• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
மின்னலே என் வானம் தீண்ட வா...

அத்தியாயம் – 19

மதுரவர்ஷினி தன் கலங்கிய தோற்றத்தை சித்தார்த்திற்கு காட்டாமல், நிமிர்வாக இருப்பதுபோல் விறைப்பாக நின்றாள்.

“ ஓ என் மதுக்கு அவ்வளவு தைரியமா? சரி இன்று ஒரு கை பார்த்து விடலாம்” என்று நினைத்தவன் தன் முழுக்கை சட்டையின் முனையை மேல் நோக்கி மடித்து விட்டவாறே மதுவை நோக்கி எட்டு வைத்தான்.

தன் கையில் குழந்தை இருக்கும் தைரியத்தில், எட்டிநில் எச்சரிக்கிறேன் என்பது போல் முறைத்துப் பார்த்தாள் மதுரவர்ஷினி.

மதுரவர்ஷினியைத் தொட வருவது போல் தன் கையினை நீட்டினான். அதற்கு அசராமல் தன் இடத்திலிருந்து அசையாமல் நின்றாள்.

மகனோடு சேர்ந்த தாயை மார்பில் தாங்க வேண்டும் போல் இருந்தது சித்தார்த் வர்மனுக்கு.

தன் கையினால் மதுரவர்ஷினியின் காது மடலை வருடினான். அவளின் சிலிர்ப்பை, சிலிர்த்து எழுந்த ரோமங்கள் காட்டிக்கொடுத்தன.

ஒரு கையில் மகன் இருக்க மறு கையின் விரல்களை அழுத்தமாக மடக்கிக் கொண்டு, பற்களைக் கடித்தபடி, உடலை இறுக்கி நின்றாள்.

சித்தார்த் வர்மனின் உதடுகள் மதுரவர்ஷினியின் செவியினை நோக்கி குனிந்தன.
“மதூ..... “ என்று மையலாக கிசுகிசுத்தான்.

பதிலுக்கு மதுரவர்ஷினி தன் விழிகளை விரித்து அவனை முறைத்தாள்.

“ என்னிடம் உன் காதலை தைரியமாக உரைத்தாயே! அந்தக் காதல் எங்கே மது? நாம் இருவரும் சிறிது முயற்சி செய்து தேடுவோமா? என் மனது இப்போதெல்லாம் உன்னை மிகவும் தேடுகிறது” என்று தன் உள்ளத்தினை உரைத்தான் உரியவளிடம்.

“காதல்... நான் என் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய பிழை. இனி நான் திருத்தம் செய்ய முடியாத ஒன்று” என்றாள் முகத்தினை கடினமாக வைத்துக்கொண்டு.

“ திருத்தவெல்லாம் வேண்டாம் மது. திரும்பி புதியதாக காதலைத் தொடரலாம்... “ என்றான் ரசனை கலந்த பார்வையோடு.

“ஓ... அப்பொழுது உங்கள் மனைவி.... “ என்று இழுத்தாள் தன் உதட்டினை குவித்தவாறு.

மதுரவர்ஷினியின் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் பொறுமையை தூண்டும் விதமாக, தன் இதயத்தில் இருகைகளையும் வைத்துக்கொண்டு, “இங்கே இருக்கும் என் மனைவி, உன்னை காதலிப்பதற்கு ஒன்றும் சொல்ல மாட்டாள்” என்றான் கண்ணடித்தவாறு.

கேர் டேக்கரின் நினைவு வந்ததும் திகுதிகுவென தன் உடல் முழுவதும் பற்றி எரிவது போல் இருந்தது மதுரவர்ஷினிக்கு.

ஒரு கையில் குழந்தை இருக்க, மடக்கிய தன் மறுகையை சற்று உயர்த்தி சித்தார்த் வர்மனின் கழுத்தை இறுக்கி நெரித்தாள்.

