• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
878
மனம் – 18


இரவுகளைக் கொன்று

கனவுகளில் கதை பேசிடும்

நேரங்களில் நடுநிசியில்

மலரும் மலராய் இருந்தேன்...

கரம் விட்டு நீயும் காதல்

கொண்டு சென்ற பின்னே

தலையணை நனைத்திடும்

கண்ணீராய் ஆனேன்..





அன்று வெகு தாமதமாகத்தான் வீட்டுக்கு வந்தான் ப்ரித்வி. உடலிலும் மனதிலும் அத்தனைச் சோர்வு. ஆனால் அதையெல்லாம் பின் தள்ளியிருந்தது ஜகனின் பேச்சு. யுகிக்கும் தனக்கும் நடந்த பேச்சு வார்த்தையை அவனிடம் சொல்லியிருந்தார் ஜகன்.



அதோடு ஜகனும் அவனிடம் பேசியிருந்தார். தனக்கு கீழ் வேலை பார்ப்பவர் என்றெல்லாம் ப்ரித்வி வேறுபாடு காட்டுவதில்லை. எல்லோரிடமும் தோழமையோடு தான் நடந்து கொள்வான். ஜகனிடம் சற்று அதிக பாசம் அவனுக்கு. அவரது வயதும் அனுபவமும் அதற்கு காரணமாக இருக்கலாம். அது தான் இன்று அவர் பேசியதை பொறுமையாகக் கேட்க வைத்தது.



“சார்… உங்களுக்கும் யுகிம்மாவுக்கும் என்ன பிரச்சினை..” என்றார் எடுத்த எடுப்பிலே. அவரது கேள்விக்கனை ஈட்டியாக பாயும் வரைக்குமே அப்படி எந்த யோசனையும் அவன் மனதில் ஓடவில்லை. யுகிக்கு என்ன.? அவள் நல்லமுறையில் பாதுகாப்பாக தன் வீட்டில் இருக்கிறாள், துணைக்கு தன் பெற்றோர் இருக்கிறார்கள் வேறென்ன பிரச்சினை அவளுக்கு. இப்படித்தான் அவன் எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. இப்போது ஜகன் கேட்கவும், புரியாமல் பார்த்தான்.



“என்ன ஜகன் சொல்றீங்க.. எனக்கு ஒன்னும் புரியலையே.. அவளுக்கும், எனக்கும் என்ன பிரச்சினை” என்றான் புரியாமல்.



“சார்..” என்று ஆரம்பித்து இன்று யுகி தன்னிடம் பேசியதைச் சொல்லி, “அவங்க மனசுல ஏதோ ஒரு கஷ்டம் இருக்கு. அது என்னன்னு எனக்கு தெரியல, நீங்க தான் அதைக் கண்டுபிடிக்கனும். எனக்குத் தெரிஞ்சி ரொம்ப தனிமையா ஃபீல் பன்றாங்க போல. அவங்க மாமா தான் யுகிக்கு எல்லாமுமா இருந்தார். இப்போ அவர் இல்லைன்றதை அவங்களால ஏத்துக்க முடியல. அதை சரி செய்ய வேண்டியக் கடமை உங்களூக்குத் தான் இருக்கு. நீங்க செஞ்சிருக்கனும். செய்யாம விட்டது ரொம்ப தப்பு. உங்க பேரன்ட்ஸ் எவ்வளவோ செஞ்சாலும் அதெல்லாம் யுகி மனசை மாத்தாது. அவங்க ஆறுதலை உங்கக்கிட்ட எதிர்பார்க்குறாங்க. ஆனா நீங்க அதை கொடுக்கல..” என்றவர்,



