• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மாயோளின் மாயோன் 3

Barkkavi

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 3, 2021
Messages
24
மாயம் 3



நாகேந்திரனின் சொந்த ஊர் நிலக்கோட்டை. அவர்களின் பரம்பரை தொழில் பூ வியாபாரம் தான். நிலக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பூக்களை ஏற்றுமதி செய்து செழிப்பாகவே வாழ்ந்து வந்தனர்.



பரம்பரை தொழில் ஒருபுறம் இருந்தாலும், நாகேந்திரன் தலையெடுத்த பின்னர், திண்டுக்கல்லில் சில இடங்களில் கடைகளை வாடகை விட்டு அதன்மூலமும் பணவரவை அதிகரித்துக் கொண்டார். மேலும், சிறிய அளவில் வட்டி தொழிலையும் செய்து வந்தார்.



அவரின் மனைவி பரமேஸ்வரி திருமணத்திற்கு முன்பே ஆசிரியராக பணியாற்றி வந்தவர். திருமணம் முடித்த சில வருடங்களில் அவருக்காக பள்ளி ஒன்றையும் துவங்கினார். அந்த பள்ளியும் நன்றாகவே சென்று கொண்டிருந்தது.



யாரின் கண்பட்டதோ, தந்தை, தாய், மகளென்று அழகான வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்களின் இன்பம் அந்த ஒரே நாளில் முடிவிற்கு வந்து துன்பம் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டது.



அதை எல்லாம் நினைத்து பார்த்துக் கொண்டிருந்த நாகேந்திரனை நிகழ்வுக்கு அழைத்து வந்தாள் வெண்முகில்.



“ப்பா, நீங்க வெயிட் பண்ணுங்க. நான் போய் ரிஜிஸ்டர் பண்ணிட்டு வரேன்.” என்று நாகேந்திரனை மருத்துவமனை வரவேற்பறையில் விட்டுவிட்டு வெண்முகில் சென்றாள்.



அங்கு வரவேற்பில் அவளிற்கு முன் வெகு நேரமாக காவலர் ஒருவர் வரவேற்பு பெண்ணிடம் பேசிக் கொண்டிருக்க, வெண்முகிலின் பொறுமை பறந்து செல்லவா என்னும் நிலையில் இருந்தது.



ஏற்கனவே, அவளிற்கு சில முன்னனுபவங்கள் காரணமாக காவலர்களின் மீது நல்ல எண்ணம் இல்லை. இதில், வெகு நேரமாக தன்னை காக்க வைப்பவனின் மீது கோபம் வரவில்லை என்றால் தான் அதிசயம்.



அந்த நொடியில் அவள் பொறுமை முற்றிலும் வற்றியிருக்க, “எக்ஸ்யூஸ் மீ.” என்று அவள் கூற, அந்த காவலரும் திரும்பி யாரென்று பார்த்தான்.



“எவ்ளோ நேரம் பேசிட்டு இருப்பீங்க? பின்னாடி வெயிட் பண்றவங்களை எல்லாம் கன்சிடர் பண்ண மாட்டிங்களா?” என்று அவள் கோபமாக வினவ, எதிரிலிருந்தவனோ அவளையே வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தான்.



தான் கேட்டதற்கு எவ்வித பதிலும் சொல்லாமல் இருப்பவனை உற்று பார்த்தவள், அவன் பார்வையில் என்ன கண்டாளோ, அவன் முன் கையசைத்து, “ஹலோ, உங்ககிட்ட தான கேட்டுட்டு இருக்கேன்.” என்றாள்.



அப்போது அவன் எதுவும் பேசாமல் அவளிற்கு வழியை மட்டும் விட்டு விலகி நிற்க, ஒரு சந்தேக பார்வையுடன் தன் வேலையை பார்க்க சென்றாள் வெண்முகில்.



அந்த காவலனோ ஏதோ கணக்கிட்ட படியே வெளியே வர, அங்கு வாகனத்திற்குள் அமர்ந்திருந்த ஹரிஹரன் அவனின் நிலையை கண்டு குழப்பமாக, “அலெக்ஸா, சீஃப் டாக்டர் எப்போ வருவாருன்னு கேட்க தான போயிருந்த? இப்போ என்ன பேயடிச்ச மாதிரி வர?” என்றான்.



