அத்தியாயம் – 6
மௌனம் எனக்குப் பிடிக்கும்
அது என்னைக் காயப்படுத்தாதவரை...!
மௌனம் அழகுதான் ஆனால்
உன் மௌனமோ என்னை அளச்செய்யும்....!!
மௌனத்திற்கு மொழித் தேவையில்லை
உன் மௌனம் பேசாத பேச்சில்லை.......!!!
என்னை நோகடிக்க நீ கையில்
எடுக்கும் ஆயுதம் மௌனம்....!
உனக்கெதிராய் ஆயுதம் பிரயோகிக்க
எனக்கு ஆசையில்லை...!!
அமைதியை விரும்புகிறேன் அதற்காக
உன் மௌனத்தையே எனக்குப் பரிசாய் அளிக்காதே...!!!
மௌனம் எனக்குப் பிடிக்கும்
அதை நீ கையாளதவரை...!!!!
மௌனம் எனக்குப் பிடிக்கும்
அது என்னைக் காயப்படுத்தாதவரை...!
மௌனம் அழகுதான் ஆனால்
உன் மௌனமோ என்னை அளச்செய்யும்....!!
மௌனத்திற்கு மொழித் தேவையில்லை
உன் மௌனம் பேசாத பேச்சில்லை.......!!!
என்னை நோகடிக்க நீ கையில்
எடுக்கும் ஆயுதம் மௌனம்....!
உனக்கெதிராய் ஆயுதம் பிரயோகிக்க
எனக்கு ஆசையில்லை...!!
அமைதியை விரும்புகிறேன் அதற்காக
உன் மௌனத்தையே எனக்குப் பரிசாய் அளிக்காதே...!!!
மௌனம் எனக்குப் பிடிக்கும்
அதை நீ கையாளதவரை...!!!!
“ஆளுமா டோலுமா இசாலக்கிடி மாளுமா....” என்ற பாடலின் அலறள், விடியல் உன்னை அழைக்கிறது எனும் விதமாக ஐந்து மணிக்கு அவனை எழுப்ப, அந்த அலறலில் அடித்து பிடித்து எழுந்தவன், ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் விழித்தான்.
பின் இது யாருடைய வேலை என்பதை உணர்ந்து, ‘நாதாரி வேணும்னே சாங்கை மாத்தி வச்சிட்டு போயிருக்கான், போற அவசரத்துல கூட இதை மறக்காம செஞ்சுட்டு போயிருக்கு பாரு கொரில்லா... அவனுக்கு இருக்கு இன்னைக்கு என்று, எப்போதும் அலாரத்திற்கு என்று ஒலிக்கும் ‘ஆத்தி எனை நீ பார்த்தவுடனே’ பாடல் ஒலிக்காமல் போன கடுப்பில் தீபக்கைத் திட்ட ஆரம்பித்தான் சிபி....
நண்பர்கள் யாருமில்லாமல் தனியே வொர்க் அவுட் செய்யவும் சோம்பேறித்தனமாய் இருக்க, அலாரத்தை அணைத்துவிட்டு மீண்டும் தன் ரஜாயை இழுத்து மூடினான்....
யாருமில்லா தனிமை மனதிற்குள் ஒரு வெறுமையை உருவாக்க, பட்டென்று மூடிய போர்வையை உதறிவிட்டு எழுந்து அமர்ந்தவனின் முகம் இயலாமையில் கடுகடுத்தது...
ஆகாஷ் தன் பீல்டு விசிட் முடிந்ததும், அவனின் வருட விடுமுறைக்கு ஊருக்கு சென்று விட, அவனை அடுத்து தீபக்கிற்கு பீல்டு என்பதால் சிபி மட்டுமே தனியாக இருக்கும்படி ஆனது. இது ஒன்றும் அவனுக்கு புதிது கிடையாது, அடிக்கடி நடப்பது தான்.
ஆனால் இந்த முறை தனிமை மிகவும் பயங்கரமாய் மிரட்டியது. இன்னும் சில நாட்களில் அவனது உயிரானவள் தாயகம் திரும்பி விடுவாள். அது அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை, மாறாக அவள் என்ன செய்வாளோ என்ற பயத்தைத்தான் கொடுத்திருந்தது.
