• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
கிளை பரப்பி வரிசையாக நின்றிருந்த மரங்களை அடுத்துத் தெரிந்த ஓரளவு பெரிய குளத்தின் அழகு மனதைக் கவர்வதாக இருந்தது.

குளத்தோரமாகச் சிலர் நின்று தூண்டில் போட்டு மீன்களைப் பிடித்துக் கொண்டிருக்க, குளத்து நீர் வெயிலில் ஜொலித்து வர்ணக் கற்றைகளைச் சிதறடித்துக் கொண்டிருந்தது.

ஏற்றி வந்த முச்சக்கரவண்டிக்காரன் அந்தக் குளத்தருகே மொஹமட்டையும் தமிழையும் இறக்கி விட்டுப் போகவே, இறங்கிய இருவரும் கண்களால் தேடிய போதும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வயல்களே தெரிந்தது.

"என்னடா... வந்த இடம் சரிதானா..."
எனத் தமிழ் தன் மனதினுள் ஓடிய சந்தேகத்தைச் சுற்றும் முற்றும் பார்த்தபடி கேட்க, தாடையைச் சொறிந்தபடி தன் அலைபேசியில் எதையோ பார்த்தவன்
"வந்த இடம் சரிதான் அக்கச்சி... அங்கா பாரன் தரணிக்குளம் எண்டு அந்தக் கல்லுல எழுதியிருக்குதே பிறகென்ன..."
என்று சொன்னான்.

அப்போது தான் தமிழ் அந்தக் கல்லையே பார்த்தாள்.

கல்லையும் கண் முன்னால் விரிந்து கிடந்த வயல்வெளியையும் பார்த்தபடியே
"ஓமடா அது சரிதான்... ஆனாப் பாரன் கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும் வயல்வெளி தான் கிடக்கு... வீடுகள் ஒண்டையும் காணோமே... அது தான் வந்த இடம் சரிதானோ எண்டு கேட்டனான்..."
என்று அவள் சொல்ல, அவளது தலையில் வலிக்காமல் கொட்டி
"அங்கினை மட்டும் பாத்தாப் போதுமா... பின்னாடியும் பாரேன் வெண்ணெய்..."
என்று சொல்லிக் கொண்டே அவளைப் பின் பக்கமாகத் திருப்பி விட்டான் மொஹமட்.

வலிக்காத தலையைத் தேய்த்து விட்டபடி
"என்னடா... நெய் வெண்ணெய் எண்டெல்லாம் திட்டுறாய்..."
என வராத கோபத்தோடு தமிழ் கேட்க,
"பின்னே என்னவாம்... அந்த மனுஷன் இறக்கி விட்டிட்டுப் போன திக்கையே பராக்குப் பாத்தபடி நிண்டு கொண்டு... ஒரு பக்கமும் திரும்பிப் பாக்காமல் ஒண்டையும் காணேல்லை எண்டால்... உன்னை வேறை என்னெண்டுதான் சொல்ல..."
என்று பார்த்தவனைப் பார்த்து இளித்து வைத்தாள் பெரியவள்.

அவர்கள் நின்றிருந்த திசைக்குப் பின் திசையில் தான் தொலைவில் வீடுகள் அமைக்கப் பட்டிருந்தன.
பின்னும் முன்னும் திரும்பி நோட்டம் விட ஒரு பாதை கிழக்குப் பக்கமாகப் போய் வடக்குத் திசைப்பக்கமாகத் திரும்பவே அந்த முடிவில் ஐந்து வீடுகள் வரிசை கட்டி நின்றன.

அந்த வீடுகளைப் பார்த்தபடி மீண்டும் தலை சொறிந்தவளை இப்போது என்ன என்பது போலப் பார்த்தான் மொஹமட்.

