• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
863
மனம் – 10

அவனுக்கொரு கவி

*

களவும் கற்று மற என்பார்கள்.
கற்றுக்கொண்டேன் அவனைக்
கண்களால் களவாட
மறக்கமுடியவில்லை



இருளை வெறித்தபடியே நின்றிருந்த ப்ரித்வி, கீழே செடியோரம் கிளைகள் சற்று வேகமாக அசைவதை உணர்ந்து பார்வையை அங்கு திருப்ப, இரு உருவங்கள் இருட்டில் மல்லுக்கட்டுவது தெரிந்தது. அங்கிருந்த தன்னுடைய மொபைலையும், பிஸ்டலையும் எடுத்து நிமிடத்தில் கீழே வந்தவன் பார்வையில், துப்பாக்கி ஒரு பக்கம் கிடக்க, சைமன் ஒரு பக்கம் கிடக்க, சைமனின் கழுத்தில் காலை வைத்தபடி நின்றிருந்த சண்முகம் என அங்கிருந்த வித்தியாசமான சூழல் தான் பட்டது..



அதைப் பார்த்ததும் அதிர்ந்தவன், சண்முகத்தை விளக்கி சைமனை எழுப்பி விட, எழுந்த சைமன் துள்ளிக் கொண்டு “டேய் என் கையால தான்டா உனக்கு சாவு… செய்றதெல்லாம் செஞ்சிட்டு இன்னைக்கு நல்லவன் மாதிரி வேசம் போடுறியா.. உன்னை ஜெயிலுக்கு அனுப்பி, இந்த ஊர் முன்னாடி உன் முகத்திரையை கிழிக்கல நான் போலிஸ்காரன் இல்லடா..” என திமிராய் பேச,



சண்முகமும், “உன்னால முடிஞ்சதைப் பார்த்துக்கடா.. இனி உன்னை இந்த ஊர்ல பார்க்க மாட்டேன்டா.. நாளைக்கே நீ தண்ணியில்லாத காட்டுல நாயா அலைவடா.. அதை முதல்ல செய்றேன் டா” என பதிலுக்குப் பேச, ப்ரித்வி இருவரையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். எப்படியும் இருவரின் சண்டையின் முடிவில் அவனுக்கு உண்மைத் தெரிய வரும். அது போதுமே. அதுதானே அவனுக்கும் வேண்டும். அதனால் அமைதியாக இருந்தான்.



“டேய்.. ஊருக்குள்ள நீயெல்லாம் பெரிய மனுஷன்னு சொல்லிட்டு இருக்கியே, நீ செஞ்ச காரியத்தை உன்னால சொல்ல முடியுமாடா.. ஊருக்கே சொல்ல வேண்டாம். இதோ நிக்கிறானே உன் வீட்டு மருமகன், அவங்கிட்ட சொல்லு பார்ப்போம்.. காரித்துப்பிட்டு உன் மருமகளையும் உன் வீட்டுக்கு அனுப்பிட்டு, உன் சங்காத்தமே வேண்டாம்னு போயிடுவான், பார்க்குறியா..” என கொஞ்சமும் பெரிய மனிதன் என்ற எண்ணம் இல்லாமல், வயதிற்கும் மரியாதைக் கொடுக்காமல் ஏகவசனமாய் பேசிக்கொண்டே போனான் சைமன்.



“மிஸ்டர்.சைமன் உங்களுக்கு அவ்வளவுதான் மரியாதை. இப்போ நீங்க கிளம்புங்க. எதுவா இருந்தாலும் மார்னிங்க் ஸ்டேஷன்ல வச்சுப் பேசிக்கலாம்..” என்றவன் உடனே ஸ்டேஷனுக்கு அழைத்து “ஜகன்.. ஒரு கேஸ் FIR ஃபைல் பண்ணனும், அட்டெம்ப்ட் டூ மர்டர்.. சப் இன்ஸ்பெக்டர் சைமன் மேல, ம்ம் இங்கதான் இருக்கார். என்னை தான் மர்டர் பண்ண பிஸ்டலோட வந்துருக்கார். ம்ம் க்விக்கா வந்துடுங்க..” என்று இன்ஃபார்ம் செய்ய,



