• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மாயோளின் மாயோன் 1

Barkkavi

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 3, 2021
Messages
24
ஹாய் பிரெண்ட்ஸ்... "மாயோளின் மாயோன்" - இந்த தலைப்பு எங்கயோ கேள்விபட்டது மாதிரி இருக்கா?

போட்டிக்காக ஆரம்பிச்சு சந்தர்ப்ப சூழ்நிலையால பாதியில நிறுத்தின கதையை மீண்டும் ஆரம்பிச்சுருக்கேன். இந்த முறை முடிச்சுடுவேன். 😁😁😁

கதையை படிச்சு உங்க கருத்துகளை பகிர்ந்துக்கோங்க...😍😍😍



மாயம் 1


“பொம்பளப் பிள்ளையை பொண்ணு மாதிரி வளக்காம, ஆம்பளப் பிள்ளை மாதிரி வளத்தா இப்படி தான் ஆகும்!”



“பொண்ணா அடக்க ஒடுக்கமா வீட்டுக்குள்ள இருக்கணும். எப்போ பாரு ரோட்டுலயே சுத்திட்டு இருந்தா, இப்படி தான் பல பேரோட கண்ணு படும்!”



“இனிமே இவளை யாரு கட்டிக்குவா? ஏதோ நல்ல மனசுக்காரன் வாழ்க்கை குடுத்தா தான் உண்டு!”



“என் அண்ணனோட மானத்தை சந்தி சிரிக்க வைக்கவே பொறந்தவ இவ!”



இப்படி பல குரல்கள் ஓயாது ஒலித்துக் கொண்டிருக்க, அதிலிருந்து மீள்பவளை போல வெடுக்கென்று விழித்தாள் வெண்முகில்.



வெண்முகில் – அவளை கண்டவருக்கெல்லாம், அவள் பெயருக்கும் அவளிற்கும் சற்றும் பொருத்தமில்லை என்றே தோன்றும்! பழகிப் பார்ப்பவர்களுக்கு தான் அவள் பெயர் எத்தனை பொருத்தம் என்பது புரியும். ஆனால், அவளுடன் பழகுவது அத்தனை எளிதா என்ன?



மழை பொழியும் கருநிற முகில்களை போல, அன்பை பொழியும் வெள்ளை மனதுடையவள் வெண்முகில்! அந்த வெண்மையை வெளியே உள்ளவர்கள் உணர செய்யாமல் தடுப்பது தான் விதியின் செயலோ!



அதற்காக காலம்காலமாக பெண்களுக்கான இலக்கணங்களாக கூறப்படும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்றவற்றை கொண்ட அக்மார்க் அடக்க ஒடுக்கமான பெண் என்று அவளை நினைத்தால், அது தவறான யூகமாகும்.



கொடி போன்ற மெல்லிடை, சந்தன நிற தேகம், ஆளை அசத்தும் வசீகர முகம் ஆகியவற்றை தான் அழகென்று நினைத்தால், அத்தகைய அழகை அவளிடம் காண முடியாது தான்.



ஆணுக்கு மட்டுமல்ல பெண்ணுக்கும் வீரமே அழகு என்று எண்ணி வாழ்பவள் அவள். பெரிய விழிகளின் கூர்மையான பார்வையும், கூர்விழிகளுடன் போட்டி போடும் மூக்குக்கு மேல் வரும் கோபமும், நதி போல வளைந்து எதிராளியை தடுமாற செய்யும் கேலிச்சிரிப்புமே அவள் அழகை அதிகரிக்கும் அணிகலன்கள்.



அவளின் பல வருட தவவாழ்வின் பலனாக எஃகை போன்ற கடினமாக மாறியிருந்தாள். சிரிப்பு என்பது தூரப்போக, சிடுசிடுப்பு அதன் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டது. உண்ணுதல், மூச்சுவிடுதல் போன்றவற்றை செய்யாமல் இருந்தால் இயந்திர மனிதி என்று கண்டிப்பாக கூறிவிடலாம் அவளை.



