• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317

அத்தியாயம் - 2


தீட்சண்யாவின் முக மாற்றத்தைக் கண்டதும் சௌந்தரம் சமாளிப்பாக, "சென்னையில் உள்ள பழக்கவழக்கம் எங்களுக்கு என்ன தெரியும். நீ சொன்னா சரி தான்." என்று ஆதர்ஷிடம் சொன்னார்.


" மா… எல்லாம் அடுக்கி வச்சாச்சா? நம்ம ரூமுக்கு போகலாமா? கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம். டின்னர் கூட ரூமுக்கு வரவச்சு சாப்பிட்டுக்கலாம்." என.


" இதோ முடிஞ்சிடுச்சு அவ்வளவு தான்." என்றவர், மற்றவர்களையும் பார்த்து, " கிளம்பலாமா?" என்று வினவ.


" சரி." என தலையாட்டினர்.


ஒரு வழியாக எல்லோரும் கிளம்பி, அதே ஏரியாவில் உள்ள ஹோட்டலுக்கு சென்றனர். அங்கு தான் ஆதர்ஷ் எல்லோருக்கும் ரூம் போட்டிருந்தான்.


நாளைக்கு தான் பால் காய்ச்சுவதால் எல்லோரும் இன்று வெளியே தங்கிக்கலாம் என்று முடிவெடுத்ததால் இங்கு ரூம் பதிவு செய்திருந்தான்.


காலையில் நேரத்தோடு எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து வந்தவர்கள் நல்ல நேரத்தில் விளக்கேற்றி, பால் காய்ச்சினர்.


ஏலக்காய் மண மணக்கும் பாலை டம்ளரில் ஊற்றி எல்லோருக்கும் எடுத்து வந்து தந்தாள் தீட்சண்யா.


சூடாக இருந்த பாலை, லேசாக சுழற்றிக் குடித்த ஆதர்ஷ், சூடு தண்ணி காலில் ஊற்றியது போல, "ஆஃபீஸுக்கு டைமாயிடுச்சு. " என்று விட்டு கிளம்பினான்.


" டேய் ஆதி… டிஃபன் ரெடியாயிருக்கு சாப்பிட்டு போ." என்றாள் சௌந்தரம்.


" மா… இன்னைக்கு முக்கியமான மீட்டிங். ப்ளீஸ் அன்டர்ஸ்டாண்ட் மா." என்றவன், தந்தை மற்றும் மாமனாரிடம் போயிட்டு வருவதாக கூறினான்.


ராமநாதனோ, " மாப்பிளை நாங்க இன்னைக்கே கிளம்பிறோம். தீட்சண்யாவை பார்த்துக்கோங்க." என்று கூற.


" சரிங்க மாமா. முடிஞ்ச வரைக்கும் மதியம் வரப் பார்க்குறேன் மாமா. மீட்டிங் முடிய லேட்டாச்சுனா கொஞ்சம் சந்தேகம் தான். தப்பா எடுத்துக்காதீங்க மாமா." என்று கூற.


" பரவாயில்லை மாப்பிள்ளை. நீங்க வேலையை பாருங்க. வேலை தான் முக்கியம்" என்றார் ராமநாதன்.


அவரிடம் தலை அசைத்த ஆதர்ஷ், அங்கு நின்றிருந்த தீட்சண்யாவிடமும் கிளம்புவதாக தலையசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.


அவன் கிளம்பியதும் அலை அடித்து ஓய்ந்தது போலிருந்தது.


அதற்குப் பிறகு சௌந்தரமும், மல்லிகாவும் ஆண்களுக்கு முதலில் பறிமாறினர்.


அவர்கள் உணவருந்தியதும், வெளியே

சென்று விட்டு வருவதாக கிளம்ப…


பெண்கள் மூவரும் ரிலாக்ஸாக பேசிக் கொண்டே காலை உணவை அருந்தினர். இடை, இடையே சிரிப்பு சத்தம் கேட்டது.


தீட்சண்யாவிற்கோ அவளது அத்தையை மிகவும் பிடித்து விட்டது.


" அம்மாடி தீட்ஷூ. உனக்கு மதியம் லஞ்ச் என்ன வேணும்னு சொல்லு. அத்தை செய்றேன்." என்றவர் மகனுக்குப் பிடித்த ஐட்டத்தோடு, மருமகளுக்கு பிடித்ததையும் செய்து வைத்தார்.


