• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மார்கழிப்பூவே - 1

ஹரிணி அரவிந்தன்

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 5, 2023
Messages
25
"பட்டுப் போன முள் மரம் மீது முல்லைக்கொடி படருமா....?"

- மார்கழிப் பூவே முதல் அத்தியாயத்தில் இருந்து....









"சகு.. சகு...!!!! மணி எட்டாகுது பாரு,
உன் அக்காவை எழுப்பி விடும்மா, காலேஜ்க்கு நேரம் ஆகிட்டு",

தடித்த பச்சை நிறக் கம்பளியினைப் யாரோ இருபுறமும் போர்த்தி விட்டது போல் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமை மட்டுமே கொண்டிருந்த அந்த பகுதிக்கு ஆங்காங்கே அழகு சேர்ப்பது போல் வண்ண வண்ணப் பெயர் தெரியாதப் பூக்கள் பூத்து சிரித்துக் கொண்டு இருந்தன. இந்த அழகு எல்லாமே எனக்கு அடிமை தெரியுமா என்பது போல் அந்த பிரதேசத்தை பனி சூழ்ந்து இருந்தது. அதை ஒட்டி நெருக்கமாக இருந்த தேயிலை செடிகளுக்கு அருகே அமைந்து இருந்த அந்த பெரிய ஓட்டு வீட்டில் இருந்து கேட்கும் வழக்கமான சத்தம் தான் என்பது அந்த தேயிலை செடிகளுக்கு நடுவே வேலை செய்துக் கொண்டு இருந்த அந்த பெண்கள் அந்த வீட்டை ஒருமுறை திரும்பிப் பார்த்து விட்டு தங்களுக்குள் சிரித்து பேசிக் கொள்வதிலே நன்றாக தெரிந்தது.

"நானும் என்னைக்காவது அந்த நர்சரி ராமன் குரல் கேட்காமா இருக்காதனு பார்க்கிறேன், ஹும்கும், அது மட்டும் நடக்க மாட்டேங்குது"

என்று சிரித்தப்படி ஒருத்தி தேயிலைகளைப் பறித்தாள், அங்கு சூழ்ந்து இருந்த இந்த ஊட்டியின் பனியும் அதனால் உண்டான குளிரும் எனக்கு பழக்கமானது தான் என்பது அந்த குளிரைப் பொருட்ப்படுத்தாது அவள் வேகவேகமாக அந்த தேயிலைகளை பறித்து தன் முதுகில் மாட்டி இருந்த கூடையில் போடுவதிலே தெரிந்தது.

"அட நீ வேற செல்லி ஆத்தா, அது இந்த ஜென்மத்தில் நடக்காது, எப்போ அவரு சம்சாரம் விட்டுட்டு மேலே போயிட்டாங்களோ அப்பொதில் இருந்து அந்த பொண்ணுங்களுக்கு இவரு தான் எல்லாம். அந்த பொண்ணுங்க ரெண்டும் பார்க்க தான் பொண்ணுங்களாம், ஆனால் நர்சரி அய்யாக்கு அஞ்சி நாலு வயசு கைப் புள்ளைங்க தானாம் அப்படினு அவரே சொல்லுவாரு, அதான் அதுங்க இன்னும் சின்னப் புள்ளயாவே நடந்துக்கிது"

"அது தான் காலையில் எழுந்து வாசல் கூட்டி கோலம் போடுறதில் இருந்து அந்த புள்ளைங்களுக்கு தலைப் பின்னி விடுற வரைக்கும் அவரே பண்ணுறதிலே தெரியுதே!!"