வெண்முகிலின் பார்வையை கண்டும், முன்னர் அவளின் நடவடிக்கையை கண்டும் பயந்திருந்த அலெக்ஸோ, “அதை விட மோசமான அனுபவம் சார்.” என்று ஏதோ நினைவில் கூறியிருந்தான்.



அதைக் கேட்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்த ஹரிஹரனோ, “ஏன் அலெக்ஸா, லவரை பார்த்து பேசிட்டு வரது, பேயை விட மோசமான அனுபவமா இருக்குமோ?” என்று வினவ, அலெக்ஸோ அப்போது தான் நிகழ்விற்கு வந்தான்.



“எது லவரா?” என்று வெளியே அதிர்ந்தாலும், மனதிற்குள், ‘கடவுளே, இவருக்கு எப்படி தெரிஞ்சுது?’ என்ற எண்ணமே ஓடிக் கொண்டிருந்தது.



“அட சும்மா ஷாக்கான மாதிரி நடிக்காத மேன். நான் போலீஸ்காரனாக்கும். என் முன்னாடியே கண்ணால சைகை காட்டுறது என்ன, என்னை முன்னாடி அனுப்பிட்டு உன் லவரோட குசுகுசுன்னு பேசுறது என்ன?” என்று ஹரிஹரன் அடுக்கிக் கொண்டே போக, “சார் சார்... அப்படியெல்லாம் இல்ல...” என்று இழுத்தான் அலெக்ஸ்.



‘அந்த கிறுக்கி கிட்ட எதுவும் பேசாதன்னு அப்போவே கண்ணால சைகை காட்டுனேன். மரமண்டை அதை புரிஞ்சுக்காம என்னென்ன செஞ்சு வச்சுருக்கு!’ என்று செல்லமாக அவனவளையும் மனதிற்குள் திட்டினான் அலெக்ஸ்.



“டிரெயினிங் பத்தல அலெக்ஸா.” என்று திடீரென்று ஹரிஹரன் கூற, ‘ஐயையோ, சத்தமா சொல்லிட்டோமோ!’ என்று பதறி, “சார்... என்ன சார்?” என்று வினவ, “ரொம்ப நேரமா நின்னுட்டே யோசிச்சுட்டு இருக்கியே, அதான் போலீஸ் டிரெயினிங் பத்தலையோன்னு சொன்னேன்.” என்றான் ஹரிஹரன்.



அதற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் தலையை மட்டும் நாலாபுறமும் அசைத்து வைத்தவன், ‘இவருக்கிட்ட வாயைக் கொடுத்து மாட்டாம தப்பிக்கணும் சாமி!’ என்று ஒரு வேண்டுதலையும் வைத்துவிட்டு, “சார், சீஃப் டாக்டர் ஒரு கான்ஃபெரன்ஸுக்காக பெங்களூரு போயிருக்காராம். நாளைக்கு நைட் தான் வருவாராம்.” என்ற தகவலை சொல்லியவன் வாகனத்திற்குள் ஏற, அத்தனை நேரம் இருவரின் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த ஓட்டுநரும் சிரிப்புடன் வாகனத்தை கிளப்பினார்.



ஆனாலும், அலெக்ஸின் மனம் ஹரிஹரன் எப்படி தன் காதலை அத்தனை எளிதில் கண்டு கொண்டான் என்று எண்ணிக் கொண்டிருக்க, ஒரு அசட்டு தைரியத்தில் அதை அவனிடமும் கேட்டு விட்டான்.



அவனை மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்த ஹரிஹரன், “இன்னைக்கு காலைல அந்த ஸ்கூலுக்கு முன்னாடி நடந்த விஷயத்தை விசாரிக்க சொன்னப்போ போகவே தயங்கிட்டு இருந்த நீ, இப்போ சீஃப் டாக்டரை பத்தி விசாரிக்க சொன்னப்போ, என்னை முழுசா கூட சொல்ல விடாம பாய்ஞ்சு ஓடுனியே, அப்போ தான் கன்ஃபார்ம் பண்ணேன்.” என்றான்.



