• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முரடன் - 24

NiviAmmu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 26, 2024
28
21
3
Tamilnadu
அத்தியாயம் – 24




அன்றைய நாள் முழுவதும் கொடி கொஞ்சம் தள்ளியே இருந்தாள் ஈஸ்வரனை விட்டு. அவள் ஒதுங்கி செல்வதை கண்டும் காணாதது போல் இருந்தாலும், ஈஸ்வரன் அவளை விட்டு விலகி செல்லவில்லை.



இரவு தூங்கும் போதும் தன் மாமன் தன்னை பார்ப்பது நினைவில் வர திடுக்கிட்டு தூக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்தவள் உறைந்து போனாள். ஈஸ்வர் சுவற்றில் சாய்ந்த படி கால் நீட்டி கொடியை பார்த்தபடி அமர்ந்து இருந்தான்.



அவனின் பார்வையில் திகைத்தவள் மெதுவாக அழைத்தாள், “மாமா!” என.



“என்ன கொடி எதாவது கெட்ட கனவு கண்டியா? முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு? இந்தா தண்ணி குடி.” என தன் அருகில் இருந்த மேஜை மீது இருந்த தண்ணீர் சொம்பை எடுத்து நீட்டினான்.



அவன் நீட்டிய தண்ணீரை வாங்கி இரு மிடறு குடித்தவள், “என்ன பண்ணறீங்க மாமா?” தயக்கமாக கேட்டாள் அவனின் கண்களை பார்த்தபடி.



அவள் தன்னை ஊடுருவும் பார்வை பார்ப்பதை உணர்ந்தவன் அவளை எதிர் பார்வை பார்த்தபடி கூறினான், "கோவில் கொடியை தேடிக்கிட்டு இருக்கேன் கொடி.

கண்டு பிடிக்கிறேன்னு சொல்லிட்டேன். இதுவரை என்னால கண்டு பிடிக்க முடியல. உன் தூக்கம் கெட கூடாதுன்னு தான் சத்தம் போடாமல் தேடிட்டு இருந்தேன். கொஞ்ச நேரம் ஓய்வெடுப்போம்னு சாய்ந்து ஒக்காந்தேன் நீ எழுந்துட்ட கொடி.” அவன் கூறிய வார்த்தைகள் உண்மை என்பதற்கு அவன் கண்கள் கூறியது சாட்சி.



“மாமா நாளைக்கு அறையை நான் சுத்தம் பண்ணுவேன் அப்போ தேடிக்கலாம், நாளைக்கு கட்டாயம் கிடைக்கும் நீங்க போய் தூங்குங்க.”


“நாளைக்கு எதுக்கு அறையை சுத்தம் பண்ணுற?”



“காப்பு கட்டிட்டா தரையில் தானே படுக்கணும். ரெண்டு பேர் தனி தனியா படுக்க முடியாது மாமா கட்டில் நடுவுல கிடக்கு அதை ஓரமா தள்ளி போடணும் அப்போ தான் நம்ப வசதியா தூங்க முடியும். அறையும் கொஞ்சம் கலைந்து கிடக்கு இவளோ பெரிய அறை கசாமுசான்னு இருக்கு சுத்தம் பண்ணுனா நிறைய இடம் இருக்கும் அதுக்கு தான்.”



“சரி கொடி நாளைக்கு நானும் உனக்கு உதவி செய்றேன்.. நீ மட்டும் தனியா செய்யாத. முக்கியமாக இந்த கட்டிலை உன்னால தனியா நகர்த்த முடியாது.”



“சரி மாமா நான் தனியா செய்யல நீங்க தூங்குங்க.” என்றவள் அவன் சென்று மெத்தையில் படுத்து கண் மூடும் வரை அவனை பார்த்துக் கொண்டே இருந்தாள். அவன் படுத்த பிறகு தான் நிம்மதியாக கண் மூடி படுத்தாள்.



அடுத்த நாள் காலை வேலைகளை முடித்து விட்டு கோவிலுக்கு பால் கொடுத்து அனுப்பியவள் தோட்டத்துக்கு செல்லாமல் அறையை சுத்தம் பண்ண துவங்கினாள்.