"அதில்லைடா... உந்த வீடுகள்ள எது பூர்ணிமாம்மாடை வீடு எண்டு தெரியேல்லையே..."
என்று அங்குமிங்கும் பார்த்தபடி கேட்க,
"அதைத் தெரிஞ்சு கொள்ளுறது என்ன அவ்வளவு பெரிய விசியமோ... போய் ஒரு வீட்டுல கேட்டால் சொல்லிட்டுப் போகினம்... அதை விட்டிட்டு இப்பிடி யோசிக்கிறியே அக்கச்சி..."
என்றவனைப் பார்த்தவள்
"அட ஆமால்லே..."
என்று சொல்ல
"என்ன நோமால்லே... நட அக்கச்சி போய் விசாரிப்பம்..."
என்று கொண்டு அவளைத் தாண்டி அந்த வீடுகளை நோக்கி நடக்கத் தொடங்கினான் மொஹமட்.

அங்குமிங்கும் நோட்டம் பார்த்தபடி அவனைத் தொடர்ந்து நடந்தாள் தமிழ்நிலா.

அந்த ஐந்து வீடுகளுமே பெரிய அளவில் வசதியாகவே அமைந்திருந்தன.
அதிலுமே ஐந்தாவதாக இருந்த வீடு சற்றே பெரிதாக மாடியுடன் கூடிய வீடாக அமைந்திருந்தது.

சில நொடிகள் எதையோ யோசனை செய்தவன்
"அவங்க வசதியானவங்க தானே அக்கச்சி... அப்பிடியெண்டால் மாடி வீடாத் தானே இருக்கோணும்... அதோட அம்மச்சி பேசும் போதும்... தான் அடிக்கடி மாடியில் நிண்டு வயல்வெளியைப் பாப்பன் அப்போ மனசுக்குக் கொஞ்சம் திருப்தியா இருக்கும் எண்டு சொல்லுவாங்களே... அப்போ அந்த மாடி வீடாத் தான் இருக்கோணும்..."
என்றபடி அந்த வீட்டை நோக்கி விரைந்தான்.

வேகமாக முன்னே சென்ற மொஹமட்டின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தி
"கொஞ்சம் பொறு சியாத்து... நாங்க பாட்டுக்கு உள்ள போய் நிண்டால் அவை டக்கெண்டு சுதாரிச்சிடுவினம்... அதனால வேறை ஏதாவது பொய் சொல்லித் தான் உள்ள போகோணும்... நாங்க ஆரெண்டு அவைக்குச் சந்தேகமே வரக் கூடாது..."
என்று சொல்லியபடி அவனை எச்சரிக்கையோடு பார்க்க, அது மொஹமட்டுக்கும் புரிந்து விட்டது.
"சரி அக்கச்சி..."
என்றவன் வேகத்தைக் குறைத்து நிதான நடையுடன் அந்த மாடி வீட்டை நெருங்கினான்.

வீட்டு வாசல் கதவு யாரும் உள்ளே வரவே கூடாது என்பது போல இறுக்கமாகப் பூட்டப் பட்டிருந்தது. வெளி வாசல் கதவே பிரமாண்டமான முறையில் அமைக்கப் பட்டிருக்க, அதை எந்தப் பக்கம் தள்ளி எந்தப் பக்கம் திறப்பது எனத் தெரியாமல் எக்கி எக்கி எட்டிப் பார்த்த தமிழைத் தட்டி ஓரமாக நிற்க வைத்து விட்டுச் சுவரோரம் இருந்த ஒரு பொத்தானை அழுத்தினான் மொஹமட்.

அதை அவன் அழுத்திய இரண்டாவது நிமிடத்தில் அந்த வெளி வாசற்கதவில் ஒரு சிறிய அளவான பாதை திறந்து கொண்டது.

அந்த வாசற்கதவையே பார்த்தபடி தமிழ் நிற்க, அதன் வழியே எட்டிப் பார்த்த ஐம்பது வயது மதிக்கத் தக்க ஆணொருவர்
"யாரு நீங்கள்... யாரு வேணும் உங்களுக்கு..."
எனக் கேட்டார்.