அவள் காட்டும் கடுமையான முகம் உண்மையில் ஒரு முகமூடி என்பது அவளே மறந்து போன ஒன்று. சிலபல காரணங்களுக்காக அவள் அணிந்து கொண்ட முகமூடியை கழட்டி எரியும் ஆற்றல் மிக்கவன் வரும்வரை அது அவள் நிரந்தர முகமாவகவே மாறிவிடுமோ?



அவளின் கடந்த கால நினைவுகளை கலைப்பது போல ஒலித்தது அவளின் அலைபேசி. தந்தையை தவிர அவள் நம்பும் ஒரே ஜீவனான வாசுதேவ் தான் அழைத்திருந்தான்.



அவள் அழைப்பை ஏற்றதும், “முகில், ஆர் யூ ஓகே?” என்று அவன் வினவ, அந்த கேள்விக்கான காரணத்தை அறிந்தவள் போல கடிகாரத்தை பார்த்துக் கொண்டே, “ஐ’ம் ஓகே வாசு. நைட் கொஞ்சம் ஃபைல்ஸ் பார்த்துட்டு தூங்க லேட்டாகிடுச்சு. இன்னைக்கு ஜாக்கிங் வரல. நீ நேரா ஸ்கூலுக்கு வந்துடு.” என்று கூறிவிட்டு அவன் பதிலை கூட எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்து விட்டாள்.



அவளின் இந்த செய்கை வாசுவிற்கு பழகிப்போன ஒன்று என்பதால், அவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.



எப்போதும் காலையில் எழுந்ததும் வாசுவுடன் பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொள்வாள் வெண்முகில். வாசு அவளுடன் செல்வது, அவளுக்கு பாதுகாப்புக்காக அல்ல, அவளிடமிருந்து மற்றவர்களை பாதுகாப்பதற்கு!



அதை வெண்முகிலும் அறிவாள். ஆனால், இதுவரை எதுவும் சொன்னதில்லை. காரணம், அது அவள் தந்தை நாகேந்திரனின் ஏற்பாடு ஆகிற்றே!



வெண்முகிலின் தாய் பரமேஸ்வரி சில வருடங்களுக்கு முன்பு, அகால மரணம் அடைந்தார். அது அவள் வாழ்நாளில் பல மறக்கமுடியாத காயங்களை பரிசாக அளித்த காலகட்டமாகும்.



அதன்பிறகு, பலர் பல காரணங்களை சொல்லி, அவளை தந்தையிடமிருந்து பிரிக்கும் வேலையில் ஈடுபட்டாலும், அதையெல்லாம் காதில் வாங்காமல், அவளுக்கு துணையாக நின்ற இரும்பு மனிதர் தான் நாகேந்திரன்.



அன்றிலிருந்தே தந்தையும் மகளும் ஒருவருக்கொருவர் துணையாக மாறிப்போயினர். அவளை பொருத்தவரை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை தான். அவள் தனக்கே வகுத்துக் கொண்ட சட்டதிட்டங்கள் எல்லாம் சுக்குநூறாகும் ஒரே இடம் அவள் தந்தை தான்.



தந்தையை நினைத்துக் கொண்டே கிளம்பியவள் கீழே வர, “முகிலு, வாசு பையன் ஃபோன் போட்டான் மா.” என்று தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த தந்தை கூற, “பேசிட்டேன் ப்பா.” என்றவள் அவரையும் உணவுண்ண அழைத்தாள்.



“நீ சாப்பிடு மா. இதோ லோக்கல் சேனல்ல நியூஸ் பார்த்துட்டு வந்துடுறேன்.” என்று தொலைக்காட்சியின் சத்தத்தை கூட்டி வைத்தார்.



திண்டுக்கல் புறநகர் துணை காவல்கண்காணிப்பாளராக இன்று பதவிவேற்க உள்ளார் ஹரிஹரன். இவர் இதற்கு முன்னர், திருச்சியில் உதவி காவல் கண்காணிப்பாளராக பல வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட திருச்சி இரட்டை கொலை வழக்கில் இவரின் செயல்பாடுகள் பிரபலமாக பேசப்பட்டன. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகன் தான் குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.



என்ற செய்தி ஒளிப்பரப்பட்டுக் கொண்டிருக்க, வெண்முகில் அதை கவனித்தாலும், எதுவும் கூறாமல் தந்தைக்கு உணவை தானே எடுத்து வந்து கொடுத்தாள்.