வித்யாவிடம் பேசியது வரை இப்போதைக்கு அவள் அமைதியாக இருப்பது போலவேத் தோன்றியது. அவள் அவனை விட்டு ஒதுங்குவதற்க்கான காரணம் புரியாமல் தவித்தவன், அது அவனுக்கு புரியும் பொழுது தன்னைத்தானே நொந்துக் கொண்டான்.
அது அவளிடம் ‘I LOVE SOMEBODY’ என்று கூறியதால் வந்த குழப்பம்.... அன்றே அந்த ஒருத்தி வேறு யாருமல்ல... நீதான்டி.... நீதான்..... நான் பைத்தியமானதுக்கு கரணம்’ என்று கூறியிருக்கலாம்.
அன்று அவன் வாயில் எந்த சனி அமர்ந்ததோ.... அவளை கிண்டல் பண்ண வேண்டும் என்று அவன் கொடுத்த விளையாட்டு பேச்சுக்கள், இன்று வினையாகி அவன் முன்னே விடையறியா வினாக்களாய் வந்து பயமுறுத்தின.
மனம் அதனால் வேதனை அடைந்தாலும், அதை ஒதுக்கி வைத்துவிட்டு, அவளை மாற்றியே ஆகவேண்டும், என்னதான் அவர்கள் வாழ்க்கையில் குழப்ப மேகங்கள் சூழ்ந்திருந்தாலும், அதை தெளிவான வெண்மேகமாய் மாற்ற அவனால் முடியும் என்ற நம்பிகையை அவனுக்கு அவனே உருவாக்கிக் கொண்டான்.
ஆனாலும் அவள் யாரிடமும் கேட்காமல் அங்கேயே வேலை செய்யும் முடிவை எடுத்ததை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை... அவள்மீது கடலளவு காதல் இருந்தாலும், மலையளவு கோபமும் இருந்தது.... அந்த கோபத்தில் அவன் முகம் இறுகி கடினமாக, அதற்கு காரணமானவளை மனதுக்குள் வறுத்து எடுத்தான்.
“என்ன நினைச்சிட்டு இருக்கா அவ மனசுல .... என்னைப்பார்த்தா அவளுக்கு கேனையன் மாதிரி தெரியுது போல, அவ என்ன செஞ்சாலும் நான் அமைதியா போவேன்னு அவளா நினைசிக்கிட்டாளா.....”
“ஏதோ என் மேலையும் தப்பு இருக்கு, அவளை யோசிக்க விடாம அவ கழுத்துல கட்டாயமா தாலியைக் கட்டிட்டோம், அதை அவ ஏத்துக்குறதுக்கு டைம் கொடுக்கணும்னு நினைச்சு ஒதுங்கி இருந்தா..... இவ பாட்டுக்கு என்னென்னமோ செஞ்சிட்டு இருக்கா... இனி அவ இஷ்டத்துக்கு எல்லாம் விட முடியாது..... அவ்வளவு சீக்கிரம் இந்த சிபி தோத்து போயிடமாட்டான்.... அதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டு அவளைக் கல்யாணம் பண்ணேன்... அவ விருப்பம் இல்லாம கூட...”
“நோ.... நெவர்.... அவளுக்கு பாவம் பார்த்தது எல்லாம் போதும்.... இனியும் அமைதியா இருந்தா..... அவபாட்டுக்கு அங்க உக்காந்துட்டு என் கைல சரக்கை கொடுத்து தேவதாஸ் ஆக்கிடுவா.... அது நடக்கக் கூடாது, எந்தப் பிரச்சினை வந்தாலும் அவள் என்கூட இந்த வாழ்க்கையை வாழ்ந்து தான் ஆகணும், அவளுக்கு பிடிச்சிருந்தாலும் சரி, பிடிக்கலையென்றாலும் சரி.... அவளுக்கு நான் தான்... நான் மட்டும் தான்...’ என்று நினைத்தாலும் அவன் முகம் இளக மறுத்தது.....
அதனால்தான் அவன் மனைவிக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுத்து அவளின் மனதில் என்ன இருக்கிறது என்பதைக் கணிக்க, அந்த முடிவை எடுத்திருந்தான். என்ன நடந்திருந்தாலும் இனியும் அவளை அவன் விடபோவதில்லை. அவளுடனான இந்த வாழ்கையில் அவன் தோற்கப்போவதுமில்லை, அவளைத் தோற்கவிடப் போவதுமில்லை.
