• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
அத்தியாயம் - 6

கையை நீட்டி நெளித்தவள், அருகே இருந்த ஆதர்ஷின் மேல் இடிக்க, பதறி விலகியவள், கீழே இறங்கினாள்.

' ஆமாம் நாம எப்போ பெட்ல வந்து படுத்தோம். நேத்து டேபிளில் உட்கார்ந்து கதை தானே எழுதிட்டு இருந்தேன். முக்கியமான சீனைப் பத்தி யோசிச்சுட்டு இருந்தேன். அதுக்கு அப்புறம் அப்படியே தூங்கிட்டேன் போல. அப்புறம் எப்படி இங்க வந்தேன்.' என்று எண்ணியவள், கதை எழுதிட்டு இருந்த டைரியை டேபிளில் தேட…

அங்கே டைரி இல்லை. பிறகு கஃபோர்டையும் வேகமாக தேடினாள். அங்கும் இல்லை. பிறகு யோசனையாக மெத்தையில் உறங்கிக்கொண்டிருந்த ஆதர்ஷைப் பார்த்தவள், 'இவர் தான் டைரியை எடுத்திருப்பார். எழுந்ததும் முதல்ல கேட்கணும்.' என்று எண்ணியவள் வேலையை பார்க்கச் சென்றாள்.

ஆதர்ஷ் எழுந்த அரவம் கேட்கவும், அவன் முன்னே சென்று நின்றாள்.

வழக்கமாக வரும் காஃபி இல்லாமல், தன் முன்னே நிற்கும் மனைவியை," காஃபி எங்கே?" என்பது போல் புருவத்தை உயர்த்தினான்.

" நேத்து நீங்க தானே என்னை பெட்ல படுக்க வைத்தது." என்று தீட்சண்யா வினவ.

" காலங்கார்த்தால கனவு எதுவும் கண்டியா என்ன? நேத்து நான் வரும் போது நீ பெட்ல படுத்து குறட்டை விட்டு தூங்கிட்டு இருந்த."

"பொய் சொல்லாதீங்க."

" சீரியஸ்லி… நீ பெட்ல தான் படுத்திருந்த." என்று அவன் கூற.

" இல்லை…. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. நேத்து நைட்டு நான் டேபிள்ல உட்கார்ந்து டைரியில எழுதிட்டு இருந்தேன். ஆமாம் என் டைரியை வேற காணும். நீங்க தானே எடுத்தீங்க. கொடுத்துடுங்க."என்றாள் தீட்சண்யா.

" நான் எடுக்கலை. எனக்கு எதுவும் தெரியாது." என்று நமட்டு சிரிப்புடன் கூறினான்.

" நீங்க தான் ரொம்ப படிச்சவராச்சே. உங்களுக்குத் தான் எல்லா மேனர்ஸும் தெரியும்னு நேத்து என் கிட்ட சொன்னீங்கள்ல. ரெஸ்டாரண்ட்ல இப்படி நடக்க கூடாது, அப்படி நடக்க கூடாதுன்னு சொல்லிட்டு, இப்போ நீங்க செய்யுறது மட்டும் சரியா? மத்தவங்களோட டைரியை அவங்களுக்குத் தெரியாமல் எப்படி எடுத்து படிக்கலாம்? இது தான் உங்க மேனர்ஸா?" என்று கோபமாக பொறிய.

தலையனைக்கு அடியிலிருந்த டைரியை எடுத்து அவளிடம் நீட்டியவன்," இரண்டு பேர் இருக்கிற வீட்டில லாக் வச்ச டைரியை நீ வச்சுட்டு இருக்கும் போதே, இது உனக்கு ரொம்ப பர்ஸ்னலானதுனு புரிஞ்சது. அதான் நான் இந்த டைரியை படிக்காமல் க்ளோஸ் பண்ணி வச்சேன். ஆனால் அது தப்புன்னு இப்போ தோணுது. நேத்தே இதை நான் படிச்சிருக்கணும். அப்படி இதுல என்ன தான் எழுதிட்டு இருக்க? அதுவும் நான் படிச்சிருக்கக்கூடாதுன்னு நீ நினைக்கிற. எனக்கு ஒரே கியூரியாசிட்டியா இருக்கு. ப்ளீஸ் அந்த கீயை தா. நான் படிச்சுட்டு தந்துடுறேன்." என்று அவளைப் பார்த்து கிண்டலாக கூற.