‘என் சக்கரக்கட்டியை திட்டுன அரைலூஸே, நீ என்ன பண்ணி வச்சுருக்க பாரு!’ என்று அலெக்ஸின் மனம் அவனையே காறித் துப்ப, அதை துடைத்து விட்டவனிற்கு அப்போது தான் வெண்முகிலை பார்த்தது நினைவிற்கு வந்தது.



அதை சொல்லலாமா வேண்டாமா என்று எண்ணும்போதே அவர்களின் காவல் நிலையம் வந்துவிட இருவரும் இறங்கினர்.



‘இப்போ அவங்களை அங்க பார்த்ததை பத்தி சொன்னா, திரும்பவும் ஹாஸ்பிடலுக்கு வண்டியை திருப்ப சொன்னாலும் சொல்லிடுவாரு. திரும்ப அங்க போனா நம்ம மானம் தான் போகும். இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம்.’ என்று நினைத்துக் கொண்டவன் பேச்சை மாற்றுவதாக நினைத்து, “சார் இப்போ எதுக்கு அந்த ஹாஸ்பிடல் போனோம்? என்ன கேஸ்?” என்று ஹரிஹரனிடம் வினவினான்.



அவன் கேள்வியில் நடையை நிறுத்திய ஹரிஹரன் ஒரு நமுட்டுச் சிரிப்புடன், “அது கான்ஃபிடென்ஷியல் கேஸ் அலெக்ஸா. அடிச்சு கேட்டாலும் வெளிய சொல்லிடாத.” என்று கூறிவிட்டு சென்றுவிட, ‘என்னை யாரு அடிச்சு கேட்பா...’ என்று யோசித்த அலெக்ஸிற்கு தாமதமாக தான் உரைத்தது.



‘அட எனக்கு தான் ஒன்னும் தெரியாதே. அடிச்சு கேட்டாலும் என்ன சொல்லுவேன்!’ என்று குழப்பத்தில் அங்கேயே நிற்க, “அலெக்ஸா... அந்த பொண்ணை பத்தி விசாரிக்க சொன்னேனே.” என்ற ஹரிஹரனின் குரல் மட்டும் கேட்க, “இதோ போயிட்டேன் சார்.” என்று வேகவேகமாக அங்கிருந்து கிளம்பினான்.



*****



நாகேந்திரனை பரிசோதித்த மருத்துவர் வெண்முகிலிடம், “உன் அப்பாக்கு ப்ரெஷர் தான் அதிகமா இருக்கு முகில்.” என்று கூற, மகளோ தந்தையை முறைத்தாள்.



காரணம், தந்தை தான் மாத்திரை சாப்பிட மறந்துவிடுகிறாரே!



அதையே மருத்துவரிடமும் கூற, “எனக்கென்னமோ அது மட்டும் காரணம் இல்லன்னு தோணுது முகில். அப்பாவோட மனசு விட்டு பேசி பாரு. அது தான் உங்க ரெண்டு பேருக்குமே நல்லது.” என்று மருத்துவர் இருவருக்குமே அறிவுரை கூற, மகளின் பார்வையோ தந்தையை சந்தேகமாக முற்றுகையிட்டது.



இருப்பினும் அங்கு எதுவும் சொல்லாமல் வீட்டிற்கு அழைத்து வந்தாள். அதுவரை இருவரிடமும் பேச்சுவார்த்தை இல்லை.



வீட்டிற்கு வந்ததும், “ப்பா, உங்க மனசுல என்ன கவலை இருக்கு?” என்று வெண்முகில் கேட்டதும் பதில் சொல்ல வந்தவரை தடுத்தவள், “நான் சம்பந்தப்பட்ட விஷயம் தவிர!” என்றதையும் சேர்த்து கூறினாள்.



அதில் நாகேந்திரனின் முகம் சுருங்கிப்போக, “உன் வாழ்க்கை தவிர வேறென்ன சிந்தனை எனக்கு இருக்கப்போகுது பாப்பா?” என்றார்.



“ப்பா, என் வாழ்க்கைக்கு என்ன குறைச்சல்? இதுவரை நல்லா தான் போயிட்டு இருக்கு. இனியும் இப்படியே நல்லா தான் போகும். அதனால, அதை மாத்த நினைச்சு கவலைப்படாம இருங்க.” என்று பொறுமையாகவே கூறினாள்.



