• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முதலும் முடிவுமாய்-13

Pandiselvi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 30, 2021
91
18
8
Chennai
அத்தியாயம் 13

சென்னை ஸ்ரீவிக்கு பக்கத்து ஊர் போல் ஆகி விட்டது மாறனுக்கு. கடந்த மூன்று வாரங்களாக வாரம் ஒரு முறை பயணம். உடல் அலுப்பை மீறி மனதிலுள்ள வெறுமை போகிறது. அதுதான் அவனுக்கு வேண்டும்.

அன்று அவள் கல்லூரியை அடைவதற்கு முன்பாகவே கேட்டில் காத்திருந்தாள் நிலானி. கூடவே ரோகித் நின்றிருந்தான்.

"நிலா.. உனக்கு அவன் மேல் ஏதாவது சாஃப்ட் கார்னர் இருக்கா?"

"அதெல்லாம் தெரியாது ரோகித்‌. கொஞ்ச நேரம் அமைதியா இரு. நானே எப்போ அவன் வருவான்னு பாத்துட்டு இருக்கேன்" என்றவளின் விழிகள் சாலையிலே கவனம் வைத்தது.

"ப்ச். உனக்கே இது சில்லியா இல்லையா?. யாரு அவன்? அவனுக்காக இப்படி ரோட்டுல நின்னுக்கிட்டு இருக்க. அவன் ஆளும் அவனும். காட்டுப்பய மாதிரி. சே அவனை பாரத்தாலே எனக்கு வெறியாகுது"

"ரோகித்.. உனக்கு ஏற்கனவே வார்னிங் குடுத்துட்டேன். மாறனை இப்படி பேசாதனு. அவனோட கேரக்டர் பேசும். நீ சொல்ற மாதிரி அவன் பாக்க ஒன்னும் அவ்ளோ கேவலமா இல்ல. அழகா தான் இருக்கான். அவன் கூட பேச பழக எனக்குப் புடிச்சு இருக்கு. என் மனசு அவனை நல்லவன்னு சொல்லுது‌. உனக்கு என்ன வந்தது?. உன்னை யாரு இங்க நிக்க சொன்னது?".

"அப்போ நீ அவனை லவ் பண்றியா?"

"தெரியல. ஆனா பண்ணா என்னத் தப்பு?" என்று அவள் எதிர் கேள்வி கேட்க.

"பைத்தியம் மாதிரி பேசிட்டு இருக்க நீயி. என்னமோ பண்ணு. நான் போறேன்" என்று அவன் உள்ளே சென்று விட்டான்.

காரில் இருந்து இறங்கும் போதே மாறனுக்கு அதிர்ச்சியும் ஆனந்தமும் போட்டிக் கொண்டு வந்தது. சூரியனின் வருகையை எதிர்நோக்கும் தாமரை போல அவனுக்காக காத்திருந்தவளை மொத்தமாய் சுருட்டி மனதுக்குள் வைக்கும் ஆசையை அப்பவே நிறைவேற்றி விட்டு, வசீகரிக்கும் புன்னகையுடன் காரிலிருந்து இறங்கியவன், "ஹாய் நிலா. காலேஜ் அதுக்குள்ள முடிஞ்சதா? வெளில வெயிட் பண்ற?" என்று அருகில் வந்தான்.

"இல்லயே. இன்னும் காலேஜ் முடியல. லாஸ்ட் பிரியேட் கட் அடிச்சுட்டேன். உங்களை பாக்குறதுக்காக.." என்று கண் சிமிட்ட.

"வெளில நிக்குறதுக்கு உள்ளே ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்திருந்தா க்ளாஸ் முடிஞ்சுருக்குமே. எதுக்கு க்ளாஸ்லாம் கட் அடிக்குற?"

"அப்டியா? அப்போ நான் உள்ளே போறேன்" என்று அவள் உள்ளே திரும்பி நடக்க ஆரம்பிக்க.