ஈஸ்வர் கம்பனை வர சொல்லி இருந்தான். கொடி அதற்குள் வேலையை துவங்கி விட மாடி ஏறியவன் கொடி எதையோ தடவி கொண்டு நிற்பதை கண்டு அவளை நெருங்கினான்.



“என்ன கொடி பண்ணுற?”



“மாமா ஒட்டடை அடிக்கும் போது இங்க இருந்த படம் கீழ விழுந்துச்சு. அது பேப்பர் மாதிரி இருக்கேன்னு பார்த்தேன். இது எதோ பட்டன் மாதிரி இருக்கு மாமா.”



ஈஸ்வர் அந்த பொத்தானை அழுத்தி பார்க்க அழுந்த வில்லை, சுற்றி பார்த்தான் சுற்றவில்லை. அசையாமல் இருக்கும் பட்டனை எதற்காக இங்கு வைக்க வேண்டும் புரியாமல் முழித்தான்.



“கொடி நீ எதாவது பண்ணியா?”



“இல்ல மாமா நான் தொட்டு பார்த்துட்டு இருந்தேன் அவ்வளவு தான் வேற எதுவும் பண்ணல, அதுவும் இந்த கூர்ப்பான இடத்தை தான் தொட்டு பார்த்தேன்.” என அவன் கையை உரசியது போல தொட்டு காட்டினாள்.



கனவன், மனைவி இருவரின் கையும் ஒன்றாக பட்டதும் அந்த பொத்தான் அசைந்தது. இருவருக்கும் ஆச்சர்யம்.



“கொடி உன் கை கொடு.” என அவள் கையை அழுத்தி பிடித்து அந்த பொத்தானை இருவர் கையையும் சேர்த்து வைத்து அழுத்தினான்.



கதவு தாழ் திறப்பது போல் சத்தம் கேட்டது இருவருக்கும். ஈஸ்வர் சுவரு முழுக்க தேட துவங்கினான். தாழ் திறந்த சத்தம் மட்டும் வந்தது அதற்க்கான கதவு எதுவும் இல்லையே என. முல்லையும் தேடி பார்த்தாள். எவ்வளவு தேடியும் கிடைக்க வில்லை.



“மாமா வாங்க இந்த கட்டிலை ஓரமா போடணும் வேலையை முடிச்சிட்டு தேடுவோம்.” என்றாள் முல்லை.



சரி என தலை அசைத்தவன்.. தனி ஆளாக அவ்வளவு பெரிய கட்டிலை தூக்க முயற்சி செய்தான். கட்டில் நகர கூட இல்லை.



“கொடி நீயும் பிடி.” என மனைவி உதவியோடு நகர்த்தி வைக்க கட்டிலின் கீழே அழகிய சிகப்பு வண்ண மேட் விரிக்க பட்டு இருந்தது.


அந்த மேட் பார்க்க விலை உயர்ந்ததாக தெரிய, ‘யாரு கட்டிலுக்கு அடியில் மேட் போட்டது. அதுவும் இவ்வளவு கனமா, காஸ்லியான மேட்!’ என யோசித்தவனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.



“கொடி கதவை மூடு.” என்றவன் அந்த மேட்டில் கால் வைக்காமல் மெதுவாக நகர்த்தினான். பாறை கற்களுக்கு நடுவில் சிறியதாக ஒரு கல் மட்டும் சில மஞ்சள் புள்ளிகள் கலந்தது போல் இருந்தது.



கொடி அதன் அருகில் வந்தவள், “கோவில் உள்ள இந்த மாதிரி கல் இருக்கு மாமா, நம்ப பூஜை அறையில் கூட இருக்கு.” என கூறினாள்.



ஓ. என இழுத்தவன் அந்த கல்லை நன்றாக உற்று பார்த்தான். அந்த கல்லை உடைக்க முயற்சி செய்து இருப்பது தெரிந்தது.



