• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
யாழ்ப்பாணத்தின் நகர்ப் பகுதியில் இருந்து சற்றே தள்ளி இருக்கும் ஓர் ஊர் திருநெல்வேலி. அது காலப் போக்கில் மருவித் தின்னைவேலி என்று ஆகி விட்டது.
ஊரின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை எங்குப் பார்த்தாலும் பல விதமான பச்சை நிறங்கள் கண்ணுக்குக் குளிர்ச்சியைக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.


தின்னைவேலியில் இருக்கும் விவசாயப் பண்ணை மூலிகைச் செடிகளுக்கும், மரக்கறிச் செடிகளுக்கும் பெயர் போனது.


அந்த விவசாயப் பண்ணையில் இருந்து இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் கீழே நின்றிருந்தாள் தமிழ்நிலா.


கையில் ஒரு பெரிய பை, கீழே ஒரு பெரிய பை என இரண்டு உடைகள் நிரம்பிய பைகளுடன் யாழ்ப்பாணம் செல்லும் பேருந்துக்காக அவள் நெடு நேரமாகக் காத்துக் கொண்டு நின்றிருந்தாள்.


தார்ச்சாலையில் சென்று கொண்டிருந்த அத்தனை ஆட்களிலும் பாதி ஆட்களாவது அவளை ஒரு தடவைக்கு மூன்று தடவையாவது திரும்பிப் பார்க்காமல் செல்லவில்லை.


அதை உணர்ந்தவளுக்கு எப்போது பேருந்து வருமோ என்றிருந்தது. அவளது எண்ணம் போலத் தொலைவில் வரும் சிவப்பு நிற அரச பேருந்தைப் பார்த்தவளுக்குப் பெருத்த ஆறுதலாக இருந்தது.


பக்கம் வந்த பேருந்தில் வேகமாக ஏறியவள் ஜன்னலோர இருக்கையாகப் பார்த்து அமர்ந்து கொண்டு, முகத்தை வெளிப்புறம் பார்த்தபடி திருப்பிக் கொண்டாள்.


பத்து நிமிடத்தில் அடைய வேண்டிய யாழ்ப்பாணத்தை அந்தப் பேருந்து ஏனோ பத்து மணி நேரமாக ஓடிக் கடப்பது போல அவளுக்குத் தோன்றியது.


ஒரு வழியாக அந்த அரசப் பேருந்து யாழ்நகரை அடைந்த போது அடுத்தப் பேருந்தைப் பிடிப்பதற்காக வேகவேகமாக இறங்கி ஓடினாள் தமிழ்நிலா.


வவுனியா என்று எழுதப்பட்ட பலகையைத் தாங்கியபடி நின்றிருந்த பேருந்தின் வாசலில் அவளை எதிர்பார்த்தபடி நின்றிருந்தான் சியாத்மொஹமட்.


அவனைப் பார்த்ததுமே அதுவரை ஒருவித இறுக்கமாக இருந்த அவளது வதனம் விரிந்து மலர்ந்து புன்னகையைத் தத்தெடுத்துக் கொண்டது.


"அக்கச்சி... சுடச்சுட ஒரு வடையும் தேத்தண்ணியும் குடிச்சிட்டு வருவமோ... அப்பத் தான் தெம்பாப் போவலாம்... என்ன சொல்லுறியள்..."
என்று கேட்டுக் கொண்டே பக்கத்தில் இருந்த ஒரு தேநீர்க் கடை நோக்கி வேகமாக ஓடினான் மொஹமட்.


தமிழ்நிலா ஏதோ சொல்வதற்கு வாயைத் திறப்பதற்கு முன்பாகவே மொஹமட் கடையினுள் நுழைந்து விட்டான்.
அவனைத் தொடர்ந்து போகலாமா வேண்டாமா என்று தனக்குள் ஒரு விவாதத்தை நடத்திக் கொண்டு இருந்தவளை ரொம்ப நேரம் தவிக்க விடாமல், கையில் தேநீர்க் குவளையோடு ஓடி வந்தான் மொஹமட்.


"என்னடா நீ... நான் வாயைத் துறக்க முந்தி ஓடிட்டியே... எனக்கு ஒரு பயித்தம் பணியாரம் வாங்கிக் குடுக்கிறியாடா..."
என அசடு வழிந்தபடி தமிழ் கேட்க, லேசாகச் சிரித்தபடி சட்டைப் பையினுள் இருந்த பயித்தம் பணியாரம் நிரம்பிய பையை எடுத்து அவளிடம் நீட்டியவனைப் பார்த்து, தன் அத்தனை பற்களையும் காட்டிச் சிரித்தாள் தமிழ்.