தன் இதயத்தின் அருகில் கையை வைத்திருந்தவனோ, அவளின் செயலுக்கு எதிர்வினை ஆற்றாமல், கோபத்தில் சிவந்து நிற்கும் அந்த விழிகளை ரசித்துக்கொண்டு நகை புரிந்த படியே இருந்தான்.

மதுரவர்ஷினியும் கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தத்தை கூட்டிக் கொண்டிருந்தாள். “உன் கையில் என் உயிர் பிரிவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் இந்த உயிர் நீ கொடுத்தது தானே மது” என்றான் சுவாசத்திற்கு திக்கியபடி.

சித்தார்த் வர்மன் தன்னுயிர் பற்றி பேசியதும், முகத்தில் சோகம் படர, தன் கைகளை மெதுவாக கீழே இறக்கினாள்.

“ உங்கள் மனைவியை.... ம் க்கும்.... நீங்கள் மிகவும் விரும்புகிறீர்களா? “ என்றாள் மெதுவாக.

மதுரவர்ஷினியை பார்த்தவாரே “ ஆம் மது. மிகவும் நேசிக்கிறேன். அவளும் என்னை மிகவும் நேசிக்கிறாள் அறிந்தும் அறியாமலும்.
என் மனைவி என்னை எப்படி ரசித்திருந்தால், உருவத்தில் என்னைப் போலவே மகனைப் பெற்று கொடுத்து இருப்பாள் பாரேன்.... “ என்று காதலில் கர்வம் மிக உறங்கும் தன் மகனின் தலையை மென்மையாக தடவிக்கொடுத்தான்.

தன் மகவை தான் தவற விட்டதை எண்ணி ஹோவென்று நெஞ்சம் அடைத்தது மதுரவர்ஷினிக்கு.

தன் பிள்ளையும் இருந்திருந்தால், தன் உலகத்தில் தான் மட்டும் தனித்து இருக்க வேண்டி இருக்காதே. காதல் மனைவியின் பெருமை பேசும் சித்தார்த்தின் பளபளக்கும் கண்களை தோண்டி எடுக்க வேண்டும் போலிருந்தது மதுரவர்ஷினிக்கு.

“ மிஸ்டர் சித்தார்த், இப்பொழுது நான் மட்டும் நேரில் சென்று உங்கள் மனைவியிடம் உங்கள் வண்டவாளத்தை எல்லாம் தண்டவாளம் ஏற்றினால் என்ன செய்வீர்கள்?

அப்புறம் உங்கள் காதலுக்கு நீங்கள் ஒரு முழுக்கு தான் போட வேண்டும். வசதி எப்படி? “ மிடுக்காக கேட்டாள் மதுரவர்ஷினி.

“ அப்படி என்னைப்பற்றி என்ன சொல்வாய் மது? “ கண்ணோரம் சுருங்கிய படி கேலி பேசினான்.

அவனது கேள்வியில் வெகுண்டு எழுந்தவள், “நாம் காதலித்ததை சொல்லுவேன்” என்றாள் அவனை வென்ற பார்வையுடன்.

“ அப்புறம்... “ அவளைப் பேசும்படி ஊக்கினான்.

“ நீங்கள் என்னை..... “ என்று பேச வந்தவள் சட்டென்று வாயடைத்து ஊமையானாள்.

“ நானா உன்னை..... நீதானே என்னை..... “ என்று தலையை சரித்து ஒற்றை விரலால் கன்னத்தை தடவியபடி கேட்டான்.

மதுரவர்ஷினியின் முகம் ரத்தமான சிவந்து போனது. பதில் உரைக்க முடியாமல் திரும்பிக்கொண்டாள்.


மென்மையாக அவள் தோளைத் தொட்டு தன்னை நோக்கித் திருப்பியவன், ஆதித்திய வர்மனை தன் கைகளில் வாங்கிக் கொண்டான்.