அவர் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமலும் தன்னை அறியாமலும் ஏதோ சொல்ல வாயைத் திறந்தவளை மறைத்தார் போல வந்து நின்று கொண்டு
"நாங்க முதியோர் நலக் காப்பகத்துல இருந்து வாறம்... எழுபது வயதுக்கு மேல இருக்கிற பெரியவங்களுக்கு எங்கடை நிறுவனம் சார்பா உதவித் தொகைகள் குடுத்திட்டு வாறம்... அது தான் உங்கடை வீட்டுல இருக்கிற வயசானவங்க பத்தி விசாரிச்சு அது தொடர்பான முழு விபரங்களையும் எடுக்க வந்தனாங்கள்..."
என ஒரு பெரிய பொய்யைத் தயக்கமேதும் இல்லாமல் அவிழ்த்து விட்டான் மொஹமட்.

"ஓ... அப்பிடியோ உதவித் தொகை எண்டால் எப்புடி... கையிலயே காசாக் குடுத்திடுவீங்களோ..."
என அது தான் ரொம்ப முக்கியம் போல முன்னால் நின்றவர் கேட்டு வைக்க,
"எங்களுக்கு வந்த தகவல் படி... இந்த வீட்டுல ஒரு வயசான அம்மா இருக்கிறாங்கள் எண்டும் அவாவைப் பற்றி மத்த விசியங்களை அறிஞ்சி சொல்ல வேணுமெண்டும் எங்கடை நிறுவனம் சொல்லியிருக்கு... அதனால அந்தம்மாவைப் பத்தி நாங்கள் கொஞ்சம் தெரிஞ்சி கொள்ளோணும்... உள்ள கூட்டிட்டுப் போறியளோ..."
என நயமாகப் பேசியவனை யோசனையோடு பார்த்த வீட்டுக்காரர் பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை
"சரி... உள்ளுக்க வாங்கோ..."
என வழி விட்டு நின்றார்.

அப்போதும் பின்னே நின்று வீட்டினையே சிறு பதட்டத்தோடு பார்த்த வண்ணம் நின்ற தமிழின் கையில் லேசாகக் கிள்ளி
"முழியை முழியைப் பிரட்டி நாங்க ஏன் வந்தனாங்கள் எண்டதைக் காட்டிக் குடுக்காமல்... சாதாரணமா மூஞ்சியை வைச்சிக் கொண்டு உள்ள வா அக்கச்சி... வந்த காரியம் எந்தச் சொதப்பலும் இல்லாமல் நடக்கோணும்..."
எனக் கிசுகிசுத்து விட்டு உள்ளே போன மொஹமட்டைத் தொடர்ந்து ஒரு விதமான இறுக்கத்துடனேயே உள்ளே போனாள் தமிழ்நிலா.

முன்னே நடந்து போனவரின் பெயர் முருகவேல் என்பதனைக் கேட்டுத் தெரிந்து கொண்டான் மொஹமட்.

இருவரையும் உள்ளே அழைத்துச் சென்ற முருகவேல் அவர்களை வெளியே வரவேற்பறையில் அமர வைத்து விட்டு, அவர்களிடம் மேலும் விளக்கம் கேட்பதற்காக மிகவும் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டார்.

தமிழைப் பார்த்து எதுவும் பேச வேண்டாம் என்பது போல ஜாடை காட்டிய மொஹமட் தான் மட்டும் முருகவேலிடம் பேச்சுக் கொடுத்தான்.

"பூர்ணிம்மா... உங்கள்ரை அம்மாவோ..."

"இல்லை இல்லை... அவா என்ரை மனுஷிடை அம்மா..."

"அப்பிடியெண்டால் உங்கள்ரை மாமி என்ன... அப்ப உங்கள்ரை மாமிக்கு எத்தினைப் பிள்ளையள் எண்டு தெரிஞ்சு கொள்ளலாமோ..."