ஊரில் இருந்து எடுத்து வந்த பொடி வகைகள் எங்கே இருக்கிறது என்று சொல்லி விட்டு மகனுக்கு என்ன பிடிக்கும் என்பதையும் பேச்சோடு பேச்சாக சௌந்தரம் சொல்ல.


புன்னகையோடு கவனமாக கேட்டுக் கொண்டாள் தீட்சண்யா.


காலையில் வெளியே சென்ற ஆண்கள் இருவரும் மதிய உணவு நேரத்தின் போது தான் வந்தனர். சாப்பிட்டு முடித்ததும் ஊருக்கு கிளம்ப, அவசரபடுத்தினர்.


மல்லிகாவிற்கு அப்போது தான் மகளுக்கு அறிவுரை சொல்வதற்கு நேரம் இருந்தது. " தீட்ஷு பொறுப்பாக இரு டா. மாப்பிள்ளையை நல்லா கவனிச்சுக்கோ. அவரு ஆஃபிஸுக்கு போயிடுவாரு. நீ தனியா இருக்கணும். கவனமா இரு" அறிவுரை கூற.


அவர் கூறிய எல்லாவற்றிற்கும் தலையாட்டிக் கொண்டே இருந்தாள் தீட்சண்யா.


" விடுங்க சம்மந்தி. தீட்ஷு பொறுப்பா குடும்பத்தை பார்த்துப்பா. நீங்க கவலைப்படாதீங்க." என்ற சௌந்தரம், மருமகளிடம், " அம்மாடி. அவன் சாப்பிட வர்றானானு கொஞ்ச நேரம் பாரு. வரலைன்னா ஃபோன் பண்ணு. இல்லைன்னா நீ சாப்பிட்டுடு மா. எங்களோட சாப்பிடுனு சொன்னாலும் கேட்கலை. அவன் லஞ்சுக்கு வரலைன்னு சொல்லிட்டா, மீதியிருக்கறதை நைட் சூடு பண்ணி வை. அவன் சாப்பிடுவான்." என்று அவர் சொல்ல.


அதற்கும் தலையாட்டினாள்.


அங்க வந்த அவளது அப்பாவோ, " மாப்பிள்ளை பேச்சை கேட்டு புத்தியோட நடந்துக்கோ." என்று விரைப்பாக கூறி விட்டு சென்றார்.


அவர் கூறியதைக் கேட்டு முகம் வாடி நின்றாள்‌ தீட்சண்யா.


அவர்கள் எல்லோரும் கிளம்பியதும், ஆதர்ஷுக்காக காத்திருந்தவள், அவன் வரவில்லை என்றதும் போன் செய்தாள்.

ஃபோனையும் அவன் எடுக்கவே இல்லை.


டிவியை ஆன் செய்தவள், தட்டில் உணவை போட்டுக் கொண்டு வந்து சாப்பிட்டாள்.


சாப்பிட்டு விட்டு, பாத்திரங்களை மாற்றி கழுவி வைத்தவள், செய்வதற்கு வேறு வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தாள்.


டிவி பாட்டுக்கும் அவளது தனிமையை போக்க ஓடிக் கொண்டிருந்தது.


அவளோ சோஃபாவில் அமர்ந்து இருந்தாள். சிந்தனையோ எங்கோ சென்றுக் கொண்டிருந்தது.


திடீரென்று ஏதோ ஞாபகம் வர… பர்ஸை எடுத்துக் கொண்டு வெளியே சென்றாள்.


காரில் வரும் போதே கவனித்திருந்ததால் பக்கத்தில் இருந்த ஸ்டேஷனரி கடைக்கு சென்றாள். அங்கு சுற்றி பார்த்தவள், அவளுக்கு மிகவும் பிடித்த லாவண்டர் நிறத்தில் இருந்த டைரியை வாங்கினாள். லாக் வைத்த டைரி. அதை ஆர்வமாக பார்த்தவளோ, ' வாவ்.' என்று மனதிற்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டாள். அப்படியே ஒரு பார்கர் பேனாவையும் வாங்கியவள் அப்பார்ட்மெண்டிற்கு திரும்பினாள்.