“ஒரு பேச்சுக்கு வச்சிப்போம்.. தப்பா எடுத்துக்காதீங்க, ஒரு பேச்சுக்குத் தான். யுகி இடத்துல நீங்க இருந்திருந்தா இந்த கஷ்டத்தை எப்படி கடந்து வந்துருப்பீங்க. என்ன தான் அப்பா அம்மா பார்த்துக்கிட்டாலும், ஒரு மனைவி கணவண்கிட்ட தான் தன்னுடைய ஆறுதலை எதிர்பார்ப்பாங்க.. நமக்கு வேலை எப்பவும் இருந்துக்கிட்டே தான் இருக்கும். அதுக்காக குடும்பத்தைப் பார்க்க மாட்டேன்னு சொல்றது எந்த வகையில சரி.. முதல் வேலையா யுகிம்மாக்கிட்ட பேசுங்க. அவங்க நார்மல் ஆனாதான் உங்களால இந்த கேஸ்ல ஈடுபாட்டோட வேலை செய்ய முடியும். அந்த சைமனையும் பிடிக்க முடியும்..” என்று சொல்ல, தலையசைத்தானே தவிர பதிலொன்றும் சொல்லவில்லை.



எத்தனையோ பதவி உயர்வுகள், அத்தனையும் இடமாற்றத்துடன் வந்ததால் அதையெல்லாம் வேண்டாமென்று தன் பெற்றோருடன் இருந்து வருகிறார் ஜகன். குடும்ப வாழ்க்கை எத்தனை முக்கியம் என்று அவரைப் பார்த்துக் கற்றுக் கொள்ளவேண்டும். ஜகனை சென்டிமென்டல் ஃபூல் என நிறைய முறை யோசித்திருக்கிறான் ப்ரித்வி. வீட்டைப் பார்க்காமல் நாட்டைப் பார்த்து ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது அவரது வாதம். அதை அவன் ஏற்றுக் கொள்வதுமில்லை. அதேசமயம் இல்லையென ஒத்துக் கொள்வதுமில்லை. அவரவர் கொள்கை அவரவருக்கு என்று நினைத்து விட்டுவிடுவான். இந்த சூழ்நிலையில் இப்படியும் இருக்க வேண்டுமோ என்று யோசித்தபடியே வேலைகளில் மூழ்கிப் போனான்.



அதே சமயம் வீட்டில் குழப்பத்தில் இருந்த யுகிக்கு அங்கேயே இருந்தால் மேலும் மேலும் அந்தக் குழப்பம் அதிகரிக்கும் போலத் தோன்ற, சுந்தரியிடம் வந்தவள், “அத்தை நான் எங்க வீடு வரைக்கும் போயிட்டு வரேன்..’” என அவர் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் கிளம்பி விட்டாள்.



அங்கு சென்றவள் பொழுது இரவைத் தொட்டும் வீடு திரும்பாமல் இருக்க, சுந்தரிக்குத் தான் திக்கென்றது. உடனே அங்கு கிளம்பிச் சென்று விசாரிக்க, அவளோ “நான் ரெண்டு நாள் இங்க இருக்கேன் அத்த, எனக்கு இங்க இருக்கனும் போல இருக்கு. வேண்டாம்னு மட்டும் சொல்லாதீங்க. உங்க பேச்சை என்னால எப்பவும் மீற முடியாது” என்று அழுத்தமாகச் சொல்லிவிட, அவராலும் மறுத்து எதுவும் பேசமுடியவில்லை. வீட்டிற்கு வந்தவர் கணவரிடம் சொல்லித்தான் புலம்பிக் கொண்டிருந்தார்.



வீட்டுக்கு வந்த ப்ரித்வி நேராகத் தன் அறைக்குச் சென்றுப் பார்க்க, விடிவிளக்கு கூட எரியாமல் அறை இருளில் மூழ்கியிருந்தது. என்ன செய்கிறாள் இருட்டில், இருட்டென்றால் அவளுக்குப் பயமே.!’ என யோசித்த படியே ஸ்விட்சைத் தட்ட, அந்த டியுப்லைட் அவனைப் போலவே மின்னி மின்னி மெதுவாக பளிச்சென்று ஒளியைப் பரப்பியது.



கூசியக் கண்களைத் துடைத்துவிட்டு பார்க்க, அறையில் எங்கேயும் அவள் இல்லை. எங்கே போனாள் என பதட்டத்துடன் வீடு முழுக்க தேடியவன் கடைசியாக போய் நின்ற இடம் பெற்றோரின் அறை.