நாகேந்திரனோ, “பார்த்தியா மா, இவரை போல நல்ல போலீஸும் இருக்கத்தான் செய்றாங்க.” என்று கூறியவர், பின்னர் தான் உணர்ந்தார் மகளுக்கு இந்த பேச்சு பிடிக்காது என்பதை.



அவளோ தந்தை கூறியதற்கு எவ்வித எதிர்வினையும் இல்லாமல், “அப்பா, நான் ஸ்கூலுக்கு போயிட்டு பத்தரைக்கு வரேன். இன்னைக்கு உங்களுக்கு மந்த்லி செக்கப் போகணும். தயாரா இருங்க.” என்று கூறிவிட்டு கிளம்பினாள்.



செல்லும் அவளையே வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் நாகேந்திரன்.



*****



குளியலறையிலிருந்து ஏதோ பாட்டை முணுமுணுத்துக் கொண்டே வந்தவன், கீழே தலை முதல் கால் வரை போர்த்தி படுத்திருக்கும் உருவத்தை எட்டி மிதித்து நிற்காமல் சென்றுவிட, அந்த உருவமோ, “ஆஹ்...” என்ற கத்தலுடன் எழுந்து அமர்ந்தது.



“எதுக்குடா என்னை மிதிச்ச?” என்று அந்த உருவம் வினவ, “ஹ்ம்ம், அண்ணன் வேலைக்கு கிளம்பும்போது இழுத்து போர்த்திட்டு தூங்குவாங்களாடா தம்பி?” என்று உதட்டை வளைத்து வினவினான் அவன்.



“நீ வேலைக்கு போகணும்னா, யூ கோ மேன். எதுக்கு லீவுல இருக்க என்னை எழுப்பிட்டு இருக்க?” என்றவன், “ம்மா, எதுக்கு இவனை என் அண்ணனா பெத்த?” என்று கத்தினான்.



“இன்னும் சின்ன பாப்பான்னு நினைப்பு!” என்று முனகிய அண்ணன்காரன், “ம்மா, இவன் அழுகுறான் பாரு. வந்து இடுப்புல தூக்கி வச்சு சமாதானப்படுத்து.” என்று அவன் பங்கிற்கு கத்த, “இப்போ அங்க வந்தேன், ரெண்டு பேருக்கும் தோசை கரண்டியால சூடு வச்சுடுவேன்.” என்று இருவரையும் பெற்றவர் என்று நிரூபித்தார் அவர்களின் அன்னை.



காக்கி சட்டையில் பொத்தான்களை மாட்டியவாறே வெளிய வந்தவனை பார்த்து உள்ளம் கர்வப்பட்டாலும், வெளியே அதை காட்டிக் கொள்ளாமல், “ஏன்டா இந்த அழும்பு பண்ற? நீ வேலைக்கு போகணும்னா சத்தமில்லாம கிளம்ப வேண்டியது தான. இதுல ஒவ்வொரு முறை டிரான்ஸ்ஃபர் வரப்போ, என்னையும் உன்கூட கூட்டிட்டு போயிடுற. நான் இல்லாததால, உங்க அப்பா கண்டதையும் சாப்பிட்டு உடம்பை கெடுத்து வச்சுருக்காரு.” என்றார் அவனின் அன்னை.



பின்வழியாக அன்னையின் தோளில் கைபோட்டு அணைத்துக் கொண்டவன், “ம்மா, உங்களுக்கு கல்யாணம் ஆகி கிட்டத்தட்ட முப்பது வருஷமாக போகுது. உங்களுக்கு இன்னுமா அப்பா கூட இருக்கணும்?” என்று கேலி பேச, “போடா அரட்டை. உனக்கெல்லாம் யாரு டா போலீஸ் வேலை கொடுத்தது? உனக்கு பொறாமையா இருந்தா, கல்யாணம் பண்ணிக்கோ. அப்பறம் நீயாச்சு அவளாச்சு.” என்றார்.