அங்கிருந்த பார்க்கை பார்த்த தீட்சண்யா, 'வீட்டுக்கு சென்றால் தனியாகத் தான் இருக்க வேண்டும், கொஞ்ச நேரம் அங்கே செல்லலாம்.' என்று எண்ணி பார்க்கிற்கு சென்றாள்.


அங்கு பெஞ்சில் அமர்ந்து இருந்த வயதான தம்பதியர், இவளைப் பார்த்து புன்னகைத்தனர்.


தீட்சண்யாவும் அவர்களைப் பார்த்து சிநேகமாக புன்னகைத்தாள்.


" நீங்க தான் ஏ ப்ளாக்குக்கு புதுசா குடிவந்தவங்களா?" என்று அந்த வயதான பெண்மணி வினவ.


"ஆமாம் மா. நீங்க எந்த ப்ளாக்."


"நாங்களும் ஏ ப்ளாக் தான். கிரவுண்ட் ப்ளோர்."


"ஓ…"


" இப்போ தான் உனக்கு கல்யாணம் ஆனதா மா ?" என்று தீட்சண்யாவின் கழுத்திலிருந்த மஞ்சள் மாறாத தாலிக் கயிறைப் பார்த்து வினவினார்.


" ஆமாம்." என்று வெட்கப் புன்னகையை சிந்தினாள்.


"உங்க வீட்டுக்காரர் வேலைக்கு போய் இருக்காரா? நீ மட்டும் தான் இருக்கீயா?" என்று கேட்க.


" ஆமாமா. அவர் ஐ.டி கம்பெனியில் வொர்க் பண்றார். நான் ஹவுஸ் வைஃப். உங்க வீட்ல யாரு இருக்காங்க மா. நீங்க ரெண்டு பேரும் தானா? உங்க பசங்க எல்லாம் என்ன பண்றாங்க? படிக்கிறாங்களா? இல்லை வேலைக்கு போறாங்களா?" என்று தீட்சண்யாவும் பதிலுக்கு அவர்களிடம் வினவினாள்.


" நான் சதானந்தம். கவர்ன்மென்ட் எம்ப்ளாயி. இப்போ ரிடையர் ஆயிட்டேன். இவ பரமேஸ்வரி. எனக்கு சகலமும் இவ தான். குழந்தை மாதிரி. கடவுளும் இவ ஒருத்தியே போதும்னு நினைச்சுட்டார்." என்றார்.


அதைக் கேட்ட தீட்சண்யாவின் முகம் வாடியது.


" நீ ஏன் மா இதுக்கு கவலைப்படுற? அவளுக்கு நான் துணை. எனக்கு அவ துணை. என்றும் நாங்க நியூ கப்புள்ஸ் மாதிரி வாழ்க்கையை என்ஜாய் பண்ணி தான் வாழ்றோம்." என்றவர், அவரது மனைவியின் தோளில் கையை போட.


இருவரையும் பார்த்து நிறைவாக புன்னகைத்தாள் தீட்சண்யா.


இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஒரு குட்டி பையன் யூனிஃபார்மோடு பேக், லஞ்ச் பேக் சகிதம் அங்கு வந்தான். ஸ்கூல் விட்டு நேராக இங்கே வருகிறான் போல. முகமெல்லாம் களைப்புடன் இருந்தான்.


'இந்த வயசுல புள்ளைங்க, எவ்வளவு சந்தோஷமா, ஆக்டிவா இருப்பாங்க. இவன் ஏன் இப்படி இருக்கிறான்.' என்று யோசனையாக பார்த்தாள் தீட்சண்யா.


ஊஞ்சல் இருக்குமிடம் சென்றவன், பேகை கீழே வைத்து விட்டு, ஒத்த காலால் தள்ளித், தள்ளி ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தான்.


அதை பார்த்த தீட்சண்யாவோ, சிரிப்புடன் அந்த பையனிடம் சென்றாள்.


"தம்பி நல்லா பிடிச்சுக்கோ. நான் வேகமா ஆட்டவா?" என்று கேட்க.


"சரி." என தலையாட்டினான்.


அவள் வேகமாக ஆட்ட‍, ஆட்ட அந்த பையனின் முகமோ மலர்ந்தது.


