• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மிருதனின் முளரி 19

kkp7

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
21
18
8
Tamil nadu
முகத்தைத் திருப்பியபடி நின்றிருந்த எஸ்தரையே பார்த்தபடி நின்றிருந்த கலைமோகன், மறந்தும் அவளைச் சமாதானம் செய்ய முயலவில்லை.

அவன் தன்னைச் சமாதானம் செய்ய முயலுவான் என்கிற எண்ணத்தில், வீம்பாகத் தலையைத் திருப்பி நின்றிருந்தவளுக்கோ, அவனது அந்த அமைதியான தோற்றம் கொஞ்சம் ஏமாற்றத்தைத் தான் கொடுத்தது.

"கலை.."

"என்ன.."

"என்னைச் சமாதானம் செய்ய மாட்டியோ.."

"ஏன்.."

"ஏனோ.. நான் தான் கோபமா இருக்கிறனே.."

"இருந்தா.."

"என்ன நீ.. கொஞ்சம் கூடப் பொறுப்பு இல்லாமல் கதைக்கிறாய்.."

"பொறுப்பு இல்லாமல் கதைக்கிறனோ.. நானோ.."

"ஓம் நீ தான்.."

"சரி உன்ரை வழிக்கே வாறன்.. எனக்குப் பொறுப்பு இல்லை எண்டு சொல்லுறியே.. உனக்கு அந்த மண்ணாங்கட்டிப் பொறுப்பு இருக்குதோ சொல்லு.. அதோட நீ என்ன நியாயமான விஷயத்துக்கோ கோபப்பட்டனி நான் உன்னைச் சமாதானம் செய்ய.."

"உனக்கு எப்பவுமே உன்ரை பாரு தான் முக்கியம்.."

"வாயை மூடடி.. ரெண்டு விட்டன் எண்டால் பல்லெல்லாம் கழறும் சொல்லீட்டன்.. பாரு உனக்கு என்னடி செய்தவள் அவளில உனக்கு ஏனடி இவ்வளவு வன்மம்.. அதோட இப்ப இந்த நிமிஷம் பாருவை ஏன் இழுக்கிறாய்.."
என்ற கலைக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

பிறகும் என்ன நினைத்தானோ தெரியவில்லை, தன் தலையை அழுந்தக் கோதித் தன்னை நிதானப் படுத்திக் கொண்ட கலை, மெல்ல வந்து எஸ்தரின் கரங்களைப் பற்றிக் கொண்டான்.

"இங்க பார் எஸ்தர்.. நீ என்னை விரும்புறாய் தானே.."

"ம்ம்.."

"அதை வாயைத் திறந்து சொல்லன்.."

"ஓம் நான் உன்னை விரும்புறன்.."

"சரி நானும் உன்னை விரும்புறன்.."

"கொஞ்ச நாள் வரைக்கும் உன்ரை வாய் அப்புடிச் சொல்லேலையே.."

"சரி அப்ப சொல்லேல்லை.. இப்ப சொல்லுறன் தானே.."

"என்ன சொல்லுறாய்.."

"நானும் உன்னை விரும்புறன்.."

"ஓ.."

"ம்ம்.. நாங்கள் ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சு கொள்ளுவமோ.."

"ஏய் உண்மையாவோ.."

"சத்தியமா.."

"என்ன திடீரெண்டு.. நேத்து வரைக்கும் என்னைக் கண்டாலே உனக்கு ஆகாதே.. நானாத் தேடித் தேடி வந்தாலும் துரத்தித் துரத்தி விடுவியே அது தான் எனக்கு ஒரே அதிர்ச்சி.."

"இல்லை எஸ்தர்.. நானும் யோசிச்சுப் பாத்தன்.. என்னை ஒருத்தி இப்புடித் துரத்தித் துரத்தி வாறாளே அவளோட வாழ்ந்தால் ஒருவேளை என்ரை வாழ்க்கை நல்லா இருக்குமோ எண்டு.."

"இப்பவாச்சும் புரிஞ்சுதே.. இனியாவது அந்தப் பாருவோட புராணத்தைப் படிக்காத.."