தந்தை என்பதாலும், அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டதாலும் மட்டுமே இந்த பொறுமை.



அவர் ஏதோ கூற வர, சரியாக அதே சமயம் அவளின் அலைபேசியில் ஏதோ செய்தி வந்திருக்க, மர்ம புன்னகையுடன், “எனக்கு வேலை இருக்கு ப்பா. நீங்க கவனமா இருங்க.” என்று சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டாள்.



அவளின் அந்த மர்ம புன்னகையை கண்டவரோ, “ஈசு, நம்ம பாப்பா வாழ்க்கை இப்படியே போயிடுமான்னு கவலையா இருக்கு. அவளை தனியா விட்டுட்டு நானும் உன்னோட வந்துடுவேனோன்னு இப்போலாம் அடிக்கடி பயமா இருக்கு.” என்று மனைவியின் புகைப்படத்தை பார்த்து புலம்பிக் கொண்டிருந்தார்.



*****



தன்னறையில் தீவிரமாக கோப்பை பார்வையிட்டுக் கொண்டிருந்த ஹரிஹரனின் முன் வந்து நின்றான் அலெக்ஸ்.



அவனை என்ன என்று பார்வையாலேயே ஹரிஹரன் வினவ, “சார், அந்த பொண்ணு...” என்று ஆரம்பித்தவன் என்ன நினைத்தானோ, “மேடம் பத்தின டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிட்டேன்.” என்றதும், நிர்மலமான முகத்துடன், “ஓஹ், சொல்லு கேட்போம்.” என்று சாதாரணமாகவே கேட்க, அலெக்ஸ் தான், ‘ என்னடா இது பெருசா ரெஸ்பான்ஸ் எதுவும் இல்ல. நம்ம தான் ஏதேதோ இமேஜின் பண்ணிக்கிட்டோமோ!’ என்று யோசித்தான்.



“சார், அவங்க பேரு வெண்முகில். இன்னைக்கு பார்த்தோமே அந்த ஸ்கூல் அவங்களோடது தான். அவங்களுக்கு அப்பா மட்டும் தான். அவரு பேரு நாகேந்திரன். ஸ்கூல் போக, மெயின்ல சில கடைகளை வாடகைக்கு விட்டுருக்காங்க. வட்டி பிஸினஸும் இருக்கு. மேடமுக்கு ஒரே ஒரு பிரெண்டு தான்... பேரு வாசுதேவ். அந்த ஸ்கூல்ல டீச்சரா இருக்காரு. மேடம் கொஞ்சம் மூடி டைப். இப்போதைக்கு இவ்ளோ டீடெயில்ஸ் தான் சார்.” என்று வரிசையாக ஒப்பித்தவன், அவளின் முகவரி மற்றும் அலுவலக எண்ணையும் ஹரிஹரனிடம் கொடுத்தான்.



அதை வாங்கிக் கொண்டவனின் இதழோ, ‘வெண்முகில்... வொயிட் க்ளவுட்...’ என்று முணுமுணுத்தது.



அத்துடன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. அலெக்ஸ் சும்மா இருக்காமல், “அந்த ஸ்கூல்ல தான் என் அண்ணா பொண்ணு படிக்குறா.” என்றும் கூறிவிட, ஹரிஹரனோ கண்கள் மின்ன, “இஸ் இட்?” என்றான்.



அந்த ‘இஸ் இட்’டில் நிகழ்விற்கு வந்த அலெக்ஸ், ‘போச்சு போச்சு, இந்த டையலாக் கேட்டாலே ஏதோ வில்லங்கமா யோசிக்குறாருன்னு தெரியுது. எல்லாம் என் வாயினால வந்தது. வர வர இதுவும் அவரு சொல்பேச்சை கேட்க ஆரம்பிச்சுடுச்சு.’ என்று மானசீகமாக வாயில் அடித்துக் கொண்டு மனதிற்குள் புலம்பினான்.