"என்ன ராணி அக்கா சொல்றீங்க, அந்த பெரியப் பொண்ணு காலேஜ் போகுதுனு சொன்னாங்க",

"அந்த பொண்ணு தான் இன்னும் அவங்க அப்பா மடியை விட்டு இறங்காம கிடக்கு, கேட்டா அதுக்கு ஒரு விளக்கம் சொல்லுவா அவ",

"ராணியக்கா யாரு நேத்து இங்கே வந்து உன்கிட்ட பேசிட்டு இருந்துதே அந்த பொண்ணா?",

"அவ இல்லை தனம், அவ கூட அந்த
கூட்டத்தில் அம்சமா ஒருத்தி நின்னுட்டு இருந்தாளே",

"யாரு, ஒரு பொண்ணு கிட்ட எல்லாரும் வந்து நல்லா சிரிச்சி பேசிட்டு இருந்தாங்களே அதுவா?",

"ஹ்ம்ம்..அந்த பொண்ணே தான்,ஒரு திருத்தம், எல்லாரும் அந்த பொண்ணுக்கிட்ட பேசிட்டு இருந்துருக்க மாட்டாங்க, இவள் தான் எல்லார்ட்டையும் வாய் அடித்துக்கிட்டு இருந்திருப்பா, ஆனால் நீ பார்த்த போது அது அவள் தான் பண்ணினானு உனக்கு தெரியலை பத்தியா அது தான் அவளோட திறமை. வாயாடி ஆனால் பார்த்தா அதுப் போல் தெரியாது, நீ பார்த்தியா நேத்து? அந்த புள்ளைகங்க எல்லாம் எப்படி குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டு இருந்தது, அதற்கு எல்லாம் இவ தான் ஏதாவது சொல்லி சிரிக்க வைத்து இருப்பாள், எல்லா சேட்டையும் செய்வாள், ஆனால் அது வெளியில் தெரியாது, பாக்க பதுசாட்டம் இருக்கும் முகம்",

"அந்த நர்சரி சாரைப் பார்த்தால் ரொம்ப அமைதியான சுபாவம் மாதிரி தெரியுது, அவருக்கு இப்படி ஒரு பொண்ணா? அந்த ரெண்டாவது பொண்ணும் இப்படி தானா?",

"அது கொஞ்சம் சாது, ஆனா மூத்தது தான் வாலு, போன வாரம் மல்லிகைப்பதியன் வாங்க அவங்க வீட்டுக்கு போனேன், ஐந்து நிமிஷம் கூட ஆயிருக்காது, அதுக்குள்ள அந்த வீடு ரெண்டா ஆயிட்டு",

"அப்படி என்னாச்சு ராணியக்கா?",

"பெருசுக்கும் சின்னதுக்கும் எதோ சண்டை போல, அதில் அவங்க அப்பா கண்ணாடியை உடைந்து போயிட்டாம், அது உடைத்தது நீதான் நான் தானு சண்டை, அதுங்க சண்டை முத்தி வெளியே வந்து அவங்க அப்பாக்கிட்ட ஓடி வந்து சொல்ல வந்ததுங்க, அப்போதான் அவர் எனக்கு அந்த பதியனை கொடுத்தார், அதுக்குள்ள அவங்க அப்பாவை பிடித்து யார் முதலில் சொல்றதுனு இழுத்து அந்த கூத்தில் அந்த பதியன் வைத்து இருந்த
பூந்தொட்டியே உடைந்துப் போயிட்டு",