தயக்கத்துடன் அறைக்கதவைத் தட்டியபடி நிற்க, சொக்கநாதன் தான் திறந்தார். அறைவாயிலில் மகனைப் பார்த்து யோசனையுடன், “என்ன கண்ணா இந்த நேரத்துல..” எனக் கேள்வியைத் தொடுக்க,



“அதுப்பா.. அது அம்மா தூங்கிட்டாங்களா..?” எனத் திணறியபடியே பதில் கேள்வி கேட்க,



அப்போதும் அதே பார்வையோடு, “உனக்குத் தெரியாதா..? யுகி இன்னைக்கு அவங்க வீட்டுக்கு போறேன்னு போய்ட்டா.. நைட் ஆகிடுச்சுன்னு உங்கம்மா போய் கூப்பிட்டதுக்கு ரெண்டு நாள் இங்க இருந்துட்டு வர்ரேன்னு சொல்லிட்டாளாம். இங்க வந்து என்கிட்ட புலம்பிட்டே இருந்தா.. யுகி அந்த வீட்டுல தனியா இருக்குரது சரியா வராதுன்னு நான் தான் உன் அம்மாவை மறுபடியும் கொண்டு போய் அங்க விட்டுட்டு வந்தேன். யாரும் சொல்லலையா..?” என்றார்.



அவர் பேசப்பேசவே தளர்ந்து விட்டான் ப்ரித்வி. ஜகன் சொல்லும் போது புரியாததெல்லாம் யுகியின் இந்தச் செயலில் புரிவது போல இருந்தது. பதிலேதும் சொல்லாமல் தலை குனிந்து நின்றிருந்த மகனைப் பார்க்கும் போது பெற்றவருக்கும் வருத்தமாகவிட,



“ப்ரித்வி… நீ இதுவரைக்கும் யார் முன்னாடியும் இப்படி நின்னது கிடையாது. என்னையும் நிக்க வச்சது கிடையாது. இனியும் நிக்க வைக்க மாட்டேன்னு நினைக்கிறேன். உனக்கு யுகி மேல விருப்பம் இருக்கப் போய் தான், நாங்க போய் பெண் கேட்டோம். நீ சந்தோசமா இருப்பன்னு நினைச்சி தான் இந்த கல்யானத்துக்கும் ஒத்துக்கிட்டோம். இப்போ நீயும் சந்தோசமா இல்ல, உன்னை நம்பி வந்த பிள்ளையும் சந்தோசமா இல்ல. உன்கிட்ட இதை நான் எதிர்பார்க்கல..” என்றார் வருத்தமான குரலில்.



தந்தையின் வருத்தமான இந்தப் பேச்சில் ப்ரித்விக்கு மேலும் குற்ற உணர்வு அதிகமாகியது. ஆனாலும் தன் பக்கம் இருக்கும் விளக்கங்களைக் கொடுத்தே ஆக வேண்டும் என்பதால், அவரிடம் நடந்ததை மிக சுருக்கமாக சொன்னான். ப்ரித்வி சொன்னதைப் பொறுமையாகக் கேட்டவர், “உன்னோட வேலையில் இருக்கும் பிரச்சினையை நீதான் அவளுக்குச் சொல்லிப் புரிய வைக்கனும். கல்யானம் முடிஞ்ச அன்னைக்கே அவ உன்னைப்பத்தி புரிஞ்சிக்கனும்னு நினைக்கிறது முட்டாள்தனம் இல்லையா.. தொழில் முக்கியம் தான். அதைவிட முக்கியம் குடும்பம். அதை நீ புரிஞ்சிக்கோ கண்ணா..”