அவனை முறைத்தவாறே, கையிலிருந்த டைரியை பிடுங்கிக் கொண்டு வெளியே செல்ல முயன்றாள்.

"உனக்கு படிப்பு தான் இல்லைங்குற… ஆனா எழுத தெரியும் போல… அதுவும் லாக் வச்ச டைரியெல்லாம் வாங்கி வந்து எழுதுற அளவுக்கு உனக்கு நாலேஜ் இருக்கா?" என்றான் ஆதர்ஷ்.

கதவு வரை சென்ற தீட்சண்யா திரும்பி பார்த்து, " நான் டேபிள்ல படுத்திருந்தா, கூப்பிடுங்க. நானே வந்து பெட்ல படுப்பேன். இனிமே என்ன தூக்காதீங்க."

"நான் ஒன்னும் உன்ன டேபிள்ல தூங்க சொல்லலை. தென் நீ பெட்டை தவிர வேற எங்க படுத்தாலும் நான் உன்னை தூக்கிட்டு வந்து பெட்ல படுக்க வைப்பேன். அதுக்கான எல்லா ரைட்ஸும் எனக்கு இருக்கு.' என்றவன் அவளது கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாலியை பார்த்தான்.

அவனது பார்வை போன இடத்தைப் பார்த்து அதிர்ந்த தீட்சண்யாவோ, பயந்து வெளியேறினாள்.

அவளது ஓட்டத்தைப் பார்த்து, புன்னகைத்துக் கொண்டே குளிக்க சென்றான் ஆதர்ஷ்.

குளித்து விட்டு வந்த ஆதர்ஷ் பிரேக்பாஸ்ட் சாப்பிடுவதற்காக டைனிங் டேபிளிலிருக்கு வர.

தீட்சண்யா,அவனுக்கு மிகவும் பிடித்தமான வெண்பொங்கல் மற்றும் வடையை தேங்காய்சட்னி, சாம்பாருடன் சுடச்சுட பரிமாறினாள்.

அவனோ அதைக்கூட கவனிக்காமல் வழக்கம் போல் ஃபோனில் கவனத்தை செலுத்தி இருந்தான். கூகுளில் எதையோ தேடிக் கொண்டிருக்க

அதை பார்த்தவளோ, ' நான் இவ்வளவு கஷ்டப்பட்டு அவருக்கு பிடிச்சதா செஞ்சு வச்சிருக்கேன். அதைப் பாராட்டலைன்னாலும் பரவாயில்லை. அட்லீஸ்ட் அந்த சாப்பாட்டையாவது ஒழுங்கா சாப்பிடுறாரா? ஃபோன்ல கவனத்தை வச்சுக்கிட்டு, இப்படி அரைகுறையா சாப்பிடுறாரே… என்னை பாராட்டணும்னு இவர் கிட்ட ரொம்ப எதிர்ப்பார்க்கிறேனோ… என்னோட லைஃப் இப்படியே தான் போகுமோ?' என்று எண்ணிப் பெருமூச்சு விட்டுக் கொண்டே தட்டு எடுத்து வைத்து அவளும் சாப்பிட ஆரம்பித்தாள்.

சாப்பிட்டு கை கழுவிய ஆதர்ஷோ, " தீட்ஷு… எனக்கு வெளியில ஒரு வேலை இருக்கு முடிச்சுட்டு வந்துடுறேன்." என்றான்.

"சரி." என்று தலையாட்டியவளோ, அவன் கதவருகே சென்றதும், "வண்டி ஓட்டும் போதாவது செல்ஃபோன் யூஸ் பண்ணாதீங்க." என்று கூற.

அவனோ," பயப்படாதீங்க மேடம். நான் நல்லாவே டிரைவ் பண்ணுவேன்." என்று கூறி விட்டுச் சென்றான்.

