• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
866
யுகியின் முகம் அழ தயாரானது. ‘இதுக்கு மேல எனக்கு வேலை குடுக்காதே’ என்று அவள் கால்கள் கெஞ்சின. ப்ரித்வி அவள் கையை பிடித்து வெளியே அழைத்து வந்தான். இருவரும் ஒரு பெஞ்சில் அமர்ந்தனர். யுகி கால்களை நீவி விட்டு கொண்டே, “சே, இப்படி ஆயிடுச்சே”, தனக்கு தானே நொந்து போனாள். கொஞ்ச நேரம் அவர்களிடையே பேச்சே காணாமல் போனது.

திடீரென்று ப்ரித்வி “கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா”, என்று முணுமுணுத்தபோது அவளுக்கு அழுகையும் சிரிப்பும் மாறி மாறி வந்தது.



ப்ரித்வி அங்கே இருந்த ரிசார்ட்டில் ரூம் கிடைக்குமா என்று விசாரித்தான். அங்கேயும் இடம் இல்லை. இனி மறுபடியும் சிட்டிக்கு திரும்பி போவது தவிர வேறு வழி இல்லாமல், மெயின் ரோட்டிற்கு வந்தார்கள். மீண்டும் ஒரு 15 நிமிஷ காத்தலின் பிறகு ஒரு ஆட்டோ அவர்கள் பக்கம் வந்து நின்றது. பின்னால் உட்கார்ந்த பயணி, டிரைவர் பக்கத்தில் அமர, இவர்கள் இருவரும் பின்னால் ஏறி உட்கார்ந்தார்கள். ரிவ்யூ கண்ணாடி மூலம் அவர்களை விஷமமாக பார்த்த டிரைவரை அவர்கள் கவனிக்கவே இல்லை.

ஆட்டோ டோல்-கேட்டை கடந்து அரை கிலோமீட்டர் சென்று இருக்கும். டிரைவர் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தினான். பெட்ரோல் டாங்கை பார்ப்பது போல வண்டிக்கு பின்னால் சென்றான். சிறிது நேரத்தில் முன்னால் அமர்ந்த பயணியும் பின்னால் சென்றான். நேரமாக ஆக ப்ரித்விக்கு ஏதோ சந்தேகம் தோன்றியது. ஆனால் அவன் உஷாராகும் முன் டிரைவர் ப்ரித்வி பக்கமும், அடுத்தவன் யுகி பக்கம் கத்தியுடனும் நின்றார்கள்.



“மருவாதியா கீழே எறங்கி கைல இருக்கற பொருளெல்லாம் குடுத்துடு”, டிரைவர் வில்லனாக மாறினான்.



ப்ரித்வி தங்களை கொள்ளையடிக்க வந்தவர்களை அளவிட்டு கொண்டு நிதானமாக இறங்கினான். அவனை பின்பற்றி கலவரத்துடன் அவசரமாக இறங்கிய யுகி கழுத்தில் ஏதோ உறுத்தியது.

“பையை திறந்து கொட்டு“, டிரைவர் உறுமினான்.

பையை திறக்க யுகி தடுமாறிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ப்ரித்வி டிரைவர் மேல் பாய்ந்து அவனை அடித்து கீழே தள்ளினான். அதற்குள் மற்றவன் கத்தியுடன் ப்ரித்வியை தாக்க வந்தான். இருவரும் தரையில் விழுந்து புரண்டார்கள். சிறிய போராட்ட முடிவில் ப்ரித்வியின் ஒரு கையில் கத்தியும், மறுகையில் காயமும் வந்து சேர்ந்தன.



