• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
மனம் – 2


ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் மலரல்ல நீ

என் ஆயுளுக்கு ஒருமுறை

பூத்த மலர் நீ

ஆனால் வாடுவது நீயல்ல

வாடிக்கிடப்பது நான்



சீராக திருத்தப்பட்ட தலை முடி, சவரம் செய்து பளபளக்கும் முகம், மெரூன் நிற சர்ட், ஹாஃப் வொய்ட் பேன்ட், ப்ரௌன் லெதர் ஷூவுடன் அந்த வகுப்பறைக்குள் அவன் நுழைய சட்டென்று பேச்சு சத்தம் அடங்கி, மாணவ மாணவிகள் தங்களை அறியாமல் எழுந்து நின்று வணக்கம் சொன்ன போது, மனதிற்குள் ஒரு சின்ன குதூகலம் எட்டிப் பார்ப்பதை அவனால் உணர முடிந்தது.



குளிர் கண்ணாடியை கழட்டி சட்டை பாக்கெட்டில் சொருகியவாறு கணினி பையை மேஜை மேல் வைத்தான். சுருக்கமான அறிமுகத்துடன், ரேகாவுடன் ஏற்பட்ட தற்காலிக ஏற்பாடு பற்றி விளக்கிவிட்டு மாணவர்கள் ஒத்துழைப்பு தனக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டான். உயரமாக நல்ல கட்டுமஸ்தான உடல்வாகுடன் இருப்பவனை சற்று பிரமிப்பாக பார்த்து கொண்டிருந்தவர்கள் ‘எஸ் சார்’ என்று பாட, மனம் பஞ்சு போல ஆனது.



நேரம் போவதே தெரியாமல் தன் பாட அறிவாலும், பேச்சு திறமையாலும் வகுப்பை கட்டுண்டு வைத்து இருந்தவனை ஒரு பரிச்சயமான குரல் தடை செய்தது.



“எக்ஸ்யூஸ் மீ சார். மே ஐ கம் இன்?” வாசற்புறம் பார்வையை திருப்பினான். மஞ்சளும் நீலமும் கலந்த எளிமையான சல்வார் உடையில் சம்யுக்தா நின்று கொண்டிருந்தாள்.



திரும்பியவன் முகத்தை அப்பொழுது தான் சரியாக பார்த்த சம்யுக்தாவினுள் அதிர்ச்சி, துக்கம், வலி, கோபம், வெறுப்பு என்று பெரும் உணர்ச்சி கலவை உண்டானது. இதை அவனாலும் உணர முடிந்தது. வாழ்க்கையில் பல பல அனுபவங்களை சந்தித்தவனுக்கு இந்த தருணம் அவளுடன் உணர்வு போர் செய்யும் வலு இல்லை.



ஜன்னல் வழியாக வெளியே குதித்து வெகு தூரம் ஓடி விட அவன் துடிக்க, பூமி அகன்று தான் உள்ளே விழுந்து காணாமல் போகமாட்டோமா என்று பெண் ஏங்கினாள். உள்ளே குமுறும் எரிமலைகளை வெளி காட்டாமல் முகத்தை சாதாரணமாக வைத்து கொள்ள இருவரும் பிரம்ம முயற்சி செய்ய வேண்டி இருந்தது.



‘ஓடு’ என்று மூளை கட்டளையிட அதை அவள் கால்கள் செயல்படுத்துவதை அவன் குரல் தடுத்தது.



“உள்ள வாங்க ச… மேம்”, அவசரமாக அவளுக்கு தான் இட்ட செல்ல பெயரான ‘சதா’ வை வாய்க்குள்ளேயே தடுத்து திருத்திக்கொண்டான்.

பொம்மை போல நடந்து அவனிடம் கல்லூரி முதல்வர் கொடுத்த கடிதத்தை நீட்டினாள். ப்ரித்வி அதை வாங்கிப் படித்துவிட்டு, அவளை ஒரு பார்வை பார்த்தவன், பின் மாணவர்கள் பக்கம் பார்த்தான்.



“இவங்க மிஸ். சம்யுக்தா. தன்னோட படிப்பை உங்க கூட தொடர போறாங்க.” என்று சுருக்கமாக சொன்னவன். “உள்ளே போய் உட்காருங்க.” என்றான் அவளிடமும்.