"ஹே நிலா நிலா.. சும்மா சொன்னேன்மா" என்று அவள் பின்னாலே ஓடிவந்து அவள் கைப்பிடித்து நிறுத்தினான். அவள் வலது கை அவன் வலது கைக்குள்.

அவளுக்கு சட்டென்று உடல் கூசி மயிர்க்கால்கள் எல்லாம் குத்திட்டு நிற்க, விழிகள் அதிர அவனைக் காண, "சாரி.." என்று உடனே கையை எடுத்துக் கொண்டான்.

"உங்களுக்காக வெயிட் பண்ணா ஏன் வந்தனு கேட்குறேங்க?" என்று இடுப்பில் கை வைத்து முறைக்க.

"ஏன் வந்தனா கேட்டேன்? எதுக்கு க்ளாஸ் கட்டடிச்சனு தான் கேட்டேன்"

"ம் சீக்கிரம் வருவேங்கனு தோனுச்சு வந்தேன்" என்றவளின் இதழ் வளைவில் எப்போதும் சிக்குண்டு விழுந்து எழுந்தான்.

"ஆமா எப்பவும் காலேஜ்ல இறக்கி விடுற பொண்ணு எங்க?. இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்ல. வெறும் காரா இருக்கு?" என்று காரை எட்டிப் பார்த்து புருவம் உயர்த்த.

அப்போது தான் அவனுக்கு ஞாபகம் வந்தது வார வாரம் அவன் அவளிடம் சொல்லும் கதை. 'என்ன சொல்லி சமாளிப்பது?' என்று அவன் மாட்டிக் கொண்ட பூனை போல் திருட்டு முழி முழிக்க..

"அது..‌ அது.. இந்த வாரம் அந்தப் பொண்ணு ஊருக்கு வரல. வேற ஒரு டிரிப் இருந்துச்சு. அங்க இறக்கி விட்டுட்டு வந்துட்டேன்"

"ஓஹோ.. இவ்ளோ ட்ரெயின் பஸ் இருக்கும் போது எதுக்கு அந்தப் பொண்ணு கார்ல போயிட்டு கார்லயே வருது. அதுனால டயர்டாக தான செய்யும்?" என்று தனது சந்தேகத்தை அடுக்க.

"அந்தப் பொண்ணுக்கு கூட்டம்னா அலர்ஜி. தனியா எங்கேயும் போகாது. உன்னை மாதிரி"

"ஹாலோ நான்லாம் தைரியசாலி. அன்னைக்கு ஊருக்குத் தனியா தான வந்தேன்"

"யாரு நீயி?. சென்னைக்கு ரிட்டர்ன் எப்டி வந்தனு மறந்து போச்சா?. ஊருக்கு வரும் போது உங்கப்பா ஆயிரத்தெட்டு தடவை கால் பண்ணி ஆயிரத்து நூறு தடவை பத்திரம் சொல்லிக்கிட்டே கால்ல தான இருந்தாரு"

"அது எப்டி உங்களுக்குத் தெரியும்?" என்றவள் விழிகளை அகல விரிக்க.

"எனக்கென்ன மந்திரமா தெரியும். நீ வந்த அதே ட்ரெயின்ல அதே கோச்ல தான் நானும் வந்தேன்"

"ஓ அதானா?. நான் கூட எப்டிடானு யோசிச்சேன்"

"சரி காஃபி ஷாப்?"

"இன்னைக்கு பீச் போலாமா?" என்று ஆர்வமுடன் கேட்க.

"ம் போலாமே" என்றவன் கார் கதவைத் திறந்து விட ஏறிக் கொண்டாள்.

அலைகள் ராகம் வீச, ஆழ்மனதில் கேட்கும் அமுத கானத்தோடு கால்கள் கடற்கரை மணலில் புதைந்திருக்க அவளின் சின்ன சின்ன அசைவுகளையும் ரசித்தபடி அமர்ந்திருந்தான். ஏன் எதற்கு என்றெல்லாம் தெரியவில்லை. அவன் ஆயுளை நீட்டிக் கொடுக்க அவளின் அருகாமை போதும் என்று தான் தோன்றியது.