என்று அந்த ராணியக்கா சொல்லிக் கொண்டு இருக்கும் கதைக்கு காரணக் கர்த்தாவான அந்த நர்சரி ராமனின் மூத்த மகள் அந்த ஓட்டு வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்த குழாயினை திறந்து தன் கையில் இருந்த குடத்தை வைத்து விட்டு, தன் கைகள் இரண்டையும் ஒன்றுடொன்று தேய்த்து விட்டு அதை கன்னத்தில் வைத்து அது தந்த சூட்டினை உணர்ந்து கொண்ட திருப்தியுடன் சுற்று புறச் சூழலை ரசித்துக் கொண்டு இருந்தாள். தான் கல்லூரிக்கு செல்ல தயாராக அணிந்து இருந்த சுடிதாரின் மீது
கொட்டிக் கொண்டு இருந்த அந்த ஊட்டியின் பனிக்கு இதமாக அவள் அணிந்து இருந்த அடர் நீல நிற ஸ்வட்டர் அவளின் சிவந்த நிறத்தை இன்னும் தூக்கி காட்டியது, அவளின் பெரிய கண்கள் அடிக்கடி குனிந்து குடத்தைப் பார்க்கும் போது அவளின் இதழ்களில் மர்மப் புன்னகை தோன்றியது. குளிர்சாதனப் பெட்டியில் இருந்து தவறி கீழே விழுந்து உடைந்து உதிர்ந்த பனி படர்ந்து இருந்த மாதுளை முத்துக்களின் நிறத்தை கொண்டிருந்த அவளின் இதழ்களும், அவளின் சிவந்த கன்னங்களில் இருந்த சிவப்பு நிறத்தை கடன் வாங்கி சிவந்து ஆங்காங்கே தோன்றி இருந்த ஒரு சில முகப் பருக்களும் இவள் இயற்கை யாகவே பேரழகி என்றும், அவளின் இடுப்பை தொட்டு தொங்கும் அடர்ந்த கருங்கூந்தலும் அதில் எண்ணெய் தடவி அவள் பின்னி இருந்த விதமும், மருதாணியால் மட்டுமே சிவந்து இருந்த அவளின் விரல் நகங்களும் அவளுக்கும் அழகு நிலையங்களுக்கும், அழகு சாதன பொருட்களுக்கும் வெகு தூரம் என்று சொல்லியது. அந்த சிவப்பு நிற பிளாஸ்டிக் குடத்தை நிரப்பிய தண்ணீரை தூக்கி கொண்டவள், தன் காலை மெல்லிய கொடிப் போல் சுற்றி இருந்த கொலுசு ஒலிக்க நடந்தாள்.

இடுப்பில் குடத்துடன் அந்த வீட்டின் படிகளை நோக்கி நடந்தவள் கண்கள் ஒருமுறை வாசலில் இருந்த தொட்டிச் செடிகளைப் பார்த்து ரசித்தது. அந்த வீட்டின் உள்ளே நடந்தவள் ஹாலைக் கடந்து மூடி இருந்த ஒரு அறையின் கதவை திறந்து உள்ளே சென்றாள்.

"சகு, நேரமாகிட்டு, நான் சமைத்து லஞ்ச் பேக் பண்ணிட்டேன், இன்னும் டிபன் சாப்பிடாம என்ன செய்றீங்க? அக்கா எழுந்தாளா இல்லையா?",

இன்னொரு முறை அந்த ஆண்குரல்
அந்த வீட்டின் கடைசி அறையில் இருந்து கேட்டது. அதைக் கேட்டு அந்த குரலுக்கு பதில் சொல்லாது அந்த குடத்தை சுமந்த பெண் தன் இதழில் விஷமப் புன்னகை சிந்தியப்படி அந்த அறையின் உள்ளே நுழைந்தாள். அங்கே கட்டிலில் தலையில் இருந்து கால் வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு இருக்கும் அந்த உருவத்தின் மீது தன் இடுப்பில் இருந்த குடத்தை எடுத்து அதில் இருந்த தண்ணீரை கொட்டிக் கவிழ்த்தாள்.

"ஆ....!!!! அய்யோ..!!!! அப்பா...!!! அப்பா!!!",

கட்டிலில் படுத்து இருந்த அந்த பெண் உருவம் திடீரென்று தன் மேல் ஊற்றப் பட்ட சில்லென்ற தண்ணீரால் அலறி அடித்துக் கொண்டு எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தது.

"அய்யோ...!!! என்னாச்சும்மா சகு!!! சகு..!!!",

என்றப் படி அதுவரை அந்த வீட்டில் கேட்ட குரலுக்கு சொந்தக் காரனான திரு. நர்சரி ராமன் அவர்கள் கையில் கரண்டியுடன் அந்த அறையை நோக்கி வந்தார். அவரைப் பார்த்ததும் கட்டிலில் தண்ணீரில் நனைந்து போய் நின்ற அந்த உருவத்தின் முகம் கோபம் அடைந்தது.

"அய்யோ சகுந்தலா என்ன இது கோலம்?",

என்று அவர் கேட்டதில் தண்ணீரில் அந்த நனைந்து போய் இருந்த பெண் உருவத்தின் பெயர் சகுந்தலா என்று தெரிந்தது.