“நீ சொல்றது தான் மா சரி. சீக்கிரம் ஒரு கல்யாணத்தை பண்ணி முடிடா. அப்போயாவது என்னை தூங்க விடுறியான்னு பார்ப்போம்!” என்றான் அவனின் தம்பி.



அண்ணனோ பட்டென்று தம்பியின் பின்மண்டையில் அடித்து, “எனக்குன்னு ஒருத்தி வந்தாலும், நான் கிளம்புறப்போ நீயும் முழிச்சு தான் ஆகணும். ஏன்னா, நீ என் தம்பி!” என்று கண்ணடித்து கூறினான்.



அவன் ஹரிஹரன். எடுத்த காரியத்தில் வெற்றியை ருசித்தே பழக்கப்பட்ட காவலன். இதுவரை அவன் கையாண்ட வழக்குகள் எல்லாம், மற்றவர்கள் அத்தனை சுலபமாக எடுக்க தயங்கும் வழக்குகளே ஆகும்.



அதற்காக பல இடமாற்றல்களை சந்தித்தாலும், அதை பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாதவன்.



அவனின் யூகிக்க முடியாத செயல்களால், அவனுடன் வேலை பார்ப்பவர்களே திணறினாலும், வேலையை முடித்து கொடுப்பதில் அவனிற்கு நிகர் அவனே என்பது அவர்களால் மறுக்க இயலாத உண்மையே.



அவனிற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு காரணம், அவ்வபோது அவனை ஹீரோவாக்கி செய்தியாளர்களால் வெளியிடப்படும் செய்திகள் என்பதில் சந்தேகமில்லை.



அவனின் ஆஜாகுபானுவான தோற்றத்தில் இருந்து வழக்குகளை கையாளும்போது வெளிப்படுத்தும் வீரபிரதாபங்கள் வரை அனைத்தும் ஒவ்வொரு செய்தியிலும் விளக்கப்படும். இளைஞர்களிடையே பிரபலமான அவனை வைத்து தங்கள் டி.ஆர்.பியை ஏற்றிக்கொள்ளும் ஊடகத்தின் திட்டம்!



அவற்றை பார்க்கும்போது, ‘காசு கொடுத்து இவனே நியூஸ் போட சொல்வானோ’ என்ற எண்ணம் தோன்றுவதை தடுக்க இயலாது தான். ஆனால், அதையும் ரசிப்பவனாகிற்றே அவன்!



வழக்கு என்று வந்து விட்டால் அழுத்தத்தின் மறுஉருவமாக இருப்பவன் தான். ஆனால், தன்னை சேர்ந்தவர்களிடம் கேலி பேசி வம்பிழுப்பதிலும் வல்லவன் அவன்.



மொத்தத்தில் முரண்களின் முரண் அவன்!



ஹரிஹரனின் பெற்றோர் சுதர்சன் மற்றும் ருக்மிணி தம்பதியர் ஆவர். அவனுக்கு மதுகரன் என்ற தம்பியும் உண்டு. ஹரிஹரன் பிறந்து ஐந்து வருடங்கள் கழித்து பிறந்ததால், வீட்டிற்கு செல்லம் அவன். ஆனாலும், ஹரிஹரனை ‘வாடா போடா’ என்று தான் அழைப்பான்.



அதற்கு எதிர்வினையாக ஹரிஹரனும் அவனை ‘மது’ என்று அழைத்து வெறுப்பேற்றுவான்.



“ம்மா, இவன் எப்போ பார்த்தாலும் மது மதுன்னு பொண்ணு பேரை சொல்லி கூப்பிடுறான் மா!” என்று அனைத்திற்கும் அம்மாவிடம் சென்று நிற்கும் அம்மா செல்லம் மது (எ) மதுகரன். தற்போது பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெற போராடிக் கொண்டிருக்கிறான்.



வீட்டில் இருவரும் இருந்தால் பொழுது போவதே தெரியாது. நாளொரு சண்டை பொழுதொரு சமாதானம் என்று ருக்மிணி தான் அவர்களிடையே பந்தாடப்படுவார்.