கைகளை தூக்கி நெட்டி முறித்தவாறே நாற்காலியிலிருந்து எழுந்த ஹரிஹரன், “இப்போ ஸ்கூல் விடுற டைம் தான அலெக்ஸா? வா உன் அண்ணா பொண்ணை பிக்கப் பண்ண போலாம்.” என்று கூற, ‘இந்தா ஆரம்பிச்சுட்டாருல.’ என்று நினைத்தவன், மறுத்து கூறி பலனில்லை என்பதை அனுபவத்தின் மூலம் அறிந்தவனாக, தன் அண்ணிக்கு பாப்பாவை தான் கூட்டி வருவதாக தகவலை பகிர்ந்துவிட்டு பலியாடு போல அவனை பின்தொடர்ந்தான் அலெக்ஸ்.



*****



வெண்முகிலின் முன் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்த வாசுதேவின் பார்வையை முதலில் கண்டு கொள்ளாமல் இருந்தவளிற்கு, நேரம் ஆக ஆக, அந்த பார்வை சிறிது எரிச்சலை கொடுக்க, “ப்ச், உனக்கு இப்போ எதுவும் கிளாஸ் இல்லன்னா, ஸ்டாஃப் ரூம்ல போய் உட்கார வேண்டியது தான?” என்றாள்.



அப்போதும் பதில் பேசாதவனின் பார்வை மட்டும் இப்போது கூடுதலாக அவளின் அலைபேசியையும் தழுவியது.



“ப்ச், என்னன்னு வாயை திறந்து சொல்லு வாசு.” என்று அவள் கடுப்படிக்க, “ஒன்னுமில்ல... ஒன்னுமில்லையே...” என்றபடி வாசலருகே சென்ற வாசு ஒரு தயக்கத்துடன், “எனக்கு தெரியாம நீ எதுவும் பண்ணலல?” என்று வினவினான்.



“என்ன பண்ணலன்னு கேட்குற?” என்றவளின் குரலை வைத்து அவனால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.



மீண்டும் அவளின் அலைபேசியை பார்த்தவன், “ஒன்னுமில்ல, நான் கிளாஸுக்கு போறேன்.” என்று வெளியேறி விட்டான்.



செல்லும் அவன் முதுகையே வெறித்தவளின் முகம் அத்தனை நேரமிருந்த நிர்மல பாவனையை தொலைத்து, உணர்வுகளை வெளிப்படுத்தியது.



*****



நிலக்கோட்டை...



“அக்கா அக்கா...” என்று அழைத்தபடி அந்த வீட்டிற்குள் நுழைந்தார் கதிர்வேலன்.



அவரின் குரல் கேட்டதும், லேசாக சிதிலமடைய துவங்கியிருந்த வீட்டின் நடுகூடத்தில் சாய்ந்து படுத்திருந்தவர் வேகமாக எழுந்து, அவிழ்ந்திருந்த கூந்தலை அள்ளி முடிந்தபடி கதிர்வேலனை வரவேற்றார்.



“வா வா கதிரு. அந்த மரசேரை இழுத்து போட்டு உக்காரு.” என்று தன் வெண்கல குரலில் கூறினார் கதிர்வேலனின் ஒன்றுவிட்ட அக்காவும் நாகேந்திரனின் உடன்பிறந்த தங்கையுமான நாகேஸ்வரி.



இவருக்கும் இவரின் பெயருக்கும் அத்தனை பொருத்தம்!



எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும், எங்கு தன் விஷத்தை கக்கலாம் என்று எதிர்பார்த்தே வாழ்க்கையை ஓட்டுபவர்.



அவரின் கணவர் பல வருடங்களுக்கு முன்னரே இறந்திருக்க, அவரின் சொத்துக்கள் முழுவதையும் தாயும் மகனுமாக ஊதாரித்தனமாக செலவளித்து விட்டு, இப்போது வாழ்வாதாரத்திற்கே அடுத்தவரை எதிர்பார்க்கும் நிலைக்கு வந்திருந்தனர்.



அப்படி இருந்தாலும் தாய்க்கும் மகனிற்கும் வாய் மட்டும் குறையவில்லை. தாய்க்கு மற்றவர்களை பழி சொல்வதில் பொழுதனைத்தும் கழிய, மகனிற்கோ குடியில் பொழுதனைத்தும் கழிந்தது.



