• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
மனம் – 3


இந்த உலக உருண்டைக்குள்

எனக்கோர் உலகம் நீ

ஆனால் சுற்றுவது நீயல்ல

உன்னை சுற்றுவது நான்



அடுத்து வந்த நாட்களில் பல இடங்களில் – புக் ஸ்டோர், கேண்டீன், ஏடிஎம், பார்கிங் ஏரியா என்று ஒருவர் கண்ணில் அடுத்தவர் பட்டு கொண்டாலும் அவனுடன் தனியே இருக்க நேராதபடி பார்த்துக் கொண்டாள் சம்யுக்தா. அதை புரிந்து கொண்டவனாய் ப்ரித்வியும் அவளுடன் பேச முயற்சிக்கவில்லை.



வாழ்க்கையில் சில நிகழ்வுகள் மனிதர்களை எப்படி மாற்றி விடுகிறது என்று ஆச்சரியத்துடன் நினைத்தான். துள்ளலும் கலகலப்புமாய் எப்பொழுதும் விளையாட்டு பெண்ணாய் எந்த கவலையில்லாமல் இருந்தவளிடம் இன்று எப்படி இப்படி ஒரு அமைதி… ஒரு திடீர் முதிர்ச்சி எப்படி வந்தது அவனின் சதாவுக்குள்.? எண்ணங்கள் மீண்டும் அவர்களின் வாழ்க்கைச் சுழற்சிக்குள் பயணிக்கத் தொடங்கியது.



அன்று தன் வானரப் படையுடன் ப்ரித்வியின் வீட்டு வாசலில் நின்று நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள் யுகி. “யுகிக்கா அந்த சிடுமூஞ்சி வந்துடுச்சுன்னு நினைக்கிறேன். அங்க பாரு அவனோட பைக் வெளிய நிக்கிது. வா இப்படியே போயிடலாம்.” என வாண்டு ஒன்று எச்சரிக்க,



“டேய் ஜாக்கி.. அவன் வர்ரான்னு ஆன்ட்டி சொல்லவே இல்லடா. அப்படி வர்ரான்னு தெரிஞ்சா எனக்கு மெசேஜ் பாஸ் பண்ண சொல்லிருக்கேன். இப்போ வரைக்கும் எந்த இன்ஃபரமேஷனும் வரல நம்ம இன்ஃபாரமர்கிட்ட இருந்து. அப்போ அவன் வரலன்னு தானே அர்த்தம்.” என்றாள் யுகி வீட்டை கண்களால் அளந்தபடி.



“இங்க பாரு யுகி… எனக்கு இது சரியா படல. பைக்கை வேற கழுவியிருக்காங்க. ஐ திங்க் அந்த போலிஸ் உள்ள தான் இருக்கனும். என்னோட சிக்ஷ்த் சென்ஸ் பொய் சொல்லாது. நான் வரல, நீங்களும் போய் மாட்டாதீங்க..” என அந்த ஜாக்கி என்றவன் கழண்டு கொள்ள,



“யுகிக்கா.. அவன் கிடக்கெறான் பயந்தாங்கொள்ளி.. நீ வா.. நாம போவோம். அப்படியே அவன் இருந்தா நமக்கு என்ன… சுந்தரி ஆன்ட்டியைப் பார்க்க வந்தோம்னு சொல்லி எஸ் ஆகிடலாம்..” என சோட்டு அவள் மண்டையைக் கலைக்க,



“சூப்பர் டா சோட்டு.. இதுக்குத்தான் நீ வேனும்ங்கிறது. சரி ஜாக்கி ஏன் அப்படி பயந்துட்டு ஓடுறான்..” என யுகி சந்தேகமாக கேட்க,



“உனக்குத் தெரியாதா.? ஒரு தடவை இங்க வந்து மாங்கா பறிச்சோம். அப்போ அந்த ப்ரித்வி வந்துட்டான். நாங்க எல்லாம் ஓடிட்டோம். ஜாக்கி மாட்டிக்கிட்டான். அவனை ட்ரெஸை கழட்டி ஜட்டியோட நிக்க வச்சி டான்ஸ் ஆட விட்டுட்டான். அதுல இருந்து ஜாக்கி வரவே மாட்டான்.” என சோகமாகச் சொல்ல, யுகி பக்கென்று சிரித்து விட்டாள்.