சைமன் முகத்தில் கொலைவெறி தாண்டவமாடியது. “டேய் என்னையவே அரெஸ்ட் பண்ண போறியா.. அது உன்னால முடியாது. அதுக்கு ஹையர்ல பெர்மிஷன் வாங்கனும். அதோட என்னதான் ஆக்ஷன் எடுத்தாலும் என்னை ஒரு மண்ணும் புடுங்க முடியாது. உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சிக்கோ.. ஆமா.. உன்னை கொலை செய்ய வந்த என்னை நீ அரெஸ்ட் பண்ணனும்னா, உன்னை கொலை செய்ய ஐடியா கொடுத்த இந்தாளை என்ன செய்வ..” என்றான் இன்னும் அகங்காரமாக.



சைமனின் பேச்சில் ப்ரித்வியின் ரத்தம் கொதிக்க, முகத்தில் ரௌத்ரம் தாண்டவமாட, அவன் மூக்கில் ஒரு குத்து விட்டு “குற்றவாளி யாரா இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது. இப்போ நீ உள்ள போ.. பின்னாடியே உனக்கு வேண்டியவங்க எல்லாம் வரிசையா வந்து சேருவாங்க..” என்று ஆக்ரோசமாக சொல்லி முடிக்க போலிஸ் ஜீப்பும் வந்து நின்றது.



சைமன் தப்பிக்க நினைக்க, அவனை விடாமல் பிடித்தது ப்ரித்வி இல்லை சண்முகம் தான், அவரின் செய்கையை வித்தியாசமாக பார்த்த ப்ரித்வி, அவனை அவரிடம் இருந்து ஜகனிடம் ஒப்படைத்து, அடுத்து செய்ய வேண்டியவற்றை சொல்லிவிட்டு, சைமனையும் ஜீப்பில் ஏற்றி அனுப்பிவிட்டு அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து விட்டான்..



ப்ரித்வியின் அருகில் வந்த சண்முகம், “தம்பி..” என்றழைக்க, “நீங்க இப்படின்னு நான் நினைக்கவே இல்ல சித்தப்பா..” என்றான் மிகவும் வருத்தத்தோடு. அந்த குரலில் அப்படியொரு ஏமாற்றம். நீங்களா இப்படி என்ற பாவம். அதை அவரால் உணர முடிந்தது. ஆனால் இப்போது என்ன செய்ய முடியும். குற்ற உணர்ச்சி கொல்ல ஆரம்பித்தது.



“இல்ல தம்பி… நான் தப்பு செய்தவன் தான் இல்லைன்னு சொல்லி நான் தப்பிக்க நினைக்கல, ஆனா முழுவதும் தெரியாம நீ தப்பா நினைச்சிடக் கூடாது. இனியும் எதையும் மறைக்க முடியாது. நான் சொல்லிடுறேன், எல்லாத்தையும் சொல்லிடுறேன். ஆனா எனக்கு நீ ஒரு சத்தியம் செய்து கொடுக்கனும், அப்படி செய்தா கண்டிப்ப எல்லா உண்மையும் உங்கிட்ட சொல்லிடுறேன்..” என மிகவும் உடைந்து போய் பேச,



ப்ரித்வியின் முகம் கருத்தது. அவர் அடுத்து என்ன சொல்ல போகிறார் என்பதை உணர்ந்தவன் போல, யுகிக்கிட்ட உங்களைப் பத்தி தப்பா எதுவும் சொல்லக் கூடாது. அதுதானே..” எனச் சொல்ல,



சண்முகத்தின் முகம் நொடியில் மலர்ந்தது. அந்த மலர்ந்த முகமே அதுதான் செய்தி என்பதை உணர்த்த, அவர் முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் திரும்பி நின்று கொண்டான். “தம்பி.. இந்த ஒரு உதவியை மட்டும் எனக்காக செய்.. நீ என்ன சொன்னாலும் செய்றேன். யுகி எனக்கு மருமக இல்லப்பா, என்னோட மக, அவளுக்கு மட்டும் நான் இப்படின்னு தெரிஞ்சா உயிரோடவே இருக்க மாட்டா.. புரிஞ்சிக்கோ தம்பி. நான் எனக்காக இந்த உதவியை கேட்கல, உங்க ரெண்டு பேரோட வாழ்க்கைக்காகவும் தான் கேட்குறேன்..” எனக் கெஞ்ச,