"இது தான்டி இது தான் உன்ரை பிரச்சினை.. இப்ப இந்த நேரம் ஏன்டி அவளைத் தேவையில்லாமல் இழுக்கிறாய்.. இதைப் பாரு எஸ்தர் நாங்கள் ரெண்டு பேரும் கல்யாணம் செய்து கொள்ளுறது எண்டால் எனக்கொரு கண்டிஷன்.."

"என்னவாம்.. உன்ரை பாரு தான் தாலி எடுத்துக் குடுக்க வேணுமோ.."

"கடுப்பைக் கிளப்பாத எஸ்தர்.. எவ்வளவு பொறுமையா உன்னோட நிண்டு கதைச்சுக் கொண்டு இருக்கிறன் தெரியுமோ.. ஆக ஓவராப் போனாய் எண்டால் போடி எண்டிட்டுப் போய்க் கொண்டேயிருப்பன்.. உனக்குத் தான் என்னைப் பத்தி நல்லாத் தெரியுமே.."

"தெரியும் தெரியும்.. தெரிஞ்சதால தான வெக்கங் கெட்டுப் போய் உனக்குப் பின்னால அலையிறன்.. சொல்லு உன்ரை கண்டிஷனை.."

"சரி சொல்லுறன் வடிவாக் கேளு.. நானும் நீயும் தனியா இருந்து கதைக்கிற நேரங்களில நீ பாருவைப் பத்திக் கதைக்கக் கூடாது.. அதுலயும் முக்கியமா அவளைப் பத்திக் குறைவாக் கதைக்கக் கூடாது.."

"ஒருவேளை கதைச்சால்.."

"தாலியைக் கட்டின கையாலேயே அதைக் கழட்ட வைக்கிற மாதிரி செய்ய மாட்டாய் எண்டு நம்புறன்.."
எனக் கலை அவள் விழிகள் பார்த்துச் சொல்ல, எஸ்தரது தலை தானாகக் கவிழ்ந்தது.

சில நிமிடங்கள் அப்படியே கரைய, மெல்ல நெருக்கி அவளைத் தன் தோளோடு அணைத்துக் கொண்ட கலைமோகன்
"எஸ்தர்.. நானும் நீயும் நிம்மதியாப் புருஷன் பெண்சாதியா வாழ வேண்டாமோ சொல்லு.. தேவையில்லாத கதைகள் எங்களுக்கு நடுவுல வேண்டாம் எண்டு நான் நினைக்கிறன்.. பாருவை நீ எதிரியாவே பாக்கிறதால எனக்கும் உன்னை எதிரியாப் பாக்க வேண்டிய சூழ்நிலை வருகுது.. அவள் எனக்குக் கூடிப் பிறக்காத சகோதரியடி இதை நான் உனக்கு வேறை எப்புடிப் புரிய வைக்கிறது எண்டு தெரியேல்லை.."
என்று சொல்ல, அவன் அணைப்பில் இருந்து மெல்ல விலகிய எஸ்தர்
"சரி கலை.. நேரமாச்சுது நான் வீட்டை போறன்.. பிறகு கதைப்பம்.."
என்று கொண்டு போக, அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் கலைமோகன்.

பாரதி பற்றிய நல்ல அபிப்பிராயத்தை இவளுக்கு எப்படித் தோற்றுவிப்பது என்ற எண்ணமே அவனது மண்டையைச் சூடாக்கிக் கொண்டிருந்தது என்று சொல்லலாம்.

அங்கே தன் வேலைகளை முடித்து விட்டு, சைக்கிளில் வராமல் அந்தப் பெரிய சாலையில், கால்நடையில் வந்து கொண்டிருந்தாள் பாரதி.

அப்படி நடந்து வருவது பாரதிக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், சாலையை நோட்டம் விட்டபடியே வந்தவள் அப்போது தான் சாலையைக் கடக்க முயன்று கொண்டிருந்த எஸ்தரைப் பார்த்தாள்.

பார்த்தவுடனேயே
"உந்தப் பிள்ளைக்கு ஏன் தான் என்னைச் சுத்தமாப் பிடிக்கேலையோ.. பாவம் கலையும் என்னால தான் உவளிட்டைக் காதலைச் சொல்லாமல் சுத்திக் கொண்டு திரியிறான் போல.."
என்று முணுமுணுத்துக் கொண்டே நடையை எட்டிப் போட்டாள்.