இதற்குள் டிரைவர் எழ முயற்சி செய்ய, யுகி ஜோல்னா பையால் அவன் மண்டையில் மாறி மாறி அடித்தாள். அவன் ஐயோ அம்மா என்று அலறிக்கொண்டே எழுந்து ஓடி ஆட்டோவை கிளப்பினான். அடுத்தவனும் தொத்திக்கொள்ள, ஆட்டோ இவர்கள் இருவரையும் ‘அம்போ’ என்று நடு ரோட்டில் விட்டுவிட்டு போய்விட்டது. யுகி சிறிது பயத்துடன் தன் கணவனை பார்க்க, அவன் முகமோ கல்லாக இருந்தது.



“உங்க பர்ஸ் பத்திரமா இருக்கா பாருங்க”, குரல் ரொம்ப மெலிந்து நடுக்கத்துடன் ஒலித்தது.



சட்டை, பான்ட் பாக்கெட்களை சரிபார்த்து ப்ரித்வி, “உம் உம்” என்றான். அந்த குரலில் திடுக்கிட்ட யுகி தயக்கத்துடன் நிமிர்ந்த போது தான், அவன் கையில் இருந்த ரத்த கறையை பார்த்தாள். குற்ற உணர்ச்சி மேலோங்க, கையில் கட்டு போட துப்பட்டாவை கிழிக்க போனாள்.



“சின்ன ஸ்க்ராட்ச் தான், துணியை கிழிக்காதே“, அவன் குரலில் கடுமை அதிகமா இருந்தது.



செய்வதறியாது அவள் விழித்து கொண்டு நிற்கையில், அவன் குரலில் மேலும் சுதி ஏறியது, “இங்கேயே நின்னு என்ன செய்ய உத்தேசம்? கொஞ்ச தூரம் நடந்தாலாவது அடுத்த ஸ்டாப் போய் சேரலாம்.”



யுகி பையை மார்புடன் அணைத்துக்கொண்டு பேசாமல் அவனுடன் நடக்க துவங்கினாள். கழுத்தில் எரிச்சல் தோன்ற, அனிச்சையாய் கை கழுத்துக்கு செல்ல, யுகி திகைப்புடன் கூவினாள் , “ஐயோ என்னோட டால்பின் தங்க செயினை காணோமே! ஆட்டோவிலிருந்து எறங்கும் போது என்னமோ உறுத்திச்சு. என் பக்கத்திலே நின்ன படுபாவி தான் கட் பண்ணிட்டு போய் இருக்கணும். கடவுளே! ஏன் இன்னிக்கு எல்லாம் தப்பு தப்பா நடக்குது?” அவள் அழ ஆரம்பித்தாள்.



ப்ரித்வி பொறுமையை இழந்தான். அவள் கையை அழுத்தமாக பற்றி, “முதல்ல அழுகையை நிறுத்தபோறியா இல்லையா?”



அவள் வாயை பொத்தி கேவல்களை நிறுத்த போராடினாள். ப்ரித்விக்கு தன் மேலேயே கோபம் அதிகமாக வந்தது. ‘ச்சே, எப்படிப்பட்ட முட்டாளாக இருந்திருக்கிறான்? இந்த நடு இரவில் இப்படிப்பட்ட ஆபத்துகளை எதிர்பார்த்திருக்க வேண்டாமா? தன் போலீஸ் மூளை எங்கே தூங்கப்போனது’ என்று தன்னையே குற்றவாளி கூண்டில் நிறுத்திக்கொண்டு துடித்தான்.



‘ஒழுங்கா சொந்த வண்டியை எடுத்திட்டு வந்திருந்தா எந்த பிரச்சனையும் ஏற்பட்டு இருக்காது. ஒஹ்! இதென்ன நேரம் சரி இல்லைன்னா யானை மேல உட்கார்ந்தாலும் நாய் கடிக்காம விடாது போல இருக்கே!’