பின் குனிந்திருந்த அவள் தலையை, நாடியைப் பற்றி நிமிர்த்தினான்.

“ மது இதில் நீ, வெட்கம் கொள்ளவோ, குற்றப்படவோ ஒன்றுமில்லை. உன் காதலை நிரூபிக்க உன்னிடம் வேறு ஒரு வலிமையான சாட்சி உண்டு” என்றான் அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்து.

என்ன என்பது போல் புரியாமல் விழித்தவளைப் பார்த்து, “ அந்த சாட்சி நான் தான் மது “ என்றான் அழுத்தமான குரலில்.

“மதுரவர்ஷினி உன் கண்களை மூடு .. “ என்ற அவனின் மாய குரலுக்குக் கட்டுப்பட்டு கண்களை இறுக மூடினாள்.

“நீ உனக்குள் ஆழ்ந்து செல். உன்னில் என்னை தேடு மது. நீ உன்னில் என்னை கண்டுபிடிக்கும் நாளுக்காக நான் காத்திருப்பேன்” என்றான் வார்த்தைகள் காதல் பெருக.

அவனுடைய நேசம் பொங்கிவரும் வெள்ளமாய் இருந்தபோது அதில் நீந்தி மகிழ்ந்தவள், அது கானல் நீராய் மாறியபோது கசங்கித் துடித்த, அதன் நினைவுகளில் சித்தார்த் வர்மனின் பேச்சை நம்ப மறுத்தது மதுரவர்ஷினியின் மென்மையான பெண்மனம்.

சட்டெனத் தன் இமைகள் திறந்து அவனைத் தீயாய் உறுத்து விழித்தாள்.

“ உங்கள் பேச்சை நம்புவதற்கு நான் பழைய மதுரவர்ஷினி இல்லை... “ குரல் உயர்த்தி கத்த ஆரம்பித்தாள்.

அவனோ மென்மையிலும் மென்மையாய், “ஆம் நீ பழைய மதுரவர்ஷினி இல்லைதான்” என்றான்.

சித்தார்த் தன் மனதிற்குள், “அறிவில் சிறந்து ஓங்கி மிளிர்கிறாய். அசரடிக்கும் அழகில் ஆளை மயக்குகிறாய். கோபத்தில் என்னை கொள்ளை அடிக்கிறாய். என் சீண்டலில் சீறி எழுந்து என்னை சிறை எடுக்கிறாய்.
உன் தாய்மையின் அழகில் நம் மகனோடு சேர்ந்து என் மனதும் உன் மடி சாய துடிக்குதே.... “ என்று எண்ணியபடியே நீண்ட பெருமூச்செறிந்தான்.

கற்பனையில் கண்ணெதிரே நின்றவனின் முன் சொடக்கிட்டாள் மதுரவர்ஷினி.

“ நீங்கள் கிளம்பலாம்.... “ என்றாள் தோரணையாக.

தன் ஊன் உயிர் நிறைய நிறைய மதுரவர்ஷினியை மனதால் அள்ளிக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் சித்தார்த் வர்மன்.

வேலை நேரம் முடிந்ததும் தன் வீட்டிற்கு வந்தாள் மதுரவர்ஷினி. அவளது உள்ளம் எதையோ தேடியது. கண்களை நான்கு திசைகளிலும் பரவ விட்டாள்.

எதைத் தேடுகிறோம் என்று தெரியாமலேயே தேட ஆரம்பித்தாள். தான் தேடும் பொருள் மிக அருகில் இருப்பதாகவும் அது தன் கண்ணில் மறைந்து விளையாட்டு காட்டுவது போலவும் தோன்றியது மதுரவர்ஷினிக்கு.

நெற்றியில் வியர்வை பூக்கள் பூக்க, தோட்டத்திற்கு ஓடினாள். பூத்திருக்கும் மலர்கள் அத்தனையிலும் ஆதித்திய வர்மன் முகம் தெரிவது போல் பிரமை ஏற்பட்டது.