இருவரும் காதல், குடும்பம் எனும் வெற்றிக்கனியை திகட்ட திகட்ட சுவைக்காமல், இந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்க்காமலும் விடப்போவதில்லை.
பார்த்துவிடலாம் அவளா..? இல்லை நானா..? என்று மனதில் தீர்மானமாய் முடிவெடுத்தான். இனி இந்த சிபியின் அதிரடி ஆட்டம் தொடங்கப்போகிறது.
இதில் யார் எதிர்த்து நின்றாலும், அது தன் ஆருயிர் அண்ணனாக இருந்தாலும் சரி, அவளுடனான வாழ்க்கையை நான் வாழத்தான் போகிறேன் என்று தன் மனதுக்குள் உறுதி பூண்டான்.
அஸ்வத்திற்கு அழைத்தவன் சில திட்டங்களை அவனிடம் கூறிவிட்டு போனை வைத்தான்.
மறுமுனையில் அவனது திட்டங்களைக் கேட்ட அஷ்வத்தோ ‘இவன் குருவையே மிஞ்சின சிஷ்யன் ஆகிடுவான் போலையே’ என்று நினைத்துக் கொண்டு, சிபி கூறியதை அட்சரம் பிசராமல் தன் மனைவியிடம் தெரிவிக்கவும் செய்தான். அதுதான் அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலையே... இனி அது தலைப்பு செய்தி போல் உடனுக்குடனே அவன் குடும்பத்தினரின் காதுகளுக்கு சென்றடையும் .
அஸ்வத் நினைத்ததை விட வேகமாய் அந்த செய்தி பரவ, அடுத்த அரை மணி நேரத்தில் சரணிடம் இருந்து போன் வந்தது. முதலில் எடுக்கவா வேண்டாமா என யோசித்தவன், பின் ஒரு முடிவுடன் எடுத்து காதுக்கு கொடுத்தான்.
“.சரண்... சொல்லுப்பா.... இவ்ளோ சீக்கிரம் உன் காலை எதிர்பார்க்கல... ஹாஹா.... மதி தீயா வேலை செஞ்சிருக்கான்னு தெரியுது....”
“என்னய்யா கிண்டலா... அவனுக்கு நீங்க ரொம்ப இடம் கொடுத்துட்டீங்க அஸ்வத்... அதான் இப்படி பண்ணிட்டு இருக்கான். இளா அண்ணி நிலாகிட்ட சொன்னதெல்லாம் உண்மையா, அவனுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு.. இப்போ எதுக்கு அந்த டீம்ல ஜாயின் பண்றானாம்..”
“எதுக்கு அவனுக்கு இந்த கோபம் அஸ்வத், நான் கால் பண்ணா எடுக்க மாட்டேங்குறான், என்ன விசயம், தெளிவா எங்கிட்ட சொல்லுங்க...” என படபடவென இடையில் பேச முயற்சித்த அஸ்வத்தைத் தடுத்து, சிபியின் செயலில் உண்டான கோபத்தில் கொட்டி தீர்த்தான் சரண்.
“ஹேய் சரண்..... பர்ஸ்ட் ரிலாக்ஸ் ஆகுப்பா, நீ வேற ஏன்ப்பா..... எனக்கே இன்னும் சரியா தெரியல, அவன்கிட்ட பேசும்போது இப்போ ஒரு ஆபர் வருது, போகலாம்னு யோசிக்குறேன்... அப்படின்னு சொன்னான்.... நான் எதுவும் சொல்லல, எது செஞ்சாலும் யோசிச்சு செய் என்று மட்டும் சொன்னேன்....”
