• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மிருதனின் முளரி 18

kkp7

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
21
18
8
Tamil nadu
அலைகள் வந்து நிதானமாகக் கரையைத் தழுவிச் செல்வதையே கைகட்டிப் பார்த்துக் கோண்டு நின்றிருந்தான் ஜோசப்மைக்கேல்.

அவனையும் அவன் பார்க்கும் அலைகளையுமே பார்த்தபடி சில நிமிடங்கள் நின்றிருந்த கலைமோகன், பொறுமை இழந்தவனாக அவனுக்கு அருகில் வந்து சேர, அந்த நேரம் பார்த்து அங்கு வந்து சேர்ந்தாள் எஸ்தர்.

எஸ்தர் அந்த நேரத்தில் அங்கு வருவாள் என்று இரண்டு ஆண்களுமே கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

"ரெண்டு பேரும் இங்க என்ன செய்யுறீங்கள்.. நீங்கள் இப்ப உங்களுந்தை தேவதைக்குத் தானே குடைபிடிச்சுக் கொண்டு இருந்திருக்க வேணும்.."
என்று கொண்டே பக்கத்தில் வந்த எஸ்தரைப் பார்க்க இருவருக்குமே கடுப்பாகிப் போனது.

ஆனாலும் இருவருமே அமைதியாக நிற்க
"மைக்கேல்.. நான் உன்னைத் தேடிக் கொண்டு தான் வந்தனான்.. ஏன் எண்டு கேட்க மாட்டியோ.. ம்ம்ம் நீ கேட்க மாட்டாய்.. அதனால நானே சொல்லுறன்.. உனக்கு சிதம்பரநாதனைத் தெரியுமோ.. அவரை உனக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை.. உங்க ரெண்டு பேருக்கும் தான் ஏதவோ தகராறு போய்க் கொண்டு இருக்குதே பிறகென்ன.. சரி நான் வந்த விஷயத்தை சொல்றேன்.. நான் யாழ்ப்பாணம் போயிருந்தப்ப அந்தாளு என்கிட்டே வந்து கதைச்சாரு.."
என்று நிறுத்தி விட்டு மைக்கேலின் முகம் பார்த்தாள் எஸ்தர்.

அவனோ எந்தச் சலனமும் இல்லாமல் அமைதியாக நிற்க, அந்தத் தோரணை அவளை உசுப்பி விட்டது போலும்,
"என்ன கதைச்சாருனு கண்டிப்பா உனக்கு சொல்லியே ஆக வேணும்.. பாரதி எங்க இருக்கானு என்னட்டைச் சொன்னால் உனக்குச் சில பல லட்சங்களை விட்டு எறியறதா சொன்னான் அந்த ஆளு.. லட்சங்களை வீசியெறிஞ்சா வாலாட்டுற ஆளு இல்லை நானு.. ஆனா அவ எங்க இருக்கானு இலவசமாவே உங்களுக்குச் சொல்லுறன்னு சொல்லீட்டு வந்தேன்.."
என்று எஸ்தர் முடிக்க, இடியென மைக்கேலின் கரம் அவளது கன்னத்தில் விழுந்தது.

அவன் அவ்விதம் அடிப்பான் என்பதை எதிர்பாராமல் தெனாவெட்டாகக் கதைத்துக் கொண்டு நின்றவள், அவன் அடித்த வேகத்தில் கடற்கரை மணலில் உருண்டாள் என்றே சொல்ல வேண்டும்.

சுர்ரென எரிந்த கன்னத்தைப் பொத்திக் கொண்டு
"போயும் போயும் அவளுக்காக என்னையே அடிச்சிட்டியா நீ.. அவளை இதுக்காகவே ஏதாவது செய்ய வேணும் போலத் தோணுது எனக்கு.."
என்றவளது கழுத்தில் கை வைத்தவனை, வேகமாக ஓடி வந்து பிடித்தான் கலை.

