



இருபது நிமிடம் கழித்து வந்த டாக்டர், லேசான சுளுக்கு தான், ஒரு நாள் பெட் ரெஸ்ட் போதும் என்று கூறி, தன்னிடம் இருந்த சாம்பிள் பெயின் கில்லெர் மருந்து கொடுத்துவிட்டு மறக்காமல் முந்நூறு ருபாய் பீஸ் வாங்கிக்கொண்டு கிளம்பினார்.



“ஹோட்டலிலிருந்து டிபன் வாங்கி வரட்டுமா, யுகிக்குட்டி?”



“எதுக்குங்க? பிரேக் பாஸ்ட், லஞ்ச் எல்லாம் மாமா கிளம்பறதுக்கு முன்னாலேயே செய்துட்டேனே.”

அவள் சொன்னதும் ஒரே தட்டில் இருவருக்கும் இட்லி சட்னி கொண்டுவந்து அவளுக்கு ஊட்டி விட முனைந்தான் ப்ரித்வி.



‘இடுப்புல தானே அடி, கை நல்லா தானே இருக்கு’ என்ற தனது ஆச்சரியத்தை தொண்டைக்குள்ளேயே அடக்கிவிட்டு, டிபனுக்காக வாயை திறந்து காட்டினாள்.



இது போன்ற ஒரு நிகழ்ச்சி திருமணத்திற்கு ஏழு எட்டு வருடங்கள் பின்பு நடந்து இருந்தால் ஒன்று

‘அப்பாடா, நான் ஜாலியா வெளியே போய் சாப்பிடறேன்’ என்று அவன் ஓடி போய் இருப்பான் அல்லது அவள் ‘என் கைக்கு என்ன கேடு வந்தது, நானே திங்கறேன்’ என்று கடுகடுத்திருக்கலாம். ஆனா நம்ப கதாநாயகன் நாயகி புதிதாக திருமண ஆனவர்கள். பாவம் இந்த இடக்கு பேச்சு எல்லாம் அவர்கள் இன்னும் கற்றுகொள்ளவில்லை என்பதால் ஆறிப்போன இட்லிகளை பரஸ்பரம் ஊட்டிக்கொண்டு சந்தோஷமாகவே சாப்பிட்டனர்.



கட்டிலுக்கு அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்து நாவல் ஒன்றை படித்துக்கொண்டு இருந்தவனை பார்க்க யுகிக்கு பாவமாக இருந்தது.



“என்னங்க, நான் ஒண்ணு சொன்னா கேட்பீங்களா?”



புத்தகத்தை மடியில் வைத்து அவளை என்ன என்பது போல பார்த்தான்.



“பேசாம லீவை கான்சல் செஞ்சிட்டு ஆபீஸ் போய்டுங்க. வேற ஒரு நாள் நாம வெளியே போகலாம். ப்ரோக்ராம் தான் ஏற்கனவே போட்டுட்டேனே.” நல்லா யோசனையாக இருந்தாலும் அவளை தனியே விட்டு செல்ல தயங்கினான்.



“யோசிக்காதீங்க, என்ன ஆச்சோனு நீங்க கவலை படாம இருக்க, அப்போ அப்போ போன் செய்யறேன்”, அவள் நிச்சயமாக சொன்னதன் பேரில் ப்ரித்வி காக்கி உடுப்பை மாட்டிக்கொண்டு வேலைக்கு கிளம்பினான்.



மதியம் இரண்டு மணி வரை மனைவியிடம் இருந்து அவனுக்கு எந்த தகவலும் இல்லை. ‘மருந்தோட வேகத்துல தூங்கறா போல இருக்கு’ என்று சமாதானம் செய்துகொண்டு அரை மனதோடு பைல்களை புரட்டிக்கொண்டு இருந்தான்.



அரை மணி பொறுத்து தொலை பேசி கிணுகிணுத்தது. பாய்ந்து சென்று ரிசீவரை காதில் பொருத்தினான். மனைவியின் இனிய குரலுக்கு பதில் கரகரப்பான ஒரு ஆண் குரல் கேட்டது.



“சார், நான் மயிலை சிவராமன் பேசறேன்.”



“ம்ம்… யாரு… என்ன வேணும்?”



“என்னை தெரியலைங்களா சார்?”சிறிது யோசித்தபிறகு சிவராமன் போலீஸ் உளவாளி என்று ஞாபகம் வந்தது.



“ஒஹ் ஒஹ் சிவராமன், ரொம்ப நாளா எங்கேய்யா போய் ஒளிஞ்சிட்டே?”



“ஒரு முக்கியமான தகவல் சார்கிட்ட தரணும். அம்பத்தூர் பக்கத்துல ஒரு இரும்பு தொழிற்சாலைல கள்ள துப்பாக்கி ரவை எல்லாம் உற்பத்தி செஞ்சிட்டு இருக்காங்க. பாக்டரிலேர்ந்து சரக்கு வெளி மாநிலத்துல இருக்கற தீவரவாதிங்களுக்கு ஒரு ப்ரோக்கர் மூலமா போகுதுங்க சார்.”