" உன் பேர் என்ன?" என்று தீட்சண்யா வினவ.


" நிகிலன்." என்றான்.


" என்ன படிக்கிறீங்க."


" ஃபிப்த் ஸ்டாண்டர்ட் ஆன்ட்டி." என்றான்.


' என்னது ஆன்ட்டியா? ஆமாம் நமக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சே. இனி அப்படி தான் கூப்பிடுவார்கள்.' என்று எண்ணியவள், பெருமூச்சுடன் தன்னை பார்த்துக் கொண்டாள்.


அப்போது சரியாக அங்கு ஒரு இளம்பெண் செம ஸ்டைலாக கண்ணாடி போட்டுக்கிட்டு மாடல் போல வர, அவங்க கூட சற்று நடுத்தர வயது பெண்மணி கம்பீரமான நடையுடன், வந்தார். பார்த்ததும் மரியாதை தரும் தோற்றம். ' வாவ். செம லுக்.' என்று தனக்குள் வியந்து பார்த்தாள் தீட்சண்யா.


வந்தவரோ, " நிகில்… ஸ்கூல் விட்டு வந்ததும், நேரா வீட்டுக்கு போக வேண்டியது தானே. எத்தனை தடவை சொல்றது, இங்கே வந்து உட்கார்ந்துட்டு இருக்காதே. வீட்டுக்கு போனால் ஹோம்வெர்க் செய்யலாம்ல." என்றவர், புன்னகையுடன் பார்த்த தீட்சண்யாவை, கண்டுக் கொள்ளாமல், நிகிலனை கையோடு அழைத்துச் சென்றார்.


நிகிலனும் தீட்சண்யாவிடம் எதுவும் சொல்லாமல் முகம் வாட அங்கிருந்து சென்றான்.


அவர் வேலைக்கு போய்விட்டு வந்திருப்பார் போல. ஹேண்ட்பேகோடு, வீட்டுக்கு தேவையான பொருளையும் வாங்கிட்டு வந்திருந்தார்.


மூவரும் அவள் வீடு இருக்கும் ப்ளாக் பக்கம் செல்ல… யோசனையாக பார்த்துக் கொண்டே மீண்டும் அந்தப் பெரியவர்களுக்கு அருகே உட்கார்ந்தாள் தீட்சண்யா.


" அந்த பையனும் நம்ம ப்ளாக் தான். ஸ்கூல் விட்டு வந்ததும் நேரா இங்கே வந்துடுவான். வீட்டில் யாரும் இருக்க மாட்டாங்க. பேசுவதற்கு கூட ஆள் கிடையாது. டிவி பார்க்கலாம்னா அவங்க வீட்ல செட்டாபாக்ஸ் வைக்கலை. அவனோட படிப்பு கெட்டுடுமாம். ஸ்கூல் விட்டு வந்ததும் படிக்கணும்னு அவங்க அம்மாவோட கண்டிஷன். அவனுக்கு அந்த தனிமை பிடிக்காமல் இங்கே வந்து எங்க கிட்ட பேசுவான். அவங்க அம்மாவும் வேலையிலிருந்து வந்ததும் எப்பவும் போல," ஏன் இங்க வந்தேன்னு திட்டுவாங்க. இது தினமும் வாடிக்கை. இன்னைக்கு நீ இருந்ததால, எங்க கிட்ட வராமல் நேரா ஊஞ்சல் கிட்ட போயிட்டான்." என்றார்


" ஓ…" என்ற தீட்சண்யாவோ, எதையோ யோசிக்க…


திடீரென அவளது முகம் பளீரென ஒளிர்ந்தது.


" கவலைப்படாதீங்க பா. நிகிலோட தனிமையை போக்க என் கிட்ட ஒரு ஐடியா இருக்கு‌. நாளைக்கு அவன் கிட்ட பேசுறேன்." என்றாள்.


"எல்லோரையும் போல அவன் மாறுனா சரி மா. "


" சரிங்க மா… நீங்க என்ஜாய் பண்ணுங்க. உங்களுக்கு நடுவுல நான் வரலை. நான் கிளம்புறேன்." என்று அவர்களைப் பார்த்து கண்ணடித்துக் கூறியவள், அங்கிருந்து கிளம்பினாள்.