"அவாக்கு... அவாக்கு... அஞ்சு பிள்ளையள் எண்டு நினைக்கிறன்..."

"என்ன நினைக்கிறீங்களோ... அப்ப உங்களுக்குச் சரியாத் தெரியாதோ... வீட்டுல வேறை யார் யார் இருக்கினம்..."

"வீட்டுல... என்ரை மனுஷி பிள்ளையள், மனுஷியிந்தை தம்பி, அவரின்ரை பிள்ளையள் எண்டு நிறைய ஆளுங்க இருக்கிறம்..."
எனச் சொல்லிக் கொண்டே உள்ளே எட்டி எட்டிப் பார்த்தார் முருகவேல்.

"ஓ... சரி சரி... நாங்கள் உங்கள்ரை மாமியைப் பாத்துக் கதைக்கலாமோ..."
என மொஹமட் கேட்டு முடிக்கவில்லை அதற்குள்
"இல்லை இல்லை... அவா வெளியில தன்ரை மற்ற மகன் வீட்டை போயிட்டா... இனி நாளைக்குத் தான் வருவா..."
எனச் சட்டென்று சொன்னார் முருகவேல்.

அவரது அவசரமான பதிலில் மொஹமட் அடுத்து என்ன கேட்பது எனத் தெரியாமல் தமிழைப் பார்க்க, அவளோ
"ஓ அப்பிடியா... ஆனா அவாந்தை கையெழுத்து எல்லாம் ரொம்ப முக்கியமே... லட்சங்களைத் தொடும் உதவித் தொகை எண்டதாலே அவா தான் வரோணும் இப்ப என்ன செய்யிறது..."
எனத் தங்கு தடையின்றிக் கேட்க முருகவேல் முழித்தார்.

அவர் கண் முன் சில பல இலட்சங்கள் தாண்டவமாடியது. எப்போதுமே மனிதர்களை விடக் காசுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு ஜீவன் அவர்.

இப்போதும் பணத்துக்கே முன்னுரிமை கொடுத்து வேகமாக உள்ளே சென்று அறையினுள் அடைந்து கி்டந்த தன் மாமியாரை மனமுவந்து வெளியே அழைத்து வந்தார்.

"இந்தா இருக்கிறாங்க... கையெழுத்து வைச்சா மட்டும் போதும் தானே..."
என முருகவேல் அது தான் முக்கியம் போலப் பூர்ணிமாவைக் காட்டிக் கேட்க, முருகவேலைப் பார்த்து முறைத்தான் மொஹமட்
"இப்ப தானே கொஞ்சம் முதல் உங்கள்ரை மாமி வெளியில போயிட்டா எண்டு சொன்னனியள்..."
எனக் கேட்டான்.

"ஓம் ஓம் போனவா தான்... கொஞ்சம் முதல் வந்திட்டா... அதை நான் கவனிக்கேயில்லை..."
என மீண்டும் ஒரு பொய்யைச் சொன்னார் முருகவேல்.

மொஹமட்டும் தமிழும் இருந்த இடத்தை நோக்கி நடக்க முடியாமல் சிரமப் பட்டு வந்த பூர்ணிமாவை அவர்கள் இருவரும் அப்போது தான் நிமிர்ந்து பார்த்தார்கள்.

அவருக்கு உண்மையில் எழுபது எழுபத்தொரு வயது தான் இருக்கும். ஆனால் அவர் இருந்த நிலையும் தோற்றமும் அவருக்குத் தொண்ணூறு வயது போலக் காட்டியது.
அந்தத் தோற்றமே அவர் இந்த வீட்டில் எந்த இழிநிலையில் இருக்கிறார் என்பதனைத் தெள்ளத் தெளிவாகப் பறைசாற்றியது.

