• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மழை - அ. இம்ரான்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
மழை
அ.இம்ரான்.



தென்மேற்கிலிருந்து வீசிய மழைக்காற்றில் மரத்தோடு பிணக்குற்ற இலையொன்று விடுபட்டு அசைந்தாடி சருக்கிக்கொண்டே தரையில் வீழ்ந்தமரவும்.மழைக்குருவிகள் வட்டமிட்டு ஈசலின் வரவை எதிர்பார்த்து கூச்சலிட்டன. இருள் கவ்விய வானத்தின் கருமேகங்கள் உருமிக்கொண்டே அசைந்தலைந்தன.
அறுக்கப்போற காலத்துல இப்படி மழ கம்மிக்கிட்டு கெடக்குதே என்னடா இது கெரகம்
மண்வெட்டியை தோலில் போட்டுக் கொண்டு விரைந்தார் ராஜூ.
வெதச்ச நெல்ல பாதுகாக்க தெரிஞ்சவனுக்கு வெளஞ்சு வர்ரத பாதுகாக்க தெரியாதாயென்ன போய் உன் வேலய பாருடா எல்லா அவெ பாத்துக்குவா.
அவெ பாத்து பாத்து பாதுகாத்துத்தா இங்க குவிஞ்சு கெடக்குதாக்கு பேசாம உட்காருப்பா என்றபடி
வயலில் இறங்கி வரப்புகளை உடைக்க கம்மென்ற மழைக்காற்றும் மணக்க. உச்சிச் சூரியனில் கருத்துக் கனிந்த ராஜூவின் முதுகில் பட்டுத்தெரித்து நெல்மணியின் முகத்தில் அறைந்தது முதல் துளி.
மாடியில் காய்ந்து கொண்டிருந்த துணிகளையெல்லாம் வேகவேகமாக பாக்கியம் தோலில் குவிக்க துளிகள் சொதசொதவென பெரிதுபடவும். அவளின் வேகம் இன்னும் அதிகமாகியது. காற்றைக் கிழித்து பூமியை துளையிடப்பாய்ந்த மழைத்துளியிடையே தன் பிஞ்சு கரங்களால் வழிமறித்து விளையாடிக்கொண்டிருந்தாள் மீனா. மழையும் இன்னும் இன்னும் குதூ கலப்பட்டு அவள் கரங்களில் குவிந்து வழிந்தது.
பாப்பா மழையில விளையாடாத ஜலதோசம் பிடிச்சிடும்
பேத்தியின் ஆரோக்கியத்தில் அக்கரை கொண்ட சுப்ரமணி அதட்டியவாரே பால்கனியில் விருந்தினர்களுக்கான சோபாவில் வந்தமர்ந்தார்.பேத்தியையும்,பேனாவையும்,காகிதத்தையும் மாறிமாறி பார்த்துக் கொண்டேயிருந்தார்.மழையைப் பிரியாத பேத்தியைப் போலவே கவிதையும் அவர் மனதின் ஒரு மூலையைக் கட்டிப்பிடித்து வெளிவர அடம்பிடிக்க அவரும் விடாப்பிடியாய் தளை பிடித்து இழுக்க இரண்டுமே அசைந்தபாடில்லை.
தரையெல்லாம் ஒரே சொதசொதப்பு. வாடிக்கையாய் ஒழுகுமிடங்களுக்கான பாத்திரங்களை தேர்வு செய்து அடுக்கி முடித்தாள் லட்சுமி. புதிதாய் ஒழுகுமிடங்களுக்கு வைக்க எந்த பாத்திரமும் இல்லை சிறிய தட்டுகளை வைத்து சரிகட்டியபடி நிறைந்து கிடக்கும் தண்ணீரை வெளியே ஊற்றிவிட்டு புத்தகலமாரியின் அருகே வந்தமர்ந்தாள்.ராமுவின் புத்தகங்களைத் தவிர மற்ற எல்லாவற்றின் மீதும் சாரல் துளிர்த்து நின்றிருந்தது.
இத எத்தன தடவ மேய்ஞ்சாலும் எங்கயாவது பொத்தல் விழுந்துக்குது என்னதான் செய்யவோ வெய்யிலுக்குதான் இது நெழலு மழைக்கு வீடு வீடல்ல என மழையையும் சேர்த்து திட்டிக்குவிக்க
ராமுவின் காகிதக் கப்பல் நீர்ப்பாதையில் பாய்ந்தோடி மறைந்தது
தொபதொபவென நனைந்த களைப்பில் ஈரத்துண்டால் முகம் துடைத்த ராஜுவின் உதடுகள் உப்புக்கரித்தன
சுப்ரமணி மழைக்கவிதையொன்றை முகநூலில் பதிவு செய்திருந்தார்.
 
Top