“ஹா..ஹா… இது மானம் போன மேட்டர். அதான் ஜாக்கி வாயைத் திறக்கல, சரி வா போகலாம்..” என மீதமிருந்த வானரங்களை அழைத்துக் கொண்டு “ஆன்ட்டி நான் வந்துட்டேன்..” வடிவேலு மாடுலேசனில் கத்தியபடி வீட்டுக்குள் நுழைய, காம்பவுண்ட் சுவரில் மாட்டியிருந்த ஒரு ஒயரை எடுப்பதற்காக அதன் மேலிருந்து இவர்களையேக் கவனித்துக் கொண்டிருந்த ப்ரித்வியின் முகத்திலும் புன்னகை.



அவர்கள் யாரும் அவனைக் கவனிக்கவில்லை. ஆனால் அவர்கள் வந்ததிலிருந்தே அவர்களை மட்டுமே தான் ப்ரித்வி கவனித்துக் கொண்டிருந்தான். இந்த சின்ன பசங்களோட சுத்துறாளே படிப்பாளா..? மாட்டாளா..? என அரும்பெரும் சந்தேகம் அவனுக்கு.



அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவன் “அண்ணா உங்களை ஆன்ட்டி குழிச்சிட்டு சீக்கிரம் வர சொன்னாங்க சாப்பிட..” எனச் சொல்லிவிட்டு நிற்காமல் ஓடிவிட்டான். ப்ரித்வியும் சுந்தரி சொன்னதை செய்துவிட்டு வெள்ளை வேட்டியும், வெள்ளைத் தூவலையால் தலையைத் துவட்டியபடியும் வீட்டுக்குள் வர, அங்கோ அவனது அம்மா யுகிக்கு அவள் கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லியபடி இடியாப்பத்தை ஊட்டிக் கொண்டிருந்தார்.



அதைப் பார்த்ததும் கடுப்பானவன், அவளுக்கு எதிரே இருந்த சேரில் அமர்ந்து கொண்டு அவளை முறைக்க, “ஏன் அத்தை அண்ணா வந்துருக்காங்கன்னு சொல்லவே இல்ல..” என அவனைப் பார்த்து கண் சிமிட்டியபடி பேச,



“ஏய்.. என்னை அண்ணான்னு சொல்லாத சொல்லியிருக்கேன்ல.. ம்மா இவ என்ன சின்ன பிள்ளையா.. ஊட்டிவிட்டுட்டு இருக்கீங்க. முதல்ல எனக்கு சாப்பாட்டை போடுங்க. நான் தான் நைட்டெல்லாம் ட்ராவல் பண்ணிட்டு வந்துருக்கேன்..” எனக் கடுப்பாகிக் கத்த,



“டேய் ஏண்டா கத்துற, சாப்பிடும் போது என்ன பழக்கம் இது. எப்பவும் நீயா தான எடுத்துப் போட்டு சாப்பிடுவ. இப்போ மட்டும் என்ன.? போட்டு சாப்பிடு. யுகிக்கு கைல காயம் அவளால சாப்பிட முடியாது..?” என அவரும் கத்த,



“ம்ம்.. ஆமாண்ணா இங்க பாருங்க ஊசி குத்திடுச்சு..” என கண்ணுக்குத் தெரியாத ஒரு காயத்தைக் காட்ட,



மேலும் கடுப்பானவன்.. “ம்மா… இவ இன்னொரு தடவை அண்ணான்னு சொன்னா நான் மனுசனாவே இருக்க மாட்டேன்… இந்தாங்க இதையும் சேர்த்து அவளுக்கே கொட்டுங்க..” எனக் கடித்துவிட்டு மேலே சென்று விட,



“அவன் கெடக்கான் நீ சாப்பிடு..” என சுந்தரி மேலும் அவளுக்கு ஊட்ட, நொந்து நூடுல்சாகிப் போனான் ப்ரித்வி. ஒரு வழியாக அவளை அனுப்பிவிட்டு மகனிடம் வந்த சுந்தரி “என்ன கண்ணா இது சின்ன பிள்ள மாதிரி. உனக்குத் தெரியும் தான அவளைப் பத்தி. பெத்தவங்க இல்லாத பொண்ணுடா.. இப்படி பேசி கஷ்டப் படுத்தாத..” என்றவர் ”வா வந்து சாப்பிடு..” எனவும்