எஸ்தரின் பார்வை வட்டத்துக்குள் விழாமல், அங்கிருந்து செல்ல முயன்ற பாரதியின் கவனத்தை, வேகமாக வந்த வாகனம் திசை திருப்பியது.

சாலையைக் கடப்பதிலேயே மும்முரமாக இருந்த எஸ்தர், பக்கவாட்டில் வேகமாக வந்து கொண்டிருந்த வாகனத்தைக் கவனிக்கவில்லை.

அவளையும் வாகனத்தையும் ஒரே பார்வையில் கவனித்த பாரதிக்கு, இதயம் நின்று துடிப்பது போல இருக்கவே, வேகமாக எஸ்தரை நோக்கி ஓடினாள்.

எதேச்சையாக பாரதி ஓடி வந்த திசையைப் பார்த்த எஸ்தருக்கு, இவள் எந்தக் கோட்டையைப் பிடிக்க இப்படி ஓடி வருகிறாள் என்பது போலத் தான் எண்ணம் தோன்றியது.

அதோடு இயல்பிலேயே பாரதி மீது இருந்த வெறுப்பால் தலையைத் திருப்பிக் கொண்டவள், அப்போது தான் தன் பக்கத்தில் வந்த வாகனத்தையே பார்த்தாள்.

பார்த்த கணமே அதிர்ச்சியில் அந்த இடத்தை விட்டு விலக வேண்டும் என்கிற எண்ணம் கூடத் தோன்றாமல் அப்படியே ஸ்தம்பித்தது போல நின்றிருந்த எஸ்தரை, வந்த வேகத்தில் இழுத்து அடுத்த பக்கம் விட்ட பாரதியை, பக்கத்தில் கிடந்த தூண் பதம் பார்க்கவே அவளது வலது முழங்கை நன்றாகவே அடி வாங்கிக் கொண்டது.

அடியின் வேகத்தில் வலி தாழாமல் பாரதி கத்த, அப்போது தான் எஸ்தருக்கே சுற்றுப்புறம் புரிந்தது என்று சொல்ல வேண்டும்.

பாரதி மயிரிழையில் தன் உயிரைக் காப்பாற்றி இருக்கிறாள் என்பதை உணரவே எஸ்தருக்குச் சில நிமிடங்கள் தேவைப்பட்டன.

அதற்குள் பாரதி வலியில் கத்த, அவளிடம் ஓடி வந்த எஸ்தர்
"ஏய் ஏய் என்னாச்சுது.. முழங்கையில அடி பட்டிச்சோ.."
என்று கொண்டே பாரதியின் வலது முழங்கையை மெல்ல நீவி விட்டுக் கொண்டே, வேக வேகமாகக் கலைக்கு அழைத்திருந்தாள்.

அவனும் அந்தச் சாலையில் தான் எங்கோ வேலையில் இருந்ததால், எஸ்தர் அழைத்ததுமே ஓடி வந்து விட்டான்.

"ஏய் எஸ்தர் என்னாச்சு.. ஏன் குரலெல்லாம் ஒரு மாதிரி இருந்த உனக்கு.."

"எனக்கு ஒண்டுமில்லை கலை.. இவளுக்குத் தான் முழங்கையில அடி பட்டிருச்சு.. வா வேகமா ஆசுப்பத்திரிக்குப் போவம்.."

"ஏன் பாருக்கு என்ன.."

"நான் இங்க இந்த ரோட்டைக் கடக்க வந்தனான்.. அப்ப அந்தப் பக்கம் வேகமா ஒரு டிப்பர் வந்தது.. நான் அதைக் கவனிக்கேல்லை.. கொஞ்சம் எண்டால் என்ன ஆகி இருப்பனோ தெரியாது கலை.. நல்ல காலம் இவள் தான் வந்து என்னை இழுத்துக் காப்பாத்தீட்டாள்.. அதுல அவளுக்கு முழங்கையில அடி விழுந்திட்டுது.."

"ஐயோ என்ரை கடவுளே.. பாரு உனக்கு என்ன கை நல்லா நோகுதோ.. வா வா ஆசுப்பத்திரிக்கு போவம்.. உனக்குக் கொஞ்ச நாளாவே என்னவோ சரியில்லை.. ஒரே அடியா விழுகுது.."
என்று கொண்டே, ஒரு டாக்சியை வர வைத்துப் பாரதியை மெல்ல அதில் ஏற்றிய கலைமோகன், பக்கத்தில் இன்னமும் கூட அதிர்ச்சி விலகாமல் நின்றிருந்த எஸ்தரிடம் திரும்பினான்.