"எல்லாம் இதோ இவளால் தான்!!! இங்கே பாருங்கப்பா, செவனேனு தூங்கிட்டு இருந்தவ மேல் தண்ணியை ஊத்திட்டா",

என்று சொன்ன அந்த சகுந்தலா அருகில் கையில் குடத்துடன் நின்றுக் கொண்டிருந்த அந்த பெண்ணைப் பார்த்து முறைத்தாள்.

"அப்பா, தினமும் அவள் என்னை தண்ணீர் தெளித்து எழுப்பும் போது நான் இப்படி தான் ரியாக்ட் பண்ணுறனா? நீங்களே சொல்லுங்க, இன்னைக்கு அவள் தூங்கிட்டே இருந்தாள், நீங்க வேற சகு உன் அக்காவை எழுப்பி விடும்மானு சத்தம் போட்டுட்டே இருந்தீங்களா, அந்த சத்தத்தில் நான் எழுந்துட்டேன், சரி தினமும் நம்மளை எழுப்பி விடுகிறவள் இப்படி தூங்கிறாளே, ஸ்கூலுக்கு லேட்டா ஆகுதே, தினமும் நம்மளை எழுப்பி கரெக்ட் டைம்ல காலேஜுக்கு அனுப்பி விடுபவள் போய் லேட்டா ஸ்கூலுக்கு போவதானு ஒரு நல்ல எண்ணத்தில் அவளுக்கு உதவ தான் நான் எழுப்பி விட்டேன், அதுக்கு போய் என்னை முறைக்கிறா பாருங்கப்பா, ச்சே, நல்லதுக்கே காலம் இல்லை, பெண்கள் நாட்டின் கண்கள், பெண் படிச்சா தான் நாட்டுக்கும் வீட்டுக்கும் முன்னேற்றம்னு சொல்லி இருக்காங்க, நீ ஒரு பெண்ணா இருந்துட்டு இப்படி ஸ்கூலுக்கு சரியான நேரத்துக்கு போகாமா தூங்கலாமா சகு?",

அந்த மாதுளைமுத்து இதழகி நீளமாக பேசியதில் அவள் குரல் கூட இனிமையாக தான் இருந்தது. முல்லைப் பூக்களை நெருக்கமாக தொடுத்தது போல்
இருந்த அவளின் பல்வரிசையும் அவளின் இதழில் நிலவிய புன்னகைக்கு அழகு சேர்த்துக் கொண்டு இருந்தது.

"உன் தலை, ரொம்ப தத்துவ மழை பொழியாதே, உன் அக்கறையில் எனக்கு நெஞ்சு வலிக்குது!! நல்லது செய்றாளாம், எனக்கு இன்னைக்கு ஸ்கூல் லீவ், ஹாஃப் யர்லி எக்ஸாம் முடிந்து ஸ்கூல் லீவ் விட்டு இருக்காங்க, நான் அதான் நிம்மதியா தூங்கிட்டு இருந்தேன், பெரிய பொறுப்பா எழுந்து எழுப்பி விடுறளாம்", பாருங்க அப்பா!!! டெய்லி நல்லா தூங்கிட்டு நான் தண்ணீ தெளித்து எழுப்பி விடுறதால் அரக்க பரக்க எழுந்து காலேஜ் க்கு கிளம்பி போற வ, இன்னைக்கு எதோ ஒரு நாள் சீக்கிரம் எழுந்துட்டு என்ன அலப்பறையை கூட்டுறாங்க பாருங்க",


"என்ன ஹாஃப் யர்லி லீவா...??? ஹி ஹி சாரி சகு, நான் எதோ நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது செய்யப் போய் இப்படி நடந்திட்டு, நீ போய் ட்ரஸ்சை மாத்திக்க... டோண்ட் ஆங்கிரி பேபி",

என்று சகுந்தலாவின் கன்னத்தில் தட்டி விட்டு நகர முற்பட்டவள், நின்று யோசிக்கும் பாவனையில் ஈரத்துணியுடன் நின்றவளை திரும்பிப் பார்த்தாள்.