‘ஹலோ சம்யுக்தா’, ‘வெல்கம் சம்யுக்தா’, ‘ஹாய்’ என்ற பல வரவேற்புகளை கேட்டு லேசான புன்சிரிப்பை பதிலாக உதிர்த்துவிட்டு காலியான இருக்கை ஒன்றில் சென்று அமர்ந்தாள். பார்வையை தாழ்த்தி டெஸ்கை வெறித்தவள், அவன் வகுப்பை விட்டு செல்லும் வரை நிமிரவே இல்லை. அவனுக்கும் அவள் வந்த பிறகு என்ன பாடம் எடுத்தோம் என்று நினைவு இல்லாமல் வகுப்பு முடிந்தவுடன் அவசரமாக வெளியேறினான்.



அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்று புரியாமல் அவள் தவிக்க, அவனை கண்ணால் பார்ப்பதற்கு தன் வானரக் கூட்டத்துடன் தெரு தெருவாக ஆரம்பத்தில் விளையாட்டாகவும் பின்பு தீவிரமாகவும் சுற்றியது என்ன? சீக்கிரத்தில் அவன் அவளை ஏற்றானா? அவன் மனதில் நுழைய என்ன பாடுபட்டிருப்பாள்? அதெல்லாம் வீண்.. முடிந்து போன விஷயம். ஆனால்..?



இன்று இருவரும் ஒரே இடத்தில் இருந்தும் இரு துருவமானது எப்படி? எவனை வெறுத்து ஊரை விட்டு வெகு தூரம் தள்ளி இருக்கும் கல்லூரிக்கு வந்தாளோ, அங்கு அவனே தன் வேலையை விட்டு விட்டு பாடம் எடுக்க வந்தது விந்தையிலும் விந்தை. இப்படி தான் விதி விளையாடுமோ? யோசிக்க யோசிக்க ஒன்று தெளிவானது. தன்னால் சாதிக்க முடியும், அவன் தயவில்லாமல் வாழ முடியும் என்று நிரூபிக்க வேண்டும் என்ற திடம்… வெறி ஏற்பட்டது.



அப்போது ப்ரித்வி போலிஸ் ட்ரெயினிங்கில் இருந்து விடுமுறையில் வந்திருந்தான். அவன் வீட்டின் கொள்ளையில் இருக்கும் மாமரம் தான் எப்பொழுதும் அவனது ஆஸ்தான இடம். பெரும்பாலன அவனுடைய நேரங்கள் அங்கு தான் செலவாகும்.



அப்படியொரு நாளில் அவன் மாமரத்தின் கீழே கட்டிலில் படுத்தபடி புத்தகம் வாசித்துக் கொண்டிருக்க, அவன் மேல் சிறு கல்லொன்று விழ, அதில் கவனம் கலைந்தவன் பறவைகள் தான் என்று நினைத்து மீண்டும் தன் வாசிப்பைத் தொடர, இப்போது வந்து விழுந்தது சற்று பெரிய கல். மரத்தில் இருக்கும் காய்களை பக்கத்திலிருக்கும் சிறுவர்கள் வந்து யாருக்கும் தெரியாமல் அடித்துக் கொண்டு செல்வது தான். அப்படித்தான் இருக்கும் என்று அவனும் கண்டு கொள்ளவில்லை. இப்படியே மூன்று முறை. ஆனால் இம்முறை கல் அவன் நெற்றியை பதம் பார்த்திருந்தது.



‘ஸ்ஸ்..; என்று நெத்தியைத் தடவிய ப்ரித்விக்கு இப்போது சந்தேகம் தோன்ற அரவம் காட்டாமல் மெதுவாக எழுந்து சென்று காம்பவுன்டை ஒட்டி நிற்க, அடுத்தக் கல் எரிய ஓங்கியக் கையை அப்படியேப் பிடித்தான் “போலிஸ்காரன் வீட்டுலயே திருட்டா..” என்ற வார்த்தையோடு.



“டேய்… அந்த சிடுமூஞ்சி போலிஸ் வந்துட்டான் போலடா… வாங்கடா ஓடிடலாம்.. யுகிக்கா ஓடிரு… அவன் கையை அப்படியேக் கடிச்சி வச்சிட்டு ஓடிரு..” என்று சொல்லிவிட்டு அவளை சுற்றி இருந்த வானரக் கூட்டம், அவளை மட்டும் சிக்க வைத்துவிட்டு ஓடியிருந்தது.