இதோ வெயில் சுட்டெரிக்கும் மதிய பொழுதிலும் கூட போதை தெளியாமல் பின் பக்கத்தில் பப்பரப்பா என்று படுத்திருந்தான் நாகேஸ்வரியின் மகன் நாகரத்தினம்.



அவனையும் ஒரு பார்வை பார்த்த கதிர்வேலன் பாதி உடைந்திருந்த அந்த மரநாற்காலியில் பயந்தபடியே அமர, தன் விசாரணையை துவங்கி விட்டார் நாகேஸ்வரி.



“அப்பறம் போன காரியம் என்னாச்சு? என்ன சொன்னாரு அண்ணே?” என்று நாகேஸ்வரி வினவ, “அது அக்கா... நான் அண்ணே கிட்ட பதமா இங்க வர சொல்லி, கையோட கூட்டிட்டு வரலாம்னு தான் பாத்தேன். ஆனா... அதுக்குள்ள முகிலு வந்துடுச்சு...” என்று நாகேஸ்வரிக்கு பயந்து கொண்டே கதை சொன்னார் கதிர்வேலன்.



“க்கும், அந்த பொட்டச்சிக்கு பயந்து ஓடியாந்துட்டியா?” என்று நாகேஸ்வரி இளக்காரமாக கேட்க, “அக்கா... எல்லாம் தெரிஞ்ச நீயே இப்படி பேசுறியே. அதுவும் காலைல ரோட்டுல அந்த பிள்ள பண்ணதை பாத்து பக்குன்னு ஆகிடுச்சு எனக்கு.” என்று அந்த கதையையும் கூறினார் கதிர்வேலன்.



“அதான பாத்தேன்! மானம் போனாலும் அடங்குறாளான்னு பாரு அந்த சிறுக்கி மவ! இப்படி சண்டித்தனம் பண்ணிட்டு இருக்கனால தான் ஒரு பயலும் கல்யாணம் பண்ண வர மாட்டிங்குறான். என் அண்ணே எவ்ளோ தான் பாப்பாரு. அதான், என் மவனை அந்த அடங்காபிடாரிக்கு கட்டிவச்சு, அவ கொட்டத்தை அடக்கலாம்னு பாத்தா, அதுக்கு ஒரு காலம் விடிய மாட்டிங்குதே!” என்று புலம்பலாக நாகேஸ்வரி கூறினார்.



அதைக் கேட்ட கதிர்வேலனோ, வெயிலில் மல்லாந்து படுத்திருந்த நாகேஸ்வரி பெற்ற ரத்தினத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு, ‘சரிதான், இவன் அவளை அடக்குவானா?’ என்று நினைத்துப் பார்த்தார்.



அவருக்கும் தெரியும் நாகேஸ்வரியின் திட்டம் என்ன என்பது. ஊர் முழுக்க வம்பு பேசி வைத்ததால், ஒருவரும் அவருக்கு உதவ முன்வராத நிலையில், அவரின் அடுத்த இலக்கு நாகேந்திரனின் சொத்து. அதை அடைய தனக்கு பிடிக்காத வெண்முகிலை கூட மருமகளாக கொண்டு வந்துவிடும் வேகம் கடந்த ஒரு வருடமாக நாகேஸ்வரிக்கு இருக்க, அதற்காக தான் இப்படி தன் சொந்தங்கள் ஒவ்வருவரையாக அண்ணனுக்கு தூது அனுப்பிக் கொண்டிருந்தார். ஆனால், பலன் என்னவோ பூஜ்யம் தான்.



இதை எல்லாம் நினைத்து பார்த்த கதிர்வேலனிற்கு வெண்முகில் இறுதியாக சொல்லி அனுப்பியது நினைவிற்கு வர, அதை நாகேஸ்வரியிடம் சொன்னால், தன்னையும் அழைத்துக் கொண்டு சண்டைக்கு சென்றுவிடும் அபாயம் இருப்பதால், அதை சொல்லாமல் மறைத்தவன், “சரிக்கா, நான் அப்படியே வீட்டு பக்கம் நடைய கட்டுறேன். இன்னைக்கான வேலை அப்படியே கெடக்கு.” என்று கதிர்வேலன் அங்கிருந்து கிளம்ப, நாகேஸ்வரியோ அடுத்து யாரை அனுப்பலாம் என்று தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தார்.