“நீயே யோசிச்சு பாரு அவன் அப்படி என்ன தப்பு செஞ்சுட்டான்... அவனையும் புரிஞ்சிக்க ட்ரை பண்ணு சரண்.... இந்த மூணு வருஷத்துல அவன் ரொம்ப அனுபவிச்சிட்டான்.... இதுக்கு மேல வேண்டாம்...”- அஸ்வத்
“அஸ்வத் நாங்க யாரும் அவனை ஒதுக்கல, அவனா ஒதுங்கிட்டான்... எனக்கு ரெண்டு பேரும் வேற வேற இல்ல.... அவங்க நிம்மதியா இருந்தா என்னைவிட யாரும் அதிகமா சந்தோசப்பட மாட்டாங்க.... இவங்க இப்படி இருக்குறதுதான், எனக்கு கஷ்டமா இருக்கு..” - சரண்
“இங்க பாரு சரண்... ஆர்மில இதெல்லாம் சகஜம் தான். வாலண்டியரா பேர் கொடுக்காம இருந்தா பிரச்சினை இல்லை... இவன் இன்னும் கொடுக்கல... சோ நோ ப்ராப்ளம்... பார்த்துக்கலாம்... ஆனா அங்க போயிட்டா அடுத்த டூ யேர் ஊரு, குடும்பம் இதைப்பத்தியெல்லாம் நினைக்க முடியாது....” - அஸ்வத்
“என்ன அஸ்வத் இது, இனி இவன் புதுசா ஒன்னை ஆரம்பிப்பான் போலயே, ஏற்கனவே ஒன்னு இன்னும் முடிவு தெரியாம இருக்கு, இதுல சாருக்கு வெட்டி ரோசமும், கோபமும் மட்டும் வந்திடும். அவ வர்ர நேரத்துல இவன் ஏன் இந்த வேலையை செய்றான்.”
“ரெண்டும் வந்தாதானே பேசி ஒரு முடிவு எடுக்க முடியும். அவளோ பேசவே மாட்டேங்குறா, இவன் பேச ஆரம்பிச்சாலே போனை வச்சுடுறான்... வீட்ல பெரியவங்க எவ்வளவு வருத்தப்படுவாங்கனு ரெண்டு பேருமே புரிஞ்சிக்கிறது இல்ல...”
“இப்படியே விட்டா சரிவராது.... இனி நாமதான் களத்துல குதிக்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன்.... இப்போ பார்த்து இவன் இப்படி பண்றான்.... அத்தையையும் மாமாவையும் பார்க்க முடியல அஸ்வத், ரொம்ப ஓஞ்சுப் போயிட்டாங்க....”
“இவன் ஆரம்பிச்சு வச்சுட்டான்.... இனி அவ முடிச்சி வைப்பா..... இதுதானே எப்பவும் நடக்கும்.... இப்போ அவளோட பங்குக்கு என்ன குண்டைத் தூக்கி போடப்போறாளோ....? தெரியல..? இதுங்க ரெண்டும் பண்றதுக்கு நான்தான் வீட்ல மண்டகப்படி வாங்குறேன்...” – என்றான் சரண். அவள் ஏற்கனவே ஒரு குண்டை போட்டு விட்டாள் என்பது தெரியாமல்....
“ஹேய் சரண்..... கொஞ்சம் பொறுப்பா... ஏன் இப்படி டென்சன் ஆகுற, நீ இவ்ளோ டென்சன் ஆகுற அளவுக்கு இப்போ ஒன்னும் நடக்கல, இப்படி செய்யலாம்னு இருக்கேன்னு மட்டும் தான் சொல்லிருக்கான்... இன்னும் செய்யல, சோ நீ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு.....”
“ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ.... அவங்க ரெண்டு பேரும் ஒன்னும் சின்னப் பிள்ளைங்க இல்ல, எல்லாம் புரிஞ்சு, வாழ்க்கையைப் பத்தி தெரிஞ்சவங்க தான்.”
“நாமதான் வீணா கவலைப் படுறமோனு முன்னாடி இருந்தே எனக்கு தோணிட்டு இருக்கு... ரெண்டு பேருக்கும் இடையில ஒரு புரிதல் இருக்கு. அதை யாராலையும் மறுக்க முடியாது...”
“இந்த மூணு வருஷப் பிரிவு அவங்களுக்கு இன்னும் அதிகமானப் பக்குவத்தையும், பிரச்சினையை எப்படி எதிர்கொள்றது என்கிற தைரியமான மனப்பான்மையும் கொடுத்துருக்கும்.... அவங்க ரெண்டு பேருக்குள்ள நாம பஞ்சாயத்து பண்ண வேண்டாம்.... முடியாத பட்சத்துல செய்யலாம்.. ஓகே...”