"சகு, எனக்கு ஒரு டவுட், வெளியே கொடியில் கிடந்த அந்த துணி எல்லாம் உன்னோடு தானே? தண்ணி எடுத்து வரப்போ தான் செக் பண்ணினேன், அது எல்லாம் துவைக்காம அப்படியே இருந்தது போல, சோ அதை எல்லாத்தையும் அப்பாவுக்கு சிரமம் குடுக்க கூடாதுனு நானே ஊற வைத்துட்டு வந்துட்டேன், பார்த்தியா, உனக்கு நான் எவ்ளோ நல்லது பண்றேன், ஆனால் நீ என்னை அக்கானு மதிக்க மாட்ற",

என்று தன் ஸ்வட்டரின் காலரை தூக்கி விட்டுக் கொண்டு கெத்தாக சொல்பவளை கலைத்தது அவளின் அப்பாவின் குரல்.

"அய்யோ அம்மா, அதை ஏன் ஊற வைத்த, அதை எல்லாம் துவைத்து காய போட்டுல இருந்தேன், அடடா, சகு வேற அவளோட எல்லா துணிகளையும் துவைக்கப் போட்டு இருந்தாளே...?",

என்று அவர் முடிக்க,

"அய்யோ...!!!!",

அந்த முல்லைப் பல் சிரிப்பழகி முகம் தன் தங்கையின் முகத்தைப் பார்த்தது.

"அப்பா....!!!!!!! அய்யோ இந்த ராட்சசி கிட்ட இருந்து என்னைக் யாராவது காப்பாத்துங்க!!!",

என்ற அந்த முல்லைப் பல் சிரிப்பழகியின் சத்தமும் அதை தொடர்ந்து டமால் என்று எதோ ஒரு பொருள் உடையும் சப்தமும் கேட்டதில் அந்த வீட்டின் அருகில் தேயிலை பறித்துக் கொண்டு இருந்த அந்த பெண்கள் சிரித்துக் கொண்டனர்.

"நான் சொல்லல, அதுக்குள்ள அதுங்க சண்டை ஆரம்பித்துட்டு, அந்த வீடு இப்போ ரெண்டு ஆயிடும்",

என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அந்த முல்லைப் பல் சிரிப்பழகி அவர்களை நோக்கி ஓடி மூச்சு இறைக்க வந்தாள்.

"ராணியக்கா, அந்த சகு குரங்கு வந்தால் நான் இங்கே இருக்கேன்னு சொல்லாதீங்க",

என்று அந்த தேயிலை செடிகளுக்கு நடுவே ஒளிந்தவளை தேடி சில நொடிகளில் சகுந்தலா வந்தாள்.

"ராணியக்கா!!! அந்த பெரிய குரங்கு இங்கே வந்தாளா?",

என கேட்டுக் கொண்டே வந்த சகுந்தலாவை அந்த ராணியக்கா கேட்டாள்.

"அட, என்ன சகுந்தலா இது? டிரஸ் போட்டுட்டே குளித்து இருக்க?",

என்று அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாது இவள் ஒரு கேள்வி கேட்க அதற்கு சகுந்தலா பதில் சொல்ல முயலும் போதே வீட்டில் அவளுடைய அப்பா நர்சரி ராமன் அழைக்க சகுந்தலா கண்கள் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தன் தமக்கையை எதுவும் செய்ய முடியாத கோபத்துடன்,

"அக்கா, அந்த பிசாசு வந்தால் என்னிடம் மறக்காம சொல்லலுங்க, அவளுக்கு இருக்கு",

என்று கறுவியப்டி வீட்டை நோக்கி நடந்தாள். அவள் தலை மறைந்ததும் தான் ஒளிந்து இருந்த தேயிலை செடிகளுக்கு நடுவே இருந்து வெளியே வந்த அந்த முல்லைப் பல் சிரிப்பழகியினைப் பார்த்து அங்கு இருந்த பெண்கள் புன்னகைத்தனர்.

"அப்பாடா, போயிட்டாளா!!! இவள் கிட்ட நான் படுற பாடு இருக்கே!!! ஆமாம், ராணியக்கா இது யாரு புதுசா இருக்கே, நம்ம ஏரியாவில்?",

என்று தான் சுட்டிக் காட்டிய அந்த பெண்ணின் மீது உரிமையாக நேற்று தான் பழகியது போல் உரிமையாக கேட்டாள் அந்த முல்லைப் பல் சிரிப்பழகி.