பூர்ணிமா எழுபதைக் கடந்த வயதானவர். அவருக்கு ஆறு பிள்ளைகள். இளம் வயதிலேயே கணவனை இழந்தாலும் கூட, பிள்ளைகளைப் பொருளாதார ரீதியில் ஒரு வித குறைவும் இல்லாமல் வளர்ப்பதற்கு அவரிடம் இருந்த பெரும் சொத்து உதவிகரமாக இருந்தது. பிள்ளைகள் வளர வளர அவரது சொத்துகளும் வளர்ந்து பெரு விருட்சம் ஆனது.

பூர்ணிமா சேர்த்து வைத்த அவரது சொத்துகள் யாவும் பிள்ளைகளுக்கு வேண்டப் பட்டவையாகிப் போகப் பூர்ணிமா அவரது பிள்ளைகளுக்கு வேண்டப்படாதவராகிப் போனது தான் காலக் கொடுமை.

காசு காசு என ஓடிய அவரது பிள்ளைகள் எவருமே அந்தத் தாயின் அருமையைப் புரிந்து கொள்ள முயற்சிக்கவேயில்லை. அவரது அறுபதாவது வயதில் அவரின் சொத்துக்களைப் பங்கு போட்டுத் தருமாறு அவரது பிள்ளைகள் வெளிப்படையாகவே சண்டை போட்ட போது தான் அந்தத் தாய்க்கு அவர்களது பிள்ளைகளது உண்மை உருவம் வெளிச்சம் போட்டுக் காட்டப் பட்டது.

எங்கே தனது சொத்துக்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்து விட்டால், அவர்கள் தன்னை நடுத் தெருவில் விட்டு விடுவார்களோ எனப் பயந்து, ஏதேதோ காரணம் உருவாக்கிச் சொத்துக்களை இப்போதைக்குப் பிரிக்க முடியாது என எல்லோரிடமும் சொல்லி விடவே, அந்த விடயம் அவரது பிள்ளைகளுக்குப் பிடிக்கவில்லை.

பெற்ற தாய் என்றும் பாராமல் வெளிப்படையாகவே தங்கள் வெறுப்பை உமிழத் தொடங்கியதோடு மட்டுமில்லாமல், பேரப் பிள்ளைகளையும் அவரோடு சேராமல் பார்த்துக் கொண்டார்கள். இதனால் பூர்ணிமா மனதளவிலும் உடலளவிலும் சோர்ந்து போனார்.

ஆறு பிள்ளைகளைப் பெற்ற, பரம்பரை வசதி படைத்த அந்த வயதான பெண்ணுக்குப் பாசம் என்பது பாதாளத்தில் விழுந்த ஒற்றை ரூபா நாணயம் போலத் தொலை தூரமாகக் கண்ணுக்குப் புலப்படாத ஒன்றாகவே போய் விட்டது.

அவரது பிள்ளைகள் எவ்வளவு வெறுப்பான செயல்களை அவருக்குச் செய்தாலும் அவருக்கு அவர் பிள்ளைகள் மீது நெல் முனையளவு கூட வெறுப்பு வரவில்லை. இதைத் தான் நம் மூத்தோர்கள் பெத்த மனம் பித்துப் பிள்ளை மனம் கல்லு என்று சொன்னார்களோ தெரியவில்லை.

பூர்ணிமாவுக்கு எவ்வளவு வசதி இருந்தாலும் இப்போது இருக்கும் வீட்டை விட்டு வெளியே சென்று வாழப் பயமாக இருந்தது. தான் பெற்றதுகளுக்கே தான் வேண்டப் படாதவளான போது வெளி நபர்கள் மட்டும் என் மேல் அக்கறை காட்டி விடவா போகிறார்கள் என்ற எண்ணத்தில், அந்தப் பெரிய வீட்டின் ஓர் ஓரம் இருந்த அறையினுள் அடைந்து கொண்டு விட்டார்.