“பர்ஸ்ட் அவங்க பேசட்டும், பேசி ஒரு முடிவுக்கு வரட்டும், நிச்சயம் நல்ல முடிவா இருக்குமென்று நம்புவோம்... நீ இங்க ஷானவியை பத்தி மட்டும் யோசிக்காத, சிபியை பத்தியும் யோசி, அவனோட மனநிலை, அவன் ஏன் இந்த முடிவுக்கு வந்தான் என்றெல்லாம் யோசி, அவன் சரியா செய்வான் என்று நம்பி அவனை ப்ரீயா விடுவோம்... எல்லாம் அவனே சரி செய்திடுவான்..” என்று நீளமாய் பேசிமுடித்த அஸ்வத், அடுத்து குழந்தைகள் பற்றியும் தொழிலைப் பற்றியும் பேசி விட்டு வைத்தான்.
அஸ்வத் கூறியதில் இருந்த உண்மை புரிய அமைதியானான் சரண். என்னதான் சிபி அவனது ஆருயிர் தம்பி என்றாலும், ஷானவி அவளது செல்லத் தங்கை ஆயிற்றே.... தங்கை என்பதை விட தனது மூத்த மகளாகவே பார்த்தான்.
அவளுக்கு ஒரு கஷ்டம் என்றால் அது தன் தம்பியால் என்றால் கூட, அவனால் பொறுத்துக்கொள்ள முடியாது.. பிரச்சினை என்னவாக இருந்தாலும், அவனால் ஷானவியை விட்டுக் கொடுக்க முடியவில்லை.
இருந்தும் இருவரின் வாழ்க்கையையும் முன் வைத்து பலமுறை யோசித்தவனுக்கு, அஸ்வத் கூறியதே சரி என்று பல தருனங்களில் அவனும் நினைத்திருக்கிறான். அதையே தன் மனைவியிடமும் கூறியிருக்கிறான்.
இருவரும் வரும் இந்த சமயம் எல்லாம் சரியாகும் என்று நினைத்த வேளையில் சிபி இப்படி ஒரு கிறுக்குத்தனமான முடிவு எடுப்பான் என்று யாரும் நினைக்கவில்லை. அஸ்வத் கூறுவது போல் முதலில் அவர்கள் இருவரும் பேசட்டும், அப்புறம் நாம் பார்த்துக் கொள்ளலாம் என்று யோசித்த சரண் வேறு வேலைப் பார்க்க போனான்.
இவர்களை இப்படி புலம்ப விட்டவனோ............ தன் இருக்கையில் அமர்ந்து வெளியே கொட்டும் பனியை வெறித்துக் கொண்டிருந்தான். பார்வை அந்த பனிமலைகளில் நிலைத்திருந்தாலும், அவனது எண்ணங்களோ காலையில் அஷ்வத்திடம் பேசியதிலே உழன்றது.
அவர்களது பேட்சில் இருந்து ஒரு டாக்டரும், இரண்டு உதவியாளர்களும் இரண்டு வருடத்திற்கு இந்திய-மியான்மர் எல்லைப்பகுதிக்கு அனுப்புவதாகவும், விருப்பம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவும் அறிவிப்பு விடப்பட்டது.
ஷானவி மீண்டும் லண்டன் செல்லப்போகிறாள் என்பதைத் தெரிந்து கொண்டவனுக்கு, அவள் மீது கோபமும், எரிச்சலும் வாழ்க்கையின் மீது ஒரு சலிப்பும் ஏற்பட்டது... தன்னைப் பற்றி யோசிக்காத அவளை நினைத்தாலே மனதில் எரிச்சல் மண்டியது...
முதலில் கோபப்பட்ட அஷ்வத்தும், அவன் கூறிய காரணங்களைக் கேட்டு அமைதியாகி விட்டான். வீட்டில் இருப்பவர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பதை அறிந்து கொள்ளவே இப்படி ஒரு திட்டத்தை அவன் செய்தது.