"கையை விடு கலை.. இவளைப் பாக்கப் பாக்கப் பத்திக் கொண்டு வருது.. எப்பவுமே தான் நல்லா இருந்தா போதும்.. தனக்கு மட்டும் நல்லது நடந்தாப் போதும் எண்டுற எண்ணம்.. மத்தவங்களைப் பத்திக் கொஞ்சம் கூட யோசிக்கிறதே இல்லை.. இதனாலேயே இவளாலேயே தான்டா என்னோட ரதியை நான் பிரமிப்பாப் பார்த்தேன்.. அவளோட குணத்துக்குப் பக்கத்துல வர முடியாமாடா இவளால.. என்ன ஜென்மமோ.. நான் பிறந்த வயித்தில தான் இவளும் பிறந்தானு நினைக்கும் போது அருவெறுப்பா இருக்குடா.."
என வார்த்தைகளைக் கடித்துத் துப்பிய தன் அண்ணனை அடிபட்ட பார்வை பார்த்தாள் எஸ்தர்.

மைக்கேல் அவளிடம் இப்படிக் கதைப்பது இது தான் முதல் தடவை, அவன் கதைத்த விஷயங்கள் லேசாக அவளது நெஞ்சைத் துளைத்தது என்று தான் சொல்ல வேண்டும், ஆனாலும் பாரதி மேல் இருந்த வெறுப்பு அப்படியே தான் இருந்தது.

அவளது முகபாவனையிலேயே அவளுடையை எண்ணங்களைப் படித்த கலைமோகன்
"இப்போ கூட உனக்குப் பாரு மேல தான் வெறுப்பு அப்புடித் தானே எஸ்தர்.. நியாயமாப் பாக்கப் போனால் நீ எங்க மேல தானே வெறுப்பைக் கொட்ட வேணும்.. பாரு மேல எதுக்குக் கொட்டுறாய்.. உன்னை ஒரு கேள்வி கேக்கிறன்.. உன்ரை மனசாட்சியைத் தொட்டுப் பதில் சொல்லு.. பாரு உனக்கு ஏதாவது கெடுதல் செய்தாளா.."
என்று கேட்க, எஸ்தரின் முகம் யோசனையைத் தத்தெடுத்துக் கொண்டது.

"பார்த்தியோ யோசிக்கிறாய்.. அப்புடினா என்ன அர்த்தம் சட்டுனு ஞாபகம் வாற மாதிரி அவ உனக்கு எந்தக் கெடுதலுமே செய்யேல்லை.. ஆனா நீ.."
என்று கொண்டு கலை பேச்சை நிறுத்த
"நான் என்ன செய்தனான்.. நானும் ஒரு கெடுதலுமே செய்யேல்லை.."
என்று பரபரத்தாள் எஸ்தர்.

"உங்க அண்ணா இந்தக் கொழும்புல ஒரு முக்கிய புள்ளி.. அவனை அறியாமல் ஒரு இலை கூட அசையாது அது உனக்குத் தெரியுமா எஸ்தர்.. ஆனா நீ அவன் கூட இருந்து கொண்டே அவன் நேசிக்கிற பிள்ளைக்குக் கெடுதல் கெடுதலா செய்து இருக்கிறாய்.. உனக்கு மறந்து போனால் நான் நினைவு படுத்தவா.. பாருவோட நர்சரிக்கு முன்னால ஆளுங்களை விட்டுக் கலாட்டா செய்யச் சொன்னது.. அவளோட துப்பட்டாவை இழுத்து அவளை அவமானப் படுத்தப் பார்த்தது எல்லாமே உன்னோட கைவேலை தான்னு எங்கள் ரெண்டு பேருக்கும் நல்லாவே தெரியும்.."
எனக் கலை சொல்லவும், எஸ்தரின் முகம் மாறியே போய் விட்டது.

"அந்தக் கேவலமான வேலையளை வேறை யாரும் செய்திருந்தால் அவங்க இருந்த அடையாளமே இல்லாம செய்திருப்பான் ஜோசப்.. ஆனா அவன் கூட நீ பிறந்த பாவத்துக்காகத் தான் உன்னை விட்டு வைச்சிருக்கிறான்.."
என்ற கலை,
"இவ கூட என்ன கதை.. நீ வா ஜோசப் நாங்கள் அடுத்த வேலையைப் பாப்பம்.."
என்று கொண்டே ஜோசப்மைக்கேலின் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான்.