“யாரோ இந்த இடத்தை திறந்து பார்க்க முயற்சி பண்ணி இருக்காங்க போல கொடி.”



அந்த இடத்தின் வரம்பை மெதுவாக தடவி பார்த்தான். ஈஸ்வரன் கை பட்டதும் கல் மேலே எழும்பி வந்தது. ஒரு சிறிய இடம் தான் கொடி கை விட போக பதறிய ஈஸ்வரன் அவளின் கையை அழுத்தமாக பிடித்துக் கொண்டான்.



“உள்ள என்ன இருக்குன்னு தெரியல கொடி நீ கை விட்டு உனக்கு எதாவது ஆகிட போகுது. இரு நானே கை விட்டு பாக்குறேன்.” என்றவன் மெதுவாக கை விட்டு துழாவி பார்த்தான்.



உள்ளே ஒரு சிறிய ஓலையால் பின்னிய கூடை சிக்கியது. வெளியே எடுத்து அதை பிரித்தான். உள்ளே அழகிய பட்டு துணி எதையோ பாதுகாத்து கொண்டு இருந்தது.


“கொடி இதை பிரி.” என அவள் கையில் கொடுத்தவன். மீண்டும் எதாவது உள்ளதா என தேடி பார்த்தான்.



அதற்குள் கொடி அதை மெதுவாக திறக்க இத்தனை நாட்களாக ஈஸ்வரன் தேடிக் கொண்டு இருந்த கோவில் கொடி தான் அது. அழகாக மடிக்கபட்டு பத்திரமாக இருந்தது.



“மாமா கோவில் கொடி.” என்றவள் தூக்கி கண்களில் ஒத்திக் கொள்ள கொடிக்குள் இருந்து சத்தம் எழுந்தது.



கொடிக்குள் இருந்து சத்தம் வந்ததை ஈஸ்வரனும் கேட்டான். அதை அவளே பிரிக்கட்டும் என அமைதியாக வேடிக்கை பார்க்க துவங்கினான். அவனுக்கு நன்றாக தெரியும் அதில் இருந்து வரும் சத்தம் சாவி கொத்தின் சத்தம் என. அவளுக்கு சொந்தம் ஆனது தானே அதனால் அவளே அதை கையில் எடுக்கட்டும் என நினைத்து கொண்டான்.



“மாமா இதுல இருந்து சத்தம் வருது பாருங்க. இந்தாங்க என்ன இருக்குன்னு பிரிச்சி பாருங்க மாமா.” என தன் மாமன் முன்பு நீட்டினாள்.



“கொடி நீயே பிரி.” என்றான் கையில் வாங்காமல்.



முல்லை மனதுக்குள் கடவுளை வேண்டிக் கொண்டவள் கொடியை மெதுவாக பிரித்தாள். நான்காவது மடிப்பில் மின்னிக் கொண்டு இருந்தது சாவி கொத்து. கொடி கண்களை விரித்து பார்க்க, ஈஸ்வரனும் ஆச்சர்யமாக பார்த்தான்.



ரொம்பவே கனமான சாவி கொத்து, கிட்ட தட்ட ஈஸ்வரன் கையில் கிடக்கும் காப்பு போலவே நாக உருவமும், சிவனின் லிங்க உருவமும் பொருந்திய அமைப்பாக வித்தியாசமாக இருந்தது.



அந்த சாவி கொத்தின் விலையே பல லட்சம் வரும் போல. எதற்காக இதை இவ்வளவு பாதுகாப்பாக வைத்து இருந்தார் தாத்தா என்பது இப்போது புரிந்தது ஈஸ்வரனுக்கு. முத்துகளும், கற்களும் ஜொலித்துக் கொண்டு இருக்க. அதில் சாவிகள் அதிகமாக இருந்தது.



கொடி சாவி கொத்தை பிடித்து தடவி பார்த்தவள், “மாமா இந்தாங்க பிடிங்க.” என கணவன் முன்பு நீட்டினாள்.



மனைவியை நினைத்து உள்ளுக்குள் சிரித்தவன் அதை கையில் வாங்கி பார்த்தான். அதில் இருந்த சாவிகளில் கூட சில நாக உருவங்கள் பொறிக்க பட்டு இருந்தது.