அவன் எதிர்பார்த்தது போலவே வீட்டில் உள்ளவர்களும், அவனைத் திட்டி, அவன் செயலைத் தடுக்க போராடுவது அவனுக்கு ஒருவித நிம்மதியைக் கொடுத்தது... அப்படி ஒன்றும் யாரும் தன்னை ஒதுக்கி விடவில்லை என்று மகிழ்ச்சியும் சிறு நிம்மதியும் கூட உண்டானது..
இருவரின் பிரச்சினைகளும் தீராமல் அப்படியே இருக்க, நாட்கள் நகர்ந்து அவன் பீல்டிற்கு செல்லும் நாளும் வந்தது. ஷானவி இந்தியா வருவதற்கு மூன்று நாட்கள் முன்னதாகவே அது அமைந்தது. இன்னும் பத்தே நாட்களில் தன் மனைவியானவளை பார்க்கப் போகிறோம் என்ற சந்தோசம், அவனது மனதில் இதம் தந்தாலும், அவள் மீதான கோபம் மட்டும் மட்டுப்பட மாட்டேன் என்று சண்டித்தனம் செய்தது....
ஆசை கொண்ட மனமோ அவனது கோபத்தைப் பார்த்து, உன்னால் அவளிடம் கோபமாக இருக்க முடியுமா... என்று கேலி செய்து சிரித்தது.....
என்னதான் கோபம் என்றாலும் அவளுக்கு அனுப்பும் குட் மார்னிங், குட் நைட், மெஸ்சேஜ்களும், அந்த மூன்று நாட்களில் அவள் படும் கஷ்டங்களை ஐந்தாண்டுகளாக பார்த்தவன் ஆயிற்றே.... வித்தியின் மூலம் அதை தெரிந்துகொண்டு, அவளை விட அவன் அதிகம் வருந்துவான்....
“உன் மனம் தான் உன்னை வீழ்த்தக் கூடிய ஆயுதம், அது தெளிவாக இருக்கும்வரை, யாரும் உன்னை வீழ்த்த முடியாது..” எங்கோ படித்த வரிகள் அவன் ஞாபகத்தில் உலா வர, அதை உடனே வாட்ஸ் ஆப்பில் ஷானவிக்கு அனுப்பினான்... இதற்காவது பதில் அனுப்புவாளா என்று ஒருமனம் வழக்கம்போல் ஆசைப்பட, மற்றொரு மனமோ அவளைப் பத்தி தெரிஞ்சும் எப்படி டா உனக்கு இப்படி ஆசையெல்லாம் வருது... கொஞ்சம் முன்னாடிதான் கோபமா அவளைத் திட்டிட்டு இருந்த, இப்போ என்னடானா வழியிற.... நீ அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டடா.....”
“உன்னைய வேற இந்தம்மா ஹீரோவா போட்டு, கோபமா வேற காட்ட ட்ரை பண்ணிட்டு இருக்கு.... உன்னைப்பத்தி தெரிஞ்சும் எதுக்கு இந்தம்மாவுக்கு இந்த வேண்டாத வேலை.... அவக்கிட்ட பல்பு வாங்குறது தான் உனக்கு முக்கியமான வேலைனு தெரியல இந்த ரைட்டருக்கு....” என கிண்டலில் இறங்க, அதையெல்லாம் உணராமல் போனையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் நினைப்பை பொய்யாக்காமல் அடுத்த நிமிடம் ஆன்லைனில் வந்த அவனது மனையாள், அந்த செய்தியைப் பார்த்துவிட்டு உடனே ஆப்லைன் சென்றுவிட்டாள். அவளின் செய்கையை பார்த்தவனின் இதழில் சிறுபுன்னகை எட்டிப்பார்க்க, கண்களில் வழிந்த காதலுடன் அவளது போட்டோவை தடவியபடிப் பார்த்துக் கொண்டிருந்தான்....
ஷானவி எப்போதும் இப்படித்தான், அவன் அனுப்பும் அனைத்து செய்திகளையும் அடுத்த நொடியே பார்த்துவிடுவாள். ஆனால் பதில் அனுப்புவாளா என்றால் இல்லை... இந்த மூன்று ஆண்டுகளில் ஒருமுறை கூட அவனது செய்திகளுக்கு ரிப்ளை செய்தது கிடையாது...