*****



ஹரிஹரன் பொறுமையாக அன்னை சமைத்து வைத்ததை உண்டு கொண்டிருக்க, அவனெதிரே, கடமையே என்று கன்னத்தில் கைவைத்து அவன் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டிருந்தான் மதுகரன். முகம் மட்டும் வெளியே தெரியுமாறு போர்வையை வேறு சுற்றியிருந்தான்.



அவனது தோற்றம் சிரிப்பை தந்தாலும், அதை வெளியில் காட்டவில்லை ஹரிஹரன்.



அவனிற்கு பரிமாறிக் கொண்டிருந்த தாயிடம், “ம்மா, உன் மரியாதைக்குரிய புருஷரை எங்க இன்னும் காணோம்?” என்று மதுகரன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, “ருக்கு, காஃபி!” என்றபடி வீட்டிற்குள் நுழைந்தார் சுதர்சன்.



“ருக்கு காஃபி எல்லாம் இல்ல, இன்னைக்கு சுக்கு காஃபி தான்! நேத்து தொண்டை கரகரன்னு இருந்துச்சுன்னு சொல்லிட்டு, இன்னைக்கு இந்த பனியில வாக்கிங் அவசியமா?” என்றார் அவரின் தர்மபத்தினி ருக்மணி.



“என்ன ருக்கு இப்படி சொல்லிட்ட. இப்போலாம் எல்லா டாக்டரும் வாக்கிங் போக தான சொல்றாங்க. சுத்தமான காத்தை சுவாசிச்சா தான்...” என்று பேசியவரை இடைவெட்டிய மதுகரனோ, “வாக்கிங்னு சும்மா பீலா விட்டுட்டு இருக்காரு ம்மா. இவனோட தொல்லை தாங்காம எங்கயோ போய் உட்கார்ந்துட்டு, இவன் கிளம்புற நேரமா வராரு. ஆனா, எந்த இடத்துக்கு போறாருன்னு தான் தெரியல.” என்று பெற்றவர் என்றும் பாராமல் போட்டுக் கொடுத்தான்.



அதைக் கேட்ட ஹரிஹரனோ சட்டென்று திரும்பி தந்தையை காண, அவனின் பார்வையில் பதறிய சுதர்சன், “ச்சே, அவன் சும்மா சொல்றான் ஹரிஹரா. உனக்கு தெரியாதா அப்பா பத்தி.” என்றார்.



சாப்பிட்டு கைகழுவி வந்தவன், “ரெண்டு தெரு தள்ளி இருக்க டீ கடையில, ஸ்பெஷல் டீ வித் எக்ஸ்டரா சுகர்... இதைப் பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா ப்பா?” என்ற ஹரிஹரன், ருக்மணியிடம் திரும்பி, “ம்மா, உங்க புருஷரை பார்த்தீங்களா? நீங்க போடுற டீ நல்லா இல்லன்னு காலங்கார்த்தால டீ கடை வாசல்ல நிக்கிறாரு.” என்று தன்பங்குக்கு போட்டுக் கொடுத்தான்.



‘இவனுக்கு எப்படி தெரிஞ்சுச்சு?’ என்று பதறியவரை, அவரின் மனைவி லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட, பம்மிபோய் அமர்ந்திருந்தார் அவர்.



“அப்பறம் ப்ரோ, நல்லபடியா உன் வேலையை முடிச்சுட்ட, இனி ஸ்டேஷனுக்கு நடையை கட்ட வேண்டியது தான?” என்று மதுகரன் வினவ, “தனியா போனா போர் அடிக்கும்ல. அதான் பலியாடு வரதுக்காக வெயிட்டிங்.” என்று சிரித்துக் கொண்டே கூறினான் ஹரிஹரன்.



சரியாக அதே சமயம், “சார்...” என்று வாசலில் சத்தம் கேட்க, மதுகரனிடம் கண்சிமிட்டி விட்டு, “வந்துட்டேன் அலெக்ஸா...” என்று கத்திக் கொண்டே வெளியே சென்றான் ஹரிஹரன்.

மாயங்கள் தொடரும்...
 

Vimala Ashokan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 9, 2021
Messages
278
Haha nice start ma..
nalla annan thambi,
Venmukil oda azuththam rombave yosikka vaikkuthey
 

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
415
அருமையான ஆரம்பம்
 
Top