" போக்கிரி. கைல மாட்டாமலா போகப்போற." என்றார்.


" நாளைக்கு பார்க்கலாம் மா." என்ற தீட்சண்யா துள்ளலாக சென்றாள்.


" ரொம்ப நல்ல பொண்ணா இருக்கும் போல. அதுவும் இந்த காலத்துல இப்படியெல்லாம் பட்டுனு யாரும் வந்து பேசவே மாட்டாங்க. ஊர் பக்கம் இருந்து வந்ததால கலகலன்னு பேசுறா." என்று தீட்சண்யாவை பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.


அப்பார்ட்மெண்டிற்குள் நுழைந்தவள் லிஃப்டை பார்க்க… லிஃப்ட் அன்டர் மெயிண்ட்டெனன்ஸ் என்று எழுதியிருந்தது.


படியில் ஏறியவள், அவளது வீட்டை திறக்கும் போது, திடீரென்று பேச்சுக்குரல் கேட்க.


'யாரும் கூப்பிடுறாங்களோ.' என்று எண்ணியவள் திரும்பி பார்த்தாள்.


மேலே செல்லும் படியில், சற்று முன்பு பார்த்த கம்பீரமான பெண்மணி, இன்னொரு பெண்ணிடம் பேசி கொண்டிருந்தார்.


" நர்மதா… கீழ் ப்ளோருக்கு ஒரு பொண்ணு குடி வந்திருக்கே. பார்த்தீயா?" என்றார் சற்று முன்பு பார்த்த பெண்மணி.


" நான் எங்கே பார்தேன் ஸ்வேதா. நானே இப்ப தான் வேலை முடிஞ்சு ஆபீஸ்ல இருந்து வரேன். வந்து பார்த்தால் இந்த லிஃப்ட்டும் சதி செய்யுது‌." என்று புலம்பினாள்.


" நானும் இப்போ தான் வந்தேன். இந்த நிகில் தான் வழக்கம் போல பார்க்குல போய் உட்கார்ந்துட்டான். அவனை கூப்பிடுவதற்காக போனேன். அப்போ தான் பார்த்தேன். நம்ம ஸ்டேட்டஸ் கிடையாது. வேலைக்கும் போகுற மாதிரி தெரியலை. பக்கா ஹவுஸ் வைஃப் போல இருக்குறா. இந்த நிகில் அவக் கிட்ட பேசுறது கொஞ்சம் கூட பிடிக்கலை. இவன் ஏன் தான் இப்படி இருக்கானோ. யார் கிட்ட பேசணும். யார் கிட்ட பேசக்கூடாதுனு ஒண்ணும் தெரியாமல் இருக்கான்." என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.


இருவரையும் ஒரு பார்வை பார்த்தவள், தனது வீட்டிற்குள் நுழைந்துக் கொணாடாள்.


அவர்கள் பேசியதை பெரிதாக நினைக்காமல், இரவு உணவிற்கு என்ன செய்வது என்று அதில் அவளது கவனத்தை செலுத்தினாள்.


'மதியம் சமைத்த உணவு கொஞ்சம் இருக்கு. ஆனால் இரண்டு பேருக்கும் போதாது. அவருக்கு பிடிச்ச டிபன் ஏதாவது செய்வோம். இருவரும் கலந்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.' என்று எண்ணியவள் அவனுக்கு பிடித்த சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைத்தவள், குருமாவும் செய்து விட்டு அவன் வருவதற்காக காத்திருந்தாள்.


அவன் சற்று தாமதமாகத்தான் வந்தான்.


வந்ததும்," என்ன எல்லோரும் கிளம்பிட்டாங்களா? ரொம்ப போர் அடித்ததா?" என்று வினவ.


" கொஞ்சம் போரடிச்சது. சரி நீங்க சாப்பிட வர்றீங்களா? இல்லை காஃபி குடிக்கிறீங்களா?" என்று வினவினாள்.


"இல்லை சாப்பாடே எடுத்து வை. ஃப்ரெஷ்ஷப்பாகிட்டு வரேன்." என்றவன் அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.


அவன் வருவதற்குள் சப்பாத்தியை போட்டு வைத்த தீட்சண்யா, மதியம் சமைத்ததையும் சூடு படுத்தி டேபிளில் வைத்தாள்.