வவுனியா செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தபடி மொஹமட் வாங்கிக் கொடுத்த பயித்தம் பணியாரத்தை ஒரு சொட்டுக் கூடக் கீழே உதிர்க்காமல் கவனமாகக் கடித்து ருசித்து உண்ணத் தொடங்கிய தன் தத்துத் தமக்கையையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்த தம்பியுடையானைப் பார்த்து
"என்னடா..."
என வாய் கொள்ளாப் பணியாரத்தை விழுங்கியபடி தமிழ் கேட்டாள்.


அவளைப் பார்த்து லேசாகச் சிரித்தபடி
"ஒரு பேச்சுக்காவது நீயும் சாப்பிடுறியோடா தம்பி... எண்டு கேட்டியோ அக்கச்சி நீ..."
என மொஹமட் கேட்க,
"மன்னிச்சுக்கோடா... பயித்தம் உருண்டைப் பயித்தியத்திலயும் அதிண்டை ருசியிலயும் உன்னை மறந்திட்டன்..."
என்று கொண்டே ஓர் உருண்டையை எடுத்து அவனிடம் தமிழ் நீட்ட
"இருக்கட்டும் இருக்கட்டும்... அதையும் நீயே சாப்பிடு... நான் சும்மா தான் கேட்டுப் பாத்தன்..."
என்றவன் தொடர்ந்து
"அக்கச்சி... முடிவா என்ன முடிவுக்குத் தான் நீ வந்திருக்கிறாய் எண்டு சொல்லன்... நீ வவுனியா வா போயிட்டு வருவம் எண்டதும் நானும் வந்திட்டன்... ஆனா நீ வேறை ஒரு முடிவும் இன்னும் சொல்லேலையே..."
என அவளையே பார்த்தபடி கேட்க, அதுவரை பயித்தம் உருண்டையில் பயித்தியமாகி லயித்திருந்த அவள் முகம் யோசனையில் சற்றே இறுகியது.


"சியாத்து... எங்கடை பொருளாதார நிலையை வைச்சுக் கொண்டு நம்மாலே இப்போதைக்கு எதையும் செய்ய முடியாது எண்டு முடிவு செய்யக் கூடாது அப்பன்... பொருளாதாரம் கீழப் போனாலும் சரி மேலப் போனாலும் சரி நாங்கள் எங்கள்ரை பாதையில் போய்க் கொண்டே இருக்கோணும் அதனால..."
எனச் சொல்லித் தமிழ் நிறுத்த
"அதனால நேராகத்
தரணிக்குளத்துக்குப் போய் அந்த அம்மச்சியைக் கூட்டிட்டு வந்திடுவம் சரிதானா அக்கச்சி..."
என முடிவாக முடித்த மொஹமட்டின் முகத்தை விரல்களால் சுத்தி தன் நெற்றியில் நெரித்து
"அப்படித் தான்டா என் தங்கமே..."
எனச் சொன்ன தமிழைப் பார்த்து அழகாக முறுவலித்தான் தமிழின் சியாத்து.


சரியாக இருபது நிமிடங்களில் யாழ் மத்திய நிலையத்தில் இருந்து வவுனியா நோக்கிப் புறப்பட்ட அரச பேருந்தில் சியாத்மொஹமட்டும், தமிழ்நிலாவும் கதையளந்தபடி பேசிக் கொண்டே சென்றார்கள்.


இருவருக்கும் என்றுமே பேருந்துப் பயணம் சலித்ததே இல்லை.
அதிலும் ஜன்னலோரத்து இருக்கையும் மனதுக்குப் பிடித்த இசையும் இணைந்தால் எந்தப் பேருந்திலும் எவ்வளவு தூரம் என்றாலும் பயணம் செய்யலாம் என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள்.


மனதினுள் வெவ்வேறு குழப்பங்கள் இருந்தாலும் இந்தப் பயணத்தை இரசித்துக் கடக்க வேண்டும் என இருவரும் விரும்பியதால், வெளியே வேடிக்கை பார்த்தபடி பின்னே ஓடிக் கொண்டிருந்த மரஞ் செடி கொடிகளையும், இயற்கையன்னையின் வடிவழகுகளையும் இரசிக்கத் தவறவில்லை அவர்கள்.


அவர்கள் இருவரதும் இரசனைக்கு ஏற்றது போலவே பேருந்துப் பயணம் தொடங்கியதில் இருந்தே தேவாவின் இசையிலே பாடல்கள் தவழ்ந்து வந்து காதினைத் தீண்டிச் சென்றது.