அவனிடம் இருந்து கையை உருவ முயல, அது முடியாமல் “விடுங்க ண்ணா.. ப்ளீஸ்… அந்தப் பசங்க கேட்டாங்கன்னு தான் செஞ்சேன்… சாரிண்ணா..” என யுகி என்ற சம்யுக்தா கெஞ்சலில் இறங்க…



“ஹேய்.. படிச்ச பொண்ணு தான நீ.. இப்படி அடுத்தவங்க வீட்டு சுவரேறி குதிச்சு திருடுறியே தப்பில்ல.. நீ அந்த சண்முகம் சித்தப்பா வீட்டுல இருக்குற பொண்ணு தானே. நான் உனக்கு அண்ணன் இல்ல, மாமா.. இனி அண்ணன் எல்லாம் கூப்பிடக் கூடாது சரியா…” என மிரட்ட



இவன் சத்தத்தைக் கேட்டு வெளியில் வந்த ப்ரித்வியின் அம்மா சுந்தரியின் கண்ணில் பட்டது காம்பவுன்ட் சுவற்றின் ஒருபக்கம் கால் உள்ளேவும், மற்றொரு கால் வெளியேவும் இருக்க, அவளின் கை அவனிடம் மாட்டிக் கொண்டு கண்களில் நீர் வழிய இருந்த சம்யுக்தாவைத்தான்.



“ஹேய்.. என்னடா பன்ற புள்ளைய.. விடு கைய விடு முதல்ல..” என தன் மகனிடமிருந்து சம்யுக்தாவின் கையை உருவி விட்டு, அவளைக் கீழே இறக்கி, அங்கிருந்த கட்டிலில் அமரவைத்து.. “ஏய் வாலு.. உனக்குத்தான் நான் பெர்மிஷன் கொடுத்துருக்கேன்ல.. வீட்டுக்குள்ள வந்து பறிச்சிட்டுப் போக, அந்த வானரங்கள் கூட சேரக்கூடாதுன்னும் சொல்லிருக்கேன்ல.. எப்போதான் சொன்ன பேச்சுக் கேட்ப நீ..” என அவளின் காதைப் பிடித்து திருக,



“இல்ல ஆன்ட்டி.. அந்த கவின் தான் சொன்னான். திருடித் திங்கிற மாங்காய் தான் ருசியா இருக்கும்னு.. அதுதான் செக் பண்ணலாம்னு..” என அசடு வழிய

“அதுக்கு…” என அவள் பேச்சில் வாய்விட்டு சிரித்தவர், “உனக்கேத்த மாதிரி தான் ஆளுங்களையும் பிடிச்சிருக்க, சில் வண்டுங்க.. சரி வா.. இன்னைக்கு மாங்கா புளி வச்சிருக்கேன். ப்ரித்விக்குப் பிடிக்கும்னு. உனக்கும் பிடிக்கும்ல. சாப்பிட்டு வீட்டுக்கு எடுத்துட்டுப் போ.. அண்ணாக்கும்” என அவளை எழுப்ப,



“ம்மா.. நான் என்ன இங்க காமெடியா பண்ணிட்டு இருக்கேன். திருடிக்கெல்லாம் சப்போர்ட் பண்ணாத. இனிமேல் இப்படி செய்யக் கூதுன்னு சொல்லு, அப்புறம் முதல்ல நான் அவளுக்கு என்ன உறவுன்னு சொல்ல..” எனக் கடிக்க



“இவன் கிடக்கான் நீ வா யுகி.. அவன் உனக்கு மாமா வேனும். மாமான்னு சொல்லு..” என மகனைக் கண்டு கொள்ளாமல் அவளை அழைத்துக் கொண்டு நகர்ந்துவிட, சுந்தரியின் கையைப் பிடித்தபடி பின்னாடி சென்ற சம்யுக்தாவின் முகம் முழுவதும் குரும்பு புன்னகை. கடுகடுவென நின்றிருந்தவனைப் பார்த்து அவளுக்கு குஷியாகிவிட, நாக்கைத் துருத்தி அழகு காண்பிக்க, அந்த அழகில் ப்ரித்வி சொக்கிப் போனாலும் அதை வெளிக்காட்டாமல், “அடிங்க்..” என அவன் விரட்டுவது பாவ்லா காட்ட, சுந்தரிக்கு முன்னே எட்டெடுத்து வைத்து ஓடிப்போனாள்.



கல்லூரி முடிந்தது என மணியடிக்கும் ஓசைக் கேட்டு நினைவுக்கு வந்தவள், மீள முடியாத நினைவுகளில் இருந்து மீளும் மார்க்கம் அறியாமல், ஒரு பெருமூச்சோடு தன் பேகை எடுத்துக் கொண்டு வெளியில் நடந்தாள்.
 
Top