இந்த ரீதியாக மேலும் சில நிமிடங்களுக்கு தொடர்ந்த உரையாடலின் முடிவில் ப்ரித்வி ப்ரோக்கரின் செல் போன் நம்பரை அறிந்துகொண்டான். சிவராமன் கொடுத்த விஷயங்களை அசை போட்டவாறு நெற்றியை அமுக்கி கொண்டு இருந்தவன் யுகியை மறந்தே போனான். மீண்டும் போன் அடிக்க, எவன்டா இது என்று கடுகடுத்தவாறே எடுக்க, மனைவியின் தடுமாறிய குரல் அவனை எதிர்கொண்டது.



“சாரி சதாமா, ஆபீஸ் டென்ஷன்ல இருந்தேன். சொல்லு, ஆர் யூ ஓகே? வலி இருக்கா?”



“அதை சொல்ல தான் கூப்பிட்டேன். பெயின் கம்ப்ளீட்டா போய்டிச்சு. எழுந்து நடக்க ஆரம்பிச்சிட்டேன்.”



“ஹேய், ஓவரா எக்செர்ட் பண்ணாத, ஜாக்கிரதை.”



“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன், டோன்’ட் யூ வொர்ரி மை ஹீரோ. எப்போ வீட்டுக்கு வருவீங்க?”



“6.30 மோஸ்ட்லி, ஏன் ?”



“வரும்போது ராஜா ஸ்டோர்ஸ்லேர்ந்து 2 கிலோ சன் பிளவர் ஆயில் வாங்கிட்டு வருவீங்களாம்”, யுகி கெஞ்சினாள்.



“போடி, ஹோம் டெலிவரி பண்ண சொல்லு.”



“ப்ளீஸ் ப்ளீஸ், கடையில் ஆள் இல்லையாம், நீங்களே வாங்கிட்டு வாங்க, சமத்து பையா”, அவன் ஒத்துக் கொள்ளும் வரை அவள் விடவே இல்லை.



“கடை செல் நம்பர் தரேன். பேப்பர்ல எழுதி தொலைச்சிடாதீங்க. மனப்பாடம் செஞ்சிடுங்க”



கணவனின் வாயிலிருந்து ‘ஐ லவ் யூ, மிஸ் யூ’ எல்லாம் வரவழைத்த பிறகே போனை வைத்தாள்.



கள்ள துப்பாக்கி விஷயம் மண்டையை குடைய, அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று யோசிக்க தொடங்கினான். கமிஷனருக்கு விஷயத்தை கொண்டு செல்வதற்கு முன் மேலும் சில விவரங்களை திரட்டி விடுவது மேல் என்று தோன்ற, ப்ரோக்கருக்கு போன் செய்ய முடிவு செய்தான்.



ப்ரோக்கர் என்று நினைத்துகொண்டு ப்ரித்வி டயல் செய்த எண் ராஜா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கு செல்கிறது. மிடுக்கான பேச்சில் எதிராளி உஷாராகிவிடுவான் என்று ரொம்ப தயக்கம் காட்டுவது போல ப்ரித்வி தொடங்கினான், “கன்…. ரவை… கிடைக்…”



அவன் முடிக்கும் முன்னே அண்ணாச்சி ரிசீவர் வாயை பொத்தி கடை பையனிடம், “ஏலே, அந்த கன் பிராண்ட் ரவை இருக்கா பாரு.”



“இருக்கு அண்ணாச்சி, 20 கிலோ மூட்டை அஞ்சு இருக்கு.”



அண்ணாச்சி ப்ரித்வியிடம் “கன் இருக்கு சார், எத்தனை வேணும்?”



“எப்படி தருவீங்க?”



“மூட்டையா வேணும்னாலும் தரோம், லூஸ்ல வேணாலும் கிடைக்கும்.”



‘அட பாவிங்களா! நாட்டுல இத்தனை ஓப்பனா துப்பாக்கி வியாபாரம் நடக்குதே. கொஞ்ச நாளிலே பிளாட்பார்மிலே கூறு கட்டி வித்தாலும் ஆச்சரியம் இல்லை’ காவல்துறைக்கு நாடி நரம்பெல்லாம் புடைத்தது.



“ நாலு மூட்டை அனுப்ப முடியுமா?”



“அட்ரஸ் குடுங்க, பையன கொண்டு போட சொல்றேன்.”



இதற்கு பிறகு கமிஷனரை தேடி சென்றான். கமிஷனர் மேலும் 4 அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்தார்.



இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே ஒரு பீ.சி ப்ரித்வியிடம் வந்து காதோட சொன்னான், ” சார் நீங்க கேட்டதா 4 மூட்டை வந்திருக்கு. பில் 4,160 ரூபாய் சார்.”