யுகி சிறிது சமாதானம் ஆனவுடன் இருவர் நடை பயணம் மீண்டும் துவங்கியது. கொஞ்ச நேர அமைதிக்கு பின்னால் யுகி மீண்டும் தன் பொலம்பலை ஆரம்பித்தாள்,

“எனக்கு எப்பவும் இப்படி தான்… பேட் லக். நான் எதாவது செய்ய போய் அது எப்படியோ முடியுது. நேரம் நல்லா இல்லைன்னா யானை மேல உட்கார்ந்தா கூட நாய் கடி பட்டே ஆகணும்னு பெரியவங்க சொல்லுவாங்களே, அப்படியே ஆயிடுச்சே.”



ப்ரித்வியின் கோபம் அப்படியே காற்றிலே கரைந்துபோனது. ‘எங்க ரெண்டு பேருக்கும் இத்தனை மன ஒத்துமையா? நான் நெனச்சதையே இவ சொல்றா’, அவன் மனம் ஆச்சரியப்பட்டது.



யுகி ஏக்கத்துடன் தொடர்ந்தாள், ” ஏங்க? நீங்க என்ன என்ன கற்பனை செஞ்சு வெச்சிருந்தீங்களோ, எல்லாத்தையும் நான் கெடுத்துட்டேனா?”





“பரவாயில்லை விடு.” அவன் குரல் அவளை உசுப்பியது.





“விடமாட்டேன், விவரமா பேசுங்க”



“வண்டியை எடுத்துட்டு வந்திருக்கணும்னு தோணிச்சு. போகட்டும் விடு, நம்மளால அடுத்தவங்க சந்தோஷமா இருந்தா, அதுவே போதும்னு திருப்தி பட்டுக்க வேண்டியது தான்”, விட்டேற்றியான பதில் அவளை சீண்டியது.





“என்னால உங்களுக்கு சந்தோஷம் இல்லை, முதல் நாளே தெளிவு படுத்திட்டீங்க. ரொம்ப தேங்க்ஸ்”



“நான் அப்படி எங்கே சொன்னேன்?”





“நீங்க சொன்ன பதிலுக்கு இதானே அர்த்தம்”, குரலில் கோபம் தெரிந்தது.



“நீ கேட்டதுக்கு சொன்னேன், அவ்வளவு தான். இதுக்கு ஏன் இப்படி அலட்டிக்கிறே?”



“நான் அப்படி தான் கேட்பேங்க, ஆனா உங்ககிட்டே என்ன பதில் எதிர்பார்க்கறேன் தெரியுமா? நம்ம சொந்த வண்டியிலே வந்திருந்தாலும் இதெல்லாம் நடந்து இருக்கலாம், நீ கவலைபடாதேன்னு ஆறுதல் சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன்.”



ப்ரித்விக்கு நொந்து போனது. ‘பிரமாத மன பொருத்தம் தான். இவளோட சேர்ந்து கூத்தடிக்கறதுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். ஒழுங்கா வீட்டுல இருந்திருந்தா கொசு கடியோட போய் இருக்கும்.’



அப்படியே நடந்து உத்தண்டியை போய் சேர்ந்தார்கள். ரோட்டோர டீ கடையில் ரெண்டு மூன்று ஆட்கள் தெரிந்தார்கள். யுகியிடம் ‘எதுவும் பேசாதே’ என்று ப்ரித்வி ஜாடை செய்தான். வயதான டீ கடைக்காரர் ஒரு சுவாரஸ்யமான பார்வையை இவர்கள் மீது ஓட்டினார்.



“என்ன தம்பி சாப்பிடறீங்க?”





“2 ஸ்ட்ராங் டீ குடுங்க.”





“இந்த நேரத்துல நடந்து வரீங்க?” டீயை ஆற்றியபடியே பெரியவர் கேட்டார்.



“எங்க வண்டி வழியிலே ரிப்பேர் ஆயிடுச்சு, ஆதம்பாக்கம் போக இங்கேர்ந்து வேற வண்டி எதாவது உண்டா?”