ஆதர்ஷ் வரவும், இருவருக்கும் தட்டில் பரிமாறியவள், அவன் ஏதாவது பேசுவான் என்று ஆவலாக தீட்சணாயா காத்திருக்க.


அவனோ ஒரு கண்ணை செல்போனில் வைத்துக் கொண்டு, மறு கண்ணை தட்டில் வைத்துக் கொண்டு சாப்பிட்டான்.


ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு உணவில் கவனத்தை செலுத்தினாள் தீட்சண்யா.


சாப்பிட்டு முடித்ததும், எல்லாவற்றையும் எடுத்து வைத்தவள், டிவி பார்த்துக் கொண்டிருந்த ஆதர்ஷின் அருகில் சென்று அமர்ந்தாள்.


" ஆதர்ஷ்… வர்றீங்களா வெளியே ஒரு வாக் போயிட்டு வரலாமா?" என்று வினவினாள் தீட்சண்யா.


" சாரி தீட்ஷு. எனக்கு டயர்டா இருக்கு. நீ வேணும்னா கீழ பார்க்ல வாக்கிங் போயிட்டு வாயேன்."


" ப்ச்… சாயந்திரம் அதைத் தான் பண்ணேன்." என்றவளோ மனதிற்குள், ' உங்களோட டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்னு பார்த்தா, தனியா போக சொல்றீங்களே ஆதி.' என்று மனதிற்குள் நொந்துக் கொண்டாள். இன்னும் வெளிப்படையாக பேசுமளவிற்கு நெருங்கவில்லை.


அவளது முகத்தில் இருந்த வாட்டத்தை கண்டுகொண்டவன், " ஏன் தீட்ஷு ரொம்ப போர் அடிச்சதா?" என்று வினவ.



" ம்… கொஞ்ச நேரம் போரடிச்சது. ஊர்ல இருந்து எடுத்துட்டு வந்த திங்ஸ்ஸெல்லாம் அடிக்கி வைக்கலாம்னு பார்த்தால் அதையெல்லாம் அம்மாவும், அத்தையுமே அடிக்கி வைத்து விட்டு போயிட்டாங்க. கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்தேன். அப்புறம் பார்க்குக்கு போயிட்டேன். எனக்கு அங்க ஒரு வயசான கப்புள்ஸ் ஃப்ரெண்ட் ஆகிட்டாங்க." என்றவள், அவர்களை பற்றி ஏதோ சொல்ல வருவதற்குள், ஆதர்ஷ் வாயைத் திறந்தான்.


" ஆமாம்… வயசானவங்க தான் இங்கே வீட்ல இருப்பாங்க. மத்தவங்கள்லாம் வேலைக்கில்லே போயிருப்பாங்க."

என்று கிண்டலாகக் கூறினான்.


தீட்சண்யாவின் முகமோ வாடியது.


" ஹேய் தீட்ஷு உனக்கு போரடிச்சதுன்னா வேலைக்கு போ. ஆமாம் நீ என்ன படிச்சிருக்க?" என்று வினவினான்.


அவள் அதற்கு பதில் சொல்வதற்குள், அவளது ஃபோன் அடிக்க.


அதை எடுத்தவளோ முகமலர, " சொல்லுங்க அத்தை…" என்று பேசிக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.


அழைத்தது ஆதர்ஷின் அம்மா.


மாமியாரிடம் அன்று நடந்ததை எல்லாம் சொல்லுவதற்காக எழுந்து சென்று விட்ட தீட்சண்யா, ஆதர்ஷின் கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.


' மருமகள் வந்ததும் மகனை இப்படி டீல்ல விட்டுட்டீங்களே மா.' என்று எண்ணிய ஆதர்ஷ் தோளைக் குலுக்கிக் கொண்டான்.


அவன் கேட்ட கேள்விக்கான பதில் வராததை பெரிதாக எண்ணவில்லை. ஆனால் அதுவே அவனது வாழ்க்கையில் பல பிரச்சனைகளை கொண்டு வரப் போவதை அப்போது அறியவில்லை.


விதி‍, இனி அவர்களது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளையும் போர்க்களமாக்க போவதையும், அதில் இருவரும் காயப்பட போவதையும், யாராலும் மாற்ற முடியாது.

 
Top