"இது பேரு தனம், புதுசா என் வீட்டுக்கு பக்கத்தில் குடி வந்து இருக்காங்க",

"அட...அப்படியா?",

என்ற அந்த முல்லைப் பல் சிரிப்பழகி, அவளை பார்த்து,

"வெல்கம் டூ தி கிரேட் ஊட்டி தனம் அக்கா, என்னைப் பத்தி
உங்க கிட்ட ராணியக்கா சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறேன், என் பேரு முல்லை, அதோ தெரியுது பாருங்க ஒரு ஓட்டு வீடு அது தான் என் வசந்த மாளிகை, அந்த மாளிகையின் ராணி தான் நான், அதோ அந்த வீட்டின் முன்னாடி வித விதமா செடி, மரம்னு இருக்குல்ல அந்த நர்சரிக்கு ஓனர் எங்க நைனா தான், அதனால் சாதாரண ராமனா இருந்த அவரை நர்சரி ராமனா மாத்துன பெருமை அந்த நர்சரியை தான் சேரும், அதுப் போக எங்களுக்கு சொந்தமா ஒரே ஒரு தேயிலைத் தோட்டம் இருக்கு, அதுல தான் இப்போ நம்ம நின்னு பேசிட்டு இருக்கோம், இப்படிப் பட்ட அழகான ஊரில் உன்னை பிறக்க வைத்துட்டு உன்னை நிம்மதியா இருக்க வைத்து விடுவனானு கடவுள் என்னை சோதிக்க படைத்த ஒரு படைப்பு தான் என் கூடப் பொறந்த அந்த ராட்சசி, சகுந்தலா, ராட்சசி, ஆனா பாசக் காரி, எனக்கு ஏதாவது ஒண்ணுனா பொசுக்குனு கண்ணுல தண்ணி வச்சிடுவா, இப்போ மூன்றாம் உலகப் போர் முடிந்து இருக்கா, அடுத்து நீங்க நான்காம் உலகப் போரைத் தானே எதிர்ப் பார்க்கிறீங்க? அது தான் எங்களுக்குள் நடக்காது, இப்போ அடித்துக் கொண்டா அடுத்த நிமிஷமே கூடிக்கொள்வோம், இதில் நடுவில் ஏமாந்து போனது எங்களுக்கு பஞ்சாயத்து செய்து வைக்க வந்த நிறையப் பேர் தான், எங்களை ப் பற்றி தெரிந்து தான் மாட்சிமை மிகுந்த நர்சரி ராமன் அவர்கள் எங்களை சண்டைகளை கண்டுக் கொள்ள மாட்டார், அப்புறம் வேற ஏதாவது கேட்கணுமா நீங்க தனம் அக்கா?",

என்று பட படவென்று பேசிக் கொண்டே போனவள் கவனம் அந்த தேயிலை தோட்டத்தின் சரிவில் இருந்த மரத்தின் மேல் போனது.

"அட...ரொம்ப நாளுக்கு அப்புறம் நாகா பூத்து இருக்கான்",

என்றப்படி தனத்தின் பதிலை எதிர்பார்க்காமல் நடந்தாள்.

"என்ன முல்லை? நாகலிங்க பூ மரத்தைப் பார்க்க போறியா? பார்த்துக்கோ, ஆனால் இனி உன் நாகாவை அங்கே நீ பார்க்க முடியாது?",

"அய்யோ, என்ன சொல்றீங்க அக்கா?",

"ஆமா, முல்லை உனக்கு விஷயம் தெரியாதா, இந்த இடத்தில் எதோ ஹோட்டல் வரப் போகுதாம், அதனால் இந்த நாகலிங்க பூ மரங்கள் எல்லாத்தையும் வெட்டப் போறாங்க,இதுக்காகவே இங்கே கவர்மெண்ட்டில் இருந்து ஒருத்தர் தலைவராக வச்சி ஒரு குழு சென்னையில் இருந்து வந்து இங்கே இறங்கி இருக்காம்"