“உன் கூட வாழப்போற வாழ்க்கையில ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோட அந்தப் பொண்ணு அடியெடுத்து வச்சிருக்கும். முதல் நாலே அதோட ஆசையை வீணடிச்சிட்டே. இதுல யாருமே எதிர்பார்க்காதது சண்முகத்தோட இறப்பு. இது யுகிக்கு எவ்வளவு பெரிய இழப்பு தெரியுமா..? அப்போ நீ அவ கூட இருந்துருக்க வேண்டாமா..? உனக்கு நான் இருக்கேன்னு காட்டியிருக்க வேண்டாமா..? அந்த நொடி இதை செஞ்சிருந்தா, தப்பே நீ செய்திருந்தாலும் யுகி உன்ன விட்டுக் கொடுக்க மாட்டா.. ஆனா அந்த நம்பிக்கையை நீ கொடுக்கலதானே. நானும் உங்கம்மாவும் இப்படியா உன்னை வளர்த்தோம்.” என்றவர், மகனின் தலை நிமிராததைக் கண்டு அவனிடம் வந்து



“கண்ணா.. போனது போகட்டும்.. யுகிக்கு ஏதொ ஒரு சின்ன கோபம். அது சீக்கிரமே சரியாகிடும். நீ எல்லாமே சரி செய்துடுவ எனக்கு நம்பிக்கை இருக்கு. போ போய் ரெஃப்ரஸ் ஆகிட்டு வா.. நான் தோசை ஊத்துறேன். சாப்பிட்டு படு. காலையிலே போய் யுகியைப் பாரு. இன்னேரம் ரெண்டு பேருமே தூங்கிருப்பாங்க..” எனச் சொல்ல,



“இல்லப்பா யுகி தூங்கிருக்க மாட்டா. நான் அங்க போறேன். நீங்க இங்க தனியா சமாளிச்சிப்பீங்கன்னா ஓகே.. இல்லைன்னா பூட்டிட்டு வாங்க அங்கே போகலாம்..” என மகன் கெஞ்சுவதைப் போலச் சொல்ல, அவருக்கும் மறுக்க முடியவில்லை.



சரியென்று தலையசைக்க, வீட்டைப் பூட்டிவிட்டுக் கிள்மபிவிட்டனர். போவதற்குள்ளாகவே மனைவிக்கு அழைத்துச் சொல்லியிருக்க, சுந்தரி தோசைக் கல்லை அடுப்பில் வைத்துவிட்டு, இவர்களுக்காக கதவைத் திறந்து வைத்திருந்தார்.



இருவரையும் பார்த்து முறைத்த சுந்தரியைக் கண்டு கொள்ளாமல் ப்ரித்வி யுகியின் அறைக்குச் செல்ல, சொக்கநாதனோ “நீ எதுவும் அவன்கிட்ட பேசாத, நானும் பேசியிருக்கேன். ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும். இப்போ தோசையை ஊத்து. பசியோட வந்திருப்பான் போல. மருமக சாப்பிட்டாளா..?” என்றபடியே டைனிங்க் சேரில் அமர



“நல்லப்பையனா இருந்தா நான் என்ன சொல்லப் போறேன். உடம்பு முழுக்கத் திமிர்பிடிச்சு அழைஞ்சா திட்டாம கொஞ்சுவாங்களா..” என்றவர், “யுகி சாப்பிட்டு முன்னமே படுக்கப் போய்ட்டா… இப்போ தூங்கிருப்பா..” என அவரும் தன் பங்கிற்கு மகனை வறுத்துவிட்டு அடுப்படிக்குள் நுழைந்தார்.



யுகியின் அறைக்குள் நுழைந்த ப்ரித்வி முதலில் பார்த்தது அவளது கட்டிலைத்தான். ஒருவேளைத் தூங்கியிருப்பாளோ என்று. ஆனால் அவனை வரவேற்றது வெற்றுக் கட்டில் தான். பிறகுதான் பார்வையை அறையைச் சுற்றி அலையவிட்டான். அங்கிருந்த சோபாவில் இரு கால்களையும் குறுக்கி, ஒரு கையால் கால்களைப் பிடித்து, மறுகையை கன்னத்தில் முட்டுக் கொடுத்து சோபாவில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள் அவனது தேவதை.