தலையில் அடித்து நொந்து கொண்டாள் தீட்சண்யா. பின்னே அவள், அவன் ஃபோன் அதிகம் யூஸ் செய்து கொண்டிருப்பதை குத்தி காண்பித்தால், அதை கண்டுகொள்ளாமல் சென்று விட்டான்.

தீட்சண்யா லஞ்ச் செய்து முடித்து விட்டு டைரியை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.

காவ்யா -3

மெட்டாவெர்ஸில் காவ்யா

காலையில் ஆறு மணிக்கு விழித்த ஷீத்தல் உடற்பயிற்சி செய்ய மெட்டாவெர்ஸ் உலகத்திற்கு சென்றாள்.

மெட்டாவெர்ஸ் பயன்படுத்துவதால் அவளால் எல்லா உடற்பயிற்சியும் சரியாக செய்ய முடிகிறது.

ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்து முடித்த ஷீத்தல் குளித்து முடித்து காலை உணவை சாப்பிட டைனிங் டேபிளிற்கு வந்தாள்‌.

காவ்யா, நிரஞ்சனோடு, ஷீத்தலும் அமைதியாக காலை உணவை முடித்தாள்.

பீக் ஹவர்ஸ், டிராபிக் ஜாம் என்று காலை பொழுதை ஸ்ட்ரெஸ்சோடு தொடங்கும் காலம் என்றோ முடிந்துவிட்டது.

இன்றோ விர்ச்சுவல் ஸ்கூல் செல்ல ஸ்மார்ட் விஆர் கிளாஸை எடுத்துக் கொண்டு மாடி ஹாலுக்கு சென்றாள் ஷீத்தல்.

கீழே ஆபீஸ் ரூம் நோக்கி சென்றார் நிரஞ்சன். அந்த அறைக்கு பக்கத்திலிருந்த டாக்டர் ரூமிற்கு சென்றாள் காவ்யா.

'2020 ஆம் ஆண்டு கொரோனா நோயால் எல்லோரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்று கடுமையான சட்டம் வந்து மக்கள் கஷ்டப்பட்டு வீட்டிற்குள் அடைந்திருந்தனர்.

ஆனால் இன்று, வெளியே செல்ல முடிந்தும் எல்லோரும் வீட்டிற்குள்ளே மெட்டாவெர்ஸ் மூலம் படிக்கவும், வேலை செய்யும் நிலை உருவாகிவிட்டது.' என்று வழக்கம் போல் மனக்குமுறலோடு தன் அறைக்கு சென்றாள் காவ்யா.

ரெஜிஸ்டர் நம்பர் படி ஒவ்வொரு பேஷண்டின் அவதார் காவ்யா முன் வந்து உட்கார்ந்து, அவர்களின் பிரச்சனைகளை பற்றி சொல்ல, காவ்யாவும் அதற்கான மருந்துகளையும், ஸ்ட்ரெஸ், டிப்ரஷனிலிருந்து வெளி வரும் வழிகளையும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

முன்பெல்லாம் மனநல மருத்துவரை பார்க்க செல்ல தயங்கும் மக்களின் மனநிலை,' நான் என்ன பைத்தியமா?' என்று தான் இருக்கும்.

ஆனால், இன்று ஒரு நாளைக்கு நூறு பேஷண்டிற்கு மேல் பார்த்துக் கொண்டிருக்கிறாள் காவ்யா. எல்லாம் மெட்டாவெர்ஸால் உண்டான நிலை.

ஒவ்வொரு பேஷண்ட்டின் நிலையானது- வெளியே செல்ல தயக்கமா இருக்கு, நிஜ உலகத்தில் யார் கூடவும் பேச முடியவில்லை, வீட்டில் உள்ளவர்களை தவிர வேறு யாரையும் தெரியாது, எதுக்கு எடுத்தாலும் கோபம், அழுகை.
அன்பு, பாசம் என்ற சொல்லிற்கான அர்த்தமே மறந்து போனது. மனிதநேயமே அழிந்துவிட்டது.