என்று ராணியக்கா சொல்லி விட்டு தன் சேகரித்த தேயிலைகளை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பிக்க, முல்லை கீழே விழுந்து கிடந்த அந்த நாகலிங்க பூவை எடுத்துப் பார்த்து விட்டு, கண்களில் ஏக்கத்துடன் அந்த மரத்தைப் பார்த்தாள். அந்த பனி பிரதேசத்தின் அழகை, சிவலிங்கத்தை குடைப் பிடித்தப்படி காத்து கொண்டு இருக்கும் ஐந்து தலை நாகத்தை போல் உருவத்தை வைத்து கொண்டு தன் வெளிர் இளஞ்சிவப்பு நிற இதழ்களால் இன்னும் அழகாக்கி கொண்டு இருந்தது அந்த பூக்கள் நிறைந்த மரங்கள். அவள் சிறு வயது முதல் விளையாடி திரிந்த இடம் அது, அதில் ஒரு மரம் மட்டும் வெகுநாட்கள் பூக்காமல் இருந்து இப்போது தான் பூத்து குலுங்கி சிரிக்கிறது, இவை எல்லாம் கோடாலிக்கு இரையாகப் போகிறதா?

என்ற எண்ணம் அவள் மனதில் எழவே, தூரத்தில் நடந்துப் போய் கொண்டு இருந்த ராணியை பார்த்து உரக்க சொன்னாள்.

"அய்யோ என் நாகாவை நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன், என் நாகா மாதிரி பல உயிரை கொன்னு சும்மா திங்கிறதுக்காக ஹோட்டல் கட்டி அப்படி என்னத்தை கிழிக்க போறாங்களாம் ராணியக்கா?",

"நாங்க என்னத்தை அப்படி கிழிக்க போகிறோம்னு பொறுத்து இருந்து பாரும்மா",

அவளின் கேள்விக்கு தொலைவில் சென்று கொண்டிருந்த ராணியக்காவிடம் இருந்து பதில் வராது ஒரு ஆண் குரல் பதில் சொன்னது. பதில் வந்த திசை நோக்கி திரும்பிப் பார்த்தாள் முல்லை, அங்கே கம்பீரமாக ஒருவன் நின்றுக் கொண்டு இருந்தான், அந்த ஊட்டியின் குளிரிலும் அவனிடம் சலனமில்லை. அந்த குளிரைப் பொருட்படுத்தாது அவன் ஸ்வட்டர் அணியாது இருப்பதை உணர்ந்த அவளுக்கு வியப்பு வந்தது. அவனின் முகம் பாறை போல் இறுகி இருந்ததில் அதில் புன்னகை எனும் பேச்சுக்கே இடமில்லை என்பது தெளிவாக தெரிந்தது. எதிரில் நிற்பவரை துளைத்து எடுக்கும் அவனின் ஒளி மிகுந்த கண்கள் கொண்ட பார்வையே அவனின் ஆழ்மனதின் ஆழத்தையும் எண்ணங்களையும் அவன் முகத்திலேப் படிப்பது மிகவும் கடினமான ஒன்று என்று அவளுக்கு தோன்றியது.

"யாரிவன்? அதுவும் என் நாகா மரத்துக்கு அருகில் நிற்கிறான்?, அப்போ அவன் முகத்தைப் பாரேன், என் நாகாவின் உடம்பு தேவலாம் போலிருக்கே? இப்படி ஒரு கடினமான சிரிப்பு மறந்த ஒரு முகமா?, முல்லை!!! இன்னைக்கு நீ ஒரு அபூர்வ பிறவியை சந்தித்து இருக்கேனு நினைக்கிறேன்டி...",

- வாசம் வீசும்
Screenshot_20230323_083609_Gallery.jpg
 

ஹரிணி அரவிந்தன்

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 5, 2023
Messages
25
சுட்டி பொண்ணு மட்டுமா இயற்கை விரும்பியா இருக்கா முல்லை, அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️
நன்றி தொடர்ந்து வாசியுங்கள்
 
Top