"அக்கச்சி... எப்பிடித் தான் உந்த மனுஷன் உப்புடி இசையைப் பிச்சு உதறுராரோ தெரியேல்லை... உவரிண்டை இசையில வந்த பாட்டுகளைக் கேட்டாலே மனசெல்லாம் ஏதோ பறக்கிற மாதிரியும் உடம்பெல்லாம் புல்லரிக்கிற மாதிரியும் கிடக்கு..."
என மொஹமட் சிலாகித்துக் கூற, தமிழோ புன்சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு சித்ராவும், உன்னிகிருஷ்ணனும் உருகிப் பாடிய
"காலமெலாம் காதல் வாழ்க... காதலெனும் வேதம் வாழ்க..."
என்ற பாடலைக் கண்களை மூடி முணுமுணுத்தபடி இரசித்துக் கொண்டிருந்தாள்.


தேவா இசையைப் பற்றிப் பேசினாலே புதுச் சந்தோஷம் மிளிர அவரைப் பற்றிப் பந்தி பந்தியாக ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்து தள்ளும் அக்காள் இப்போது ஏதும் பேசாமல் இசையில் மூழ்கி இருக்கவே பாடல் வரிகளைக் கவனித்தவன்
"என்னக்கச்சி... எனக்குத் தெரியாமல் காதல் கடல் குளம் எண்டு எதிலையாச்சும் குதிச்சுத் தொலைச்சிட்டியோ... ஆனாப் பாத்தா அப்புடிச் சொல்லவும் முடியேல்லை சொல்லாமல் இருக்கவும் முடியேல்லை..."
என்று சொல்ல அவனது தலையில் வலிக்காமல் கொட்டியவள்
"அப்புடிக் குதிச்சிருந்தால் உன்னட்டைச் சொல்லாமல் இருப்பனோடா லூசுப் பயலே... உன்ரை அக்கச்சியை நீ புரிஞ்சு கொண்டது அவ்வளவு தானாடா... வளந்து கெட்டவனே..."
என்று சொல்லிக் கொண்டே அவனை ஏகத்துக்கும் முறைத்தாள்.


அவளது முறைப்பில் ஈ என இளித்தபடி தன் காதுகளைப் பிடித்துக் கொண்டு
"மன்னிச்சுக்கோடி அக்கச்சி... உன்ரை இரசனையில முழுகிக் கிடந்த மூஞ்சியைப் பாத்து சும்மா வம்பிழுக்கத்தான் அப்புடிக் கேட்டனான்... ஆனா என்ரை அக்கச்சி என்னட்டைச் சொல்லாம ஒரு தேத்தண்ணி கூடக் குடிக்காது எண்டு எனக்குத் தெரியாதா..."
என்றவனைப் பார்த்துத் தலை சாய்த்துப் புன்னகைத்தவள் உடனேயே
"ஆனா ஒண்ணுடா... இந்த மாதிரியான லேசா மயிலிறகால மனசை வருடுறது போல இருக்கிற பாட்டுகளைக் கேட்கும் போது... அதுக்காகவே காதலிக்கணும் போல இருக்குடா..."
இரசனையோடு சொன்னாள்.


இரசனை பொங்கத் தன் மனக்கிடக்கையை வெளிப் படுத்திய பெரியவளைப் பார்த்து மீண்டும் அழகாகப் புன்னகைத்தவன், பதிலின்றி இருக்கையில் வாகாகச் சாய்ந்து கொண்டு கண்களை மூட,
தனது கருத்தை அவனும் ஆமோதிக்கிறான், அப்படி ஓர் எண்ணம் அவனுள்ளும் இருந்திருக்கிறது என்பதை உணர்ந்தவள் முறுவலோடு தானும் விழிகளை மூடிப் பாடலை இரசிக்கத் தொடங்கினாள்.


அவளது இரசனைக்குத் தோதாக அடுத்தப் பாடலில்
"நீ நடக்கும் புல்வெளியில் பனித்துளிகள் துடைத்து வைப்பேன்... நீ பேசும் தாய்மொழியில் வல்லினங்கள் களைந்து வைப்பேன்..."
என ஹரிகரன் தன் காந்தக்குரலை பேருந்தெங்கும் கடத்திக் கொண்டிருந்தார்.


இசையோடு கூடிய அவர்களது பேருந்துப் பயணம் மூன்றுமணி நேரங்களில் முடிவுக்கு வந்தது.