*****



வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து டெல்லிக்கு கிளம்பிக் கொண்டிருந்தார் மத்திய அமைச்சர் சதாசிவம். பார்த்தாலே அரசியல்வாதி என்று சொல்லும் அளவிற்கு அனைத்து அம்சங்களும் பொருந்திப்போனது அவருக்கு.



அவசரமாக அவர் கிளம்பிக் கொண்டிருக்க, அவரின் மனைவியோ தயக்கத்துடன், “என்னங்க...” என்று அழைத்தார்.



“மனுஷனை நிம்மதியா கிளம்ப விடுறாளா?” என்று முணுமுணுத்தவர், “என்னடி?” என்று மனைவியிடம் எரிந்து விழுந்தார்.



“அது... நம்ம பையன்...” என்று அவர் பயத்தில் திக்க, “ப்ச், நீ ஒவ்வொரு வார்த்தையா எண்ணி எண்ணி சொல்ற வரைக்கும் காத்திருக்க எனக்கு பொறுமை இல்ல. கார்த்திக்கு என்ன?” என்று படபடத்தார் சதாசிவம்.



“அது... கார்த்தி வரேன்னு சொன்னான்.” என்று மனைவி சொல்லியதும், அவரை அதிர்வாக பார்த்த சதாசிவம் அடுத்த நொடியே கோபம் கொண்டு, “அவன் ஏன் இப்போ வரான்? ஆத்தாளுக்கும் மகனுக்கும் நேர்ல பார்க்காம இருக்க முடியாதோ? போனை போட்டு வர வேண்டாம்னு சொல்லு.” என்று கோபத்தை அடக்கியபடி கூறினார்.



“அவன் ஏற்கனவே கிளம்பிட்டானுங்க.” என்று கண்களை மூடியபடி மனைவி சொல்ல, அவரை அடிக்க வந்த சதாசிவத்தை தடுத்தான் அவரின் உதவியாளன்.



நேரமானதை உணர்ந்த சதாசிவம், “போயிட்டு வந்து வச்சுக்குறேன்.” என்று பல்லைக் கடித்து கூறிவிட்டு விருட்டென்று வெளியேற, மனைவியோ அதற்காக இப்போதே பயப்பட ஆரம்பித்தார்.



அத்தனை அவசரத்தில் கிளம்பும்போதும் தன் உதவியாளனிடம் மகன் வருவதை கூறி, அவனை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டே சென்றார்.



‘ஏன் இத்தனை பாதுகாப்பு?’ என்பதற்கான விடையாய், சில மணி நேரங்களுக்கு பின், மத்திய அமைச்சரின் மகன் காணாமல் போன செய்தி காட்டுத்தீயாக பரவியது.


மாயங்கள் தொடரும்...
 

Vimala Ashokan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 9, 2021
Messages
274
Woov.. yaar intha pudhu avatharam karthik
Mukiloda seriusness kkku opposite ah irukke hariyoda vilaiyaattuththanam
 

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
415
ஹாஹா அலெக்ஷா பக்குனு சிரிச்சிட்டமன்.
ஆனாலும் ரொம்ப ஓவராதான் அடிமையை கலாய்க்குறான் இந்த ஹரி
 

Barkkavi

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 3, 2021
Messages
24
Woov.. yaar intha pudhu avatharam karthik
Mukiloda seriusness kkku opposite ah irukke hariyoda vilaiyaattuththanam
Karthi yaru nu 5th epi la theriyum 😊😊😊
Opposite poles attract each other 😁😁😁
 

Barkkavi

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 3, 2021
Messages
24
ஹாஹா அலெக்ஷா பக்குனு சிரிச்சிட்டமன்.
ஆனாலும் ரொம்ப ஓவராதான் அடிமையை கலாய்க்குறான் இந்த ஹரி
ஹாஹா... அதுக்கு தான் வச்சு செய்ய முகில் இருக்காளே 😊😊😊
 
Top