பிரேக் டைமில் வெளியே வந்த காவ்யா ஷீத்தல் இருக்கும் ஹாலிற்கு சென்றாள்.

அங்கு ஷீத்தல் ஒவ்வொரு கான்செப்ட்டையும் பிராக்டிக்கலாக இல்லை, விர்ச்சுவல் ரியாலிட்டியாக தெளிவாக படித்துக் கொண்டிருந்தாள்.

எல்லா நெகட்டிவ் பாயிண்ட்டையும் தாண்டி ஒரு நல்லது மெட்டாவெர்ஸில் இருப்பது என்றால் அது கல்வி மட்டும் தான் என்பது காவ்யாவின் எண்ணம். ஷீத்தலை மெட்டாவெர்ஸ் பயன்படுத்த அனுமதிக்க முதல் காரணம் கல்வி தான். ஆனால் அவள் இன்று மெட்டாவெர்ஸில் தான் எல்லாம் செய்துக் கொண்டிருக்கிறாள்.

ஷீத்தலை தொந்தரவு செய்யாமல் அமைதியாக கீழே இறங்கினாள் காவ்யா.

கீழே நிரஞ்சன் மீட்டிங் அட்டென்ட் செய்ய பரபரப்பாக ரெடியாகிக் கொண்டிருந்தான். போன் கால் மீட்டிங் மாறி, ஸ்கைப் மீட்டிங் ஆனது. பின் கொரோணா காலத்தில் ஜும் மீட்டிங் ஆனது‌. இப்போது விர்ச்சுவல் மீட்டிங் ஆனது. உலகின் பல்வேறு இடங்களில் இருக்கும் மனிதர்களை ஒரு சின்ன ஆஃபீஸ் மீட்டிங் அறைக்குள் பார்க்கலாம், பேசலாம், ப்ராஜெக்ட் முடிவுகளை எடுக்கலாம்.

மீண்டும் தன் வேலையை தொடர்ந்தாள் காவ்யா. பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழி இல்லாமல் இந்த வேலையை செய்துக் கொண்டிருக்கிறாள்‌.

மாலையில், நிரஞ்சன் காவ்யாவிடம்,"ஷீத்தல் கீழே வரலையா? இன்னும் கிளாஸ் முடியலையா?" என்றுக் கேட்டான்.

"அதெல்லாம் முடிஞ்சிருக்கும்‌. இப்போ மேடத்தோட கேம் டைம்‌. காலையிலிருந்து ஸ்மார்ட் கிளாஸ் போட்டுக் கிட்டு மெட்டாவெர்ஸ்ல தானே படிச்சோம், கொஞ்ச நேரம் அதையெல்லாம் கழட்டி வெச்சிட்டு ரெஸ்ட் எடுப்போம்னு இருக்க மாட்டா. உடனே விளையாட ஆரம்பிச்சிடுவா. நீங்களே போய் பாருங்க அவனை சுடு, இவனை சுடுனு கையில் துப்பாக்கி இருப்பது போல் அங்கும் இங்கும் சுட்டுக்கிட்டே ஓடுவா."

"காவ்யா… உன்னோட வருத்தம் புரியுது. இந்த டெக்னாலஜி கண்டிப்பிடிச்சவங்களை திட்டு. சூழ்நிலையால் அதை பயன்படுத்தி அதுக்கு அடிமையாக மாறும் ஷீத்தல் மேல் எந்த தப்பும் இல்லை புரிந்துக்கொள்." என்றான் நிரஞ்சன்.

"நீங்க சொல்றது உண்மை தான். எல்லாமே இங்க பிஸினஸ் தான்‌. எப்படியாவது இந்த மெட்டாவெர்ஸை தடை செய்யணும்." என்றாள் காவ்யா‌.

"நாளைக்கு தான லாஸ்ட் ஹியரிங்?"

"ஆமா நிரஞ்சன். என்னோட கடைசி நம்பிக்கை. நாளைக்கு தீர்ப்பு நமக்கு சாதகமா வந்தா நான் இந்த போராட்டத்தில் ஜெயித்து விடுவேன். இந்த மெட்டாவெர்ஸ் ஷீத்தல், தர்ஷினி போல் பல பேரை காப்பாற்றிவிடலாம்."