“சித்தார்த்தை தாண்டி தனக்கும் ஆதித்ய வர்மனுக்கும் என்னதொடர்பு?” அவளது மனம் அலைபாய ஆரம்பித்தது.

மனம் தள்ளாடியபடியே வீட்டிற்குள் நுழைந்தவள், மாடிப் படியில் காலடி எடுத்து வைத்தாள்.

திடீரென ஏற்பட்ட வேகத்தில் விறுவிறுவென படியேறினாள்.

தன்னுடைய அறைக்குள் விரைந்து நுழைந்தவள், தன்னுடைய உடைகள் அடுக்கி வைத்திருக்கும் அலமாரியை கலைத்தாள்.

அவளுடைய உடைகள் திசைக்கு ஒன்றாக பறந்தன.
அவளது கண்கள் எதையோ வெறித்தனமாக தேடியது.

தேடியது எதுவும் கிடைக்காத தோல்வியின் உச்சத்தில் அப்படியே அலமாரி கதவில் சாய்ந்து கொண்டு, தரதரவென கீழே அமர்ந்தவள், தன் கைகள் இரண்டையும் தலையில் வைத்து குனிந்து கொண்டாள்.

மேலே கலைத்து விடப்பட்ட உடையில் ஒன்று கீழே விழுந்தது. அது கீழே விழும் பொழுது அதனுள் இருந்த கற்றை காகிதங்கள் நிறைந்த கோப்பு ஒன்றும் மதுரவர்ஷினியின் தலைமீது விழுந்தது.

யோசனையுடன் அதனைக் கையில் எடுத்தவள், மெதுவாக புரட்டிப் பார்த்தாள்.

அது மதுரவர்ஷினியின் பிரசவ மருத்துவ அறிக்கைக்கான கோப்பு.

அதில் சி டி ஸ்கேனில் எடுத்த தன் குழந்தையின் உருவப்படத்தை கண்ணீர் மல்க தடவிப் பார்த்தாள்.

முழுவதுமாக படித்து முடிப்பதற்குள் கண்ணீர் பெருகி அவள் கண்களை மறைத்தது.

அந்த ஸ்கேன் படத்தில் இருந்த மதுரவர்ஷினியின் குழந்தையோ தன் கையை நெற்றியின் மீது வைத்து சுருண்டு படுத்து இருந்தது.

“எவ்வளவு ஆசையாக என் மகவை சுமந்து இருந்தேன். சித்தார்த் வர்மன் கூறியது போல் என் குழந்தையும் பிறந்திருந்தால் சித்தார்த் வர்மனை உரித்து வைத்திருக்குமோ?.

கருவை சுமக்கும் போது என் எண்ணம் முழுவதும் சித்தார்த்தனின் காதலிலே எவ்வளவு நம்பிக்கையாக இருந்தது.

கடைசி நொடி வரை உறுதியாக இருந்த என் காதல் ஏன் பொடிப்பொடியாக உடைந்து நொறுங்கியது?

சித்தார்த் வர்மனுக்கு எப்படி தன் வாயால் வேறு ஒரு பெண்ணிடம் காதல் உரைக்க முடிந்தது?

அந்த அதிர்ச்சியில் தான் என் குழந்தை அழிந்து இருக்குமோ?

என் குழந்தையை அழித்தவனை எப்படி சும்மா விடுவது?

அவனுடைய குழந்தையை எடுத்து விட்டு வந்து விடுவோமா?“, அவளுடைய கற்பனைகள் தன் எல்லைகலைத் தாண்ட ஆரம்பித்தது.

தன் குழந்தையை தானே கடத்த அவளது தாய் பாசம் அவளை மாயச் சுழலுக்குள் சிக்க வைத்தது.