அவர்கள் இருவரையுமே பார்த்தபடி எஸ்தர் அப்படியே நின்றிருக்க, கொஞ்ச தூரம் சென்ற கலை நின்று அவளைத் திரும்பிப் பார்க்க, அவளும் அப்போது அவனைத் தான் பார்த்தாள்.

"நீ.. இங்க இருக்கிற வீட்டை முதன் முதலா வந்த நேரம்.. பாரு உன்னை எப்புடி நடத்தினாள் எண்டுறதை ஒருக்கா யோசிச்சுப் பாரு.. அப்போ புரியும் என்ரை பாருவைப் பத்தி.."
என்று சொன்னவன், பிறகு திரும்பிப் பார்க்காமல் ஜோசப்மைக்கேலோடு போய் விட்டான்.

இருவரும் போய் விட்ட பிறகும் கூட, அங்கேயே நெடு நேரமாக நின்றிருந்தாள் எஸ்தர், அவளுடைய மனது லேசாக சலனப் பட்டுப் போயிருந்தது.

மைக்கேலோடு கடற்கரையை விட்டு வந்த கலைமோகன் நேராக பாரதியிடம் தான் சென்றான்.

அங்கே தன்னறையில் உடைகளை மடித்து வைத்துக் கொண்டிருந்த பாரதி, கலையோடு வந்த மைக்கேலைக் கவனிக்கவில்லை.

"குட்டீ.."

"சொல்லு பாரு.."

"உன்ரை பாஸுக்கு ஒரு வேளை என்னைப் பிடிக்கலையோ.."

"ஏன் பாரு.. அப்புடிக் கேக்கிறாய்.."

"இல்லை.. அண்டைக்கு நான் என்ரை நேசத்தைச் சொன்ன நேரம் அவரிந்தை முகமே விடியாத மாதிரி இருந்தது அது தான்.."
என்று கொண்டு திரும்பியவள், அப்போது தான் அங்கே நின்றிருந்த மற்றவனையும் பார்த்தாள்.

பாரதி மைக்கேலைக் கண்டு விட்டாள் என்பதைப் பார்த்த கலைமோகன், இருவருக்கும் தனிமை கொடுத்து இங்கிதமாக விலகி விட, ஒருவரையொருவர் பார்த்தும் பார்க்காததும் போல, இருவரும் அப்படியே நின்று விட்டார்கள்.

அந்த அமைதியான சூழலை "ரதி" என அழைத்து, மைக்கேல் உடைக்க, அந்த அழைப்பில் சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் பாரதி.

"நாம கல்யாணம் செஞ்சிக்கலாமா.."
என மைக்கேல் எந்த சுத்திவளைப்பும் இல்லாமல் கேட்டு விட, அவனையே பார்த்தபடி வாயடைத்துப் போய் நின்று விட்டாள் பாரதி.

எவ்வளவு நேரம் தான் அப்படியே நின்றாளோ தெரியவில்லை, மைக்கேல் அவளருகே போய் அவள் தோள் தொடத் தான் திடுக்குற்று நிமிர்ந்தாள்.

"உண்மையாத் தான் கேட்கிறீங்களோ.."

"ஏன் நான் கேட்கிறதைப் பார்க்கப் பொய்யாக் கேட்கிற போல கிடக்குதோ.."

"இல்லை.. ஒரு வாரம் ஆகும் நீங்க வர.. வந்தாலும் எனக்கு ஓம் சொல்ல மாட்டீங்கள் எண்டு நினைச்சன்.."

"ஏன் அப்புடி.."

"தெரியேல்லை.. ஆனாத் தோணிச்சு.."

"இப்போ.."

"இப்போ அது தான் நம்ப முடியேல்லை.."
என்றவளை, இழுத்துக் கைவளைவுக்குள் கொண்டு வந்து அவள் விழிகளை நோக்க, அவனது அந்தத் திடீர் அணைப்பில் முதலில் பதறியவள், மெல்ல நிதானத்துக்கு வந்து, அவனை முறைக்க முயன்று முடியாமல் அவன் மார்பில் தன் முகத்தை மறைத்தாள்.