"மாறா உங்க வீட்ல யாரெல்லாம் இருக்கேங்க?" என்று குடும்பத்தை பற்றிக் கேட்க மனதில் பூட்டி வைத்த பாரங்கள் எல்லாம் மேலெழும்பி வந்தது.

"நான் மட்டும் தான்" என்றான் தொண்டைக் குழிக்குள் வலிகளை அடக்கிக் கொண்டு.

"அம்மா அப்பா?"

"இல்ல. ஒரு விபத்துல நான் காலேஜ் செகன்ட் இயர் படிக்கும் போது இறந்துட்டாங்க. அதுக்கப்புறம் எல்லா பொறுப்பையும் ஏத்துக்கிட்டு என்னால முடிஞ்சதை பண்ணிட்டு இருக்குறேன்" என்றவன் அவன் குடும்பத்தைப் பற்றியும் அவன் தனியே கடந்த வந்த நாட்களைப் பற்றியும் கூறினான்.

"ஓ சாரி" என்றவளுக்கு கண்கள் கலங்கி விட்டது. பிறப்பிலே இளகிய மனம் கொண்டவள். அடுத்தவரின் கண்ணீரைக் கண்டாலே கண்ணீர் வடிப்பவள். தாய் தந்தையின் பாசத்தில் முத்துக் குளிப்பவளுக்கு அவனுக்கு பெற்றவர்கள் இல்லை என்கவும் முனுக்கென்று கண்ணில் நீர் சுரந்து விட்டது.

அவள்புறம் திரும்பியவன், "ஏ நிலா. எதுக்கு இப்போ அழுற? ஏற்கனவே நான் நிறைய அழுது கடந்து வந்துட்டேன்‌" என்றவனுக்கு அவளை சமாதானம் செய்யும் வழி கூட தெரியவில்லை. படபடவென்று கண்ணீர் சொட்டுச் சொட்டாய் விடாமல் விழ அதற்கு மேல் பொறுக்காமல் அவளை நெருங்கி அமர்ந்தவன், "நிலா மொத அழுகையை நிறுத்து" என்று அவனே கண்ணீரைத் துடைத்து விட.

"மாறா.. சாரி. நீ எவ்ளோ கஷ்டப்பட்டுருக்க" என்று அவன் நெஞ்சில் புதைந்து கொள்ள.. அவன் திடுக்கிட்டு திரும்பி சுற்றுமுற்றும் பார்த்தான். கூட்டம் அலைமோதவில்லை என்றாலும் அங்கங்கே ஒன்றிரண்டு மக்கள் நடமாடினர்.

யாரிடமும் தன்னிலையை பேசி இரக்கம் சப்பாத்தித்துக் கொள்ள நினைக்காத மனம் ஏனோ அவளிடத்தில் அனைத்தையும் கொட்டி அவனைக்கான கருணையே அவளிடம் பெற்றுக் கொள்ளத்தான் நினைக்கிறது. யார் சொன்னது கருணை அடைப்படையிலான காதல் காதலே இல்லை என்று. அவன் மேல் அவள் கொண்ட கருணை தான் அவன் மனதின் வேதனைகளுக்கு மருந்து‌. மனதின் பாரத்தை இறக்கி வைக்கும் இடமாக, கவலையில் பற்றிக் கொள்ளும் கைகளாக. 'இந்தக் கண்ணீர் தனக்காகவா?' என்ற எண்ணமே அவனுக்கு ஏதோ வானில் பறப்பது போல் இருந்தது.

அவளின் அழுகையை பொறுக்க முடியாமல்,"நிலா.. போதும்மா" என்று ஆதரவாய் தோளை நீவ.