"எஸ்தர்.. உனக்கு அடிகிடி ஒண்டும் படேல்லைத் தானே.. ஏன்டி பேயறைஞ்ச மாதிரி நிக்கிறாய்.. நீயும் வா உன்னையும் ஒருக்காச் செக் பண்ணச் சொல்லுவம்.."
என்று கொண்டே, எஸ்தரையும் டாக்சியில் ஏறச் சொன்னான் கலைமோகன்.

டாக்சி அங்கே சற்றுத் தூரத்தில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனையை நோக்கி விரைய, உள்ளே அமர்ந்திருந்த பாரதி தன் கையைக் கையைப் பிடிக்க, அவளையே விழியெடுக்காமல் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் எஸ்தர்.

நடந்து முடிந்து போன சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் எஸ்தரை விட்டுப் போகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தான் எப்படி எல்லாம் பாரதி மீது வெறுப்பை உமிழ்ந்து கொண்டு அலைகிறேன், இன்று நடக்கவிருந்த விபத்தில் தன் இடத்தில் பாரதி இருந்து, பாரதியின் இடத்தில் தான் இருந்திருந்தால் தன் வன்மம் பிடிச்ச மனசு அவளைக் காப்பாற்ற முயற்சி செய்து இருக்குமா என்பதே கேள்விக்குறி தானே, ஆனால் அவள் கொஞ்சம் கூட யோசனை செய்யாமல் என்னைக் காப்பாற்றி இருக்கிறாளே என்கிற எண்ணம் மாறி மாறி எஸ்தரின் மனதைக் குடைந்து கொண்டிருந்தது.

ஒரு வழியாக வைத்தியசாலையை அடைந்து, பாரதியை மருத்துவரிடம் காட்டிய போது, அவளது வலது முழங்கையின் உள் எலும்பு விலகி விட்டிருந்ததைச் சொன்ன அவர், அதற்கான சிகிச்சையையும் கொடுக்க, கிட்டத்தட்ட எஸ்தருக்குப் பேச்சற்ற நிலை என்று தான் சொல்ல வேண்டும்.

பாரதியின் முழங்கையில் லேசான அடி தான் என அவள் நினைத்திருக்க, இதென்னடா உள்ளுக்குள் எலும்பே விலகி விட்டது என்று வைத்தியர் சொல்கிறாரே என நினைத்த எஸ்தருக்கு, லேசாகக் குற்றவுணர்வு எட்டிப் பார்த்தது என்றே தான் சொல்ல வேண்டும்.

எஸ்தரின் முகத்தில் தெரிந்த உணர்வுகளிலேயே அவளது மனதைப் படித்த கலைக்கு, உள்ளூரச் சந்தோஷமாகத் தான் இருந்தது என்றாலும், இவள் மனம் மாற என்னுடைய பாரு தன் கையின் எலும்பையா பணயம் வைக்க வேண்டும் என்கிற கோபமும் அவனுக்கு வரத் தவறவில்லை.

வேண்டுமென்றே எஸ்தரை உசுப்பி விட யோசனை செய்தவன், பாரதிக்குத் தாங்கள் கதைக்கும் சத்தம் கேட்காத இடத்துக்கு எஸ்தரை அழைத்துச் சென்றான்.

"என்ன எஸ்தர்.. போயும் போயும் அவளுக்கு முழங்கை எலும்பு தான் விலகி இருக்குது.. இன்னும் பெரிய அடிகிடி ஏதாவது படேல்லையே எண்டுற கவலையோ.. இல்லாட்டிக்கு உன்னை நோக்கி வேகமா வந்த டிப்பர் அவளை இடிக்கேலை எண்டுற கவலையோ.."
என்று கலை கேட்க, அவனை நோக்கி வேகமாகத் திரும்பிய எஸ்தரின் கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன.

அதைக் கண்டதும் கலைக்கே ஒரு மாதிரியாகப் போய் விட்டது, அவன் ஏதோ சொல்ல வாய் எடுக்கவும், வேகமாக அங்கிருந்து போய் விட்டாள் எஸ்தர்.