சில நிமிடங்கள் நின்று அவளையேப் பார்த்தவன், கீழே இருவரும் தனக்காகக் காத்திருப்பது புரிய, நொடியில் தன்னை மீட்டு, அவசரமாக ஒரு குளியலைப் போட்டுக் கீழே ஓடினான். சுந்தரி ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தாலும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவசர அவசரமாக நாலு தோசையை முழுங்கிவிட்டு, இருவருக்கும் பொதுவாக ஒரு குட்னைட்டை சொல்லிவிட்டு மேலேறி விட்டான்.



அலுங்காமல் மனைவியை அள்ளியவன், கட்டிலில் விட்டுத் தானும் அவளை நெறுக்கிப் படுத்துக் கொண்டான். எப்படி எங்கே ஆரம்பிப்பது, மனைவியை எப்படி சமாதானம் செய்வது என பல யோசனைகளின் மத்தியில் ப்ரித்வியும் தன் உறக்கத்தை தொடர்ந்தான்.



அன்றைய விடியல் மிகவும் அமைதியாக ஆரம்பித்தது ப்ரித்விக்கு. மொபைல் கதறும் சத்தத்தில் தான் எழுந்து கொண்டான். பக்கத்தில் இருந்த மனைவியைக் காணவில்லை. மணியைப் பார்த்தான். அது எட்டெனக் காட்ட, வேகவேகமாக கிளம்ப ஆரம்பித்தான். குளித்து விட்டு வந்தவனின் கையில் மௌனமாக டீயை நீட்ட, அவளை ஒரு பார்வை பார்த்தவன், டீயை வாங்கிய அடுத்த நொடி அவள் ஓடிவிடும் அபாயம் இருப்பதை உணர்ந்து ஒரு கையால் அவளைப் பிடித்துக் கொண்டு, மறுகையால் டீயை வாங்கி அதை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, பிடித்திருந்த மனைவியின் கையை வளைத்து தன்னோடு பினைத்துக் கொண்டான்.



அவனின் அணைப்பு இறுகிக் கொண்டே சென்றதைப் போல, யுகியின் உடலும் இறுகிக் கொண்டே சென்றது. அதன் வித்தியாசம் புரிந்தாலும், மனைவியை விளக்காமல், தானும் அமர்ந்து அவளையும் அமர்த்தி அவள் முகத்தையே விடாது பார்த்துக் கொண்டிருந்தான்.



தலையைக் குனிந்து அமர்ந்திருந்தாளே ஒழிய, பேசவே இல்லை. நொடிக்கு நூறு மாமா போட்டு வாய் மூடாமல் பேசும் அவனது சதாக்குட்டியின் இந்த மௌனம் அவனைக் கொல்லாமல் கொன்றது என்பது உண்மை. அதற்கு காரணமும் அவன் தானே. தாடையைப் பிடித்து முகத்தை நிமிர்த்தியவனை விழி திறந்து கூட பார்க்கவில்லை அவள்.



“குட்டிம்மா.. என்னாச்சு உனக்கு… நானும் வந்ததுல இருந்து பார்த்துக்கிட்டே இருக்கேன். என்கிட்ட நீ ஒரு வார்த்தைக் கூட பேசவே இல்லை. என் மேல என்ன கோபம். எதுவும் சொன்னாதானே எனக்குத் தெரியும்..” என மிகவும் மென்மையாகக் கேட்க,



நாடியைப் பிடித்திருந்த அவனின் கையைத் தட்டி விட்டவள் “அதுக்கு நீங்க என் கூட பேசியிருக்கனும். இல்லை ஏன் இப்படி இருக்க அப்படின்னாவது கேட்டுருக்கனும். எதுவுமே கேட்காம இப்போ வந்து நான் பேசலன்னு சொல்றது எந்த வகையில சரி..” நெருப்பில் இட்ட கடுகு போல படபடவென பொரிய, இமைக்கமால் மனைவியின் முகத்தையேப் பார்த்திருந்தான் ப்ரித்வி.



வாய் பேசும் வார்த்தையெல்லாம்

கண் பேசும் அல்லவோ

கண் பேசும் வார்த்தையைத்தான்

கண்ணீரும் சொன்னதோ
 
Top