“மாமா நான் அறையை சுத்தம் பண்ணுறேன் நீங்க கொடியை பத்திரமா பூஜை அறையில் வைங்க.” என்றாள்.



சாவி, கொடி இரண்டையும் கையில் எடுத்துக் கொண்டு கீழே இறங்க, கம்பன் சோஃபாவில் பூஜை அறையை பார்த்த படி அமர்ந்து இருந்தவன். “என்ன ஈஸ்வரா தேடுனது கிடைத்து விட்டது போல? சந்தோஷமா?” என்றான் ஈஸ்வரனை பார்க்காமல். ஈஸ்வரன் கம்பனை கூர்மையாக பார்த்தான் எப்படி கண்டு பிடித்தாய் என.



“சத்தம் கேட்குது ஈஸ்வர். அதை வச்சி தான் கண்டு பிடிச்சேன்.” என்றான் கம்பன்.



ஈஸ்வர் பூஜை அறையில் சிவன் காலடியில் வைத்து விட்டு வெளியே வர சித்தப்பு அமர்ந்து இருந்தார் கம்பன் அருகில், கொடியையும், சாவி கொத்தையும் பார்த்தபடி.

சித்தப்பு பார்வையை கண்டவன் கம்பனை பார்த்தான், கம்பனும் ஈஸ்வரனை கண்டு கண்களால் சிரித்தான்.



“ஈஸ்வரா சாவி கொத்து எப்படி கிடச்சுது உனக்கு?” சித்தப்பு குரலில் ஒரு கோவம் எதிரொலித்தது.


“எங்க ரூம்ல தான் கொடி கண்டு பிடிச்சா!” என அறிவிப்பு போல் கூறினான்.



“ஓ... அந்த புள்ளை கையில் கிடச்சுதா. நாங்க இத்தனை வருஷம் தேடினோம் கிடைக்கவே இல்லை. நான் அந்த சாவி கொத்தை வச்சிக்கவா?”



“அது என் பொண்டாட்டிக்கு உரிமையானது. அதுல யாருடைய விரல் கூட பட கூடாது. என்னுடைய அனுமதி இல்லாமல் நீங்க பூஜை அறைக்குள் அடி எடுத்து வைக்க கூடாது.” என கடுமையாக எச்சரிக்கை செய்தான்.



“கம்பா கோவில் திருவிழாவுக்கு தேவையான பணம் வர வை. சீக்கிரம் சாமிக்கு நகை எடுக்கணும். திருவிழாவுக்கு தேவையான எல்லாமே தயார் பண்ணனும். எந்த குறையும் இல்லாமல் இந்த திருவிழா நடக்கணும் கம்பா.”



“ஓகே ஈஸ்வர் நீ சொன்னா மாதிரி எல்லாம் தயார் பண்ணிடுறேன்.”



“என்ன தயார் பண்ண போற ஈஸ்வரா. கோவில் திருவிழா ஒன்னும் சாதாரண வேலை கிடையாது. அப்பா இருக்கும் போதே மொத்த செலவையும் ஏத்துக்க மாட்டாரு. கோவில் பணத்துல தான் திருவிழா நடக்கும் மத்த மூன்று கிராமமும் அவுங்க பங்கை தருவாங்க. அன்னதானம் மட்டும் தான் அப்பா முழு செலவு எடுத்துப்பாரு. அதுவும் நெல்லு தயாரா இருக்கும் நமக்கு எந்த நஷ்டமும் இருக்காது.



நான்கு கிராமம் மட்டும் இல்ல சுத்துபட்டு கிராமம் முழுக்க வரும். எல்லாருக்கும் சாப்பாடு போடவே பணம் பத்தாது. கோவில் கஜானா காலி, இதுல அம்மனுக்கு நகை வாங்குறன்னு சொல்லி இருக்க ஒன்னுமே தெரியாமல் எதுக்கு ஈஸ்வர் இத்துகுள்ள கால் விட்ட? நம்ப கிட்ட பணம் கிடையாது. எதை வச்சி எல்லாத்தையும் பார்க்க போற. இது எல்லாம் யோசிச்சு தான் நான் இதுவரைக்கும் திருவிழா எடுத்து நடத்தவே இல்ல. நீ தேவை இல்லாத வேலை பாக்குற ஈஸ்வரா இளம் இரத்தம் தானே நீ அதான் ஓவரா சூடாகுது.”