"எல்லாத்துக்கும் தயாரா இரு. மெட்டாவெர்ஸ் மிகப்பெரிய கார்ப்பரேட் பிஸினஸ். நீ ஒரு சாதாரண டாக்டர். எந்த தீர்ப்பு வந்தாலும் அதை ஏத்துக்க உன்னோட மனசை ரெடி பண்ணிக்கோ." என்ற நிரஞ்சன் சென்று விட்டான்.

நிரஞ்சன் சொல்வதில் இருக்கும் உண்மை புரியத்தான் செய்கிறது. ஆனால் ஏதாவது அதிசயம் நிகழாதா என்ற யோசனையோடு உட்கார்ந்திருந்தாள் காவ்யா.

சோர்வாக கீழே இறங்கி வந்த ஷீத்தல் தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.

அவளை பார்த்ததும் வேதனை அதிகமாக… கண்டிப்பாக இந்த போராட்டத்தில் நான் ஜெயிக்க வேண்டும் என்ற முடிவோடு கேஸ்ஸிற்கு தேவையானதை சரி பார்க்க சென்றாள் காவ்யா.' எழுதி முடித்த தீட்சண்யா, மீண்டும் ஒரு முறை படித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

வெளியே சென்ற ஆதர்ஷ் அப்போது தான் வந்தான். அவன் வரவும் வேகமாக டைரியை மூடினாள்.

ஆதர்ஷ் நக்கலாக சிரித்துக் கொண்டே உணவருந்த அமர்ந்தான். மதியஉணவும் மௌனமாகவே சென்றது.

அதற்கு பிறகு மீதியுள்ள வேலைகளில் அவளுக்கு உதவி செய்தான் ஆதர்ஷ்.

ரிலாக்ஸாக அமர்ந்து டீவியில் மியூசிக் சேனலை மாத்திக் கொண்டிருந்தாள் தீட்சண்யா.

அவளருகே வந்து அமர்ந்த ஆதர்ஷோ," இந்தா தீட்ஷு." என்று ஒரு ஃபார்மை நீட்டினான்.

"என்ன இது?" என்று அவன் நீட்டிய ஃபார்மை வாங்காமலே வினவினான்.

" இது சென்னையிலே பெஸ்ட் ஸ்போக்கன் இங்கிலீஷ் கோச்சிங் சென்டரோட ஃபார்ம். நாளையிலிருந்து க்ளாஸ் ஸ்டார்ட்டாகுது. ஒரு நாளைக்கு மூன்று பேட்ஜ் இருக்கு. உனக்கு எந்த டைம் செட்டாகுதோ அந்த டைம்ல போய் ஜாயின் பண்ணிக்கலாம்." என்று அவளைப் பார்த்து கூறினான்.

" எனக்கு எதுக்கு? நான் ஒன்னும் கேட்கலையே?"

" நீ கேட்கலை தான். ஆனாலும் இங்கிலிஷ் கத்துக்குறது நல்லது தானே. அது ஒன்னும் கஷ்டமான விஷயம் இல்லை தீட்ஷு. ஜஸ்ட் ஒன் மன்த்ல ஈஸியா கத்துக்கலாம்." என்று அவளைப் பார்த்து கூற.

" எனக்கு அதெல்லாம் இன்ட்ரஸ்ட் இல்லை." என்று கூறியவள் அறைக்குள் செல்ல.

அவள் பின்னே வந்தவனோ, " தீட்ஷு… இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. ஜஸ்ட் லாங்குவேஜ் கத்துக்குறது நல்லது தானே. அதுவும் பேசப் பேச ஈஸியாக வந்துடும். நீ பயப்படவே தேவையில்லை." என்று அவளை கன்வின்ஸ் செய்ய முயற்சித்தான்.

ஆனால் தீட்சண்யா அதற்கு விடவில்லை.

" எனக்கு பயமாருக்குன்னு உங்கக் கிட்ட சொன்னேனா. எனக்கு விருப்பம் இல்லனா விடுங்களேன்." என்று கத்தரித்தாள்.