அவர் பேச்சில் இருந்த உண்மையை ப்ரித்வியும் உணரத் தான் செய்தான். சண்முகத்தின் இன்னொரு முகம் யுகிக்கு தெரிய வந்தால், நிச்சயம் அவளது முடிவு வேறாகத் தான் இருக்கும். அவளுக்காகவும், தங்கள் எதிர்கால வாழ்க்கைக்காகவும் ப்ரித்வி அவர் கேட்ட உதவியை செய்ய முன் வந்தான்.



“உங்க மருமகளுக்காக இதை நான் செய்யல, என் மனைவி, அவளுக்கு எந்த கஷ்டமும் வந்திடக் கூடாது. உங்களை நினச்சி அவ வருத்தப்படக் கூடாதுன்னு தான் நான் இதை செய்றேன்.. என் வாயால உங்களைப் பத்தின எந்த உண்மையும் வெளியே வராது. இது நான் உயிரா நினைக்கிற என் மனைவி மேல சத்தியம்..” என்று இறுக்கமான குரலில் சொல்லி விட, சண்முகத்திற்கு அப்போது தான் சற்று ஆசுவாசம் ஆனது.



விடியும் நாள் எப்படி வேண்டுமானலும் இருக்கட்டும், இந்த நொடி, இந்த நிமிடம் இவன் கொடுத்த இந்த உறுதி இதுவே போதும் அவருக்கு. நான் என்ன ஆனலும் பரவாயில்லை, என் மகளை இவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை வந்திருந்தது சண்முகத்திற்கு. அதனால எந்த முஸ்தீபும் இல்லாமல் தன்னைப்பற்றி சொல்ல ஆரம்பித்தார்.



“தம்பி.. நான் ஒரு சாதாரண மனுஷன். ஆசாபாசங்கள் இருக்குற ஒரு சாதாரண மனுஷன்.” என்றுப் பேச்சைத் தொடங்கினார். “நான் யார் கூடவும் வலுக்கட்டாயமா போய் எந்த ஒரு தப்பான உறவும் வச்சிக்கல, பணத்துக்காக வந்தவங்ககிட்ட மட்டும் தான் என்னோட உறவு.” என்று பெருமூச்சு விட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தார். ப்ரிதிவியும் அவரே பேசட்டும் என்பது போல நின்றிருந்தான்.



“கடந்த அஞ்சு வருசத்துக்கு முன்ன வர, நான் இந்த என்னோட பழக்கத்தை இந்த ஊர்ல யாருக்கும் தெரிய விட்டது இல்ல. இப்போவும் யாருக்கும் தெரியாது, அப்படி தெரிஞ்சவங்களூம் எனக்கு பயந்து வெளிய சொல்லல. இந்த பழக்கம் நான் போற வெளியூர்ல மட்டும் தான். அப்படி ஒரு நாள் திருச்சி போயிருந்தப்போ ஒரு லாட்ஜ்ல தங்கியிருந்தேன்.”



“அப்போ திடீரென்று போலிஸ் ரைடு வர, நானும் என் கூட இருந்த பொண்ணும் மாட்டிக்கிட்டோம். என்னோட பேர் வெளியே வந்தா அசிங்கமாகி, ஊருக்குள்ளயே நுழைய முடியாதுன்னு, ரைடு வந்த போலிஸ்க்கு ஏகப்பட்ட பணத்தைக் கொடுத்து சமாளிச்சேன். ரைடுக்கு வந்த போலிஸ் வேற யாருமில்ல, இந்த எஸ்.ஐ சைமன் தான்.” என்றவர் ப்ரித்வியின் முகத்தைப் பார்க்க, அவன் முகம் நிர்மலமாக இருந்தது.



அதிலிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியாமல், மீண்டும் பேச்சை ஆரம்பித்தார். “அந்த பிரச்சினை அங்கயே முடிஞ்சிடுச்சு, அதுக்குப் பிறகு நானும் கவனமா இருக்க ஆரம்பிச்சேன். முடிஞ்சளவுக்கு பொம்பளைங்க சமாச்சாரத்தையும் குறைச்சிட்டேன். யுகி வளர, வளர நான் என்னோட எல்லா கெட்டப் பழக்கத்தையும் சுத்தமா விட்டுட்டேன். என்னோட இந்த பழக்கம் என் பொண்ணோட வாழ்க்கையையும், நடத்தையையும் பாதிக்கும்னு புரிஞ்ச அடுத்த நொடி நான் எந்த பொம்பளைங்க பின்னாடியும் போகல. அதுவரை இருந்த என் வாழ்க்கை முறையை நினைச்சு எனக்கே அசிங்கமா இருந்துச்சு. இனிமேலாச்சும் ஒரு நல்ல அப்பாவா இருக்கனும்னு முடிவு பண்ணேன். அப்படித்தான் நடந்துக்கவும் செய்தேன். யுகியோட விசயத்துல நான் எந்த தப்பும் செய்யல, அதை நீங்க நம்பனும்..” என்று இடைவெளி விட,



“உங்க மருமகளை நீங்க எப்படி வளர்த்தீங்கன்னு எனக்குத் தெரியும். அவளை யாரும் குறை சொல்ல முடியாது. அப்படி யாரும் ஒரு வார்த்தை சொன்னாலும் அவங்க உயிர் உடம்புல தங்காது. அதனால மட்டும் தான் நான் உங்க கூட பேசிட்டு இருக்கேன்..” என்றவன் “இனி அவ என் மனைவி. அவளைப் பத்தி பேச உங்களுக்கும் கூட ரைட்ஸ் கிடையாது..” என முகத்தில் அடித்தார் போல சொல்ல, சண்முகத்தின் முகம் விழுந்து விட்டது.



கையிலிருந்த மொபைலில் மணியைப் பார்த்தவன், அது நள்ளிரவு மூன்றைக் காட்ட, “சீக்கிரம் சொல்லுங்க.. அஞ்சு மணிக்கு நான் ஸ்டேஷன் போகனும்..” எனச் சொல்ல, சண்முகமும் சொல்ல ஆரம்பித்தார்.



“சைமன் இங்க வந்த நாள்ல இருந்து யுகியை ஃபாலோவ் பண்ணிருக்கான், இடைஞ்சலும் கொடுத்துருக்கான். யுகி எங்கிட்ட சொல்லல, வழியில பார்த்தவங்க வந்து சொல்ல, எனக்கு வந்த கோபத்துக்கு நான் நேரா ஸ்டேஷனுக்கே போய் அவனை எச்சரிச்சு, கண்டிச்சுப் பேசிட்டு வந்துட்டேன். அன்னைக்கு தான் சைமன், இங்க ட்ரான்ஸ்ஃபர் ஆகி வந்ததே எனக்கும் தெரியும். நான் இந்த ஊர்ல இருக்குறதும் அவனுக்கு ஞாபகம் வந்துருக்கு.”



“என்னைப் பத்தி தெரிஞ்சவன் வேற, பிள்ளையை எதுவும் வேற விதமா வம்பிழுப்பானோன்னு பயந்தேன். ஆனா அதுக்குள்ள நீயும் இங்க வந்துடவும் அவன் பெருசா எந்த பிரச்சினையும் செய்ய மாட்டான்னு நிம்மதி வந்துடுச்சு, நானும் அமைதியா இருந்துட்டேன்.”