“எனக்கு தெரியும் எதை செய்யனும் செய்ய கூடாதுன்னு. இந்த திருவிழா எனக்கு ரொம்ப முக்கியம். இதுக்கப்புறம் வர திருவிழா எல்லாம் கோவில் பணத்துல தான் நடக்கும் இந்த வருஷ திருவிழா மட்டும் தான் என் பணத்தில் நடக்கணும்.” என்றான் படியில் அனைத்தையும் கேட்ட படி நிற்க்கும் மனைவியை பார்த்தபடி. சித்தப்புக்கு தெரியாதே ஈஸ்வர் இந்த திருவிழாவில் இவ்வளவு ஆர்வம் காட்ட காரணம் அவனின் கொடி தான் என.



“கம்பா நான் சொன்னதை ஏற்பாடு பண்ணு போ.” என்க கம்பனும் தலை அசைத்து விட்டு வெளியேறினான். சித்தப்பு ஈஸ்வரனை அக்கினி பார்வை பார்த்தவர். எழுந்து நின்று சாவி கொத்தை பார்த்தபடி சென்றார்.



“மாமா திருவிழாவுக்கு பணம் நிறைய செலவு ஆகுமா? உங்க கிட்ட பணம் இல்லையா?” அப்பாவியின் உச்ச கட்டத்தில் கேட்கும் மனைவியை விழிகளால் வருடியவன், “இந்த வருஷம் நான் சொன்னா மாதிரி நம்ப செலவுல எந்த குறையும் இல்லாமல் திருவிழா நடக்கும் கொடி. நீ பாக்கனும்னு ஆசை பட்ட திருவிழாவை கண் குளிர ரசிப்ப என்னை நம்பு, பணத்தை பத்தி நீ கவலை படாத.” அவனின் வார்த்தையை விட அவனின் பார்வை அதிக நம்பிக்கை குடுத்தது. மெல்லிய புன்னகையுடன் தலை அசைத்த முல்லை தான் சொந்தமாக உழைத்து வாங்கிய ஒரு ஏக்கர் நிலத்தை விற்றாள். தானும் தன் மாமனுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில்.



ஈஸ்வரன் கூறியது போன்று முழு பணத்தையும் ஏற்பாடு செய்தவன் முல்லை விற்ற நிலத்தையும் ஈஸ்வரன் பணத்தை கொடுத்தே வாங்கினான்.



“மாமா இதுல கொஞ்சம் பணம் இருக்கு உங்களுக்கு எதுக்காவது உதவும்.” ஆசையாக நீட்டினாள்.



கம்பன் மெலிதாக சிரிக்க, ஈஸ்வர் முல்லையை ஆச்சர்யமாக பார்த்தவன் மறுக்காமல் அந்த பணத்தை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டான்.



“உன் ஆசைக்காக ஒருத்தன் தண்ணியா செலவு பண்ணுறான். நீ அவனுக்காக உனக்குன்னு இருந்த ஒரே சொத்தை வித்துட்டு வந்துட்ட நல்ல புருஷன், நல்ல பொண்டாட்டி.” என இருவரையும் புகழ்ந்த படி திருவிழா வேலைகளை பார்க்க கிளம்பினான் கம்பன்.



திருவிழா வேலைகள் தீயாக துவங்கியது. ஈஸ்வர் பணத்தை பிரித்து முல்லை கையில் கொடுத்தே பணம் கொடுக்க சொல்லி வேலையை துவங்கினான். கம்பன் பள்ளி நிர்வாகத்தையும், கோவில் வேலையையும் சேர்த்து பார்த்துக் கொண்டான்.






தொடரும்...