பேருந்தை விட்டுக் கீழே அடியெடுத்து வைத்ததுமே எதற்காக இங்கு வந்தோம் என்ற நினைப்பே கொஞ்சம் பதட்டத்தையும் இறுக்கத்தையும் கொடுத்தது.


இன்றைய நாளில் இனிமேல் நடக்க இருக்கின்ற நிகழ்வும் அவர்கள் சந்திக்கப் போகின்ற நபர்களும் இருவருக்குமே சவாலாக இருக்கப் போகிறார்கள் என்று தெரிந்தும் அந்தச் சவாலை இருவரும் விரும்பியே ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.


வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து முச்சக்கரவண்டியில் தரணிக்குளத்தை நோக்கித் தம்பியும் தமக்கையும் பயணித்தனர்.


போகும் பாதையில் தென்பட்ட சிறிய கோவில் பெரிய கோவில் என அனைத்துக் கோவில்களையும் விழுந்து விழுந்து வேண்டிக் கொண்டாள் தமிழ்.


தமிழின் இறுக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே
"வண்ணநிலவே வண்ணநிலவே வருவது நீதானா... வாசனைகள் வருகிறதே வருவது நிஜந்தானா..."
என்ற பாடல் முச்சக்கரவண்டியினுள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.


எப்படியும் தேடி வந்த விலாசத்தை அடைய அரைமணி நேரமாவது எடுக்கும்... அதற்குள் ஐந்து பாடல்களையாவது இரசித்துக் கேட்கலாமே என நினைத்தவள் வழமை போல இருக்கையோடு சாய்ந்து கண்களை மூடிப் பாடலை இரசிக்கத் தொடங்கினாள்.
அவளது மனம் மெல்ல மெல்ல இறுக்கத்தை விட்டு இலகுத்தன்மைக்கு இடம் பெயரத் தொடங்கியது.


உள்ளே சற்றுப் பதட்டம் இருந்தாலும் வெளியே அதைக் காட்டிக் கொள்ளாமல் தமக்கையின் செயல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தான் மொஹமட்.


தமக்கையை வேடிக்கை பார்த்தாலும் அவனுள் நிறையக் கேள்விகள் உருப்பெறத் தொடங்கின ஆனாலும் அதை எப்படித் தமிழிடம் கேட்பது என அவன் தலையைப் பிடித்தபடி வெளியே பார்க்க
"என்ன சியாத்து... என்ன கேக்கோணும் என்னட்டை... நீ வாயைத் திறந்து கேட்டாத் தானே நீ கேக்க வாரது எனக்குத் தெரியும்... அதோட என்னட்டைக் கேள்வி கேக்க உனக்கேன் இவ்வளவு சுணக்கம்..."
எனக் கண்களை மூடியபடியே கேட்டாள் தமிழ்.


கண்களை மூடி இருந்தாலும் அவள் சுற்றுப்புறத்தையும் தன்னையும் கவனித்தபடி வருவதை உள்ளூர மெச்சியபடி
"அதில்லை... போற காரியம் சரியா முடியுமா எண்டு ஒரு தயக்கம்..."
எனத் தன் மனதில் உள்ளதைக் கேட்க முடியாமல் அவன் திணற, எட்டி அவனது கரத்தைப் பிடித்தவள்
"நம்புடா நம்பு... எல்லாமே நல்லதே நடக்கும்... நம்பிக்கை தானே வாழ்க்கை அப்பிடி எண்டு அடிக்கடி சொல்லுற நீயே இப்படித் தயங்கலாமோ... நானே நீ வாராய் எண்ட நம்பிக்கையிலயும் தைரியத்திலயும் தான் வாரன்..."
என அழுத்திச் சொன்னாள்.


அதுவரை ஒரு வித பதட்டத்தோடு இருந்தவனது மனம் அவளது வார்த்தைகளிலும் அவளது நம்பிக்கையிலும் சட்டென்று தெளிவாகவே மறுகரத்தால் அவளது கரத்தை இறுகப் பிடித்துக் கொண்டு
"போறோம் தட்டுறோம் தூக்குறோம் அக்கச்சி..."
என விரிந்த புன்னகையோடு சொல்ல அவனது அந்த உற்சாகச் சிரிப்பு அவளையும் மெல்ல மெல்லத் தொத்தத் தொடங்கியது.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
"செவ்வானம் வெட்கம்
கொண்டது யாராலே
சங்கீதம் மூங்கிலில்
வந்தது யாராலே
சுற்றும் பூமியில் இன்பம்
கொட்டி கிடக்கிறது
நம்மை அழைகிறது..."

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
 
Top