“ம்மா… எனக்குத் தெரியும்.. ஆனா அவ நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. கூட வந்த குட்டிப் பிசாசுங்களோட சேர்ந்து உங்களை ஏமாத்துறா.. நீங்களூம் நம்புறீங்க..” என்றவன், “என்னவோ போங்க… நீங்களெ ஒரு நாள் எங்கிட்ட அவளைப் பத்தி கம்ப்ளைன்ட் பண்ண போறீங்க பாருங்க..’ என அவன் சொன்ன நேரமோ என்னவோ அடுத்த முறை அவன் வரும் போது யுகியைப் பத்தி பக்கம் பக்கமாக பட்டியல் வாசித்தார் சுந்தரி.



இன்று வகுப்பில் தன்னையறியாமல் அவனை கவனிக்கத் தொடங்கினாள் யுகி. அவனுக்கு பாடத்தில் இருந்த விசாலமான அறிவையும், அதை ருசிபட பகிர்ந்த விதத்தையும், மாணவர்களுடன் இருந்த நெருக்கமான நட்புணர்வையும் அவள் மூளை பதித்துக்கொண்டது. ‘இவனுக்கு இத்தனை சிரிக்க கூட தெரியுமா?’ என்று வியந்தாள். குற்றவாளிகளுடன் பழகி பழகிதான் முன்பு கடினப்பட்டு போயிருப்பானோ என்று அவனை நியாய படுத்த தொடங்கிய மனதுக்கு, ‘அதுக்குள்ள மாமாவை மறந்துட்டியா முட்டாள்’ என்ற கடிவாளம் தேவைபட்டது..



காண்டீனில் புது பிரெண்ட் நந்தினியுடன் அமர்ந்து ஜூஸ் பருகிக்கொண்டு இருந்தபோது, ப்ரித்வி உள்ளே நுழைந்தான். இவர்கள் மேஜையை அவன் தாண்டி செல்லும் போது, நந்து எழுந்து மரியாதையுடன் வணக்கம் செய்ய, கண்டும் காணாதது போல இருக்க முயன்று கொண்டு இருந்த யுகியும் கடனே என்று எழுந்து நிற்க வேண்டியதாயிற்று. “ப்ளீஸ் கேரி ஆன்”, புன்னகைத்து, கைகளால் அவர்களை உட்கார சைகை செய்து கொண்டே நடந்து சென்று வேறு ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டான்.



“ப்ரித்வி சார் ப்ரொபசர் மகேஸ்வரன் சாரோட ஓல்ட் ஸ்டூடெண்டாம். அதான் ரேகா மேம்க்கு பதிலா டெம்பரவரி போஸ்டிங்ல வந்திருக்காரு.” என நந்து சொல்ல



“ஒஹ் அப்படியா?” எனக் கேட்டுக் கொண்டாள் யுகி. இது அவளுக்கு புது விஷயம். அவளை பின்பற்றி வரவில்லை என்பது நிச்சயம். முதல் நாள் அவன் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி, தன்னை அவனும் எதிர்பார்க்கவில்லை என்று உணர்த்தியது. ‘எப்படி வந்தான்’ என்ற கேள்விக்கு விடை கிடைத்தாலும், ‘ஏன்’ என்ற கேள்வி பாக்கி இருந்தது. எதுவாக இருந்தாலும், முன் வைத்த காலை பின் வைப்பதில்லை, அவன் முன்னாலேயே சாதித்து காட்டவேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் தீவிரமடைந்தது.



“சூப்பரா கிளாஸ் எடுக்கறாரு இல்ல? ஆளும் பார்க்க ஹீரோ மாதிரி இருக்காரு. நெத்தில அந்த தழும்பு கவர்ச்சியா இருக்கு பாரு” இப்போது நந்து அவனைப் புகழ



‘தழும்பா? எங்க? எப்படி’ அவள் கண்கள் பின்னடி திரும்பி அவன் முகத்தை ஆராய்ந்தது.



“…..கல்யாணம் ஆயிடுச்சான்னு தெரியலை. யாருக்கு அந்த லக்கோ!” நந்து பரவசத்துடன் தொடர, ஏனோ யுகியின் கன்னங்களில் சிவப்பு ஏறியது. உடனே, இதென்ன பைத்தியகாரத்தனம், மறுபடியும் அவனிடம் மனம் குழைய ஆரம்பித்து விட்டதே என்று தன் மேலேயே கோபமும் வந்தது.