“கடைசி பஸ் போய்டுச்சு, ஆட்டோகாரன் எவனும் இப்ப வரமாட்டான். கால்–டாக்ஸி கூப்பிடலாம், ஆனா காசு அதிகமா செலவாகும், அவங்களும் வர ஒரு மணி நேரமாவது ஆகும். நான் ஒரு வழி சொல்லட்டா? இதோ இந்த சர்தார் இருக்காரு பாருங்க, இவரை எனக்கு 30 வருஷமா தெரியும், நம்பகமான மனுஷர், பட்டினத்துல எறக்கி விட சொல்றேன்”, பெரியவர் நீளமாக பேசினார்.





சர்தார் சிரித்த முகத்துடன் இவர்களை வண்டியில் ஏற்றி கொண்டார். டிரைவருக்கு அருகில் ப்ரித்வியும், கதவு ஓரம் யுகியும் அமர அந்த லாரி கிளம்பியது.



சர்தாருக்கு அவர் பெண் ஞாபகம் வந்ததோ என்னவோ, ‘பேட்டி’, ‘பேட்டி’ என்று யுகியை வாஞ்சையுடன் அழைத்தார். முதல் உதவி பெட்டியை எடுத்து அவள் கையில் கொடுத்தார். யுகி ப்ரித்வியின் காயத்துக்கு மென்மையாக மருந்து போட்டாள். தன்னால் தான் என்ற குற்ற உணர்ச்சி மேலோங்க, சண்டை போட்டதற்கு மிகவும் வருந்தினாள்.



“ச்சே, நான் சொன்னேன்ற ஒரே காரணத்துக்காக என் பின்னால லொங்கு லொங்கு என்று வந்த மனுஷனை, அதுவும் காயம் பட்டு இருக்கற இந்த நிலைமைல ரொம்ப நோகடிச்சிட்டேன், எனக்கு கொஞ்சம் கூட இரக்கம் இல்ல” என்று தன்னையே திட்டி கொண்டு, இனி வாயை திறக்கக்கூடாது என்று முடிவு செய்து கொண்டாள்.



கையை பிசைந்து கொண்டு, வாய் மூடி மௌனியாக இருந்த யுகியை பார்க்க ப்ரித்விக்கு பாவமாக இருந்தது. ஜன்னலை பிடிக்க நீட்டிய அவன் கை, சிறிது நேரத்தில் அவள் இடது தோளிலே ஆறுதலாய் இறங்கியது. தன் இறுக்கம் தளர, கணவன் தோளில் வசதியாக சாய்ந்து கொண்டாள் யுகி. இந்த லாரி பயணம் தான் தடையற்ற பயணமாக அவர்களுக்கு அமைந்தது. சர்தார் அவர்களை லைட் ஹவுஸ் பக்கத்தில் இறக்கிவிட்டார். ப்ரித்வி பணம் கொடுத்த போது கண்டிப்பாக வாங்க மறுத்துவிட்டார்.

“நஹி பேட்டா, இந்த பொண்ணை நல்லா பார்த்துக்கோ.” என்று விட்டுக் கிளம்பினார்.





‘இனி என்ன செய்யணுமோ, நீங்களே சொல்லுங்க’ என்பது போல யுகி, ப்ரித்வியை நிமிர்ந்து பார்த்தாள்.



“இத்தனை தூரம் வந்தாச்சு, கொஞ்ச நேரம் பீச்ல உட்கார்ந்துட்டு அப்புறம் வீட்டுக்கு போலாம் வா.”





யாரும் இல்லாத பீச் மணலில் நடக்கும் சுகமே தனி என்று எண்ணியபடியே இருவரும் பேசாமல் கிழக்கு திசையில் தோள்கள் உரச நடந்தார்கள். மணலில் உட்கார்ந்தார்கள்.



“உன் பையிலே இன்னும் என்ன என்ன இருக்கு?” ப்ரித்வி பையை திறந்து பார்த்தான். பெரிய கிளிமூக்கு மாங்காய், ஒரு பிளாஸ்டிக் டப்பா, சின்ன கத்தி, ஸ்பூன் இன்னும் என்ன என்னமோ தெரிந்தன.