"நான் இந்த மாதிரி சூழ்நிலைய வாழ்க்கைல சந்திச்சதே இல்ல மாறா. அப்பா அப்படி ஒரு நிலைமைல என்னை நிறுத்தியதும் இல்லை. வேனும்னு கேட்குறதுக்கு முன்னாடி இருக்கும். வேண்டாம்னு சொல்றதும் கூடவே கிடைக்கும். நீ எவ்ளோ கஷ்டப்பட்டு வாழ்க்கைல எழுந்து வந்துருக்க. யூ ஆர் கிரேட். உன்னை நினைச்சா பெருமையா இருக்கு‌. இப்டிக்கூடவா உங்க அக்கா வீட்ல இருக்காங்க?. அங்க எப்டி அவங்க இருக்காங்க?. என்னால இமேஜின் பண்ணவே முடியல".

"நீ இன்னும் உலகம் கத்துக்கல நிலாமா. எப்டி எப்படியோ மனுஷங்க இருக்காங்க. நீ ரொம்ப லக்கி நிலா. நல்ல ஃபேமிலி கிடைச்சிருக்கு. இதுவரைக்கும் எந்த கஷ்டமும் இல்லாம வளர்ந்துருக்க. இனியும் உனக்கு எந்தக் கஷ்டமும் வராது" என்று அவன் உள்ளார ஆழ்ந்து சொல்ல.

"ம் ஆமா மாறா. நான் லக்கி தான். அம்மா அப்பாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்க தான் எனக்கு உலகமே. அதைத் தாண்டி இப்போ முதல் முறையா நீ வந்துருக்க" என்று அவள் மனதிலிருப்பது வாய் மொழியாக வர.. அவன் விழிகள் அவளின் விழி வழி இதயம் நுழைந்து என்ன இருக்கிறது என்று அறிய முற்பட்டது.

அவன் பார்வையின் பொருள் உணர்ந்தே அவள் வாய்விட்டு உலறியது பொறி தட்ட, 'அய்யோ' என்று மானசீகமாக குட்டிக் கொண்டாள். நிறைய பேச மாட்டான். ஆனால் அவன் விழி பேசும் வார்த்தைகள் ஆயிரம். இரு கைகள் தீண்டாத அவள் பெண்மையின் உணர்வுகளை அவன் விழிகள் பந்தாடிக் கொண்டிருந்தது.

விழிகள் மட்டுமே அங்கு பேசிக் கொண்டிருக்க, "டேய் மாறா.. இவங்களை பார்க்கத் தான் வாராவாரம் சென்னைக்கு வந்துட்டு இருக்கியா?" என்ற மாறனின் நண்பனின் குரலில் இருவரும் திடுக்கிட்டுத் திரும்ப, நண்பனைக் கண்டு மாறன் அதிர்ந்தான் எனில் நிலா புரியாமல் முழித்தாள்.

'அய்யோ கோர்த்து விட்டுட்டானே' என்று முழித்தவன், நண்பன் குடும்பத்தோடு பீச்சுக்கு வந்திருப்பதைக் கண்டு இன்னும் அதிர்ந்து, "பேமிலியோட வந்தியாடா?" என்றான் மாறன்.

"ண்ணா சென்னை வரைக்கும் வந்துட்டு வீட்டுக்கு வரல. அன்னைக்கு வந்துட்டு போனது‌. வீட்டுக்கு வாங்க" என்று நண்பனின் மனைவி வேறு அக்கறையாய் வீட்டுக்கு அழைக்க.

"இன்னொரு நாள் வரேன்மா" என்றுரைக்க, இருவரும் அவனிடம் இருந்து விடைபெற்றுக் கிளம்பி விட்டனர்.

அதன் பின் தான் உணர்ந்தான் ஒருத்தி கையைக் கட்டிக் கொண்டு தன்னை முறைத்துக் கொண்டிருப்பதை..

"நி..நிலா.." என்று அவன் இழுக்க, "ஒழுங்கா என்கிட்ட உண்மையை சொல்லிடு மாறா" என்றவளின் கையில் அவன் சட்டைக்காலர் மாட்டிக் கொண்டு தவித்தது அவனைப் போலவே.


தொடரும்.
 
  • Haha
Reactions: Sailajaa sundhar