நேரமாகிவிட்டதால் மாணவிகள் இருவரும் எழுந்தனர். யுகி வழக்கம் போல ஜூஸ் டெட்ராபாக்கை குப்பை கூடையில் வீசிவிட்டு ஸ்ட்ராவை மட்டும் கைப்பையில் போட்டு ஜிப்பை மூடினாள். ஏதோ தோன்ற அவன் புறம் அவளது பார்வை சென்றது. இவளது வினோத பழக்கம் பற்றி அறிந்த ப்ரித்வி முகத்தில் நமுட்டு சிரிப்பு. அவளுக்கு தன் மேலேயே வெறுப்பு ஏற்பட்டது.


யுகி புது இடத்துக்கு வந்து சேர்ந்த சில வாரங்களிலேயே கல்லூரி சுற்றுலாவிற்கு ஏற்பாடானது. அவளுக்கு அதில் சேர்ந்து கொள்ள இஷ்டமே இல்லை.



“நீ நிஜமா எங்களுக்கு லக்கி சம்யு, ஒரு வருஷமா போகணும்னு கேட்டுட்டு இருக்கோம், இப்போ தான் பெர்மிஷன் குடுத்து இருக்காங்க. ஊட்டி எல்லாரும் பார்த்த இடம் தான், ஆனா பிரெண்ட்ஸ் கூட போறது ஸ்பெஷல். ரொம்ப ஜாலியா இருக்கும். நீ கண்டிப்பா வந்து தான் ஆகணும்”, நந்துவும் மற்ற தோழிகளும் யுகியை வற்புறுத்தினர்.



“லெக்சரர்ஸ் யார் யாரெல்லாம் கூட வருவாங்க?” யுகி சாதாரணமாக கேட்டாளே ஒழிய பதில் தெரிவதற்குள் மண்டை குடைந்தது.



“எச். ஒ. டீ வரலை, கெமிஸ்ட்ரீ வைரம் சார், விமலா மேடம், ஸ்வாதி அப்புறம் பாஸ்கர்”, சந்தோஷி சொன்னவுடன் எல்லோரும் கொல்லென்று சிரித்தனர்.



புரியாமல் விழித்த யுகியிட ரமா விளக்கினாள், “ஸ்வாதி மேமும் பாஸ்கர் சாரும் இந்த காலேஜில தற்போதைய ரோமியோ ஜூலியட். ஊட்டி ட்ரிப்ல நிச்சயமா நிறைய மசாலா இருக்கும்.” என நண்பர்கள் கூட்டம் விளக்க



“ப்ரித்வி சார் வரலையா சந்தோஷி?” என நந்து கேட்டபோது, ‘என்னமோ இவ தான் பேரு வெச்ச மாதிரி, உரிமை கொண்டாடுறா’ யுகியினுள் சுள்ளென்று கோபம் எட்டி பார்த்தது. அதே சமயம் ‘உனக்கு மட்டும் அவன் சொந்தமா? யார் யாரை எப்படி கூப்பிட்ட உனக்கென்ன!’ மனசாட்சியும் குத்திக்காட்டியது.



“பொதுவா விசிட்டிங் ப்ரொபசர் எல்லாம் எக்ஸ்கர்ஷன் வரமாட்டாங்க. இருந்தாலும் நம்ம ஆரீஃப், ஜம்பு எல்லாம் போய் அவரை இன்வைட் செஞ்சிருக்காங்க. வரலைன்னு சொல்லிட்டாராம்.” என்றாள் சந்தோஷி சோகமாக.



யுகிக்கு தெரிய வேண்டிய விஷயம் தெரிந்துவிட, ‘அப்பாடா’ என்ற நிம்மதியில் ஏமாற்றமும் கலக்க முரண்பாடான எண்ணப்போக்கில் தடுமாறினாள். வீட்டில் ஊட்டி டிரிப் பற்றிய பேச்சு எடுத்தவுடன் தேவகி பச்சைக் கொடி காட்டி விட்டாள். சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை நீலகிரி எக்ஸ்ப்ரஸ், பிறகு அங்கிருந்து இரண்டு பேருந்துகளில் ஊட்டி செல்வது என்று ஏற்பாடு ஆயிற்று.

 
Top