ஆனால் தன் கணவனைப் பற்றிய அனைத்தும் விசயங்களையும் அறிந்து வைத்திருகிறாள் என்பது அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை. முதலில் சிபிக்கு மனம் சற்று வாடினாலும், பின் அதை சரி செய்து கொண்டு, கஜினி முகமது போல் தொடர்ந்து அவளுக்கு மெசேஜ் அனுப்பிக் கொண்டிருக்கிறான்.
இதுவரை இருந்த குழப்பங்களில் இருந்து சற்று தெளிவு வந்தது போல் இருந்தது அவனுக்கு மனைவியின் செய்கையில்...... அதுவே அவனது ஆர்ப்பரித்த மனதை அமைதிப்படுத்தி அவளுடன் செல்லமாக மனதிற்குள்ளே சண்டையிட வைத்தது.
‘வரட்டும் என் அம்லுவை எப்படி லாக் பண்றதுன்னு எனக்குத் தெரியும் அப்படியே பண்றேன்.... இடியட்.. இடியட்..... எவ்ளோ பிடிவாதம்..... இதை எப்படி சரிகட்ட போறேன்.... இந்த லூசு மாதிரியே என் பிள்ளையும் பிறந்துட்டா என்ன பண்றது....’.
‘ஹையோ வேண்டாம்பா.... கடவுளே நீ எப்படியாவது என்ன மாதிரி பிள்ளையைக் கொடுத்துடு, அவளை மாதிரி கொடுத்து பழிவாங்கிடாத... இதை மட்டும் செஞ்சா.... பழனிக்கு நடந்தே வந்து எனக்கு... ஹ்ம்ம்..,ஹ்ம்ம் எனக்கு வேண்டாம்.... நான் மொட்டை போடக்கூடாது....’
‘ம்ம்ம் வேற யாருக்கு...... கரெக்ட் அந்த சரணுக்கு மொட்டை போடுறேன்.... எப்பவும் அவளுக்கே சப்போர்ட் பண்றானே அதுக்கு பனிஷ்மென்ட் ஓகே... கை விட்டுடாதே தெய்வமே....’ அந்த அமைதி தந்த மகிழ்ச்சியுடன் கிளம்பினான் சிபி அங்கு காத்திருக்கும் ஆபத்தை உணராமல்....
சாலையின் இருபுறமும் பனிக்குவியல்கள் மலையாகவும், ஆழியில் ஆர்ப்பரிக்கும் அலையாகவும் தோன்ற... பசுமையான மரங்களும், செடிகளும் கூட வெள்ளை உடையை அணிந்தது போல், அந்த சாலையே வெண்பனித் தோட்டமாய் காட்சியளித்தது.
அந்த முறை செல்ல வேண்டிய பாதுகாப்பு படையினருடன் சிபியும் இணைந்து கொள்ள, வாகனத்தில் ஆண்களின் கேலிகளும், கிண்டல்களும், சிரிப்புகளும் அவர்களுக்கே உரிய விதத்தில் நிறைந்திருந்தன.
அவர்கள் அப்படி இருந்தாலும் சுற்றிலும் தங்கள் பார்வையைப் பதித்து கண்காணித்துக் கொண்டே தான் சென்றனர். அவர்களது பயணம் சற்று கரடுமுரடான பாதையில் பயணிக்க, திடீரென்று பனிமலைகள் அசைவது போலும், வாகனம் தடுமாறுவது போலவும் தோன்றியது அவர்களுக்கு...
மேலும் இந்தப் பாதைகளில் இதுபோல் அடிக்கடி நிகழ்வதால், அதைப் பெரிது பண்ணாமல் ஓட்டுனர் வண்டியை செலுத்த, எங்கிருந்தோ வந்த மிகப்பெரிய பனிக்காற்று அவர்களது வாகனத்தை அந்த சிறு சாலையில் இருந்து புரட்டிக் கீழேத் தள்ளியது.
உள்ளே இருப்பவர்கள் சுதாரிக்கும் முன்னர் வாகனம் பலமுறை உருண்டு, சிபி உட்பட வீரர்கள் அனைவரும் திசைக்கொருவராக சிதறி விழ, அவர்களையும் சேர்த்து பனித்துகள்கள் தன் போர்வையால் போர்த்தியபடி தன் கோரமுகத்தை காட்டி முன்னேறியது......