அவனோ விடாக்கண்டனாக அவளை வற்புறுத்திக் கொண்டே இருந்தான்.

அவளை காப்பது போல அவனுக்கு ஒரு ஃபோன் கால் வர.

" ஒன் மினிட்." என்று விட்டு பால்கனிக்கு சென்று அவன் பேச.

" அப்பாடா." என்று பெருமூச்சு விட்டவள், வேகமாக கீயை எடுத்துக் கொண்டு பார்க்கிற்கு சென்றாள்.

அங்கு நிகில் உற்சாகமாக ஓடி ஆடிக்கொண்டிருந்தான்.
அவள் முகம் மலர்ந்தது. " ஹேய் நிகில்… வீக்கெண்ட் இங்கு வரமாட்டேன்னு அங்கிள், ஆன்ட்டி சொன்னாங்க. இன்னைக்கு வந்துருக்க." என்று உற்சாகமாக வினவ.

" தெரியலை. இன்னைக்கு எங்க மம்மி விளையாட விட்டுட்டாங்க." என்று
கூறினான்‌.

அப்போது அங்கு ஆதர்ஷ் வர‌‌…

' ஐயோ! அதுக்குள்ள வந்துட்டீங்களா.' என்பது போல் தீட்சண்யா பார்க்க.

"வீட்ல இல்லைன்னா, நீ இங்கே தான் இருப்பேன்னு எனக்குத் தெரியும். அதான் நேரா இங்கே வந்துட்டேன்." என்று அவளது பார்வைக்கு பதிலளித்தவன், நிகிலனிடம் திரும்பி,
" ஹாய்… ஐயம் ஆதர்ஷ். இந்த ஆன்ட்டியோட ஹஸ்பெண்ட்." என்று தன்னை பற்றி ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டான். அவனைப் பற்றியும் விசாரித்தான்.

நிகிலனும், ஆதர்ஷிடம் சரளமாக ஆங்கிலத்தில் பேசினான்.

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே, நிகிலனின் அம்மாவும் வர, அவர்களும் ஆதர்ஷிடம் இன்முகத்துடன் பேசினர். அவர்களின் உரையாடலும் ஆங்கிலத்திலேயே இருந்தது. அதை எல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் தீட்சண்யா.

" நைஸ் மீட்டிங் யூ மிஸ்டர் ஆதர்ஷ். சீ யூ லேட்டர்." என்றவள், நிகிலனை அழைத்துக் கொண்டு சென்றுவிட.

" பார்த்தீயா தீட்ஷு… இந்த சின்ன பையன்ல இருந்து, அவங்க அம்மா வரைக்கும் எல்லாரும் எப்படி இங்கிலீஷ்ல பேசுறாங்க. இங்கிலீஷ் பேசுறது இந்த சொசைட்டிக்கு ரொம்ப முக்கியம். அதுக்காகத்தான் சொல்றேன்." என்று அவன் மீண்டும் வாதாட.

" ப்ளீஸ்… திரும்பத், திரும்ப இதையே சொல்லிட்டு இருக்காதீங்க." என்று கோபமாக கூறியவள், அங்கிருந்து கிளம்பினாள்.

செல்லும் போது, சதானந்தம், பரமேஸ்வரி தம்பதியை கண்களால் தேடினாள்.

அவர்கள் இருவரும் அந்த பார்க்கில் இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. ' என்ன ஆச்சு? ஏன் அங்கிளும், ஆன்ட்டியும் வரலை.' என்று எண்ணியவள் நேராக அவர்களது வீட்டிற்கு சென்று காலிங் பெல்லை அழுத்தினாள்.

கதவை திறந்த சதானந்தன்," வாம்மா தீட்ஷூ." என்று அழைத்தார்.

" பார்க்குக்கு வரலையேன்னு என்னாச்சுனு பார்க்க வந்தேன் அங்கிள்."

"அது ஒன்னும் இல்லை மா. உங்க ஆன்ட்டிக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லை. இப்ப பரவாயில்லைம்மா. உள்ள வா." என்று அங்கிருந்த அறைக்குள் அழைத்துச் சென்றார்.