“அடி என் செல்லமே, இந்த ஒரு விஷயத்துக்கே இன்னிக்கு நடந்த எதையும் நான் மனசுல வெச்சுக்க போறதில்ல.”



யுகி சிறு புன்னகையுடன் அந்த மாங்காவை சிறு கத்தியால் வெட்டி, அதன் மேல் டப்பாவில் கொண்டு வந்த மிளகா பொடி, உப்பு எடுத்து தூவினாள்.



இரவு 2 மணிக்கு, செல்ல அலைகள் கால்களை நனைக்க, மினு மினுக்கும் நட்சத்திரங்களின் கீழே, தம்பதிகள் மாங்காயை ரசித்து தின்றார்கள். யுகி சாமான்களை தன் பையிலே திரும்ப வைத்து ஜிப்பை போட்டாள். கைகளை தலையணையாய் வைத்து மல்லாந்து படுத்து வானத்து நட்சத்திரங்களை பார்த்துகொண்டு இருந்த ப்ரித்வி திடீரென்று அடக்க முடியாமல் சிரித்தான். திகைப்புடன் பார்த்த யுகியிடம்,

“அந்த திருடன் தலைல இந்த கல்லு மாங்காவை வெச்சு பூந்து விளையாடிட்டே, அதை தான் நெனச்சிட்டு இருந்தேன்.”



யுகியும் வாய் விட்டு கல கலவென்று சிரித்தாள். அவர்கள் தேன் நிலவு பயணம், மரீனா கடற்கரையிலே நிஜ நிலவின் கீழே, கால்களை தொட்டு தொட்டு முத்தமிட்டு சென்ற அலைகளின் அருகில் இனிமையாக முடிந்திருக்கலாம். ஆனால் அவர்கள் விதியில் இன்னும் நாய் கடிகள் பாக்கி இருந்தன போலும்.



“இன்ன, பீச்சுக்கு ப்ரீயா கேசை தள்ளிகினு வந்துட்டியா பேமானி கய்தே?” பின்னாலிருந்து வந்த ஏளன குரல் அவர்களை துள்ளி எழுந்திருக்க வைத்தது.





கையில் லத்தியை சுழற்றியவாறு ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் இவர்களை அருவருப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தான். யுகியின் கழுத்தில் தொங்கிய புத்தம் புது மஞ்சள் கயிறை நோட்டம் விட்ட அந்த போலீஸ்காரன் குரலில் வெறுப்பு கூடியது, “ரெண்டு ரூபா மஞ்சா கயித்தை கட்டிக்கின்னு வந்து, பீச்சை நாஸ்தி செய்திடுதுங்க, த்தூ.” கனவில் கூட நினைக்க முடியாத குற்றச்சாட்டை கேட்ட ப்ரித்விக்கு, ஒருகணம் வாய் அடைத்து போய்விட்டது. உச்சக்கட்ட அவமானத்தில் யுகியின் உடல் பதறி நடுங்கியது.



“எந்த ஸ்டேஷன் கான்ஸ்டபிள் நீங்க? பப்ளிக்கிட்டே கொஞ்சம் மரியாதையா பேச மாட்டீங்களா?” ப்ரித்வி கோபத்தை அடக்க ரொம்ப பாடுபட்டான்.



“இத பார்றா, துரை கணக்கா நின்னுகினு பெரிய கமிஷனர் கணக்கா சவுண்ட் வுடறாரு சாரு, பயமா இருக்குடா”, கான்ஸ்டபிள் குரலில் நக்கல் அதிகமாகியது.





“நீங்க தெரிஞ்சு சொன்னீங்களோ, தெரியாம சொன்னீங்களோ, இவர் டெபுட்டி கமிஷனர் தான்”, யுகி படபடத்தாள்.