இத்தனை துன்பங்களில் மூழ்கிக் கிடந்த பூர்ணிமாவுக்கு ஒரே ஒரு சிநேகிதி மட்டும் இருக்கிறார். அவர் பெயர் கோமளவல்லி. இருவரும் சிநேகம் ஆகி ஆறே ஆறு வருடங்கள் தான். அதுவும் எதிர்பாராத விதத்தில் முகநூலில் தான் அந்த நட்புமே மலர்ந்தது. முகநூலில் உருவான நட்பு வளர்ந்து பெரு விருட்சமாகி நிற்க, பூர்ணிமா தன் தோழி கோமளத்திடம் மட்டுமே மனம் விட்டுப் பேசுபவராக இருந்தார்.

கோமளத்தின் பேர்த்தித் தான் தமிழ்நிலா. அவர் தன் பேர்த்தியிடம் தன் தோழியை எப்படியாவது அந்த நரகத்தில் இருந்து மீட்டு வா என்று சொல்லி அவளை வவுனியாவுக்கு அனுப்பி வைத்து விட்டார்.

அதற்கு முதல் தன் தோழியிடம் நீ என்னிடம் வந்து விடு எனக் கேட்டு, அதற்கு முதலில் இல்லை என்று சொன்ன பூர்ணிமாவை ஒருவாறு சம்மதம் சொல்ல வைத்து, அவரை அழைத்து வரத் தன் பேர்த்தியை அனுப்பியும் வைத்து விட்டார்.

தமிழும் என்ன பொய் சொல்லியாவது அவரை இங்கிருந்து அழைத்துச் சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் வந்திருந்தாள்.

வெளியே வந்த பூர்ணிமாவின் முகம் தன் முன்னால் இருந்தவர்களைப் பார்த்ததும் நொடியில் பூத்து நொடியில் வாடியது.

அவரது எண்ணம் யாவும் இவர்களால் என்னை இங்கேயிருந்து அழைத்துச் செல்ல முடியுமா என்ற ஏக்கத்துடன் கூடியதாகவே இருந்தது.

அவரது பார்வையின் வழியே கசிந்த வலியைக் கண்ட மொஹமட்டுக்குக்குக் கோபத்தில் கண்கள் லேசாகச் சுவக்கத் தொடங்கியது. அதைக் கண்டு கொண்ட தமிழ் அவனது கையை யாரும் அறியாமல் தட்டிக் கொடுத்தாள்.

தமக்கையின் கையை ஒரு முறை அழுத்தமாக பற்றி விடுவித்தவன் தனது அலைபேசியில் எதையோ தட்டி விட்டுக் கொண்டே
"நாங்கள் உங்கள்ரை மாமியை இங்க இருந்து கூட்டிக் கொண்டு போகப் போறம்... இனிமேல் அவா இங்க இருக்க மாட்டா..."
எனக் கொஞ்சம் அழுத்தமாகச் சொன்னான்.

திடீரென வீட்டுக்கு வந்த புதியவன் கூறிய செய்தி சொன்ன அர்த்தத்தில் கோபம் கொண்ட முருகவேல்
"அதெப்பிடி நீங்கள் சொல்லலாம்... நீங்கள் உதவிக்காசு தரத்தானே வந்தனியள்... தந்திட்டுப் போற வழியைப் பாருங்கோ... உவாவை எல்லாம் அனுப்ப ஏலாது..."
என்று படபடக்க,
"ஓ... அப்ப நீங்கள் வயசானவை எண்டும் பாக்காமல் வீட்டுக்குள்ள அடைச்சு வைச்சு கஷ்டம் குடுப்பியள்... நாங்கள் அதையெல்லாம் பாத்துக் கொண்டு சும்மா இருக்கோணுமா... எங்கள்ரை நிறுவனம் இதுக்குச் சட்டப்படி நடவடிக்கை எடுப்பம் எண்டு தான் சொன்னது... நான் தான் அதெல்லாம் வேண்டாம் நானே நேரில போய்க் கதைச்சுப் பாக்கிறன் எண்டு வந்தனான்... இப்ப நீங்கள் உவாவை எங்களோடை அனுப்பாட்டிக்கு நான் காவல்துறையில புகார் குடுத்திடுவன்... முடிவா என்ன சொல்லுறியள்..."
எனப் பொரிந்து தள்ளினான் மொஹமட்.