"எப்படி இருக்கீங்க ஆன்ட்டி?" என்று வினவினாள்.

" எனக்கு என்னம்மா… நான் நல்லா தான் இருக்கேன். லேசா இருமினேன். அதுக்கு இந்த ஓல்ட்மேன் இவ்வளவு பாடுபடுத்திட்டு இருக்கிறார்.அதை செய்யாதே… இதை செய்யாதேன்னு நோயாளி மாதிரி ட்ரீட் பண்றாரு‌." என்று அவர் புலம்ப.

தீட்சண்யாவோ புன்னகைத்துக் கொண்டாள்.

" நான் என் கவலையை சொல்றேன். நீ என்னடான்னா சிரிச்சிட்டு இருக்க." என்று பரமேஸ்வரி முறைக்க.

" ஆன்ட்டி… நீங்க அங்கிளைப் பத்தி குறை சொல்ற மாதிரி தெரியலையே. எனக்கு என்னமோ நீங்க அங்கிளோட பெருமையை சொல்ற மாதிரிதான் தெரியுது." என்று கூறினாள்.

"அது உண்மை தான் தீட்ஷு மா." என்றவாறே வந்த சதானந்தம் அவளுக்கு ஒரு கப்பை நீட்டினார்.

அதை வாங்கி குடித்தவள் முகம் சுளிக்க, " என்ன அங்கிள் இது? இப்படி கசக்குது." என்றாள்‌.

" ஒன்னும் இல்லமா… எங்க பார்த்தாலும் வைரல் ஃபீவர் வருது. அதான் இந்த கசாயம். இது குடிச்சா உடம்புக்கு நல்லது. டெய்லி குடிக்கலைன்னாலும், வாரத்துக்கு ஒரு நாளாவது குடிச்சா நல்லது." என்றார் சதானந்தம்.

"என்ன தான் போட்டு படுத்துறீங்கனு பார்த்தா, வீட்டுக்கு வந்த பொண்ணையும் போட்டு படுத்துறீங்க." என்றார் பரமேஸ்வரி.

" நீ சும்மா இரு. நான் எது செய்தாலும் நல்லதுக்கு தான்." என்று சதானந்தம் வாக்குவாதம் பண்ண.

அவர்கள் இருவரும் போடும் சண்டையை இளம் புன்னகையுடன் ரசித்துக் கொண்டிருந்தாள் தீட்சண்யா.

'இருவரும் சண்டை போட்டாலும், ஒருவர் மேல் ஒருவர் வைத்த பிரியம் தான் தெரிகிறது. உண்மையான காதலுக்கு இவர்கள் தான் சிறந்த உதாரணம்.' என்று எண்ணியவள், " நான் வரேன் அங்கிள், ஆன்ட்டி…" என்று அவர்களிடம் கூறினாள்.

" இரு மா… சாப்பிட்டு போலாம்." என்று இருவரும் கூற.

" இல்லை… ஆன்டிக்கு சரியாகட்டும். இன்னொரு நாள் வந்து நல்ல சாப்பாடு சாப்பிட்டுக்கிறேன்." என்று கிண்டலாக கூற.

" அப்படி சொல்லுடா தங்கம். ‌" என்றார் பரமேஸ்வரி.

" தீட்ஷு மா… என்னைக்கு வந்தாலும் இந்த அங்கிளோட சமையல் தான். ஞாபகம் வச்சுக்கோ. உங்க ஆன்ட்டிக்கே நான் தான் சமையல் சொல்லி தந்தேன்." என்ற சந்தானத்தின் குரலும், அதைத் தொடர்ந்து பரமேஸ்வரியின் எதிர்வாதமும் அவள் செவியில் வந்து விழ, புன்னகையுடன் தனது வீட்டை நோக்கி சென்றாள். மனதிலோ,' நான் இந்த மாதிரி புரிதலான வாழ்க்கை தான் எதிர்ப்பார்த்தேன். ஆனால் எனக்கு அந்த கொடுப்பினை இல்லையே.' என்று எண்ணினாள்


 
Top