“ ஒரு நாள் முழுவதும் ஆதித்ய வர்மனை தூக்கி வந்து விட வேண்டும். சித்தார்த் நன்றாக தவிக்க வேண்டும்.

அவனுடைய மனைவி? ஒரு அம்மாவாக அவள் தவிப்பாளே? துரோகம் செய்த சித்தார்த்தை கட்டிக்கொண்டதால் அவளும் ஒரு நாள் அனுபவிக்கட்டும்” என்று முடிவெடுத்த பின் அவளது மனம் லேசானது.

தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள். சித்தார்த் வர்மனின் வீட்டிற்குள் நுழைந்தால் அவன் கண்டு கொள்வானோ? வெளியில் வைத்தே ஆதித்ய வர்மனை தூக்கிக் கொள்ள மற்றவரின் உதவியும் வேண்டுமே? சரி துணிந்தே வீட்டிற்குள் செல்லலாம். மாட்டிக் கொண்டால் சித்தார்த் வர்மனை பார்க்க வந்ததாகக் கூறி சமாளிக்கலாம் என்ற முடிவிற்கு வந்தாள்.

தனது மருத்துவமனைக்கு போன் செய்து தான் இன்று நைட் டியூட்டிக்கு வரமுடியாது என்று கூறினாள்.

தனக்கு மிகவும் நெருக்கமான கார்முகிலிடம் சித்தார்த் வர்மன் டியூட்டி பற்றிய விபரம் சேகரித்துக் கொண்டாள் .

விடிந்தும் விடியாத அந்தக் காலைப் பொழுதை தேர்வு செய்தாள் மதுரவர்ஷினி. தன் காரை சித்தார்த் வர்மன் குடியிருக்கும் தெருவின் ஓரத்திலேயே நிறுத்தி வைத்தாள்.

நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொண்டது. ஆதித்திய வர்மனை தூக்கிக் கொண்டு வருவது சித்தார்த்தை பழிவாங்கவா? அல்லது தன் மன மகிழ்ச்சிக்காகவா? புரியாத புதிரின் விடை தெரியாமல் விரைந்து நடக்க ஆரம்பித்தாள்.

அதிகாலையிலேயே எழுந்த சித்தார்த் வர்மன் தன் அறையின் பால்கனியில் சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருந்தான்.

கைகளை உயரக் கூப்பி கண்திறந்த வேளை, தூரத்தில் மதுரவர்ஷினி நடந்து வருவதைக் கண்டான். அவள் உருவத்தை எப்படி மறைத்தாலும், அவன் உயிரை அவனுக்குத் தெரியாதா? ரகசியமாய் மனதிற்குள் சிரிக்க ஆரம்பித்தான்.


மதுரவர்ஷினி சிரமப் படாத வகையில் வீட்டின் பின் கதவுகளைத் திறந்து வைத்தான். ஆதித்ய வர்மனை தூக்கிக்கொண்டு வந்து,நடு ஹாலில் உள்ள சோபாவில் உறங்க வைத்தான்.

மகனைக் காண வந்த தாயை தொந்தரவு செய்யாமல் மறைந்து நின்று கொண்டான்.

வீட்டின் பின் கதவு திறந்து கிடக்க மதுரவர்ஷினியோ சித்தார்த்தை முட்டாள் என்று ஏளனமாக எண்ணிச் சிரித்தாள்.

உள்ளே நுழைந்தவள், ஆதித்திய வர்மன் சோபாவில் உறங்குவதைக் கண்டு, இன்று தனக்கு அதிர்ஷ்டமான நாள் என்று நினைத்துக்கொண்டாள்.
சுற்று முற்றும் பார்த்தாள்.

சித்தார்த் வர்மனோ, அவன் மனைவியோ இருப்பதற்கான அறிகுறிகள் தெரியாததால், மென்பாதங்களில் பூனை நடை நடந்து வந்து, சோபாவின் அருகில் மண்டியிட்டு அமர்ந்தாள்.