“ஆனா நான் நினைச்ச மாதிரி அவன் அமைதியா இல்ல.. சஸ்பென்ட் ஆனதும் நேரா என்னைத் தேடி வந்து யுகியைப் பெண் கேட்டான். நான் அவளுக்கு ஆல்ரெடி நிச்சயம் ஆகிடுச்சு, மாப்பிள்ளை நீ என்று சொன்னதும், ஒன்னுமே சொல்லாம போயிட்டான். நல்ல பையன் தான் போலன்னு நானும் நினைச்சேன். ஆனா அவன் அடுத்த ரெண்டு நாள்லயே வேர ஒரு பிரச்சினையைத் தூக்கிட்டு வந்தான்.” என்றவர் சற்று அமைதியாக, ப்ரித்வியும் அவரைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.



இன்று ஜகன் சொன்னதை நம்ப முடியாமல் பார்த்தாள் யுகி, ஜகன் கூறிய விஷயங்களைக் கேட்டு அவளால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அவள் அதிர்ந்த முகத்தைப் பார்த்த யுகியிடம் “உண்மைதான் யுகிமா.. உங்க மாமா தான் குற்றவாளி. ஆனா எல்லா தப்பையும் தன்மேல போட்டுக்கிட்டார் ப்ரித்வி சார். உங்க மாமாவுக்கு செய்து கொடுத்த சத்தியம் தான் ப்ரித்வி சார் வாயைக் கட்டிப் போட்டுடுச்சு.” என்று மிகவும் வருத்தமாக சொன்ன ஜகனிடம்,



“அண்ணா இன்னும் நீங்க வேற எதையோ மறைக்கிறீங்க.. மீதி இருக்குற எல்லாத்தையும் சொல்லிடுங்க. நான் மொத்தமா கேட்டுட்டு என்ன செய்யனுமோ செய்றேன்..” என இருக்குமிடம் உணர்ந்து வாய் மூடிக் கதறயவளிடம்,



“யுகிமா.. நான் எப்படி சொல்ல.. சாருக்குத் தெரிஞ்சா என்னை தப்பா நினைப்பார். அவருக்கு நான் நம்பிக்கையானவன்னு நினைச்சாதால தான் என்கிட்ட எல்லா உண்மையும் சொன்னார். அப்படி இருக்கும் போது எப்படி.. இப்போ சொன்னது கூட ஏதோ ஒரு ஆதங்கத்துல சொன்னது தான்.” என தயங்க,



“உங்க சார் இதுவரைக்கும் செஞ்சதெல்லாம் போதும். இனியும் எதுவும் செய்ய வேணாம். அவர் தான் சத்தியம் செய்துருக்காரே, அவர் வாயால எந்த உண்மையும் என்கிட்ட சொல்லமாட்டேன்னு, அப்புறம் எப்படி சொல்லுவார். ப்ளீஸ் அண்ணா நீங்களாச்சும் என்ன நடந்ததுன்னு தயவு செய்து சொல்லுங்க. எங்க வாழ்க்கை இப்படியே போயிடனும்னு நீங்க நினைச்சா சொல்ல வேண்டாம், என்ன நடக்கனுமோ நடக்கட்டும்.. நான் கிளம்பறேன்..” என்றவள் எழப்போக,



“அய்யோ யுகிமா… என்ன இப்படியெல்லாம் பேசுற, உங்க வாழ்க்கை நல்லா இருந்தா முதல்ல சந்தோசப்படுறது நான் தான்... சாரோட அம்மாவும் அப்பாவும் ரொம்பவே உடைஞ்சிட்டாங்க.. அவங்கிட்ட முதல்ல பேசிடேன் மா..” என சரியான நேரம் பார்த்து சொல்ல



அவளுக்கும் குற்ற உணர்ச்சி உறுத்தியிருக்க வேண்டும், மகள் போல பார்த்துக் கொண்டவர்களிடம் முகத்தைத் திருப்பிக் கொண்டு, எங்கிருக்கிறோம், என்ன செய்கிறோம் என்ற எந்தத் தகவலையும் கொடுக்காமல், ஊரை விட்டுச் சென்றது மனதை அழுத்த, தன் மொபைலில் ப்ளாக் லிஸ்டில் இருந்த சுந்தரியின் என்னை விடுவித்து கால் செய்ய ஆரம்பித்தாள் சம்யுக்தா.
 
Top