இதை கேட்ட கான்ஸ்டபிள் ‘இதான் இந்த வருஷத்து பெரிய ஜோக்’ என்று சிரிக்க ஆரம்பித்தான்.





‘யானை என்ன, ஐபில் டவர் மேல உட்கார்ந்தா கூட நாய் கடிக்காம விடாது போல இருக்கே!’ ப்ரித்விக்கு பிரமிப்பாக இருந்தது. மெயின் ரோட்டில் நிறுத்தி வைத்திருந்த ஜீப்பை நோக்கி நடக்குமாறு கான்ஸ்டபிள் லத்தியால் ஜாடை செய்தான். யுகி கலவரத்துடன் ப்ரித்வியைப் பார்க்க, அவனோ ‘நட’ என்பது போல தலை ஆட்டினான்.



மௌனமாக ஜீப்பை அடைந்த அந்த ஜோடியின் கைகளில் விலங்கை மாட்டி உள்ளே உட்கார வைத்துவிட்டு இன்ஸ்பெக்டரை தேடி கான்ஸ்டபிள் சென்றான். ‘தலைக்கு மேலே வெள்ளம் போயாச்சு, இனி ஜான் என்ன, முழம் என்ன?’ யுகியை பார்க்க பார்க்க ப்ரித்விக்கு சிரிப்பு பெருகியது. அவளுக்கோ மேலும் மேலும் கண்ணீர் பொங்கியது. ஒரு பத்து நிமிட நரக அவஸ்தைக்கு பிறகு அங்கு வந்த இன்ஸ்பெக்டர் ஜகன் இவர்களை பார்த்து பதறிவிட்டார். அவசர அவசரமாக விலங்குகளை கழற்றி விட்டு சல்யூட் அடித்தார்.



“தேங்க்ஸ் ஜகன்.”



விஷயம் புரிந்த கான்ஸ்டபிள், இருவர் காலிலும் மாறி மாறி விழுந்தான், “நான் புள்ள குட்டிக்காரன் சார், என்ன ஒண்ணும் செஞ்சிராதீங்க சார், அம்மா மன்னிச்சிடுங்கம்மா.. சார் …. அம்மா… சார்...”



பயணத்தின் அடுத்த கட்டமாக ஜீப் இவர்களை சுமந்துகொண்டு வீட்டு தெரு முனை நோக்கி கிளம்பியது. போகும் வழியில் ஒரு 24 மணி நேர மருந்து கடையில் ப்ரித்வி ஏதோ வாங்கி விட்டு மறுபடி ஜீப்பில் ஏறிக்கொண்டான்.



“தேங்க்ஸ் ஒன்ஸ் அகைன், ஜகன்.அப்புறம் பார்க்கலாம்”





ஜகன் ப்ரித்விக்கு மறுபடி சல்யூட் அடித்துவிட்டு ஜீப்பை கிளப்பினார். தெருவில் கால் வைத்து நடக்க தொடங்கியவுடன், அடுத்த நாய்கடி, நிஜ தெரு நாய்கள் மூலமாக இவர்களுக்கு வந்து சேர்ந்தது. அவற்றுக்கு தப்பி ஒத்தையடி பாதை சின்ன கதவை சாத்தியபிறகு தான் இருவருக்கும் மூச்சு வந்தது. இம்முறை சுவரை தாண்டி குதித்து, தங்கள் வீட்டு பால்கனிக்கு ஏறி செல்ல பல பல நிமிடங்கள் பிடித்தன.



ப்ரித்வி ரூம் கதவை திறந்து, படி இறங்கி கீழ் தளத்தில் இருந்த அவன் பெற்றோர் அறைக்குள் சென்றான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவர்களை பார்த்துவிட்டு, நிம்மதியுடன் வெளியே வந்தான். ஹால் ஜன்னல் வழியாக மெயின் கேட்டை நோக்கியவன் கண்ணில் குறட்டை விட்டு தூங்கிகொண்டு இருந்த செக்யூரிட்டி தெரிந்தான்.