தன் தளிர் கரங்களால், அந்த பூந்தளிரை தடவிக் கொடுத்தாள். உதட்டின் ஓரத்தில் எச்சில் வழிந்தபடி, அயர்ந்து உறங்கும் அந்த பூச்செண்டை வாரி அணைத்து எடுத்துக் கொண்டாள்.

கள்ளப் பார்வை பார்த்தபடியே பின் வாசலை நெருங்கினாள்.
மதுரவர்ஷினியின் செயல்களைக் கண்டு சித்தார்த் வர்மன் அதிர்ந்து விழித்தான். தன் மகனைக் காண வந்தவள் பார்த்து ரசித்துவிட்டு சென்று விடுவாள் என்று தான் நினைக்க, மகனைத் தூக்கிக் கொண்டு ஓடும் அந்த மாயக்காரியின் லீலையைக் கண்டு, “மதுரவர்ஷினி வர வர உனக்கு தைரியம் அதிகமாகிக்கொண்டே வருகிறதே.... “ என்று மனதிற்குள் நினைத்தபடியே
மதுரவர்ஷினியை பின் தொடர்ந்தான்.

மதுரவர்ஷினி காருக்குள் குழந்தையைக் கிடத்தி தன் காரை எடுக்க, டி-ஷர்ட்டும், டிராக் பேண்ட்டுமாக வேகமாக ஓடி வந்தவன் தன் காரை எடுத்துக்கொண்டு அவளை பின்தொடர்ந்தான்.

அவளது கார் அவளுடைய வீட்டிற்குள் நுழைவதைக் கண்டு சற்று ஆசுவாசம் அடைந்தான்.

விடியலின் வெளிச்சத்தில் இனி தான் அதிக நேரம் இங்கே இருக்க முடியாது என்பதை உணர்ந்து சித்தார்த், கௌசிக்கின் உதவியோடு வேறு ஒரு கண்காணிப்பாளரை நியமித்து விட்டு தன் வீடு திரும்பினான்.

சிவானந்தன் தன் அறையைவிட்டு வெளியே வராததால், மதுரவர்ஷினி குழந்தையோடு வீட்டிற்குள் நுழைந்ததை அவர் கவனிக்கவில்லை.

தன் அறையில், தன் படுக்கையில் ஆதித்திய வர்மனை படுக்க வைத்தவள், அவன் விழிக்கும் தருணத்திற்காக காத்திருந்தாள்.

அல்லி மலர் கண் திறக்குமா?
அன்னை முகம் கண்டு உளம் சிரிக்குமா?

மின்னல் வெட்டும்....
 

Kavi priya

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 6, 2022
Messages
25
பிரமாதமான நகர்வு. அடுத்து என்ன என்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் தோழி.
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
பிரமாதமான நகர்வு. அடுத்து என்ன என்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் தோழி.
அம்மாவும் மகனும் கொண்டாட்டத்தில்...
அப்பாவோ திண்டாட்டத்தில்...
டம் டம் ஆட்டம் ஆரம்பம்🤣🤣🤣🤣🤣
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
அருமையான பதிவு
தாய்மை என்றுமே அழகு தானே 😍😍😍😍
வாழ்த்திற்கு நன்றிகள் 🙏🙏🙏
 

Priyakutty

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 28, 2022
Messages
112
அவங்க குழந்தையை அவங்களே கடத்துறாங்க... 😅🥰🥰

சித்து பாத்துட்டாரு மது...
 

Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
ஆழ்மனதின் காதல், அவன் மீதான சந்தேகத்தை வென்றிடுமோ 🤔🤔🤔

தாய்மையின் மனதுக்குள்ளும் கள்ளம் புகுந்து விட்டதே 😜😜😜 இதில் வர்மனை நினைத்து ஏளனச்சிரிப்பு வேறா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

இனி சிவானந்தனின் நிலை 🤣🤣🤣
 
Top