அவனும் பணத்தை தன் பர்சிலிருந்து போலீஸ் கான்ஸ்டபிளிடம் கொடுத்து, “மூட்டைகளை பில்லோட பத்திரமா வைங்க. முக்கியமான எவிடன்ஸ். மூட்டைகளை பிரிச்சு சார்ட் அவுட் செஞ்சிடுங்க. நாங்க பிறகு வந்து பார்வை இடறோம்.” டிபார்ட்மெண்டில் இருந்து பிற்பாடு இந்த பணத்தை க்ளைம் செய்யலாம் என்று ப்ரித்வி நிச்சயித்தான்.



பீ.ஸி தொடர்ந்தான்,” மூட்டைக்கு 4 இலவசம்னு 16 பூ கொண்டு வந்திருக்கான், அதை என்ன செய்யனும் சார்?”



‘கடவுளே, எது எதுக்கு இலவசம்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சே’ போலிசுக்கு தலை சுற்றியது.



விவரம் கேட்ட கமிஷனருக்கு எல்லாம் விலாவாரியாக ப்ரித்வி சொன்னான்.



பூ பற்றி கேட்ட கமிஷனர் “இதான் Guns and Roses ” என்று பலமாக சிரித்தார். எல்லாரும் சேர்ந்து சிரித்தனர். கான்ஸ்டபிள் மட்டும் இவர்கள் எதுக்கு சிரிக்கிறார்கள் என்று புரியாமல் திரு திரு வென்று முழித்து கொண்டு நின்றான்.



திடீரென்று கமிஷனருக்கு ஒரு ஐடியா உதித்தது.



“ஹே எங் மேன், எப்படியும் இந்த பூ எல்லாம் தடயமா வெச்சுக்க முடியாது, வாடி போய்டும், பேசாம உங்க மனைவிக்கு அனுப்பிடுங்களேன்”, என்று கூறி அவனை வெட்கப்பட வைத்தார். தானே அவன் பெயரில் யுகிக்கு அனுப்பும் வேலையையும் மேற்கொண்டார்.



சல்யூட் அடித்து கான்ஸ்டபிள் நகர்ந்த பின்னும் இவர்கள் டிஸ்கஷன் தொடர்ந்தது. நடுவில் மீண்டும் யுகியிடம் இருந்து ஒரு போன். அறையை விட்டு வெளியே சென்று பேசினான்.



“வரும்போது எண்ணெய்யை மறக்காதீங்க. அப்புறம் கான்ஸ்டபிள் பூ கொண்டு வந்தாங்க. ரொம்ப தேங்க்ஸ். எதுக்கு இத்தனை? ஒரு விஷயம் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்குங்க. என்னோட பேவரிட் இதுனு எப்படி உங்களுக்கு தெரியும்?” யுகி இடைவெளி இல்லாமல் குதுகலத்துடன் பேசினாள்.



“எனக்கு தெரியாம எப்படி இருக்கும்?” அவனும் கதை அளந்தான்.



“சரி நான் சாயங்காலம் வீட்டுக்கு வரும்போது நீ அதை தலைல வெச்சிட்டு இருக்கணும்”, அன்பு கட்டளை பிறந்தது கணவனிடமிருந்து.



“இதையா?” அவள் குரலில் சத்தியமாக ஆச்சரியம் தெரிந்தது.



“ஆமாம், நான் சொன்னா நீ கேட்ப தானே?”



“சரிங்க, நீங்க சொல்ற ஒரே காரணத்துக்காக தான் இதை செய்யறேன்.”



“குட் கர்ல், ஈவினிங் பார்க்கலாம், பை”, ப்ரித்வி மீண்டும் அறைக்குள் புகுந்தான்.



‘தன் புது கணவன் கிறுக்குத்தனம் எத்தனை தூரம் போகும்’ என்று சிந்தித்துக்கொண்டே, ஒரு காலி பிளவரை சிறு சிறு பூக்களாக வெட்டி, ஊசி நூலால் மாலையாக கோர்த்தாள் சம்யுக்தா.



காலி பிளவரை தலையில் வைத்து கொண்டு இருக்கும் யுகியை பார்க்க போகும் ப்ரித்வியின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்பதை யோசிக்கும் பொறுப்பை வாசகர்களிடம் விட்டு விடுகிறேன். என் கவலை எல்லாம் அந்த பாவப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிளிடம் தான். முக்கியமான தடயமான 80 கிலோ ரவையில் இருந்து புழு, கல்லு எல்லாம் பொறுக்கி தனி தனி பாட்டிலில் போட்டு கொண்டிருக்கானே, அவன் நிலைமையை யோசிச்சு பாருங்க, இனி இந்த ஜென்மத்துல ரவா உப்புமாவை அவனால் ரசித்து சாப்பிட முடியுமா?



பின் குறிப்பு : 1 ) திறமையான போலீஸ் அதிகாரிகள் இந்த கற்பனை அப(வாத)த்திற்காக என்னை மன்னிப்பார்களாக!



2 ) விமர்சனங்கள் வரவேற்க படுகின்றன.
 

Lakshmi murugan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 14, 2022
Messages
606
Nice story.
 
Top