சுறு சுறு வென்று கோபம் தலைக்கு ஏற, “உனக்கு நாளைக்கு இருக்குடா கச்சேரி”, ப்ரித்வி மனதிற்குள் கருவினான்.



மீண்டும் மாடி ஏறி, அறையிலோ பாத்ரூமிலோ யுகியைக் காணாமல், பால்கனிக்கு வந்தான். அங்கே சுவற்றில் சாய்ந்தவாறு கால்களை நீட்டி அமர்ந்திருந்த யுகி “சாரி மாமா .. சாரி மாமா” என்று தூக்கத்தில் விசும்பி கொண்டு இருந்தாள். அவள் கால்கள் கன்றி சிவந்து இருந்தன. அங்கங்கே ரத்தம் கட்டி இருந்தது. மனமும் பார்வையும் கனிவுற பார்மசி கவரை பாக்கெட்டில் இருந்து வெளியே எடுத்து, யுகியின் கால் பக்கத்தில் ப்ரித்வி உட்கார்ந்தான்.

காலையில் எழுந்து மாடிக்கு வந்த சுந்தரி பதட்டத்துடன் தன் கணவரிடம் சென்றார்.

“என்னங்க என்னங்க, ரூம் கதவு திறந்து இருக்கு. வாச கதவும் உள்ளே தாள் போட்டு இருக்கு, ஆனா பிள்ளைங்க ரெண்டும் எங்கேன்னு தெரியலை.”



“பதறாதே சுந்தரி, இரு பொறுமையாய் தேடலாம்“, சொக்கநாதன் மாடி ஏறி வந்து ஒரு ஒரு இடமாக பார்த்து விட்டு கடைசியில் பால்கனி திரை சீலையை விலக்கி ஒதுக்கினார். அங்கே கண்ட காட்சி அவர் கண்களை விரிய செய்தது.



பால்கனியில் இருந்த தட்டு முட்டு சாமான்களோடு மகனும், மருமகளும் ஆளுக்கு ஒரு மூலையில் சுருண்டு தூங்கி கொண்டு இருந்தார்கள். பால்கனியில் மூன்று காலி ‘மூவ்’ ஆயின்மென்ட் ட்யூப்கள் எப்படி வந்தன என்று புரியாமல் நாள் முழுவதும் சுந்தரி குழம்பி கொண்டு, சொக்கநாதனையும் பிடுங்கி எடுத்து விட்டார். அன்று மாலை இன்ஸ்பெக்டர் ஜகனிடம் இருந்து ப்ரித்விக்கு வந்த போன்காலை சுந்தரி தான் எடுத்து பேசினார்.



“என்ன நடந்ததுனு தெரியலை ஜகன், 2 பேரும் அப்படி அடிச்சு போட்ட மாதிரி தூங்கறாங்க. எழுப்பவே முடியலை”



காலையில் பூவிலங்கில் ஒன்று சேர்ந்த ஜோடி, இரவு கடற்கரையில் இரும்பு விலங்கோடு போலீஸ் ஜீப்பில் உட்கார்ந்திருந்த காட்சி ஜகன் மனதில் மின்னலாய் தோன்றி மறைந்தது.



“பரவாயில்லம்மா, நான் நாளைக்கு சார் கிட்டே பேசிக்கறேன்” எதையும் காட்டிக்கொள்ளாமல் சாதாரண குரலில் சுந்தரிக்கு பதில் கூறி, ‘ஹிட் அண்ட் ரன்’ கேசில் கைதான ஒரு ஆட்டோ டிரைவரிடம் பிடிபட்ட டால்பின் டிசைன் தங்க சங்கிலி பற்றி ப்ரித்வியிடம் மறு நாள் பேசலாம் என்று நினைத்துகொண்டே ஜகன் போனை கீழே வைத்தார்.



--சுபம்--







 
Top