தன் மார்பில் முகம் புதைத்து நின்றவளை, மெல்ல அணைத்தவனது நெஞ்சு படபடத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

இவளுக்கு மட்டும் நினைவுகள் திரும்பினால், இப்படித் தன்னோடு ஒன்றி ஒட்டி நிற்பாளா என்கிற கேள்வி அவனைக் குடையாமல் இல்லை, தற்காலிகமாக அந்த எண்ணங்களுக்கு அணை போட்டு வைத்தவன், தன் அணைப்பை இறுக்க, அவன் அணைப்புக்குள் நின்றவளோ மெல்ல நெளிந்தாள்.

அவள் சங்கடப் படுகிறாள் என்பதை உணர்ந்தவன், மெல்லத் தன் பிடியைத் தளர்த்த, விட்டால் போதும் என அங்கிருந்து ஓடிய பாரதி குளியலறைக்குள் புகுந்து விட்டாள்.

உள்ளே குளியலறைக் கதவோடு சாய்ந்து நின்றவளுக்குத் தன் இதயம் தாறுமாறாகத் துடிப்பது போலத் தான் இருந்தது, அதை விடவும் முகம் சூடேறி இருப்பதைக் கூட உணர முடிந்தது.

தன் காதல் கைகூடிய சந்தோஷத்தில், முகம் மலரத் தன் கைகளிலேயே முகத்தை மூடிக் கொண்டாள் அவள்.

வெளியே மூடிய கதவை சில நொடிகள் பார்த்து விட்டு, மெல்லிய புன்னகையோடு தன் நண்பனைத் தேடிக் கொண்டு போனான் மைக்கேல்.

அங்கே சோகமே உருவாக நின்றிருந்த கலையைப் பார்த்ததும், மைக்கேலின் புருவங்கள் யோசனையில் மெல்லச் சுருங்கவே, அவனருகில் வேகமாகப் போய் அவன் தோள் தொட்டான்.

"என்னாச்சு கலை.."

"என்ன என்னாச்சு.. நான் தான் உன்னை என்னாச்சுனு கேக்க வேணும்.."

"என்ரை கதை கிரீன் சிக்னல் தானே பிறகென்ன.. அதைப் பத்திப் பிறகு கதைப்பம்.. முதல்ல நீ சொல்லு உனக்கு என்ன நடந்தது.."

"ஏன்டா எனக்கென்ன நடந்தது ஒண்டும் இல்லையே.."

"இழுத்து விட்டன் எண்டால் இப்ப தெரியும் எல்லாம்.."

"சாரிடா.. எஸ்தரைப் பத்தி தான் யோசிச்சுக் கொண்டு இருந்தனான்.."

"அந்த எருமையைப் பத்தி யோசிச்சால் மூஞ்சி கடுப்பாக வேணும் எல்லோ.. உனக்கேன் கவலையாகுது.."

"என்ன செய்ய.. காதலிச்சுத் தொலைச்சிட்டனே.."

"உண்மையாவோடா.."

"உண்மையாத் தான் ஜோசப்.. அவளை நாம திருத்துவம் எண்டு தான்.."

"சுத்தம்.."

"எனக்கு நம்பிக்கை இருக்கு ஜோசப்.."

"வாழ்த்துகள் கலை.. இதை நான் நக்கலா சொல்லேல்லை.. அவ திருந்திப் புது மனுஷியானால் சந்தோஷப் படுற முதல் ஆள் நானாத் தான் இருப்பன்டா.."

"அவளைக் கூடவே இருந்து ரெண்டு தட்டுத் தட்டினாத் தான்டா அவ திருந்துவா.."

"அப்போ ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா முடிச்சுரலாமே.. செலவும் மிச்சம்.."

"பாருக்கிட்ட சொல்லணும் ஜோசப்.. அவ என்ன நினைப்பாளோனு தான்.."

"அவ இவ்வளவுக்கும் நீ எஸ்தரை கல்யாணம் செய்ய நினைச்சதைப் பத்தி ஊகிச்சிருப்பா..

" உண்மையாச் சொல்லுறியோ.."

"உண்மையாத் தான் சொல்லுறன்.. ஏதவோ நீ நல்லா இருந்தா எனக்கு அது போதும் கலை.. அவ கல்யாணத்துக்குப் பிறகும் உனக்கு ஆட்டங் காட்டினானு வை அவ்வளவு தான் சொல்லீட்டன்.."
என்ற தன் நண்பனை இறுக அணைத்துக் கொண்டான் கலைமோகன்.