அவனையே வாயைப் பிளந்து பார்த்தபடி
"டேய் என்னடா... கொஞ்சம் தணிவாக் கதையடா..."
என்று அவனது காதுகளில் தமிழ் சொல்ல, அவள் பக்கம் குனிந்து
"சும்மா இரு அக்கச்சி... இவையளோட தணிவா எல்லாம் கதைக்கேலாது... நீ வேடிக்கை மட்டும் பாரு..."
எனக் கிசு கிசுத்தவன், நிமிர்ந்து
"என்ன ஐயா அனுப்புறியளோ... இல்லையோ..."
எனக் கேட்டு விட்டு, அவர் பதில் சொல்லும் முன்பாக எழுந்து சென்று பூர்ணிமாவின் கையைப் பிடித்துத் தன் பக்கம் அழைத்து வந்திருந்தான் மொஹமட்.

அதைப் பார்த்த முருகவேல் கோபமாக எழும்பி அவனருகே செல்ல முற்பட்ட போது எதேச்சையாக வெளி வாசலைப் பார்த்து விட்டு அப்படியே உறைந்து போய் நின்றார்.
வாசலில் இரண்டு காவல்துறையினரும் இரண்டு இராணுவத்தினரும் நின்றிருந்தனர்.

முருகவேல் உறைந்து நின்ற நிலையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட மொஹமட் பூர்ணிமாவைக் பார்த்துக் கண்ஜாடை காட்டவே, அது வரை ஏலாவாளி போல நின்றிருந்த அவர் குடுகுடுவென உள்ளே ஓடிச் சென்று இரண்டு பெரிய பைகளை எடுத்துக் கொண்டு மீண்டும் குடுகுடுவென ஓடி வந்தார்.

வேறெந்தப் பேச்சுக்களுமே இல்லாமல் பூர்ணிமாவை ஒரு கையிலும் தமிழை மறு கையிலும் பிடித்து இழுத்துக் கொண்டு வேக வேகமாக அந்த வீட்டை விட்டு வெளியே வந்தான் மொஹமட்.

உள்ளே நின்றிருந்த முருகவேலுக்கோ லேசாக உதறத் தொடங்கியது. அவரைத் தான் பூர்ணிமாவுக்குக் காவல் வைத்து விட்டுப் போயிருந்தார்கள் வீட்டினர். தாய் தங்களுக்குத் தெரியாமல் வெளியே சென்றோ அல்லது யாரையேனும் வரவழைத்தோ சொத்தை ஏதாவது செய்து விடுவாரோ என்ற பயத்தில் தான் அந்த ஏற்பாடு. ஆனால் இப்பவோ தன் கண் முன்னால் வீட்டை விட்டு வெளியே சென்ற மாமியாரைத் தடுக்கும் வழி தெரியாமல் திருத் திருவென விழித்துக் கொண்டிருந்தார் அவர்.

அவன் வெளியே வந்த சில நொடிகளில் உள்ளே நின்ற இரண்டு காவல்துறை அதிகாரிகளும் இரண்டு இராணுவத்தினரும் வெளியே வர, தமிழ் மௌனமாகவே எதையோ யோசித்துக் கொண்டு வர, அவர்களருகே ஒரு பெரிய வாகனம் வந்து நின்று எழுவரையும் ஏற்றிக் கொண்டு சாலை நோக்கி விரைந்தது.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
"படைத்தான் ஒரு உலகம்
பணம் தான் அதன் உருவம்
எதுவும் இதில் அடக்கம்
இது ஏனென்று எதிர்காலம்
விடை கூறட்டும்...
நினைத்ததை நடத்தியே
முடிப்பவன் நான் நான்
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் நான்..."

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
 
Top